பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஏன் தோட்ட வேலைகளுக்காக இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து தொழிலாளர்களைக் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கொண்டு சென்றார்கள் அல்லது அடிமைகளைப் போல கூட்டிச் சென்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள பிரித்தானிய ஏகாதிபத்தியம் அக்காலப்பகுதியில் சந்திக்க நேர்ந்த நெருக்கடிகள் பற்றி நாம் சுருக்கமாகப் பார்த்தல் அவசியம்.

srilankan_tea_estateஇந்தியத் துணைக் கண்டத்திலிருந்து கிடைத்த பெரும் இலாபம், ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது கட்டுப்பாட்டை அங்கே தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள மிக முக்கிய காரணமாக இருந்தது. உலகெங்கும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சிகள் வெடிக்கத் தொடங்கியிருந்த காலப் பகுதியது.

1789ல் வெடித்த பிரெஞ்சுப் புரட்சி நிலப்பிரபுத்துவ காலத்துக்கு முடிவுகட்டி உலகெங்கும் இருந்த அதிகார மையங்களுக்குப் பெருங் கிலியை உருவாக்கியது. வறிய பிரெஞ்சு மக்களும் சான் குளோட்டுகளும் (sans culottes) சம உரிமைகளைக் கோரி பிரெஞ்சு அரசை ஒரு உலுப்பு உலுப்பினர். பிரான்சில் வெடித்த புரட்சி பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆட்சியின் கீழிருந்த கரீபியன் நாடுகளிலும் எதிரொலித்தது. மார்ட்டினிக், கோடலூப், டொபாகோ ஆகிய நாடுகளில் அடிமைகளாக வேலை வாங்கப்பட்ட ஆப்பிரிக்கர்களும் கலப்பினத்தவர்களும் கிளர்ச்சிகளில் இறங்கினர். விடுதலை, சகோதரத்துவம், சமத்துவம் (Liberty,Fraternity,Equality) என்ற பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கங்களாற் கவரப்பட்ட அடிமைத் தொழிலாளர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். 1791ல் சென்.டொமினிக்கில் அடிமைகளின் புரட்சி வெடித்தது.

இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்த நினைத்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், பிரான்சிடமிருந்து கரீபியனைக் கைப்பற்றப் பிரான்சுக்கு எதிராகப் போர் தொடுத்தது. ஆனால் ‘அடிமைகள் இராணுவம்’ அவர்களுக்கு மாபெரும் தோல்வியை ஏற்படுத்தியது. இதே தருணத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் உள்நாட்டிலும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தது. புகழ்பெற்ற ‘மனிதரின் உரிமை’ (Rights of Man) எழுதிய தோமஸ் பெயினின் கருத்துக்களாலும் பிரெஞ்சுப் புரட்சியாலும் ஊக்குவிக்கப்பட்ட பிரித்தானியத் தொழிலாளர்களும் பிரெஞ்சின் புரட்சிகர வழியைப் பின்பற்ற முன்வந்தனர். 1795ல் இங்கிலந்தில் நடந்த மூன்று பெரும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களில் 150 000க்கும் மேற்பட்ட பிரித்தானியத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். ‘நமக்கு மன்னரும் வேண்டாம் யுத்தமும் வேண்டாம்’ என்று அவர்கள் முழங்கினர். யுத்தத்திலும் பாரிய இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் தமது இருப்பைக் காப்பாற்ற இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வந்த இலாபத்தை நோக்கித் தம் மேலதிக கவனத்தைத் திருப்பினர். இதே தருணம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பலத்தைக் குறைக்கவும், உள்நாட்டிலும் காலனித்துவ நாடுகளிலும் பெருகிய அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் அடிமைத்தன முறையை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகினர்.  
 
பிரித்தானிய ஆட்சியின்கீழ் அடிமை முறையைத் தடைசெய்யும் சட்டமான அடிமை வியாபாரச் சட்டம் 1807இல் அறிமுகப்படுத்தப்பட்டு 1808ல் அமுலுக்கு வந்தது. இருப்பினும் அடிமை வியாபாரமும் அடிமைகளை வைத்து வேலை வாங்குவதும் 1833இல் தான் முழுமையாகத் தடை செய்யப்பட்டன. பிரித்தானியக் கட்டுபாட்டில் இருந்த காலனிகளில் நிகழ்ந்த அடிமைத் தொழிலாளர்களின் கிளர்ச்சிப் போராட்டங்கள் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கிய பங்களித்தன. இதுவரையும் அடிமைகளை வைத்து இலவச உழைப்பின் மூலம் அமோக இலாபமீட்டிய கிழக்கிந்தியக் கம்பனி போன்ற காலனியாதிக்க சக்திகளுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 1833ல் அடிமைகளை வைத்திருந்த முதலாளிகளுக்கு 20 மில்லியன் பவுன்சுகள் நஷ்டஈடாக வழங்கப்பட்டும் அவர்கள் திருப்திப்ப‌டவில்லை. அவர்கள் தமது நடைமுறையை வேகமாக மாற்ற வேண்டியேற்பட்ட காரணத்தால் வேறு வழிகளில் மிகவும் விலைகுறைந்த தொழிலாளர்களைத் தேடினர். இந்தியாவில் நிலவி வந்த அடிமைமுறைக்கு நிகரான சாதிய முறையும் வறுமையும் பிரித்தானிய காலனியாதிக்கத்துக்கு வாகான சந்தர்ப்பத்தை வழங்கியது.

இந்தியாவில் வாழ்ந்த வறிய, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பெருந்தோட்ட வேலைகளுக்காக – முக்கியமாகத் தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக - உலகெங்கும் கடத்தப்பட்டனர். இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட தமிழ் பேசும் ஒடுக்கப்பட்ட சாதியினர் சிங்களம் பேசும் கண்டிய மக்களின் நடுவில் குடியேற்றப்பட்டனர். வடக்கு, கிழக்கில் ஏற்கனவே வசித்து வந்த ஏனைய தமிழ்பேசும் மக்களுடன் எந்த உறவும் ஏற்படாத வண்ணம் இத்தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த இது உதவியது.

கண்டியில் சிங்களவர்களுக்கும் ஆங்கிலேய ஆட்சியாளர்களிற்கும் இடையே முறுகல் நிலையிருந்ததால் தொழிலாளர் பற்றாக்குறையைச் சந்தித்து வந்த ஆங்கிலேயர்களுக்கு, அவர்கள் மத்தியில் தமிழ்பேசும் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவது சுலபமானதாகியது. அதே சமயம் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த ஒடுக்கும் சாதித் தமிழர்கள், அவர்களால் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுடன் எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ள மறுத்தனர். எல்லா வகையிலும் தனிமைப்பட்ட இந்தத் தொழிலாளர்கள் தமது சொந்த இடங்களுக்குத் தப்பவும் வழியின்றி இலங்கைத் தீவின் நடுவில் ஆங்கிலேயரின் கைகளினால் பிழிந்தெடுக்கப்பட்டனர். அதன் பலனாக இலங்கைத் தேயிலை வியாபாரம் அமோகமாக வளர்ந்தது.

