ஆகஸ்டு 13 அன்று தமிழ் நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த 2021-22ஆம் ஆண்டின் திருத்த நிதிநிலை திட்ட மதிப்பீடுகள் இந்த நிதி ஆண்டின் கடைசி ஆறு மாதங்களுக்கானவை மட்டுமே. நிதியமைச்சர் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளதாக உறுதியளித்துள்ளார். கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை சுகாதாரத்திலும், பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த அரசை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளன. எனவே, அடுத்த நிதி ஆண்டின் நிதிநிலைத் திட்டத்திற்கு வலுவான அடித்தளம் அமைப்பதே இந்த நிதிநிலை திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும், தமிழ் நாட்டின் நிதி நிலைமையை உடனடியாக சீர்படுத்த இயலாது என்றும் இரண்டு மூன்று ஆண்டுகள் வரை முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 4,57,645 மனுக்களில் 2,29,216 குறைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசால் விதிக்கப்பட்ட மேல்வரிகள், முழுமையாக அக்குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்ட காலத்திற்கு விதிக்கப்படும் கூடுதல் வரிகள் காலவரையரையின்றி தொடர்கின்றன எனவும் இந்தியக் கணக்குத் தணிக்கைத் துறை தலைவர் குறிப்பிட்டுள்ளதாகவும், கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்குவதற்காக ஆலோசனைக் குழு நிறுவப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயனாளர்கள் குறித்த போதிய அடிப்படைத் தரவுகள் கிடைக்கப் பெறாததால் அனைத்துத் துறைகளிலுள்ள தரவுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாநிலத்திலுள்ள அனைத்துப் பொதுச்சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து துறைகளிலும் மின்னணு கொள்முதல் முறை பின்பற்றப்படும் என்றும் அனைத்து தொழில்நுட்ப துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ் நாட்டு அரசின் 2. 05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தணிக்கையில் கண்டறியப்பட்டது. பொது நிலங்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் விதத்தில் சிறப்பான மேலாண்மைக்கு மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு ஒன்று அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருவூல அமைப்பின் கண்காணிப்புக்கு வெளியேயுள்ள வங்கிக் கணக்குகளுக்கு அரசு நிதிகள் அடிக்கடி மாற்றப்படுவதைக் கண்டறிய இரட்டைக் கணக்கெடுப்புமுறை தொடங்கப்பட்டது. இதை சரிசெய்து அனைத்து அரசு நிதியும் கருவூல அமைப்பின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் அடிப்படை சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அரசில் செயல்படும் அனைத்துத் தணிக்கைத் துறைகளும் நிதித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒன்றிணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தின் நூற்றாண்டை சிறப்பு செய்யும் வகையில் 1921லிருந்து நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும் என்றும் பேரவையின் நிதிக்குழுக்களின்(மதிப்பீடு, பொதுக்கணக்கு, பொதுத்துறை நிறுவனங்கள்) செயல்பாட்டை வலுப்படுத்துவதற்காக உரிய அலுவலர்களுடன் கணினிமயமாக்கப்பட்ட சிறப்பு செயலகம் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்குப் புத்துயிர் அளிக்கப்படும் என்றும் தலைமைச் செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துத் துறை அலுவலகங்கள் வரையிலும், தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மூலதனச் செலவினங்களுக்காக 2021-22 இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட 43,170.61 கோடி ரூபாய், 2021-22 திருத்த நிதிநிலைத் திட்ட மதிப்பீட்டில் 42,180. 97 கோடி ரூபாயாக 989.64 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது திருத்த நிதிநிலையறிக்கையின் மிகப்பெரும் குறைபாடாகும். தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான ஆலோசனைகளை வழங்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழு குறைந்தபட்சம் 10000 கோடி ரூபாய் கூடுதல் மூலதனச் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 பெருந்தொற்றினால் தமிழ் நாட்டின் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. அவற்றிற்கு உதவும் பொருட்டு “ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, கடன் வழங்கும் நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்துவதற்கும், அதன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும் கூடுதல் மூலதனமாக 1000 கோடி ரூபாயை அரசு வழங்கும். இதற்காக, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என 2021-22ஆம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து 2021-22ஆம் ஆண்டின் திருத்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

2021-22 இடைக்கால நிதிநிலைத் திட்ட மதிப்பீடுகளில் அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது திமுக அரசின் திருத்த நிதிநிலை அறிக்கையில் 257.16 கோடி ரூபாய் செலவில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதியத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ல் திமுக ஆட்சியில் இருந்த போது கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 2011ல் அதிமுக ஆட்சியில் விலக்கிக் கொள்ளப்பட்டு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் குறித்து 2021-22 திருத்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1046.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் திட்டங்களும், திட்டத்தின் பெயர்களும் அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் மாற்றப்படுவது திட்டமுறைகளில் தொடர்ச்சியின்மையை ஏற்படுத்துவதுடன் நிதிவிரயத்தையும், காலவிரயத்தையும் ஏற்படுத்துகிறது. இத்திட்டங்களுக்கு மக்களின் வரிப்பணமே நிதியளிக்கிறதே ஒழிய கருணாநிதியோ, ஜெயலலிதாவோ அல்ல என்பதால் திட்டங்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பெயர்களை சூட்டும் நடைமுறையை கைவிட்டு, திட்டங்களின் பயன்முறையை வெளிப்படுத்தும் விதமாக பெயர் சூட்டுவதே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும்.

