வல்லரசு நாடுகள் ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து 2018இல் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளியேறியது. ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. மற்ற நாடுகளையும் ஈரானுடனான பொருளாதார உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு டிரம்ப் மிரட்டினார்.

நரேந்திர மோதி தன் மறுதேர்தல் பிரச்சாரத்திற்கு எப்படி புல்வாமா தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டாரோ, அது போல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் மறுதேர்தல் பிரச்சாரத்திற்காக வெட்கக்கேடான முறையில் அரச பயங்கரவாதத்தை ஏவித் தளபதி சுலைமானியைக் கொல்ல உத்தரவிட்டுள்ளார். தனது நிர்வாகத்தின் கீழ் எதிர்காலப் பேச்சுவார்த்தைகளுக்கான எல்லாக் கதவுகளையும் மூடியதுடன், ஈரானில் நிலவிய அமெரிக்க எதிர்ப்பின் மிதவாதப் போக்கையும் டிரம்ப் கொன்றுள்ளார்.

iran soleimaniஅமெரிக்க இராணுவத்தால் ஈரானின் மரியாதைக்குரிய முதன்மைத் தளபதி சுலைமானி படுகொலை செய்யப்பட்டிருப்பது வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கியுள்ளது. இது அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க அரசின் இரு அவைகளிலும் எந்தவொரு விவாதமுமின்றி, காங்கிரசின் அதிகாரமும் இல்லாமல் டிரம்ப் இந்த முடிவை எடுத்தது அமெரிக்க உள்நாட்டுச் சூழலில் ஒரு சட்டவிரோதச் செயலாகும். "போரை நான் விரும்பவில்லை எனும் அவரது போர் எதிர்ப்புப் பசப்புரைகள் வெற்றுரைகளே என்பதற்கு இதற்கு மேல் வேறு சாட்சி தேவையில்லை. இது இன்னொரு முறை ஐக்கிய அமெரிக்காவின் அப்பட்டமான அரச பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

இந்தப் படுகொலை அமெரிக்க மக்களுக்கு எந்த வகையிலும் நலன் பயக்காது. மாறாக அவர்களது அமைதியான வாழ்விற்குத் தொடர் அச்சுறுத்தலாகவே அமையும். அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையும், வெளிநாட்டு நடவடிக்கைகளும் அந்நாட்டு மக்களைப் பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளியுள்ளன.

ஜனவரி 3ஆம் தேதி மேற்காசிய நாடான இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஈரானின் புரட்சிப் பாதுகாப்புப் படையின் குத்ஸ் படைப்பிரிவுத் தளபதி குவாசிம் சுலைமானி, இராக்கின் இராணுவத் தளபதி அபு மஹ்தி அல் முகந்திஸ் உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர். சுலைமானி, அபு மஹ்தி அல் முகந்திஸ் இருவருமே ஐ.எஸ்.ஐ.எல்லுக்கு எதிரான போரில் முக்கியப் பங்காற்றியவர்கள்.

சுலைமானி இறந்த செய்தியைத் தொடர்ந்து டிரம்ப் அமெரிக்கக் கொடியின் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டதன் மூலம் வல்லாதிக்கத்தின் அடிப்படையிலேயே ஐக்கிய அமெரிக்க தேசியம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பால் உணர்த்தியுள்ளார். முதல் உலகப் போருக்குப் பின் தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய யு.எஸ்.ஏ. அரசு உலகெங்கும் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்தே தன் கொடியைப் பறக்க விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

சுலைமானிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஈரானில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்பட்ட பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். துக்கத்தில் தலைநகர் டெஹ்ரானே`கருநிறமாக மாறியது.

யார் இந்த சுலைமானி?

தளபதி குவாசிம் சுலைமானி (62) ஈரானின் 2 ஆவது சக்தி வாய்ந்த தலைவராகக் அறியப்பட்டவர். 1979இல் ஈரானியப் புரட்சியின் போதே, ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படைப் பிரிவில் இணைந்து மேற்கு அஸெர்பைஜன் பிராந்தியத்தில் போரிட்டார். ஈரான்-இராக் போரின் பொழுது இராக் எல்லையில் அவரின் போர்த் தந்திரத்தால் தேசிய வீரராக உருவெடுத்தார்.

