tamil_desam_aug12

தமிழர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். தமிழ் மொழியும் தமிழ் இனமும் தமிழ்நாடும் அடிமைப்படுத்தப் பட்டுள்ளன. வடமொழிக்கும், இந்திக்கும், ஆங்கிலத்துக்கும் பிற அயல்மொழிகளுக்கும் நாம் அடிமைகள். தில்லிக்காரனுக்கும் மார்வாரி குசராத்தி சேட்டுக்கும் இந்திய மற்றும் பிற பன்னாட்டுப் பெருங்குழும அதிபர்களுக்கும் நாம் அடிமைகள். வர்ணசாதி ஒடுக்குமுறைக்கும், சாதிய வன்கொடுமைகளுக்கும் வர்க்கச் சுரண்டலுக்கும் நாம் அடிமைகள். பார்ப்பனிய இந்துத்துவப் பாரதப் பண்பாட்டுக்கும், மேற்கத்திய நுகர்வு வெறிப் பண்பாட்டுக்கும் நாம் அடிமைகள். இந்திய வல்லாதிக்கத்திற்கு நாம் அடிமைகள்.

அனைத்து வகையிலும் அடிமைகள் நாம். ஆகவே அனைத்து வகையிலும் நமக்கு வேண்டியது விடுதலை. அடிமை தன்னை அடிமை என்று உணரும் போதுதான் விடுதலை உணர்வு பிறக்கிறது. அடிமைத் தமிழனும் தமிழச்சியும் மொத்தத்தில் தம்மை அடிமைகள் என்றே உணராதவர்களாய் இருக்கிறார்கள். பார்க்கப் போனால், அடிமை மோகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தமிழனைத் தன்னிலை மறக்கச் செய்யும் போதைகள் பற்பல. சாதி, சமய வெறி, திரைப்படம் என்று பலவும் இருப்பினும், அண்மைக் காலத்தில் பரவிப் பெருகி வரும் மதுபோதை ஒரு பேராபத்தாக உருவெடுத்துள்ளது. அரசே கடை திறந்து இந்தப் பெருங்கொடுமையை வளர்த்து வருகிறது. தமிழ்நாடு அரசு விற்பனைக் குழுமம் என்பதன் ஆங்கிலச் சுருக்கமாகிய டாஸ்மாக் (TASMAC) மது வணிகத்தின் மறுபெயர் ஆகிவிட்டது. மது விற்பனை வழி வரி வருவாய் வெகு விரைவாக வளர்ந்து வருகிறது. சென்ற நிதியாண்டிலேயே 18,000 கோடியைத் தொட்டுவிட்ட இந்த வருவாய் இந்த ஆண்டு ஒரே மாதத்தில் 2000 கோடியைத் தொட்டு விட்டதாகச் செய்திகள் சொல்கின்றன. வருமானத்துக்காக எதையும் செய்யலாம் என்பது அறமாகாது. அரசே இப்படிச் செய்வதால் குடிமக்களிடம் ஒழுக்கம் பேசும் அறத்தகுதியை இழந்து விடுகிறது.

மேலை நாடுகளில் குடிப்பழக்கம் குறைந்து வருவதாகச் சொல்கிறார்கள், இந்தியாவில் குசராத் மாநிலத்தில் மட்டும்தான் மதுவிலக்கு செயல்பட்டு வருகிறது. அம்மக்களின் பண்பாட்டில் அது கலந்து போய் இருக்கலாம். காந்தியின் குசராத் என்பது கூட ஒரு காரணமாய் இருக்கலாம். (மோடி காரணமில்லை என்பது மட்டும் உறுதி). காந்தியின் இந்தியா என்று சொல்லக் காங்கிரசுக்காரர்களுக்கே விருப்பமில்லை போலும். இந்தியா எங்கும் மதுவின் ஆட்சி உண்டென்றாலும், தமிழ்நாட்டில்தான் அரசே மது விற்கிறது. இங்குதான் இந்தக் கொடுமை மிக விரிவாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. தமிழக மக்களில் ஒரு கோடிப் பேர் என்னுமளவுக்கு குடிப்பழக்க முடையவர்கள் என்பதும் இவர்களில் பலர் மீளமுடியாக் குடி அடிமைகள் ஆகிவிட்டனர் என்பதும் அதிர்ச்சிக்குரிய செய்திகள். பெண்களிடமும் சிறுவர்களிடமும் கூட குடிப் பழக்கம் தொற்றி வருகிறது.

வரி வருவாய்க்காக அரசே மக்களிடம் வளர்த்து வரும் குடிப்பழக்கத்தால் ஏற்படும் நோய்களை யும் அவற்றுக்கான மருத்துவச் செலவையும் கணக்கிட்டால் டாஸ்மாக் பொருளியலின் அபத்தம் விளங்கும். மதுவென்னும் நஞ்சு கல்லீரலையும் பணப்பையையும் அரிப்பதோடு பண்பையும் ஒழுக்கத்தையும் சிதைத்தும் விடுகிறது. அதுவே சொந்த வாழ்விலும் அரசியல் வாழ்விலும் கொடுங்குற்றச் செயல்களின் எரிபொருள்.

தனியருவரின் உடலுக்கும் உள்ளத்துக்கும் தீங்காகி, குடியையும் கெடுப்பது குடி என்பது மட்டுமல்ல. அதனால் ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் ஏற்படும் கேடு பெரிது. சமூக நலனில் அக்கறை கொண்ட எவரும் குடியை ஏற்கமாட்டார். மக்களை அடிமைப்படுத்தும் முயற்சியில் போதை ஒரு கருவியாகப் பயன்பட்டதை அடிமை நாடுகளின் வரலாறு காட்டும். இந்தியாவிலும் சீனத்திலும் அபினிப் போர்கள் மூண்டது இதனால்தான். இந்தியத் தேசிய இயக்கம் மதுவிலக்கை ஒரு கொள்கையாகக் கொண்டு போராடியதும் இதனால்தான். தமிழ்த் தேசிய ஆற்றல்கள் இந்த வரலாற்றுப் பின்னணியைக் கருதிப் பார்த்தால் மதுவிலிருந்து விடுதலைக்காகப் போராட வேண்டிய தேவை புலப்படும்.

முழு மதுவிலக்கு என்ற கோரிக்கைக்கான போராட்டம் அரசிடம் அதற்காகச் சட்டமியற்ற கோரும் போராட்டம் மட்டுமன்று. அது நம் மக்களை ஒரு பண்பாட்டுச் சீர்கேட்டிலிருந்து மீட்பதற்கான போராட்டமும் ஆகும். மக்கள் ஆற்றலைத் திரட்டி மது அரக்கனை விரட்டி யடிக்கும் முயற்சியும் ஆகும்.

மதுவிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை இரு முனைகளிலிருந்து நடத்த வேண்டும். அரசு தன் மதுக்கொள்கையை மாற்றிக் கொள்ளும் படி செய்வதற்காகப் போராடும் போதே, அந்தந்தப் பகுதியிலிருந்தும் மதுக் கடைகளை விரட்டுவதற்காகவும் போராட வேண்டும். தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இத்தகைய போராட்டங்கள் வெற்றி பெற்றிருப்பது நமக்கு ஊக்கமளிக்கிறது. நம் பகையிலக்கு குடி பரப்பிக் குடி கெடுக்கும் அரசுதானே தவிர குடிப்பவர்கள் அல்லர். அவர்களை நோயாளி களாகக் கருதி குடிநோயிலிருந்து மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரசே குடிநோய் மருத்துவமனைகளை நாடெங்கும் நிறுவி இலவச சிகிச்சை தர வேண்டும் என்பது நம் கோரிக்கை. சாராயம் விற்பவர்களைக் காட்டிலும் குடிப்பவர் களையே குற்றவாளிகளாகக் கருதி வேட்டை யாடியது கடந்த கால மதுவிலக்குச் சட்டங் களின் பெருங்குறை.

மதுவிலக்கு வந்தால் கள்ளச் சாராயம் பெருகி விடும். காவல்துறையின் இலஞ்ச ஊழலும் பெருகிவிடும் என்ற அச்சம் நியாயமானதே. இதைத் தவிர்ப்பதற்கு மதுவிலக்கை ஒரு மக்கள் பண்பாடாக வளர்த்தெடுக்க வேண்டும். மக்களிடையே இது தொடர்பான விழிப் புணர்வை வளர்த்திட இயக்கம் நடத்த வேண்டும். மாணவர்களுக்கானக் கல்வித் திட்டத்தில் மது விலக்கின் தேவையும் இடம்பெற வேண்டும்.

எப்படிப் பார்த்தாலும் மதுவிலக்கு ஆட்சி யின் தீய பக்க விளைவுகளைக் காட்டி மதுவின் ஆட்சியை நியாயப்படுத்துவதற்கில்லை.

மதுவிலிருந்து விடுதலை வேண்டும் என்பது பற்றார்ந்த விருப்ப முழக்கமாக மட்டும் இருப்பதால் பயனில்லை. அதனை ஒரு போராட்ட முழக்கமாக மாற்ற வேண்டும். மக்கள் நலனில் நேர்மையான அக்கறை கொண்ட அனைத்து ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து, இதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அடை யாளப் போராட்டமாகத் தொடங்கினாலும் வலுமிக்க வெகுமக்கள் போராட்டமாக இதனை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

மனித விடுதலைக்கும் இன விடுதலைக்கு மான போராட்டத்தின் ஓர் இன்றியமையாக் கூறு மதுவிலிருந்து விடுதலைக்கான போராட்டம். இந்தப் போராட்டத்திற்கு உறுதியோடு உங்களை ஒப்புக் கொடுக்க அழைக்கிறோம்.

Pin It

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. தமிழக வரலாற்றில் ஒப்பதும் மிக்கதுமற்ற தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு போராட்டம் இது. ஒரு பகுதியைச் சேர்ந்த வெகுமக்கள் அனைவரும், குறிப்பாகப் பெண்கள் இவ்வளவு நீண்ட காலம் உறுதியுடனும் ஒழுங்குடனும் ஓர் அறப்போராட்டத்தை நடத்தி இருப்பது இதுவே முதல்முறை எனலாம். போராட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனை என்றால் வலிமையும் வஞ்சகமும் நிறைந்த இந்திய வல்லாதிக்க அரசும், இறுதியாகப் பார்த்தால் அதன் கைக்கருவியாகச் செயல்படும் தமிழக அரசும் தாங்கள் நினைத்ததை உடனே நிறைவேற்றவிடாமல் இதுவரைக்கும் கூட தடுத்து வைத் திருப்பதைச் சொல்லலாம்.

இந்த சாதனைக்குரிய பெருமை முதலாவதாக, இடிந்தகரை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்களை, குறிப்பாகப் பெண்களைச் சாரும். இரண்டாவதாக, தோழர் சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தையும் போராட்டக் குழுவையும் சாரும். மூன்றாவதாக, போராட்டத்திற்கு வலுவாகத் துணை நின்ற அரசியல் குழு, அறிவியலர் குழு போன்றவற்றைச் சாரும். நான்காவதாக, தமிழக அளவில் கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இயக்கம் நடத்தி வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பையும், இக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகளையும், இதில் இடம்பெறாமலும் கூட கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இயங்கி வரும் மற்றவர்களையும் சாரும்.

