sasikala natarajan

நேற்று நாம் நினைத்தது போலவே அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இதுதான் நடக்கும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் மக்கள் தான் சிறிது கற்பனையில் இருந்தார்கள். இன்னும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் தீவிரமாக இயங்கும் கருத்துப்புலிகள் பொதுக்குழுவில் ஒரு பெரிய கலவரம் ஏற்படப் போவதாகவும், சசிகலா ஒ.பன்னீர்செல்வத்தால் விரட்டப்பட போவதாகவும், ஒ.பி.எஸ் தான் அடுத்த பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் நம்பிக்கையோடு பேசினார்கள். இன்னும் சிலரோ தீபா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக புளகாங்கிதம் அடைந்தார்கள். இது கூட பரவாயில்லை... இன்னும் சிலரோ சசிகலா புஷ்பாதான் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர், அவருக்குப் பிஜேபியின் செல்வாக்கு உள்ளதால் அவர் பொதுச்செயலாளராக வருவது உறுதி என அரசியல் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் பொதுசெயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா சார்பாக மனுதாக்கல் செய்யப்போன அவரது கணவருக்கு மன்னர்குடி மாஃபியா கூட்டம் கொடுத்த தர்ம அடியைப் பார்த்து அவசர அவசரமாக அவர்கள் தங்கள் முடிவுகளை மாற்றிக் கொண்டார்கள்.

அடுத்த முதல்வர் நான்தான் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்த தீபா எங்கே இருக்கின்றார் என்ற அட்ரசே தெரியவில்லை என்கின்றார்கள் விவரம் தெரிந்தவர்கள். மன்னார்குடி மாஃபியா என்ற பட்டம் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் கொடுக்கப்பட்ட பட்டம் என்று மக்கள் இத்தனை நாளும் நினைத்துகொண்டு இருந்தார்கள் ஆனால் சசிகலா புஷ்பாவின் கணவருக்கு ஊடகங்களின் முன்னிலையில் கொடுக்கப்பட்ட தர்ம அடியைப் பார்த்த பின்னால் அந்தப் பெருமைமிகு பட்டத்திற்கு நூறு சதவீதம் அவர்கள் தகுதியானவர்கள் என்று மக்கள் முடிவு செய்திருப்பார்கள். அடி கொடுத்தது மட்டும் அல்லாமல் வழக்குவேறு தொடுத்திருக்கின்றார்கள். தமிழக ‘அம்மா காவல்துறை’ இப்போது ‘சின்னம்மா காவல்துறையாக’ மாற்றம் அடைந்துவிட்டதை இதில் இருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

 ஆக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும், எம்.பி சசிகலா புஷ்பாவிற்கும் மரண பயத்தைக் காட்டி பொதுக்குழுவில் எந்த எதிர்ப்பும் இன்றி மன்னர்குடி மாஃபியா கும்பலின் தானைத்தலைவி வி.கே. சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதிலே கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் பொதுமக்கள் மத்தியில் சுத்தமாக சசிகலாவிற்கு ஆதரவு இல்லை என்பதுதான். இது அதிமுகவின் எம்.எல்.ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும், எம்.பிக்களுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும் அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் ஏன் சசிகலாவை தேர்தெடுத்தார்கள் என்றால் அதிமுக தொண்டர்கள் மீதும், தமிழக மக்கள் மீதும் அவர்களுக்கு உள்ள அபரிமிதமான நம்பிக்கைதான். “முட்டாள்கள், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுபோடும் அடிமைகள், இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக நாம் சின்னம்மாவை தேர்ந்தெடுக்காமல் விடமுடியுமா? இவர்கள் ஓட்டுபோடாமல் புறக்கணித்து விடுவார்கள் என்றெல்லாம் பயந்துகொள்ள தேவையில்லை, அடுத்து உள்ளாட்சி தேர்தல் வரப்போகின்றது, கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தில் ஒரு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வீசி எறிந்தால் நாய்கள் காவ்விக்கொண்டு வந்து ஓட்டுபோட்டுவிடும், பிறகு அப்படியே சின்னம்மா அப்படி , இப்படி என்று அளந்துவிட்டு கட்அவுட்டர்கள், பேனர்கள் வைத்து தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்தோம் என்றால் காலப்போக்கில் அவர்களும் அம்மாவிற்கு பதில் சின்னம்மா, சின்னம்மா என உருக ஆரம்பித்துவிடுவார்கள், காசு கொடுத்தால் மொட்டை அடித்துக் கொள்வதற்கும், மீசை எடுத்துக் கொள்வதற்கும், அலகு குத்திக் கொள்வதற்கும், மண்சோறு தின்பதற்கும், பால்குடம் தூக்குவதற்கும், காவடி தூக்குவதற்கும் தயங்காத அடிமைக் கூட்டத்தை அம்மா உருவாக்கி தந்துவிட்டு போய் இருக்கின்றார், என்ன இப்போது கொஞ்சம் அதிகம் செலவு செய்யவேண்டி இருக்கும் போல, பரவாயில்லை பின்னால் சின்னம்மா தலைமையில் அதை எல்லாம் ஒரே தம்மில் சுருட்டிக் கொள்ளலாம்”. என்பதுதான் அவர்கள் தமிழக மக்கள் மீது வைத்திருக்கும் முடிவான நம்பிக்கையாகும்.

