ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா திருப்பூரில் சேவ் அலுவலகம், (கலைஞர் அறிவாலயம் அருகில்) 5, அய்ஸ்வர்யா நகர், அரசு பொது மருத்துவமனை அருகில்., தாராபுரம் சாலையில் 12/1/2020 அன்று நடைபெற்றது.

திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Film Societies of India), கனவு – 'சேவ்' இணைந்து நடத்தின.

the painting poolவிழாவில் திரைக்கதையாசிரியர் கதிர் பேசுகையில்:

ஒரு திரைப்படத்திற்கு நூறு சதவீதம் அடிப்படை பலமாக விளங்குவது திரைக்கதையாகும். திரைக்கதையைப் பயிலும் இளைஞர்கள் நல்ல புத்தகங்களை, நாவல்களை, இலக்கியப் படிப்புகளை தொடர்ந்து வசிக்க வேண்டியது அவசியம்.

துவக்க உரையாற்றிய ஆவணப்பட இயக்குனர் சந்தோஷ் கிருஷ்ணன்:

ஈரானில் இப்போது போர்ச் சூழல் நிலவுகிறது. பலமுறை போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட ஈரானின் பல திரைப்படங்கள் போருக்கு எதிரான ஆவணங்களாக அமைந்துள்ளன. ஈரான் சமூகவியலை சரியாக பிரதிபலிக்கிற கண்ணாடிகளாக அவை விளங்குகின்றன. 

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்:

ஈரானிய அரசியல் சிரமங்கள், மதக் கட்டுப்பாடுகள், கடுமையான தணிக்கை முறை போன்ற சாவல்களைத் தாண்டி தனித்துவம் கொண்டவை ஈரானியத் திரைப்படங்கள். உலக அளவில் பெரும் கவனிப்பையும், பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருபவவை. சாமானிய மக்கள் சார்ந்த எளிமையான கதைக் கருக்களை வலிமையாய் பயன்படுத்தி தீவிரமாய் எடுக்கப்படுகின்றன. 

இடம் பெற்ற சில படங்கள் பற்றி... 

1. டுடே (Today/ Reza Mirkarimi)

இந்தப் படம் ஒரு டாக்சி டிரைவரின் ஏறத்தாழ ஒரு நாள் பயணத்தை முன்வைத்து கதை சொல்கிறது. அவரின் முகம் இறுக்கமாக இருக்கிறது. ஒரு பெரும் வழக்கறிஞர் அந்த வண்டியில் பயணம் செய்யும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. சாப்பாட்டு நேரம் என்பதால் வண்டியை ஓர் இடத்திற்கு மேல் கொண்டு செல்ல இயலாது என்று அந்த வழக்கறிஞரை இறக்கிவிட்டு விடுகிறார். அவரின் கடுமையான போக்கு வழக்கறிஞருக்கு அதிர்ச்சி தருகிறது.

பின்னால் அந்த வண்டியில் ஏறும் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு மருத்துவமனைக்கு தன்னைக் கொண்டு செல்லக் கேட்கிறாள். பல இடங்களில் அலைந்து அந்த மருத்துவமனையை கண்டுபிடிக்கும் போது உள்ளே தனியாளாக தான் செல்வதை விரும்பவில்லை என்று கூட கைத்தாங்கலாக அவளை விட்டுச் செல்லும்படி அந்த கர்ப்பிணிப் பெண் கேட்கிறாள். அவரும் அப்படியே செய்கிறார். உள்ளே சென்ற பின்பு அவள் குறித்த விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தருமாறு மருத்துவமனையில் கேட்கிறார்கள். அவரும் முயல்கிறார். அவள் அங்கு அனுமதிக்கப்படுகிறாள்.

அவளுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வந்து தருகிறார். இடையில் ஒரு சிறு பயணம் அமைகிறது. அதை முடித்து விட்டு மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து அந்தப் பெண் ரத்தப்போக்காலும் பிரசவ வலியாலும் அலறுவதைப் பார்க்கிறார். மருத்துவ சிகிச்சை சார்ந்த விண்ணப்பங்களில் அவர் கையெழுத்து இடுகிறார். அவரின் அதிகம் பேசாத தன்மையும், ஒருவகை அலட்சியத் தன்மையைக் காட்டும் முகமும் மருத்துமனையில் இருப்பவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. ஆனால் ஒரு மருத்துவர் டாக்ஸி டிரைவர் எந்த வகையிலும் அந்தப் பெண்ணுக்கு உறவு அல்லாதவர் என்பதைத் தெரிந்து கொள்கிறார்.

