ராட்சத இயந்திர
சங்கிலிச் சக்கரத்தின் அடியே
நசுங்கிப் போனது
நடுவில் சிக்கிய
நாற்றங்கால் மட்டுமல்ல
நிலத்தை அரசுக்குத்
தாரை வார்த்துவிட்டு
நடுத்தெருவுக்கு வந்து
நாதியற்று நிற்கும்
நல்லதொரு விவசாயியும்தான்.

அகண்ட ரோடும் அதன் நடுவே
இடுப்புயரச் சுவரும்
சீறிப்பாய
அழுத்திப் பிடிக்கப்படும்
அதிவிரைவு வாகனங்களும்
யார் வயிற்றுக்கும்
அன்னமிடவில்லை

அகால மரணமென்று சொல்லி
அடிவயிற்றில் ஏற்றி
குப்புற விழுந்தவனின்
குடலைப் பிடுங்கி
கூழாக்கிப் போகும்
ரப்பர் டயர்கள்
குருதி தொட்டு
வீரத் திலகமிட்டு
வெற்றி ஓலமிடுகிறது
வெறிகொண்டு

களிமண்ணும்
காய்ந்த சாணமும்
கண்ணாடிக் காகிதத்தில்
ஆன்லைனில் வலம்வரும்
அதே வேளையில்
கஞ்சிக்கும்
கால்வயிற்று சோற்றுக்கும்
ஆன் ’லைனில்’ தினமும் தவம்

வேரோடு பிடுங்கப்பட்ட
மரங்கள் அழகாய்
அடுக்கி வைக்கப்படுகிறது
அதற்கு அஞ்சலி செலுத்த
அலங்காரச் செடிகள்
அணிவகுத்து நிற்கிறது

பறிக்கப்படாத பூக்கள்
உதிர்ந்து ஆசீர்வதிக்கிறது
புதிதாய் விழும்
பிணங்களுக்கு
அடுத்ததாய்
வரிசையில் நீயோ நானோ
வேறு யாரோ!

- வே.சங்கர்

Pin It