உலக உயிர்கள் உடலும் உள்ளமும், நலம் பெற்று வாழப் பயன்படும் பொருள் மருந்து. இவ்வகை மருந்துகளைக் காலந்தோறும் தோன்றிய சான்றோர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர்.

படித்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள் தயாரித்த மருந்துகளும் உண்டு. வீட்டில் இருக்கும் உணவுப் பொருள்களை மருந்தாக்கும் பாட்டி வைத்தியமும் நாட்டு மக்களிடையே இன்னும் இருப்பது குறிப்பிடத்தக்கன.

மருந்தே உண்ணாமல், நோய் தடுக்கும் முறைகளும் நாட்டில் இருந்துள்ளன. நூறாண்டு காலம் வாழும் முறையை வாய்ப்பாடாக நம் முன்னோர் படைத்துள்ளனர்.

ஓரடி நடவேன் (உச்சி வெயில்)

ஈரடிக் கிடவேன் (ஈரமான தரை)

இருந்து உண்ணேன் ( உண்ணும் அளவுமுறை)

கிடந்து உறங்கேன் (உறக்கம் வந்தபின் உறங்கும் நிலை)ravana seetha 472உயிரைக் கவருபவனைக் கட்டிப்போடும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு என்பதான மருந்தில்லா மூச்சுப் பயிற்சியை,

விட்ட எழுத்தால் விடாத எழுத்தால் கட்டவல்லார்

காலனைக் கட்டவல்லார்

என்று நுணுக்கமாகத் திருமூலர் கூறியுள்ளார்.

வாயடக்க வாழ்வு: மூச்சடக்க முத்தி

என்ற மரபுத் தொடர் மருந்தில்லாமல், நோய் அண்டாமல், வாழும் வழியைக் கூறுகின்றது. நோயை மருந்தால் தீர்த்துவிடலாம்; பிணியை நீக்க முடியாது. பிணித்துக் கொள்ளும் என்பது முன்னோர் கண்ட முடிவு.

பிறப்பு    -     பிணி

காமம்    -     பிணி

பசி -     பிணி         

இவை மூன்றையும் தவிர்க்க முடியாததால் பிணி என்ற சொல்லைப் படைத்துள்ளனர்.

இன்றைய உலகில் ஏராளமான மருத்துவமுறைகள் பல சான்றோர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சித்த மருத்துவம், மூலிகை வைத்தியம், வீட்டு வைத்தியம் என மக்களின் நோய்களைத் தீர்க்கக் கூடியதாக நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் இருந்துள்ளன. இருப்பினும், சித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தைய காலத்தில் தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது இராவண சிந்தாமணி மருத்துவம்தான். இந்த சிந்தாமணி மருத்துவம் இராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். வரலாற்றில் சித்தரிக்கப்பட்ட காமுக இராவணனின் கதாபாத்திரமே நம்மில் பெரும்பாலோருக்கு கண்முன் வந்து நிற்கும்.

இராவணன் மருத்துவம் தவிர இசை, வானியல், அரசியல். மனோதத்துவம், மந்திரம், ஜோதிடம், அறிவியல், ஓவியம், இலக்கியம் முதலான பத்துக்கலைகளில் நிகரற்று விளங்கியதால் 10 தலை இராவணன் எனக் கூறுவோரும் உண்டு.

மக்கள் நலமாக வாழ ஆய்வு செய்து நோய்வரும் காரணம், அதன் பெயர்கள், தீரும் நோய் வகைகள், தீரா நோய்ப் பிரிவுகள், அதன் குணங்கள், அதற்குரிய மருத்துவம் மற்றும் பொது மருந்துகள் ஆகியவைகளை “நீ தானம்”, எனப் பெயரிட்டு இராவணன் நீ சிந்தாமணி மருத்துவம் என்னும் நூலைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இராவண மருத்துவத்திற்குப் பின்னர் தோன்றிய சித்த மருத்துவத்தில் அக மருந்துகள் 32, புற மருந்துகள் 32 தான் உள்ளன. ஆனால் இராவண சிந்தாமணி மருத்துவத்தில் புற மருத்துவ முறைகள் 74. மேலும் அக மருத்துவங்கள் 60க்கும் மேலும் கூறப்பட்டுள்ளன. மயங்கிய நிலைக்குக் கூட மருத்துவம் இதில் கூறப்பட்டுள்ளது.

