இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. பல்வேறு புள்ளி விவரங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. அதிக வருமானம் உடைய பிரிவினர் கடந்த 8 ஆண்டுகளில் 6 இலட்சம் பேர் இந்தியாவைவிட்டு வெளியேறி விட்டனர். வெளியேறிவிட்டார்கள் என்றால் இங்கே முதலீடு செய்த பணத்தை, பல இலட்சம் கோடிகளைக் கொண்டு சென்று விட்டார்கள். இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து கொண்டு வருகிறது. இறக்குமதியும் குறைந்து கொண்டே வருகிறது. பொருளாதார உற்பத்தி முறையில் தனியார் புகுந்து தனியார் இலாபம் பெறுவதற்காகத்தான் ஒன்றிய அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை செய்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் இருந்து வருமான வரியை, கார்ப்பரேட் வரியை, சரக்கு சேவை வரியை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். சரக்கு சேவை வரிக்கான நிலுவைத் தொகையை இன்னும் கொடுக்கவில்லை. நிதிக் குழு வழியாக நமக்கு வர வேண்டிய தொகை பற்றி மார்ச் 16ஆம் தேதி இந்து பத்திரிக்கையில் புள்ளிவிவரப் பகுதியில் ஒரு கருத்து வந்தது. தமிழ்நாடு வரிவழியாக ஒரு ரூபாய் ஒன்றிய அரசுக்குக் கொடுக்கிறது என்றால் திரும்பப் பெறுவது 29 காசுதான் என்று அந்தப் புள்ளி விவரம் சொல்கிறது. ஆனால் உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாயைக் கொடுத்துவிட்டு ரூ.2.73 வாங்குகிறது. பீகார் ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு 7 ரூபாய் வாங்குகிறது.
வேளாண்துறையில், தொழில் துறையில், சிறு குறு தொழில் துறையில் நாம் பொருளாதார உற்பத்தியைப் பெருக்குகிறோம். அதனால் வருமானம் பெருகுகிறது. அந்த வருமானத்தை வரி வழியாக ஒன்றிய அரசு எடுத்துச் செல்கிறது. சராசரியாக ஒரு ரூபாயில் 29 காசுகளைத்தான் திரும்பக் கொடுக்கிறார்கள் என்றால், 71 காசுகளைச் சுரண்டிக் கொள்கிறார்கள். இவ்வளவு நிதி நெருக்கடியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுத்திருக்கிறது.இருப்பினும் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு 47,226 கோடி ஒதுக்கி இருக்கிறோம். இதன் மூலம் இன்னும் உயர்கல்வியில் முன்னேறி அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்று குடும்ப வருமானத்தை அதிகரிக்க முடியும். அடுத்து நகர்ப்புற மேம்பாட்டிற்காக 38, 444 கோடி ஒதுக்கி இருக்கிறோம். ஏனெனில் இந்திய மாநிலங்களிலேயே அதிக நகர்ப்புற வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 49 விழுக்காடு மக்கள் ஊர்ப் புறங்களிலும் 51 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களிலும் வாழ்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு சிறப்பாக நேர்மையான முறையில் நிதிச் சிக்கனத்தைக் கையாண்டு வரி வருவாயைப் பெருக்கும் வகையில் நிதிநிலை அறிக்கையை உருவாக்கி இருக்கிறது. இதைவிடச் சிறந்த நிதிநிலை அறிக்கையை எப்படி உருவாக்க முடியும்? தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் செல்லும் வரி வருவாயைக் கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அதுகூட முழுமையாகக் கேட்கவில்லை. 75 விழுக்காடு கூடக் கேட்கவில்லை. 50 விழுக்காடுதான் கேட்கிறோம். மூன்றாவது, சுகாதாரத்திற்கு 18,661 கோடி ஒதுக்கி இருக்கிறோம். ஆசியாவிலேயே சிறந்த சுகாதாரத்துறை வசதிகளைக் கொண்டது தமிழ்நாடு. தனியார் துறை இருக்கிறது, பொதுத்துறை இருக்கிறது. எல்லா மாவட்டத்திற்கும் மருத்துவ மனைகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் வழங்கி இருக்கிறோம். ஒன்றிய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாகச் சொல்லி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் கட்டப்படாமல் காலி இடமாகவே உள்ளது. எது வளர்ச்சி, எது உண்மையான வளர்ச்சி, எது ஏமாற்றும் வெற்று முழக்கம் என்பதைப் பார்க்க வேண்டும்.
