வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருப்பது மிகுந்த பாராட்டுதலுக்கும், வரவேற்புக்கும் உரியது. வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது பல மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகளிடமும், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்ற பின்பே வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த பத்தாண்டுகளுக்குள் உணவுப் பாதுகாப்பையும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும் அடைந்துவிடவேண்டும் என்பதே இந்தச் சீரிய முயற்சியின் அடிப்படை நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.டெல்லியில் மன உறுதியுடன் போராடி வருகின்ற விவசாயிகளுக்கு வேளாண் நிதி நிலை அறிக்கையை காணிக்கையுள்ளார்.

ஆனபோதும் விவசாயிகளின் உடனடிக் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில், ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபாய் விலை வழங்குவோம்' என அறிவித்திருந்து. ஆனால் தற்போது நிதிநிலை அறிக்கையில் சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,015 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,060 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது விவசாயிகளை மிகவும் ஏமாற்றுத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய் அளிக்கவேண்டுமென விவசாய சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பியுள்ளனர்.திமுக தேர்தல் அறிக்கையில் 4000 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் திருத்த நிதி நிலை அறிக்கையில் ஒரு டன் கரும்புக்கு 2750 ரூபாய் மட்டுமே அளிக்கப்படுவதாக குறிப்பிருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விவசாயிகள் உற்பத்தி செய்து கொடுத்த கரும்புக்கு, சர்க்கரை ஆலைகள் 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் நிலுவை வைத்துள்ளன. இதனை பெற்றுத் தருவது குறித்தும் இந்த நிதி நிலை அறிக்கையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் அரசின் மூன்று தொலை நோக்குத் திட்டங்களாகப் பின்வரும் மூன்று இலக்குகளை அமைச்சர் அறிவித்துள்ளார்

அ) தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 இலட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆ) 10 இலட்சம் ஹெக்டேர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக அதாவது 20 இலட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.

இ) உணவு தானியங்கள், தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம் பிடிக்கும்.

இந்த நிதியாண்டில் செயல்படுத்தவுள்ள திட்டங்கள்:

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு 2500 கிராமங்களில் செயல்படுத்த மாநில அரசு நிதியில் 250 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு கிராமத்திற்கும் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர் வளத்தை அதிகரித்தல்,வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் எனப் பல்வேறு திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்படும்.

முதலமைச்சரின் மானாவாரி நிலமேம்பாட்டு இயக்கம்:

தமிழ் நாட்டில் தொகுப்பாக உள்ள மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு நடப்பாண்டில் 3 இலட்சம் ஹெக்டேரில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு தொகுப்புக்கு 100 ஹெக்டேர் வீதம் மானாவரி நிலங்களைக் கண்டறிந்து, கோடை உழவு செய்து, பண்ணைக்குட்டைகள் வயல்வெளி வரப்புகள், மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல், தரமான விதைகளையும், உயிர் உரங்களையும் மானிய விலையில் வழங்குதல்,மரக்கன்றுகள் வளர்த்தல், பண்ணை இயந்திர வாடகை மையங்கள், மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்களையும் உருவாக்க நிதி வழங்கப்படும்.இத்திட்டம் 146 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்:

இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்களை வேளாண் கிடங்குகளிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும்.இயற்கை இடுபொருட்களுக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தீவிரமாக செயல்படுத்தப்படும். இயற்கை விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வ்ழங்கப்படும். விவசாயிகளுக்கிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அங்க்க சான்றழிப்பு குறித்த பயிற்சியும் வழங்கப்படும்.33 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்:

தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி பாதுகாத்து, பார்வைக்குட்படுத்தி பேணிக் காக்கிற பெரும் பொறுப்பு இத்துறைக்கு உள்ளது. அவற்றை திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை திருவாரூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் இத்திட்டம் 25 இலட்சம் ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல்:

வேளாண் பட்டதாரிகளைத் தொழில்முனைவோராக்குவதற்கு தேவையான பயிற்சிகள், வேளாண் தொழில்முனைவோர் ஆவதற்குத் தேவையான பயிற்சிகள், வேளாண் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்போடும், முன்னாள் மாணவர்களின் பங்களிப்போடும் செய்யப்படும்.படிப்பை முடித்து வெளிவருகிறபோதே சான்றிதழைக் கையில் பெற்று வருமாறு செய்யப்படும்.இயற்கை எரு தயாரித்தல், மரக் கன்றுகள் வளர்ப்பு, நாற்று வளர்ப்பு,காளான் வளர்ப்பு, பசுமைக்குடில் அமைத்தல், பண்ணை இயந்திர வாடகை மையங்கள் அமைத்தல், உரம், பூச்சிமருந்து விநியோகம், வேளாண் ஆலோசனை மையம், நுண்ணீர்பாசன சேவை மையம், விளைபொருட்கள் ஏற்றுமதி, வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடுதல் போன்ற தொழில்களைச் செய்திடவும் வழிவகை செய்யப்படும்.2 கோடியே 68 லட்சம் ரூபாய் ஒன்றிய மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்:

