அரசின் நிர்வாக நடவடிக்கைகள், அரசு எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்த தகவல்களை மக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வெளிப்படையாக அறியத்தரும் விதத்தில் அரசுத் தரப்பில் இருந்து வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிக்கை தான் வெள்ளை அறிக்கை. இது குறித்து திறந்த விவாதங்களை ஏற்படுவதற்கும் சரியான தீர்வுகளுக்கான ஆலோசனைகளை பெறுவதற்கும் வெள்ளை அறிக்கை பயன்படும். தற்போது தமிழ் நாட்டின் நிதியமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் பொருளாதாரம், நிதி நிலை, நிர்வாக அடிப்படையில் 2006லிருந்து 2021 மார்ச் வரை தமிழ்நாடு கடந்த வந்த பாதை குறித்த விவரங்களை சுருக்கமாக அறியத் தருகிறது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த முயற்சியை வரவேற்போம்.

ptr palanivel thiyagarajanதமிழ் நாட்டு மக்களுக்கு தி. மு. க அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றும் நிலையில் தமிழ் நாட்டின் நிதி நிலை இல்லை என்பதைத் தெரிவிப்பதற்கான ஒரு வழிமுறையாகவும் இந்த வெள்ளை அறிக்கை உள்ளது என்ற போதும் கூட இது பாராட்டுதலுக்குறிய முன்முயற்சி. ஏனென்றால் மத்திய அரசின் வலைத் தளங்களில் இந்திய பொருளாதாரம் குறித்த அனைத்துத் தரவுகளையும் பெற முடியும் (அவை எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது கேள்விக்குறியே என்ற போதும் கூட). தமிழ்நாட்டின் பொருளாதார நடப்பு நிலை குறித்தத் தரவுகளும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் பொருளாதார நிலை தமிழ்நாட்டில் எவ்வாறு உள்ளது என்று வரலாற்று அடிப்படையிலான தரவுகளும் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறாத நிலையே இருந்துவருகிறது, மத்திய அரசின் ஆவணங்களிலிருந்து அவற்றை வருவிக்க முடிந்தாலும் அவைத் தமிழில் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரும் குறைபாடாக நீடிக்கிறது. இதனால் தமிழ் நாட்டின் நிதி நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பொது மக்களுக்கு அறியக் கிடைக்காத மர்மமாகவே இருந்துள்ளது. இக்குறைப்பாட்டைப் போக்குவதற்கான முன்முயற்சியாகவும் இந்த வெள்ளை அறிக்கையைக் கருத முடியும்.

வெள்ளை அறிக்கை தமிழ் நாட்டின் தற்போதைய நிதி நிலைமை, அரசு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி, அரசின் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், மற்றும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை விவரிக்கின்றது.

பதிமூன்றாவது சட்டப்பேரவை (2006-2011), பதிநான்காவது சட்டப்பேரவை (2011-2016), பதினைந்தாவது (2016-2020) தமிழ் நாடு சட்ட மன்றப்பேரவை உள்ளடக்கிய பதினான்கு ஆண்டு கால பொருளாதார சூழ்நிலையும், மாநில அளவில், இந்திய அளவில், சர்வதேச அளவில் அதில் தாக்கத்தை ஏற்படுத்திய காரணிகளும் விவாதிக்கப்பட்டுள்ளது.

2006ல் திமுக ஆட்சி செய்தபோது உச்சத்திலிருந்த தமிழ்நாட்டின் பொருளாதார நிலை கடந்த 10 ஆண்டு அ. தி. மு. க ஆட்சியில் மந்த நிலையை அடைந்ததாகவும் 2013-14லிருந்து தமிழ் நாட்டின் நிதி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நெருக்கடியிலிருந்த தமிழ் நாட்டின் பொருளாதார நிலை கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தினால் 2020-21ல் மேலும் வீழ்ச்சியை சந்தித்தது. வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிகரித்து தமிழ் நாட்டின் கடன் சுமை மிகவும் அதிகரித்து நெருக்கடியான நிதி நிலைமை ஏற்பட்டுள்ளது.

2006 முதல் 2013 வரையிலான 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகளில் உபரி வருவாயை பெற்ற தமிழ்நாட்டில், அதற்குப் பின் 2013லிருந்து வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வருகிறது.

2020-21ல் வருவாய் பற்றாக்குறை 61,320 கோடி ரூபாயாகவும், தமிழ் நாட்டின் மொத்த பொருளாக்க மதிப்பில் 3.16 விழுக்காடாகவும் உள்ளது. 2006-07ல் 0.81 விழுக்காடு வருவாய் உபரியைப் பெற்ற தமிழ்நாடு, 2020-21ல் 3.16 விழுக்காடு வருவாய் பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சராசரி வருவாய் பற்றாக்குறையை விட இது மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-18 மற்றும் 2018-19 ஆகிய 2 ஆண்டுகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சராசரி வருவாய் பற்றாக்குறை மாநில மொத்த பொருளாக்க மதிப்பில் 0.1 விழுக்காடாக இருந்தபோது தமிழ் நாட்டின் வருவாய் பற்றாக்குறை முறையே 1.5, 1.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

2006-07ல் 3,956 கோடி ரூபாயாகவும், மொத்த பொருளாக்க மதிப்பில் 1.21 விழுக்காடாக இருந்த நிதிப் பற்றாக்குறை 2020-21ல் 92,305 கோடி ரூபாயாக, மொத்த பொருளாக்க மதிப்பில் 4.43 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்குப் பதிலாக பெறப்பட்ட 6,241 கோடி ரூபாய் கடன் இதில் அடங்காது. 2011-2016ல் நிதிப்பற்றாக்குறையில் 14.94 விழுக்காடாக இருந்த நிதிப்பற்றாக்குறை 2020-21ல் 52.48 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

2016-17ல் உதய் திட்டத்தின் கீழ் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் கடன், அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் 3 விழுக்காட்டைக் காட்டிலும் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உண்மையான செலவுகள் கட்டுப்படுத்தப்படவில்லை நிதி அளிக்கும் பொறுப்புகள் ஒத்திவைக்கப்பட்டு பற்றாக்குறைகள் மறைக்கப்பட்டன.