 1818ஆம் ஆண்டிலேயே பிரித்தானிய கவர்னர் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களைக் கொண்டு வந்திருந்தார். இருப்பினும் முதன்முதலாகப் பெருந்தொகைத் தொழிலாளர்கள் 1823லேயே கொண்டுவரப்பட்டனர். பெரும்பான்மையான தொழிலாளர்கள் வறிய, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களை வேலை வாங்க ஒடுக்கும் சாதியை சேர்ந்தவர்கள் 'கங்காணி' பதவி வழங்கப்பட்டு, சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டார்கள். இத்தொழிலாளர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் சாதியப்படி வரிசை முறையில் வடிவமைக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட சாதியினர் மிகமிகக் கேவலமான முறையில் வாழப் பணிக்கப்பட்டு அவர்களிடமிருந்து அடிமைத்தனமாக வேலைகள் வாங்கப்பட்டன.

சலுகைகள் சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகள்

பண்டங்களை எடுத்துச் செல்வதை இலகுபடுத்தவும் ஏற்றுமதியின் செலவைக் குறைத்து இலாபத்தைக் கூட்டும் நோக்குடனும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் புகையிரதப் போக்குவரத்து முதலான பல்வேறு அபிவிருத்திகளைச் செய்தனர். பல நாடுகள் உள்ளடங்கிய 'சூரியன் அஸ்தமிக்காத' இராச்சியத்தைத் தமது கட்டுபாட்டில் வைத்திருந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டைத் தொடர்ந்து காப்பாற்ற குறிப்பிட்ட உள்ளுர் அதிகாரச் சக்திகளில் தங்கியிருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. ஆங்கிலம் பேசும், வசதிகள் பெற்ற ஒரு வர்க்கம் வளர்வதற்கு இது உதவியது. ஆங்கிலேயர் தமது நிர்வாகத்தைக் கவனிக்க, இந்த வர்க்கத்தினரை உபயோகித்தமையால் காலனித்துவ சுரண்டலின் ஒரு பகுதி இவர்களுக்கும் கிடைக்கப்பெற்றது.

 இவர்கள் வளங்களைத் தாமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றிக் குறிப்பிடத்தக்க பலம் வாய்ந்த வர்க்கமாக வளரத் தொடங்கினர். தமது செல்வம் பெருக அவர்கள் மேலதிக உரிமைகளைக் கோரினர். பல காலனித்துவ நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு இது சிக்கலைத் தோற்றுவித்தது. தற்போது கெயிட்டி என்றழைக்கப்படும் சென்.டொமினிக்கில் சீனி உற்பத்தியின் பின்னணியில் வளர்ச்சியடைந்த Mullattoes என்றழைக்கப்பட்ட கலப்பினத்தவர்கள் தாம் வெள்ளையர்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்று தொடங்கிய போராட்டம் காலனியத்துக்கு எதிரான மாபெரும் புரட்சிக்கு வித்திட்டது. பிரெஞ்சுப் புரட்சியால் உந்தப்பட்டு அவர்கள் சம உரிமை கோரி பிரெஞ்சுச் சட்டமைப்புச் சபைக்கு (Constituent assembly) கோரிக்கை விட்டதும், பிரெஞ்சுப் புரட்சி தற்காலிகமாக அடிமைத்தனத்தை இல்லாதொழித்தமையும் நாமறிந்ததே. ஏனைய காலனிகளும் சென். டொமினிக் வழி செல்லாதிருக்க ஆட்சியாளர்கள் ஆவனை செய்து வந்தனர்.

srilankan_tea_estate1சென்.டொமினிக் புரட்சி போலன்றி இந்தியா, இலங்கை வாழ் பிரபுக்கள் மிகக் குறைந்தளவு சீர்திருத்தங்களையே கோரி நின்றனர். தேயிலை வியாபாரம் உருவாக்கியிருந்த வசதியான இலங்கைச் செல்வந்தர்களும் சலுகைகளையும் சீர்திருத்தங்களையும் கோரினர். தமது வசதி காரணமாக ஏனைய மக்களின் மத்தியில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்த, உயர் அந்தஸ்துக்காகப் போராடிய இவர்கள் ஆங்கிலேயர்கள் எல்லோரையும் போல் தம்மையும் தரக்குறைவாக நடத்தியதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனைய வறிய மக்களைவிட தமக்குத் தனிச்சலுகைகள் வேண்டும் என்று கோரினர்.

இதன் அடிப்படையில், 1885இல் இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்து இராணிக்குத் தமது விசுவாசத்தை உறுதி செய்துகொண்ட இவ்வமைப்பு ஒரு 'இந்துக் கட்சியாகவே' ஆதிக்க சக்திகளின் கட்சியாகவே உருவாக்கப்பட்டது. 1919ல் உருவாக்கப்பட்ட இலங்கை காங்கிரசும் இதைப் போலவே ஆதிக்க சாதி, ஆதிக்க வர்க்கத்தினரின் சலுகைகள் கோருவதற்காக உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து 'சுதந்திரம்' பெறுவது பற்றிய எந்தப் பேச்சு மூச்சும் அத்தருணம் இவர்களிடம் இருக்கவில்லை.

கிறித்தவ மதப்பிரச்சாரத்துக்கு எதிரான சுதேசி மதங்களின் கிளர்ச்சி

 சுதேசிச் செல்வந்தர்கள் தமது பிள்ளைகளை ஆங்கிலேயரின் பிள்ளைகள் படிக்கும் நல்ல பாடசாலைகளுக்கு அனுப்ப விரும்பினர். மிக வசதியான பாடசாலைகளுக்குள் நுழைய முடியாவிட்டாலும் இவர்களால் தமது பிள்ளைகளைக் கிறித்தவப் பாடசாலைகளுக்கு அனுப்ப முடிந்தது. கிறித்தவ பாதிரிகளால் மதப்பிரச்சாரத்தையும் நோக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இப்பாடசாலைகளில் இவர்கள் கிறித்தவக் கல்வி கற்றனர். சிலர் பாதிரிமார்களின்  வீடுகளில் அல்லது அவர்களால் மிகவும் இறுகிய கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட விடுதிகளில் தங்கிப் படிப்பைத் தொடர நேரிட்டது.