சிந்தாமணி மருத்துவத்தில் மூலிகை குறைவாகவும்,  கடைச்சரக்குகளின் பொருள் பண்பு ஆகியவை விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் மூலிகை அகவழி எனும் மிகப் பெரிய நிகண்டும் உள்ளது. மேலும் மருந்தில்லா மருத்துவ முறையான தொடுவர்ம சிகிச்சை, தட்டுவர்ம சிகிச்சை, வர்ம அடங்கல் முறைகளும் இதில் அடங்கி உள்ளன. மொத்தத்தில் இராவணன் 27 நூல்களைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தர் மருத்துவ முறைகளில் திடீர் விபத்துக்கான வர்ம சிகிச்சை முறைகள் இல்லை. ஆனால் சிந்தாமணியில் விபத்துக்கான சிகிச்சை முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதுகெலும்பு வளைவு, இடுப்பு எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூளை இரத்தக்கசிவு போன்ற நோய்களுக்கும் இராவண மருத்துவம் தீர்வு சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை மருத்துவத்துக்காக, “மதலை வாகடம்”, என்ற மருத்துவ நூல் இராவணனின் படைப்பு. இதுபோல் இராவணன் படைத்த நாடி நூல் வடமொழியில் “சிறீ இராவணா நாடி ஹிருதா” என்று வெளிவந்துள்ளது. இந்நூலை தமிழில் மொழி பெயர்த்து சென்னை புதிய புத்தக உலகம் என்ற பதிப்பகம் “இராவண நாடி பரிட்சை” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

இதேபோல் இரா. வாசுதேவன் பதிப்பித்திருக்கும் மற்றொரு நூல் இரச ராச சிந்தாமணி. இந்நூல் முழுக்க முழுக்க இரசத்தை மூலப்பொருளாகக் கொண்ட மருந்துகளைப் பற்றிக் கூறும்.  சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ், மலையாளம். சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

தீநீர் அர்க்க பிரஹாநீர் எனும் இராவணன் எழுதிய பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய நூல் மூலிகையிலிருந்து சத்தைப் பிரித்தெடுக்கும் முறையை விவரிக்கிறது. இது ஹோமியோ டாக்டர் ஹானிமேனின் மருத்துவ முறையை ஒத்தது. ஆனால் இராவணின் அர்க்க வைத்திய முறையில் எந்த மூலிகைகளோ, மருத்துவப்பொருட்களோ ஆல்கஹாலில் ஊற வைக்கப்படுவதில்லை. ஆனால் நேரடியாக அந்த மருந்துப் பொருள்களில் இருந்து தயார் செய்யப்பட்ட மருந்துப் பொருள்களின் சத்து மட்டும் பிரித்தெடுக்கப்படுகிறது. இவைகளை ஆங்கில மருந்துகள் போல் நீண்ட காலம் பாதுகாக்க இயலும். இதுபோன்ற மருந்துகள் உட்புற பயன்பாட்டிற்காக நறுமணத் தாவரங்களில் இருந்து வடிகட்டிகளைப் பிரித்தெடுப்பதற்கான நிலையான இயக்க முறைகளை இந்நூல் விவரிக்கிறது. இதுபோல் மூலிகை வேர்களின் சக்திகளையும், அவற்றின் மூலம் குணப்படுத்தும் நோய் சிகிச்சை முறைகளையும் அர்க்க சாஸ்த்ரா என்ற நூல், காயங்களை உடனடியாகக் குணப்படுத்தக்கூடிய சிந்துரம், மருத்துவம். அத்தியாவசிய எண்ணெய்களின் பல்வேறு சிகிச்சைகளைப் பற்றியும் கூறுகிறது.

