அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர் தினகரன் ஆகியோரில் யாருக்கு ஆர்கே நகர் என்ற கேள்வி தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதிலும் கேட்கப்படுகிறது.

வழக்கமான இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுவிடும் என்கிற சூழலிலிருந்து மாறிப்போய் இதுவரை தமிழகம் சந்திக்காத புதிய குழப்ப நிலை ஆர்கே நகரில் நிலவுகிறது.

ஈழ ஆதரவு, தமிழ்த்தேசியம் ஆகிய இரண்டு மையப் பரப்புரைகளை அடிப்படையாகக் கொண்டு 2010ல் சீமானால் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2016ல் ஆர்கேநகரில் 2513 வாக்குகளைப் பெற்று ஆறாவது இடம் பிடித்தது. அந்தக் கட்சிக்குத் தற்போது வாக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. மக்கள் நலக் கூட்டணி தற்போது திமுகவுடன் சேர்ந்துவிட்ட சூழலில், பாமகவும் தேமுதிகவும் ஒதுங்கிவிட்ட சூழலில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக வேறு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களுக்கு நாம் தமிழர் கட்சி நிச்சயம் கண்ணில் படும் என்பது உண்மையே.

ஆனால் பெரியாரைத் தமிழர் இல்லை என்று சொல்வதன் மூலம் திராவிடச் சிந்தனையாளர்களால் சீமான் எதிர்க்கப்படுகிறார். “இவரிவர் தான் தமிழர் மற்றவர்கள் தமிழர்கள் அல்லர்” என்று தமிழர் பெயருக்கான காப்புரிமை பெற்றவர் போல் பேசுவதைத் தமிழ்பற்றாளர்களே ஏற்க மறுக்கிறார்கள். ஜாதி ஒழிப்பைப் பேசுபவர்களுக்கும் சுயஜாதிப் பெருமை பேசுபவர்களுக்கும் இடையேயான வேற்றுமையைக் கண்டறிவதில் சீமான் தடுமாறுகிறார் என்ற குற்றச்சாட்டையும் அவர் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே நாம் தமிழர் கட்சியால் தத்துவ அடிப்படையை மையமாகக் கொண்டு உறுதியான வாக்கு வங்கி பெறுவதிலேய சிக்கல் நீடிக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை தமிழகத்தின் எல்லா கிளைகளிலும் இன்னும் கட்டமைப்பு தொடங்கப்படவேயில்லை. வட இந்தியா போன்று இந்துத்துவா அரசியல் செய்வதில் தமிழ் மண்ணில் வாய்ப்பு ஏற்படவில்லை. பணமதிப்பிழப்பு கொண்டு வந்ததால் கருப்புப் பணம் ஒழியும் என்றும், வாக்குக்குப் பணம் கொடுப்பது நிறுத்தப்படும் என்றும் அன்று கூறிய தமிழிசை, இன்று அதே பணப்பட்டுவாடாவிற்கு எதிராக மறியலில் ஈடுபடுகிற நிலை தான் உருவாகியுள்ளது. பாஜகவிற்கான அடிப்படை வாக்கு வங்கியைத் தவிர்த்துக் கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்கு எந்த மாதிரியான செயல்திட்டங்களைப் பாஜக கையாண்டுள்ளது என்பது 2016ல் அவர்கள் பெற்ற 2928 வாக்குகளை விடக் கூடுதலாகப் பெறப்போகும் வாக்குகள் தான் தீர்மானிக்கும்.

தமிழகத்தில் வழக்கமான திமுக - அதிமுக இடையேயான போட்டிகளுக்கு எதிராகத் திடீர் புயலாகத் தினகரன் நுழைந்துள்ளதாக, தற்போது வழக்கத்திற்கு அதிகமாகவே பேசப்படுகிறது. இதேபோன்று திமுக, அதிமுகவிற்கு மாற்று என்று தொடங்கப்பட்ட பாமக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் தற்போது வரை தாக்குப்பிடிக்க முடியவில்லை. திமுக வேட்பாளரையும் அதிமுக வேட்பாளரையும் தினகரன் வீழ்த்திவிடுவார் என்றால் இவர் வைகோ, இராமதாஸ், விஜயகாந்த் ஆகியோரை விட மக்கள் செல்வாக்கு உடையவராக இருந்தால் மட்டும் தான் முடியும்.

