வேறுபட்ட மொழி, பண்பாட்டு அடிப்படையி லிருந்து தோன்றிய இரண்டு இலக்கியங்களுக்கு இடையேயான உறவுநிலைகளை, தொடர்புகளை, இணைவு ஒப்புமைகளைக் கண்டறிந்து ஆராய்வது ஒப்பிலக்கியத்தின் நீண்டகாலச் செயல்பாடாக இருந்துவருகின்றது. இலக்கியங்களுக்கிடையிலான உறவுகளையும் தொடர்புகளையும் ஒப்புமைகளையும் கண்டறிவதற்கு, தாக்கம் (Influence), இணைநிலை (Parallel) என்ற ஆய்வுமுறைகளைத் தாண்டி, ‘ஊடிழை இலக்கியத்தன்மை’ (Inter literariness) என்கின்ற ஆய்வு முறை ஒன்று அண்மைக்காலத்தில் கையாளப்பட்டு வருகின்றது. ‘ஊடிழை இலக்கியத்தன்மை’ என்ற ஒப்பிலக்கியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் சங்க அகக்கவிதைகளையும் காளிதாசன் காவியங்களையும் ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சங்கச்சான்றோர் கவிதைகளுக்குக் காளிதாசன் கடன் பட்டிருக்கும் தன்மை குறித்து, அமெரிக்கக் கலிஃபோர்னியா பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட், பேராசிரியர் ப.மருத நாயகம் போன்றோர் முன்னரே சுட்டிக்காட்டியுள்ளனர். ஆயின் இக்கட்டுரை, ஊடிழை இலக்கியத்தன்மை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் காளிதாசன் கவிதையில் காணப்படும் சங்க இலக்கியத்தின் ஊடாட்டத்தைப் பருப்பொருளியலான சில சான்றுகள் வழி விளக்க முனைகின்றது.
ஊடிழை இலக்கியத்தன்மையின் அடிப்படைகள்
இலக்கியத்தன்மை என்பது குறித்து ருஷ்ய உருவவியல், அமைப்பியல் போன்றவற்றில் பேசப் பட்டிருந்தாலும் ‘ஊடிழை இலக்கியத்தன்மை’என்பதை ஒப்பிலக்கியத்தின் கருத்தாக்கமாக முதலில் பேசியவர் ‘மரியான் காலிக்’ (Marian Galik) என்கின்ற ‘சுலோவகியா’ நாட்டு ஒப்பிலக்கிய அறிஞராவார். ஓர் இலக்கியத்தில் இலக்கியத்தன்மை என்பது, மொழியை அசாதாரணப்படுத்துவதன் (Inordinariness) வாயிலாகவும் வழக்கத்திற்கு மாறான தன்மையாக்கம் (De-Femilarisation) செய்வதன் வாயிலாகவும் உருவாகின்றது. இலக்கியத் தன்மையே ஓர் இலக்கியப்பனுவலைப் பிற பனுவல் களிலிருந்து வேறுபடுத்துகின்றது. சொல்விளையாட்டு, ஒலிநயம், பேச்சுச்சந்தம் முதலான உத்திகளின் வாயிலாக, இலக்கியத்தில் மொழியின் செயல்பாடு, உணர்ச்சி கரமானதாகவும் விலகல்தன்மை கொண்டதாகவும் மொழிசார் நிலையைக்கடந்து குறியீட்டுத்தன்மை கொண்டதாகவும் கையாளப்படுகின்றது. மொழியின் வழி நிகழ்த்தப்படும் இலக்கியத்தின் ‘இழைமானமே’ (Fabric) ஓரிலக்கியத்திற்கு இலக்கியத்தரத்தை வழங்கு கின்றது. இலக்கியப் புலமையைவிட இலக்கியத் தன்மையே கலை, இலக்கியப்பண்பு சார்ந்த அழகியல் பொருளின் மையமாக இருக்கிறதென்று ‘ரெனிவெல்லக்’ குறிப்பிடுவார் (மேற்கோள்: 2000:ப.2)
