கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தலைவர் கலைஞர் எட்டடி பாய்ந்தால், அவரின் மகன் ஸ்டாலின் பதினாறடி பாய்கிறார். இது புலிப் பாய்ச்சல், ஆடுகளை அரண்டோட வைக்கும் பாய்ச்சல்.

மக்களுக்காக, மக்களின் நலனுக்காக, மக்கள் நலத் திட்டங்களுக்காக, அத்திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடைவதற்காக, ஓய்வு ஒழிச்சலின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார் ‘திராவிட மாடல்’ முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

மக்கள் செல்வாக்குக் கூடுகிறது, ஒன்றியத்தின் மாநிலங்கள், உலக நாடுகள் வரையும் புகழின் உச்சிக்கே சென்று விட்டார் அவர். அதனால் ஒரே நாடாகவும், ஒரே மொழியாகவும் ஆக்கி, இந்நாட்டைப் பார்ப்பன நாடாக மாற்றப் பார்க்கும் காவிகளுக்குப் பெரும் சவாலாக, சீனப் பெருஞ்சுவர் போலத் தடையாக எழுந்து நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

நேர்மையான அரசியலால் இங்கு காலூன்ற முடியாத ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க காவிகள், மாநிலத்தில் அமைதியற்றச் சூழலை உருவாக்க, மதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

உண்மைகளைப் புறந்தள்ளி பொய்களையும், திரிபு பேச்சுகளையும் பேசி வன்முறைக்கு வழிகோலுவதாகத் தெரிகிறது.

“உனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை, உனது சமூகத்திற்குக் கொடுக்கப்பட்ட வேலையை, உனது ஜாதிக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய் என்பதுதான் தர்மம், மனுதர்மம்” என்று அண்ணாமலை பேசுகின்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. இதுதான் ராமராஜ்யம்.

மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டச் செய்தியைச் சொன்னால், அதைத் திரித்துப் பேசிப் பதற்றத்தை உருவாக்கி வருவது நல்லதற்கல்ல.

சாதி, மத அரசியல் என்றுமே மக்களைப் பிளவுபடுத்தும். அப்படிப்பட்ட அரசியல் அமைப்புகளை மக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அடுத்து வரவிருக்கும் ஒன்றியப் பொதுத் தேர்தலில் பா.ஜ.கவை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் மக்கள்.

மக்களுக்குத் தோள் கொடுக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் கருத்தொற்றுமையில் ஒன்றிணைந்து, மாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு, ஓரணியில் நின்று பா.ஜ.கவை வீழ்த்த முன்வரவேண்டும், காலம் தாழ்த்தாமல்.

தமிழ்நாட்டில் ‘சூரிய ‘ வெப்பத்தால் ‘தாமரை’ வாடும், வதங்கும்.

- கருஞ்சட்டைத் தமிழர்