படிப்பு முடிந்து வீடு திரும்பியதும் அவர்கள் தமது சொந்த மதத்தைக் கண்டுபிடித்தனர். அதே இறுக்கமான, பலசமயங்களில் கொடூரமான கிறித்தவ பாணியில் இவர்கள் தமது மதத்தைப் பின்பற்றத் தொடங்கியதும் பிரச்சாரிக்கத் தொடங்கியதும் இவர்களைக் கிறித்தவப் பாதிரிமார்களுக்கெதிராக நிறுத்தியது. நிறவேறுபாட்டைக் காட்டித் தாழ்வாக நடத்தப்பட்ட நிலையை எதிர்க்கும் முகமாக இவர்கள் தேடிய சொந்த மத அடையாளம் -அவர்களிடம் இருந்த கிறித்தவ மத எதிர்ப்பு – அவர்களை ஒட்டுமொத்தமாகக் காலனியாதிக்கத்துக்கு எதிராக மாற்றியது.

இந்தியாவில் சிறி அரபிந்தோ, தயானந்த சரஸ்வதி போன்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்துத்துவ மறுமலர்ச்சி இயக்கம் கிறித்தவ மதப்பிரச்சாரங்களை எதிர்த்த நிகழ்வாகவே தொடங்கி, பின் காலனியாதிக்கத்துக்கு எதிராக மாறியது. பல சமயங்களில் இவர்கள் கிறித்தவ மதப்பிரச்சாரிகள் உபயோகித்த அதே வன்முறை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்ததை அவதானிக்கலாம். லண்டனில் இருக்கும் சென்.போல் பாடசாலையில் கல்வி கற்ற சிறி அரபிந்தோ சிறப்புச் சித்தியடைந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கிங்ஸ் காலேஜில் கல்வி பயின்றவர். அவரது பின்நாளைய காலனியெதிர்ப்பு நடவடிக்கைகள் அப்படியே கிறித்தவப் பிரச்சார நடவடிக்கைகளை ஒத்ததாக இருப்பதை அவதானிக்க முடியும். பின்பு வன்முறையைத் தூண்டிய இந்திய சுதந்திரக் கோரிக்கையை வைத்த இந்திய தேசியக் குழுவுக்கு இவர் தலைமை தாங்கியது ஆச்சரியமான விடயமல்ல.

 இலங்கையில் புத்தமதம் சார்ந்த 'மறுமலர்ச்சி' இயக்கத்தை அநகாரிக தர்மபாலவும், இந்துத்துவ தேசியத்தை ஆறுமுக நாவலரும் முன்னின்று வளர்த்தனர். அரபிந்தோவைப் போலவே இவர்களும் மிகவும் கட்டுப்பாடான கிறித்தவப் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மதத்தலைவர்கள் வழிநடத்திய வன்முறைக் கலவரங்கள்

ஆங்கிலேய மொழி பேசிய சுதேசிச் செல்வந்தர்கள் நினைத்துப் பார்த்திருக்க முடியாத முறையில், அவர்கள் கனவிலும் சாதித்திருக்க முடியாத வகையில் மதம்சார் தலைவர்கள் பெரும்பான்மை மக்களின் ஆதரவை மத அடிப்படையில் வென்றெடுக்கக் கூடியதாகவிருந்தது. பெருங் பொதுகூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. தாமாகப் பெரும்பான்மை மக்களின் செல்வாக்கைப் பெறமுடியாத செல்வந்தர்கள் சந்தர்ப்பத்தைப் பாவித்து மதம்சார் இயக்கத்தின் பின்னால் தம்மையும் இணைத்து ஆதரவைப் பெற முயன்றனர். இருப்பினும், அவர்கள் எதிர்பாராத விதத்தில் வேகமாக வளர்ந்த மத இயக்கத்திற்கு, இவர்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கவில்லை. இந்த மத எழுச்சிகள் பெரும்பாலும் ஆதிக்க மதம் சார்ந்த எழுச்சிகளாகவே இருந்தமையையும் இங்கு குறிப்பிடவேண்டும். இந்த ஆதிக்க மதத் தலைவர்கள் கிறித்தவ மதத்தவர்களை மட்டுமின்றி ஏனைய சிறுபான்மை மதத்தினரையும் கடுமையாகத் தாக்கினர்.

19ஆம் நூற்றாண்டில் இலங்கை வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்களும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுமே. உதாரணமாக, 1880களில் கொழும்பு புறக்கோட்டை (பெட்டா) வர்த்தகம் 86 நாட்டுக்கோட்டைச் செட்டிகளினதும் 64 முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களினதும் கையிலிருந்தது. ஒரு சில வர்த்தகர்கள் மட்டுமே சிங்கள புத்த பின்னணியிலிருந்து வந்திருந்தனர். இதே பெட்டாவில் தளபாடக் கடை வைத்திருந்த சிங்கள பௌத்த வியாபாரியின் மகனான  அநகாரிக தர்மபால முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான பிரச்சாரத்தைப் பலமாகத் தூண்டிவிட்டார். 1915ல் அவர் எழுதிய குறிப்பு ஒன்று இந்தப் பிரச்சாரம் எவ்வளவு கேவலமான முறையில் நிகழ்த்தப்பட்டது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

 "முஸ்லிம்கள் வேற்றூரார். யூதர்களைப்போல் 'ஷைலோக்'கிய முறைகளால் செல்வம் சேர்க்கிறார்கள். கடந்த 2358 ஆண்டுகளாக இந்த நாட்டின் மைந்தர்களான சிங்களவர்கள் வேற்று நாட்டவர்களிடம் இருந்து தமது நாட்டைக் காக்கக் கடுமையாகப் போராடி அவர்கள் இரத்தம் ஆறாக ஓடியுள்ளது. ஆனால் ஆங்கிலேயர் சிங்களவர்களை நாடோடிகள் போல் நடத்துகிறார்கள். இந்த வேற்று நாட்டு இந்திய முகமதியர் சிலோனுக்கு வந்து வியாபார அனுபவமற்ற சிங்களக் கிராமங்களைக் கண்டதும் தம் செல்வம் நிரப்ப அதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்த நாட்டின் மைந்தர்களான சிங்களவர்கள் எதுவும் அற்றவர்களாக்கப்படுகிறார்கள்."