1979இல் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை 40 ஆண்டுகளாக .ஈரானின் அரசியல், ராணுவம், பொருளாதரம் அனைத்திலும் தாக்கம் ஏற்படுத்தும் ஒர் அமைப்பு ஈரானின் அரசியலமைப்பை வெளிநாடுகளின் தலையீடு மற்றும் சதித் திட்டங்களிலிருந்து பாதுகாப்பதே புரட்சிகரக் காவலர்களின் முக்கியப் பணியாகும். இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரம் பெற்றது குத்ஸ் படை. ஈரானின் வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு குத்ஸ் படை பொறுப்பேற்கும். சுலைமானி 1998 ஆம் ஆண்டு முதல் குத்ஸ் படைக்குத் தலைமைப் பொறுப்பேற்றார். 29 ஆண்டுகளாக ஈரானிய இராணுவத்தின் வெளியுறவுக் கொள்கையின் முகமாக அறியப்படும் சுலைமானி, ஈரானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிடுவதற்கான உத்திகளை வடிவமைத்துக் கொடுத்தார். அவரது தலைமையில் குத்ஸ் படையின் ஆற்றல் விரிவடைந்து வலுப்பெற்றது.

யு.எஸ். படையெடுப்பு மற்றும் இராக் ஆக்கிரமிப்பு (2003-2010):

2005 இராக்கில் சதாம் ஹுசைனின் வீழ்ச்சிக்கு பின் முன்னாள் பிரதமர் இப்ராஹிம் அல் ஜாஃப்ரி மற்றும் நௌரி அல் மலிகி தலைமையில் மீண்டும் அரசு நிர்மானிக்கப்பட்ட பொழுது, இராக்கிலும் சுலைமானியின் செல்வாக்கு பரவியது.

அந்தக் காலகட்டத்தில் ஷியா அரசியல் கட்சியும், துணை இராணுவப் படையுமான பதர் அமைப்பு அரசின் பாதுகாப்புப் படையானது. ஐ.எஸ்.ஐ.எல்லுக்கு எதிரான இராக்கியப் போரில் சுலைமானியின் கட்டுப்பாட்டில் இருந்த ஷியா இராணுவத் துணைப்படைகள் இராக்கிய இராணுவத்துடன் இணைந்து தீவிரவாதிகளோடு திறனுடன் போரிட்டன. யு.எஸ். ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் இராக்கில் சமாளிக்க வேண்டிய மிகவும் வெறுப்பூட்டும் நபர்களில் ஒருவராக கஸ்ஸெம் சுலைமானி இருந்தார். யு.எஸ். படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் போது, ஐ.ஆர்.ஜி.சி. தளபதி ஷியா தலைமையிலான குழுக்களுடன் இணைந்து இராக்கில் யு.எஸ்ஸின் அதிகாரத்தை வலிமையிழக்கச் செய்தார். லெபனானின் ஹெஸ்புல்லா, மற்றும் இராக்கின் ஷியா இராணுவப் படைகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வலுப்படுத்தினார்.

2006 லெபனான் போர்:

குத்ஸ் படையின் தளபதியாக, சுலைமானியின் முதற்பெரும் பணிகளில் ஒன்று, 2006இல் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹெஸ்பொல்லாவுக்கு உதவியதாகும். ஹெஸ்பொல்லா படை தனது போர்த்திறனால் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளை (ஐ.டி.எஃப்) திகைப்புக்கு ஆளாக்கித் தோற்கடித்தது.

ஹெஸ்பொல்லாவின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் அவர்களது அப்போதைய இராணுவத் தளபதி இமாத் மௌக்னியே ஆகியோருடன் நேரடியாகப் பணியாற்றியதால், சுலைமானி போர் முடிவுறும் வரை லெபனானில் இருந்தார்.

