வள்ளுவரின் கையில் கடிகாரம் இல்லாதது அவனுக்கு ஏனோ ஆச்சர்யம் தந்தது. முக்காலமும் அறிந்தவராக வள்ளுவர் இருப்பார். இல்லாவிட்டால் அவர் கையில் கடிகாரத்தைத் திணித்திருப்பார்கள். வள்ளுவர் உட்கார்ந்திருந்த நிலை உற்சாகம் தரக்கூடியதாக இருந்தது. இதுபோன்று வள்ளுவரின் சிலையைப் பார்த்ததாக நினைவு ஞாபகமில்லை. பெரும்பாலும் பார்த்த சிலைகள் நின்ற வாக்கில்தான் இருந்திருக்கின்றன. ஏடுகளைக் கையில் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி அல்லது ஏடுகளைப் பார்த்தபடிதான் வள்ளுவர் நின்றிருக்கிறார். உட்கார்ந்திருக்கும் வள்ளுவரின் முகத்தில் தெரிந்த தெளிவு ஆச்சர்யமாக இருந்தது. கருங்கல் சிலையில் இவ்வளவு துல்லியமாக ஒருவகை தேஜஸையும் தீர்க்கத்தையும் கொண்டுவர முடியுமா என்று ஆச்சர்யப்படுவது போல பாத்த்து நின்றான். ஒரு காலை இன்னொரு காலின் மேல் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். வலது கையில் திருக்குறளோ அல்லது வெற்று ஏடுகளோ இருக்கின்றன. ஒருவகையில் ஆகாசத்தை நோக்கும் பார்வை. நிதானமாய் எந்தப் பரபரப்பும் இல்லாமல் உட்கார்ந்திருக்கிறார். அவனுக்கு ஆச்சர்யமாகவே இருந்தது.

நேற்றைக்கு வந்திருந்தால் வள்ளுவர் சிலை அமைப்பில் அக்கறை கொண்ட சிலரைப் பார்த்திருக்கலாம் என நினைத்தான். அழைப்பிதழ் என்று எதுவுமில்லை. கைபேசியில் குறுஞ்செய்தி வந்தது. உடனே புறப்பட்டு வந்துவிட முடியவில்லை. ஆளில்லாத இடத்தில் ஒரு திண்டின் மேல் வள்ளுவரைப் பார்ப்பதுகூட நன்றாக இருப்பதாக நினைத்தான். வள்ளுவரின் கையில் இருப்பது சுவடிகளா? இல்லை குறுஞ்செய்திகளை எதிர்பார்த்து வைத்திருக்கும் கைபேசியா?

பெண்கள் உள்ளங்கையில் கைபேசியை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறான். கைப்பையில்கூட பாதுகாப்பாக வைத்திருக்கலாம். ஆனால் அழைப்பு வந்தால் தேடி எடுத்து அழைப்பை ஏற்பதைவிட அடுத்த நொடியே அழைப்பை ஏற்றுப் பேச வேண்டும் என்ற அக்கறையில் உள்ளங்கையில் வைத்திருப்பதாகத் தோன்றும் அவனுக்கு. பானு கைப்பையில்தான் வைத்திருப்பாள். அழைப்பிற்கு பதில் சொல்வது சற்று தாமதமாக இருக்கும். கைப்பையிலிருந்து அழைப்பு மணியின் சப்தம் ஊடுருவி வெளியே வந்து காதுகளை ஊடுருவி, மூளையைச் சுறுசுறுப்பாக்க சற்று நேரம் எடுத்துக்கொள்ளும். உள்ளங்கையிலேயே கைப்பேசியை வைத்துக்கொண்டு நடப்பது, பேருந்து ஏறுவது, மேல் கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்பது போன்றவையெல்லாம் அவனுக்குச் சாகசமாகத்தான் பட்டிருக்கிறது. பானு சாகசங்களுக்கு அப்பாற்பட்டவள் என்ற நினைப்பு அவனுக்கு வந்தது.