மேற்கண்டது போன்ற இனவாதப் பிரச்சாரங்களை அநகாரிக தர்மபால தெற்கெங்கும் செய்தார். 2358 ஆண்டுகள் என்று தாம் ஏதோ விஞ்ஞான பூர்வமாகக் கணித்தது போல் மக்களுக்குப் பல புலுடாக்களை விட்டுத் தம்மைப் புத்திசாலிகளாக் காட்டிக்கொள்ள முயன்றனர். ஆங்கிலேயர் முதன்முதலில் ஏற்படுத்திய கண்டிய ஒப்பந்தத்தின் நூற்றாண்டு நினைவு ஆண்டான 1915ல் காலனியாதிக்கத்திற்கு எதிரான உணர்வு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. பௌத்த மத அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமத்து வறிய மக்கள் மத்தியில் மத உணர்வு தேசிய உணர்வாக மாறிக்கொண்டிருந்த தருணமது. மேற்கண்டது போன்ற பிரச்சார நடவடிக்கைகள் முத்திப்போய் இதே ஆண்டு மே மாதம் முஸ்லிம்களின் மேலான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 35 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 198 பேர் படுகாயம் அடைந்தனர். 86 மசூதிகளும் 17 கிறித்தவ ஆலயங்களும் உடைக்கப்பட்டன. 4000க்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டன.

ஏற்கனவே இந்தியாவில் இதுபோன்ற வன்முறைகள் தமது அதிகாரத்துக்கு எதிராகத் திரும்பிருப்பதை அறிந்திருந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் உடனடியாகச் செயலில் இறங்கினர். அவர்கள அநகாரிக தர்மபாலவின் சகோதரர் உட்படப் பலரைக் கைது செய்தனர்.

தாக்கப்பட்ட முஸ்லிம்களில் ஏராளமானவர்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தமை கவனிக்கப்பட வேண்டியது. 'தென்னிந்திய முகமதியர்' என்று குறிப்பிட்டு அநகாரிக தர்மபால தொடர்ந்து தாக்கி வந்தது தமிழ் பேசும் முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்த்தே. ஆனால், இலங்கைத் தமிழ் இந்துமத ஆதிக்க வர்க்கத்தினர் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுக்கெதிரான தாக்குதலை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. மாறாக, அவர்கள் அநகாரிக தர்மபால கோஷ்டியைக் காப்பாற்ற ஓடோடிச் சென்றனர். பெயர்பெற்ற வலதுசாரித் தமிழ்ச் செல்வந்தரான பொன்னம்பலம் இராமநாதன் பல கூட்டங்களில் பங்காற்றி பிரித்தானியர் கலவரத்தை அடக்கியமுறையை வன்மையாக கண்டித்தார். இங்கிலாந்து வரை பிரச்சனையை எடுத்துச் செல்லும்படி அவரது அநகாரிக தர்மபால ஆதரவு பிரச்சாரமும் செயல்களும் முடுக்கிவிடப்பட்டன.

பிரித்தானிய ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகச் சிங்கள் மக்கள் மத்தியில் பார்க்கப்பட்ட இராமநாதன் அதே தருணம் முஸ்லிம் மக்களைப் புறந்தள்ளி ஏதிலிகளாக்கினார். இதே பாணியில் பின்பு அவர் ஆதிக்க சக்திகளுடன் கூடி மலையகத் தமிழ்பேசும் மக்களுக்கெதிரான தாக்குதலுக்கு ஆதரவு வழங்கினார்.

தமிழ் இந்துத்துவ ஆதிக்க மனப்பாங்கை வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர் நல்லூர் நாவலர் என்றழைக்கப்பட்ட ஆறுமுகம் பிள்ளையாவார். "பறை, பள்ளர், பெண்கள் ஆகியோர் அடிவாங்கப் பிறந்தவர்கள்" என்றும், -இதுபோன்ற பல காட்டுமிராண்டித்தனமான கதைகளை எழுதிய இந்த பிள்ளைவாளை அறிஞராக நாவன்மை கொண்டவராகக்  கொண்டாடியது இந்துத்துவ அதிகார வர்க்கம். ஒடுக்கபட்ட சாதியினரும் பெண்களும் பாடசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பைச் செய்தவர் ஆறுமுகம் பிள்ளை. இவர் வடக்கில் ஒடுக்கப்படும் சாதிகளுக்கு எதிரான கோரக் கலவரங்களைத் தூண்டிவிட்டவர்.

(தொடரும்)

- சேனன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

ஆயிரக்கணக்கில் தமிழ்பேசும் மக்களை இலங்கை இனவாத அரசு படுகொலை செய்ததைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் இளையோர் பலர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைய முன்வந்துள்ளனர். இந்த போராட்ட உணர்வை தமக்கு சாதகமாகப் பாவித்து பலம்பெற முயற்சிக்கின்றன இந்திய-இலங்கை வலது சாரிக் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் பல. இது மீண்டும் ஒடுக்குமுறைக்கு எதிரான பலம்பொருந்திய சக்தி உருவாகுவதைத் தடுக்கும் முயற்சி. ஆனால் இதை நாம் ஒரு வசனத்திற் சொல்லி இளையோருக்குப் புரியவைத்துவிட முடியாது. அதிகாரம் சார்ந்து இயங்குபவர்களை சரியானபடி எதிர்கொள்ள நாம் பல்வேறு விவாதங்களை பொதுத் தளத்தில் நிகழ்த்தி போராட முன்வருபவர்களின் அறிதலை-தேடலை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது.

srilankaஇதில் முக்கியமாக இலங்கை போராட்ட வரலாற்று பின்னனியை – ‘இனப்பிரச்சினை’ என்று பொதுவாக குறிக்கப்படும் வரலாற்றை சரியானபடி தெரிந்து கொள்ளுதல் -விவாதித்தல் அத்தியாவசியமாக இருக்கிறது. அவரவர் தமக்கு சாதகமாக வரலாற்றை திரித்தும் குறுக்கியும் பார்க்கும் இக்காலகட்டத்தில் விவாதத்தின் மூலம் - கலந்துரையாடல்கள் மூலம் மட்டுமே நாம் சரியான அறிதலை நோக்கி போராட்ட சக்திகளை நகர்த்த முடியும்.

இருப்பினும் நானறிந்த மொழிகளில் இலங்கை போராட்ட வரலாறு பற்றி உருப்படியான எந்த புத்தகங்களும் இன்றுவரை வெளிவரவில்லை. நானறிந்த மொழிகளில் வெளிவந்த அனைத்து புத்தகங்களையும் படித்த தெனாவெட்டில் நாமதை சொல்லவில்லை. படிக்கவேண்டியது இன்னும் ஏராளம் உண்டு. இருப்பினும் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இலங்கை போராட்ட வரலாற்றுடன் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்ட முறையிலும் - அதிகாரம் சார்ந்தும் ஒடுக்கப்படுபவர்கள் சார்ந்தும் இயங்கும் பலருடன் நேரடியாக எதிர்த்து உரையாடிய அனுபவத்தாலும் - வருசக்கணக்கில் தொடர்ந்து படித்தும் ஆய்வுகள் செய்துவருவதாலும் - நானறிந்த அளவில் இலங்கை போராட்ட வரலாறு இதுவரை யாராலும் எழுதப்படவில்லை என்பதை துணிந்து கூறமுடியும். இதை எழுதவேண்டிய அத்தியாவசிய தேவையான இக்காலகட்டத்தை கருத்தில் கொண்டு இதற்கான முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டியதாயிற்று.