வெற்றிக் கணக்கு ஒருபுறமிருக்க, கூடங்குளம் அணுஉலைத் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை. அதனை இயங்கச் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றும் வருகின்றன என்ற அளவில் இடிந்தகரைப் போராட்டம் இன்னும் தன் குறிக்கோளை அடைந்துவிடவில்லை என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது. அது மட்டுமன்று. அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் கூடங்குளத் தோடு முடிந்துவிடக் கூடியதன்று. ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் கல்பாக்கம் அணுஉலையை இழுத்து மூடுவதும், நாட்டில் புதிய அணு உலை ஏதும் தொடங்க விடாமல் தடுப்பதும் அணுஉலை எதிர்ப்பின் குறிக்கோள்களாய் இருக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு தன் அணு விசை ஆதரவுக் கொள்கையைக் கைவிடும்படி செய்தாக வேண்டும்.

கூடங்குளம் போராட்டத்தை 'இடிந்தகரைக் குடியரசின்' எல்லை தாண்டி தமிழகம் தழுவிய மக்கள் போராட்டமாக விரிவுபடுத்த வேண்டும் என்ற விருப்பம் நம் அனைவர்க்கும் உள்ளது. தாங்கள் மட்டுமே தனித்து நின்று போராடி கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக நிறுத்திவிட முடியாது என்பதை இடிந்தகரை மக்கள் நன்கு அறிவார்கள். நாமும் அறிவோம்.

இவ்வாறு விரிவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. சென்னையில் 2012 பிப்ரவரி 7ஆம் நாள் நடைபெற்ற அணு உலை எதிர்ப்பு மாநாடு, இடிந்தகரை முற்றுகையிடப் பட்டபோது நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டம், தமிழகமெங்கும் இடிந்தகரைக்கு ஆதரவாக நடந் துள்ள பல்வேறு நிகழ்வுகள்... இத்தனையும் நன்முயற்சிகளே என்பதில் அய்யமில்லை. தமிழகத்தில் மின்வெட்டைச் சாக்கிட்டு கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக நடைபெற்ற பரப்புரை தமிழக மக்களிடம் பெருமளவு எடுபட்டது என்பதே மெய்! இந்தத் தப்பெண்ணத்திற்கு எதிராக எதிர்நீச்சல் இடுவது கடினமாய் இருந்த போதிலும் நாம் நமது பணியை விடாப்படியாகச் செய்தோம். நெய்வேலி மின்சாரம் அனைத்தும் தமிழகத்திற்கே! என்ற முழக்கம் நம் பரப்புரைக்கு ஓரளவு துணை புரிந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், தமிழக அளவில் அணு உலை எதிர்ப்பு இயக்கம் போதிய அளவு வலுப்பெறாமலே இருந்து வருகிறது. இதற்கு அமைப்பு சார்ந்த, உத்தி சார்ந்த காரணங்கள் இருக்கலாம். ஆனால், அடிப்படைக் காரணங்களை வேறிடத்தில்தான் தேட வேண்டியிருக்கும்.

அணு உலை எதிர்ப்பாளர்கள் தொடுத்து வரும் வாதங்கள் அனைத்தும் சரியானவை. எவ்வளவுதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும் அணு உலைகள் ஆபத்தானவையே. அணு உலைகளில் விபத்து நேரிட்டால் செர்நோபில், மூன்று மைல் தீவு போல் கணக்கிலடங்காத பேரழிவு நேரிடும். விபத்தே இல்லையென்றாலும் அணு உலைகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனித உயிர்களுக்கும் பிற உயிர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பெருங்கேடு செய்யக் கூடியது. அணு உலைக் கழிவுகளுக்குத் தீங்கில்லாத் தீர்வு காண அறிவியல் இன்னும் வழி காணவில்லை. ஆபத்தில்லாமல் மின்னாக்கம் செய்திட எத்தனையோ வழிகள் இருக்க அணு உலை எனும் ஆபத்தை வலியப் போய் விலைக்கு வாங்க வேண்டாம். இவையும் இவை போன்ற காரணங்களும் உலகெங்கும் அணு உலை எதிர்ப்பாளர்களால் மறுப்புக்கு இடமின்றி வலுவாக நிறுவப்பட்டுள்ளன.

இவை தவிர, இந்தியாவுக்கென்று சொல்லப்படும் தனிக் காரணங்கள், கூடங்குளத்துக்கென்று குறிப்பிட்டுச் சொல்லப்படும் நிலவியல், கடலியல், பேரிடர் மேலாண்மை தொடர்பான காரணங்கள் அனைத்தும் சரியே!

ஆனால், அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை விரிவும் செறிவும் ஆக்க இந்தக் காரணங்கள் போதமாட்டா. இவற்றை செய்நுட்பக் காரணங்கள் என்று சுருக்கிக் காட்டி மறுப்பதற்கான செய்நுட்ப வாதங்களை அணு விசை ஆதரவாளர்கள் முன்வைப்பார்கள். இந்தக் கருத்துப் போராட்டம் செய்நுட்பங்கள் தொடர்பான முடிவற்ற விவாதமாக நீண்டு செல்லும். அணு உலை ஆபத்துக்கு நேரடியாக முகங்கொடுக்க வேண்டிய இடிந்தகரை, செய்தாப்பூர் போன்ற பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் இந்த செய்நுட்ப விவாதம் வெகு மக்களைப் பெரிதாக ஈர்க்கும் வாய்ப்பு குறைவே.

அணு உலைகளின் ஆபத்து குறித்து நாம் முன்வைக்கிற செய்திகள் இந்திய அரசுக்கோ தமிழக அரசுக்கோ அணு உலையை ஆதரிக்கும் மற்றவர்களுக்கோ தெரியாதவை அல்ல. பிறகு அவர்களிடம் ஏன் இந்தப் பிடிவாதம்? இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன்சிங் தெளிவாகச் சொல்கிறார்: "தொழில் வளர்ச்சிக்கு அணு உலைகள் இன்றியமையாதவை." அவர் சொல்லும் தொழில் வளர்ச்சி என்பதை மனத்தில் பதித்துக் கொண்டு மேலே படியுங்கள்.

இந்தியாவெங்கும் ஏராளமான ஆலைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. மேலும் பல ஆலைகள் நலிவுற்றுத் தடுமாறிக் கொண்டுள்ளன. அவற்றுக்குச் சாவு நாள் இன்னும் வரவில்லை. ஒரு காலத்தில் துடிப்புடன் இயங்கி வந்த தொழிற்பேட்டைகள் பலவும் இன்று தூங்கி வழிகின்றன.

இது நாணயத்தின் ஒரு பக்கம்தான். நாட்டில் பன்னாட்டுக் குழுமங்களின் முதலீட்டுப் படையெடுப்பு நடந்த வண்ணம் உள்ளது. ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன. நாடெங்கும் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

வனப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் காலங் காலமாய் வாழ்ந்து வந்த மக்களை வெளியேற்றி விட்டு சுரங்கம் வெட்டிக் கனிவளங்களைத் தோண்டி எடுக்கும் முயற்சியில் பன்னாட்டுக் குழுமங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் இந்தியப் பெருங் குழுமங்களும் அடக்கம். இதைத்தான் மன்மோகன்சிங் தொழில் வளர்ச்சி என்று மங்கலப் பெயரிட்டு அழைக்கிறார். இந்தத் தொழில் வளர்ச்சியின் கொடுமுரணை விளங்க வைக்கும் படியான சில போக்குகளை நாம் குறிப்பிடலாம்.

இந்தியாவிலிருந்து தன்னியக்க ஊர்திகளின் (Automobiles) ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. மறுபுறம் எளிய மிதிவண்டிகளும் விளை யாட்டுப் பொம்மைகளும் கூட சீனத்திலிருந்தும் பிற நாடுகளி லிருந்தும் இறக்குமதி செய்யப் படுகின்றன. மிதிவண்டித் தொழிற் சாலைகள் மூடப்படுகின்றன அல்லது நலிந்து மெலிந்து கிடக் கின்றன. மகிழுந்துத் தொழிற் சாலைகள், ஃபோர்டு, ஹ§ண்டாய் போன்றவை வளர்ந்து வருகின்றன. இங்கேயே கூட அதிகமானவர் களுக்கு வேலைவாய்ப்பு தரக் கூடிய பழைய தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் போன்றவை மூடப்பட்டு விட்டன.

வறுமை பெருகி வாங்குந் திறன் குறுகி சந்தை அருகிவிட்ட நிலையில் இந்த நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது பெரும்பாலும் மேட்டுக்குடியினரையும் அயல் நாட்டவரையுமே இலக்காய்க் கொண்டுள்ளது. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் இவற்றின் உடன்பிறந்த ஊழல் மயம் என்ற பகைப்புலத்தில் தொழில் வளர்ச்சி என்பது மக்களை ஓட்டாண்டிகளாக்கவே பயன்படும். வளர்ச்சி என்னும் இந்த மாய வித்தை உழவையும் விட்டுவைக்க வில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக மானுடத்தின் வயிற்றுக்குச் சோறிடும் வேளாண்மையை விரைந்து பணம் சுரக்கும் ஊற்றாக்கி நிலவளத்தைக் கொள்ளையிட்டு உழவர்களைக் கொத்துக் கொத்தாய்த் தற்கொலைக்குத் தள்ளி விட்டது தான் மன்மோகனர் போற்றிடும் தொழில் வளர்ச்சி.

இன்றைய உலக முதலாளியத்தின் வளர்ச்சிக் கொள்கை இதுவே. இந்த வளர்ச்சிக் கொள்கையின் கொடிய விளைவுகளை உலகமெங்கும் காணலாம். எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட பெருமளவிலான பட்டினிச் சாவுகள் முதன்மையாக இந்த வல்லாதிக்க வளர்ச்சிக் கொள்கையின் விளைவே ஆகும். நிலம், காற்று, நீர், வானம், வெளி அனைத்தையும் கைப்பற்றி ஆதாய வேட்டைக் களங்களாக மாற்றும் உலக முதலாளியத்தின் இலாப வெறிக் கொள்கை உலகின் வருங் காலத்தையே ஆபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த ஆபத்தின் ஒரு கூறுதான் அணு உலை ஆபத்து!

முதலாளியத்தின் இலாப வெறிக் கொள்கையை எதிர்த்து முறியடிக்காமல், அதன் அணு விசைக் கொள்கையை மட்டும் தனித்தெடுத்து நிலையாக தடுத்துக் கொண்டிருத்தல் அரிதே!

இந்திய அரசின் அணுவிசைக் கொள்கை என்பது மக்களின் உயிருக்கும் வாழ்வுரிமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள அதன் பொருளியல் வளர்ச்சிக் கொள்கையின் ஒருமுனைதான் என்பதை மறந்து விடக் கூடாது. இந்திய ஆளும் வர்க்கம் பல வகையிலும் இரட்டைத் தன்மை உடையது. அது ஒருபுறம் உலக வல்லாதிக்கங்களுக்கு சேவகம் செய்யக் கூடியது. மறுபுறம் தனக்குட்பட்ட தேசிய இனங்களை ஒடுக்கும் வல்லாதிக்கமாகவும், தன்னைச் சுற்றி இருக்கும் தேசங்களை அச்சுறுத்தி அடக்கியாள முயலும் விரிவாதிக்கமாகவும் இருப்பது. இந்தத் தன்மை அதன் பொருளியல், அரசியல் கொள்கையில் வெளிப் படுவது போலவே, படையியல் கொள்கையிலும் வெளிப்படுகிறது.