ஊடிழை இலக்கியச்செயல்பாடு குறித்துப் பேசும் ‘டயோனிஸ் ட்யூரிஸின்’ (Dionyz Durisin) என்பவர், ‘இலக்கியத்தன்மை என்பது எல்லா இலக்கியங் களுடைய அடிப்படை மற்றும் சாராம்சப் பண்பாகும்’ (மேலது) என்று குறிப்பிடுகின்றார். இலக்கியத்தன்மை என்பது, தானாகவே ஊடிழை இலக்கியத்தன்மையாக மாறுகின்றது. அதன்வழி, தேசியம் கடந்த, இனவியல் கடந்த உறவுகளை, இணக்கங்களை அது சாத்தியமாக்கு கின்றது. ஊடிழை இலக்கியத்தன்மை, இலக்கியத் தன்மைக்கு இரண்டாம் நிலையானது. ஊடிழை இலக்கியச் செயல்பாடு, இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கில் கால இனவியல் மாற்றங்களைக் கொணர்கிறது. ஒரு குறிப்பிட்ட இலக்கியம் எப்போதும் புதுக்கூறுகளைக் கொண்டு தன்னைத் தகவமைத்துக்கொள்வதற்கு நிரந்தரமான உருகுநிலையிலேயே இருக்கின்றது. எனவே, இலக்கியத்தின் புதிய உருவாக்கத்திற்கு, உருகுநிலையின் கட்டமைப்பிற்கும் ஓர் இழுவிசை இருக்கிறது என்று ‘பியாஜெட்’ (Piaget) குறிப்பிடு கின்றார் (மேலது). ஊடிழை இலக்கியச் செயல்பாட்டின் உருமாற்றத்தை சுமேரிய, அகாடிய, அசிரிய, அனடோலிய நாகரிகங்களில் காணமுடியுமென்று குறிப்பிடுகின்ற ‘மரியான் காலிக்’ (Marian Galik), இந்தியக் காப்பியங்களுக்கும் கிரேக்க இலக்கியங்களுக்கு மிடையில் (ஐரோப்பிய, ஆசிய இலக்கியங்கள்), ஊடிழை இலக்கிய ஒருமையைக் காணமுடியும். இவ்விரு இலக்கியங்களுக்குமிடையில் பெயரடைகள், உவமைகள், அடிக்கருத்துகள் ஆகியவற்றின் பயன் பாட்டில் ஒத்த தன்மையைக் காணமுடிகிறது என்கிறார். சான்றாக, பெண்ணைக் கவர்தல் (ஹோமரின் ‘இலியாது’ காவியத்தில் ஹெலன் - ‘இராமாயணத்தில்’ சீதை), பெண்ணின் அவமானம் (‘மகாபாரதத்தில்’ திரௌபதி, ஹோமரின் ‘ஒடிசியில்’ பெனிலோப் (Penilope) ஆகிய அடிக்கருத்துகளும் பிற எடுத்துரைப்பியல் கூறுகளும் மகாபாரதம், கில்காமேஸ், இலியாது ஆகிய காவியங்களில் ஒத்த தன்மையுடன் அமைந்திருப்பதை அமியதேவும் சிசிர்குமார்தாசும் எடுத்துக்காட்டியுள்ளனர் (மேலது,ப.3).