இருப்பினும் சுருக்கம் கருதி இங்குகூட நாம் முழுமையான வரலாற்றை எழுதவில்லை. விவாதங்கள் உரையாடல்களைப் பொருத்து பல பகுதிகளை பின்பு நாம் சேர்த்துக்கொள்ளலாம். தவிர இந்த வரலாற்றை எழுத வேறு பலரும் முன்வருவர் என்றும் ஒரு நப்பாசை நமக்குண்டு! இன்றய காலத்தேவையை ஒட்டிய முக்கிய விசயங்களை மட்டுமே நாம் இங்கு மேலோட்டமாக தொட்டுச் செல்கிறோம். கேள்விகள் கேட்டபடி படியுங்கள்.

வரலாறு பற்றி ஒரு குறிப்பு

மதம்சார் பழைய ஆவனங்கள் மற்றும மன்னராட்சிகால எச்சங்களைக் கொண்டு பழைய வரலாற்றை கட்டமைப்பது இதுவரை உலகெங்கும் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இதன் பற்றாக்குறையை நாம் இன்று தெரிந்து கொண்டபோதும்கூட பழையன கழிதல் செய்து சிந்திக்க முடியாதவர்களாகவே இருக்கிறோம். உதாரணமாக இலங்கையில் இன்றும் புத்தமதம் சார் பழைய ஆவணங்கள் மற்றும் அதுசார் வரலாற்றைக் கொண்டு சிங்கள இனவெறி கட்டமைக்கப்படுவதை நாமறிவோம். துட்டகைமுனுவுக்குப் பின் நாட்டை ஒன்னறிணைத்த மாபெரும் மன்னராக சித்தரிக்கப்படுகிறார் தற்போதய ஜனாதிபதி. இதை சரியானபடி எதிர்கொள்ள வக்கற்ற தமிழ் இனவாதிகளும் காலாவதியாகிப்போன பழங்கதை பேசி இனவாத தேசியத்தை எதிர்ப்பாக காட்ட முற்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகளால் ஒடுக்கப்படும் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் தாம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மட்டுமே இது உதவி வருகிறது.

காலனித்துவ காலத்துக்கு முன்பு மன்னர்களுக்காக அடிபட்டு செத்த தமிழ் சிங்கள முஸ்லிம் மற்றும் பல்வேறு இன மொழி அடையாளங்களைக் கொண்ட மக்களுக்கு அந்த அடையாளங்கள் சார்ந்த தேசிய எல்லைகள் இருக்கவில்லை. இவர்களை ஆட்சி செய்த மன்னர்கள் தொடர்ந்து இவர்கள் மத்தியில் இருந்து வந்தவர்கள் இல்லை. நிலத்துக்காக அடிபட்ட இராஜ குடும்பங்கள் நிலப்பிரதேசத்தை கைப்பற்றியபோது இந்நிலத்தில் வாழ்ந்த மக்களையும் ‘சொத்தாகக்’ கைப்பற்றினர். ‘தமிழர்’ ‘சிங்களவர்’ ‘முகமதியர்’ என்று பல்வேறு இன அடையாளங்களைக் கொண்ட மன்னர்களின் ஆட்சியின் கீழ் பல்வேறு இன அடையாளங்களைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தது சகஜமான ஒரு விடயமே. இராஜ குடும்பங்களுக்கிடையில் இன அடையாளத்தை தாண்டிய திருமண உறவுகள் இருந்ததும் அறிவோம். நிலத்தை ஆட்சி செய்தல் கருதி மன்னர்கள் தமக்குள் உறவுகளையும் பகைகளையும் வைத்துக்கொண்ட போதும் மக்களை தமது கட்டுப்பாட்டில் வைக்க - தமக்காக யுத்தத்தில் ஈடுபட வைக்க இவர்களுக்கு கட்டுப்படுத்தும் அடையாளம் தேவைப்பட்டது. மன்னராட்சிக் காலத்தில் இதற்கு உதவிய முதன்மை அடையாளம் மத அடையாளமே. மதத்தை வைத்து தேச எல்லைகள் தீர்மானிக்கப்பட்டன.

பழைய இலக்கியங்களில் வரும் தமிழ் சிங்களம் என்ற அடையாளக் குறிகள் பெரும்பாலும் இராஜ குடும்பத்தவர்களையும் அவர்சார் மதம் மொழி பற்றியும் குறிப்பவையே என்பதையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். பெரும்பான்மை பழைய இலக்கியங்கள் சாதாரன மக்கள் பற்றி குறிப்பாக ஒடுக்கப்படும் மக்கள் பற்றி பேசியது கிடையாது. மன்னர்கள் மத்தியில் இருந்ததுபோல் பல்வேறு அடையாளங்களை கொண்ட சாதாரன மக்கள் மத்தியில் பெரும் பகைமை இருந்ததில்லை. எவ்வாறு வெவ்வேறு அடையாளங்களைச் சேர்ந்த மக்கள் நெருங்கிய உறவுகள் வைத்திருந்தனர் என்பதற்கு இன்று நாம் பார்க்கும் மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையிலான நெருங்கிய ஒற்றுமை சான்று. மக்கள் மத்தியில் பகைமை ஏற்படுதலை மன்னர்கள் தீர்மானித்தனரே அன்றி இது மக்களின் தேர்வு அல்ல. பிற்காலத்தில் இன அடையாளம் வலுப்பெற்றது ஆளும் வர்க்கத்தின் அதிகார மையக்குவியலுடன் சம்மந்தப்பட்டது.

