“பறையதிர்வில் கனன்றெரியும்
தோள்களைப் போல்
வீங்கித் தவிக்கிறது மனசு''
விதை வாசிக்கப்படும் இடங்களிலோ, சமூகம் சார்ந்த எந்த நிகழ்வுகளிலோ "புத்தம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி' என்னும் பெண் குரல் கேட்குமெனில், சந்தேகமேயின்றி சொல்லிவிடலாம் அங்கே கு. உமாதேவி இருக்கிறார் என்று. இளம் வயதில் தலித் செயல்பாட்டுக்கான அனைத்து முன்னெடுப்புகளுடன் எழுத்திலும் களத்திலும் இயங்கும் ஆற்றலுடையவர் உமாதேவி. தன்னுடைய முதல் தொகுப்பினை, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சமர்ப்பிக்கும் பொது சிந்தனை மரபினை கடந்து, “தலித் சமூக விடுதலையை முழு மூச்சாக முன்னெடுத்து இயங்கும் களப்போராளிகளுக்கு...'' சமர்ப்பணம் செய்து, தன் எழுத்தின் லட்சிய நோக்கை அழகாக வெளிப்படுத்தியவர்.
வந்தவாசியை அடுத்துள்ள அத்திப்பாக்கம் என்ற சிற்றூர், ஆண்கள் அதிகம் படித்தாலே மூக்கில் விரல் வைத்துப் பேசும். ஊர் தெருவில் வேலை செய்யாத சேரிக் குடும்பமே இல்லாத அவ்வூரில், ஊருக்குள் கால் பதிக்காமல் படிக்க வைக்கப்பட்டவரில் உமாதேவியும் ஒருவர். எல்லைகளைக் கடந்து இன்றும் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருக்கும் இவர், அதற்கு தன் தந்தைதான் காரணம் என்கிறார். 2002 இல் நடைபெற்ற அத்திப்பாக்கம் அருகிலுள்ள வந்தவாசி செம்பூர் கலவரம், சாதாரண உமாதேவி என்கிற மாணவியை "பறச்சி' "பறச்சி' என்று துரத்தியடித்திருக்கிறது. கலவரம், நடந்த அந்த தலித் கிராமத்தில் ஆண்களற்ற தலித் பெண்கள், குழந்தைகளோடு சாதி இந்துக்களிடமிருந்து தப்பித்து ஓடும் திசையறியாமல் திகைத்த கடுஞ்சூழலே – தான் கவிதை எழுத வந்ததற்கான காரணம் என்கிறார்.
அவருடைய இன்றைய இந்து எதிர்ப்பு, பவுத்த இலக்கியத்தின் மூலம் இங்குதான் நமக்கு கிடைக்கிறது. பிற தலித் பெண் கவிஞர்கள் இத்தகைய வெளிப்பாட்டுடன் வந்தார்களா என்பது, உமாதேவியின் எழுத்து மற்றும் செயல்பாட்டுத் தன்மைகளிலிருந்து எழும் கேள்வியாக இருக்கிறது. அம்பேத்கரியப் பார்வையும் பவுத்தத்தை உள்வாங்கிய கூர்மையும் உமாதேவியை பிற பெண் கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஒட்டுமொத்த பெண்களையும் தலித் பெண்களோடு ஒப்புமைப் படுத்திவிட முடியாது. தலித் பெண்ணின் வலியையும், உளவியல் அழுத்தங்களையும் மற்ற பெண்கள் அனுபவித்திருப்பார்களா என்று சொல்ல முடியாது. உடல் அரசியலினூடே பெண்ணிய ஆளுமை வென்றெடுக்கப்படும் தருணத்தில், தலித் பெண்கள் மீதான தீண்டாமை கண்டு கொள்ளப்படுவதில்லை. இங்கிருந்து தொடங்குகிறது உமாதேவியின் தலித் அரசியல்.
“தமிழிலக்கியச் சூழலுக்கோ, தமிழ்ச் சமூகத்திற்கோ பெண்ணியம் என்பது புதிய சிந்தனையில்லை. பவுத்த காலத்திலேயே அது பெண்களை அரசியலுக்குள் ஈடுபடுத்தியுள்ளது. அது பவுத்த பெண்ணியம். அது, சாதி இந்து பெண்களிடையே சண்டை கட்டும். மணிமேகலை போல் அறம் செய்யும். குண்டலகேசியாய் சமூகத்திற்கு தீங்கிழைப்பவனைக் கொல்லும். சமூகத்தின் எல்லா நியாயங்களுக்குமான வழிகாட்டியாக நிமிர்ந்து நிற்பதே பவுத்த பெண்ணியம். இதுவே தலித் பெண்ணியம்'' என்று உமாதேவி வரையறுக்கும் பெண்ணியம் புதிய வெளிகளைத் திறக்கின்றன.
