உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய சுலைமானியின் படுகொலை!
2020 ஜனவரி 3 அன்று ஈரான் புரட்சி பாதுகாப்புப் படையின் (Iran revolutionary guard corps - IRGC) தளபதி சுலைமானி ஈராக்கின் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஈரான் நாட்டின் தலைவர் கொமெய்னி இந்த கொலைக்கு பழிக்குப் பழி (sever revenge) வாங்குவோம் என சூளுரைத்தார். ஈராக்கின் துணைப் படையைச் (popular mobilization unit) சேர்ந்தவர்களும், லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நஸ்ரெல்லாவும் அமெரிக்காவின் இந்தக் கொலைக்கு நிச்சயம் நாங்கள் பழி தீர்ப்போம் என முழங்கினார்கள். இது ஈரான்-அமெரிக்கப் போரின் தொடக்கமாகவோ அல்லது மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமாகவோ இருக்கலாம் எனப் பலரும் கூறினார்கள். கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பங்குச் சந்தைகள் இறங்குமுகம் கண்டன. முதலீட்டாளர்களின் பாதுகாப்புப் புகலிடமாக (safe heaven) விளங்கும் தங்கத்தின் விலை மடமடவென உயர்ந்தது.
இஸ்ரேல் உள்ளிட்ட அமெரிக்காவின் 35 நிலைகள் தங்களின் தாக்குதல் எல்லைக்குள் உள்ளதாக IRGCயும், ஈரானின் 52 நிலைகளைத் தாங்கள் குறி வைத்துள்ளதாக அதிபர் ட்ரம்ப்பும் சொற்போரில் ஈடுபட்டு பதற்றத்தைக் கூட்டினார்கள். ஈரான் தாக்குமா? தாக்காதா? எப்போது எப்படி தாக்கும்? சாதக, பாதகங்கள், பலம், பலவீனம், பொருளாதார விளைவுகள், உலக நாடுகளின் நிலைப்பாடுகள் என்னவாக இருக்கும் எனப் பல்வேறு கோணங்களில் விவாதங்கள் எழுந்தன. ஈரானில் மூன்று நாள் துக்கம் அறிவிக்கப்பட்டு, சுலைமானியின் இறுதி நிகழ்வு அவரின் சொந்த ஊரில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கானவர்கள் பங்கு கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். கூட்ட நெருக்கடியில் சிக்கி பலர் உயிரிழக்கும் அளவுக்கு கூட்டம் கரை புரண்டோடியது. அமெரிக்காவைப் பழி தீர்க்கவும் குழிதோண்டிப் புதைக்கவும் கோரும் முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. முஸ்லிம் ஷியா பிரிவின் தலைவராகக் கருதப்படும் கொமெய்னி இறுதி நிகழ்வில் கண்ணீர் சிந்தியது சுலைமானியின் முக்கியத்துவத்தையும், அரசியல் வட்டத்தில் அவரின் இடத்தையும் எடுத்துக் காட்டின.
ஈரானின் க்வாம் மசூதியில் பழிதீர்க்கும் சின்னமான சிவப்புக் கொடி ஏற்றப்பட்டது. இது வரலாற்றில் இறைதூதர் முஹம்மதுவின் பேரனான ஹுசைன் கொல்லப்பட்ட போது அதற்குப் பழிதீர்க்க ஏற்றப்பட்ட பிறகு இப்போதுதான் முதன் முறையாக இந்தக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஈரானில் மட்டுமல்ல, அதன் அண்டை நாடுகளிலும் இவ்வளவு வேதனையையும், கோபத்தையும், பழிதீர்க்கும் எண்ணத்தையும், உலகம் முழுதும் போர் பதற்றத்தையும், பங்குச் சந்தை மாற்றங்களையும், அரசியல் அதிர்வலைகளையும் தன் இறப்பின் மூலம் தோற்றுவித்த இந்த சுலைமானி யார்?