இலங்கை வரலாறு ஒருபோதும் ‘ஒற்றைத் தீவு’ வரலாறாக இருந்ததில்லை. பலர் இன்று பசப்புவதுபோல் காலம் காலமாக அங்கு மூன்று அரசுகள் நிலவி வரவில்லை. மூன்றுக்கும் மேற்பட்ட பல்வேறு அதிகார மையங்கள் அடிக்கடி மாறிய எல்லைகளுடன் இயங்கி வந்தததே இத்தீவின் கதை. யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த ஒரு ‘தமிழ் அரசு’ இருந்ததுபோல் இன்று பசப்பப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. யாழ்பாணத்துக்குள்ளேயே பல்வேறு தமிழ் அரசுகள் இருந்ததாகவே வரலாறு. நாம் மேற்சொன்னபடி அக்கால அரசுகள் நிலத்தையும் அதன் எல்லைகளையும் குறித்ததே அன்றி அதற்குள் வாழ்ந்த மக்களின் இன அடையாளத்தைக் குறிக்கவில்லை என்பதையும் இங்கு அவதானிக்க. பரந்த எல்லைகள் மற்றும் இனம் மற்றும் வேறு அடையாளங்கள் சார் அதிகார எல்லைகள் காலனித்துவ காலத்தின் பிறகே ஆரம்பிக்கின்றது.

மேற்கண்ட புள்ளிகளை நாம் ஞாபக படுத்தவேண்டியிருப்பதற்கு காரணமுண்டு. தற்காலய இலங்கை வரலாற்றாசிரியர்கள் இனவாரியாக பிரிந்து நின்று தனித்தனி வரலாறுகளை எழுதி வருகிறார்கள். இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கு இந்தியத் தமிழ் பேசும் மக்களுடன் இருக்கும் இன கொழி கலாச்சார உறவை காரணமாக வைத்து இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாறு என்றும் இந்திய வரலாற்றின் பகுதியாகவே பேசப்படுகிறது. அதே தருணம் இலங்கை வரலாறு ‘சிங்கள அரசுகளின்’ வரலாறாக திணிக்கப்படுகிறது. இலங்கை வரலாறு என்று முழுத்தீவும் சார்ந்த வரலாற்றை யாரும் எழுத முன்வரவில்லை. தவிர காலனித்துவ காலத்துக்குப் பின்புதான் ‘இலங்கை வரலாறு’ என்ற கண்ணோட்டம் எழுந்தததையும் நாம் அவதானிக்க வேண்டும். இதன்காரனமாக காலனித்துவ அதிகாரத்தின் பார்வையிலேயே வரலாறு கட்டப்பட்டது. வரலாற்று ஆவணங்களின் காலனித்துவ ‘மொழி பெயர்ப்பையே’ நாம் உண்மை வரலாறாகப் பார்க்க பணிக்கப்பட்டோம். இன்றும் நவீன வரலாற்று நடைமுறைகளை முதன்மைப்படுத்தி பண்டய வரலாறை வரலாற்றாசிரியர்கள் அணுகுவதை அவதானிக்கலாம். பற்றாக்குறையை தெரிந்து கொண்ட நிலையில் மீண்டும் மீண்டும் நாம் காலனித்தவ உரைநடையில் தொங்கிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

பிரித்தானியப் பிரித்தாளும் உத்தியும் தமிழருக்கு எதிரான கண்டிய பௌத்த விரோதமும்

பழமைக்குள் புதைந்திருக்கும் பல வலதுசாரிய வரலாற்றாசிரியர்கள் கண்டும் காணாமல் புறக்கணிக்கும் மிக மிக முக்கிய விசயங்கள் பல உண்டு. இவர்கள் தாம் சொல்லும் வரலாற்றுக்குள் முக்கிய வரலாற்று குறிப்புகளை இருட்டடிப்பு செய்வதன்மூலம் வலது சாரிய அதிகாரத்துக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாமல் காப்பாற்றுகிறார்கள். இவற்றைத் தோண்டியெடுத்து பகிரங்கப்படுத்துவது இன்று போராளிகளின் வரலாற்றுக்கடமை.

உதாரணமாக புத்த மதம் என்பது எவ்வாறு ஒரு ‘இனத்தின் மதமாக’ இலங்கையில் மாறியது என்பது பற்றி பலரும் கண்டுகொள்வதில்லை. பல இனத்தவர்களும் புத்த மதத்தை கடைப்பிடித்து வந்துள்ளார்கள். புத்தத்தின் ஒரு பிரிவான மாகாயன புத்தம் தென்னிந்தியாவில் உருவானதாகவும் கருதப்படுகிறது.

இந்துத்துவ சாதிய நடைமுறைக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படை பௌத்த மதம் தோன்றியதற்கான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பௌத்த காலத்தின் பின் இந்துத்துவ 'மறுமலர்ச்சி' இயக்கம் மீண்டும் இறுகிய சாதிய அடக்குமுறையை நிறுவியதுடன் பௌத்தத்துக்கு எதிரான கொடும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. புத்த விகாரைகள் உடைக்கப்பட்டு அங்கு இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன. ஆயிரக்கணக்கில் புத்தமதம் சார்ந்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் சுங்கா ஆட்சிக் காலத்தில் வட இந்தியாவிலும் ஆறு ஏழாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் பரவிய பக்தி இயக்க காலகட்டத்திலும் புத்த சமயத்தவர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டார்கள். இந்து மதத்தவருக்கு எதிரான பௌத்த மத விரோதத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

இருப்பினும், இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு எதிரான 'சிங்கள புத்த' விரோதத்துக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. நீண்டகால வரலாற்றுப் பின்னணி உண்டு. அதுபற்றி விரிவாகப் பேச இடமில்லாத போதும் முக்கியமாக கண்டி இராச்சியத்தை மையப்பட்டு வளர்ந்த விரோதம் பற்றிக் குறிப்பிடுதல் அவசியமானது.

புத்தமதத்தின் வளர்ச்சியின் மையமாக விளங்கியது அழகிய கண்டி மாநகர். இங்குதான் புத்தமதத்தின் புனிதத் தலமான புத்தரின் புனிதப்பல் இருக்கும் இடமாகக் கருதப்படும் - தலதா மாளிகை (Dalata Maligawa) இருக்கிறது. 19ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கண்டிக்கு ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு 70 வருடங்களுக்கும் மேலாகக் கண்டியில் ஆட்சி செய்து வந்தவர்கள் தெலுங்கு - தமிழ் கலப்புப் பின்னணியைச் சேர்ந்த நாயக்க மன்னர்கள் (1739-1815).