 நிதிப் பற்றாக்குறையில் 50 விழுக்காட்டிற்கும் மேல் வருவாய் பற்றாக்குறையை சரிசெய்யவே பயன்படுத்தப்படுகிறதே தவிர மூலதனச் செலவுகளுக்காகவோ வளர்ச்சிக்காகவோ பயன்படுத்தப்படவில்லை. 2013-14ல் நிதிப்பற்றாக்குறையில் 8.69 விழுக்காடாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2020-21ல் 66.43 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கோவிட் தாக்கம் இதற்கு ஒரு முக்கியக்காரணமாக இருந்த போதும் அதற்கு முன்னர் 2018-19லேயே 49.56 விழுக்காடாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நவீன தாராளமய சீர்திருத்தத்தின் பகுதியாக வாஜ்பேய் ஆட்சியின் போது நிதி பொருப்புடைமை, மேலாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டம் அரசின் நிதிப்பற்றாக்குறை 3 விழுக்காட்டுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என வரம்பிடுவதன் மூலம் அரசின் செலவினங்களை கட்டுப்படுத்துகிறது. சமூகத்திட்டங்கள், கல்வி, சுகாதாரம், பொது விநியோகம் போன்ற பொதுசேவைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவ்ற்றுக்கான அரசு செலவினங்களை கணிசமாகக் குறைத்து கட்டற்ற தனியார்மயத்தை ஊக்குவிப்பதற்காகவே இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட்டது. அரசின் நிதிப்பற்றாக்குறை 3 விழுக்காட்டிற்கு மேல் அதிகமானால் சர்வதேச கடன் தரமதிப்பீட்டு நிறுவனங்கள் அதன் தரமதிப்பீட்டைக் குறைத்துவிடும் ஆதலால் அந்த அரசு மலிவுக்கடன் பெற இயலாத நிலைக்கு தள்ளப்படுவதால் அதிக வட்டிக்கே கடன் பெற இயலும் என அச்சுறுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டும் அல்ல நவீன தாராளமயம் ஆட்சி செய்யும் எல்லா நாடுகளிலும் இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்திய ஒன்றியத்தின் நிர்பந்தத்தால் தமிழ் நாட்டிலும் 2003ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 3 விழுக்காட்டு வரம்பிற்குள் கட்டுப்படுத்தும் தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

2006-7ல் 60,170 கோடி ரூபாயாகவும், மொத்தப் பொருளாக்க மதிப்பில் 18. 37 விழுக்காடாகவும் இருந்த தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் 2020-21ல் 570189 கோடி ரூபாயாகவும் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 24.98 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது.

14வது நிதிக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பின் அளவு 25 விழுக்காடு.

தமிழ் நாட்டின் ஒட்டுமொத்தக் கடன் இருப்பு மாநில மொத்த பொருளாக்க மதிப்பில் 3 47 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் உள்ள அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் வெளிச் சந்தையில் தற்போது அதிக அளவில் கடன் வாங்கும் மாநிலமாக தமிழ் நாடு உள்ளது.

2006ல் மொத்த மாநில பொருளாக்க மதிப்பில் 18.37 விழுக்காடாக இருந்த பொதுக்கடன் விகிதம் 2021ல் 26.69 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 2006-07ல் போக்குவரத்துத் துறையின் நிலுவைக் கடன்களில் 7.04 விழுக்காடாக இருந்த அரசு உத்தரவாதக் கடன்களின் பங்கு 2020-21ல் 39.21 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2006-07ல் மின் துறையின் நிலுவைக் கடன்களில் 25.24 விழுக்காடாக இருந்த அரசு உத்தரவாதக் கடன்களின் பங்கு 2020-21ல் 51.92 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2006-07ல் மொத்த மாநில பொருளாக்க மதிப்பில் 3960 கோடியாகவும் 1.21 விழுக்காடாகவும் இருந்த அரசு உத்தரவாதங்களின் பங்கு 2020-21ல் 91,818 கோடி ரூபாயாகவும் 4.72 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது. அரசின் உத்தரவாதங்களில் 90 விழுக்காடு மின் துறையையும், 5 விழுக்காடு போக்குவரத்துத் துறையையும் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாய்:

2006-07ல் 40,913 கோடியாக இருந்த தமிழ் நாட்டின் மொத்த வருவாய் 2019-20ல் 1,74,526 கோடி ரூபாயாக அதிகரித்து, 2020-21ல் 1,69012 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.

2019-20ல் 107462 கோடி ரூபாயாக இருந்த வரிவருவாய் 2020-21ல் 106171 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. 2019-20ல் 12887 கோடி ரூபாயாக இருந்த வரியல்லாத வருவாய் 2020-21ல் 9040 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. 2019-20ல் 26392 கோடி ரூபாயாக இருந்த மத்திய அரசிடமிருந்து பெற்ற வரிவருவாய் பங்கு 2020-21ல் 24906 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

மத்திய அரசிடமிருந்து பெற்ற வரி வருவாய் பங்கு 2006-07ல் மொத்த வருவாயில் 15.63 விழுக்காடாக இருந்தது 2020-21ல் 5.35 விழுக்காடாக சரிவடைந்துள்ளது. 2006-07ல் மாநிலத்தின் மொத்த வருவாயில் 67.88 விழுக்காடாக இருந்த தமிழ் நாட்டின் சொந்த வரி வருவாய் 2020-21ல் 62.82 விழுக்காடாக சரிவடைந்துள்ளது. 2006-07ல் மாநிலத்தின் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 8.37 விழுக்காடாக இருந்த வரியல்லாத வருவாயின் பங்கு 2020-21ல் 5.35 விழுக்காடாக சரிவடைந்துள்ளது. 2006-07ல் மொத்த மாநில பொருளாக்க மதிப்பில் 12.49 விழுக்காடாக இருந்த மாநிலத்தின் மொத்த வருவாய் 2020-21ல் 8.70 விழுக்காடாக சரிவடைந்துள்ளது.