ஊடிழை இலக்கியத்தன்மை, புறத்தொடர்பு களாலும் அகத்தொடர்புகளாலும் இலக்கியங்களில் நிகழ்கிறது. ஊடிழை இலக்கியத்தன்மை, மேலெழுந்த வாரியாகவும் ஆழமான பண்புகொண்டதாகவும் அமையும். ஊடிழை இலக்கியத்தன்மையின் செயல் பாடு, பெரும்பாலும் பெரும் சமூகமாற்றம், புரட்சி போன்ற சூழல்களில் மிகுதியாக நிகழ்கிறது. ஊடிழை இலக்கியத்தன்மையினால், தனிப்பட்ட இலக்கியங்களின் ஒட்டுமொத்த ஒழுங்கமைவுக் கட்டமைப்புக்கூறுகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அவ்விலக்கியங்களின் வழக்க மான கருத்தியல், அழகியல், இலக்கிய இனங்கள், இலக்கிய வகைகள், வடிவங்களில் பெரும் உரு மாற்றங்கள் நிகழ்கின்றன. ஊடிழை இலக்கியத்தன்மை, ஊடிழை இலக்கியச் செயல்பாடாக மட்டுமின்றி, ஊடிழைப் பண்பாட்டுச் செயல்பாடாகவும் அமை கின்றது. ஊடிழை இலக்கியத்தன்மை பற்றிய ஆய்வு, ஒப்பிலக்கியத்தின் அடிப்படை நோக்கங்களுள் ஒன்றான ஊடிழை இலக்கியக் கவிதையியலையும் ((Inter Liberary Poetics) கண்டறிய உதவுகின்றது. இலக்கியத்தின் ஒரு பண்பான ஊடிழை இலக்கியத்தன்மை, தனிப்பட்ட இலக்கியங்கள், தேசிய இனவியல் நிலைகளைக் கடந்து செல்ல உதவுகின்றது. அத்துடன், ஊடிழை இலக்கியச் சமூகங்களையும் இலக்கியக் குடும்பங்களையும் உருவாக்க உதவுகின்றது. இதன்வழி, இலக்கியங்களின் பரஸ்பரத் தாக்கங்களையும் எதிர்வினைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது. அத்துடன், இலக்கிய ஆய்வினைப் புவிசார் இலக்கிய ஆய்வு எனும் விரிந்த தளத்திற்கு இது நகர்த்திச் செல்கிறது.
இந்திய இலக்கியங்களில் ஊடிழை
இலக்கியச் செயற்பாடு
இந்திய இலக்கியம் என ஒருமையில் அழைக்கப் பட்டாலும், இருபத்திரண்டு மொழிகளில் இந்திய இலக்கியங்கள் வெளிவருகின்றன. ஐரோப்பிய இலக்கியம், ஆப்பிரிக்க இலக்கியம், சோவியத் இலக்கியம் என்பதுபோல், இந்திய இலக்கியம் என்பதும் பல்வேறு இலக்கியங்களின் தொகுதியாக இருக்கின்றது. பல மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் ஒன்றே என்ற சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் கூற்று, இந்தியப்பண்பாட்டின் ஒருமைத்தன்மையைக் கருத்திற் கொண்டு கூறப்பட்டது. அதே நேரத்தில், இந்தியப் பண்பாட்டின் அடிப்படை என்பது வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) கொண்டதாகும். இந்தியப் பண்பாடு என்பது, இந்திய இலக்கியங்களைப்போல் பன்மையியத் தன்மைகொண்டது. ஒரே தேசிய எல்லைக் குள்ளிருந்து இந்திய இலக்கியங்கள் படைக்கப்பட்டாலும், அவை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பண்பாடு களில் வெவ்வேறு தேசிய இனங்களின் அடையாளங் களாகவும் பிரதிநிதிகளாகவும் திகழ்கின்றன. எனவே, இந்திய இலக்கியங்களுக்கிடையேயான ஒப்பிலக்கிய ஆய்வு என்பது, அவ்விலக்கியங்களுக்கிடையிலான இந்தியத்தன்மை என்கின்ற பொதுமையையும் தமிழ், மராத்தி, வங்காளி என்கின்ற தனித் தேசியஇனங்களின் தனித்தன்மைகளையும் கண்டறிவதாக அமைகின்றது. இந்திய இலக்கியத்துக்குள் சமஸ்கிருதம் ஙீ சமஸ்கிருதம் அல்லாத இலக்கியங்கள் அல்லது சமஸ்கிருதம் ஙீ சமஸ்கிருதத்திற்குப் பிந்தைய இலக்கியங்கள் என்கின்ற இருமைகள் இலக்கிய விவாதத்தில் கட்டமைக்கப் படுகின்றன. தமிழ், பாலி, பிராகிருதச் செவ்விலக்கியங்கள் அல்லாத நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்கள் சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்குப் பெரிதும் ஆட்பட்டவை. சமஸ்கிருத மரபினை அடியற்றித் தமது சொந்த இலக்கிய மரபினை உருவாக்கிக்கொண்டவை. சமஸ்கிருத மரபினைப் பின்பற்றியதன் வழியிலும், சமஸ்கிருதக் காவியங்களை மொழிபெயர்த்ததன் வழியிலும் தமது இலக்கியத்திற்கான அடையாளத்தைப் பொதுவெளியில் உருவாக்கிக்கொண்டவைதான் பெரும்பாலான நவீன இந்தியமொழிகளின் இலக்கியங்கள். எனவே, இவ்விலக்கியங்களின் இழைமானத்தில் சமஸ்கிருத மொழி, இலக்கண, இலக்கிய, அழகியல் மரபுகள் ஊடும்பாவுமாக ஊடாடி நிற்கின்றன. தமிழ்மரபு, சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட தனித்தன்மை கொண்டது. இருப்பினும் சமஸ்கிருதம், இந்தியாவிலுள்ள இலக்கியவாதிகள் உரையாடிக்கொள்வதற்கான ஒரு பொது இலக்கியமொழியாக இருந்தமையாலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் - குறிப்பாகப் பெரிதும் தென்னிந்தியர்கள் - சமஸ் கிருதத்தில் இலக்கியம் செய்தமையாலும் தமிழிலக்கி யத்தில் சமஸ்கிருதத்தின் ஊடாட்டமும் சமஸ்கிருதத்தில் தமிழிலக்கியத்தின் ஊடாட்டமும் நிகழ்ந்திருக்கின்றன. அவ்வகையில் சங்கக்கவிதையின் அகவிலக்கிய மரபுகள், காளிதாசனின் கவிதைகளில் ஊடாடியிருக்கின்றன.
தமிழ்க்கவிதையும் காளிதாசன் காவியங்களும்
சங்கநூற்களில் இடம்பெற்றுள்ள உவமை, படிமம் முதலான புனைவுக்கூறுகளின் பயன்பாட்டைக் காளி தாசன் காவியங்களில் காணமுடிகின்றது. சான்றாக, ஒளவையார் அதியமான் படையிலுள்ள வீரர்களின் சீறிவரும் சினத்தை விவரிக்கையில், கோலால் அடித்தால் சீறியெழும் பாம்பினை உவமையாகக் கூறியுள்ளார்.
“எரிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே” (புறம்.89)
இதே உவமையைக் காளிதாசன் தன் ரகுவம்சத்தில், இராமனின் வீரத்தை விவரிக்கையில் பரசுராமனின் கூற்றாகக் கையாண்டுள்ளார்.
“...தடியால் ஓங்கியும்
அடித்த ஓரரவு எழுந்திடும் சீறி!
உந்தனின் வீரப் பராக்கிர மத்தால்
உசுப்பியும் விட்டனை கோபம்!” (ரகு., ப.352)
இதேபோன்று காளிதாசனின் உவமை ஒன்றைக் கம்பன் கையாண்டுள்ளதையும் காணமுடிகின்றது. ரகுவம்சத்தில் இராமனின் பாட்டன் அஜன் இந்துமதியை மணமுடிக்க நகர்வலம் செல்லும்போது, அவனை நகரப்பெண்டிர் யாவரும் சாளரத்திலிருந்து காண் கின்றனர். அக்காட்சியினைக் காளிதாசன், ஜன்னலில் தாமரைப்பூக்கள் பூத்ததாக உருவகப்படுத்துகிறார்.
“கன்னி முகமோ கமலப் பூவையும்
கண்கள் கறுப்பு வண்டு களையும்
அருந்திய மதுமணம் தேனின் மணத்தையும்
பொருந்தி இருந்தது; போய்நிற் குங்கால் -
சாளர மெல்லாந் தாமரைப் பூவே...!” (ரகு., ப.187)
இதே காட்சிப்படிமத்தை, உருவகஅணியைக் கம்ப ராமாயணத்தில் கம்பர், இராமன் தேரேறித் தெருவில் சென்றபோது, பெண்கள் சன்னல்களுக்குள் நின்று கொண்டு இராமனைக் கண்ட காட்சியை விவரிக் கின்றார்.
“நீள் எழுந்தொடர் வாயிலில், குழையடு நெகிழ்ந்த
ஆளகத்தினொடு அரமியத் தலத்தினும் அலர்ந்த;
வாள் அரத்த வேல் வண்டொடு கெண்டைகள் மயங்கச்
சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள்”
(கம்ப., பா.1453)
இவ்வாறு காளிதாசன் கவிதைகளின் இழைமானத் திற்குள் தமிழ் இலக்கியக் கூறுகளும் தமிழ்க்கவிதை களின் இழைமானத்திற்குள் காளிதாசனின் இலக்கியக் கூறுகளும் ஊடாட்டம் செய்துள்ளன.