ஈரான் - ஈராக் போர் முதல் சிரிய-ஐஎஸ்ஐஎஸ் போர்வரை சுலைமானியின் பங்கு
ஈரானிய புரட்சிக்குப் பின் அமெரிக்காவின் தூண்டுதலுடனும், துணையுடனும் எண்பதுகளில் நடத்தப்பட்ட நீண்ட நெடிய ஈரான்-ஈராக் போரில் பங்கு கொண்டு, பல போர்க்கள வெற்றிகள் மூலம் படிப்படியாக படையணியின் தலைவராகவும், பிறகு தான் பிறந்த கெர்மான் பகுதி IRGC கமாண்டராகவும் தொடந்து, 1997க்குப் பிறகு IRGCயின் தலைவராகவும் உயர்ந்தார். ஈரானின் குர்திய போராளிக் குழுக்களை ஒடுக்கி, நாட்டின் அரசியல் தலைமையின் நன்மதிப்பைப் பெற்றார். பின்பு மத்திய கிழக்கில் இஸ்ரேல் - அமெரிக்காவிற்கு எதிரான எதிர்ப்பியக்கத்தை (axis of resistance) வெற்றிகரமாகக் கட்டமைத்து வழிநடத்தி வந்தார்.
2001ல் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்புப் போருக்குப் பிறகு, அங்குள்ள ஷியா பிரிவுகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அமெரிக்காவிற்கு எதிராக வலுவான ஆயுதமேந்திய இயக்கத்தைக் கட்டமைத்தார். 2003 - 2006 வரையிலான ஈராக்கின் ஆயுதமேந்திய குழுவினரின் அமெரிக்க எதிர்ப்புத் தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினர் உயிரிழக்க நேர்ந்து, 2007-ல் படையைத் திரும்பப் பெற வேண்டி வந்தது. 2006-ல் இஸ்ரேலின் லெபனான் ஆக்கிரமிப்புப் போரில் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு தோளோடு தோள் நின்று அதில் வெற்றி பெறத் துணை நின்றார்.
2011-ல் அமரிக்கா, சவுதி, அரபு எமிரேட், கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து சிரியாவின் ஆசாத்தை ஆட்சியில் இருந்து நீக்க உள்நாட்டுப் போரை ஆரம்பித்து வைத்தன. தங்களது சுன்னி ஆதரவுக் குழுக்களை களத்தில் இறக்கி சிரிய ராணுவத்தை தோல்வியின் விளிம்பில் நிறுத்தின. தலைநகரை சிரியா இழக்கும் நிலையை எட்டிய நிலையில், ஹிஸ்புல்லா ஆதரவுக் குழுக்களுடனும், ரசிய ஆதரவுடனும் சிரியாவை மீட்பதில் பெரும்பங்கு வகித்தார். ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் வளம் மிக்க கிர்குக் பகுதியை மீட்க களத்தில் போராளிகளுடன் நின்று வெற்றியை ஈட்டுவதில் பெரும்பங்கு வகித்தார். எண்ணெய் வளம் மிக்க சிரியாவின் டயர்யசொர்(deirezzor) மாகாணம் முதல் ஈராக்கின் கிர்குக் பகுதி வரை விரவி இருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை துடைத்தெறிந்ததில் இவரின் பங்கை அமெரிக்க செய்தி நிறுவனங்களே ஒப்புக் கொண்டு செய்தி வெளியிட்டன.
2015-ல் அமெரிக்கா, சவுதி, அரபு எமிரேட் நாடுகள் இணைந்து ஏமேனில் உள்நாட்டுப் போரைத் துவக்கி ஆக்கிரமிக்க எத்தனித்தன. ஹுத்தி (Houthi) ஆயுதக் குழுவுக்கு ஆதரவு அளித்து, சவுதி வெல்ல முடியாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அமெரிக்காவிற்கு எதிரான ஆப்கானிஸ்தான் போராளிக் குழுக்களுக்கு ஈரான் உதவி வருவது உலகம் அறிந்த ரகசியம். ஈராக், சிரியா, லெபனான், யேமன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என தனது எல்லையில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு ஆதரவு அளித்து ஒருங்கிணைத்து, அமெரிக்க-இஸ்ரேல் எதிர்ப்பியக்கத்தை திறன்பட நடத்தி வந்தார். இது இயல்பாக ஈரானை ஆக்கிரப்பில் இருந்து பாதுகாத்து ஈரானின் புரட்சியைத் தக்க வைத்து வந்தது. மேலும், எதிரியின் மீது ஈடுசெய்ய இயலாத (asymmetric war) தாக்குதல் முறையைக் கையாள்வதிலும், போர்முனை உத்திகளை வகுப்பதிலும் வல்லவராக அறியப்படுகிறார்.
