விளையாட்டில் பேரார்வம் கொண்ட ஒருவர், கணியன் பூங்குன்றனாரின் பேரர், முதல்வரானால் என்ன நடக்கும்? கிடைத்தற்கரிய வாய்ப்புகள் கூட எல்லைகள் கடந்து தேடி வரும். ஆம்! 44ஆவது செஸ் ஒலிம்பியாட் நடத்தும் வாய்ப்பு அப்படித்தான் தமிழ் நாட்டுக்குக் கிடைத்தது! ருசிய நாடு நடத்தி இருக்க வேண்டிய இந்தப் போட்டிகளை, உக்ரைன் போர் காரணமாக சர்வதேசச் செஸ் அமைப்பான FIDE மாற்ற நினைக்க, அது ஒரு வேளை இந்தியாவிற்கு வந்தால் தமிழ்நாடு அந்த வாய்ப்பைப் பெற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்டளை இட, எதிர்பார்த்த படியே இந்தியாவிடம் அந்த அமைப்பு வினவியது. பிற மாநிலங்கள் தயக்கம் காட்டிய அதே நேரத்தில், தம்மால் முடியும் எனத் தமிழ்நாடு ஆர்வம் காட்ட நமக்குக் கிடைத்தது பெரும் வாய்ப்பு!
186 நாடுகள்! 2000க்கும் மேற்பட்ட வீரர்கள்! 2 வாரங்கள்! சென்னை தாங்குமா? பணம் இருக்கிறதா? தயாரிப்புக்குக் காலம் இருக்கிறதா? விளையாட்டுத் திடல் இருக்கிறதா? தங்கும் வசதி இருக்கிறதா? இல்லை என்பதே ‘இல்லை’ என்றவர்கள் தமிழர்கள்! “பாரடா உனது மானுடப் பரப்பை!”; விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!” “அணைந்து கொள் உன்னைச் சங்கமமாக்கு!” என்று பாடியவரின் மண்ணாயிற்றே?! சிறிதும் தயங்காமல் அத்துனை நாடுகளையும், அத்துனை வீரர்களையும் வாரி அணைத்துக் கொண்டார் முதல்வர்!
தொடக்கமும் கோலாகலம்! முடிவும் கோலாகலம்!
100 கோடிகள் உடனடியாக ஒதுக்கீடு. அரசுப் பள்ளிகளில் சதுரங்கப் போட்டியில் வென்ற மாணாக்கர் கொடி தாங்கி முன் நடக்க, விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு! பாரம்பரிய நடனங்கள்! இசை விளையாட்டுகள்! கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து!
கமலஹாசனின் பின்னணிக் குரலில் சித்தாந்தத் தந்தை பெரியார் வரலாறு! சிவகார்த்திகேயன் மகளின் வாழ்த்துப் பாடல்! விக்னேஷ் சிவனின் நிகழ்ச்சி இயக்கம்! யாரை எங்கே எதற்குப் பயன்படுத்துகிறோம் என்ற தெளிவு! தலைமை அமைச்சர் வருவதற்குத் தாமதமானாலும் குறித்த நேரத்தில் தொடங்கும் திண்மை! தமிழ் நாட்டின் தொல்லியல் பெருமை, ஆனைக்குப்பி என்று தமிழ் இலக்கியங்கள் சொன்ன சதுரங்க விளையாட்டின் தலைநகராகச் சென்னை அடையாளம், கீழடியில் கிடைத்த தந்த வடிவங்கள் சதுரங்கக் காய்களாக இருக்கும் விளக்கம் என முதலமைச்சரின் பேச்சில் என்ன ஒரு முதிர்ச்சி! வழமையாகப் படம் பிடிப்பவனையே பார்க்கும் பெரியவரைக் கூட முதலமைச்சரைப் பார்க்க வைத்த பெருமையும் அவருடைய பேச்சுக்கே உண்டு!
ஒவ்வொரு வீரருக்கும் வரவேற்புப் பரிசு முடிப்புகள்! உலகத் தரத்துடன் ஒரு நாளும் மீண்டும் வராத உணவு வகைகள்! ஓய்வெடுக்கவும் புதுப்பித்துக் கொள்ளவும் மாமல்லபுரத்துக் கடற்கரைகள்! கரை ஏறியவுடன் இயற்கையும் கலையும் சிற்பங்களும் சங்கமிக்கும் வரலாற்று நகரத்தில் 50,000 x 40,000 சதுர அடியில் விளையாட்டு அரங்கம்! பிரமிக்க வைத்துவிட்டார் முதல்வர்! உலகிலேயே கடந்த 98 ஆண்டுகளில் இல்லாத அளவு வசதிகள் செய்யப்பட்டிருந்ததாக விளையாட்டு வீரர்களே பாராட்டி இருக்கிறார்கள்! சிறிதும் பிசிறில்லாமல் ஒரு பெரிய நாட்டுக்கு இணையாக ஒரு மாநிலம் இவ்வளவையும் தன்னுடைய பொருட்செலவிலேயே செய்து, இந்திய நாட்டுக்கும் தன் மாநிலத்துக்கும் உலக அரங்கில் அசைக்க முடியாத பெருமையைச் சேர்த்திருக்கிறது!
இது தொடக்கம்தான் என்கிறார்கள்! நம் எதிர்பார்ப்புகள் எகிறுகின்றன! “உங்கள் தமிழ்நாடு” என்று நாடாளுமன்றத்தில் மண்டியிடும் மாமிகளுக்கோ இரத்தக் கொதிப்பு எகிறும்!
- சாரதாதேவி