சிரியப் போர்:

2011இல் சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த போது சுலைமானி இராக்கில் உள்ள தங்களின் இராணுவப்படைகளை அஸாத் அரசைப் பாதுகாக்கச் செல்லுமாறு கட்டளையிட்டார். சிரிய அதிபர் அல்-அஸாத் தோல்வியுறும் நிலைக்குத் தள்ளப்பட்ட போது அவருக்கு ஆதரவு பெற்றுத் தந்தார். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் சிரிய அரசுப் படைகளுக்கு உதவினார். சிரிய மோதலில் போர்த் திட்டங்களை வகுத்துக் கொடுத்து, ஹெஸ்பொல்லா மற்றும் இராக் துணை இராணுவப் படைகள் போன்ற நட்புப் படைகளை அணிதிரட்டி, முனைமுகத்தே நிறுத்தப்பட்ட துருப்புகளைப் பார்வையிட்டு, சுலைமானி அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பங்காற்றினார்.

சிரியாவில் போர் முடிவடைந்தவுடன், ஈரானியத் தளபதி மீண்டும் இராக் சென்றார். 2020 ஜனவரி 3 அன்று படுகொலை செய்யப்படும் வரை இராக்கில்தான் இருந்துள்ளார்.

குத்ஸ் படையைப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. சுலைமானி மீது பொருளாதாரத் தடைகள் விதித்தது. ஹெஸ்பொல்லா போன்ற ஷியா துணை இராணுவ குழுக்களுக்கு அதிகாரம் அளித்ததன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பை அச்சுறுத்த முயன்றதாக சுலைமானி மீது யு.எஸ் குற்றம் சாட்டியது.

சௌதி அரேபியா, இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்க நாடுகள் அடக்க நினைத்த ஈரானின் வலிமையைத் தக்கவைத்து மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானின் நன்மதிப்பை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகித்தார் சுலைமானி.

அமெரிக்க, இஸ்ரேல், அரேபிய நாடுகள் சுலைமானியைப் பகைவனாகவே கருதின.

பல ஆண்டுகளாக, கஸ்ஸெம் சுலைமானி ஐக்கிய அமெரிக்காவிற்கு ஒரு முள்ளாகவே தெரிந்தார். தொடர்ந்து மத்திய கிழக்கில் அமெரிக்க அரசின் மேலாதிக்கத்தை வலுவிழக்கச் செய்தார்.

ஐக்கிய அரபு நாடுகள் ஈரானுடன் வலுவான வணிகப் பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்த போதும், வளைகுடா பகுதியில் ஈரானின் அரசியல் கொள்கைகளை எதிர்க்குமாறு ஆண்டுக்கணக்கில் இராக்குடன் இணைந்து அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்தன. சௌதி அரேபியா ஈரானுடன் எந்த உறவிலும் இல்லாத போதும் ஈரானின் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்க்குமாறு ஐக்கிய அமெரிக்க அரசின் கொள்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல், மேற்கத்திய நாடுகள், அரேபிய நாடுகள் சுலைமானியை அச்சுறுத்தலாகக் கருதி அவர் மீது பல கொலை முயற்சிகளை மேற்கொண்டன. பல சமயங்களில் அவர் கொல்லப்பட்டதாகப் பொய்ச் செய்திகளும் பரப்பப்பட்டன. இவரைக் கொல்ல 20 வருடங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இந்த அக்டோபரில் கூட டெஹ்ரானில் அவரைக் கொல்வதற்கான சதிதிட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இராணுவப் படைகளை வலுப்படுத்தியதிலும், மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியதிலும் சுலைமானிக்கு முக்கியப் பங்குண்டு. அமெரிக்காவின் ஈரான் எதிர்ப்பு முயற்சிகளைக் கள்ளத்தனமாக மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எல்லைத் தோற்கடிக்க உதவிய சுலைமானியின் போர்த்தந்திரம் ஈரானின் பாதுகாப்பிற்கு இன்றியமையாததாக அமைந்த நிலையில் அவரைப் படுகொலை செய்தது ஈரானின் தேசிய பாதுகாப்பைப் குறிவைத்துத் தாக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது.