ராணுவ ஜெனரலாக அறையில் இருந்து உத்தரவு பிறப்பித்துக் கொண்டிராமல், சிரியாவின் அலெப்போ நகரம் மற்றும் இராக்கின் கிர்குக் பகுதி மீட்புப் போரில் முன்காலத்தில் ராணுவ வீரர்களோடு தங்கி வழிகாட்டி ஊக்கமளித்து வெற்றியடைய வைத்தார். தரைவழியாக ஈரான், ஈராக், சிரியா, லெபனானை இணைக்கும் முக்கிய ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அல்புகமால் பகுதியை அமெரிக்கா தனது சகாவான குர்திய போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, இந்ததரைவழி இணைப்பை தடுக்க முயன்றது. உடனடியாக, இராணுவ நடவடிக்கையை தொடங்கிதானே தலைமை ஏற்று அந்த பகுதியை சிரியாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், இந்த இணைப்பை நடைபெறாமல் தடுக்க அந்தப் பகுதியில் இயங்கி வரும் அமெரிக்க ராணுவத் தளத்திற்கு அருகிலேயே ஈரான் ஆதரவு ராணுவத் தளத்தை அமைத்தார். சமீபத்திய இராக்கியத் தேர்தலுக்குப் பிறகு சியா பிரிவை ஒருங்கிணைத்து அப்துல் மேதியை பிரதமராக்க முக்கிய பங்காற்றினார். இந்த தொடர்வெற்றிகளின் மூலம் ஈரானிய மக்கள் மத்தியில் ஒரு நாயகனாக உயர்ந்தார். சுருக்கமாக, ஈரானின் மத்திய கிழக்கு அரசியல் கொள்கைகளை வகுத்து, வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஈடு இணை செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தும் ராணுவ உத்திகளை வகுத்து செயல்படுத்தி அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். தனக்கு இவ்வளவு குடைச்சல் கொடுக்கும் இவரை அமெரிக்கா விட்டு வைக்குமா என்ன? சரி, இவ்வளவு நாட்கள் தனது கண்முன்னால் இயங்கிக் கொண்டிருந்த இவரை இவ்வளவு நாட்களாக கொல்லாமல் இப்பொழுது கொல்ல முடிவு செய்தது ஏன்?