அவள் அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார். குழந்தை பிறந்த பின் அவள் இறந்து போகிறாள். அந்தக் குழந்தையை அவர் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு, அந்தக் குழந்தை சம்பந்தமான கோப்பையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார். அவ்வப்போது அவரின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டபடி இருக்கிறார். அந்த டாக்சி டிரைவர் காலில் ஏதோ வலி இருப்பதைக் காட்டுவதற்காக முழங்காலை தொட்டுத் தடவிக் கொண்டிருக்கிறார் அவ்வப்போது.

முன்பு அந்தப் பகுதியில் இருந்த ஒரு பெரிய மருத்துவமனை பற்றிய குறிப்புகளும் வசனத்தில் வருகின்றன. போரில் அந்த மருத்துவமனை சிதைக்கப் பட்டிருக்கிறது. பலர் தங்கள் உடலுறுப்புகளை சிதைத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அதுவும் தெரிய வருகிறது. அவரை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு மருத்துவர் அவரின் அறையில் அவரின் பெண் குழந்தையை ஓவியம் தீட்டச் சொல்லியும், கொஞ்சம் விளையாட சொல்லியும் நேரத்தைக் கழிக்க வைக்கிறார். அந்த மருத்துவர் ஒரு பெண் ஆவார்.

அந்தக் குழந்தையுடன் இவர் இடையில் பேசுவதும் அந்தக் குழந்தை ஓவியம் வரைவதற்கான ஊக்கம் செய்வதும் பிறகு தூங்கிப் போகிறபோது அதை சரியாக தூங்கப் பண்ணுவது என்று செய்வதை பெண் மருத்துவரும் கவனிக்கிறார். அவருக்கு குழந்தை இல்லை என்பது ஓரிடத்தில் ஒரு வரி வசனம் ஆக வந்து போகிறது. இறந்து போன பெண்ணின் பிணத்தைப் பார்க்க மறுத்து குழந்தையை நன்கு கவனிக்கிறார். அது சம்பந்தமான கோப்புகளில் கையெழுத்திட மறுக்கிறார். ஆனால் மறைமுக வழியாக அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு போகிறார். அந்தப் பெண் மருத்துவரும் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

போர் முடிந்த சூழலில் பலரின் வாழ்க்கை சித்திரங்கள் இதில் காணக் கிடைக்கின்றன. அந்த கர்ப்பிணிப் பெண்ணின் வாழ்க்கை குறித்த பல்வேறு சித்திரங்களும் உருவாகின்றன. அவள் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் டாக்சி டிரைவர் உடன் அருகில் உட்கார்ந்து உரையாடும் காட்சி மிக அற்புதமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. அமைதியாக இருக்கும் மருத்துவமனை. எதிரில் இருக்கும் குழந்தைகளின் படங்கள். அதில் ஏதாவது ஒரு குழந்தையின் அழகு தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு இருக்கும் என்று உரையாடுவது... பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் பற்றி அவர்கள் பகிர்ந்து கொள்வது என்பது அந்தக் காட்சி அமைப்பாகும். ஆனாலும் அதிலும் டாக்சி டிரைவர் மிகக் குறைவாகவே பேசுகிறார். ஓரிரு வார்த்தைகள் மட்டும்.

இந்தப் படம் ஒரு வகையில் டாக்சி டிரைவரை மையமாகக் கொண்டிருந்தாலும், போரும், பாதிக்கப்பட்ட அவரும், வேறு வகையில் பாதிப்புக்குண்டான கர்ப்பிணிப் பெண்ணும் பற்றிய சித்திரங்களால் முழுமை அடைகிறது. ஈரானிய சமூகம், போர்ச் சூழல் முடிந்த காலம் பற்றிய பல்வேறு நுணுக்கமான கூறுகளை இந்தப் படம் கொண்டிருக்கிறது.

2.பெயிண்டிங் பூல் (The Painting Pool/ Maziar Miri)

ஒரு குழந்தையை மையமாகக் கொண்ட சிறந்த படம் இது. அவனின் பெற்றோர்கள் ஓரளவு மனநலம் குன்றியவர்கள் போல பேச்சிலும் உடல் மொழியிலும் நடத்தையிலும் தென்படுகிறார்கள். அவர்கள் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். தினந்தோறும் அந்தப் பையனை பள்ளிக்கு அனுப்புகிற ஆயத்தங்களில் தாமதமாகி நிறுவன வண்டியைப் பிடிக்க ஓடுபவர்கள். அந்தப் பையனின் வருத்தமும் மகிழ்ச்சியும் அவர்களின் உணர்வுகளாக இருக்கிறது. அவனை பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள். அவனின் ஆறுதலுக்கு மாடியில் இருக்கும் புறாக்களும், வீட்டில் இருக்கும் செடி, கொடிகளும் ஒத்திசைவாக இருக்கின்றன.