வைகோ, இராமதாஸ், விஜயகாந்த் யாவரும் ஊழல் எதிர்ப்பு என்ற வார்த்தையைத்தான் திமுக, அதிமுகவிற்கு மாற்றாகப் பேசினார்கள். இத்தகைய தலைவர்கள் மற்றும் திமுக , அதிகமுகவிற்கு எதிரான போட்டியில் தினகரன் கையில் எடுப்பது சமூகநீதிச் சொற்பொழிவோ, ஊழலுக்கு எதிரான செயல்திட்டமோ இல்லை,

“தற்போதைய அதிமுக பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறது. எனவே அதிமுகவின் தலைமையை ஏற்கக் கூடிய ஆற்றல் தினகரனுக்கு மட்டுமே உண்டு” என்று அவரின் ஆதவாளர்கள் கூறுவது மட்டும் தான் தினகரனின் செயல்திட்டமாக உள்ளது. எனினும் சங்கர மடம் சென்றதிலிருந்து, பசு பூஜை செய்வது தொடங்கி, குல தெய்வ வழிபாடு வரை எந்த இடத்திலும் அவர் பெரியார் சிந்தனையாளராகத் தெரியவில்லை. இவர் எப்படி பாஜகவிற்கு எதிராக அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்க வருவார் என்பது அவர் ஆதரவாளர்களுக்கே வெளிச்சம்.

திராவிடர் இயக்கத்திற்கும் தமிழ் பற்றாளர்களுக்கும் எதிர் சிந்தனையுடையவராகக் கருதப்படும் சு.சுப்பிரமணியன் சுவாமி “தமிழர்கள் அனைவரும் தினகரனுக்கே வாக்களிக்க வேண்டும்” என்கிறார். பாரதிய ஜனதாவிற்கு எதிரானவராக அடையாளப்படுத்தப்படும் தினகரன் எப்படி சுப்பிரமணியன் சுவாமியால் ஆதரிக்கப்படுகிறார் என்று தெரியவில்லை.

அம்மையார் ஜெயலலிதா உயிரிழப்பில் சசிகலா குடும்பத்தாருக்குத் தொடர்பு இருக்கிறது என்று சந்தேகப்படுகிற அதிமுகவினர் மற்றும் பொது மக்களிடையே நம்பிக்கைக்குரிய ஆதாரங்களைத் தராததால் பெண்களின் வாக்குகள் தினகரனுக்கு எதிராக அமைய வாய்ப்பிருக்கிறது.

தினகரன் அதிமுகவால் அறியப்பட்டதால் அந்தக் கட்சியின் வாக்குவங்கியில் சிதைவு ஏற்படுத்தி வாக்குகளைப் பெறுபவராக இருக்கலாம். ஆனால் பொது மக்களின் வாக்குகளைப் பெறுவது எப்படி? நடுநிலை வாக்காளர்களின் வாக்குகளைப் பெற அவரிடம் உள்ள திட்டமிடல்கள் யாவை? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்காமல் கருத்துக்கணிப்புகள் சொல்வது வியப்பையே தருகின்றன.

எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் தினகரன் தான் வெற்றி பெறுவார் என்ற சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக இவர் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரையும் விடவும் ஆற்றல் பெற்ற தலைவராகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட பேராற்றல் கொண்ட தலைவராக இவரை ஆர்கேநகர் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

