எப்படியாவது ஆட்டத்தைக் களைத்துவிடலாம் என்று திமுக எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போய் இருக்கின்றது. நாம் இன்னமும் இவர்களிடம் இருந்து எதிர்பார்த்தோம். ஆனால் வெறும் சட்டையைக் கிழித்துக் கொண்டதுடன் நிறுத்திக் கொண்டார்கள். இருவருமே சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு உன்னுடைய வேட்டியை நான் அவிழ்க்க மாட்டேன், என்னுடைய வேட்டியை நீ அவிழ்க்கக் கூடாது என கட்டுப்பாட்டோடு இருந்துவிட்டனர். இல்லை என்றால் சட்டசபையில் உள்ளே இருந்தவர்களும், வெளியே இருந்தவர்களும் அண்டர்வேயருடன் தான் இருந்திருப்பார்கள். சட்டசபை கூட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் உண்மையில் கொஞ்சம் அதிர்ச்சிதான் ஆகியிருப்பார்கள். ஜனநாயகத்தைப் பற்றி கொஞ்சம் உயர்ந்த மதிப்பீடுகள் வைத்திருந்தவர்கள் “அடக் கருமமே இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா?” என காறித்துப்பி இருப்பார்கள்.
ஆனால் இது எல்லாம் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குத் தான் புதிதாக இருந்திருக்கும். முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குப் பார்த்துப் பழகிப்போன ஒன்றாகவே இருந்திருக்கும். சட்டசபையில் மட்டும் அல்ல, பாராளுமன்றத்திலேயும் இதுதான் நிலைமை. சபாநாயகரின் மைக்கை உடைப்பதோ, இல்லை நாற்காலிகளை தூக்கி அடிப்பதோ ஏதோ நாம் பார்க்காத நிகழ்வுகள் அல்ல. வழக்கமாக சட்டசபையிலோ, இல்லை பாராளுமன்றத்திலோ எதிர்க்கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட வழக்கமாக செய்பவைதான் இவை எல்லாம். ஆனால் ஏதோ புதிதாக திமுக மட்டும் தான் இப்படி செய்தது போல, பார்ப்பன கேடிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதும் பார்ப்பன ஊடகங்களும் தொடர்ச்சியாக ஊளை இட்டுக்கொண்டு இருக்கின்றன.
சட்டமன்ற உறுப்பினர்களை கூவத்தூரில் கொண்டுபோய் பத்து நாட்களாக அடைத்து வைத்தபோது, அதைப்பற்றி வாயே திறக்காத ஜனநாயகத்தின் காவலர்கள் இன்று குய்யோ, முய்யோ என கத்துவது அவர்களின் பிழைப்புவாதத்தைதான் காட்டுகின்றது. ஏதோ ஜனநாயகம் என்ற ஒன்று இருப்பது போலவும், அதைத் திமுக அழித்துவிட்டது போலவும் கூப்பாடு போடுகின்றார்கள். சசிகலா கும்பலால் சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள், எனவே ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மிரட்டப்பட்ட எம்எல்ஏக்கள் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதுதான் திமுக மற்றும் ஓபிஎஸ் அணியினரின் வேண்டுகோளாக இருந்துள்ளது. ஆனால் திட்டமிட்டே சபாநாயகர் தனபால் இதை மறுத்துள்ளார். அப்படி நடந்தால் மன்னார்குடி கும்பலின் ஆட்சி இல்லாமல் போய்விடும் என்ற உள்நோக்கத்தில் இந்தக் கோரிக்கையைத் தனபால் மறுத்துள்ளார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை... 122 எம்எல்ஏக்களும் மன்னார்குடி ரெளடி கும்பலின் பிடியில் இருக்கும்போது அதில் ஒருவராய் இருக்கும் தனபால் மட்டும் என்ன செய்ய முடியும்? இந்த மானங்கெட்ட அமைப்பு முறையில் அதிகபட்சமாக பதவியைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்ய முடியுமோ அதை அவர்கள் செய்திருக்கின்றார்கள்.
இதிலே குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், அதிமுகவில் உள்ள 31 தலித் சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆதிக்க சாதி வெறியன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்து இருப்பதுதான். சக்கிலியர் வகுப்பைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரரை அவர் வண்டியில் இருந்து இறங்கி மரியாதை தரவில்லை என்பதற்காக சாதிவெறியோடு எடப்பாடி பழனிசாமி கட்டிவைத்து அடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் தலைமறைவாக இருப்பதற்கு உதவியவர் எடப்பாடி பழனிசாமி என்ற குற்றச்சாட்டு இவர் மீது ஏற்கெனவே உள்ளது. அதுமட்டும் அல்லாமல் கோகுல்ராஜ் கொலை வழக்கை தீவிரமாக விசாரித்துவந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியாவை அந்த வழக்கை விசாரிக்க விடாமல் கடுமையான நெருக்கடி கொடுத்து, இறுதியில் அவர் மர்மமான முறையில் இறப்பதற்கும் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒரு கவுண்டர் சாதிவெறியனை 31 தலித் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருசேர ஆதரித்து இருப்பது அவர்கள் எவ்வளவு கேவலமான ஜென்மங்கள் என்பதைத் தான் காட்டுகின்றது.