இந்திய அரசின் அணு உலை நாட்டம் தெற்காசியாவின் மின் சந்தையில் ஆதிக்கம் பெறும் நோக்கமுடையது. இங்கிருந்து கடல் வழிக் கம்பிவடம் அமைத்து இலங்கைக்கு மின்சாரம் அனுப்பும் திட்டம் இத்தகையது. கூடங்குளம் தமிழர்களின் கொலைக்களம் என்பதை இந்தப் பொருளிலும் விளங்கிக் கொள்ளலாம்.

இந்திய அரசின் பொருளியல், அரசியல் கொள்கையின் நீட்சிதான் அதன் படையியல் கொள்கை என்பதைப் புரிந்து கொள்வது எளிது. இந்திய அரசின் படையியல் கொள்கையில் அணு உலைகள் வகிக்கும் பங்கை அச்சத்துடனும் எச்சரிக்கையுடனும் பார்த்தாக வேண்டும். அணு மின்சாரத்தையும் அணு ஆயுதத்தையும் இருவேறாகப் பிரித்து வைக்க முடியாது என்பதைப் பண்டித ஜவஹர்லால் நேருவே அரசமைப்புப் பேரவையில் ஒப்புக்கொண்டார். ஆனால் அவரே 1957இல் தாராப்பூர் அணு உலையை நாட்டுக்குப் படையலாக்கினார். இந்திரா காந்தி தலைமையமைச்சராக இருந்த போது இந்தியா முதல் அணு வெடிச் சோதனையை நிகழ்த்தியது. இது முழுக்க முழுக்க அமைதி நோக்கங்களுக்காகவே என்று அறிவிக்கப்பட்டது. அதே இந்திராகாந்திதான் பிற்காலத்தில் அணுவாற்றலின் அமைதிவழிப் பயன்பாடு என்பதை ஆயுதப் பயன்பாடாக மாற்றினார். இதில் காங்கிரசுக்கும் இந்துத்துவ பாரதிய சனதாக் கட்சிக்கும் வேறுபாடு ஏதுமில்லை. வாஜ்பேயி தலைமையமைச்சராக இருந்த போது பொக்ரானில் புத்தர் சிரித்தார் என்ற குறியீட்டுப் பெயருடன் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இப்போது இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே அணுகுண்டு வைத்துள்ளன.

அணுவிசை எதிர்ப்பாளர்கள் அனைவரும் அணு ஆயுதங் களையும் வன்மையாக எதிர்க்கிறார்கள். அதேபோது அணுவிசை ஆதரவாளர்கள் பொதுவாக அணு ஆயுதங்களை ஆதரிப்பவர்களாக உள்ளனர். கூடங்குளம் அணு உலையை நியாயப்படுத்தும் கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான குருமூர்த்தி "நமக்கு அணு மின்சாரமும் வேண்டும்; அணு ஆயுதமும் வேண்டும்'' என்று எழுதியதை மறந்துவிட முடியாது.

அணு ஆயுதங்கள் இயல்பான போர்க் கருவிகள் அல்ல, பேரழிவுக் கருவிகள் என்பதால், அவற்றை யார் வைத்திருப்பினும் அது மனிதகுலத்தின் அமைதி வாழ்வுக்கு எதிரானது. மற்றவகை ஆயுதங்களைப் போல் போரியல் இலக்கை மட்டும் தாக்கி அழிக்கும் தன்மை அணு ஆயுதங்களுக்குக் கிடையாது. அணுகுண்டுக்கு சமயச்சார்போ இனச்சார்போ நிறச்சார்போ கிடையாது. மிகப் பெரும்பாலும் அப்பாவிப் பொதுமக்களை அழிக்கத்தான் அதனால் முடியும். 1945இல் சப்பானிய நகரங்கள் ஹிரோசிமாவிலும் நாகசாகியிலும் இப்படித்தான் நடந்தது. யார் என்ன முயன்றாலும் வேறெப்படி நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை. உலகில் மீண்டும் ஓர் அணுகுண்டுத் தாக்குதல் நடந்தால் இரோசிமா - நாகசாகியைப் போல் பன்மடங்கு பேரழிவு நிகழும் என்பதில் அய்யமில்லை.

எனவே அணு ஆயுதங்கள் எந்த வகையிலும் போர் நெறிகளுக்கு உட்பட்டவை அல்ல. தற்காப்பின் பெயரால் அவற்றை நியாயப் படுத்த வழியே இல்லை.

சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் அமெரிக்க வல்லாதிக்கத்திற்குப் போட்டியாக அணு ஆயுதங்களைக் குவித்து வைத்ததை நாமறிவோம். அவற்றால் அந்நாட்டின் வீழ்ச்சியைத் தடுக்க முடிய வில்லை என்பது மட்டுமல்ல, ஒரு வகையில் பார்த்தால் அணு ஆயுதப் பொருளியல் அந்நாட்டின் சிதைவுக்கு ஒரு காரணமாகவே அமைந்துவிட்டது எனலாம்.

இந்தியாவில் அணு விசையை மட்டுமின்றி அணு ஆயுதத்தையும் நியாயப்படுத்துகிற அணியில் இடதுசாரிகளும் உண்டு என்பதை நாமறிவோம். பொக்ரான் அணுவெடிச் சோதனை நடைபெற்ற செய்தி வந்த போது தமிழகச் சட்டப் பேரவையில் துள்ளியெழுந்து அதைப் பாராட்டியவர் ஒரு மார்க்சியத் தலைவரே. இந்திய இறையாண்மையின் பெயரால் அணுகுண்டுக்கு ஆதரவு தெரிவிக்கிற புரட்சிகர இடதுசாரி களும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். அணு ஆயுதங்கள் தொடர்பான இந்தக் குறைப்பார்வை இவர்களிடமிருந்து தொடங்குவதன்று.

இரண்டாம் உலகப் போர் தொடங்கவிருந்த நிலையில் 1938 திசம்பரில் இட்லரின் செர்மனியில் யுரேனியம் அணுவைப் பிளப்பதில் அந்நாட்டு அறிவியலர் வெற்றி கண்டனர். செர்மானிய நாஜிகளால் யூதர்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் ஏற்பட்டிருந்த ஆபத்தைக் கண்ட அறிவியலர் சிலர் செர்மனி அணுகுண்டு தயாரித்துவிடும் என்று அச்சமுற்றார்கள். எனவே அமெரிக்க வல்லரசு உடனடியாக அணுகுண்டு செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ப்ரேங்கிளின் ரூஸ்வெல்ட்டுக்கு அவர்கள் கடிதம் எழுதினார்கள். இப்படி எழுதியவர்களில் முதன்மையானவர் செர்மானிய யூதரும் உலகப் புகழ்பெற்ற அறிவியலருமாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.

அமெரிக்கா செய்த அணுகுண்டுகள் ஹிரோசிமா நாகசாகியில் வீசப்பட்டுப் பேரழிவு ஏற்படுத்தியதைக் கண்ட ஐன்ஸ்டின் அதிர்ச்சியுற்றார். அணுகுண்டு செய்யத் தூண்டி அமெரிக்க அதிபருக்கு எழுதிய மடலில் ஒப்பமிட்டது என் வாழ்க்கையில் நான் செய்த பெருந்தவறு என்று இறப்பதற்கு ஐந்து மாதம் முன்பு 1954 நவம்பரில் அவர் வருத்தப்பட்டார்.

அணு ஆயுதங்களற்ற உலகைப் படைக்க வேண்டும் என்ற அமைதி நோக்கத்தை வலியுறுத்தி அறிவியலர் ஐன்ஸ்டின், பேரறிஞர் பெர்ட்ரான் ரசல் உள்ளிட்ட உலகச் சான்றோர் வெளியிட்ட கூட்டறிக்கை புகழ் பெற்றதே தவிர பயன்தராமல் போய் விட்டது. ஏனென்றால் ஸ்டாலின் தலைமையி லான சோவியத்து அரசே அந்தக் கூட்டு வேண்டுகோளை ஏற்க வில்லை. இவ்வளவு காலம் கழித்துப் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கும் பொழுது சோவியத் ஒன்றியம், செஞ்சீனம் போன்ற அரசுகள் அணுகுண்டு செய்ய மறுத்து அமைதி இயக்கத்தில் ஊன்றி நின்றிருந்தால் அந்நாடுகள் பொருளியல் வளம் பெற்றிருப்ப தோடு, அணு வல்லாதிக்கங்கள் உலக மக்களிடம் தனிமைப்பட்டு, அவற்றின் அணுகுண்டுகள் வெறும் அட்டைப் புலிகளாகவே இருந்து விட்டிருக்கும் என்பதை உணர முடிகிறது.

அணுகுண்டுக்கு அணுகுண்டு மாற்றாகாது என்பதை இன்றுங் கூட வட கொரியா, ஈரான் போன்ற அரசுகள் உணராமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

ஒரு பேட்டை 'ரவுடி' இடுப்பில் கத்தியைச் செருகிக் கொண்டு அனைவரையும் மிரட்டிக் கொண்டிருப்பது போல் ஒரு வல்லரசுக்கு உலக நாடுகளை அச்சுறுத்த அணுகுண்டு வைத் திருப்பது தேவையாக உள்ளது. வீசுவதற்கென்று இல்லாவிட்டாலும் வலிமை காட்டுவதற்காவது அது தேவைப்படுகிறது. பெரிய வல்லரசுக்கு ஆயிரம் அணு குண்டுகள் என்றால் இந்தியா போன்ற குட்டி வல்லரசுக்கு நூறு அணுகுண்டுகளாவது தேவையல்லவா? இந்தியா நல்லரசாக இருப்பதைக் காட்டிலும் வல்லரசாக வளர்வதிலேயே குறியாக இருக்கும். அப்துல் கலாம் போன்றவர்கள் அணுகுண்டு வேண்டும் என்பது இதற்காகவே. இந்தியாவின் அணு விசைத் திட்டத்தையும் அணு ஆயுதத் திட்டத்தையும் ஆதரிப்பதுதான் தேசப்பற்று என்ற எண்ணத்தை ஆளும் வர்க்கம் திட்ட மிட்டு வளர்க்கிறது.

ஆக, அணு ஆற்றலுக்கு எதிர்ப்பு என்பதை அணு ஆயுதத்துக்கு எதிர்ப்பு என்பதாகச் செறிவூட்ட வேண்டும். அணு விசை, அதற்கான தேவையை உண்டாக்கும் தொழில் வளர்ச்சிக் கொள்கை, இவ்வகை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் கொள்கை, இந்தப் பொருளியலின் மேலெழும் அரசியல் கொள்கை, இந்த அரசியலுக்குப் பொருத்தமான படையியல் கொள்கை, இந்தப் படையியலின் ஒரு கூறாக அமைந்திடும் அணு ஆயுதக் கொள்கை... இவை யாவும் மக்களுக்கு எதிரானவை. அதாவது தேசிய இனங்களுக்கும், பழங்குடிகளுக்கும், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை வகுப்புகளுக்கும், தொழிலாளர்கள் உழவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், அனைத்து வகை உழைக்கும் மக்களுக்கும் எதிரானவை. இந்த வல்லாதிக்கக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில்தான் இந்தப் பல்வேறு மக்கள் பிரிவுகளையும் அணிதிரட்ட இயலும்.