தமிழ் மருத்துவ முறைகளில் சூரணம், செந்தூரம், பஸ்பம், தைலம், மூலிகை என்று பல முறைகள் பயன்பாட்டில் இருந்தாலும் அர்க்கம் எனும் மருந்தின் சத்தைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்தும் முறை தீங்கற்றது. அதேசமயம் வீரியம் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இப்பொருட்களில் ஆல்கஹால் ஊற்றி வைக்கப்படுவதில்லை. ஆனால் அந்த மருத்துவப் பொருட்களையே அர்க்கமாக்கும் அதாவது வாட்டி எடுத்துப் பாதுகாக்கிறது. அதையே, “ஒலியோரெசின்”, அல்லது “எஸ்ஸென்சியல்” ஆயில் எடுக்கும் முறை என்கிறது, இப்போதைய விஞ்ஞானம்.

இந்நூல்களைத் தவிர ஆண், பெண்களின் உடல் ரீதியான வெளிப்படையான நோய்களுக்கும், பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்களுக்கும், அதற்குண்டான மருத்துவ முறைகளைக் கூறும் அர்க்க பரிக்க்ஷா என்ற நூலையும் மனித உடம்பிலுள்ள நரம்புகளைப் பற்றிய சிகிச்சை முறைகளைக் கூறும் “நாடிப்ரிக் ஷா, நாடி விஜன்னா” ஆகிய நூல்களையும் இராவணன் படைத்துள்ளார்.

அவர் தனது அறிவார்ந்த படைப்புகளின் சிறந்த தொகுப்பான “இராவண சம்ஹிதா” என்ற மருத்துவ நூல் குறிப்பிடத்தக்கது. இது ஆயுர்வேத அறிவியலைப் பற்றி பேசுகிறது.

மேலும், மனிதர்கள் தங்களது உடம்பை எப்போதும் நலமாக வைத்துக் கொள்ள ஒரு சில மருந்துகளைத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இராவணன் தன் மருத்துவ முறையில் கூறியுள்ளார். நாம் உண்ணும் உணவில் மூன்று பொருட்களையும் அவற்றுடன் ஐந்து வேர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

இதனை, “தூணபகா” என்பர். “து” என்றால் மூன்று. “பகா” என்றால் ஐந்து. அம்மருந்துப் பொருள் வேறொன்றுமல்ல. தமிழர்களின் உணவுப்பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் குறுமிளகு, இஞ்சி, பூண்டு இம்மூன்றும்தான். ஐந்து வேர்கள் கண்டங்கத்திரி, சிறுநெருஞ்சி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி ஆகும். இதனைச் சிறு பஞ்சமூலம் என்பர். இலங்கையில் இன்றும் இந்த உணவுப் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் கொத்தமல்லி, சீரகம், கருஞ்சீரகம், கருவாப்பட்டை (இலவங்கப்பட்டை), மிளகு என இந்த ஐந்து பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இராவணன் கூறுகிறார்.

வடமாநிலங்களில் தற்போதும் “சீதாஹோலி” என்ற உணவுப் பண்டத்தைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது வழக்கம். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது சத்துக்குறைபாட்டைப் போக்கி இந்த சீதாஹோலியை உண்ணக் கொடுப்பார்கள். இதுவும் இராவணன் தயாரித்தது.

இராவணனின் சிந்தாமணி மருத்துவமுறையில் தமிழகத்தின் தென் எல்லையான கன்னியாகுமரியில் இன்றளவும் சிந்தாமணி வைத்திய சாலைகள் இயங்கி வருகின்றன.