2021-22 திருத்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்திற்கு 116.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலை திட்ட அறிக்கையில் இதற்கு 291 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

2021-22 திருத்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு சித்தா பல்கலைக் கழகத்தை அமைத்திட முதல் கட்ட நிதியாக 2 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் குடும்ப நலத்திற்காக மொத்தம் 18,933.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

முதியோர் ஓய்வூதியத் திட்டம் முழுமையாக சீரமைக்கப்பட்டு அனைத்துத் தகுதிவாய்ந்த நபர்களும் விடுதலின்றி பயன்பெறுவது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகப்பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு 4807.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மேற்கொள்ள, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படவுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறைக்கு 80.26 கோடி ரூபாயும், தொல்லியல் துறைக்கு 29.43 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021-22ஆம் ஆண்டு திருத்த நிதிநிலை அறிக்கையில் காவல்துறைக்கு 8930 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலைத் திட்ட மதிப்பீட்டில் 9576.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

2021-22ஆம் ஆண்டு திருத்த நிதிநிலை அறிக்கையில் விபத்துகளைத் தடுக்க ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு துறைகளுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறைக்கு 405.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலைத் திட்ட மதிப்பீட்டில் இத்துறைக்கு 436.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

நீதித்துறைக்கு புதிய கட்டடங்கள் கட்டுமானத்திற்கு 351.87 கோடி ரூபாய் உட்பட, நீதித்துறை நிர்வாகத்திற்கென திருத்த நிதிநிலை அறிக்கையில் 1,713.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலைத் திட்ட மதிப்பீட்டில் 1437.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

உணவு மானியத்துக்கு திருத்த நிதிநிலை அறிக்கையில் 8437.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலைத் திட்ட மதிப்பீட்டில் 9604.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர்நிலைப் பகுதிகளைப் புனரமைத்தல் பணிகளுக்காக 2021-22ஆம் ஆண்டில் 100 குளங்களை சீரமைக்க 111.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பை செயல்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வள மேலாண்மை திட்டங்களுக்காக 326.37 கோடி ரூபாயும், பாசனத்திற்காக 6607.17 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காற்றின் தரத்தினை நிகழ் நேரத்தில் கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை அளிக்கவும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் ஒன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகளில் 100 ஈர நிலங்களை கண்டறிந்து, அவற்றின் இயற்கை சூழலை மீட்க 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்வளத்துறைக்கு 1,149.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இத்துறைக்கு 580.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது

குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள்ளாக குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020-21ஆம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 3,016 கோடி ரூபாய் செலவில் 40 இலட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் இதில் 2006.08 கோடி ரூபாய் ஜல் ஜீவன் திட்டம் வாயிலாகவும் 1010.18 கோடி ரூபாய் பிற திட்டங்களில் நிதியை ஒருங்கிணைத்தும் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

2021-22 திருத்த வரவு-செலவு அறிக்கையில் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்திற்கு 3548 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது. தூய்மை பாரத் இயக்கத்துக்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நடப்பாண்டில் 25 கோடி மனித உழைப்பு நாட்கள் அளவிலான வேலைவாய்ப்பு அளிக்க மொத்த ஊதிய செலவிற்கு 6825 கோடி ரூபாயும், பொருட்செலவிற்கு 3,200 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி நடப்பு ஆண்டிலிருந்து 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குக்கிராம அளவில் நிலவும் அடிப்படை உட்கட்டமைப்பு இடைவெளிகளை நிறைவு செய்யும் விதத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை தொடங்க

1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நமக்கு நாமே திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு 36,218 சுய உதவிக்குழுக்களுக்கு பயனளிக்கும் வகையில் 809.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்திற்கு 1450 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. திருத்த நிதி நிலை அறிக்கையிலும் இத்திட்டங்களுக்கு அதே அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்த 87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இடைக்கால நிதி நிலை அறிக்கையில் 287 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று இடங்களில் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலங்கள் கட்ட 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடைத் திட்டத்தை ஏற்படுத்த 2,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் திட்டத்தை செயல்படுத்த 2,371 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டு காலத்திற்குள் தமிழ்நாடு முற்றிலுமாகக் குடிசைகளற்ற மாநிலமாக மாற்ற உறுதியளிக்கப்பட்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்காக 3,954.44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு 5,421.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட செயல்பாட்டின் இரண்டாம் கட்டத்திற்கு 663 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு மொத்தம் 17,889.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இத்துறைக்கு 18750.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பேருந்துகளில் இலவச பயணத்திற்காக 703 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் டீசல் மானியத்திற்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பது ஒரு குறைபாடாக உள்ளது. ஏனெனில் கனரக வாகனங்கள் டீசலினால் இயக்கப்படுவதால் டீசல் விலை குறையும் போது அது விலைவாசி உயர்வையும் குறைக்கும் என்பது பரவலாக அறியப்பட்ட உண்மை.