ஊரக வளர்ச்சிக்கு 22,562 கோடி, மாநில நெடுஞ்சாலைகளுக்கு 19465 கோடி, காவல் துறைக்கு 10,812 கோடி, எரிபொருளுக்கு 10,694 கோடி, நீர் மேலாண்மைக்கு 8232 கோடி, போக்குவரத்துக்கு 8056 கோடி, சமூக நலனுக்கு 7,745 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பெரியார் காலத்திலிருந்து நாம் முன் வைப்பது, நலிந்த பிரிவினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும், நலிந்த பிரிவினருக்கு உணவு கொடுக்க வேண்டும், சத்துணவு கொடுக்க வேண்டும், நலிந்த பிரிவினரின் வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான். இதுதான் திராவிட இயக்கத்தினுடைய, தந்தை பெரியார் வலியுறுத்திய, அண்ணா கடைபிடித்து கலைஞர் பின்பற்றி இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வரும் கொள்கையாகும்.
நிதிநிலை அறிக்கையின் புள்ளி விவரப்படி ஒரு ரூபாயில் 44 காசு மாநிலத்தின் சொந்த வருவாயில் இருந்து கிடைக்கிறது. 33 காசு பொதுக்கடனிலிருந்து வருகிறது. மாநிலத்தின் சொந்த வரி இல்லாத வருவாய் 5 காசு. ஒரு ரூபாயில் கிட்டத்தட்ட 82 காசு, தமிழ்நாடு அரசே செலவு செய்கிறது. ஒன்றிய அரசின் பங்கு 17 காசுதான். 33 விழுக்காடு கடன் வாங்கி செலவு செய்கிறோம்.
மாநில அரசுக்குப் போதிய நிதி அதிகாரங்கள் இல்லை. நிதி அதிகாரங்கள் இல்லாதது மட்டுமன்று, இருக்கிற அதிகாரங்களும் குறைந்து கொண்டே வருகின்றன. 1977இல் ஏழாவது நிதிக் குழுவில் 7 விழுக்காடு மொத்த நிதி ஒதுக்கீட்டில் கொடுக்கப்பட்டது. இப்போது 4 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. பல இலட்சம் கோடிகளை 1977இல் இருந்து 2022 வரை இழந்து விட்டோம். கிடைக்க வேண்டிய நிதி ஒதுக்கீடு கிடைக்காத போதிலும் விவசாயத்தைப் பாதுகாத்திருக்கிறோம், பள்ளிக் கல்வியை, உயர் கல்வியைப் பாதுகாத்திருக்கிறோம், பொது சுகாதாரத்தைப் பாதுகாத்திருக்கிறோம், நகர்ப்புற மேம்பாட்டினைப் பாதுகாத்திருக்கிறோம். சமூக நீதியின் அடிப்படைச் சிந்தனையான மானுட வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற வகையில் செயல்பட்டு வருகிறோம்.
ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோரையும் உயர்த்துவதுதான் மானுட மேம்பாடு. அதைத்தான் ஹியூமன் டெவலப்மெண்ட் இன்டெக்ஸ் என்று சொல்கிறார்கள். மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் தமிழ்நாடு மூன்று இடங்களுக்குள் இருப்பினும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு ரூபாய்க்கு 29 காசு கொடுப்பது என்பது ஒரு வஞ்சனையான செயல், நீதியற்ற செயல். இதைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று தெரியவில்லை.
தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. உத்திரப்பிரதேசமும் பிகாரும் மட்டும்தான் இந்தியாவா. அண்மையில் பிபிசி தமிழ் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 33 இலட்சம் வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அந்த 33 இலட்சம் பேருக்கும் நாம் வாழ்க்கை கொடுக்கிறோம். ஒரு ரூபாயில் 29 காசுகள் வாங்கிக் கொண்டு 33 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்களையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
இந்த நிதிநிலை அறிக்கை, இருக்கின்ற நிதி நெருக்கடிக்கிடையில், உலக அளவிலும் இந்திய அளவிலும் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்து வருகிற போதிலும், தமிழ்நாடு தனித்து, வீழ்ச்சியைத் தடுத்து வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதாகும்.
- பேராசிரியர் மு.நாகநாதன், முன்னாள் துணைத் தலைவர், மாநிலத் திட்டக் குழு