கொஞ்சம் கொஞ்சமாய் நான் சேமித்த
காதல் கனவுகள் சாம்பலாகிக்கொண்டிருப்பது பற்றிய
சலனமேதுமின்றி உன் திசையில் போய்க்கொண்டிருக்கிறாய் நீ ..

கூரிய ஆயுதமொன்றை ஏந்தியபடி
உன் நினைவுகள் என்னிடம் நெருங்குகின்றன..

கைகளில் நிறைந்திருந்த பூக்களை பிடுங்கிவிட்டு
பலவந்தமாய் சிலுவைகளை திணிக்கிறாய்..

எவராலும் அளிக்க முடியாத வலிகளையும்
எவராலும் தாங்கவொண்ணா துயர்களையும்
எனக்குள் இடைவிடாது கொட்டித்தீர்க்கிறாய்..

என் கால்களின் கீழே பாரபட்சமின்றி
சிதறிக்கிடக்கிறது நம் காதல் கண்ணாடி
கிழித்தெறியப்பட்ட ஓவியம் ஒன்றை
என் நிகழ்காலம் நினைவூட்டுவதாக
ஒரு வழிப்போக்கன் சொல்கிறான்..

மழை பொழிந்து ஓய்ந்த சாலையில்
மிக மிக மெதுவாக துவங்கிய நம் காதல் பயணம்
போர் நிகழ்ந்து முடிந்த போர்க்களத்தில்
எஞ்சிய சிதைவுகளின் உருக்குலைவாக
அடையாளமிழந்து கிடப்பது பற்றி
உதிர்ந்த இலைகள்,காற்றின் சுவடுகளில்
துயர்நிறைந்த கவிதைகளை எழுதுகின்றன..

மீண்டும் கூரிய ஆயுதமொன்றை ஏந்தியபடி
உன் நினைவுகள் என்னிடம் நெருங்குகின்றன..

உன்னைப்போலவே தினமும் இருளும் ஒவ்வொரு இரவும்
சில மிருகங்களின் பற்களை தயார்செய்துகொண்டிருக்கிறது
என் பிடரிமுனையை குறிவைத்து..

- நிந்தவூர் ஷிப்லி

Pin It