திருவனந்தபுரத்தில் நடந்த 14வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஸ்வர்ணசக்கரம்விருதை ஜெர்மல் என்ற இந்தோனிசியப் படமும், ‘அபவுட் எல்லிஎன்ற ஈரான் படமும் பெற்றிருக்கின்றன.

ஜெர்மல் (மீன் பிடிக்கும் தளம்) வடக்கு சுமித்ரா கடல் பகுதியில் நடுக்கடலில் மரத்தளம் அமைக்கப்பட்டு ஒரே தளத்தில் நடக்கும் கதையாகும். மரத்தளம் நிரந்தரமானதாக மீன்பிடிக்கும் வசதிகளுடன் இருக்குமிடமாகும். காட்சிகள் எவையும் அமைக்கப்படாமல் கடல் பகுதி மட்டும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஜெயா என்ற பனிரெண்டு வயதுப் பையன் மீன்பிடிக்கும் கடல் தளத்திற்கு வந்து சேருகிறான். அவனின் அம்மா இறந்துபோன பின்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஜெயா அவன் அப்பா ஜோகரைத் தேடி வருகிறான். அவர் அவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். தளத்தில் தங்கியிருக்கும் இளம் வயது பையன்கள் அவனின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ளாமல் துன்புறுத்துகிறார்கள். ஜோகரின் அறைப்பக்கம் வந்தாலே அவர் வெறுப்பை உமிழ்ந்து துரத்துகிறார். சக பையன்கள் அவனை இழிவாக நடத்துவதும் அவனைத் துன்புறுத்துகிறது. அவனுக்கு ஆறுதலாக அங்கு வேலை செய்யும் ஜோகரின் சமவயதான பேச்சுத் திறமையற்று இருக்கிறவன்தான். பையனின் நிலை குறித்தும் அவன் மனதில் படுகிறதையெல்லாம் காகிதத்தில் எழுதிக்காட்டி ஜோகரிடம் வெளிப்படுத்துபவன் அவன்.

படிப்பை நிறுத்திவிட்டு வந்தவன் என்ற வகையில் ஜெயாவின் சொத்தாக இருக்கம் பெட்டியை கலைத்துப் போட்டு சிதைக்கிறார்கள் பையன்கள். புத்தகங்களுடன் அவன் இருப்பதைக் கண்டு பேராசிரியர்என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். பேராசிரியருக்கு படுக்க இடம் தருவதில்லை. உடைகளை உருவி ஒரு வெள்ளைக் கொடியை கையில் கொடுத்து நிர்வாணமாய் நிற்க வைக்கிறார்கள். அவனின் குடிநீர் பாட்டிலையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். கடுமையான வேலைகளுக்கு உட்படுத்துகிறார்கள். பேச முடியாதவனின் அரவணைப்பு ஆறுதலாக இருக்கிறது. பையன்கள் அதனால் அவன் மீதான துன்புறுத்தல்களை மெல்ல மெல்ல நிறுத்துகிறார்கள். ஜெயாவை கடிதம் எழுதச் சொல்லி கேட்டு அணுகுகிறார்கள். எழுதுகிற கடிதங்களை பாட்டில்களின் உள்ளில் போட்டு கடலில் தூக்கி எறிகிறார்கள்.