நிலவெளிகளும் காதலர் அகவெளிகளும்
காதலர் சந்திக்கும் நிலங்களும் காதலர் கூடல் - பிரிவு உணர்வுகளும் காதலர் உணர்வுக்குப் பின்புல மாகும் இயற்கைக்காட்சிகளும் காதலுறும் பெண்டிர் குறித்த வருணனைகளும் குறுந்தொகையிலும் காளிதாசர் காவியங்களிலும் ஒத்த தன்மையில் அமைந்துள்ளன. சங்க அகப்பாடல்களில், நெல்வயல்களும் கரும்புவயல்களும் விரிவான சித்திரிப்பைப் பெற்றுள்ளன. வேளாண்மைச் சமூகத்தின் உருவாக்கத்தையும் அதன் விரிவையும் கண்டு வியந்த சங்கப்புலவர்கள், அவற்றைத் தம் கவிதைகளில் சித்திரித்துள்ளனர்.
“தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாண ரூரன் பாணன் வாயே” (குறுந்.85)
இதேபோன்று, குறுந்தொகையின் பிற கவிதை களிலும் (85,198,267) கரும்புவயல் வருணிக்கப் பட்டுள்ளது. காளிதாசனின் காவியங்களிலும் காதல் உணர்வைப் பாடுகையில், கரும்புவயல்கள் பின்புலமாய் வருணிக்கப்பட்டுள்ளன. முகில்விடுதூதில் (மேக சந்தேசம்), யட்சன் மேகத்திற்கு வழியைக் கூறுமிடத்து, கரும்புத்தோட்டங்களின் செழிப்பை வருணிக்கின்றான்.
“கரும்புப் பயிர் நிறைந்த இவ்விடமிருந்து மேலெழுந்து
கருத்த திக் கஜங்களின் பருத்த துதிக்கைகளை நீத்து
காற்று மலைச் சிகரந்தனைப்
பெயர்த்தெடுத்துச் செல்கிறதோஎன
கவிகளும் அணங்குகளும் வியந்து
புகழ்ந்து போற்றும்படி செல்.” (பா.14)
இவ்வாறே, அவரது பருவங்களின் வருணனையிலும் (ருது சம்ஹாரம்), பின்பனிக்கால வருணனையில் காதல் வேட்கை, பிரிவு ஆகியவை கரும்புகளின் செழிப்புடன் இணைத்துப் பாடப்பட்டுள்ளன.
“வளர்ந்த நெற்பயிர் கரும்புகளால் நிறைந்தபூமி
க்ரௌஞ்ச பட்சியின் மென்னொலி அழகுநிறைக்க,
பெண்கள் விரும்பியதும்
காமவேட்கை குன்றுவதுமான
அழகிய பெண்ணே பின்பனிக்காலம் பற்றிக் கேள்.”
(பா.1 - ப.157)
இப்பாடலில், கரும்புப்பயிர் நெற்பயிருடன் இணைத்துப் பேசப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்திலும் பல பாடல்களில் நெல் வயலில் பூத்திருக்கும் கரும்பைப் பற்றிய சித்திரிப்பைக் காணமுடிகின்றது.
“பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற் கழனியூரன்” (ஐங்.4) எனும் தொடரில்வரும் நெல் தலைவிக்கும், கரும்பு பரத்தைக்கும் குறியீடாகியுள்ளது. ‘ஸிஸிரம்’ எனப்படும் பின்பனிக்காலப் பருவ வருணனையில் மற்றொரு பாடலிலும் காதலர்களின் கலவி, நெல் கரும்புகளின் செழிப்போடு இணைத்துப் பேசப்பட்டுள்ளது.