2006-07 முதல் 2010-11 வரையிலான காலகட்டத்தில் மொத்த வருவாய் வரவுகளின் கூட்டு வருடாந்தர வளர்ச்சி விகிதம் 11.40 விழுக்காடாக இருந்தது 2016-17 முதல் 2020-21வரையிலான காலகட்டத்தில் 3.80 விழுக்காடாக சரிவடைந்துள்ளது.

மாநிலத்தின் மொத்த பொருளாக்க மதிப்பில் 5.83 விழுக்காடாக இருந்த வணிக வரிகளின் பங்கு 2020-21ல் 4.19 விழுக்காடாக சரிவடைந்துள்ளது. 2006-07ல் 1.22 விழுக்காடாக இருந்த மாநில ஆயத் தீர்வையின் (excise tax) பங்கு 2020-21ல் 0.40 விழுக்காடாக சரிவடைந்துள்ளது. முத்திரைத் தாள் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள் 2006-07ல் 0.94 விழுக்காடாக இருந்தது 2020-21ல் 0.60 விழுக்காடாகக் குறைந்துள்ளது. 2006-07ல் 0.38 விழுக்காடாக இருந்த வாகனங்கள் மீதான வரி பங்கீடு 2020-21ல் 0.23 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அண்டை மாநிலங்களை விட தமிழ் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும் கடந்த பதினைந்து வருடங்களாக வரி வருவாய் திருத்தப்படாததால் மோட்டார் வாகன வரியின் மொத்த வருவாய் அதிகரிக்கவில்லை. சரக்கு சேவை வரி நடைமுறைபடுத்தப்பட்டதே தமிழ் நாட்டின் வருவாய் குறைவதற்கான முக்கியக் காரணியாக உள்ளது. வரி வருவாய் இழப்பீட்டுத் தொகையையும் முறையாக மத்திய அரசால் அளிக்கவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

வரிவருவாயின் வளர்ச்சிக்கும், மொத்த உள் நாட்டு பொருளாக்க மதிப்பின் வளர்ச்சிக்கும் இடைப்பட்ட விகிதம் வரி மிதப்பு (tax buoyancy) என அழைக்கப்படுகிறது. பொதுவாக இதன் மதிப்பு 1க்கு மேல் இருந்தால் பொருளாதாரம் திறன்மிகு நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. 2006-07ல் 0.93 ஆக இருந்த வரி மிதப்பு 2020-2021ல் 0.49 ஆக சரிவடைந்துள்ளது. வரி வருவாயின் வீழ்ச்சிக்கு தளர்வான வரி நிர்வாகம் ஒரு காரணமாகக் குறிப்பிட்டு வரிவருவாயை மேம்படுத்துவதற்கான ஆய்வையும் கோரியுள்ளது இவ்வறிக்கை.

வரியல்லாத வருவாயின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2020-21ல் 29.85 விழுக்காடு சரிவடைந்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கான வரியல்லாத வருவாயின் முக்கிய இனங்களில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்களிலிருந்து கிடைக்கப்பெறும் உரிமைத் தொகை, வட்டி வரவினங்கள் மற்றும் அரசால் விதிக்கப்படும் பல்வேறு கட்டணங்களும் அடங்கும். இவற்றின் மூலம் அதிக வருவாயை திரட்ட பல வாய்ப்புகள் உள்ளது. இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வரியல்லாத வருவாயை அதிகரிக்க இயலும். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை அரசியல்வாதிகள் லஞ்சத்திற்காக அடிமட்ட விலைக்கு விற்க அனுமதிக்கும் அவல நிலைக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம்.

மத்திய அரசிடமிருந்து தமிழ் நாடு பெறும் வரி வருவாயின் பங்கு 2006-07ல் மாநிலத்தின் மொத்த பொருளாக்க மதிப்பில் 1.95 விழுக்காடாக இருந்தது 2020-21ல் 1.28 விழுக்காடாக சரிவடைந்துள்ளது. மத்திய வரிகளில் தமிழ்நாடு அரசிற்கான பங்கு வரிப்பகிர்வுத் தொகுப்பின் கிடைமட்ட பங்கு மற்றும் வரிப் பகிர்வுத் தொகுப்பின் அளவு ஆகிய இரண்டு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

மத்திய அரசிடமிருந்து தமிழ் நாட்டிற்கான வரிவருவாயின் பங்கின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி வீதம் 2006-07 முதல் 2010-11 வரை 11.29 விழுக்காடாக இருந்தது 2016-17 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் 0.30 விழுக்காடாக சரிவடைந்துள்ளது.

பத்தாவது நிதிக்குழுவால் 6.637 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்ட தமிழ் நாட்டிற்கான மத்திய அரசின் வருவாய் பங்கை பதினான்காம் நிதிக்குழு 4.023 விழுக்காடாகக் குறைத்தது. தற்போது 15வது நிதிக்குழுவின் முதன்மை அறிக்கையில் இது 4.079 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களை பாதித்துள்ளது. நிலப்பரப்பு அளவுகோல்களுக்கான மதிப்பீட்டை அதிகரித்ததும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காடுகளின் பரப்பளவு அளவுகோலும், தமிழ் நாட்டை பாதித்துள்ளது.