தங்கள் அம்மாக்களுக்கும், வீடுகளுக்கும் அவை போய் சேரும் என்று நம்புகிறார்கள். ஜெயா அம்மா ஜோகருக்கு எழுதினக் கடிதங்களை ஜோகர் அவ்வப்போது படிக்கிறான். ஜெயா தன் அம்மாவைப்பற்றி ஜோகர் சொல்லுபவற்றை நம்ப மறுக்கிறான்.அம்மாவுடனான பிற தொடர்பு குறித்து ஜேகர் கடிதங்களைக் காட்டுகிறார். முரண்டு பிடிக்கும் பையன்களை எதிர்த்து கலகம் செய்து அடிதடியில் இறங்கம்போது அவர்கள் தங்களை உணர்ந்து கொள்கிறார்கள். குடியும், மூர்க்கமுமாய் இருக்கும் ஜோகர் கொலை ஒன்றின் காரணமாக கடலில் ஒளிந்து கொள்ள இந்த வேலை பயன்படுகிறது என்கிறார். மெல்ல மகனின் மீதான அன்பை விரித்துக் கொண்டு போய் அவனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். படிக்க வேண்டிய பையன் கடலில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருப்பது சரியல்ல என்றுணர்ந்து தனது பழைய இடத்திற்கு மகனுடன் திரும்ப முடிவெடுக்கிறார். தான் கைதானாலும் பரவாயில்லை. மகனின் படிப்பு அவசியம் என்பதை உள்ளூர உணர்ந்து படகில் தரைப்பகுதிக்குப் பயணமாகிறார்.

ஒன்பது பையன்கள், இரு ஆண்களுடன் வடிவமைக்கப்பட்ட கதையமைப்பு முழுக்க கடல் பகுதியில் நடைபெறுகிறது. கடல் சார்ந்த அனுபவங்கள் பையன்கள் பொழுது போக்கிற்காக எடுத்துக் கொள்கிறார்கள். வானமும், நீலக்கடலும், கடற்பறவைகளும் அவர்களுக்கு விளையாட்டிற்கான எத்தனிப்புகளாகின்றன. காகிதப் பறவைகளை செய்து விடுவது முதற்கொண்டு பல்வேறு விளையாட்டில் கடல் அவர்களுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது. ஆனால் ஜோகர் மரத்தடுப்பு அறைக்குள் முடங்கிக் கிடக்கிறவனாகவே இருக்கிறான். குடியும், கேரம் விளையாட்டும் கடிதங்களைப் படிப்பதும் அவனது உலகமாக இருக்கிறது. கடற்பகுதி காவல்துறையினர் ரோந்து வருகிறபோது கூட அவன் ஜெயாவையும் அழைத்துக் கொண்டு மறைவுப் பகுதிக்குப் போய் ஒளிந்து கொள்கிறான்.

தன்னை ஒளித்துக் கொண்டு பெரும் பகுதி வாழ்க்கையைத் தொலைத்தவன் முகத்தை ஷேவ் செய்து தலைமுடியை வெட்டிக் கொண்டு அந்த மரத்தடுப்பு அறைக்குள் இருந்து வெளியே வருகிறவனுக்கு அபாயங்கள் காத்திருப்பதை உணர்கிறான். ஆனால் மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து அவனின் வெளியேறல் அவசியமாகிறது. கடல் சார்ந்த அனுபவங்களின் நிறைவிற்கு இன்னொருபுறமாக ஒளிந்து கொண்டு வாழ்ந்ததை படம் குறிப்பிடுகிறது. ரவிபர்வாணியின் இயக்கத்தில் ஒரு உணர்ச்சிகரப் போராட்டமாக இப்படம் அமைந்திருக்கிறது. இந்தோனிஷியாக் குழந்தைகளின் உலகம் விளையாட்டுப் பொருட்களாலும், எலக்ட்ரானிக் பொம்மைகளாலும் நிறைந்ததாகும். வர்ணங்கள் ஜொலிக்க கனவு காண அவர்களை உந்துதல்கள் செய்வதாகும். கனவுக்குள் அவர்கள் அமிழ்ந்து மேலே மேலே செல்ல உந்துகிறது. அவர்கள் நிறைய கனவுகள் காண்கிறவர்களாக மாறுகிறார்கள். கனவுகளூடே தங்களின் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறார்கள். உடலில் சிறு சிறு மச்சங்களைக் குத்திக் கொள்வதும், ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்வதும் இயல்பாக இருக்கிறது. கார்ட்டூன் படங்களும், ஜப்பானிய விநோதக் கதைகளும், ஹாரி பார்ட்டரும் அவர்களை வெகுவாக ஆகர்ஷிக்கிறார்கள். அப்படியான பையனாகத்£ன் ஜெயாவை மற்ற வேலை பார்க்கும் பையன்கள் பார்க்கிறார்கள்.