வேளாண்மைக்கான இலவச மின்சாரம், வீட்டிற்கான மின்சாரம் வழங்குவதற்கான மானியங்களுக்காகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்கவும் 19,872.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு உயர்மட்டக் குழு ஒன்றை நியமிக்கப்படும் என்றும் இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்விக்கு 32,599 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு மானியங்களை வழங்குவதற்காக 215.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தொழிற்சாலைகளில் திறம்படவேலை செய்வதை உறுதி செய்வதற்காகவும், எதிர்கால வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சியினை, தெரிவு செய்யப்பட்ட 15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்குவதற்கான செலவில் திறன் மேம்பாட்டு மையங்களை அமைக்க 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கான மானியமாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்த 200 கோடி ரூபாயே திருத்த நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1000 கோடி ரூபாய் செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்றும், கோயம்புத்தூரில் 225 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 4000 ஏக்கர் நிலங்கள் மேம்படுத்த 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் முதற்கட்டமாக நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் அமைக்க 165 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருந்து பெட்ரோ வேதிப்பொருட்கள் துறையிலும், உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் திறன்மிகு போக்குவரத்து ஆகிய துறைகளில் ஐந்து பெரிய தொழில் தொகுப்புகளை அமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் செலவில் பொது வசதி மையங்கள் 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆறு கோடி வருடங்களுக்கு முந்தைய உள்நாட்டு புதை வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ள அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் புவியியல் புதைபடிவ பூங்கா அமைக்க பத்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இடைக்கால நிதி நிலை அறிக்கையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு 1,224.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2021-22 திருத்த நிதிநிலை அறிக்கையில் இத்துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைக் குறிப்பிட்டவில்லை என்ற போதும் அத்துறைக்குப் பயனளிக்கும் விதமான பொங்கல் இலவச வேட்டி- சேலை திட்டத்திற்கு 490.27 கோடி ரூபாயும், பள்ளிச் சீருடைகள் விநியோகிக்கும் திட்டத்திற்கு 409.30 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

100 திருக்கோயில்களை சீரமைக்கும் பணிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. போதிய நிதி வசதி இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் ரூபாயில் நிலையான நிதி ஏற்படுத்த 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மசூதிகள், தேவாலயங்களை புதுப்பிப்பதற்காக தலா 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு புத்துயிர் அளித்து, மகளிர் கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு 762.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கான ஓய்வூதியத் திட்டத்திற்காக 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்துவதற்காக 48.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி சார்ந்த பொருட்களை வழங்குவதற்கு 23.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எம். ஜி. ஆர் மதிய உணவுத் திட்டத்திற்காக 1,725.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலையறிக்கையில் இத்திட்டத்திற்கு 1953.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்காக 2,536.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதி நிலையறிக்கையில் இத்திட்டத்திற்கு 2634 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆதி திராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டத்திற்கு 14,696 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதி நிலையறிக்கையில் இத்திட்டத்திற்கு 13967.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு 1,306.02 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதி நிலையறிக்கையில் இத்திட்டத்திற்கு 1276.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையின பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான உதவித் திட்டங்களுக்கு 114.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிதி நிலையறிக்கையில் இத்திட்டத்திற்கு 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகையாக 404.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான கருவிகள் மற்றும் உபகரணங்களுக்காக 50.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதி நிலையறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 688.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான 225.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதி நிலையறிக்கையில் இத்திட்டத்திற்கு 229.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தில் நிகழ்ந்துள்ள பல்வேறு முறைகேடுகளை தீர ஆராய்ந்த பின்பே இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் கடன் திட்டங்களுக்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021-22 இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,18,991.96 கோடி ரூபாயாக இருந்த ஒட்டு மொத்த வரி வருவாய் மதிப்பீடுகள், திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,02,495.89 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் சொந்த வரி வருவாய் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,35,641.78 கோடி ரூபாயாக இருந்தது, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,26,644.15 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வரிகளில் தமிழ்நாட்டின் பங்கு 2021-22ஆம் ஆண்டு ஒன்றிய வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிர்ணயிக்கப்பட்ட 27,148.31 கோடி ரூபாய் அளவிலேயே மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 14,139.01 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி அல்லாத வருவாய் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக 2021-22ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளைக் காட்டிலும் சற்றுக் குறைவாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021-22ஆம் ஆண்டில் மொத்த வருவாய் செலவினங்கள் 2,60,409.26 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கீட்டால் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒட்டுமொத்த வருவாய் செலவினங்கள் 2,61,188.57 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-22 இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 41,417.30 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை 2021-22 திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 58,692.68 கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-22 திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 92,529. 43 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ல் தமிழ் நாட்டின் நிதிப்பற்றாக்குறை மாநிலத்தின் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 4. 33 விழுக்காடாக கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா

Pin It