அணு உலைகளுக்கு எதிரான போராட்டக் கருத்தியலை இந்தத் திசையில் விரிவாக்கவும் ஆழப்படுத்தவும் வேண்டும். அணு ஆற்றலுக்கு எதிரான இயக்கத்தை அணு வல்லாதிக்கத்திற்கு எதிரான இயக்கமாக மாற்றுவதற்குப் பொறுமை யாகவும் உறுதியாகவும் உழைத்திடல் வேண்டும். இது ஒரு நீண்ட நெடிய போராட்டம். ஏனென்றால் வெற்றிக்குக் குறுக்குவழி ஏதுமில்லை.

இந்திய அணு வல்லாதிக்கத்திற்கு எதிரான நீண்ட நெடிய போராட்டப் பயணத்தை ஒளிச்சுடர் தந்து தொடங்கி வைத்தவர்கள் என்ற பெருமை இடிந்தகரை மக்களுக்கு என்றென்றும் உண்டு.

Pin It

வீரத்தமிழன் முத்துக்குமார் ஈழத் தமிழர் இனப் படுகொலையைக் கண்டித்து 2009 சனவரி 29ஆம் நாள் சென்னையில் உயிராயுதம் ஏந்தினார். முத்துக்குமார் தமிழ்த் தேசிய விடுதலையை இலட்சியமாகக் கொண்டவர். புரட்சிகர இளைஞர் முன்னணியின் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டு சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்டவர். உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய பண்பான ஆரவாரமில்லாத உழைப்பு, தோழமையான உதவி, விடுதலை அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ளத் தொடர்ந்த வாசிப்பு, சக மனிதர்களை அடையாளம் கண்டு நேசிப்பது, கொள்கையில் நெஞ்சுறுதி - இவையே முத்துக்குமாரின் தனிச்சிறப்பு.

தமிழகம் எத்தனையோ இளைஞர்களின் தீரத்தையும் ஈகத்தையும் போற்றியிருக்கிறது. ஈழத்தில் நடந்த மனிதப் பேரவலத்தைக் கண்டித்துத் தனக்கே எரியூட்டிக் கொண்ட முத்துக்குமாருக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் இதயத்தில் கொடுத்த இடத்தை வேறு எவருக்கும் கொடுக்க வில்லை.

பல நூறு புத்தகங்கள் சேர்ந்து கொடுக்கக்கூடிய சிந்தனை எழுச்சியை முத்துக்குமாரின் இறுதி அறிக்கை கொண்டு வந்தது. இந்த அறிக்கையின் பின்னணியை அறிந்துகொள்ள இனப்படுகொலைக்குப் பின்னால் உள்ள வரலாற்றை ஆய்வது அவசியம்.

ஈழ மக்களை ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பதை முத்துக்குமாரின் கடிதம் எல்லாக் கோணத்திலும் விவரிக்கிறது. துரோகம் புரியும், கள்ள மௌனம் சாதிக்கும் இந்தியாவைக் கண்டித்தும், அமைதியாக வேடிக்கை பார்க்கும் சர்வதேசச் சமூகத்தைக் கேள்வி கேட்டும், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களைப் போர்க்குணமிக்கப் போராட்டத்தைத் தொடங்குமாறு கோரியும், அப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையைச் சுமந்தும் நிற்கிறது முத்துக்குமாரின் இறுதிக் கடிதம்.

"சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால் ஆம் என்றோ, இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்".

இந்திய ஏகாதிபத்தியம் சிங்கள இனவெறி அரசுக்குத் துணை நிற்பது ஏன்? தெற்காசியாவின் வல்லரசுக் கனவு, இந்திய ஆளும் வர்க்க அரசியல், பொருளியல், இராணுவ ஆதிக்கத்தின் கீழ் இலங்கையை வைத்திருக்கத் துடிக்கும் அதன் பதட்டம், தனக்குக் கீழ் உள்ள தேசிய இனங்களை ஒடுக்குவதன் ஒரு பகுதியாக ஈழத் தேசிய இனத்தை ஒடுக்குவதில் அது கொண்டுள்ள தீவிரக் கொள்கை - இவற்றை யெல்லாம் முத்துக்குமார் நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்.

சமூகத்தைப் பற்றிய புரிந்துணர்வும், உலகெங்கிலும் நடை பெற்ற உரிமைப் போராட்டங்கள், அவற்றின் படிப்பினைகள் குறித்துத் துல்லியமான பார்வையும் கொண்டிருந்த முத்துக்குமாருக்குள் உலகில் எங்கும் எப்போதும் நியாயம் தேடும் ஒரு மனிதனின் கோபத் தீ இருப்பதைக் காணமுடியும்.

இந்தி ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்துவதன் வழி மக்களைத் திரட்டி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம்தான், இந்திய அரசு ஈழப்போரில் தலையிடுவதைத் தடுத்து நிறுத்த முடியும் என்றே முத்துக்குமார் கருதினார்.

குழந்தைகளும் பெண்களும் கூட போரில் திட்டமிட்டுக் கொல்லப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முத்துக்குமார் தனக்குத்தானே எரியூட்டிக்கொண்டார். ஆனால் அவர் நினைத்தபடி நம்மால் போரை நிறுத்த முடியவில்லை. சிங்களப் பேரினவாத அரசு தான் நினைத்தபடி வெற்றி கண்டுவிட்டது என்பது நம் முகத்தில் அறைகிற உண்மை. அதன்பின்னாவது நாம் முத்துக்குமார் காட்டிய வழியில்தான் பயணிக்கிறோமா? அவர் கற்றுத் தந்த அரசியல் பாடத்தை நாம் கற்றுக்கொண்டோமா? குறிப்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முத்துக்குமாரின் ஒவ்வொரு நினைவுநாளிலும் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கத் தவறியதில்லை. அதிலும் விசிக, 'முத்துக்குமார் பாசறை'யே அமைத்திருக்கிறது. இவ்விரு கட்சிகளையும் 'முத்துக்குமார் அரசியலில்' ஊன்றி நின்று மதிப்பீடு செய்வதே எம் நோக்கம்.

ஈழ விடுதலைக்காகவும் தமிழக உரிமைகளுக்காகவும் ஓய்வின்றிச் செயல்பட்டு வருபவர் வைகோ. தமிழகம் சந்திக்கிற எந்த நெருக்கடிக்கும் காத்திரமான போராட்டங்கள் மூலமாக முகம் கொடுத்து வருகிறார், தன் பேச்சால் தமிழக மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்புகிறார் என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவையும், தனித் தமிழீழக் கோரிக்கையின் நியாயத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எப்போதும் உண்டு. தமிழ்த் தேசியம் எனும் அரசியல் முழக்கத்தை அம்மக்களின் நெஞ்சங்களில் ஊன்றியதும், தொடர்ந்து உச்சரிக்கச் செய்ததும் திருமாவளவன் என்பதும் உண்மை.

முத்துக்குமார் அரசியல் என்பது நேர்மையிலிருந்து இம்மியும் விலகாமல், கொள்கை அரசியலில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், விடுதலை அரசியலை இலட்சியமாய்க் கொண்டு உறுதியோடு செயல்படுவதே! இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தன் இறுதிக் கடிதத்தில் கருணாநிதி மட்டுமல்ல, செயலலிதாவும் தமிழர்களுக்கு எதிரானவர் என்பதை வெளிப்படுத்த அவர் மறக்கவில்லை. வைகோவும் திருமாவும் முத்துக்குமாரின் உயிர் ஈகத்திற்குப் பின்பு கூட இந்திய ஏகாதிபத்தியத்தைத் தூக்கி எறிந்தோ, ஒருங்கே கருணாநிதி, செயலலிதா இரு வரையும் தவிர்த்தோ அரசியலை முன்னெடுக்கத் தயாரில்லை.

இதை நன்கு புரிந்து வைத் திருந்ததாலோ என்னவோ முத்துக் குமார் எந்த அரசியல் கட்சித் தலைவரையும் நம்பிக்கைக்கு உரியவராய்த் தன் கடிதத்தில் இனம் காட்டிவிடவில்லை. சுருக்கமாக, ஓட்டுக் கேட்கும் அரசியலும் முத்துக்குமார் வழிகாட்டும் அரசியலும் இரு வேறு துருவங் கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

பாசிச அதிபராட்சி வேண்டும் என்று பேசிவரும் அத்வானி - வெங்கையா நாயுடு முன்னிலை யில் மாநாடு ஒன்றை நடத்தியது மதிமுக. மாநாட்டுக்குப் பெயர் 'மாநில சுயாட்சி மாநாடு'. இதில் அணிவகுத்து வந்த தொண்டர்களோ வைகோவைக் கண்டால் தமிழில் முழக்கமிடு வார்கள். அத்வானியைக் கண்ட வுடன் 'பாரத் மாதாகி ஜே' போடு வார்கள். முன்னாளில் 'ஊழல் நாயகி ஒழிக' என்று முழங்கிய வர்கள்தான், பிறகு 'புரட்சித் தலைவி வாழ்க' என்று முழக்க மிட்டார்கள்.

ஒபாமாவை உயர்த்திப் பிடித்து, சீமீs, ஷ்மீ நீணீஸீ எனும் தலைப்பில் வைகோ ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டார். ஈழத் தமிழர் இன அழிப்புப் போரில் அமெரிக்காவிற்கு எந்தப் பங்குமே இல்லையா? இராக்கிலும் ஆப்கனிலும் அம்மக்கள் மீது அமெரிக்கா நடத்திவரும் கொடிய போருக்கும் ஒபாமாவுக்கும் தொடர்பே இல்லையா? அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போரை ஆதரித்துவிட்டு மறுபக்கம் பாசிச ராசபக்சேவின் இன அழிப்புப் போரை எதிர்ப்பது முரண் இல்லையா? தமிழினத்துக்கு எதிரான போரைப் பற்றி ராசபக்சேவிடம் உலகப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது 'இராக்கிலும் ஆப்கனிலும் அமெரிக்கா இதைத்தானே செய்தது' எனக் கொக்கரித்தான். ஆக, ராசபக்சேவுக்கு முன்னோடியாக இருப்பது அமெரிக்காவே!

ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் என்பது போர்க்குற்றம் என்ற குற்றச்சாட்டிலிருந்தும்கூட சிங்கள அரசை - ராசபக்சேவை - தப்பிக்க வைக்கும் முயற்சியாகவே அமைந்ததை மறுக்க முடியுமா? இதற்கும் ஒபாமாவுக்கும் தொடர்பே இல்லையா?