“இனிய வெல்லம் ருசிநிறை நெல் கரும்பு செழிக்கும்
காதலரின் கலவி கேளிக்குகந்ததும் மதனகர்வமூட்டும்
இன்னுயிர்க் காதலியைப் பிரிந்தோரை மிக வாட்டும்
பின்பனிக்காலம் எல்லோருக்கும்
நன்மையை நல்கட்டுமே” (பா.16 - ப.165)
இவ்வாறு, நிலத்தைக் காதலுணர்வுடன் இணைத்துப் பார்க்கும் தமிழின் சூழலியக் கவிதை மரபினைக் காளிதாசனிடம் காணமுடிகின்றது.
கருத்துப்பொருளும் காட்சிப்பொருளும்
சங்க அகக்கவிதையில், காதலரின் பிரிவும் கூடலும் அவர் வாழும் நிலத்து இயங்கும் பறவை, விலங்குகளின் செயல்களோடு இணைத்துப்பாடுவது ஒரு பொது வழக்கு. காதலரின் பிரிவை மிகுவிக்கின்ற வகையில், நிலக் கருப்பொருட்களின் செயல்கள் எடுத்துரைக்கப் படும். சான்றாக, குறுந்தொகைப் பாடலொன்றில், இளவேனிற்பருவத்துத் தலைவன் வாராமையால் வருந்தும் தலைவியின் பிரிவுத்துயரத்தை மிகுவிக்கின்ற வகையில் மாமரத்திலிருந்து கூவும் குயிலின் கூவல் அமைந்துள்ளது.
“ஈங்கே வருவ ரினைய லவரென
அழாஅற்கோ வினியே நோய்நொந் துறைவி
மின்னின் றூவி யிருங்குயில் பொன்னின்
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை
நறுந்தாது கொழுதும் பொழுதும்
வறுங்குரற் கூந்த றைவரு வேனே” (குறுந்.192)
இக்குறுந்தொகைப் பாடலில் இடம்பெறும் இளவேனிற்காலம், மாமரம், கிளையிலமர்ந்து தாதை உண்ணும் மின்னும் சிறகுகளையுடைய குயிலின் குரல், தலைவியின் வருத்தமிகுதி ஆகிய அனைத்தும் இடம் பெறும் வகையில் ருதுசம்ஹாரத்தின் இளவேனிற்காலப் (வசந்தருது) பாடல்கள் இரண்டு அமைந்துள்ளன.
“மதங்கொண்ட வண்டுகளும் குயில்களின் கூவலும்
பூத்த மாமரங்களும் கர்ணிகாரங்களும் பொலிவூட்ட
கூரம்பு கணைகளில் அணங்கின் மனம் தாக்கி
மன்மத வேட்கையூட்டி வாட்டிடுமே வசந்தகாலம்”
(ருதுசம்ஹாரம், பா.27)
மாம்பூச்சாறு பருகி மதம்கொண்ட ஆண்குயில்
காதல் மேலிட களிப்புற்றுக் காதலியை முத்தமிட
தாமரைப்பூ உறைவண்டுகள் ரீங்காரம் செய்தே
தன்னின்ப நாயகியின் மனம்நெகிழச் செய்திடும்”
(மேலது, பா.14)
குறுந்தொகைப்பாடலின் முதல், கரு, உரி ஆகிய மூன்றும் காளிதாசனின் இந்த ருதுசம்ஹாரப் பாடல் களில் காட்சிப்பொருளாயும் கருத்துப்பொருளாயும் முறை சிறந்து வந்திருப்பதைக் காணமுடிகின்றது. பாடு பொருள் மட்டுமல்லாமல், பாடுபொருளுக்கு இயைந்த இயற்கைப் பின்னணியான காட்சிப்படிமமும் இணைந்து நிற்கின்ற சங்கக் கவிதையின் இழைமானத்தைக் காளி தாசனும் தன் கவிதையின் இழைமானத்தில் புனைவுக் கூறாகப் பயன்படுத்தியுள்ளார். மேற்குறிப்பிட்ட குறுந்தொகைப்பாடலில் தலைவனைப் பிரிந்த தலைவி, தன் கூந்தலை அள்ளி முடியாமல் (புனையப்பெறாமல்), வறட்சியாக வைத்திருப்பதைக் காணமுடிகின்றது. தலைவனைப் பிரிந்த தலைவி கூந்தலை முடியாம லிருப்பது வேறுபல சங்கப் பாடல்களிலும் விவரிக்கப் பட்டுள்ளன. காதலனைப் பிரிந்த தலைவி கூந்தலை முடியாமலிருக்கின்ற தமிழ்ப்பண்பாட்டு வழக்கத்தினைக் காளிதாசனும் தன் மேகசந்தேசத்தில் (முகில்விடுதூது) படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
காதலியைப் பிரிந்த யட்சன் மேகத்திடம் பிரிந் திருக்கும் தலைவியின் தோற்றத்தைப் பின்வருமாறு வருணிக்கின்றான்.