வள்ளுவரின் சிலையை ஊருக்கு வெளியே இரண்டு கி.மீ. தள்ளி ஒரு இடத்தில் அமைத்திருந்தார்கள். பெரியகோட்டை ஊராட்சி அவனை வரவேற்பதாக பல இடங்களில் பலகைகளைப் பார்த்திருக்கிறான். ஒரு கிராமத்துப் பஞ்சாயத்தில் ரிசர்வ் சைட்டில் வள்ளுவர் அமர்ந்திருக்கிறார். பல ஆண்டுகள் நகரத்தில் இடம் தேடியும் முடியவில்லை. தமிழ் ஆர்வலர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு இடமில்லாமல் வள்ளுவரும் ஒதுக்கப்பட்டிருக்கிறார். இந்த இடமாவது வள்ளுவருக்குக் கிடைத்ததே என்று ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.

கர்நாடகா ஊரில் வள்ளுவர் முகத்தில் சாக்கை போட்டுக் கொண்டு பல வருடங்களாய் நின்று கொண்டிருந்தார். அந்தச் சிலையைத் திறப்பதற்கான ஆயத்தங்கள் பற்றிய பேச்சுகள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும். தொடர்ந்து வரும் நாட்களில் தமிழர்கள் இருக்கும் பகுதிகளில் பேருந்து எரிப்பு, தமிழர்கள் கடைகள் மீது கல்லெறிவது என்றிருக்கும். வள்ளுவரின் முகத்தின் மீது இன்னமும் அழுத்தமாக ஏதோ துணி போடப்பட்டு முகமற்றவராக ஆக்கப்படுவார். அந்த வள்ளுவரை ஒப்பிடுகையில் இந்த வள்ளுவர் அதிர்ஷ்டசாலிதான். போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் உட்கார்ந்துகொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் கையில் கடிகாரம் இல்லாதது அவனை உறுத்திக் கொண்டிருந்தது.

அவனது கையிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். அது தங்க வர்ணத்தில் மின்னிக் கொண்டிருந்தது. தங்கபூச்சு கொடுக்கப்பட்டிருப்பது போல மினுமினுப்பு. அந்தக் கடிகாரத்தைக் கட்டிக் கொள்வது அவனுக்குப் பிடிக்காது. ஆனால் அவனுக்குச் சம்பளம் தரும் துறையில் தரப்பட்டது அந்தக் கடிகாரம். எங்கு போனாலும் அவன் யாரென்று காட்டிக் கொடுத்து விடுகிறது. தங்க வர்ணத்தில் இருப்பதுதான் அவனை உறுத்திக் கொண்டிருந்தது. அவனுக்கு மோதிரமோ, தங்க செயின் போன்ற வகையறாக்களோ அணிவது பிடிக்காது. ஆடம்பரம் என்று அதைத் தவிர்த்து வந்திருந்தான். ஊழியர்களுக்கு கைக்கடிகாரம் வழங்குவது என்பது கடந்த நான்கு ஆண்டுகளாய் அவனின் துறை செயல்பாட்டில் இருந்து வந்தது. இது இரண்டாவது கைக்கடிகாரம். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தரப்படுவதாகும். முதல் கைக்கடிகாரம் வழங்கப்பட்டபோது அவனுக்கு தங்க வர்ணத்தில் கடிகாரம் அணிவது பிடிக்காமலிருந்தது. துறை சார்ந்த கூட்டமொன்றில் துறை தந்த கடிகாரத்தை அணியாதவர் யார் என்று சட்டென ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அவன் தன்னந்தனியே எழுந்து நிற்க வேண்டியிருந்தது.