திமுகவைப் பொருத்தவரை எத்தனையோ பொதுத் தேர்தல்களைச் சந்தித்து வந்தாலும் தற்போது வித்தியாசமான போட்டியாளர்களையே சந்திக்கிறது. இக்கட்சியின் வாக்குவங்கி எந்தச் சூழலிலும் அசைக்க முடியாததாகவே இருக்கிறது. எனினும் 2016ல் ஏறத்தாழ 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் திமுக தோல்வியடைந்துள்ளது. தற்போது மக்கள் நலக்கூட்டணியின் 4195 வாக்குகள் கூடிவிடுவதை மட்டும் நம்பி களத்தில் வெற்றி பெற்றுவிட முடியாது என்பதை ஸ்டாலின் உணர்ந்திருப்பார். அதிமுகவிற்குச் சமமான கட்டமைப்பு வசதிகளைத் திமுக பெற்றிருந்தாலும் இடைத்தேர்தலின் போது ஆளுங்கட்சியின் ப.வாய்ப்பாட்டுக்குச் சமமான செயல்திட்டம் ஏதாவது ஸ்டாலின் வைத்திருந்தால் முதலிடத்திற்கான போட்டியில் மருதுகணேஷ் இருப்பார். ஆளுமைத் தலைவியாகக் கருதப்பட்ட ஜெயலலிதா மறைந்த பிறகும் திமுக வெற்றி பெற முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டால் ஸ்டாலினுக்கு மட்டுமல்லாது திமுகவின் அத்தனை உறுப்பினர்களுக்கும் தன்மானக் குறைச்சல் என்பதால் வெற்றி பெறுவதற்கான அத்தனை முயற்சிகளிலும் திமுகவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகம் நலன் சார்ந்த சிக்கல்களில் அதிமுக அரசின் மீது எதிர்ப்பலை இருக்கிறது. எதிர்ப்பலையின் சரிவை ஆளுங்கட்சி என்கிற அதிகாரத்தின் மூலம் சரிசெய்வதில் ஆர்கே நகரில் முனைப்புடனே அதிமுக செயல்படுகிறது. இரண்டு அணிகளின் இணைவு தங்களின் வாக்குவங்கிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்காது என்று அதிமுக தலைமை நம்புகிறது.

முன்னாள் தலைவர்களின் ஆளுமைப் பண்புகளை முழுமையாகக் கொண்டிருக்காததால், அந்த வெற்றிடத் தவிப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக் களம் இறங்கியிருக்கும் தினகரன் அதிமுகவிற்குத் தற்போது சிக்கலைத் தருகிறார் என்பது உண்மையே. எந்தத் தேர்தல் வந்தாலும் “அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மட்டும் தான் போட்டி” என்று சிங்கக் குரலில் ஜெயலலிதா உரத்த சொல்லும்போது மூன்றாவது அணியினர் இடம் தெரியாமல் போயிருப்பதே இது வரை நிகழ்ந்துள்ளது. ஆனால் அந்தக் குரல் இல்லாமல் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

“உதயசூரியன் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கு இரட்டை இலைக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.” இவைதான் எம்ஜியார் உருவாக்கி ஜெயலலிதா வளர்த்தெடுத்த தொண்டர்களின் அடிமனதில் விதைக்கப்பட்டிருக்கும் நிரந்தரச் சொற்றொடர்கள். இரட்டை இலை போட்டியிலிருக்கும்போது, “தமது சின்னத்தை விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள்” என்பதுதான் அதிமுகவின் ஒரே நம்பிக்கை. இந்த நம்பிக்கையை மட்டும் தற்போதைய தலைமை தக்க வைத்திருந்தால் அதிமுகவின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது.

மேற்படி கருதுகோள்களைப் பார்வையிடும்போது முதலிடத்திற்கான போட்டியில் அதிமுகவும் திமுகவுமே இருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

நாம் தமிழர் கட்சி நம்புகிற தமிழ்ப்பற்று, பாஜக நம்புகிற தேசப்பற்று, தினகரன் நம்புகிற கனவியல், திமுக அதிமுகவின் வாக்குவங்கி இவைகளுக்கு இடையேதான் தற்போதைய போட்டி.

எனினும் ஆர்கே நகர் மக்கள் இன்னொரு போட்டியைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்தப் போட்டி அவரவர் மனசாட்சியுடன். இந்தப் போட்டியில் நேர்மை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை கிடைக்கும். ஆர்கேநகர் யாருக்கு? என்ற கேள்வியை விட தமிழ்நாட்டின் மெய்முகம் எது? என்பதை ஆர்கே நகர் மக்கள் சொல்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

- சி.சரவணன்

Pin It