“சபிக்கப்பட்ட நாள்முதல் அவிழ்ந்த கூந்தலை
விரதம் மேற்கொள்ளவே எண்ணெய்ப்பூச்சுகள் நீக்கிட,
சடையாகி அழுக்கேறி மென்மை யிழந்த கூந்தல்
கன்னத்தில் வீழ்ந்திட கைகளால் அகற்றிடுவாளே”
(மேக.98)
பெண்ணுடல் வருணனையில் வரும் உவமைகள்
காட்சிப்பொருள், கருத்துப்பொருளின் இயைபில் மட்டுமல்லாது, தலைவியை வருணிக்கும் விதத்திலும் சங்கக்கவிதைகளும் காளிதாசனின் கவிதைகளும் ஒன்றுபட்டுக் காணப்படுகின்றன. பெண்ணை மயிலின் இயல்புடன் ஒப்பிடுவதும் பெண்ணின் கூந்தலை மயில் தோகைக்கு ஒப்பிடுவதும் பெண்ணின் தொடையை வாழைமரத்திற்கு ஒப்பிடுவதும் தமிழ், சமஸ்கிருதம் என்ற வேறுபட்ட இரண்டு மரபுகளிலும் ஒத்துக் காணப்படுகின்றன.
“மயிலியற் செறியெயிற்று அரிவை” (குறுந்.2)
“கலிமயிற் கலாவத்தன இவள்” (குறுந்.225)
“ஒலிநெடும் பீலி துயில்வர வியலி
ஆடுமயில் அகவும் நாடன்” (குறுந்.264)
என வரும் குறுந்தொகைப் பாடல்களில் சங்ககாலத் தலைவி, மயிலுக்கும் அவளது கூந்தல் மயில் தோகைக்கும் ஒப்புமையாகியிருப்பதைப்போல, மேகசந்தேசத்தில் வரும் தலைவியின் கூந்தலும் மயில்தோகைக்கு ஒப்புமையாகின்றது.
“பிரியங்கு கொடி உடலும் மருண்ட மான்விழிகளும்
மதிமுகமும் மயில்தோகை ஒத்த கூந்தலும்
மெலிந்து ஓடும் நதியே உன் புருவநெறி அமைய
சினந்தோளே! உன்னுருவச் சிறப்புரைக்க
ஒரே பொருளைக் காணேனே”
(மேக.110)
சங்க இலக்கியத்தில் இடம்பெறும் பெண்ணுடல் பற்றிய வருணனையில், பெண்ணின் தொடை, யானையின் துதிக்கைக்கும், வாழைக்கும் உவமையாகியுள்ளது. சிறுபாணாற்றுப்படையில் வரும் விறலி வருணனையில் இதனைக் காணலாம்.
“இரும்பிடி தடக்கையின் சேர்ந்து
உடன் செறிந்த குறங்கின்
குறங்கு என மால்வரை ஒழுகிய வாழை”
(சிறுபாண்.19-21)
இதுபோலவே பெண்களின் தொடை காளி தாசனின் ரகுவம்சத்திலும் மேகசந்தேசத்திலும் வாழை மரத்திற்கு ஒப்பிடப்படுகின்றது.
“வாழைமரம்போல் தொடையுடை வஞ்சியே”
(ரகு.666)
“நகக்கீறலற்ற அவளது வெற்றுத்துடையோ
நீண்டநாள் அணிந்த முத்துமாலைநீக்கிட
கூடலே அற்றதால் நீவிவிடுதலிழந்தாலும்
நீர்மேகம் காண வாழைத்தொடை துடித்திடுமே”
(மேக.102)
இவ்வாறே பெண்களின் விழி, இடை குறித்த வருணனைகளிலும் ஒப்புமை காணப்படுகின்றது.