 15வது நிதிக்குழுவால் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெறும் வரி வருவாய் பங்கு 4.07 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி இந்தியாவின் மக்கள் தொகையில் 6.124 விழுக்காடாக உள்ள தமிழ் நாட்டிற்கு வரி வருவாயில் 4.079 விழுக்காடே அளிக்கப்படுவதால் தமிழ் நாட்டின் வரி வருவாய் 33.4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராடுவதன் மூலவே தீர்வை நோக்கி முன்னேற முடியும். அதிகமாக வரி பங்கீடு குறைக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் ஹரியானா, மஹாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழ் நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதே போன்று, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலங்களின் பங்களிப்பு அவற்றுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய மத்திய வரித் தொகுப்பின் பங்கோடு ஒப்பிடுகையில், தமிழ்நாடு மற்றும் இதர உயர் வருவாய் கொண்ட மாநிலங்கள் குறைந்த விகிதத்திலான பங்கையே பெறுகின்றன.

14வது நிதிக்குழு மத்திய வரிகளின் ஒட்டுமொத்த பகிர்வுத் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கான பங்கீட்டை 32 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தப் பரிந்துரைத்தது. ஆனால் இது உரிய முறையில் நடைமுறைப்படுத்தாதால் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு அதிகரிக்கவில்லை. ஒன்றிய திட்டக் குழு கலைக்கப்பட்டதால் ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு திட்டமானியமாக வழங்கப்பட்டு வந்த பொதுவான மத்திய நிதியுதவி நிறுத்தப்பட்டது. ஒன்றிய நிதியுதவி பெறும் திட்டங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பும் கணிசமான அளவு உயர்த்தப்பட்டது. 2017-18 ஒன்றிய நிதிநிலைத் திட்டத்தில் பெரு நிறுவனங்களின் மீதான வரி குறைக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த வரிவருவாயில் நேர்முக வரிகளின் பங்கைக் குறைத்ததும் இதற்கு முக்கியக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு வரி இனங்களின் மீது மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாத மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கும் நடைமுறையை ஒன்றிய அரசு அதிகமாகக் கையாண்டு வருகிறது. 2011-12ல் 10.4 விழுக்காடாக இருந்த மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கு 2019-20ல் 20.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் ஒன்றிய நிதிநிலைத் திட்டத்தில் தனி நபர் வருமான வரி மீதான கூடுதல் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வந்த காலங்களில் அதை நீட்டித்ததும் நேரடி வரி விதிப்பில் மாநில அரசின் பங்கை அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோலியப் பொருட்களின் மீதான ஒன்றிய அரசின் வரி விதிப்பு கணிசமான அளவில் உயர்ந்தது மட்டுமல்லாமல் மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு பகிர்ந்து கொள்ளும் ஆயத் தீர்வை (excise tax) குறைக்கப்பட்டதும், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டதும் வருவாய் பங்கீட்டில் மாநில அரசுகளுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளன. 2014ல் லிட்டர் ஒன்றிற்கு 10.39 ரூபாயாக விதிக்கப்பட்ட வரிகள் 2021ல் 32.90 ரூபாயாக 216 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசு விதிக்கும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டர் ஒன்றுக்கு, முறையே 18 ரூபாய் மற்றும் 21 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஆயத்தீர்வை லிட்டர் ஒன்றுக்கு 6.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசால் விதிக்கப்படும் வரிகள் மற்றும் கட்டணங்கள் பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு 11.50 ரூபாயும் டீசல் மீது 14.50 ரூபாயும் அதிகரித்துள்ளது. 2021-22 ஒன்றிய நிதிநிலைத் திட்டத்தில் வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு மேல்வரியாக பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு 2.50 ரூபாயும், டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாயும் விதிக்கப்பட்டுள்ளது. இதுவும் மாநிலங்களுடன் பகிரப்படுவதில்லை. 2021-22ல் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் கட்டணங்கள் வாயிலாக ஒன்றிய அரசு 3,89,622 கோடி ரூபாயை திரட்டியுள்ளது. இது 2019-20ல் பெற்ற வருவாயான 2,39,452 கோடி ரூபாயை விட 63 விழுக்காடு அதிகம். அதே சமயம் ஒன்றிய அரசிடமிருந்து 2019-20 ஆம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஆயத் தீர்வையிலிருந்து வரிப் பகிர்வாக 1,613.13 கோடி ரூபாயை பெற்ற தமிழ்நாடு அரசு 2020-21ல் 837.75 கோடி மட்டுமே பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த வரி வருவாயில் மானியங்களின் விகிதம் 2006-07 ஆம் ஆண்டில் 8.13 விழுக்காட்டிலிருந்து 2020-21 ஆம் ஆண்டில் 17.10 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இவ்வாறு மத்திய அரசின் செயல்பாடுகள் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநிலங்களின் நிதி சுதந்திரத்திற்கும் முற்றிலும் புறம்பான முறையில் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தவில்லை என 2017-18 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு நிதியை விடுவிக்காததால் தமிழ் நாட்டிற்கு 2,577.29 கோடி ரூபாய் மானிய இழப்பு ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரிகளின் இழப்பீட்டுத் தொகைக்காக ஒன்றிய அரசு வழங்கியத் தொகை மானியமாகவே கணக்கிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரக்கு, சேவை வரி அமைப்பின் மூலம் மாநிலங்களின் வரி வருவாய் 14 விழுக்காடு உயர்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் வருவாய் குறைந்தால் வருவாய் இழப்பீடுகள் மூலம் ஈடுசெய்யப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்ததை வாக்குறுதியை நம்பி மாநிலங்கள் சரக்கு சேவை வரி அமைப்பில் இணைந்து தங்கள் நிதி இறையாண்மையை முற்றிலுமாக இழந்துள்ளன. ஆனால் மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியும் அதிகரிக்கவில்லை இழப்பீடும் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை. இழப்பீட்டுத் தொகை கணக்கிடுவதற்கு ஒற்றை இலக்க வருவாய் வளர்ச்சி கொண்ட 2015-16ஆம் ஆண்டையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இழப்பீடும் குறைவாகவே கணக்கிடப்படுகிறது. மேலும் இழப்பீடு வழங்கும் பொறுப்பை தட்டிக்கழித்த மத்திய அரசு அதற்கு பதிலாக மாநிலங்களின் மீது கடனை சுமத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு 6,241கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. 2021-22ல் மத்திய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை 20033 கோடி ரூபாய் உள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் நாளுடன் சரக்கு மற்றும் சேவை வரிக்கு இழப்பீடு வழங்கும் முறை முடிவுக்கு வர உள்ளது. மாநிலங்களின் வரி வருவாய் 14 விழுக்காடு அதிகரிக்காத நிலையில் மத்திய அரசு இழப்பீட்டை நீட்டிக்காமல் விட்டு விடுமானால் மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பை விட்டு வெளியேறுவதன் மூலமே நிதி இறையாண்மையை மீட்கமுடியும்.