ஐக்கிய அமெரிக்க நாடுகளின். ஆயுதப் படைகள் மற்றும் அவர்களது கூட்டணிக்கு எதிரான பல நடவடிக்கைகளின் சூத்திரதாரியான சுலைமானி தனது போர்க்களத் துணிச்சலாலும், திறன்மிகு போர்த்தந்திர நடவடிக்கைகளாலும் என்றென்றும் நினைவுகூரப்படுவதுடன் வழிகாட்டியாகவும் இருப்பார். மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் சர்வதேசப் பாதுகாப்பு ஆய்வு மையத்தால் 2019ல் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் ஈரானில் 82 சதவீதத்தினர் சுலைமானியை ஆதரிப்பவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

சுலைமானியின் கொலைக்கெதிராக ஒலித்த கண்டனக் குரல்களைக் கேளுங்கள்:

ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவத் ஷரிஃப் இந்தக் கொலையை அமெரிக்க அரசின் பயங்கரவாதம் எனக் கண்டித்தார். சுலைமானியின் தூய இரத்தம் எதிர்ப்பு எனும் மரத்தை வலுப்படுத்தும் என்றும், ஈரானிய மக்களை ஒன்றுபடுத்தி இப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொள்கைகளை வலுவிழக்க செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அல் நுஸ்ரா, அல் கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் பலரை எதிர்த்துப் போரிடும் மிகச் சிறந்த சக்தியாகத் திகழ்ந்த தளபதி சுலைமானியைக் குறிவைத்துப் படுகொலை செய்த அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதச் செயல் மிகவும் ஆபத்தான, முட்டாள்தனமான விரிவாக்கம் ஆகும். இந்த முரட்டு சாகசவாதத்தின் எல்லா விளைவுகளுக்கும் ஐக்கிய அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் பிரதமர் ரவ்ஹனியின் முதன்மை ஆலோசகர் ஹெசமொதின் ஆஷ்னா அவர்கள், சுலைமானிக்குப் பிறகு இப்பகுதியின் அரசியல், பாதுகாப்பு, இராணுவத்தின் சிவப்பு எல்லைக் கோடும் மாறிவிடும். கோபுரங்கள், மாளிகைகள், சாலைகளைக் காட்டிலும் பாலைவனங்களும், மலைகளும், பள்ளத்தாக்குகளும் சுலைமானியை நன்கு அறியும் எனத் தெரிவித்துள்ளார்.

“ஐ.எஸ்.ஐ.எல்-லை வீழ்த்திய இராக் போரில் சுலைமானி வகித்த பங்கினால் ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அவர் தியாகியாகவும் தேசிய வீரராகவும் போற்றப்பட்டார்… அவர் போன்ற திறன் படைத்தோர் இல்லாதிருப்பின் அந்தப் பகுதியெங்கும் கறுப்புக் கொடிகளே ஏற்றப்பட்டிருக்கும்” என்று டெஹ்ரான் பல்கலைக்கழக அமெரிக்க ஆய்வுத்துறையின் தலைவர் மொஹமது மரண்டி தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய ஊடகங்கள் சித்திரிப்பது போல் அவர் நிழல் மனிதரல்ல; நேர்மாறாக, ஈரானால் நேசிக்கப்படுபவர், பொதுமக்களால் நன்கு அறியப்பட்டவர், தேசத்தின் முக்கியமான பல்வேறு தருணங்களில் பொதுமேடைகளில் பல்வேறு உரைகளை ஆற்றியுள்ளார் என்கிறார் மரண்டி.

இந்தக் கொலை ஈரான் மீதும் இராக் மீதும் தொடுக்கப்பட்ட போர்; இதற்காக யு.எஸ் வருந்தும் நிலை ஏற்படும்; இக்கொலை மத்தியக் கிழக்கில் ஈரானின் அரசியல், இராணுவ நடவடிக்கைகளில் ஒரு புது அத்தியாயத்தை உருவாக்கும்; அயலுறவுக் கொள்கைகளில் இந்தக் கொலைச் சம்பவத்தால் எந்தப் பின்னடைவும் வராது என்றும் மரண்டி தெரிவுத்துள்ளார்.

இராக்கின் பாதுகாவலர், பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி இக்கொலையை இராக்கில் மோசமான போரைத் தூண்டிவிடும் வன்முறை எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இராக் நாட்டின் மீதும், மக்கள் மீதுமான தாக்குதல்.இராக்கிய முன்னணியினருக்கு எதிராகவோ அல்லது சகோதர நாட்டினருக்கு எதிராகவோ இராக்கிய மண்ணில் கொலை நடவடிக்கைகளை மேற்கொள்வது இராக்கின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதும் இராக்கிலும் இந்தப் பிராந்தியத்திலும் உலகிலும் ஓர் அழிவுப் போரைத் தூண்டும் ஆபத்தான விரிவாக்கம் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிரியா வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி "இந்தக் கோழைத்தனமான அமெரிக்க ஆக்கிரமிப்பு... எதிர்ப்பின் தியாகத் தலைவர்களின் பாதையில் பின்தொடர்வதற்கான உறுதியை வலுப்படுத்தும் என்பதில் சிரியா உறுதியாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹெஸ்புலா தலைவர் சயது நஸ்ரல்லா, இந்தக் கொலையாளிகளுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தருவது உலகெங்குமுள்ள எதிர்ப்புப் படைவீரர்களின் பொறுப்பும் கடமையுமாகும் எனத் தெரிவித்துள்ளார். சுலைமானியுடன் இதுவரை இருந்தவர்கள் இரவு பகல் பாராது அவர் காலடிகளைப் பின்பற்றி அவரது இலட்சியங்களை அடைவர் என சூளுரைத்துள்ளார்..

முற்றுகையிடப்பட்ட காசா பகுதியை நிர்வகிக்கும் பாலஸ்தீனிய ஹமாஸ் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் "பாலஸ்தீனத்தின் எதிர்ப்பை ஆதரிப்பதில் முக்கியப் பங்கு வகித்த முன்னணி ஈரானிய இராணுவ அதிகாரிகளில் சுலைமானியும் ஒருவர்".

இஸ்ரேலிய எதிரிக்குச் சேவை செய்யப் பிராந்தியத்தில் பதட்டங்களை விதைக்கும் தொடர்ச்சியான இந்த அமெரிக்கக் குற்றங்களை நாங்கள் கண்டிக்கிறோம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலத்தீன இஸ்லாமிய ஜிகாத் குழு அபு மஹ்தி அல்-முகந்திஸ் மறைவுக்காக இராக்கிய மக்களுக்கு இரங்கல் தெரிவித்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்தான இராக்கிய விடுதலையின் அடையாளச் சின்னங்களில் ஒருவர் என்று அவரைப் போற்றியது. "என்றும் அமெரிக்க மேலாதிக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பணியாத இந்த இராக் எப்போதும் தன் போர்வீரர்களுடன் அரபுத்தன்மையுடனே இருந்து வரும். இந்த இராக்கே ஆக்கிரமிக்கப்பட்ட இராக்கை விடவும் பெரிது” என்று பிஐஜேயின் அறிக்கை கூறுகிறது..

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, ஐக்கிய அமெரிக்கா அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தக் கூடாது, பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்கா அபாய ராணுவ நடவடிக்கை அடிப்படையான சர்வதேச உறவுகளுக்கான நியதிகளை மீறுவதாகவும் பிராந்தியத்தில் இறுக்கத்தையும், கொந்தளிப்பையும் அதிகப்படுத்தியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

இக்கொலை அமெரிக்கர்கள் மத்தியிலேயே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் அபாயகரமான போரைத் தூண்டிவிடும் நடவடிக்கைகளுக்கு எதிராக அமைதியின் பெயரில் அமெரிக்க மக்கள் ஒன்றுபட்டுள்ள நிலையில் இது டிரம்பின் வீழ்ச்சிக்கே வழியமைக்கும்.

உலகை உலுக்கிய தளபதி சுலைமானியின் இழப்பு இதுவரை உலகெங்கும் காணப்படும் அமெரிக்க மேலாதிக்கத்தின் மீதான சகிப்புத் தன்மைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பில் ஒரு புதிய திருப்புமுனையாக அமையட்டும்.

மக்கள் தளபதி சுலைமானிக்கு வீர வணக்கம் செலுத்தி அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிரான ஜனநாயக சக்திகளை வளர்த்தோங்கச் செய்வோம்.

- சமந்தா

Pin It