 சசிகலா தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் கண்ணுகெட்டிய தூரம்வரை பிரகாசமாகத் தெரிகின்றது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பைப் பொருத்து இதில் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கலாம். மற்றபடி அந்தக் கொடுமை நிகழாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. மக்களின் கருத்துக்கெல்லாம் மயிரளவுக்குக்கூட மதிப்பு கொடுக்க வேண்டிய எந்த அவசியம் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியலில் கிடையாது என்பததை அதிமுக அடிமைக்கூட்டம் தமிழக மக்களுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளது. மக்கள் தான் ஜனநாயகத்தின் எஜமானர்கள் என்பதெல்லாம் ஜனநாயகத்தை பற்றிய அடிப்படை அறிவே இல்லாத யாரோ உலுத்துப்போன நாய் சொன்ன தத்துவம் என்பது தற்போது ஊர்ஜீதப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் உண்மையான எஜமானர்கள் முதலாளிகள் தான், அவர்கள் தான் ஜனநாயகத்தை வழிநடத்துகின்றார்கள். தற்போது சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து இருப்பதும் அந்த முதலாளிகள் தான். அதிமுக பொதுக்குழுவில் கூடிய எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு அதிபதிகள் என்பதும், கள்ளத்தனமாக கல்வி வள்ளல்களாகவும், தொழிலதிபர்களாகவும், உலகம் முழுவதும் உள்ள பல பெரு நிறுவனங்களில் பங்குதாரர்களாகவும் இருப்பவர்கள் என்பதுதான் உண்மை.

Sasikala Jaya poster

  ஜெயலலிதாவிற்கு அரசியல் நடத்துவதற்கும், தமிழக மக்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிப்பதற்கும் இந்த மன்னார்குடி மாஃபியா கும்பல் தான் உதவியது, அதன் மூலம் தன்னை தமிழ்நாட்டின் பெரும் அதிகார மையமாக உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதா அதிமுகவின் கடவுள் என்றால் சசிகலா அந்தக் கடவுளின் நிரந்தர பூசாரியாக இருந்தவர். எனவே அதிமுக அடிமைக் கூட்டதிற்குக் கடவுளைவிட அதன் பூசாரியிடம் எப்போதுமே பயம் அதிகம். யார் யார் எங்கு சொத்து வாங்கிவைத்திருக்கின்றார்கள், எவ்வளவு சொத்துவாங்கி வைத்திருக்கின்றார்கள், ஒவ்வொருவரும் செய்த அட்டூழியங்கள் என்னென்ன என்று எல்லாமே சின்னம்மாவின் கைவசம் உள்ளது. கடவுளைவிட பூசாரிகளுக்குதான் தன் அடிமைகளை பற்றி நன்றாக தெரியும் என்பது ஆன்மீகத்தின் தவிர்க்க முடியாத பொதுவிதி அல்லவா? அதனால் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஒன்றும் ஆச்சரியமான விசயமில்லை. அதிமுக என்ற கொள்ளைக்கூட்டத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்க அனைத்து தகுதியும், திறமையும் வி.கே. சசிகலாவிற்கு உண்டு.

 இனி தமிழ் நாட்டில் எல்லாம் இப்படித்தான் நடக்கும். தமிழக மக்களால் இந்த அழிச்சாட்டியங்களை ஒன்றும் செய்ய முடியாது. அதிகபட்சமாக டீக்கடையிலும், சலூன் கடைகளிகலும் உட்கார்ந்துகொண்டு வெட்டி அரசியல் வேண்டும் என்றால் பேசிக்கொள்ளலாம். முடிந்தால் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் மீம்ஸ் போட்டு தங்களது அரசியல் அரிப்பை தீர்த்துக்கொள்ளலாம். அதைத்தானே நாம் எப்போதும் செய்துகொண்டு இருக்கின்றோம். ‘நேர்மையற்றவர்களாய், பிழைப்புவாதிகளாய், மாற்று அரசியல் பற்றி சிந்திக்கும் திராணியற்ற மூடர்களாய் ஆளும்வர்க்கத்திற்கு எதிரான போராட்டம் என்றாலே அது ஏதோ தனக்குச் சம்மந்தம் இல்லாத அந்நியமான ஒன்று என நினைக்கும் வக்கிரப் பேர்வழிகளாய், எவனாவது அடிபட்டு, உதைபட்டு, வதைபட்டு போராடி உரிமைகளை வாங்கிக் கொடுத்தால் அதை நக்கித் தின்பதற்கு முதல்வரிசையில் முதல் ஆளாக போய் நின்றுகொள்ளலாம், இப்போதைக்கு நம்முடைய வீடு உண்டு, வேலை உண்டு என்று ஜாக்கிரதையாக இருந்துகொள்ளலாம்’ என்று உயிர்வாழ்ந்துகொண்டு இருக்கும் ஜந்துக்களாய் நாம் இருக்கும்வரை இனி தமிழ்நாட்டில் இப்படித்தான் நடக்கும். இப்படி இருந்தால் நம்மால் இந்தப் பொறுக்கி அரசியல்வாதிகளின் மயிரைக்கூட புடுங்க முடியாது. என்ன சொல்லி என்ன செய்வது. அங்கே பாருங்கள் ஒரு பெரும் கூட்டம் சின்னம்மா முதலமைச்சராக வர வேண்டும் என்று மொட்டை போடுவதற்கும், மீசையை மழித்துக் கொள்வதற்கும், பால்குடம் தூக்குவதற்கும் வேகமாக போய்க்கொண்டு இருக்கின்றது. தமிழக மக்களே, தமிழக மக்களே, உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா வருவீங்க கவலைப்படாதீங்க.

- செ.கார்கி

Pin It