எனவேதான் அப்பொறாமை ஜெயாவின் மீதான வன்முறையாக நீள்கிறது. அவனை பேராசிரியர்என்று சொல்லி அழைப்பதிலிருந்து அவன் கைவசம் வைத்திருக்கும் புத்தகங்களைக் கிழித்துப் போடுவதும், அவனின் புத்தகப் பக்கங்களைக் கிழித்து காகித விமானங்கள் செய்து விடுவதும் அவர்களின் விளையாட்டை மீறி வன்முறையின் சுவடுகளாக அமைந்துவிடுகின்றன. உடல் சத்துக் குறைந்தவர்களாய் குழந்தைகள் அமைந்திருப்பது அதிகளவில் இந்தோனேஷியாவில் தான் என்கின்றன சில ஆய்வுரைகள்.

----

வார விடுமுறையைக் கழிக்க பயணப்படுகிற ஒரு குடும்பத்தினருடன் எதேச்சையாகச் சேருகிறவள் எல்லி. பள்ளி ஆசிரியை. அக்குடும்பப் பெண் ஒருத்தி தன் குழந்தையின் ஆசிரியை என்ற அளவில் அவளை அழைத்து விடுகிறாள். அக்குடும்பத்தைச் சார்ந்த ஜெர்மனியில் வசிக்கும் அஹமதிற்கு எல்லி அறிமுகப்படுத்தப் படுகிறாள். அஹமத் மனைவியை விட்டுப் பிரிந்தவன். எல்லியின் அழகையும், அவளின் சுறுசுறுப்பையும் கடலோர வீட்டில் தங்கும் அக்குடும்பத்தினர் அடையாளம் கண்டு பெருமிதம் கொள்கிறார்கள். பதினைந்து பேருக்கு மேல் உறுப்பினர் களைக் கொண்ட குடும்பம் அது. சமையல், கடல் புற விளையாட்டு என்று பொழுது கழிகிறது. கடலுக்குள் சென்ற ஒரு குழந்தையைக் காப்பாற்றுகிறார்கள். அப்போதுதான் எல்லி காணாமல் போயிருப்பது தெரிகிறது. குழந்தை தன்னைக் காப்பாற்ற கடலுக்குள் எல்லி வந்தாள் என்று சொல்கிறது. எல்லி கிடைப்பதில்லை. அவளின் சகோதரன் என்று அவள் அழைத்தவனைக் கூப்பிடுகிறார்கள்.

அவன் கடலுக்கு வந்து எல்லியைத் தேடுகிறான். எல்லியுடன் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டவன் அவன். அவனிடமிருந்து பிரிய ஆசைப்படுகிறாள். எனவே இந்த வார இறுதிப் பயணமும்; புது நண்பனான அஹமதின் நட்பும் அவளுக்குப் பயன்படும் என்று வந்திருக்கிறாள் என்பதும் வெளிப்படுகிறது. அடுத்த நாளில் எல்லியின் பிணம் கிடைக்கிறது. காதலன் அவளை மறுத்து அவள் புதுவாழ்க்கைக்குத் திட்டமிட்டதால் எல்லியை நிராகரிக்கிறான். சுற்றுலா குடும்பத்தினரும் அவள் காணாமல் போனதால் ஏற்பட்ட மனஉளைச்சல் அவளின் கடந்தகாலத்தை மறைத்ததால் வெறுக்கிறார்கள். எல்லியின் பெற்றோர்க்கும் தகவல் தருவது வெறுப்பாக மாறுகிறது. பொய்யான அவளின் நடவடிக்கைகள் அவளுக்கு தண்டனையாக மாறியிருப்பதான் அடையாளத்தை சிலரும் கண்டு கொள்கிறார்கள். எல்லோரும் வெறுத்த பிணமாக அவள் கிடக்கிறாள்.