இதுவரை மறைமுகமாக நடந்து வந்த ஈரான் - அமெரிக்கப் போர்
1979-ல் ஈரானிய மக்களின் தேசியவாத உணர்வு மேலிட்டு அமெரிக்காவினால் சதிப் புரட்சியின் மூலம் ஆட்சியில் அமர்த்தப்பட்ட ஷா மக்கள் புரட்சியின் மூலம் தூக்கி எறியப்பட்டு, நாட்டின் எண்ணெய் வளம் முழுவதும் தேசியமயமாக்கப்பட்டது. அதுமுதல் ஈரான் - அமெரிக்கா இடையே நேரடிப் போர் நடைபெறவில்லை என்றாலும், மறைமுக மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. காரணம், ஈரானில் குவிந்துள்ள எண்ணெய் - இயற்கை எரிவாயு வளம் என புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. புரட்சி முடிந்தவுடன் 1980-ல் அமெரிக்கா ஈராக்கின் சதாமைத் தூண்டிவிட்டு ஈரானின் மீது போர் தொடுக்க வைத்தது. எட்டு ஆண்டுகள் நீடித்த அந்தப் போரில் ஈரான் 5 லட்சம் வீரர்களை இழந்து வெற்றி கண்டது. அதனைத் தொடர்ந்து புரட்சியைத் தக்க வைக்கும் நோக்கில் ஈரான் புரட்சிப் பாதுகாப்புப் படையான IRGCயை நிறுவி, புதிய ஏவுகணைகள் விமான-ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை உருவாக்கி, நாட்டின் ராணுவ வலிமையை மேம்படுத்தியது. அதன் உச்சமாக வடகொரியாவைப் போன்று அணு ஆயுதம் உற்பத்தி செய்து, எதிரி தாக்க எத்தனிக்காத தற்காப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அதையே காரணம் காட்டி அமெரிக்கா, ஈரான் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் உச்சமாக 2012-ல் ஈரான் உலக பணப்பரிமாற்ற நிறுவனமான SWIFTல் இருந்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக ஈரான் எந்த நாட்டுடனும் வணிகம் செய்ய இயலாத நிலையை எட்டியது. அதன் எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றுக்கு 5 மில்லியன் பேரலில் இருந்து ஒரு மில்லியனுக்கும் குறைவான எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிலையை அடைந்தது.
இரானின் தேசிய முதலாளிகளும், அதன் சார்புடைய நடுத்தர வர்க்க மக்களும் கடும்போக்காளர்களைப் புறக்கணித்து மிதவாத ரௌஹைனியை அதிபராகத் தேர்ந்தெடுத்தார்கள். அதன் தொடர்ச்சியாக அணு ஆயுத முயற்சியை கைவிட்டு ஒபாமா காலத்தில் 2015-ல் சமரச ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டு, எண்ணெய் சந்தைக்குத் திரும்பியது. இதனால் சவுதி, சீனா - ஐரோப்பா - இந்திய எண்ணெய் சந்தைகளை இழந்து பட்ஜெட் பற்றாக்குறையை சந்தித்தது. கூடவே, அமெரிக்காவில் ஷேல் எனப்படும் பாறைகளை உடைத்து எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தின் காரணமாக உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி செய்யும் நிலையை எட்டி சந்தையைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. டாலரில் எண்ணெய் வணிகம் நடத்தி டாலரை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றும் சவுதி, தனது சந்தைப் பிரச்சனைக்குத் தீர்வு காண அமெரிக்காவின் மீது அழுத்தம் கொடுத்தது.
சவுதி மற்றும் அமெரிக்க எண்ணெயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து ட்ரம்பை ஆதரித்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற வைத்தார்கள். எதிர்பார்த்தது போலவே ட்ரம்ப் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். கூடவே ஆறு மாத காலத்திற்குள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் முற்றிலுமாக அதை நிறுத்த வேண்டுமென அறிவித்தார். சீனா இந்த அறிவிப்பை ஏற்க மறுப்பதாக அறிவித்தது. இந்தியாவில் 53 அங்குல மார்புடைய 'வீரர்கள்' ஆட்சி நடத்துவதால் ஈரானிய எண்ணெய் இறக்குமதியை ரத்து செய்து சவுதியிடமிருந்து எண்ணெய் வாங்க முடிவு செய்தார்கள். ஐரோப்பா SWIFT- க்கு மாற்று வழியை ஏற்பாடு செய்து வணிகம் தொடர வாக்குறுதி அளித்தார்கள். அமெரிக்கா அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து அதனைச் செயல்பட விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். சந்தையை இழந்த ஈரான், தான் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாமல் தடுக்கப்பட்டால் மற்றவர்களும் ஏற்றுமதி செய்ய இயலாமல் ஹோர்முஸ் (strait of hormuz) வழித்தடத்தை முடக்கப் போவதாக அறிவித்தார்கள், இந்த கடல்வழிப் பாதை வழியாகவே 40 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெய் உலகிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை அங்கு கொண்டு வந்து நிறுத்தி ஈரான் கடல் வழிப் பாதையை முடக்கினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தது.