இத்திட்டத்தின் முதல் கட்டமாக இந்த ஆண்டு 2,500 இளைஞர்களுக்கு ஒட்டுக்கட்டுதல், பதியன்போடுதல், கவாத்து செய்தல், பசுமைக் குடில் பராமரித்தல், நுண்ணீர்ப் பாசன அமைப்பு பராமரித்தல், தோட்டக்கலை இயந்திரங்களை இயக்குதல், வேளாண் இயந்திரங்களை பழுது நீக்குதல், சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளைப் பழுது நீக்குதல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.இத்திட்டம் ரூபாய் 5 கோடி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

பனை மேம்பாட்டு இயக்கம்:

நடப்பாண்டில் 30 மாவட்டங்களில், 76 இலட்சம் பனை விதைகளையும், ஒரு இலட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏரிக் கரைகளிலும் சாலையோரங்களிலும் பனைமரங்களை வளர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் எடுக்கப்படும்.மழை ஈர்ப்பு மையம், நீர் நிலைகளின் காவலன் எனப்படும் என்றும் அழைக்கப்படும் பனை மரத்தினை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்தும் செயலினைத் தடுக்க இவ்வரசால் உத்தரவு பிறக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்ட நேரும் போது, மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்படும். பனை மேம்பாட்டு இயக்கம் 3 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

நெல் உற்பத்தி சிறப்புத் திட்டம்:

19 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி மேற்கொண்டு சுமார் 75 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி இலக்கினை அடைந்திட திட்டங்கள் செயல்படுத்தப்படும். அறுவடைக்குப் பிறகான இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும். இத்திட்டம் 52 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

சிறுதானிய இயக்கம்:

சிறு குறு தானிய பயிர்களின் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், மானாவாரி நிலங்களில் சாகுபடியினை அதிகரிக்கும் விதமாக செயல்படுத்தப்படும் இத்திட்டம் 12 கோடியே 44 இலட்சம் ரூபாய் ஒன்றிய மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

பலன் தரும் பயறு உற்பத்தித் திட்டம்:

பயறு வகைகளில் அதிக மகசூல் கொடுக்கக்கூடிய ரகங்களை நெல் விவசாயிகள் வரப்புகளில் வளர்க்கவும், ஊடுபயிராக வளர்க்கவும், கலப்புப் பயிராக வளர்க்கவும் விதை மானியம் அளிக்கப்படும். துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை 61,000 மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.45 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

ஏற்றம் தரும் எண்ணெய் வித்துக்கள் திட்டம்:

எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரித்திட, தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நெல் தரிசில் எள், ஆமணக்கு பயிரை தனிப்பயிராக பயிருடுவதற்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் இத்திட்டம் 25 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

நீடித்த நிலையான பருத்தி இயக்கம்:

நடப்பாண்டில் 1.7 இலட்சம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடியை மேற்கொண்டு, சுமார் நான்கு இலட்சம் பொதிகள் உற்பத்தி செய்யவும், நீண்ட இழை பருத்தி சாகுபடி ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 ஹெக்டேரில் செயல்படுத்தவும் உள்ள இத்திட்டம் 16 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

சீர்மிகு தென்னை சாகுபடி:

தென்னை சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்காக 17 இலட்சம் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். தென்னந்தோப்புகளில் சொட்டு நீர்ப் பாசன முறை நடப்பாண்டில் 20,000 ஹெக்டேரில் நிறுவப்படும் இத்திட்டம் 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

அண்ணா பண்ணை மேம்பாடு:

குடுமியான்மலைக்கு அருகே 10000 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டுவரும் அண்ணா பண்ணை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அண்ணா பன்முனை வேளாண் செயல்விளக்க விதைப் பண்ணையாக மேம்படுத்தப்படும்.தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும் இத்திட்டம் 21 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

கூட்டுப் பண்ணையத் திட்டம்:

ஒரு இலட்சத்து 10 ஆயிரம் விவசாயிகளை ஒருங்கிணைத்து 1,100 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து, வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஒரு குழுவிற்கு ரூபாய் 5 இலட்சம் வீதம் மூலதனநிதி வழங்கப்படும்.59 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

அதிக வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்:

வேளாண்மை, தோட்டக்கலை, பயிர்ச்சாகுபடியுடன், கறவை மாடுகள், ஆடுகள்,நாட்டுக் கோழிகள், தீவனப்பயிர் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் ஆகிய பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக நடப்பாண்டில் 13,300 விவசாயக் குடும்பங்கள் பயனடையும் வகையில் 59 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