தலித்துகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் அவர்களுக்கான விடுதலையைச் சாதித்துவிட முடியும் என நம்புபவர்களுக்கு இது ஒரு சாட்டை அடியான செய்தி. தேர்தல் அரசியல் எப்போதுமே பொறுக்கித் தின்பதற்கானதுதான் என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ஆனால் இதைப் பற்றி இங்குள்ள தலித் கட்சிகள் வாயே திறக்காமல் கள்ள மெளனம் காக்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை தேர்தலில் நின்று தன்னுடைய வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதைத்தவிர உண்மையில் தலித்துகளின் விடுதலை பற்றியோ, உண்மையான சாதி ஒழிப்பு பற்றியோ அக்கறை அற்றவர்களாகத்தான் இருக்கின்றார்கள். எப்படி ஒவ்வொரு சாதிக் கட்சிக்காரனும் தன்னுடைய மக்களை ஓட்டுவங்கியாக மட்டும் பார்க்கின்றார்களோ, அதே போலத்தான் தலித் கட்சிகளும் பார்க்கின்றனர். இல்லை என்றால் இப்படி தலித்விரோதியை 31 தலித் சட்டமன்ற உறுப்பினர்களும் விமர்சனம் இல்லாமல் ஆதரித்ததைப் பற்றி வாயே திறக்காமல் இருப்பார்களா? ஆனால் யாரை எதிர்க்க வேண்டுமோ அவர்களை எதிர்க்காமல், திமுக சட்டசபை மாண்புகளை அழித்துவிட்டதாக நீலிக் கண்ணிர் வடிக்கின்றார்கள்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் தமிழகத்தில் பிஜேபியின் சதி முறியடிக்கப்பட்டுவிட்டதாக கி.வீரமணி போன்றவர்கள் புளகாங்கிதம் அடைகின்றார்கள். ஆனால் குற்றவாளி ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து துரத்தப்பட்ட டி.டி.வி.தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராக சசிகலா நியமித்ததைப் பற்றியோ, இது மன்னார்குடி மாஃபியா கும்பலின் மறைமுக ஆட்சிதான் என்பதைப் பற்றியோ அவர்கள் திட்டமிட்டே பேச மறுக்கின்றார்கள். பிஜேபியின் பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக ஒரு கொள்ளைக் கும்பலை, ஆதிக்கசாதி வெறியனை ஆதரிப்பது தான் சரியான தீர்வா? பிஜேபி தனது அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக எந்த எல்லைக்கும் போகும் என்றால், நாங்களும் அதை எதிர்க்க எந்த எல்லைக்கும் போவோம், அது கொள்ளைக்காரி சசிகலாவை ஆதரிப்பதாய் இருந்தாலும் சரி, சாதிவெறியன் பழனிசாமியை ஆதரிப்பதாய் இருந்தாலும் சரி என்பதுதான் இதன் அர்த்தம்.
பிஜேபியை எதிர்க்கும் அதே சமயம் நாம் அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என்பதுதான் நேர்மையானதாக இருக்க முடியும். உச்சநீதி மன்றமே கொள்ளைக்காரி என தீர்ப்பளித்த ஒருவரின் சமாதியில் போய், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கீழே விழுந்து வணங்குகின்றார் என்றால், அந்த ஆட்சி இனி எப்படி மக்களுக்கானதாக இருக்க முடியும்? இன்னும் சிறைக்குச் சென்று சசிகலாவை எடப்பாடி பழனிசாமி பார்க்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இந்த ஆட்சி எந்த வகையிலும் நேர்மையான ஆட்சியாக இருக்காது என்பதுதான் உறுதியாகிறது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் வாய் திறக்காதவர்கள் திமுகவின் மீது மட்டும் குற்றம் சாட்டுவது உள்நோக்கம் கொண்டதாகும். சட்டசபையில் சண்டை போட்டதால் ஜனநாயகம் அழிந்துவிட்டதாக புலம்பும் இவர்கள், குற்றவாளியின் சமாதியை ஒரு மாநில முதல்வர் வணங்குவதை மனதார ஏற்றுக் கொள்கின்றார்கள்.
இதற்காக நாம் திமுகவை ஆதரிக்கின்றோம் என்பது பொருளல்ல. திமுகவின் மீது மட்டும் திட்டமிட்டு குற்றம் சாட்டுவோரின் யோக்கியதை என்ன என்பதை அம்பலப்படுத்துவதற்காகத்தான் இதைச் சொல்கின்றோம். பன்னீர்செல்வம் பிஜேபியின் கைக்கூலி என்று அம்பலப்படுத்தும் நபர்கள், தவறியும் எடப்பாடி பழனிசாமி சாதிவெறியன் என்பதைப் பற்றியோ, எடப்பாடி பழனிசாமி சசிகலா, இளவரசி மற்றும் ஜெயலலிதாவை போலவே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்து வைத்திருப்பவர் என்பதைப் பற்றியோ பேசாமல், அயோக்கியத்தனமாக நடந்து கொள்வதைத்தான் நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். எதிர்ப்பது என்று வந்துவிட்டால் பிஜேபியை மட்டும் அல்லாமல், பன்னீர்செல்வத்தையும், பாப்பாத்தி தீபாவையும், சசிகலாவையும், எடப்பாடி பழனிசாமியும், தினகரனையும் சேர்த்தே எதிர்க்க வேண்டும். அப்படி இல்லாமல் திட்டமிட்டு பன்னீர்செல்வத்தையும், திமுகவையும் மட்டும் எதிர்ப்பது கேலிக்கூத்தானது ஆகும்.
மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு தங்களது சொந்த சுயநலத்தின் அடிப்படையில் ஆதரவு, ஆதரவு இன்மை என்பதை அவர்கள் முடிவு செய்யக்கூடாது. அப்படி செய்தால் இது போன்ற சாதிவெறியர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவதை நாம் மறைமுகமாக ஆதரித்து போன்று ஆகிவிடும். அது மானமும் சுயமரியாதையும் உள்ள மனிதர்களுக்கு அழகல்ல.
- செ.கார்கி