2006-07ல் 15.63 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரியினங்களில் மத்திய வரிகளின் பங்கு 2020-21ல் 14.74 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

செலவு:

2006-07 முதல் 2010-11வரையிலான காலகட்டத்தில் 13.76 விழுக்காடாக இருந்த தமிழ் நாட்டு அரசின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2016-17 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் 8.50 விழுக்காடாக சரிவடைந்துள்ளது. தமிழ் நாட்டின் கல்வி, மருத்துவம், பொது சுகாதாரம், குடி நீர் வழங்கல், வீட்டுவசதி, வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் போன்ற வளர்ச்சிக்கான செலவினங்களின் போக்கு தொடர்ந்து குறைந்துகொண்டு வருகிறது. 2011-12 ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கான செலவினங்களின் சராசரி 63. 1 விழுக்காடாக இருக்கும் போது, தமிழ் நாட்டின் செலவினம் 62.9 விழுக்காடாக இருந்தது. இது 2018-19 ஆம் ஆண்டில் 57.5 விழுக்காடாக குறைந்தது. இது அனைத்து மாநிலங்களின் செலவின சராசரியான 62.9 விழுக்காட்டை விட மிகக் குறைவாகும்.

மின்சார மானியம் மாநில மொத்த பொருளாக்க மதிப்பில் 1.10 விழுக்காடு என்ற அளவில் அதிகமாக உள்ளது. உணவு மானியம் மாநில மொத்த பொருளாக்க மதிப்பில் 0.49 விழுக்காடாக உள்ளது. ஒட்டுமொத்தமாக, வருவாய் வரவினங்களின் வளர்ச்சியான 9.92 விழுக்காட்டை விட வருவாய் செலவின வளர்ச்சி 12.71 விழுக்காடாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ் நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

சம்பளங்கள், ஊதியங்கள், ஓய்வூதியம், ஓய்வூதிய பயன்கள் ஆகியவை செலவினத்தின் மொத்த வளர்ச்சி விகிதத்தை விட குறைவான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. அரசுத் துறைகளில் பெருமளவிலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதும் சம்பளச் செலவினத்தில் காணப்படும் குறைந்த விகிதத்திலான உயர்விற்கு ஒரு முக்கியக் காரணமாகும். பல்வேறு துறைகளில் திறன்மிகு நபர்கள் இல்லாததால் திறன் மிக்க சேவையை பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

மூலதன செலவினம்:

2006-07 முதல் 2010-11 வரையிலான காலகட்டத்தில் மூலதன செலவினம் மாநிலத்தின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் சராசரியாக 1.97 விழுக்காடாக இருந்தது, 2011-12 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் 1.78 விழுக்காடாக சரிவடைந்து 2016-17 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் 1.50 விழுக்காடாக குறைந்துள்ளது.

நிதிப்பற்றாக்குறையை சமாளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் முதலாவதாக மூலதன செலவினங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2006-07 முதல் 2010-11 வரை மூலதனங்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 15.88 விழுக்காடாக இருந்தது 2011-12 முதல் 2015-16 வரையிலான காலத்தில் 3.06 விழுக்காடாகக் குறைந்து பின் 2016-17 முதல் 2020-21 வரையிலான காலத்தில் 9.41 விழுக்காடாக உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள்:

2018-19ல் தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்த வருவாயில் 14.72 விழுக்காடு ஒதுக்கியுள்ளது, இந்திய அளவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி வழங்கும் இரண்டாவது மாநிலமாக தமிழ் நாடு உள்ளது. ஐந்தாவது மாநில நிதிக் குழுவின் பரிந்துரைகளின் படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிகர மாநில சொந்த வரி வருவாயின் 10 விழுக்காடு பகிரப்படுகிறது. இத்தொகையானது மேற்கொண்டு ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 56:44 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கணிசமாக நிதி அளிக்கப்படும் போதும் அவை தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றிற்கு மின்சாரம் மற்றும் குடிநீருக்கான கட்டணங்களை செலுத்துவதில்லை.

வரி வருவாய், வரி அல்லாத வருவாய், மானியங்கள் மற்றும் கடன்கள் ஆகியவையே உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் ஆதாரமாகும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் வரி வருவாயின் முதன்மையான ஆதாரமாக சொத்து வரி உள்ளது. இது உள்ளாட்சி அமைப்புகளின் வரி வருவாயில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது.

மாநகராட்சிக்கு கட்டிடங்களின் ஆண்டு வாரியான வாடகை மதிப்பில் 15.5 முதல் 35.5 விழுக்காடு வரை சொத்து வரி விதிக்க அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பேரூராட்சிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து வரியில் திருத்தம் செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி திருத்தம் கடைசியாக 2008ல் மேற்கொள்ளப்பட்டது.