மாநில அளவில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசு நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கான இலவச மின்சாரம் வழங்குவதற்கு 4508 கோடியே 23 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்பணிகளை எளிதாக்க அரை இலட்சம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்க மாநில அரசு நிதியில் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு வழங்க 6 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை:

கரும்பு விவசாயிகள் டன் ஒன்றுக்கு 2750 ரூபாய்க்கு குறையாமல் பெறுவதை உறுதி செய்யும் இத்திட்டத்திற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரும்பு உற்பத்திக்கான சிறப்புத் திட்டம்:

சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் உயர் மகசூல் விதைக் கரும்புகள் வழங்குதல், பரு சீவல் நாற்றுக்களின் மூலம் புதிய கரும்பு இரகங்களின் சாகுபடியை ஊக்குவித்தல், திசு வளர்ப்பு நாற்றுக்களை வழங்குதல் ஆகிய செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும். இத்திட்டத்திற்கு மாநில நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழப்பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க மாநில நிதியிலிருந்து 29 கோடியே 12 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத்திட்டத்திற்கு மாநில ஒன்றிய அரசு நிதியில் 95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த இரண்டு லட்சம் ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டத்திற்கு 2 கோடியே 18 இலட்சம் ரூபாய் மாநில, ஒன்றிய அரசு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலையில் முதன்மை மாவட்டங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஒன்றிய மாநில அரசு நிதியில் 12 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு 1ஆயிரத்து 979 கோடியே 11 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்புமையம் அமைக்க ஒன்றிய மாநில அரசு நிதியில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிக்கன நீர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் ஏற்படுத்த ஒன்றிய அரசு நிதியில் 982 கோடியே 48 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடலூரில் அரசு தோட்டக் கலை பூங்கா அமைக்க ஒரு கோடி ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து 140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்ய 23 கோடியே 29 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர்சேகரிப்புக் கட்டமைப்புகளை பராமரிக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மழை நீரை விளை நிலங்களிலேயே சேமிக்கும் பண்ணைக் குட்டைகளை அமைக்க மாநில அரசு நிதியில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்கிட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 உழவர் சந்தைகளின் கழிவுகளை உரமாக்க விற்பனைக் குழு நிதியிலிருந்து 2 கோடியே 75 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய உழவர் சந்தைகளை அமைக்க மாநில நிதியிலிருந்து 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவர் சந்தைகளில் விலை விவரங்களைத் திரையிடும் டிஜிட்டல் பலகைகளை அமைக்க விற்பனை வாரிய நிதியில் 2 கோடியே 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரத்து மிகுதியுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு அருகில் சேமிப்பு வசதியுடன் கூடிய விற்பனை நிலையம் அமைக்க விற்பனை வாரிய நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு 759 கோடியே 99 லட்சத்து 19ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நவீன குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க மாநில அரசு நிதியில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இல்லம் தேடி-பண்ணைக் காய்கறிகள்- மாநகராட்சிகளில் நடமாடும் காய் கனி அங்காடிகளை அமைக்க விற்பனை வாரிய நிதியிலிருந்து 60 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் மிளகிற்கான பதப்படுத்தும் மையம் அமைக்க விற்பனை வாரிய நிதியிலிருந்து 50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் எடப்பள்ளி கிராமத்தில் ‘ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம் அமைக்க மாநில அரசின் நிதியில் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உலர்களம் அமைக்க விற்பனை வாரிய நிதியிலிருந்து மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுமதி மூலம் ஏற்றம் காணும் திட்டத்திற்கு மாநில நிதியில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதன்முறையாக ஏற்றுமதியாளராகப் பதிவு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் 50 விழுக்காடு மானியம் அளிக்க 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் தளவாடியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கட்டுமான வசதிகள் ஏற்படுத்த மாநில அரசு நிதி 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்றம் தரும் முருங்கை ஏற்றுமதி- சிறப்பு ஏற்றுமதி மண்டலம் அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கொளத்தூர் பகுதியில் விளைபொருட்களுக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்குமான நவீன விற்பனை மையம் அமைக்க மாநில நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளைபொருளுக்கு உரிய விலை பெற மின்னணு ஏலம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான சிறப்பு மென்பொருள் மூலம் விவசாயிகளுக்கும் சந்தைகளுக்கும் இணைப்பை ஏற்படுத்த மாநில நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிற்கே உரிய சிறப்புப் பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெறும் திட்டத்திற்கு மாநில நிதியிலிருந்து 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வேளாண் ஆராய்ச்சியையும் வேளாண் கல்வியினையும் மேம்படுத்த 573 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலைக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கென 25 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் ஒரு தோட்டக்கலைக் கல்லூரியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜீனூரில் ஏற்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிக மகசூல் அளிக்கக்கூடிய பயிர் இரகங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த 57 இலட்சம் ரூபாய் ஒன்றிய மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொலையுணர்வுத் தொழில்நுட்பம் மூலம் முக்கியப் பயிர்கள் குறித்த தகவல்களை உருவாக்கி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக 72 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்க 2 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த 2327 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1738.81 கோடி ரூபாயும், பயிர்க் கடன் தள்ளுபடிக்கு 5000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது

கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கிவரும் வளங்குன்றா வேளாண்மைக்கான துறையை மேம்படுத்தி நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையமாக மாற்ற மூன்று கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மைப் பொறியியல் துறைக்கு 632 கோடியே 89 லட்சத்து 24ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மானாவாரிப் பயிர்களுக்கான ஆராய்ச்சியினை வலுப்படுத்த 50 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் சேமிப்புக் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தவும், ஏலக்கூடங்களை வலுப்படுத்தவும் ரூ.4.69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறைக்கு 6 ஆயிரத்து 247 கோடியே 63லட்சத்து 82ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரைத்துறைக்கு 7 கோடியே 40லட்சத்து 83ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு (நேரடி நெல் கொள்முதல் நிலையம்) 9ஆயிரத்து 471 கோடியே 98 லட்சத்து 26ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விதைச்சான்று மற்றும் அங்கக சான்றிதழ் துறைக்கு 47 கோடியே 77லட்சத்து 47ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்டு வளர்ச்சிக்காக மரவகை மல்பெரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு மானியம் வழங்க 75 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கான ஊறுகாய்ப் புல் தயாரிக்கும் அலகுகள் அமைக்க ஒரு கோடியே 17 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பசுந்தீவன வங்கிகளை ஏற்படுத்துதல், கால்நடை நலம், நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணை நிறுவுதல் ஆகியவற்றுக்கென 27 கோடியே 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்குத் தேவையான சிகிச்சை பணிகளை மேற்கொள்ள 14 கோடியே 28 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்க 1 கோடியே 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பண்ணைகள்,மீன்விற்பனை அங்காடிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 7 கோடியே 7 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மைத்துறைக்கு மொத்தம் 9 ஆயிரத்து 169 கோடியே 54 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு 603 கோடியே 19 லட்சத்து 10ஆயிரம் ஒதுக்கீடு செய்ய்ப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறைக்கு 1 ஆயிரத்து 243 கோடியே 66லட்சத்து 34ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு 394 கோடியே 55லட்சத்து 41ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறைக்கு 44கோடியே 37 லட்சத்து 11ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கால் நடை பராமரிப்புத்துறைக்கு 634 கோடியே 87 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

மீன்வளம்-மீனவர் நலத்துறைக்கு 35கோடியே 60 லட்சத்து 27ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 37 கோடியே 5லட்சத்து 16ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இடைக்கால நிதி நிலையறிக்கையில் மீன்வளத்திற்கான மூலதனச் செலவுகளுக்காக 580 கோடியே 97 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு 1 ஆயிரத்து 288 கோடியே 69 லட்சத்து 91ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சிக்காக 22 ஆயிரத்து 218 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பட்டு வளர்ச்சித் துறைக்கு 76 கோடியே 94 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வனத்துறை – வேளாண் காடுகள், மனித- விலங்கு மோதல் 632 கோடியே 39 லட்சத்து 67ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை - உழவர்ப் பாதுகாப்புத் திட்டம் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு(பயிர் சேதம்) 1 ஆயிரத்து 547 கோடியே 82 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை சார்ந்த துறைகளின் மூலதனம் சார்ந்த செலவுகளுக்காக 2 ஆயிரத்து 776 கோடியே 75 லட்சத்து 5ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021-22ஆம் ஆண்டில் வேளாண்மைக்கும், அதை சார்ந்த துறைகளுக்கும் மானியக் கோரிக்கைகளின் கீழ் 34 ஆயிரத்து 220 கோடியே 64 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் வருவாய் செலவினம் 31 ஆயிரத்து 443 கோடியே 89லட்சத்து 94ஆயிரம் ரூபாய் ஆகும். மூலதனச் செலவினங்களுக்கு 2 ஆயிரத்து 776 கோடியே 75 லட்சத்து 5ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதி நிலை அறிக்கையில் வேளாண்மைக்கும் அதைச் சர்ந்த துறைகளுக்கும் 11 ஆயிரத்து 982 கோடியே 71 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஒன்றிய மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் என பொதுவாகக் குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர எவ்வளவு ஒன்றிய அரசின் நிதியிலிருந்தும், மாநில அரசின் நிதியிலிருந்தும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா