‘விபசாரம்’ என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக இப்பொழுது “பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபசாரம்” என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் ‘விபசாரம்’ என்றே கூறலாம்

இத்தகைய ‘விபசார’த்தினால் தேசத்தில் உண்டாகி வரும் தீமைகள் எண்ணற்றவை. கேட்கச் சகிக்காத கொடும் பிணிகளும், பார்க்கப் பொறுக்காத பெரும்நோய்களும் விபசாரத்தினால் உண்டாகின்றன. விபசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஆண்களும், பெண்களும் நோய்வாய்பட்டு வருந்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் நோய்க்கு ஆளாகி ஜன சமூகத்தையே பிணியடையச் செய்யும் காளான்களாக இருக்கின்றனர்.

periyar and anna 480இன்னும் ‘விபசார’த்தினாலேயே கொலை, களவு முதலிய தீச் செயல் களும் மிகுதிப்படுகின்றன. ஆதலால் இக்கொடிய விபசாரத்தை ஒழிக்க உலகமெங்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது; அறிஞர்கள் எல்லோரும் இக் கொடுமையைப் பற்றி பேசி வருகின்றனர்.

ஜனசமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் “விபசாரத்தைப்” போன்ற வேறொரு கொடிய புழு இல்லை யென்றே சொல்லலாம். பண்டைக் காலந் தொட்டு வழங்கி வரும் அனேக தீய விஷயங்களில் ‘விபசார’மும் ஒன்றாகும்.

பழந்தமிழ் நூல்களில் ‘விலை மகளிர்’, ‘பொது மகளிர்’, ‘வரைவின் மகளிர்’ என்னும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவர்களுடைய தொழில் ‘விபசார’மேயாகும். ‘விபசாரம்’ என்பது சாஸ்திரங்களின் மூலம் குற்றமாகக் கருதப்பட்டாலும், ஜன சமூகத்தில் அது தாராளமாக நடைபெற்றே வந்திருக்கிறது. ஒரு ஆடவன், மணம்புரிந்து கொண்ட மனைவியோடு கூட ‘காதற் கிழத்தி’ என்னும் பெயருடன் நிலையாக வேறொரு பெண்ணோடு சேர்ந்திருப்பதும் சில சமயங்களில் இதுவும் போதாமல் ‘கணிகையர்’ இல்லங்க ளுக்குச் சென்று வருவதும் வழக்கமாகயிருந்ததாகவும் தமிழ் நூல்களால் அறியக் கிடக்கின்றது.

இதுவும் அல்லாமல், கோயில்களின் ஆடல் பாடல்களைச் செய்து கொண்டும், ‘சாமி’யையே கல்யாணம் செய்து கொள்ளப்பட்டது என்னும் அர்த்தத்தில் பொட்டுக் கட்டிக் கொண்டும், ‘தேவரடியார்’ எனப் பெயர் பூண்டும் வாழும் கூட்டத்தினரும், விபசாரத்திற்குக் காரணமாக இருப்பதும் நாடறிந்த செய்தியாகும். இத்தகைய ‘தேவரடியார்’களைப் பற்றியும் அவர்கள் கோயில்களிலுள்ள கல்லுச் சாமிகளுக்குப் (அவைகளை உண்டாக்கி வைத்திருக்கும் புரோகித ஆசாமிகளுக்கும்) பெண் சாதிகளாக இருந்து தொண்டு புரிய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் சமஸ்கிருத நூல்களில் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

தமிழ் நூல்களிலோ பண்டைக் காலத்தில், விபசார வாழ்க்கையை மேற்கொண்டிருந்த ‘விலை மகளிர்’ ‘பொது மகளிர்’ ‘வரைவின் மகளிர்’ என்ற பெயருடைய கூட்டத்தார் போக, ஆடல் பாடல்களைத் தொழிலாகக் கொண்டிருந்த ‘பாடினி’ ‘பாணினி’ ‘விறலி’ என்ற பெயருடைய ஒரு கூட்டத் தினரும் வேறேயிருந்திருக்கின்றனர். இக் கூட்டத்தாருக்கும் தற்காலத்தில் உள்ள ‘தேவரடியார்’ என்னும் கூட்டத்தாருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கக் கூடுமா? என்பது ஆராயத்தக்க விஷயமாகும்.

ஆகவே இந்த ‘விபசாரம்’ என்னும் கொடிய வழக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல வென்பதையும், பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.

முற்காலத்திலிருந்த வைதீகர்கள், புலவர்கள், நூலாசிரியர்கள் முதலிய வர்கள் அனைவரும் விபசாரத்தின் தீமையைப் பற்றிக் கூறாமல் விடவில்லை. விபசாரத்தின் கெடுதியைப் பற்றிச் சொல்லாத நீதி நூல்களோ, இலக்கியங் களோ, கதைகளோ ஒன்றுமில்லை என்று கூறலாம். ‘கொலை’, ‘களவு’, ‘பொய்’, ‘கள்’, ‘காமம்’ என்று கூறப்படும் பஞ்சமகா பாதகங்களில் ‘காமம்’ என்று குறிப்பிட்டிருப்பது விபசாரத்தையேயாகும். இவ்வாறு வைதீகர்களும், நீதி நூல்களும், புலவர்களும், நூலாசிரியர்களும், விபசாரத்தை ஜன சமூகத் தினின்றும் நீக்குவதற்குப் பண்டைக் காலமுதல் முயற்சி செய்துங்கூட, அக் கொடிய வழக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்ததேயொழியக் குறைந்த பாடில்லை. இவ்வாறு ‘விபசாரம்’ குறையாமல் வளர்ந்து வந்ததற்குக் காரணம் ‘விபசாரம்’ தோன்றுவதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அதை அடியோடு ஒழிக்க வழி தேடாமையேயாகும்.

‘விபசாரம்’ வளர்ந்ததற்கு முதற்காரணம் ஆடவர்களின் ஆணவமே யாகும், பெண்கள் விஷயத்தில் மாத்திரம் “கற்பு” “பதிவிரதாதர்மம்” என்ற கட்டுப்பாடுகளை வற்புறுத்தி ஆண்கள் விஷயத்தில் வற்புறுத்தாமல் விட்டதனால் பெண்கள் பலர் விபசார வாழ்க்கையில் ஈடுபட நேர்ந்தது., பணம் கொடுத்துப் பண்டங்களை வாங்குவோர் இல்லாவிட்டால், பண்டங்களை விற்பனைக்கென்று வைத்துக் கொண்டு வாங்குவோரை எதிர்பார்ப்பவர்களும் இருக்க மாட்டார்களல்லவா? அது போலவே சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப் பட்டு விபசாரியானவர்கள் பெருகியே விபசாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது.

இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமை யான கட்டு திட்டங்களும் விபசாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் ஐய மில்லை.

காதல் மணமில்லாமை, விதவை மணமில்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமையில்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள் பெண்கள் விபசாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும்.

ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத் தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.

பருவ காலத்தில் விதவையான பெண்களை சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழிசுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபசாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபசாரிகளாலும், விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில் தான் விபசாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?

இந்து சமூகத்தில், விவாக விடுதலை இல்லாமையால் நேரும் ‘விபசாரம்’மும் அதிகமே. மனைவியின் மேல் விருப்பமில்லாத கணவன், அவளை நீக்கிவிட்டுத் தாராளமாக வேறு பெண்ணை மணம் புரிந்து கொண்டோ அல்லது வேறு ஒரு பெண்ணைச் சேர்த்து வைத்துக் கொண்டோ வாழலாம். ஆனால் மனைவியோ வேறுமணம் புரிந்து கொண்டு வாழ, சட்டப்படி இடம் இல்லாமையால் விபசார வாழ்க்கையையே மேற்கொள்ள நேருகின்றது.

பெண்களுக்கு கணவனுடைய சொத்திலும் பெற்றோர் சொத்திலும் உரிமை இல்லாத காரணத்தால் கணவனாலும் பெற்றோர்களாலும் ஆதரிக்கா மல் விடப்பட்டவர்கள் ஜீவனத்திற்கு வேறு வகையில்லாத போது. ‘விபசார’ வாழ்க்கையையே கைக்கொள்ளும்படி நேருகின்றது.