போலீஸ் விசாரணையின்போது அவளின் முழுப்பெயரோ முழு முகவரியோ யாருக்கும் தெரியவில்லை. முழு அடையாளமும் அற்றுப் போனவளாக அவள் பிணம் கிடக்கிறது.

மிருணாள் சென்னின் ஏக்தின் பிரதின் படத்தில் அலுவலகத்திற்குப் போய்விட்டுத் திரும்பும் பெண் வழக்கமான நேரத்தில் வரவில்லை. பதட்டமாகிறது வீடு திரும்பி வந்தபின் எங்கே போனாள் என்று யாரும் கேட்பதில்லை. மிருணாள் சென் யாருக்குத் தெரியும். உங்களைப் போலவே எனக்கும் தெரியாதுஎன்றார். உலகப் படங்களில் டெத் பை லேண்ட்ஸ்கேப்என்ற படமும், அலிஸ்ஸின் ஓபன் சீக்ரெட்என்ற படமும் இதுபோல தொலைந்து காணாமல் போகிறப் பெண்ணை மையமாகக் கொண்டதாகும். இதில் டெத் பை லேண்ட்ஸ்கேப்பில் அப்பெண்ணின் உடல் கூட பிணமாகக் கிடைப்பதில்லை.

எல்லியின் பிணம் கிடைக்கிறது. ஆனால் உரிமை கோராத பிணமாகக் கிடக்கிறது. ஒரு வகையில் அந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்களின் குறியீடாய் எல்லி அமைந்துவிடுகிறாள்.

1979ல் ஈரானில் ஏற்பட்ட, இஸ்லாமிய புரட்சி பெண்களின் கல்விக்கு பெருமளவில் வழி வகுத்திருக்கிறது. வேலை வாய்ப்பில் பெண்களை பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவம் அதிகமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 2006ல் விஞ்ஞானம் படிப்போரில் 70% பேர் பெண்கள் அமைந்த சாதனையும் இருக்கிறது. ஆனால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அரசாங்க மதக் கோட்பாட்டிற்கு ஏற்ப அவர்கள் இறுக்கமாக்கப்பட்டார்கள். முகம், கைகளை முழுமையாக மறைக்காத பெண்களுக்கான தண்டனை 60 கசையடிகள், 60 நாள் சிறை என்றிருந்திருக்கிறது. ஈரான் ஈராக் யுத்தக்காலத்திலும் அதற்குப் பின்னும் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் இயல்பாய் அமைந்திருக்கின்றன. காவல்துறை போன்றவற்றிலும் பெண்கள் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறார்கள்.

1976 கால்பந்து மைதானங்களில் நுழைவதற்கு பெண்களுக்கு இருந்தக் கட்டுப்பாடுகள் குறித்து பெண்கள் நடத்திய முற்றுகைப் போராட்டம் குறிப்பிடத்தக்கதாக வரலாற்றில் சாட்சியமாக அமைந்து விட்டிருக்கிறது. நாற்பதுகளில் ஈரான் பல்கலைக் கழகங்களில் பெண்கள் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட போதிலும் 1963ல்தான் அவர்களுக்கான வாக்குரிமை தரப்பட்டிருக்கிறது. இந்தவகை அழுத்தப்பட்ட சமூகத்திலிருந்து படித்து ஒரு பள்ளி ஆசிரியையாக வேலை பார்க்கும் வாய்ப்பைப் பெற்ற எல்லி தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமண உறவை பிடிக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. சக பெண்ணிடம், தன்னிடம் படிக்கும் சிறுமியின் தாயிடம் எதேச்சையாகப் பகிர்ந்து கொள்வதும், அதன் காரணமாக அந்த வார இறுதி விடுமுறையில் அவர்களோடு சேர்வதும் நிகழ்கிறது. ஆனால் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட பிணமாகத்தான் அவள் இறுதியில் கிடக்க வேண்டியிருக்கிறது. ஈரானில் பெண்களின் மீதான நிராகரிப்பு இது.

Pin It