கொடுக்கப்பட்ட கடிகாரம் சரியாக ஓடுவதில்லை என்று துறை மீது குற்றம் சொல்லியிருக்கலாம் என்று உட்கார்ந்த போது ஞாபகம் வந்தது. சட்டென பொய் மனதிற்குள் வரவில்லை. துறை சார்ந்த வருடாந்திர டைரி எல்லோரிடமும் இருக்கிறதா என்று அடுத்த கேள்வி கேட்கப்பட்டது. அது ஆண்டுதோறும் வழங்கப்படுவது.அது சற்றே கனத்துடன் இருக்கும். அதைத் தூக்கிக் கொண்டு திரிவது அவனுக்கு சற்றே எரிச்சலானது முழு நீளத்தாளை நான்காக மடித்து சட்டைப் பாக்கட்டில் வைத்துக் கொள்வான். ஏதாவது குறிப்பென்றால் அதில் எழுதிக்கொள்வான். கனமான வருடாந்திர டைரியை கையில் வைத்துக் கொள்வதையோ அல்லது அலுவலக வேலையாக வெளியில் செல்லும் போது கொண்டு செல்வதைத்தவிர்க்க அந்த நாலு மடிப்புத் தாள் பயன்படும். துறையினர் தரும் ஆண்டுக்கொருமுறை துண்டு, ஆறு மாதங்களுக்கொரு முறை பேனா, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்றான சோப்பு இவற்றையும் எடுத்துக் கொண்டு அடுத்த முறை துறை சார்ந்த கூட்டத்திற்கு செல்லவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விடுமோ என்று நினைத்தான். இதை வேறு யாரிடமாவது கிண்டலாகச் சொல்லலாம் என்று நினைப்பான். அது யாராவது விசுவாச ஊழியரின் காதில் விழுந்து மேலதிகாரிக்குத் தெரிந்து விட்டால் சிக்கல் என்று நினைத்தான். இடது கையில் தெரிகிற மாதிரி கைக்கடிகாரத்தைக் கட்டாமல் உள்பக்கமாக வைத்துக் கட்டுவது அவனின் பழக்கமாக இருந்தது. பானுவுக்கு அப்படி கட்டுவது பிடித்திருந்தது. ஏதோ வித்தியாசாக இருப்பதாகச் சொன்னாள்.

பானு சமீபத்தில் கட்டியிருந்த கடிகாரம் மிகவும் சிறியதாக இருந்தது. மிகச் சில முட்கள். ரோமன் வகை எழுத்துக்கள். இதை வைத்துக் கொண்டு எப்படி நேரம் பார்ப்பது என்று அவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். அக்கடிகாரத்தை சாதாரணமாய் கையில் மாட்டுவது, கழற்றுவது என்பது சுலபமாக இருந்தது அவனுக்கு ஆச்சர்யம் தந்தது. அதன் விலை நூறு ரூபாய் என்று சொன்ன போது அவன் எரிச்சலடைந்தான். கட்டியிருந்த கடிகாரம் பழுதடைந்த நிலையில் வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது வீதியின் ஓரத்தில் இருந்த நடைபாதைக் கடையில் வாங்கியிருக்கிறாள். இவ்வளவு மலிவான விலையில் எதற்கு வாங்கினாய் என்று அவன் கோபித்துக் கொண்டான். மலிவான விலை என்பதால் ரொம்ப நாளைக்கு உழைக்காது, சீக்கிரம் பழுதாகிவிடும் என்பதுதான் அவன் வாதம். சட்டுன்னு எனக்குத் தோணாமப் போயிருச்சு பாரு. தெரிஞ்சிருந்தா நானே ஒண்ணு வாங்கிக் கொடுத்திருப்பேன். இப்பகூட என்ன... ஒண்ணு வாங்கி வச்சர்ரேன்.அவன் குதூகலம் கொண்டவள் போல அவனைப் பார்த்தாள்.