குசராத்தில் அப்பாவி இசுலாமியர்கள் ஏறக்குறைய 2000 பேரின் படுகொலைக்குக் காரணமாக இருந்தது பாசக - நரேந்திர மோடி. குசராத் படுகொலையையும் நரேந்திரமோடியையும் நாடாளுமன்றத்தில் வைகோ ஆதரித்துப் பேசியதை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியவில்லை. அதுமட்டுமல்ல, குசராத்துக்கே சென்று நரேந்திரமோடியின் கைத்தலம் பற்றி அவருக்காக வாக்குக் கேட்டது எப்படி பெரியார் - அண்ணா வழி அரசியல் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிய வில்லை. இந்துத்துவத்திற்கு எதிரான அண்ணாவின் பேச்சும் எழுத்தும் தமிழ்ச் சமூகம் இன்றும் சமத்துவத்திற்கான ஆயுதமாக ஏந்த வல்லவை அல்லவா! திராவிட இயக்க நூற்றாண்டு மாநாடு கூட்டுகிற போதாவது இது குறித்து நேர்மையாக மீளாய்வு செய்யத் தவறுவது சரியா? எல்லாம் பதவிக்காக மட்டுமே என்றால் இன்றும் பதவி அரசியலைக் கைவிட்டு விடவில்லை - இனிமேலும் தமிழ்ச் சமூகத்திற்கு நச்சுப் பரப்பும் கட்சிகளைத் தூக்கிச் சுமக்க நேரிடும் வாய்ப்பு அற்றுப்போய்விடவில்லை என்றால் - இதுதான் முத்துக்குமார் கைகாட்டும் அரசியலா?

விடுதலைப் புலிகளை ஒருபோதும் ஏற்காத, பிரபாகரனை இந்தியா கொண்டுவந்து தூக்கிலிட வேண்டும் என்று சொன்ன, இலங்கைத் தமிழர்கள் என்று மட்டுமே கவனமாகக் குறிப்பிடுகிற பார்ப்பன ஜெயலலிதாவுடன் வைகோ கூட்டுச் சேர்ந்ததை எப்படி நியாயப்படுத்துவது? பார்வதியம்மாளின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 'பார்வதியம்மாவைக் கொன்றது கருணாநிதி' என்றார் வைகோ. ஆனால் அதே நேரடிப் பொருளில் அன்ரன் பாலசிங்கத்தைக் கொன்றது ஜெயலலிதா என்பதை மறக்கவோ மறைக்கவோ முடியுமா?

'அடங்க மறு; அத்து மீறு!' என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் வானில், தலித்துகளின் நம்பிக்கை நட்சத்திரமாக எண்பதுகளின் இறுதியில் தன் பயணத்தைத் தொடங்கியவர் திருமாவளவன். தனக்கு அவசியப்பட்ட பதவிகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய சூரப்புலி என்றும், மக்களின் போராட்டத்திற்குப் பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டார் என்றும் முத்துக்குமாரால் சாடப்பட்ட கருணாநிதியோடு அப்போதும் இப்போதும் கைபற்றி இருப்பதும் முத்துக்குமார் பாசறை அமைப்பதும் ஆகப்பெரிய முரண்பாடு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஈழ ஆதரவு அணி ஒன்றை ஏற்படுத்த அழைப்பு விடுத்தும் யாரும் அதற்கு அணியமாக இல்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார் திருமா. திருமாவின் அழைப்பு வரவேற்கத்தக்கதே. அதைச் செவிமடுக்காது அலட்சியப் படுத்திய ஈழ ஆதரவுக் கட்சிகள் கண்டனத்துக்குரியனவே. ஆனால் அதனால்தான் காங்கிரசைத் தாங்கிப் பிடிக்கும் கருணாநிதியோடு கூட்டணி வைத்திருக்கிறேன் என்று அவர் சொல்வதுதான் நமக்கு விளங்கவில்லை. ஆக, திருமாவின் எல்லா முடிவுகளுக்கும் ஈழ விடுதலை அரசியல் அல்ல, பதவி அரசியலே அடிப்படை என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?

ஈழத் தமிழர் அழிப்புக்குக் கருணாநிதி முழு உடந்தை என்பதற்கு முத்துக்குமார் கடிதம் வரலாற்று சாட்சியம். ஈழத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் காலில் போட்டு மிதித்து விட்ட கருணாநிதியை, அம்மக்களுக்காக உணர்வெழுச்சியுடன் போராடுவதாகச் சொல்லும் திருமா அண்டியிருப்பது நியாயம்தானா?

'போரை நிறுத்து!' என்ற கோரிக்கை முழக்கத்தோடு உண்ணா நிலைப் போராட்டத்தைத் தொடங்கினார் திருமா. அந்நேரம் துணிந்து தன்னையே பணயம் வைத்தது போற்றுதலுக்குரியது. அப்போராட்டத்தை முடிக்கிறபோது 'இனி எக்காலத்திலும் காங்கிரசுக் கட்சியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைக்காது' என்றும் 'தமிழகத்தில் காங்கிரசுக் கட்சியைப் புல்பூண்டு தெரியாமல் அழிப்பதே விடுதலைச் சிறுத்தைகளின் வேலை' என்றும் முழங்கினார்.

ஒட்டுமொத்தத் தமிழகத்தின் போர்நிறுத்தக் கோரிக்கையின் அடையாளமாக அன்று திருமா திகழ்ந்தார். அந்த உண்ணாநிலைப் பந்தலில் முத்துக்குமாரும் நம்பிக்கையோடு அமர்ந்திருந்தார் என்பது பின்னர் நாம் அறிந்துகொண்ட செய்தி. அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத் தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் பலரும் குண்டர் தடுப்புச் சட்டங்களில் தளைப்படுத்தப்பட்டு பிணை கிடைக்காமல் சிறையில் கிடந்த ஈகத்தையும் நாம் மறக்கவில்லை. அந்த இளைஞர்கள் அனைவர் நெஞ்சிலும் காங்கிரசு மீதான வஞ்சினம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

அடுத்து வந்த தேர்தலில் 'திமுகவோடுதான் கூட்டணி; காங்கிரசுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி கிடையாது' என்றார் திருமா. 'காங்கிரசும் திமுகவும் கூட்டணி அமைத்துக் கொண்டது பற்றி எனக்குக் கவலையில்லை' என்றார். இதுதான் திருமாவின் நிலைப்பாடு என்றால் தங்கபாலுவிடம் சமாதானம் பேச வேண்டி வந்தது எதற்கு என்பதை விளக்க முடியுமா? போர் நிறுத்தத்திற்காகப் போராடினீர்கள் சரி; ஆனால் சோனியாவும் மன்மோகனும் போர்க்குற்றவாளிகள் என முழங்க முடியாமல் போனதே ஏன்? காங்கிரசின் மிரட்டலுக்கு அஞ்சி டெசோ மாநாட்டில் தனித்தமிழ் ஈழக் கோரிக்கைத் தீர்மானம் இல்லை என அறிவித்து விட்டார் கருணாநிதி. அந்த மாநாட்டில் திருமாவும் பங்கேற்க இருக்கிறார். இப்போதும் திமுகவோடுதான் கூட்டணி என்றால் காங்கிரசுக்கு அஞ்சும் கருணாநிதியோடு திருமாவை உலகத் தமிழர்கள் ஒப்பிடுவதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?

இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு, இந்திய இறையாண்மைக்குப் பங்கமின்றி, கொலைகாரனிடம் கொலைக்கான நியாயம் வேண்டி அரசியல் செய்வதன்று முத்துக்குமார் வழி! இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுக்கக் களம் அமைப்பதே இன அழிப்புச் செய்த இந்தியத்துக்கு நாம் தரும் தண்டனை. அதுவே முத்துக் குமாருக்கு நாம் செலுத்தும் மெய்யான அஞ்சலி. ஈழத்துக்கு அமைந்ததுபோல் நம்மிலிருந்தும் ஒரு தலைவன் போராட்டத்தின் வழி உருவாவான் என்றால் தமிழ்த் தேசிய விடுதலைக்கான தலைவன் உருவாவான் என்பதே அதன் பொருள். முத்துக்குமாரின் உயிரற்ற உடலருகில் நின்றபோது கூட தமிழ்த் தேசியம் நெஞ்சில் கனன்று எழவில்லையெனில் பிறகு எப்போது...?

இளைஞர்களை, மாணவர்களை தேர்தல் கட்சிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் தமிழ்த் தேசியத்தின் பக்கம் ஈர்ப்பதே நம் முதற்பணி. இதைத்தான் தன் அறிக்கையின் மூலம் அறிவித்தார் முத்துக்குமார். முதலில் நாம் இந்தியர் என்ற மாயையிலிருந்து விடுபட்டுத் தமிழன் என்ற நிலையை அடைய வேண்டும். ஒரே நேரத்தில் இந்தியனாகவும் தமிழனாகவும் இருக்கவே முடியாது.

முத்துக்குமாரை நெஞ்சில் ஏந்தியிருக்கும் இளைஞர்கள் பாட்டாளி வர்க்க, போர்க்குணம் கொண்டு தன்னிழப்புத் துணிவுடன் தமிழ்த் தேசியக் களம் காண வேண்டும்.

ஆம்! நம்மிலிருந்துதான் தலைவன் உருவாவான்!

Pin It

துரை மாவட்டத்திலிருந்து 1996ஆம் ஆண்டு பிரித்து உருவாக்கப்பட்ட தேனி மாவட்டத்திற்கு, முல்லைப் பெரியாறு, சோத்துப்பாறை, வைகை அணை, வராகநதி, குரங்கனி, பச்சகுமாச்சி, மேகமலை, வெள்ளி மலை, மகாராஜா மெட்டு, போடி மெட்டு, கும்பக்கரை, சுருளி, கம்பம் பள்ளத்தாக்கு, கண்ணகி கோயில், இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து என்று ஆயிரம் அடையாளங்கள் இருந்தாலும், அப்பகுதி மக்களின் ஆயிர மாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அரசியல் அடையாளங்களாக இருப்பது, சாதிய வன்மமும் அதைத் தொட்டு உருவாகும் வன்முறைகளும் தான். வைகை மாவட்டம், கண்ணகி மாவட்டம் போன்ற வெளிப்பூச்சு அடைமொழிகளை விட 'சாதிய வன்கொடுமை மாவட்டம்' என்பதே தேனி மாவட்டத்திற்கு ஆகச் சிறந்த பெயராக இருக்க முடியும்.

இம்மாவட்டத்தைப் பொறுத்த வரை அரசு மற்றும் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் மனிதநேயமற்ற விலங்குச் செயல்கள் செய்தியாவது கூட மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகே நடக்க முடிகிறது. அப்படியரு ஈவிரக்கமில்லாத சாதியக் கொழுப்பேறிய பயங்கரவாதம்தான் தேனி மாவட்டம் - கடமலைக்குண்டு ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களையும் நசுக்கி வருகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தி லுள்ள மேலப்பட்டி, கரட்டுப்பட்டி, தென் பழனி காலனி, நேருஜி நகர், கடமலைக்குண்டு என்ற ஐந்து கிராமங்களை உள்ளடக்கியதுதான் 'கடமலைக்குண்டு ஊராட்சி'.

மகாத்மா ஜோதிராவ் ஃபூலே, அண்ணல் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களின் வழியில், நாடு முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் தீரமிகு எழுச்சியின் காரணமாக, 'தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர்' தனிப் பஞ்சாயத்தாக அறிவிக்கப்பட்டது மட்டும்தான், வரலாற்றில் 'கடமலைக்குண்டு' சந்தித்துள்ள ‘மாபெரும்’ சீர்திருத்தம்.