ஆண்கள் பெண்ணுடலை கட்டமைப்பதும், அதை நுகர்வுக்கானதாக மாற்றுவதும் காலக்கேட்டின் தீராத நீட்சி. ஆனால் ஒரு பெண் உடலை இன்னொரு பெண் எத்தகைய நிலையிலிருந்து அணுகுகிறார்? அதுவும் அந்த இரண்டு பெண்களில் ஒரு பெண் தலித்தாக இருக்கும்போது, தலித் பெண்ணுடல் எப்படிப்பட்டதாக மாறுகிறது? பெண்ணாலே தீண்டத்தகாத ஒரு பருப்பொருளாய் அல்லது அகம் நீக்கப்பட்ட புறப்பொருளாய் மாறுகிறது. இந்த நுண்மையான புள்ளியில்தான் உமாதேவி மய்யம் கொள்கிறார்.
காலங்களுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருக்கும் திரைச்சீலையாய் போய்விட்ட தன் தோழியுடனான நட்பு கல்லூரி முடித்ததோடு இருக்கிறது. சேரிக்கு வரமுடியாத தோழியின் இயல்பும் அருணாச்சலீஸ்வனாலயத்தில் முதன் முதலாய் செல்லும் தலித் பெண்ணின் தயக்கமும் நந்தியை தொழுதுவிட்டு வரும் தோழி, அய்ம்பொன் தாலியைப் போட்டதாக சொல்லும் போது, எட்டணா கற்பூரத்திற்கே வழியற்று / தூர நின்று வணங்கிச் செல்லும் / ஈனப் பறச்சி ஒருத்தி / நினைவுக்கு வருவதும் – தலித் வாழ்வில் இந்து வன்மையைக் கவிதையாய் உறைய வைக்கும் உத்தி.
உமாதேவி எழுத்தின் இன்னொரு பரிமாணம் முதன்மையானது. அவருடைய இலக்கியப்படிப்பின் பிரதிபலிப்பு, அவர் கவிதைகளிலும் சொற்சேர்க்கைகளிலும் செவ்வியல் மொழியினைப் பயன்படுத்தும் இயல்பிலும் காணக்கிடைக்கிறது. உவமைகளையும் படிமங்களையும் அவர் உருவாக்கும் தன்மையில் பொதிந்து கிடக்கும் தலித் வாழ்வின் சுருள்களில் விரியும் காட்சிகள் எதிர்வினையை உருவாக்க வல்லன. இத்தகைய சிறப்பு மிக்க அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான "திசைகளைப் பருகியவள்' நூலிலுள்ள கவிதைகள், தற்பொழுது அவர் கொண்டுள்ள எழுத்து நிலைக்கு முரணாக உள்ளது என்று உமாதேவி கூறுவதை, இலக்கிய உலகம் கவனிக்க வேண்டும். முதல் நூலை "தலைப்பிரசவம்' என்று கொண்டாடும் மரபினை உடைத்து, அவருக்கான தனித்தன்மையை ஈட்டுகிறது தற்போதைய அவர் கருத்து.
யாருக்காக எழுதுகிறோமோ அவர்களுக்கே புரியாமல் எழுதுவதைவிட, மொழியையும் இலக்கியத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்குமுன் அதனைச் சார்ந்த மக்களையும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதுதான் தம்மமாகும். ஞானம் பெறுதல் என்பது ஆழ்ந்த தவத்திலிருந்துப் பெறப்படும் வரமா அல்லது காரணக்காரியங்களைப் புரிந்து கொள்ளும் அறிவா என்பதறியாது, சித்தார்த்தன் புரிந்த கடுந்தவத்தால் உடல் பலவீனமாகி சிந்திக்கும் ஆற்றலை இழந்த நிலையில், கடுந்தவங்களையும் மந்திரங்களையும் கைவிட்டதைப் போல, மொழியை அடர்த்தியாக்கி எழுதுவதைக் கைவிட்டுவிட்டதாக அறிவிக்கும் அவரது துணிபும், அரசமரம் ஞானம் கொடுக்கும் மரமல்ல; ஆக்சிஜனை இரவிலும் கொடுக்கும் மரம் அவ்வளவுதான் என்பதும் அப்பட்டமான உண்மைகள்.