அண்மைக் காலத்தில் இராவண மருத்துவம் குறித்து ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தி வருபவராகிய குழித்துறை மருத்துவர். கொ.பா. புட்பராசு, இராவணன் சுகாதாரக் களஞ்சியம், நச்சு முறிவு மருத்துவம், தமிழ் மருத்துவத் தொக்கன முறைகள்,  அவசரக்கால புற மருத்துவ முறைகள், மங்கையர் மருத்துவம் ஆகிய நூல்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். மேலும் இவருடைய முயற்சியில்  மதுமேக நிதானம், மஞ்சள் காமாலை ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.

ravana sanhitaஇவைகளுடன் பல நோய்களுக்கான பயிற்சியும் அளிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பிடத்தக்கது  இவர் சிந்தாமணி மருத்துவத்திற்கும் சித்த மருத்துவத்திற்கு மிடையேயுள்ள வேற்றுமை ஒற்றுமைகளை பட்டியிலிடுகிறார். அதில் மிக முக்கியமான வேற்றுமைகள் சிந்தாமணி மருத்துவம் பிறமொழி கலவாது தூய தனித்தமிழ் மொழியில் இயற்றப்பட்டது. உள்ளதை உள்ளபடியே அறிவியல் முறையில் இயற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் மருத்துவ அறிவியல் கலையில் இது முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவமாகும். உலகில் முதன் முதலாக அறுவை மருத்துவத்தை அறிமுகம் செய்த மருத்துவமாகும். எலும்பு முறிவு, நரம்பு சிகிச்சை முறைகள் நூல் ஆதாரத்துடன் முறையாக உள்ளன. கடல் கொண்ட குமரிக் கண்டத்தோடு சேர்ந்த யாழ்ப்பாணத்தில் தோன்றிய ஒரு தனித்தமிழ் மருத்துவ அறிவியல் கலை. அவசர, நாட்பட்ட நோய்களுக்கான பரிகாரங்கள் உள்ளன. பாம்பின் நச்சு நேரடியாகச் சென்னீரில் கலப்பதால் நச்சு முறிவு மருந்தை நேரடியாக உதிரத்தில் செலுத்தும் முறை உள்ளது என்று கூறும் இம்மருத்துவர் இத்துடன் பல வேற்றுமைகளையும் பட்டியலிட்டுள்ளார்.

இவருடைய கூற்றுப்படி இராவணன் எழுதிய இந்த சிந்தாமணி மருத்துவ முறையே குமரி மாவட்ட ஆசான்களால் பின்பற்றப்பட்டு தற்போதைய சித்த மருத்துவமாக உருப்பெற்றது என்றும், இப்போதும் நெல்லையில் செய்யும் சித்த மருத்துவ முறைகளில் இருந்து மாறுபட்டது குமரி மாவட்ட ஆசான்கள் பின்பற்றும் சித்த மருத்துவம் என்றும் தெரிவித்துள்ளார்.

இராவண மருத்துவ முறைகள் வட இந்தியாவில் நடைமுறையில் உள்ளதால் “இராவண சம்ஹிதா” என்னும் பெயரில் இரு பெரும் பிரிவாகத் தொகுக்கப்பட்டு, வடமொழியில் இந்நூல் வெளிவந்துள்ளது. இதுமட்டுமின்றி இராவணன் உருவத்தை அட்டைப் படமாகக் கொண்ட பல மருத்துவ நூல்களும் இந்தியில் வெளிவந்துள்ளன.

இந்தியில் இராவணன் மருத்துவம் வெளிவந்தது போல் சிங்களம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

இராவணனின் மருத்துவப் பங்களிப்புகள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் அழிந்து வரும் இம்முறை சில இடங்களில் மட்டுமே உள்ளது. தமிழக அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாடத்திட்டத்தில் இதனைச் சேர்க்க இம்முறை சிறந்ததாக உள்ளதா? என்பதைச் சீர்தூக்க ஒரு குழு அமைக்க வேண்டும். மேலும் இராவணன் எழுதிய நூல்களைத் திரட்டி ஆராய்ந்து வெளிவர முயற்சிகளைத் தொடங்க வேண்டும். அப்போது நம் தமிழ் மருத்துவம் மேலும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

- டாக்டர் சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It