சாதியில்லாத ஐரோப்பியர்கள் ஆண்ட போதே, ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை உறிஞ்சியும், அளவில்லாமல் வரி வசூல் செய்தும், வெள்ளையர்களுக்குக் கொள்ளையளவில் கப்பம் கட்டிய விசுவாசத்திற்காக, ஜமீன்தாரின் தேரில் 7 குதிரைகள் பூட்டிக்கொள்ள சிறப்புச் சலுகையைப் பெற்றிருந்த கடமலைக்குண்டு அதிகாரத் திமிர், தற்பொழுது ஆதிக்க சாதி அரசின் துணையோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது கட்டவிழ்த்துள்ள அடக்குமுறைகளைச் சொல்லி மாளாது.

மன்னர்கள் காலத்தில் பாளையமாகவும், வெள்ளையர்கள் காலத்தில் ஜமீனாகவும், பிறகு கிராமப் பஞ்சாயத்தாகவும், அதிலும் தாழ்த்தப் பட்டோர்/பழங்குடியினர் பஞ்சாயத்தாகவும், மாறி மாறி எவ்வித ஆட்சிக் கட்டமைப்பில் இருந்தாலும், அரசியல் சட்டங்கள் மாறினாலும் கடமலைக்குண்டைப் பொறுத்த வரை, சாதி இந்துக்களின் சம்பிரதாயங்களே எழுதப் படாத சட்டங்களாக இன்றளவும் இருந்து வருகிறது.

திரைப்படங்களில் காதல் இணைகள் ஊர் மக்களை எதிர்த்து நண்பர்கள் துணையுடன் ஊரைவிட்டு ஓடும்போதும், நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்துகொள்ளும் போதும் சீத்தியடித்து வரவேற்கும் இளசுகள் கடமலைக்குண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் தனது ஊரில், தன் சாதிப் பெண், ஒடுக்கப்பட்ட சாதி இளைஞனுடன் கொண்ட காதலை ஏற்றுக்கொள்ள முடியாதவர் களாகவும், அந்தக் காதலை முறிக்கக் கொலை வெறியுடன் ஆயுதம் ஏந்தத் தயங்காதவர் களாகவும்தான் இருக்கிறார்கள்.

இளைஞர்கள் புகை பிடிக்கும் போதும், மது அருந்தும் போதும், ஊதாரித்தனமாய் ஊர் சுற்றும் போதும் அக்கறையுடன் கண்டிக்கும் ஊர்ப் பெரியவர்கள், சாதித் தூய்மையைப் பாது காக்கக் கிளம்பியிருக்கும் தங்கள் இளைஞர் களின் 'கொலைவெறி'யைக்கூட ஆரத்தழுவி வரவேற்கவே செய்கின்றனர்.

இப்படி ஊரினுடையவும் உறவினுடையவும் சாதிய வெறியிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, கடமலைக்குண்டைச் சேர்ந்த தளக்கம்மாள் என்ற மறவர் சாதிப் பெண்ணும் பழனிச்சாமி என்ற அருந்ததியர் ஆணும், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுச் சென்றுவிட்டதை அடுத்து, கடமலைக் குண்டு அருந்ததிய மக்கள், மறவர் சாதிவெறியர்களால் சந்தித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல.

பழனிச்சாமி-தளக்கம்மாள் காதல் இணை ஊரைவிட்டுச் சென்ற மறுநாளே (ஏப்ரல் 9ஆம் தேதி) கடமலைக்குண்டு ஊராட்சித் தலைவர் திரு அறிவழகன் அவர்களை, மறவர் சாதி வெறியர்கள் செருப்பால் அடித்து அசிங்கப் படுத்தி, காதல் இணையைக் கண்டுபிடித்து வரும்படி ஊரைவிட்டு விரட்டியும் விட்டனர். ஆதிக்க சாதியினரால் ஊராட்சித் தலைவர் தாக்கப்பட்டதற்கும் ஊரைவிட்டு விரட்டி யடிக்கப்பட்டதற்கும், அவர் ஒரு அருந்ததியர் என்பதே போதுமான காரணமாக இருந்தது.

அப்பாவி அறிவழகன் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். சுய ஆட்சி அரசாங்கம், சிறு குடியரசு, பஞ்சாயத்து ராஜ் என்று வானளாவப் புகழப்படும் 'ஊராட்சி மன்ற'த் தலைவர் கொடுத்த புகாரை ஏற்க மறுத்ததுமில்லாமல், காதல் இணையைக் கண்டுபிடித்துவரும் படி ஊராட்சித் தலைவருக்கே உத்தரவிட்டும், சாதி வெறியர் களுக்கு தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளது தேனி மாவட்டக் காவல்துறை.

தேனி மாவட்டத்தில் ஆதிக்க சாதி வெறியர் களால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப் பட்ட பல கற்பழிப்புகளைக் கூட, “கற்பழிக்க வெல்லாம் இல்லை.... சும்மா ஜாக்கெட்டை மட்டும்தான் கிழித்துள்ளனர்...” என்று வாய் கூசாமல் கூறி, கற்பழிப்பு வழக்குப் பதிய மறுத்து, ஆதிக்க சாதியினரின் செருப்பாய் இருந்து வழக்கை முடித்துவைத்த தேனி மாவட்டக் காவல்துறை, வயது நிரம்பிய ஒரு ஆணும் பெண்ணும் தம் விருப்பப்படி வாழ்க்கையைத் தேர்வு செய்துகொண்ட இவ்வழக்கில், பெண்ணைக் கடத்தியதாகப் பொய் வழக்குப் பதிவு செய்து, பழனிச்சாமியின் தாய் திருமதி காளியம்மாள் என்ற அமராவதி மற்றும் தந்தை திரு பெத்தன் அவர்களை கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் வைத்து அடித்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்து, ஏப்ரல் 9ஆம் தேதி சிறையிலடைத்துத் தனது தொப்பியைச் சரிசெய்து கொண்டது. காதல் இணையைத் தேட வேண்டும் என்பதற்காக ஊராட்சித் தலைவருக்கு மட்டும் முன்பிணை தந்து கருணை காட்டி யுள்ளது தேனி மாவட்டக் காவல்துறை.

காவல்துறையினர் கொடுத்த உற்சாகத்தில் கடமலைக்குண்டு ஆதிக்க சாதி வெறியர்கள் 5 அருந்ததியர் குடும்பங்களை ஊரைவிட்டுத் துரத்திவிட்டும், வீடுகளின் கதவுகளைப் பெயர்த்தெடுத்தும், கூரைகளைப் பிரித்து உள்ளே இறங்கியும் பொருட்களைச் சூறையாடத் தொடங்கிவிட்டனர். பணம், தங்க நகைகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், பாத்திரங்கள், ஆடு மாடுகள் என்று, ஏகபோக மாகக் களவாடிய மகிழ்ச்சிக் களிப்பில், சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், கல்விச் சான்றிதழ்கள், என்று கிடைத்த அனைத்தையும் கிழித்தெறிந்துவிட்டுச் சென்றுள்ளனர் ஆதிக்க சாதிக் களவானிகள். மூன்று தலைமுறைகளாக உழைத்துச் சேர்த்த சொத்துக்களை இழந்த உழைப்பாளி ஒடுக்கப்பட்ட மக்கள், குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுப் புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தேனி மாவட்டத் தமிழ்ப்புலிகள் களமிறங்கிய பிறகு, கடமைலைக் குண்டை விட்டு வெளியேற்றப்பட்ட குடும்பங் களை மறுபடியும் கடமலைக் குண்டிற்குள் குடி யமர்த்துவதாகக் காவல்துறை வாக்குறுதி அளித்தது. பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 30 அருந்ததிய மக்களுடன் கடமைலைக் குண்டிற்குச் சென்ற காவல்துறையை ஆதிக்க சாதி மறவர்கள் ஊருக்குள் அனுமதிக்கவில்லை.

மாவீரன் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்துகொண்ட ஒடுக்கப்பட்ட மக்களை, பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்ததாகப் பொய்க் குற்றம் சாட்டி, துப்பாக்கியால் சுட்டும், துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று அடித்தும் 6 அப்பாவிகளைக் கொலை செய்த காவல் துறைக்கு, மிகப் பெர்ரிய்ய சனநாயக நாட்டின் குடிமக்களைச் சொந்த ஊரில் குடியேறவிடாமல் தடுக்கும் ஆதிக்க சாதி அயோக்கியர்களிடம் தூக்கிக் காட்ட எதுவும் இருக்கவில்லை.

வீடுவாசலை இழந்த ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள், தலைமுறை தலைமுறை யாக வாழ்ந்த ஊரைவிட்டு, கம்பம் புதுப் பட்டி, அணைப்பட்டி, இராயப்பன்பட்டி, அப்பிபட்டி என்று ஊர் ஊராக உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்த போது, காவல்துறை வண்டிகளிலேயே அழைத்துச் சென்று வெட்கமில்லாமல் இறக்கிவிட்டு வந்ததுதான், தேனி மாவட்டக் காவல்துறை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்த மாபெரும் உதவி(!).

சொந்த ஊரை மறக்க முடியாமல் வந்த ஊரான அப்பிபட்டியில் வாழந்துகொண்டிருந்த அப்பாவி மக்களையும், பொய்க் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையின் சித்ரவதைக்கு உள்ளாகி, சிறையிலிருந்து 22 நாட்களுக்குப் பிறகு 2-06-12 அன்று பிணையில் வெளிவந்த பெத்தன் மற்றும் அமராவதியையும், ஆதிக்க சாதி மறவர்கள் அப்பிபட்டிக்கும் சென்று தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரின் மீதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தளக்கம்மாள்-பழனிச்சாமி காதல் இணை ஊரைவிட்டுச் சென்ற மறுநாளே ஒடுக்கப்பட்ட அருந்ததிய மக்களைப் பொய் வழக்கில் கைது செய்து சிறையிலடைத்த தேனி மாவட்டக் காவல்துறை, ஊராட்சித் தலைவரைத் தாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளும் சொத்துக்களும் ஆதிக்கச் சாதியினரால் சூறையாடப்பட்டு 60 நாட்களான பிறகும் வழக்குப் பதியவில்லை. தமிழ்ப்புலிகள் பொதுச் செயலாளர் நாகை திருவள்ளுவன் அவர்கள் “தேனி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்” என்று கண்டித்த பிறகுதான் குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் கைது செய்யப்படவில்லை.

தமிழ்ப்புலிகளின் முயற்சியில் பிரச்சனை கசியத் துவங்கியதும் கடமலைக்குண்டை ஊடகங்கள் மொய்க்கத் தொடங்கி விட்டன. பரமக்குடி அரச பயங்கரவாதத்தைக் கூட சாதிக் கலவரம் என்றே சித்திரித்த ஊடகங்கள், ஆதிக்க சாதியினரின் அப்பட்டமான சாதிய வன்முறையை “இருதரப்பினருக்கான பிரச்சனை” என்று மொண்ணையாகக் குறிப்பிட்டு வெளியிட்டன. ஊருக்குள் நுழைந்த இந்த மொண்ணை ஊடகங்கள் கூட தாக்கப்பட்டதுதான் கடமலைக்குண்டு சாதிவெறியின் உச்சம்.