இலக்கியத் தொன்மங்களை கவிதைகளாக்கும் கூறு உமாதேவியிடமும் இருக்கிறது. அந்தத் தொன்மங்களின் மீதேறி தலித் விடுதலையை உரத்துப் பாடுகின்றன அவர் கவிதைகள். தலித் பெண்ணைப் பற்றி பேச வருகின்ற கவிதையொன்றில் இந்துத்துவ சாயல் படிந்த பெண்பிம்பங்களான கண்ணகி, சீதை, நளாயினி போன்றவர்களைப் போலன்றி, பவுத்த காப்பியமான குண்டலகேசியின் கதைத்தலைவியான தற்கொல்லியை முற்கொன்றவளான குண்டலகேசியைப் போல் அறிவு நுட்பத்துடன் இயங்கி இறக்கைகளை முறிக்காது, சிறு தும்பிகளைப் பறக்கவிடும் அவரது கவிதைகள் சமூக மாற்றத்திற்கானவை. புத்தரைப் பற்றிய அவரது "நீலப் பேரண்டம்' என்னும் கவிதையும் இத்தகையதே.
தலித் இலக்கியச் சூழல் குறித்த வினாவுக்கு அவருடைய விடையோ பண்பாட்டு ரீதியில் அமைந்திருந்தது. “ஜாதிக்கு எதிரான அறங்களைப் பேசும் உண்மையான வரலாற்றுத் தகவல்களால் நிறைந்த பவுத்த இலக்கியத்தினைச் சார்ந்த நூல்கள், தலித் எழுத்தாளர்களால் இயற்றப்படவில்லை என்பது ஒரு தேக்க நிலையே. தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் தலித் எழுத்தாளர்களின் ஆற்றல்மிக்க எழுத்துத் தேடல்கள் பவுத்தத்தையும் நோக்கி நகர்ந்தால், இன்றைய தலித் இலக்கியத்தின் தேக்கத்தை உடைக்க முடியும்'' என்பதுதான் அது.
பவுத்த அரசியலையும் ஆக்கங்களாக மாற்ற வேண்டும் என்பது உமாதேவியின் கருத்து. அவருடைய அம்பேத்கரிய சிந்தனைகளும் இதற்கு பெருந்துணை புரிகிறது. தலித்துகளை பின்னொதுக்கிய திராவிட பாணி அரசியலை விடுத்து, பவுத்தத்தை சமூக மாற்றத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்னும் அவரின் கருத்தும், அதை ஆக்கவெளியில் கொண்டு வருவதற்கான அவருடைய முயற்சிகளையும் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
“பெண்ணியம் என்பது பண்பாட்டுப் பின்புலமற்று இருப்பதாகவே நான் உணர்கிறேன். எத்தகைய இழிவுகளும் ஒடுக்குமுறைகளும் இந்து பண்பாட்டின் அடிப்படையிலேயே திணிக்கப்படுகின்றன. இந்து பண்பாடே பெண்களை இழிவுகளாகவும் ஆண்களின் உடைமைகளாகவும் சித்தரிக்கிறது. இதனை எதிர்க்கும் போராட்டம் பவுத்த பின்புலத்தின் மூலமாகவே நடைபெற வேண்டும்.
“மாறாக, பெண்ணியம் என்ற பெயரில் பார்ப்பனிய இந்து சிந்தனையோட்டத்தில் இரண்டறக் கலந்து ஆண்களுக்கு நிகராக மது – புகை பிடிக்கும் உரிமை கோருவதும், ஆண்களைப் போலவே உடையமைப்பு கோருவதும், உடல் விடுதலையை முன்வைப்பதும் என்ற அளவிலேயே இயங்குவதாக வருந்துகிறேன். இந்து பெண்களின் பெண்ணியக் கண்ணோட்டம் அய்ரோப்பிய வெள்ளையினப் பெண்ணியமாகவே இருக்கிறது'' என்று விரிவாகப் பேசும் உமாதேவியும் அவரது ஆக்கங்களும், தலித் இலக்கிய, சமூக விடுதலைக்கு இன்னொரு புள்ளி என்பதில் அய்யமில்லை.
– யாழன் ஆதி