ஈரான் - அமெரிக்க மறைமுக யுத்தம் உச்சமடைதல்!
இதனிடையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் 2 எண்ணெய் கப்பல்கள் மர்மமான முறையில் தாக்கப்பட்டன. அமெரிக்கா இந்த சம்பவங்களுக்கு ஈரானே காரணமென குற்றம் சாட்டியது, ஈரான் அதனை மறுத்தது. அதன் தொடர்ச்சியாக ஈரானிய வான் எல்லைக்குள் பறந்த ஆளில்லா போர்விமானத்தை தனது விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தி, தனது ஏவுகணை எதிர்ப்பு வலிமையையும், எதிர்ப்பையும் பதிவு செய்தது. அதனுடன் பல அமெரிக்க ராணுவ வீரர்களுடன் பறந்த உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தாமல் தவிர்த்து அமெரிக்காவுடனான நேரடிப் போரை தவிர்த்தது ஈரான். இருப்பினும் இது மத்திய கிழக்கில் போரை உருவாக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. உலக அரங்கிலும், உள்ளூரிலும் அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கத்தை கேள்விக்குட்படுத்தியதால் ட்ரம்ப் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இதனை சமாளிக்க ஈரானின் முக்கியத்துவமற்ற பகுதியில் வெறும் அடையாளப் பூர்வமான தாக்குதல் நடத்த மறைமுகமான தொடர்புகள் மூலம் ட்ரம்ப் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நேரடியான எந்த ராணுவ நடவடிக்கையும் அமெரிக்க-ஈரான் போரிலேதான் முடியும். அது ட்ரம்ப் மறுபடியும் அதிபராக தேர்வாகாமல் போவதில் முடியுமென்பதால், அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் ட்விட்டர் மிரட்டலோடு முடித்துக் கொண்டார். ஆனால் இதற்கு எதிர்வினையாக ஈரானின் எண்ணெய்க் கப்பலை, இங்கிலாந்தின் கட்டுபாட்டில் உள்ள ஜிப்ரால்டர் துறைமுகத்தில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட சிரியாவுக்கு எண்ணெய் எடுத்து செல்வதாகக் கூறி சிறைபிடித்தது. அதற்குப் பதிலடியாக ஈரான், இங்கிலாந்தின் ஸ்டெனோ இம்பீரியோ எண்ணெய்க் கப்பலை தனது அதிவேக படகுகளின் துணையுடன் அதன் மாலுமிகளுடன் சிறை பிடித்தது. இது இங்கிலாந்தின் போர்க் கப்பல் அருகில் இருக்கும் போதே அதன் முன்னாலேயே நடத்தப்பட்டது. போர்க் கப்பலின் தலைவர் தங்களின் கப்பலை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்துவோம் என மிரட்டினர். நீங்கள் அவ்வாறு செய்தால் நாங்களும் அதையே திருப்பி செய்வோம் என கடலின் கரையில் தயார்நிலையில் உள்ள ஏவுகனைகளை அவைகளிடம் காட்டிவிட்டு, கப்பலை ஈரானின் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.
இறுதியில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் சிரியாவிற்கு செல்லாது என உறுதி அளித்து விட்டு, இங்கிலாந்து கப்பலை விடுவித்ததது. அதே கப்பலை பெயர் மாற்றி, அதே சிரியாவின் பனியாஸ் துறைமுகத்தில் எண்ணெயை இறக்குமதி செய்து காட்டி, உலகின் வலிமை வாய்ந்த கப்பற்படையை வைத்திருக்கும் அமெரிக்கா-இங்கிலாந்தின் முகத்தில் கரியைப் பூசியது ஈரான். ஈரானியக் கப்பல் தன்னுடைய துறைமுகத்திற்கு வந்தடைந்த பிறகே இங்கிலாந்து கப்பல் விடுவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, இரானிய ஆதரவு பெற்ற யேமேனின் ஹுதிஸ் போராளிகள் சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடவடிக்கை இரான்-அமெரிக்க மோதலை கொதிநிலையின் உச்சத்தை எட்ட வைத்தது. குறிப்பாக இந்த நிலையம் அமெரிக்காவின் மிக நவீன வான் பாதுகாப்பு ராணுவத் தளவாடமான பேட்ரியாட் (patriotair defence) நிறுவப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் கட்டமைப்பாகும். இதனால் சவுதி ஐம்பது சதவீத எண்ணெய் உற்பத்தி திறனை இழந்து எண்ணெய் விலை உடனடி உயர்வு கண்டது.