ஐந்தாவது நிதிக்குழு 2021-22ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு பொருளாக்க மதிப்பில் 0. 60 விழுக்காட்டிற்கு சொத்து வரி வருவாயின் பங்கை உயர்த்த நிர்ணயித்த இலக்கினை மாநில அரசு 0.25 விழுக்காடாகக் குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட இலக்கினை அடைவதென்பதும் சந்தேகத்திற்குறியதாக உள்ளதாகவும், உள்ளாட்சி அமைப்புகள் சுயாட்சி பெற்று 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அவற்றின் வரி வசூலிப்பு திறன் மேம்படாமல் உள்ளது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதால் மாநில வரி விதிப்பில் கூடுதல் நிதி ஆதாரத்தை திரட்டுவதற்கான வழிவகைகள் கட்டுப்படுத்தப்பட்டது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி வசூலிப்பை அதிகரிப்பதற்கான நகர்வுகள் அடுத்த நிதி ஆண்டுகளில் மேற்கொள்ளப்படக்கூடும்.

மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்களின் செயல்பாடு:

தமிழ் நாட்டில் 60 பொதுத்துறை நிறுவனங்களும் ( புதியதாகத் தோற்றுவிக்கப்பட்ட 5 பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட) 9 சட்டப்படியான வாரியங்களும் உள்ளன. இவற்றில் 26 பொதுத்துறை நிறுவனங்கள் இழப்பை சந்திப்பவையாக உள்ளன. அவற்றின் இழப்புகளை சரிசெய்வதற்கு கூடுதல் கடன் பெறுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. மோசமடைந்து வரும் பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலையானது, அவை அரசு உத்தரவாதமின்றி கடன் பெற இயலாத சூழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

2006-07ல் 3466 கோடியாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கான அரசு உத்தரவாதங்கள் 2020-21ல் 90344.13 கோடி ரூபாயாக 2507 விழுக்காடு அதிகரித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள அரசுக் கடன்கள் 2006-07ல் 1578. 69 கோடியிலிருந்து 2020-21ல் 20019 கோடியாக 605 விழுக்காடு அதிகரித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் நிலுவையில் உள்ள கடன் மாநில மொத்த பொருளாக்க மதிப்பில் 36 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது வரையறுக்கப்பட்ட 25 விழுக்காட்டை விட அதிகரித்துள்ளது. அவற்றின் மோசமான நிதி நிலை சேவைகளின் தரத்தை பாதித்துள்ளது. ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள மாநிலத்தின் நிதி நிலைக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்பதால் சீர்திருத்தத்தை ஒத்தி வைக்க இயலாது என அறிக்கை குறிப்பிடுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் பொறுப்புறுதியால் ஏற்படக்கூடிய நெருக்கடியை அளவிடுவதற்கு, பொதுத்துறை நிறுவனங்களின் எளிதில் பணப்புழக்கம், கடன் தீர்வு நிலை மற்றும் நிதி நிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது. 31.3.2021 நிலவரப்படி, மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்துத் துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்தக் கடன்கள் 1.99 லட்சம் கோடி ரூபாய் ஆகும். 31.03.2021 நிலவரப்படி குடிநீர் வழங்கலுக்கான இரண்டு சட்டப்படியான வாரியங்களின் ஒட்டுமொத்த இழப்புகள் 5,282 கோடி ரூபாய் ஆகும். இந்த வாரியங்களின் ஆபத்தான நிதி நிலைக்கு, அவற்றின் இயக்க செலவினங்களை குறைவாக வசூலிப்பதே முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு சட்டப்படி உருவாக்கப்பட்ட கழகங்கள், கூட்டுப் பங்கு நிறுவனங்கள், மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் மார்ச் 2018 வரை 33,579 கோடி முதலீடு செய்திருந்தது. அரசு பெறும் கடன்களுக்கான வட்டி சராசரி 8.08 விழுக்காடாக உள்ள நிலையில், அரசு மேற்கொண்ட முதலீடுகளிலிருந்து பெறப்படும் சராசரி வருவாய் 0.45 விழுக்காடு மட்டுமே உள்ளது.

மாநில போக்குவரத்து நிறுவனங்கள் இயக்கும் வாகனங்கள் ஒரு கிலோமீட்டருக்கு ரூபாய் 59.15 இழப்பை ஏற்படுத்துகின்றன. 2011-12ல் போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டு மொத்த இழப்பு 8761.69 கோடி ரூபாயாக இருந்தது 2020-21ல் 42143 கோடி ரூபாயாக 381 விழுக்காடு அதிகரித்துள்ளது. டீசல் விலையை அடிக்கடி உயர்த்துவதும், செலவின மேலாண்மையில் உள்ள குறைபாடுகளும், இயந்திரங்கள், உதிரி பாகங்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்வதும் மாநில போக்குவரத்துக் கழகங்களின் மோசமான நிதி நிலைக்கு காரணமாக உள்ளன.

பேருந்து சேவைகளின் தரமும், வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப மாநில பேருந்து நிறுவனங்கள் மூலதனச் செலவு செய்ய இயலாததால் 2011-12ல் 21,197ஆக இருந்த பேருந்துகளின் எண்ணிக்கை 2020-21ல் 20,670ஆகக் குறைந்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 31.03.2021 நிலவரப்படி தமிழ்நாடு அரசுக்கடன் 4,582 கோடி ரூபாய் மற்றும் உதய் கடன் 4,563 கோடி ரூபாய் உட்பட நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 1,34,119 கோடி ரூபாயாகும்.