கடைசி நாயக்க மன்னனின் வீழ்சிக்குப்பின் புத்தகுருக்களால் எழுதப்பட்ட இரு இலக்கியங்கள் ;(Kirala Sadesaya (KS), Vadiga Hatana(VH)) முதற்தடவையாக மொழியை இனமயப்படுத்தி தாக்குதல் செய்வதைக் காணலாம். மரியாதைக்குரிய உயர்குடிகள்மேல் நன்றிகெட்ட ‘தமிழன்’ தாக்குதல் செய்கிறான் என்று இந்த இலக்கியம் பிரச்சாரிக்கிறது(KS). கண்டிய குருசபையை எவ்வளவு குரூரமாக ‘தமிழ் மன்னன்’ நடத்துகிறான் என்று இரு இலக்கியங்களும் நீண்ட வர்ணனைகளைக் கொடுக்கின்றன. முக்கியமாக முதல் மந்திரியாக இருந்த கேலபோல ஆங்கிலேயர்களுடன் இணைந்து மன்னரை எதிர்த்தமையால் எவ்வாறு கொடூராமாக சாகடிக்கப்பட்டார் என்றும் அவரது குடும்பம் எவ்வளவு கொடுமையாக வேட்டையாடப்பட்டது என்றும் இவ்விலக்கியங்கள் வர்ணிக்கின்றன. ‘தமிழ் மன்னன்’ என்று கருதப்பட்ட விக்கிரம ராஜசிங்க மேல் ஏற்பட்ட வெறுப்பை இந்த இலக்கியம் எவ்வாறு ஒட்டுமொத்த ‘தமிழர்’ மேல் திருப்புகிறது என்பதை அவதானிக்கவும். இந்த நடைமுறை இலங்கையின் முதலாவது இனவெறி நடைமுறையாக கருத இடமுண்டு.

இருப்பினும் வரலாறு அவ்வளவு சுலபத்தில் இலகுபடுத்தபடக்கூடியதல்ல. இந்த இலக்கியங்களுக்கூடாக வெளிப்படும் புத்தகுருசபையின் தாக்குதலை நுணுக்கமாக அவதானிப்போமானால் மதரீதியிலான மோதல் முதன்மைப்பட்டிருந்ததையும் அது எவ்வாறு இன எதிர்ப்பாக திரிந்தது என்பதையும் நாம் அவதானிக்க முடியும். மத ரீதியிலான பகைமையை வளர்த்தது ஆதிக்கசாதிய இந்து மத பூசகர்களும் ஆதிக்கசாதிய புத்தகுருக்களுமே என்பதையும் அவதானிக்க முடியும். ‘சாம்பலை ஏதோ பெரிய விசயமாக நினைத்து அப்பிக்கொண்டு பூசணிக்காய்போல் வலம் வரும் தமழர்’(VH) என்று திட்டும் முறைக்குள் இருக்கும் உயர்சாதி இந்துக்களின் மேலான எதிர்ப்பை அவதானிக்க. பெரும்பான்மை இந்துக்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தமையால் இந்துத்துவத்தின் மேலான எதிர்ப்பு தமிழர் மேலான எதிர்ப்பாக திரும்பியதையும் அவதானிக்க. இதை ஆங்கிலேயர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டனர். பிரித்தாளும் உத்தியைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்களுக்கு இது வழியேற்படுத்தியது.

பிரித்தாளும் உத்தி பிரித்தானியர்களின் கண்டுபிடிப்பல்ல. மாறாக அதிகாரத்தைக் கைப்பற்ற அதிகார வர்க்கம் காலம் காலமாக பாவித்துவந்த உத்தி அது. கண்டிய அரசுடன் நேரடி யுத்தத்தில் இறங்கினால் தாம் மிகவும் பலவீனப்படவேண்டும் என்பதை பிரித்தானிய காலனியாதிக்கத்தினர் தெரிந்திருந்தனர். ஆட்சியாளர் ஒரு பகுதியினருடன் இணைந்து மறு பகுதியைத் தாக்குவதால் தமக்கு பாதிப்பு குறைவு என்பதை தாம் ஆட்சியைக் கைப்பற்றிய பல இடங்களில் அவர்கள் கற்றுக்கொண்டிருந்தனர். டச்சு காலனியாதிக்கத்திடம் இருந்து இலங்கையைக் கைப்பற்றிய பின்பு 1796ல் இருந்து 1800 ஈறாக பிரித்தானியர் அறிமுகப்படுத்தியிருந்த கொடிய வரி முறைக்கு எதிராக பல்வேறு இடங்களில் எதிர்ப்பு வெடித்தது. பிரித்தானியரிடம் இருந்த துருப்புக்களின் தொகை இந்த கலகங்களை கட்டுப்படுத்தக்கூட போதுமானதாக இருக்கவில்லை. போதாக்குறைக்கு இந்த கலகங்களை செய்த எதிர்ப்பாளர்களுக்கு கண்டிய அரசு ஆள்வசதி உட்பட பல உதவிகளை வழங்கி வந்தது காலனியாதிக்கத்தினருக்கு சினத்தை உண்டுபண்ணியிருந்தது. கண்டிய அரசு தெற்கிலும் வடக்கிலும் என்று நாடெங்கும் நடந்த கிளர்ச்சிகளுக்கு உதவி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 1803ம் ஆண்டு கண்டிய அரசைக் கைப்பற்ற பிரித்தானியர் எடுத்த இரானுவ முயற்சி படுதோல்வியில் முடிந்தது.

இத்தருணத்தில் புத்த மதத்தைப் போற்றிப் பேணுவதில் தனித்துவமான அக்கறையுள்ளவர்களாகத் தம்மை நிலைநாட்டித் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த நாயக்க மன்னர்களுக்கு எதிரான புத்த குருக்களின் எழுச்சி ஆங்கிலேயர்களுக்கு பொன்னான சந்தர்ப்பத்தை வழங்கியது. ஆங்கிலேயர்கள் நாயக்கர் ஆட்சியை வீழ்த்துவதற்காகப் புத்தகுருக்களுடன் கூட்டு சேர்ந்தனர். இருப்பினும் அவர்களால் புத்தகுரு சபையிடம் இருந்த அதிகாரத்தை முற்றாக கைப்பற்ற முடியவில்லை. புத்த குருக்கள் மீண்டும் நாயக்கர்களுடன் சேர்ந்து தம்மைத் தாக்கலாம் என்ற பயமும் அவர்களுக்கு இருந்தது. இதனால் நாயக்கர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஆங்கிலேயர் மீண்டும் நாயக்கர்கள் தலையெடுக்காமல் இருக்க 1815இல் புத்தமத குருசபையுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். புத்தகுருக்கள் தமக்கெதிராக கிளர்ச்சியைத் தூண்டாமலிருப்பதற்காக நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தாமதித்த தருணத்தில் ஆங்கிலேயர் ஏற்படுத்திக் கொண்ட இந்த ஒப்பந்தம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. "சிங்கள மக்களின் பூமியை ஆட்சி செய்யும் எந்த உரிமைகளும் இனித் தமிழினத்துக்கு இல்லை என்பதை இப்பத்திரம் உறுதி செய்கிறது" என்ற வாக்குறுதியை இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் ஆட்சியை தம்மிடம் விட்டுவிடுவர் என எதிர்பார்த்த புத்தகுரு சபைக்கு விரைவில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது, விரைவில் தாம் வழங்கியிருந்த உறுதிமொழிகளைத் தூக்கியெறிந்த ஆங்கிலேயர்கள் அதிகாரத்தைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த புத்தகுரு சபை ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கியது.