வழக்கம்போல அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஈரானை நோக்கி விரலை உயர்த்தின முன்பு போலவே ஈரான் அதனை மறுத்தது. இந்த பேட்ரியாட் அமைப்பு அனைத்து திசைகளில் (360 degree) இருந்து தாக்க வரும் ஆயுதங்களைக் கண்டறியும் திறன் கொண்டதல்ல. அது ஈரானில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் மட்டுமே அதன் ரேடார்கள் அந்த திசையை நோக்கி வைக்கப்பட்டிருந்தன. அது கண்டறிய முடியாத திசையில் இருந்து தாக்கியதன் மூலம் இந்த அதிஉயர் அமெரிக்க தொழில் நுட்பத்தின் பலவீனத்தையும், அதனை எதிரி மிகச் சரியாகக் கணித்து வெற்றிகரமாக தாக்க முடியும் என்பதையும் காட்டியது. அதோடு ஈடுஇணை செய்ய முடியாத பொருளாதாரா இழப்புகளை சந்திக்க நேரிடும் என்ற செய்தியையும் தெளிவாகக் கூறியது. தனது பலவீனத்தைப் புரிந்து கொண்ட சவுதி, யேமெனிய போராளிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வந்தது. இவை எல்லாம் சுலைமானியின் எதிரியை நிலைகுலைய வைக்கும் ஈடு இணை செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல் யுக்திக்கான எடுத்துக்காட்டுகள். இப்படி தொடர்ந்து ஈடு இணை செய்ய முடியாத ராணுவத் தாக்குதல்கள் மூலம் ஈரான் ராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அமெரிக்காவை மண்ணை கவ்வச் செய்தது. அமெரிக்க மத்திய கிழக்கு வெளியுறவுக் கொள்கை தொடர் தோல்விகளையும் நம்பகத் தன்மையையும் இழந்து வந்தது. இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவர் சுலைமானும் அவரது IRGCயும்.
இறுதியாக ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக்கிய பிரதமரை பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கானோர் போராடினார்கள். போராட்டம் தீவிரமடைந்து பிரதமர் பதவி விலக நேர்ந்தது. இந்தப் போராட்டம் அமெரிக்க ஆதரவுப் பிரிவினரால் நடத்தப்பட்டது. அவர்கள் ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி தீயிட்டார்கள். அதற்குப் பதிலடியாக ஈரான் ஆதரவு பெற்ற குழுக்களின் போராட்டமும் ஈராக்கிய போராளிகள் (popular mobilization unit) அமெரிக்க தூதரகத்தின் மீது ராக்கெட் தாக்குதலையும் நடத்தியது. அதில் அமெரிக்க ஒப்பந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தே சுலைமானியையும், இராக்கிய போராளி குழுக்களின் இரண்டாம் நிலை தலைவரான மெஹன்டிஸ் ஆகிய இருவரையும் அமெரிக்கா விமானத் தாக்குதல் மூலம் கொலை செய்தது. அப்படியெனில் இதுவரை அமெரிக்கா மத்திய கிழக்கில் அடைந்த தோல்விக்கான வெறும் பழிவாங்கும் நடவடிக்கையா? ஈரானின் தலைவர் கொமேனிக்கு நெருக்கமான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ ஜெனரலை கொலை செய்வது நேரடிப் போரைத் தோற்றுவிக்கும் என அமெரிக்காவிற்குத் தெரியும். எனில், போரைத் துவக்கி வைக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா?
தொடரும்…
- சூறாவளி