ஆகவே உண்மையில் விபசாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களு டைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்தரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவா விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும்.

இப்பொழுது பல நாடுகளிலும் விபசாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால் விபசாரத் தடைச் சட்டம் அமுலிலிருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டதென்று கூறத்தகாது.

ஒருக்கால் இந்தியாவைத் தவிர மற்ற தேசங்களில் விபச்சாரத் தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்திவிடக் கூடும்.

ஏனெனில் இந்தியாவைத் தவிர மற்ற இடங்களில் நடைபெறும் விபசாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபசாரத்தைத் தடுப்பது எளிது.

ஆனால் நமது நாட்டில் நடை பெறுவது போன்ற மறைமுகமான விபசாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபசாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபசாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?

மேல் நாடுகளில் ரஷியா தேசம் ஒன்றில்தான் அடியோடு விபசாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல் சட்டமூலம் ஏற்பட்டிருக்கும் சௌகரியமேயாகும்.

இப்பொழுது நமது தேசத்தில் பரோடா, மைசூர், திருவாங்கூர் முதலிய சமஸ்தானங்களில் சட்டம் மூலம் விபசாரம் தடுக்கப் பட்டிருக்கிறது. சென்னையிலும் பம்பாயிலும் ‘விபசார’ச் சட்டம் நிறைவேறியிருக்கிறது. பம்பாய் நகரத்திலும், சென்னை நகரத்திலும் இச் சட்டம் அமுல் நடத்தப் படுகிறது. இப்படி இருந்தும் மேற்கண்ட சமஸ்தானங்களிலும் நகரங்களிலும் விபசாரக் கொடுமை அடியோடு ஒழிந்து விட்டதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பகிரங்கமாக நடந்த ‘விபசார’ வியாபாரம் ஓரளவு ஒழிந்ததே அன்றி மறைமுகமான விபசாரம் சிறிதும் குறையவேயில்லை.

இன்னும் இச்சட்டத்தை நாடெங்கும் அமுலுக்குக் கொண்டு வந்தாலும், தாட்சண்யமின்றிச் சட்டத்தின் விதிகளை உபயோகித்தாலும் விபசாரத்தை அடியோடு ஒழிக்க முடியாது.

வெளிப்படையான ‘விபசார’ வியாபாரத்தை ஓரளவு ஒழிக்க முடியுமே தவிர ரகசிய வியாபாரம் எப்பொழுதும் நடந்தே தான் தீரும்.

ஆகையால் மற்ற நாடுகளைப் போல் ஆண்களுக்கும் பெண்களுக் கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி அதை அனுபோகத்தில் கொண்டு வருவதன் மூலந்தான் விபசாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஆனால் நமது நாட்டு வைதீகர்களோ விபசாரம் தீயது என்று வாயளவில் மாத்திரம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தமது வீட்டில் உள்ள விதவைப் பெண் மக்கள் செய்யும் விபசாரம் கண்ணுக் குத் தெரிவதில்லை. தமது குடும்பங்களில் உள்ள ஒற்றுமையில்லாத தம்பதிகள் செய்யும் விபசாரமும் கண்ணுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதைக் குற்றமாகவோ விபசாரமாகவோ கருதாமல், அதற்குப் பரிகாரம் தேடாமல் கண்ணால் காணாதது போலவும், காதால் கேளாதது போலவும் இருந்து விடுகின்றார்கள்.

விபசாரம் ஒழிவதற்கு, காதல் மணம், விதவை மணம், விவாக விடுதலை, சொத்துரிமை முதலியவைகளே வழியென்று கூறும் சீர்திருத்தக் காரர்களையும் சுயமரியாதைக்காரர்களையும் “பெண்களை யெல்லாம் விபசாரம் செய்யத் தூண்டுகின்றவர்கள்” என்று குறை கூறுகின்றார்கள்.

மதப் புரட்டுகளையும், சாஸ்திரப் புரட்டுகளையும், நம்பிப் பெண்களைக் கொடுமைப்படுத்தி விபசாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும், சமுதாய விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபசாரத்தை ஒழிப்பதற்கு எத்தகைய சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 29.05.1932)

Pin It