சென்றதரம் அவளைச் சந்தித்தபின் தொலைபேசி செய்தபோது அக்கடிகாரத்தைத் தொலைத்துவிட்டதாகத் தெரிவித்தார். நான் சொன்னபடி வாங்கி வச்சிருக்கனான்னு பாக்கறதுக்காக சொல்றியா’. ‘இல்லையில்லை நெஜமாத்தா தொலைஞ்சு போச்சு. அந்தக் களேபரத்தில் வாட்ச் மட்டும் போச்சேன்னு ஆறுதல்என்றாள். அன்று அவள் அழைத்தபோது பானு வர ஒத்துக்கொண்டிருந்தாள். அது ஒரு அமாவாசை இரவு என்பது அவளுக்குப் பிடித்திருந்ததால் சொன்னாள். எங்க போகப் போறோம்’ ‘எங்கையாச்சும்...அவன் காரை ஓட்டும்போது மது அருந்தும் பழக்கத்தை வைத்துக் கொண்டிருப்பவன் அல்ல. ஆனால் அன்றைக்கு காரை எடுத்துக் கொண்டு பல கிராமங்களைத் தாண்டிப் போய்விட்டான். நெடுதூரம் போனபின்பு கொஞ்சம் மது அருந்திக் கொள்ள அனுமதி கேட்டான். அவளுக்குப் பெரும்பாலும் அந்த வாசம் பிடிப்பதில்லை. அவள் அனுமதி தராவிட்டாலும் சாரி என்று சொல்லிவிட்டுக் குடிப்பான். அவள் அனுமதி என்ற ரீதியில் எதுவும் சொல்லாமல் அமாவாசை இருட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கிருக்கிறோம் என்று அவளுக்குத் தெரியவில்லை. அழகு மலையைக் கடந்து வந்திருக்கிறோம் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. மலையின் உச்சியில் நேரங்கடந்து மின்விளக்கொன்று நட்சத்திரங்களுக்கு இணையாக எரிந்து கொண்டிருந்தது. எத்தனை மணிக்குத் திரும்புவோம் என்பது நிச்சயமில்லை. ஆனால் பாதுகாப்பாகத்தான் இதுவரை திரும்பியிருக்கிறோம் என்பதுதான் பானுவுக்கு ஆறுதலாக இருந்தது.

ஆனால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அரை மணி நேரத்திற்குப் பிறகு கார் எங்கோ சென்று சிக்கிக் கொண்டு விட்டது போலிருந்தது. இடையில் திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று மட்டும் போதையினூடே அவன் சொன்னான். அவனது அறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் தகவலாகச் சொன்னான். வழியில் எங்கோ கீழிறங்கிமாட்டிக்கொண்டு விட்டது போலிருந்தது.

கும்மிருட்டில் காரின் வெளிச்சம் மட்டும் மினுங்கிக் கொண்டிருந்தது. எவ்வளவு முயன்றும் காரைக் கிளப்ப முடியவில்லை. பின் இருக்கையில் அவனது போதை வாசத்துடன் அவள் இரவைக் கடத்த வேண்டியதாகிவிட்டது. சற்றே இருட்டுனூடே கண்களைத் திறந்தபோது காரைச் சுற்றி சிலர் இருப்பது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நல்லவேளை இடையில் முழிப்பு வந்தபோது சேலையை சரி செய்துவிட்டு ஒருக்களித்துப் படுத்திருந்தாள். சுற்றிலும் சிலர் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பதை கவனித்தபோது வீறிட வேண்டும் போலிருந்தது. அவனை எழுப்புவது அவளுக்குச் சிரமமான விஷயமாகிவிட்டது.

கார் சிறுபள்ளத்தில் மாட்டிக்கொண்டுவிட்டது. தொலைபேசி வசதிக்கோ, குடிநீர் இணைப்பிற்கோ, சாலை விரிவாக்கத்திற்கோ தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இருந்ததில் கார் நழுவி விழுந்துவிட்டது. ஒரு ஆணும் பெண்ணும் காரினுள் கிடக்கிறார்கள் என்ற செய்தி விடியகாலை நேரத்தை நிறைய பேரை சேர்த்துவிட்டது.

இன்னமும் மனுஷங்க நல்லவங்களா இருக்கறாங்க. வெள்ளேந்தியா இருக்காங்கன்னு தெரியுதுஎன்றான் அவன். காரைச் சுற்றி நின்றுகொண்டு பேச்சில் பரபரத்தாலும் யாரும் சந்தேகமாய் பார்க்காதது அவனுக்கு ஆச்சர்யம் தந்தது. ஏதோ வழியில் கார் மாட்டிக்கொண்டு சிரமப்படுகிறார்கள் என்று நினைத்து காரை பள்ளத்திலிருந்து மேலே கொண்டுவர உதவி செய்தார்கள். சந்தேகமாய் எந்த வார்த்தையும் கிளம்பவில்லை. யாரும் கேட்கவில்லை. அனுதாபமாய் சில வார்த்தைகள் கிளம்பின. பானு சேலைத் தலைப்பால் கழுத்தை மூடிக் கொண்டிருந்தாள் தாலி போன்றவை தென்படாதது சிலருக்கு சந்தேகத்தைக் கிளப்பலாம். காரை பள்ளத்திலிருந்து கிளப்புவதற்கு உதவியதற்காக நூறு ரூபாய் தாள் ஒன்றை அவன் எடுத்துத் தந்திருந்தான்.