ஊடகங்களின் மழுங்கடிப்பு வேலைகளும், சாதி வெறியர்களின் தாக்குதல்களும், காவல் துறையின் மெத்தனம் மற்றும் ஆதிக்கசாதி ஆதரவு நிலையும், பாதிக்கப்பட்ட மக்களைப் போராட்டத்தை நோக்கி நகர்த்தியது. சூன் 14 அன்று தோழர் மகிழவேந்தன் தலைமையில் அறிவிப்பில்லாமல் அதிரடியாக நடத்தப்பட்ட “பாதிக்கப்பட்ட மக்களை ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற்றும் போராட்டம்” தேனி மாவட்டத்தைப் பதற்றமடையச் செய்தது. ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட மக்களை சூன் 20ஆம் தேதிக்குள் மீண்டும் கடமலைக் குண்டில் குடியமர்த்தாவிட்டால் “மக்களைத் தமிழ்ப்புலிகள் குடியமர்த்துவார்கள்” என்ற அறிவிப்பு, காவல்துறையைப் பணியச் செய்தது. ஆண்டிப்பட்டிக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கரன் சூன் 18 அன்று ஆதிக்க சாதியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி(!) அருந்ததிய மக்களை சொந்த ஊருக்குள் குடியேற்றம் செய்தார்.

களவு கொடுத்த சொத்துகளுக்கு இழப்பீடு இல்லாமல், பிள்ளைகளின் படிப்பைத் தொடர வழியில்லாமல், ஊரில் உறவுகொண்டாட, வேலைதர சாதிய மனோபாவமுள்ள மக்கள் முன்வராமல், பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் சொந்த ஊருக்குள் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்திலும், முற்போக்கு அமைப்புகள், இடதுசாரி கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் ஈழ ஆதரவு, இந்தியத் தேசிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, வல்லாதிக்க எதிர்ப்பு என்று எதற்கும் சுயசாதி உணர்வைத் துறக்க வேண்டிய கட்டாயம் தேனி மாவட்ட முற்போக்காளர் களுக்கு இல்லை.

வர்க்கக் கருத்தியலை மட்டும் கட்டியழுதே வளர்த்தெடுக்கப்பட்டு, சாதியைப் புரிந்துகொள்ள முடியாத, சாதியழிப்பிற்காகக் களமாட முடியாத ஊனமுற்ற தோழர்களை வைத்துக்கொண்டு திண்டாடும் பொதுவுடைமை கட்சிகளின், காலங்கடந்த ஞாநோதயமும் - போர்க்குண மிக்கவர்கள், ஆண்ட பரம்பரையினர், சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள், துரோகம் செய்தவர்கள், தெலுங்கர்கள், தமிழர்கள் என்று சகலத்தையும் சாதியை வைத்தே தீர்மானிக்கும், தமிழ்த் தேசியவாதிகளின் தாறுமாறான தேசிய வாதமும், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலைக்கு மண்ணளவும் பயன்படவில்லை என்பது மட்டும் திண்ணம்.

ஈழத்தில் தவித்துவரும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்காக, தனி-ஈழத்திற்காகக் குரல் கொடுக்கும் மனிதநேயமிக்க பொது(?) மக்களும் கடமைலைக்குண்டு சொந்த ஊர் அகதிகளுக் காக உச்சுக்கொட்டக் கூடத் தயாராக இல்லை.

சகல வழியிலும் கையறு நிலையில் இருக்கும் தேனி மாவட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீது, கடந்த சில நாட்களுக்குள் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் சிலவாக... “திருமலாபுரம் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி ரா.செல்வி அவர்களை ஆதிக்க சாதியினர் சாதிய வன்மத்தோடு கொலைவெறித் தாக்குதல் நடத்தி அவமானப் படுத்தி பணி செய்யவிடாமல் தடுத்து வருவது... அம்மச்சியாபுரம்- அய்யனார்புரம் கிராமத்தில் மூன்று வருடங்களாக இருந்து வந்த, மாவீரன் இம்மானுவேல் சேகரன் சிலையை காவல்துறை வலுக்கட்டாயமாக உடைத்து அகற்றியது... கூழையனூர் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு அரசுப் பொது இடுகாடு மறுக்கப்படுவது, அது தொடர்பாக நடந்த போராட்டத்தில் சின்னாயி என்ற ஒடுக்கப் பட்ட பெண் பெட்ரோல் குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டது... குள்ளப்புரம் ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் நுழையத் தடை... அம்பேத்கர் பின்னலாடை அணிந்து கோயில் திருவிழாவில் கலந்துகொண்ட அம்மாபட்டி ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்... வெள்ளைச் சட்டை அணிந்து சென்றதற்காக வயல்பட்டியில் ஒடுக்கப்பட்ட இளைஞர் சரவணன் தாக்கப்பட்டது... கைலாசநாதர் கோயிலில் பல வருடங்களாக ஆன்மிகப் பணியாற்றிய பூசாரி நாகமுத்து ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று தெரிந்ததும், ஆதிக்க சாதியினர் அவரைத் தாக்கி உதைத்து துரத்தியடித்தது.... சுக்குவாடன்பட்டி கோயில் திருவிழாவில் முளைப்பாரி கொண்டுசென்ற ஒடுக்கப்பட்ட பெண்களிடம் ஆதிக்க சாதியினர் முறைகேடாக நடந்துகொண்டது, தட்டிக்கேட்ட மாணிக்கம் என்ற ஒடுக்கப்பட்ட இளைஞரை, சாதி வெறியர்கள் கத்தியால் இரண்டு முறை குத்தியதால், அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது.... ஆண்டிப்பட்டி ஒன்றியம் கோயில்பட்டியில் ஒடுக்கப் பட்ட பெண்கள் மீது தொடர்ந்து நிகழ்ந்துவரும் கற்பழிப்புகள்....” இப்படி, சாதிய வன்கொடுமை களுக்கும் கொலைகளுக்கும் கற்பழிப்புகளுக்கும் பஞ்சமே இல்லாமல், தன்னை ஒரு சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிமுகப்படுத்திக் கொண்டு பல்லிளிக்கிறது தேனி மாவட்டம்.

சாதிய வன்கொடுமை மாவட்டமான, தேனி மாவட்டப் பொது(?)மக்கள், அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், தமிழ்த் தேசியவாதிகள், இடதுசாரிகள் என்று விதிவிலக்கே இல்லாமல் நீக்கமற நிறைந்திருக்கும் சாதிய மனோபாவமும், ஆதிக்க சாதி ஆதரவு நிலையும் மேற்குறிப்பிட்ட வன்கொடுமைகளிலும் என்ன பாத்திரம் வகித் திருக்கும் என்பதற்கு, கடமலைக்குண்டு “ஒரு சோறு பதம்”.

Pin It

இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொடைப் போராளி என்கிறோம். முள்ளிவாய்க்கால் அழிப்பினையட்டி தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பிற்கு மிக மிக முக்கியக் காரணி ஈகி முத்துக்குமாரின் தற்கொடைப் போராட்டமே.

நாமறிந்த வரையில் தற்கொடைப் போராளி களுக்கென தனிப் பாசறையை 'கரும்புலிகள்' என்கிற பெயரில் உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். கரும்புலிகளின் ஈடுஇணையற்ற தியாகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தியாக உணர்வை மென்மேலும் உயர்த்தியது என்றால் மிகையாகாது. எனினும் தற்கொடைப் போராளி களின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில் தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. செர்மனிக்கும் சப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் சப்பானிய வீரர்களின் தற்கொடைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.

ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறு வதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே பிரித்தானியர்களை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொடைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது. அந்த ஈகத்துக்குரிய வீரமங்கை யின் பெயர் குயிலி. அவர் பெண் என்பதால் மட்டுமல்ல, சேரியில் பிறந்தவர் என்பதாலும் வரலாற்றின் பக்கங்களில் வஞ்சிக்கப்பட்டிருக் கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

குயிலியின் பின்னணி

ஆங்கிலேயர்களை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற அந்நிய எதிர்ப்புப் போராட்டத்தில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கனார், ஒண்டிவீரனார் போன்ற தியாகிகள் பட்டியலில் சிவகங்கைச் சீமையின் இராணி வேலு நாச்சியார் மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த வரலாறுகள் காலத்தால் அழிக்க முடியாதவை. 1750 காலகட்டத்தில் ஏறக்குறைய பூலித்தேவரும் ஒண்டிவீரரும் நெல்லைச் சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட காலகட்டத்திற்குப் பிறகு சிவகங்கைச் சீமையில் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர் ஆங்கிலேயரையும் அவர்களது கூட்டாளியான ஆற்காடு நவாப்புகளையும் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சூழ்ச்சியால் முத்துவடுகநாதர் எதிரிகளால் கொல்லப்படு கிறார். உடன் அவரது இரண்டாவது மனைவி கவுரி நாச்சியாரும் கொல்லப்படுகிறார். இந்நிலையில் இழந்த நாட்டை மீட்டெடுக்க முத்துவடுகநாதரின் முதல் மனைவியான இராணி வேலுநாச்சியார் சபதமேற்கிறார். அதற்காக, திண்டுக்கல்லை மையமாகக் கொண்டு ஆட்சி நடத்திவந்த ஹைதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் மற்றும் விருப்பாச்சி கோபால் நாயக்கர் ஆகியோரின் உறுதுணையோடு 8 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திப் பெரும் படையைக் கட்டமைத்து சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்தார்.

வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. வாள் படைக்கு தலைமை ஏற்றவர் சின்னமருது, வளரிப்படைக்குத் தலைமை ஏற்றவர் பெரிய மருது. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர்தான் குயிலி.

குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு 'உடையாள் பெண்கள் படை' எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார். உடையாள் என்பவள் ஒரு மாடு மேய்க்கும் சிறுமி. காளையார் கோவிலில் தன் கணவரைப் பறிகொடுத்த வேலுநாச்சியார் அரியாக்குறிச்சி என்கிற ஊருக்கு அருகில் வரும்போது உடையாள் என்கிற மாடு மேய்க்கும் சிறுமி எதிர்ப் பட்டாள். அவளுக்கு விடை கொடுத்துவிட்டுச் சென்ற வேலு நாச்சியாரைப் பின்தொடர்ந்து வந்த எதிரிகள் உடையாளிடம் வேலுநாச்சியார் சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு முண்டம் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள். தமக்காக, தன் நாட்டுக்காக உயிரை ஈந்த உடையாளின் நினைவாகவே வேலுநாச்சியார் குயிலி தலைமையிலான மகளிர் படைக்கு உடையாள் மகளிர் படை எனப் பெயர் சூட்டியிருந்தார். மகளிர் படைக்குக் குயிலியை விடத் தகுதியானவர் வேறெவரும் இருக்க முடியாது என்பது வேலுநாச்சியாரின் இணையற்ற நம்பிக்கை. அப்படி குயிலி என்னதான் செய்தார்?