ஒரு நாள் வெளியில் செல்கிறபோது பல்வேறு ராட்டினங்களில் அவன் ஆட ஆசைப்படுகிறான், சுற்ற ஆசைப்படுகிறான். ஆனால் பெற்றோர் சற்று பயந்து அவனை வீட்டிற்கு அழைத்து வர, அவன் முரண்டு பிடிக்கிறான். எல்லாவற்றையும் ஒதுக்கி உதைக்கிறான். அவன் அவ்வப்போது போடும் சித்திரங்களின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு அவன் அம்மா போட்ட ஓவியப் புத்தகத்தை அவன் கிழித்து நாசமாக்குகிறான். இது அப்பாவை பாதித்து அறைந்து விடுகிறார்.

அடுத்த நாள் பள்ளிக்குப் போகும் அவன், அவனின் வகுப்பாசிரியை வீட்டிற்கு பாடம் படிக்கச் செல்கிறான். அங்கேயே தங்கி விடுகிறான். அவனின் பெற்றோர்கள் பயந்து போய் தங்கள் இயலாமையை எண்ணியும் மிகவும் வருத்தப் படுகிறார்கள். அவனின் இருப்பு அங்கு என்பது அவர்களைப் பொருத்தவரை உறுத்தச் செய்கிறது. இந்த சமயத்தில் அந்த மருந்துக் கம்பெனியில் வேலை இழப்பும் நடக்கிறது. அவன் அப்பா பீட்சா விநியோகிக்கும் ஒரு இடத்தில் வேலைக்குச் சேர்கிறார். அவருக்கு இரட்டை சக்கர வாகனம் ஓட்ட சரியாகத் தெரியாது என்பதைச் சொல்லாமல், பொய் சொல்லி ஓர் இரட்டைச் சக்கர வாகனத்தை பல இடங்களுக்கு தள்ளியபடி ஓடி, அந்த பீட்சாவை விநியோகம் செய்கிறான்.

அவன் கால்களில் புண்கள் வெடித்துச் சிரமப்படுத்துகிறது. உடம்பும் சிரமப்படுத்துகிறது. ஆசிரியை வீட்டில் இருக்கும் தன் மகனைப் பார்க்க போகிறார்கள். அவர்கள் வீட்டினுள் செல்லாமல் வெளியில் ஆசிரியை வரும்போது, அவனைப் பற்றிக் கேட்டும், கண்ணீர் மல்க பதில்களைச் சொல்லியும் திரும்புகிறார்கள். இது சில நாட்கள் தொடர்கிறது. ஆசிரியை இவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்து ஆறுதல் சொல்கிறாள்.

வீட்டில் பீட்சா செய்ய அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அது கருகிப் போகிறபோது, அது கருகி விட்டதால் தன் மகன் வீட்டிற்குத் திரும்ப மாட்டான் என்று அம்மா அழுகையோடு சொல்கிறாள். எந்த முயற்சிகளும் பலிக்கவில்லை. பையன் அவர்களுடன் தொலைபேசியில் பேசுவது இல்லை. ஒரு நாள் தட்டுத் தடுமாறி அம்மா அவனைப் பார்க்கச் சென்று விட்டு திரும்பி வந்து விடுகிறாள். பள்ளிக்குச் செல்கிற இருவரில் அப்பா மட்டும் அவனை ஜன்னல் வழியாகப் பார்த்து அவரின் மன்னிப்பையும் சங்கடங்களையும் சொல்லிவிட்டுத் திரும்புகிறார்.

சில நாட்கள் செல்ல அந்தப் பையன் அம்மா தன்னைப் பார்க்க தனியே வந்தது, அப்பா பள்ளி வந்தது போன்றவற்றை நினைத்து தூக்கம் வராமல் சிரமப்படுகிறான். ஆசிரியையின் கணவரும் அது போல ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இருவரும் உரையாட ஆரம்பிக்கிறார்கள். பிறகு அவன் தன் வீட்டிற்கு ஆசிரியை உதவியுடன் இரவு திரும்பி வந்ததும், அந்த வீட்டில் மீண்டும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. குழந்தை சார்ந்த அனுபவங்கள் என்பதால் அதன் வெகுளித்தனமும் இயல்பும் சரியாக சொல்லப்பட்ட ஒரு படம்.

ஒவ்வொரு படத்திலும் வெவ்வெறு வகையான மையங்களும், அணுகுமுறையும் ஈரான் படங்கள் மீதான ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.

- கனவு திரைப்பட இயக்கம் / இலக்கிய இதழ் & SAVE சமூக சேவை நிறுவனம்

Pin It