என்ன இப்படியாயிருச்சே... நல்லவேளை பெருசா ஒண்ணும் சிரமம் இல்லே...என்பதை இரண்டாம் முறையாக பானு சொன்னபோது எரிச்சலடைந்தவன் போல் சொன்னான் : கொழந்தை வேணுமுன்னு ஆசைப்பட்டா பீயை வழிக்கிறதுக்கும் சங்கடப்படக்கூடாது. இதேல்ல சகஜம்தா...அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறுதிசையில் பார்த்தாள். மெல்ல சூரியன் கிழக்கில் கிளம்பிக் கொண்டிருந்தது. எப்போதாவது வந்துபோகிற கிராமப் பேருந்து நிறுத்தமாக அது இருந்தது. இன்றைக்குப் பேருந்து வராமல் போய்விட்டால் என்ன செய்வது என்று பயப்படுபவளாக அவள் இருந்தாள்.

காரை இங்கிருந்து கிளப்பிக் கொண்டு போவதற்காக யாரையாவது கண்டு பிடிக்க வேண்டும் என்பது அவனின் கவலையாக இருந்தது. பதற்றத்தைத் தவிர்ப்பதற்காகக் கையிலிருந்த புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தான்:

புத்தகத்தை ஆட்டிடையனிடமிருந்து வாங்கிய கிழவர் சொன்னார் : உலகத்தில் இருக்கிற அனைத்துப் புத்தகங்களும் சொல்கிற ஒரே விஷயத்தைதான் இந்தப் புத்தகமும் சொல்கிறது. ஜனங்கள் தங்களுடைய தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியற்றவர்களாக இருப்பதை இது விவரிக்கிறது. இந்த உலகத்தில் மிகப்பெரிய பொய்யை ஒவ்வொருவரும் நம்புவதாகச் சொல்லி முடிவடைகிறது

இந்த உலகத்தில் மிகப்பெரிய பொய் எதுஎன்று கேட்டான் மிக்க ஆச்சர்யத்துடன்.

இதுதான், நம்முடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் நமக்கு நிகழக்கூடியவற்றின் மீதானக் கட்டுப்பாட்டை நாம் இழந்துவிடுகிறோம். நம்முடைய வாழ்க்கை விதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுதான் உலகத்தின் மிகப்பெரிய பொய்

புத்தகத்திலிருந்து தலையைத் தூக்கி வெளிச்சமாக இருந்த திசையைப் பார்த்தான். சூரியன் உதிக்கும் திசைதான் கிழக்கு. ஆனால் அவன் உட்கார்ந்திருக்கும் எதிர்திசை கிழக்காகப் பட்டது அவனுக்கு. தூரத்தில் ஆடுகளின் பின்னால் ஒரு சிறுவன் சென்றுகொண்டிருந்தான். அவன் கையில் கைபேசி இருக்குமோ? சமீபத்தில் பார்த்த ஒரு தமிழ் படத்தில் ஆட்டிடையன் ஒருவன் கைபேசியை வைத்துக்கொண்டு செய்யும் சாகசங்கள் ஞாபகத்திற்கு வந்தது. அவன் கையில் கடிகாரம் கட்டியிருப்பானா? அவன் சூரியன் இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு நேரத்தைக் கணிப்பவனாக பழகி இருப்பான் என நினைத்தான்.

பானுவின் கையில் கடிகாரம் இல்லாமலிருந்தது. அவன் கையில் இருந்த கடிகாரம் விடியற்காலை இரண்டு மணியைக் காட்டிக் கொண்டிருந்தது. எப்போதோ நின்று போயிருக்கிறது. சூரியன் நின்றுபோயிருக்கிற கடிகாரங்களையெல்லாம் தாண்டி நகர்ந்து கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

Pin It