வேலு நாச்சியாரின் போர்ப் பயிற்சிக்கான ஆசிரியர்களில் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலு மிக முக்கியமானவர். வேலுநாச்சியாரை சிறுவயது முதலே கண்காணித்து வருபவர். வேலுநாச்சியார் தனது கணவருடன் தேனிலவுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்த சமயத்தில்கூட பாதுகாவலராக அரண்மனையால் அனுப்பப்பட்டவர் வெற்றிவேலு. அதேபோல், தன் கணவரைப் பறிகொடுத்த பிறகு திண்டுக்கல் - விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்து படை திரட்டிய கால கட்டத்தில் தன் மெய்க்காப்பாளராக வேலுநாச்சியார், சிலம்புவாத்தியார் வெற்றிவேலுவையே நியமித் திருந்தார். இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக விளங்கிய சிலம்புவாத்தியார் எதிரிகளால் விலை பேசப்பட்டார். வேலு நாச்சியாரின் திட்டங்களை, ஆதரவு சக்திகளை, அன்றாட நிகழ்வுகளை எதிரி களுக்குக் காட்டிக்கொடுத்து வந்தார்.

அன்று ஒரு நாள் குயிலியின் தாயார் உடல்நிலை சரியில்லாத தால், குயிலி சிவகங்கைக்குச் செல்ல விருந்தார். இதை அறிந்த சிலம்பு வாத்தியார் ''ஓ, பெண்ணே உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?'' என்று வினவினார். குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் தெரியாது எனக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியடைந்த சிலம்பு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகிலிருக்கின்ற மல்லாரிராயன் என்பவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். அதற்கு ஈடாக கை நிறைய பணமும் கொடுத்தார். குயிலி, ''தாயைப் பார்க்கப் போகத்தான் போகிறேன். போகிற போக்கில் இக்கடிதத்தை எப்படியும் ஒப்படைத்து விடுகிறேன். பணம் வேண்டாம்'' என மறுத்து விடுகிறார். புறப்படுவதற்கு முன்னதாக அன்று இரவு ஓய்வாக இருக்கும் நேரத்தில் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்க்கிறார். வேலுநாச்சியாரின் அன்றாட அசைவு களையும், அவரை வீழ்த்திட அடுத்து எதிரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிலம்பு வாத்தியார் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இராணியார் தன் தந்தையைப் போல பாவிக்கும் சிலம்பு வாத்தியாரா இப்படிக் காட்டிக்கொடுக் கிறார் என்பதை அறிந்து அதிர்சசியடைந்து ஆவேசமானார் குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.

நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.

இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இராணி வேலுநாச்சியாரும் அவரது மகள் வெள்ளை நாச்சியாரும் குயிலியும் அறையில் உறங்கிக் கொண்டிருந்த நேரம் அறைக்கு வெளியே காலடிச் சத்தம் கேட்டது. கேட்டும், கேட்காததுபோல் குயிலி படுத்துக் கிடந்தார். சன்னலைத் திறந்து நோட்டமிட்ட ஓர் உருவம் சட்டென வேலு நாச்சியார் படுத்துக்கிடந்த கட்டிலை நோக்கி சூரிக் கத்தியை வீசியது. பாய்ந்து தடுத்த குயிலியின் கையை கத்தி பதம் பார்த்தது. வலியால் அலறிய குயிலியின் சத்தம் கேட்டு எழுந்த வேலுநாச்சியார் ரத்தம் வடிந்த குயிலியின் கையைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். ஒரு தாயின் அரவணைப்போடு குயிலியைக் கட்டி அணைத்துக் கைகளுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார். கத்தி வீசிய உருவமோ சிவகங்கையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

இச்சூழலில் சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயரின் கைக்கூலிகளான மல்லாரிராயனும், அவன் தம்பி ரங்கராயனும் குயிலியை மையப்படுத்தி சாதிவெறிக்குத் தூப மிட்டுக்கொண்டிருந்தனர். அதாவது மேல்சாதியைச் சார்ந்த சிலம்பு வாத்தியார் வெற்றிவேலுவை கீழ்சாதிப் பெண்ணான குயிலி குத்திக் கொலை செய்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகமான சக்கிலியர் குலத்தில் பிறந்த குயிலிக்கு ஆதரவாக வேலுநாச்சியார் செயல்பட்டால் நம் சாதி கவுரவம் என்ன ஆவது? தாழ்த்தப்பட்டவர்கள் நம்மை எள்ளி நகையாட மாட்டார்களா? என குயிலியின் செயலுக்கு மனுதர்ம நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கேள்விப்பட்டு வேலுநாச்சியார் தம் படைவீரர்களுக்குப் பகிரங்கமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ''எதிரிகள் சிவகங்கை மண்ணிலிருந்து விருப்பாச்சியிலுள்ள நம் இருப் பிடத்திற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த என் அறையில் கத்தி வீசியிருக்கிறார்கள். இது என்னைக் கொல்வதற்கா? அல்லது குயிலியைக் கொல்வதற்கா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இத்தனைத் துணிச்சலாக என் அறைக்கு அவர்கள் எப்படி வந்தார்கள்? என்பதுதான் என் கேள்வி. நம் படை வீரர்களின் ஆதரவு இல்லாமல் அவர்களுக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்காது. சிவகங்கையில் நம் எதிரிகள் கடைசியாக என்னை வீழ்த்துவதற் காக எடுத்துள்ள சாதி என்னும் ஆயுதம் நம் வீரர் களையும் பாதித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னுடைய அத்தனைவிதமான சலுகைகளையும் சன்மானங்களையும் பெற்றுக் கொண்ட சிலம்பு வாத்தியார் எனக்குத் துரோகம் செய்தார். ஆனால் எந்தவிதமான சலுகையினையும் கிஞ்சித்தும் பெறாத குயிலி என் உயிரைக் காப்பாற்றியிருக் கிறாள்.

''சிலம்பு வாத்தியார் என் சொந்த சாதிக்காரராக இருந்தாலும் அவர் எனக்கு துரோகமல்லவா இழைத் தார்? ஆனால் குயிலி சக்கிலியர் குலத்தில் பிறந்திருந்தாலும் நம் நாட்டிற்கு துரோகமிழைத்தவர் களைக் கண்டறிந்து களையெடுத் திருக்கிறாளே?

உங்களுக்குச் சாதிதான் முக்கியம் என்றால் நீங்கள் இந்த நிமிடமே என்னுடைய படையிலிருந்து விலகிக் கொள்ளலாம். சாதிவெறி பிடித்தவர்கள் எனக்குத் தேவையில்லை.''

வேலுநாச்சியாரின் இந்த அறிவிப்பு கடுமையாக இருந்தாலும்கூட அது நியாயமாகப்பட்டதால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் குயிலி வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தலைமையாக்கப்பட்டார்.

நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.

முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான் மல்லாரி ராயன். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். வேலு நாச்சியாரின் படைகள் வீறு நடைபோட்டன. அடுத்து திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன் பெரும்படையோடு எதிர்த்து நின்றான். மருது சகோதரர்கள் அவனைத் தவிடு பொடியாக்கினர். அடுத்து வெள்ளைக்கார அதிகாரிகள் மார்டின்ஸ், பிரைட்டன் மற்றும் நவாபின் படைத் தளபதி பூரிகான் தலைமையில் மானாமதுரையில் மாபெரும் படை எதிர்த்து நின்றது. வேலு நாச்சியாரின் பீரங்கிப்படை அதனை அடித்துத் துவம்சம் செய்தது. அன்று மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.

முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.

வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.

தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கி களும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

அப்போது ஒரு மூதாட்டி வேலுநாச்சியாரிடம், "நாளை விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலில் பெண்கள் மட்டும் வழிபாட்டிற்காக அழைக்கப்படுவர். இதை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது?" என வினவினார். "எங்களிடம் இத்தனை அக்கறையோடு பேசும் நீங்கள் யார்?" எனக் கேட்டார் வேலுநாச்சியார். பதில் கூறாமல் மூதாட்டி நழுவ முற்பட சின்னமருது மிகக் கடுமையாக வாள்முனையில் நிறுத்திக் கேட்டார். அப்போது அம்மூதாட்டி தன்னுடைய வெண்மையான தலைமுடியை விலக்கி ஒப்பனையைக் கலைந்து காட்டினார். அவர் வேறு யாருமில்லை, குயிலிதான்.

சிவகங்கையின் நிலவரம் அறிய மாறுவேடத்தில் சென்று வந்ததாகவும் அனுமதியின்றி சென்றதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பணிந்து நின்றார்.

வேலு நாச்சியாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குயிலியைப் பாராட்டியதோடு குயிலியின் தலைமையிலான பெண்கள் படையோடு வேலு நாச்சியாரும் மறுநாள் இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். ஆயிரக்கணக்கான உடையாள் பெண்கள் படையினர் கைகளில் ஆயுதங் களோடு வேலுநாச்சியாருடன் உள்ளே நுழைந்தனர். போர் மூண்டது. அரண்மனைக்கு வெளியிலிருந்து மருது சகோதரர்கள் தாக்குதலைத் தொடங்க உள்ளிருந்து வேலுநாச்சியாரும் குயிலியும் வாட்களைச் சுழற்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாமல் விழி பிதுங்கி நின்றான். ஆனால் இந்தப் போர் இதுவரை நடந்த தாக்குதல்களிலிருந்து மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயரின் நவீன ஆயுதங் களுக்கு முன்பு வேலுநாச்சியாரின் படை தாக்குப் பிடிக்க முடியவில்லை. தமிழர் பக்கம் அழிவு அதிகமாகிக் கொண்டிருந்தது.

அரண்மனையின் ஆயுதக் கிட்டங்கியிலிருந்து மேலும் மேலும் ஆயுதங்கள் ஆங்கிலப் படை களுக்குச் சென்று கொண்டிருந்தன. தோல்வி தவிர்க்க முடியாதது என்கிற நிலை வேலுநாச்சி யாருக்கு ஏற்பட்டது.

என்ன செய்வதென சிந்திக்கக் கூட முடியாத சூழலில் ஓர் உருவம் தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக்கொண்டு அரண்மனை ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது. மறுநிமிடம் ஆயுதக் கிட்டங்கி வெடித்துச் சிதறியது. கை வேறு, கால் வேறு, தலை வேறு, உடல் வேறு, என அவ்வுருவம் சுக்கு நூறாகிப் போனது. ஆயுதக் கிட்டங்கியின் அழிப்பு வேலு நாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. ஆயிரக் கணக்கானோர் மண்ணில் மடிந்தார்கள். ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் வேலு நாச்சியாரிடம் மன்னிப்புக் கேட்டு புதுக்கோட்டைக்கு ஓடினான்.

வேலுநாச்சியார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வெற்றியைக் கொண்டாடத் தன் தளபதிகளெல்லாம் நெருங்கிக் கொண்டிருந்தபொழுது குயிலியைத் தேடினார் வேலுநாச்சியார். குயிலி கண்டறிய முடியாத அளவிற்கு உருத்தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தார். ஆம் ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது வேறு யாருமில்லை, குயிலியே. சிவகங்கை மண்ணை அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விரட்டிட வீரமங்கை வேலு நாச்சியார் சபதம் நிறைவேற்றிடத் தன்னையே ஈந்து தற்கொலைப் போராளியாய் அழிந்து போன குயிலியின் வீரம் இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். உலகில் தற்கொடைப் போராளிகளுக்கான விதை தமிழ்மண்ணில்தான் விதைக்கப்பட்டது. பெண்கள் என்றால் நுகர்வுப் பொருளாகக் கருதும் இன்றைய தலைமுறைக்கு குயிலியின் வரலாறு புதிய பார்வையை வழங்கட்டும்.

Pin It