ஓரிலக்கியத்தின் அடிக்கருத்து உவமை, உருவகம், உள்ளுறை முதலான உத்திக்கூறுகள் வேறோர் இலக்கியத்தின் இழைமானத்தில் புனைவாக்கக் கூறுகளாக இடம்பெறுமாயின், அதுவே ஊடிழை இலக்கியத்தன்மை ஆகும்.
- இந்திய தேசம் என்கிற ஒரே நிலவியல் பண்பாட்டுப் பகுதிக்குள் தோன்றும் இந்திய இலக்கியங்களுக்கிடையே ஊடிழை இலக்கியச் செயல்பாடு இயல்பான ஒன்றாக இருக்கின்றது.
- சங்கக்கவிதையின் புனைவாக்கக்கூறுகள் காளிதாசன் காவியங்களில் ஊடாட்டம் செய்துள்ளன. அதேபோன்று, காளிதாசன் தனது கவிதையின் இழைமானத்தில் கையாண்ட இலக்கியக்கூறுகள் கம்பரிடத்து ஊடாட்டம் செய்துள்ளன.
- காளிதாசன் கவிதைகளில், சங்கக்கவிதையின் முதல், கரு, உரி எனும் வரையறைக்குள் அடைபடாதிருந்தாலும் சங்கக்கவிதையின் முதல், கரு என்கிற காட்சிப்பொருளும் (Imagery) உரி என்கிற கருத்துப்பொருளும் (Content) காளிதாசன் கவிதைகளில் ஊடாடி நிற்கின்றன.
- காளிதாசன் கவிதைகளில் இடம்பெறும் சங்க இலக்கிய உவமைகள், இந்தியப் பொதுப் பண்பாட்டில் - நாட்டார் பண்பாட்டிலிருந்து உருவானவை என்று கொண்டாலும்கூட, சங்கஅகப்பாடலில் இடம்பெறும் காட்சிப் பொருள், கருத்துப்பொருளுக்கிடையிலான இயைபு காளிதாசன் கவிதைகளில் காணப் படுவது என்பது தற்செயலானதல்ல. காளி தாசனுக்குச் சமஸ்கிருத இலக்கியமரபில் சங்க அகப்பாடல்கள் போன்று முன்னுதாரணங்கள் இல்லை. சமஸ்கிருதக் கவிதையில் அகப் பாடல் மரபினை முதலில் தொடங்கி வைத்தவர் காளிதாசன்தான்.
- புதிய அகப்பாடல் மரபுக்காக உருகுநிலையில் காத்துக்கொண்டிருந்த சமஸ்கிருத இலக்கிய மரபுக்குக் கட்டமைப்புக்கான புனைவுக் கூறுகளைத் தந்தது சங்க அகமரபுதான் என்ற முடிவுக்கு வருவதில் தவறில்லை. சங்க அகக் கவிதைகள் பிராகிருதப்பெயர்ப்புகள் வழியாகக் காளிதாசன் கைகளுக்குச் சென்றிருக்கலாம்.
பார்வை நூல்கள்
1. காளிதாசன் - ரகுவம்சம் (மொ.பெ.), ஆகாசம் பட்டு சேஷாசலம், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், ஏப்.2008.
2. காளிதாசன் - முகில்விடு தூது - பருவங்களின் வருணனை, இராஜலட்சுமி சீனிவாசன் (மொ.பெ.), லோகோஸ் வெளியீட்டாளர், சென்னை, மு.ப. ஜுன் 2002.
3. சாமிநாதையர், உ.வே., - பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி (ப.ஆ.) நச்சினார்க்கினியர் உரையும் டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை 1974.
4. சாமிநாதையர், உ.வே., - குறுந்தொகை மூலமும் உரையும் (ப.ஆ.) டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை 2000.
5. ஞானசம்பந்தன், அ.ச., - கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் கம்பன் அறநிலைய வெளியீடு, கோவை.
6. Marian Galik - Interliterariness as a Concept in Comparative Literature, CLCWeb: Comparative Literature and Culture, PURDUE University Press, Volume 2, Issue 4 (Dec. 2000), Article 6.