சன்னலும் கதவுமற்ற
ஒரு வீடு நீ கேட்பதன்
அர்த்தத்தோடு அதைப் பூர்த்தியாக்கி
நம் அன்பளவு ஆழத்தில்
வைத்திருக்கிறேன்.

அவ்வப்போது நீ புகும் வழியில்
நான் திரும்பக்கூட
துவாரமில்லை அங்கு
எனக்கிது போதுமானதாக இருக்க
இது மட்டும் போதாது உனக்கு...

மெல்லிய ஒரு இசையைக் கேட்டபடி
என் கையொன்றைப்
பிடித்துக் கொள்ள கேட்கிறாய்
அறையெங்கும்
நம் உலகை இசைக்க
உனக்குக் கைகள் கொடுத்து
மகிழ்கிறேன்...

முகம் பார்த்துக் கொஞ்சம்
ஒளி பொருந்த விழி உயர்த்துகிறாய்
அறையின் விட்டமெங்கும்
நட்சத்திரங்கள் முளைத்து வந்து
பொருத்திப் பார்க்கிறது
அவ்வெளிச்சத்தை...

இவ்வளவாக
ஒளிர்வதைப் பார்த்தால்
நம் இருவர் மூச்சை இருவரும்
வாங்கிக் கொள்வதைப் போல
இந்நட்சத்திரங்களும் கொஞ்சம் வாங்கிக்
கொள்ளுமென நினைக்கிறேன்...

மடியிலிருந்து
நீ திரும்பியெனைப் பார்க்க
நட்சத்திரங்கள்,
முக்கோணம்
சதுரம்
வட்டம்
செவ்வகம்
எல்லாம் விட்டுவிட்டு
கோர்த்த உன் விரலில்
மினுங்குகிறது அழகு நகமாய்..

இரு நட்சத்திரங்களுக்கும்
ஜாண் இடைவெளியென
நீ அளக்கும் போது;
சுட்டு விரல் நகமும்
பெரு விரல் நகமும்
அப்படித்தானிருந்தது...

உன்னோடே
எனக்காயிரமிருக்க
ஓர் இரவு
ஒர் இசை
ஒரு வானமும் வந்துவிடுகிறது ;
நம் அறைக்குளிருந்து வெளிவர
எனக்கு ஒரு துவாரமுமில்லை...
அவை அன்பளவில் அடைபட்டிருக்கலாம்…

- முருகன்.சுந்தரபாண்டியன்

Pin It