நாடுகளற்ற தேசாந்திரிகள்
வர்ணங்களை அப்பிய
சில்மிஷக்காரனைச் சுமந்த
ரதத்தின் பவனி வடக்கிருந்து வர

அடிவருடிகள் சில
அருகிருந்த மின்கம்பங்களின் மீது
பெய்வதென கால்தூக்கி
மூர்க்க லத்திகளை வெறிக்கின்றன

தூக்கி எறியப்பட்ட
பதவி எலும்புகளைக்
கவ்வித் திரியும் அவைகள்
144 ஐ ஏவுகின்றன

நீலம் கருப்பு சிவப்பு
வேரோடிய நிலத்தினில்
காவி பூசிடத் துணிந்த அது
சிறையை விரிக்கிறது

நிரம்பிய சிறைக்குள்ளிருந்து கசியும்
தத்துவங்களின் வீரியத்தை
தாக்குப் பிடிக்காது
கோபுர உச்சியில்
படபடத்துச் சிதறியோடும் புறாக்களென
எச்சங்களை சிலைகளின் மீதே கழிந்து
கடகடத்துப் புறமுதுகிட்டு
ஓட்டமெடுக்கிறது

வேசி ஊடகங்கள்
சப்புக் கொட்டியபடிச் சுவைக்கின்றன
இளஞ்சூடான கோமியத்தை

- சிவ.விஜயபாரதி

Pin It