இதுவரை 55 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இனி 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் இது தமிழக முதல்வர் எடப்பாடியின் அறிவிப்பு.

இந்தியக் கணக்குத் தனிக்கைத் துறையின் தமிழக அலுவலர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

41 பொதுத் துறை நிறுவனங்களில் 21 நிறுவனங்கள் 81 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் இயங்குகின்றன.

கடந்த ஆண்டு 115 மெகா வாட் மின்சாரம் சில தனியார் நிறுவனங்களில் இருந்து பேறப்பட்டதில் ஏற்பட்ட 11 கோடி இழப்புடன், மின் வாரியம் 65 ஆயிரத்து 622 கோடி இழப்பில் இயங்குகிறது.

8 போக்குவரத்து நிறுவனங்களின் இழப்பு- 22 ஆயிரத்து 600 கோடியுடன் அதைச் சார்ந்த நிறுவனங்களின் மொத்த இழப்பு 80 ஆயிரத்து 925 கோடி இழப்பு-.

கலைஞரால் கொண்டு வரப்பட்ட சமச்சீர்க் கல்வியை ஒழித்துக்கட்ட தமிழக அரசு செய்த குளறுபடிகளில் 4 கோடியே 41 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, அவையும் பயனற்றுத் தேங்கிப்போயின.

அந்த வகையில் அரசுக்கு இழப்பு 13 ஆயிரத்து 37 கோடி.

தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை 5 லட்சம் கோடியைத் தாண்டிப் போய்கொண்டு இருக்கிறது.

வருவாய்ப் பற்றாக்குறை ஏறத்தாழ 12 ஆயிரம் கோடி.

இப்படித் தமிழக அரசின் கழுத்தை நிதி நெருக்கடி நெறித்துக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஏரிகள், ஊருணிகள், கண்மாய்கள், அணைகள் எல்லாம் வரண்டு போயின.

தண்ணீர்த் தட்டுப்பாடு மாநிலம் முழுவதும் தலைவிரி கோலமாய் ஆடிக்கொண்டிருக்கிறது.

இதனைச் சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும், முயற்சியும் எடுக்கவில்லை.

விவசாயிகள் வறுமையில் வாடுகிறார்கள்.

துணித்துறை ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

சிறு, குறு தொழில்கள் எல்லாம் நலிந்து நசிந்து போய் கொண்டிருக்கின்றன.

இவைகளைப் பார்க்க வேண்டிய சட்ட மன்ற உறுப்பினர்களின் ‘பலர்’ கூவத்தூரில் ஆட்டம் போட்டு, பெட்டிகளோடு அடித்த கூத்துகள் ஊடகங்களில் வெளியாகின.

குற்றவாளி சசிகலாவிற்கு ஆதரவாக ஒரு கூட்டம், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக ஒரு கூட்டம், ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் ஆதரவுக் கூட்டம் எனப் பல கூட்டங்கள் இவர்களுக்குள் நடக்கும் சண்டைக்காட்சி வேறு.

நாடு திவாலாகிக் கொண்டிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும் ஆளும் அ.தி.மு.க.வினர் இதைப்பற்றிக் கவலை கொண்டதாகத் தெரியவில்லை, முடிந்த வரை சுருட்டும் வேலையில் இருக்கிறார்கள்.

ஆட்சி மாறாமல் இந்தக் காட்சிகள் மாறாது.

மக்கள் இதைப் புரிந்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

Pin It