மின் பகிர்மான நிறுவனங்களின், நிதிநிலையை சீர் செய்வதற்காக, உதய் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தியது. இதன் படி மின் பகிர்மான நிறுவனங்களின் 75 விழுக்காடு கடன் பொறுப்பை கடன் பத்திரங்கள் வழங்குவதன் வாயிலாக மாநில அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும். மேலும், அரசுக்கு செலுத்தவேண்டிய கடனில் 25 விழுக்காட்டிற்கு மானியம் அளிக்கவேண்டும் அல்லது தள்ளுபடி செய்யவேண்டும். மின் பகிர்மான நிறுவனங்களின் இழப்புகளையும் முடிந்த அளவிற்கு மாநில அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும். உதய் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பை குறைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் மின் பகிர்மான நிறுவனங்களின் இழப்புகள் குறையவில்லை.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்/ தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் அதிக செலவுகளாலும் குறைந்த வசூலாலும் பாதிக்கப்படுகின்றன. மின்சாரத்திற்கான சராசரி வழங்கல் செலவினம் அலகு ஒன்றுக்கு ரூ. 9.06 என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் 2020-21ல் சராசரியாக அலகு ஒன்றுக்கு 2.36 ரூபாய் குறைவாக ரூ. 6.70 மட்டுமே வசூலிக்கப்படுவதால் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. நிலக்கரிக்கான செலவுகள், வெளிப்புற மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் வாயிலாக செலவு அதிகரித்ததும் மொத்த செலவு அதிகரிப்பிற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மை காலங்களில், சொந்த உற்பத்தியைக் காட்டிலும் மின் கொள்முதல் விலை குறைவாக உள்ளது 2020-21ல் ஒரு அலகு அனல் மின்சாரத்தின் விலை ரூ. 4.87 ஆனால் வெளிக்கொள்முதலின் மூலம் பெறப்படும் ஓரலகு மின்சாரத்தின் விலை ரூ. 4.42 ஆக உள்ளது.

வீட்டு உபயோக மின் கட்டணத்தில் மானியம், வசூல் தொகையையும் சேர்த்த பின்பு ஓரலகு மின்சாரத்திற்கு 5.74 ரூ இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கட்டணங்களை சரியாக வசூலிக்க முடியாததால் அதிகரித்து வரும் வட்டியுடன் பல பட்டியல்கள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு நீண்ட காலத்திற்கு அதிகக் கடன் ஒப்புறுதிகள் உருவாக்கப்பட்டுள்ளதன் விளைவாக முழுமையாக மறுகட்டமைப்பு செய்வதை மேலும் ஒத்தி வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் இழப்பு:

ஓய்வூதியத் தொகை மற்றும் அதிகளவிலான குடிநீர் வழங்கல் திட்டங்களின் பராமரிப்பு, வாரியத்தின் மூலமாகச் செய்யப்படாமல் வெளி முகமைகளின் வழியாகச் செயல்படுத்தப்படுவதால், பராமரிப்புச் செலவினம் ஆகியவை கடந்த பத்து ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன.

குடிநீர் கட்டணங்களை குறைத்து வசூலிப்பதே பற்றாக்குறைக்கான முக்கியக் காரணியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிலோ லிட்டர் ஒன்றுக்கான இயக்கச் செலவு சுமார் 20.81 ரூபாயாக இருக்கும் போது, 2020-21ல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிலோ லிட்டருக்கு 10.42 ரூபாயும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிலோ லிட்டருக்கு 8.11 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. 31.3.2021ஆம் நாளின் படி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரவேண்டிய குடிநீர் கட்டண நிலுவை தொகை 484 கோடி ரூபாய் ஆகும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய செயல்பாட்டு கட்டண நிலுவைகளை செலுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகளால் இயலவில்லை. இதனால் வலுவிழக்கும் உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள்/ வாரியங்களை வலுவற்ற நிலைக்குத் தள்ளுவதுடன், மாநில அரசுக்கு மேலும் பொறுப்பு சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மாநில மொத்த பொருளாக்க மதிப்பின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம்: (நிலையான விலைகளில்):

தமிழ்நாட்டின் மொத்த பொருளாக்க மதிப்பின் வளர்ச்சி 2006-11 காலகட்டத்தில் 10.15 விழுக்காடாக இருந்தது 2011-16 காலகட்டத்தில் 6.70 விழுக்காடாக சரிவடைந்து 2016-20 காலகட்டத்தில் 7.22 விழுக்காடாக உள்ளது.

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி விகிதத்தில் மிகப்பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2006-07 முதல் 2010-11 வரையிலான காலத்தில் 10.30 விழுக்காடாக இருந்த தொழில்துறை வளர்ச்சிவீதம் 2011-12 முதல் 2015-16 வரையிலான காலத்தில் 5.49 விழுக்காடாக சரிவடைந்து பின்னர் 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் 8.17 விழுக்காடாக சற்று அதிகரித்துள்ளது.

2006-07 முதல் 2010-11 வரையிலான காலத்தில் 11.23 விழுக்காடாக இருந்த சேவைத் துறையின் வளர்ச்சி        2011-12 முதல் 2015-16 வரையிலான காலத்தில் 7.44 விழுக்காடாக சரிவடைந்து 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் 6.03 விழுக்காடாக பெரும் சரிவை சந்தித்துள்ளது.

2006-07 முதல் 2010-11 வரை 4.07 விழுக்காடாக இருந்த வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சி, 2011-12 முதல் 2015-16 வரை 5.24 விழுக்காடாகவும், 2016-17 முதல் 2019-20 வரை 5.86 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது. சேவைகள் மற்றும் தொழில்துறை வேளாண்மை துறைகளைக் காட்டிலும் அதிக வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளன என்பதை துறைவாரியான வளர்ச்சி விபரங்கள் வெளிப்படுத்துகிறது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளே பெருமளவிலான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதால் அதில் அதிக முதலீடுகளை செய்து வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். வேளாண் துறையை மேம்படுத்தும் விதமான கொள்கைத் திருத்தங்கள் அறிமுகப்படுத்தாத வரை தமிழ் நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்த வளர்ச்சியாக இல்லாமல் மேலும் சமமற்ற தன்மைக்கே வழிவகுப்பதாக அமையும்.

மாநில மொத்த பொருளாக்க மதிப்பில் தனிநபர் வருவாய், 2006-07 முதல் 2010-11 வரையிலான காலத்தில் 9.37 விழுக்காடாக இருந்தது, 2011-12 முதல் 2015-16 வரையிலான காலத்தில் 6.32 விழுக்காடாக சரிவடைந்து பின்னர் 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் 6.70 விழுக்காடாக உயர்ந்தது.

2010-11 முதல் 2012-13 வரையிலான மூன்று ஆண்டுகாலத்திற்கு மாநில பொருளாக்க மதிப்பில் தனி நபர் வருமான தரவரிசையில் பெரிய மாநிலங்களிடையே நான்காவது இடத்தை வகித்த தமிழ் நாடு, 2010-11 முதல் 2012-13 வரையிலான மூன்று ஆண்டு காலத்தில் ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

2004-05 முதல் 2011-12 வரை சராசரி வளர்ச்சியில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ் நாடு 2012-13 முதல் 2018-19 வரை 11வது இடத்திற்குப் பின்தங்கியது.

பணமதிப்பிழப்பு (2016), அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டசரக்கு மற்றும் சேவை வரி(2017) மற்றும் கோவிட்-19 தொற்று நோயால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம்(மார்ச் 2020) போன்ற தேசிய இடையூறுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாதித்தது. மற்ற வளமான மாநிலங்களைக் காட்டிலும் நிதியொதுக்கம் இல்லாத காரணத்தினால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. துறைவாரியான வளர்ச்சியில் நிலையற்றத் தன்மை மற்றும் போட்டித் திறன் இல்லாமை ஆகியவை விரைவான முறையில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிதி ஒழுங்கு மற்றும் மேலாண்மையில் ஏற்பட்ட பின்னடைவே பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்த நிலைக்குக் காரணம் என அறிக்கை குறிப்பிடுகிறது.

பெருமளவில் ஆளுகையில் இருக்கும் கட்டமைப்புக் குறைபாடுகளை உரிய நேரத்தில் சரிசெய்யாததாலும், மாநிலத்தின் நிதிநிலை நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆகவே வழக்கமான அனுகுமுறையைத் தொடர இயலாது. தொடர்ந்து அதிகரித்து வரும் கடன் மற்றும் வட்டிச் செலவுகளிலிருந்து மீள்வதற்கு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வருவாய் பற்றாக்குறையை குறைப்பதற்கு வட்டிச் செலவுகளையும், கடனையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். நியாயமான முறையில் வருவாயை உயர்த்த வேண்டும். கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் வட்டிச் செலவினங்கள் போன்ற விருப்புரிமையற்ற செலவினங்களுக்குக் கூட கடன்கள் பெறப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இத்தகைய செலவினங்கள் அரசின் வருவாய் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும்.

அரசின் செயல்பாட்டிலும் அரசியலமைப்பின் பல்வேறு பகுதிகள் உள்ளிட்ட எண்ணற்ற அம்சங்களிலும் ஆழ்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆலோசனை பெறுவதற்காக முதலமைச்சரின் உலகப் பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருளாதார ஆலோசகர் ஜான் ட்ரீஸ், பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் எஸ். நாராயன், நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் எஸ்தர் டாஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இந்தியத் தலைமை வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜான் ட்ரீஸை தவிர இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற அனைத்து பொருளாதார ஆலோசகர்களும் தனியார்மயத்தின் தீவிர ஆதரவாளர்கள் எனும் போது அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் செய்யப்படவுள்ள பொருளாதார கட்டமைப்பு மாற்றம் எந்த அளவிற்கு சமூக நீதியின் அடிப்படையில் அமையும் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

பேருந்துத்துறை, மின் பகிர்மான நிறுவன்ங்கள், குடிநீர் வாரியம் ஆகியவற்றின் சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் அடுத்த நிதியாண்டுகளில் உயர்த்தப்படலாம். கட்டணங்களை உயர்த்துவது இருக்கட்டும் அவற்றின் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்தவேண்டும். இவ்வமைப்புகளில் காணப்படும் நிர்வாக முறைகேடுகளை களைந்து வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகம் என்றென்றும் வெள்ளை அறிக்கையாகவே இருக்கும் படியாக தன்னலமற்ற கண்காணிப்புக் குழுக்களை கீழிருந்து கட்டமைக்க வேண்டும்.

ஒரு நாட்டின் மனிதவளமே மிகவும் விலைமதிப்பற்ற சொத்து என்பதால் மனிதவளத்தின் சீர்கெடுக்கும் மதுபானத்தின் மூலம் வருவாய் திரட்டும் வழிமுறைகளை தமிழக அரசு கைவிட்டு மாற்று வழிமுறைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

பொதுத்துறை நிறுவன்ங்களின் கடன் சுமை அதிகரித்துள்ளதால் அவற்றிலும் கட்டமைப்பு மாற்றம் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி/செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி வலுப்படுத்துவதும் கட்டமைப்பு மாற்றம் தான். தனியார் நிறுவனங்களை பொதுத் துறை நிறுவனங்களாக மாற்றுவதும் கட்டமைப்பு மாற்றம் தான். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் செய்வதும் கட்டமைப்பு மாற்றம் தான். இதில் முதலில் குறிப்பிடப்பட்ட இரண்டுமே சமூக நீதி அடிப்படையில் முற்போக்கானவை, மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட தனியார்மயம் சமூக நீதியின் அடிப்படையில் பிற்போக்கானது.

மெய்யான சமூக நீதியின் அடிப்படையில் ஆழ்ந்த பொருளாதார கட்டமைப்பு மாற்றத்தை தமிழ் நாடு அரசு மேற்கொள்ளவும், இழந்த நிதி இறையாண்மையை மீட்கவும் உரிய வழிகாட்டுதலையும், அழுத்தத்தையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் அமைப்புகள், சமூக ஆர்வலர்களின் கடமையாக உள்ளது.

- சமந்தா

Pin It