ஏற்கனவே நாயக்க ஆட்சியாளர்களை முடிவு கட்டிவிட்ட ஆங்கிலேயர்களுக்குப் புத்தகுருக்களை ஒடுக்குவது சுலபமாகிப்போனது. 1817 மற்றும் 1818இல் நடந்த கிளர்ச்சிகளை மிக மூர்க்கமாக அவர்கள் ஒடுக்கினர். 1818ல் கிளர்ச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத் தொடர்ந்து ஆங்கிலேய காலனித்துவம் கண்டி ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து முழு இலங்கையையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர். முழு இலங்கையும் ஒரு காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.

- சேனன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It

உண்மையில் சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, கிளியோபாட்ராவின் வாழ்க்கையும் அந்நாளைய எகிப்து தேசத்தின் சமூக, அரசியல் நிலைமையும் சுவாரசியம் தரக்கூடியவை. 

cleopatraகிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அவனது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் இவள் பிறக்கும்போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறாள். முந்தைய ஏழு பேர் பெறாத பேரையும், புகழையும் இவள் எப்படிப் பெற்றாள் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள். 

முதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என்கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள். வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன. 

உதாரணமாக, வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. சும்மா மேக் அப் போட்டுக் கொள்ளுவதோடு விட்டு விடாமல், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான பர்ஃப் யூம்களைக் (செண்ட்) கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள்.

இதெல்லாம் போதாதென்று ஒன்பது மொழிகளில் எழுத, பேச, படிக்கவும் தெரியும். ஆச்சா? கிளியோபாட்ராவின் தந்தையான டாலமிக்கு வயசானதும் தன் மகளைப் பட்டத்தில் அமர்த்த விரும்பியிருக்கிறார். அந்தக் காலத்தில் எகிப்தில் ஒரு பெண் தனியாக ஆட்சி செய்வது முடியாது. ஆகவே, கிளியோபாட்ராவையும், அவளது தம்பியான டாலமியையும் சேர்த்து அரியணையில் உட்கார வைத்தார். அதாவது, கூட்டணி ஆட்சி! 

இதில் இன்னொரு கூத்தும் உண்டு. பெண் தனியாக ஆள முடியாது என்பது மட்டுமல்ல அப்போது தம்பியுடன் சேர்த்தும் ஆளமுடியாது! ஒரு வழி, யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு புருஷன் பொண்டாட்டியாக வேண்டுமானால் ஆட்சி செய்யலாம். ஆகவே கிளியோபாட்ரா, தன் 10 வயதுத் தம்பியான அந்த ஜூனியர் டாலமியையே திருமணம் செய்து கொண்டு எகிப்தின் ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து விட்டாள். ஆக, பதினெட்டு வயசு ராணி, பத்து வயசு ராஜா. ஆட்சியெல்லாம் சூப்பராகத் தான் நடந்தது. 

ஆனால் அந்தச் சின்னப் பையன் மனத்தைச் சில பேர் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். அவனுக்கு இன்னும் நாலைந்து வயசுகள் கூடுவதற்குள், அமைச்சர்களாக இருந்த சில வில்லன்கள், நீ உன் அக்காவைத் துரத்தியடி. முழு தேசமும் உன் கைக்கு வந்துவிடும். அவள் அதிகாரம் செய்ய, நீ சும்மா கையெழுத்துப்போடுவதில் என்ன பெருமை இருக்கிறது என்று தூண்டி விட்டார்கள். 

ஆகவே, அந்த ஜூனியர் டாலமியாகப்பட்டவன் தன் முன்னாள் அக்கா, இன்னாள் மனைவி என்றும் பாராமல் கிளியோபாட்ராவுக்கு எதிராக ஒரு குட்டிப் புரட்சியைத் தூண்டி விட்டு, அவள் உயிருக்கு உலை வைத்தான். தப்பிப்பிழைக்க விரும்பிய கிளியோபாட்ராவை சிரியாவுக்குத் தப்பியோட வழிவிட்டான். இந்தச் சமயத்தில்தான் (கி.மு.48) ஜூலியர் சீசர் எகிப்துக்கு வருகிறார். சீசருக்கு அறிமுகம் வேண்டியதில்லை அல்லவா? மாபெரும் ரோமானிய வீரர். அலெக்சாண்டருக்கு நிகராக சரித்திரத்தில் கொண்டாடப்படுகிற ஒரு ஹீரோ.

அப்பேற்பட்ட சீசர் தன் எதிரி ஒருத்தனைப் பழி வாங்கத் தேடிக்கொண்டு எகிப்துக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டாள் கிளியோபாட்ரா. அவரை வைத்து எப்படியாவது எகிப்து பீடத்தை பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்த கிளியோபாட்ரா, மிகுந்த நாடகத்தனம் கொண்ட, அதே சமயம் கவித்துவமான ஒரு உத்தியையும் கண்டுபிடித்தாள். தன் சேடிப்பெண் ஒருத்தியை அழைத்து, ஒரு பெரிய கார்ப்பெட்டுக்குள் தன்னை வைத்துச் சுருட்டி, உருட்டி தூக்கிக்கொண்டுபோகச் சொல்லி, சீசருக்கு முன்னால் உருட்டித் திறந்து விடச் சொன்னாள். 

மாபெரும் வீரரே! இதோ உங்களுக்கான பரிசு!

அசந்துபோனார் சீசர். அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட பேரழகி! கண்டதும் காதல் என்பார்களே, அந்த மாதிரி ஒரு இது வந்து விட்டது சீசருக்கு! கிளியோபாட்ராவுக்கு சீசரைக் காதலிப்பதிலேயோ, கல்யாணம் செய்து கொள்வதிலேயோ எந்தவித ஆட்சேபனையும் இருக்கவில்லை. 

அவளது நோக்கமெல்லாம், எகிப்து ஆட்சிப்பீடத்தை மீண்டும் பிடிப்பது. அதற்கு சீசர் உதவ முடியுமானால் அவரைக் காதலித்து டூயட் பாடுவதில் ஒரு தடையும் இல்லை! கசக்குமா சீசருக்கு? இயல்பிலேயே மாவீரர் அல்லவா? ப்பூ! இதென்ன பிரமாதமான காரியம்? இதோ ஒரே நாளில் எகிப்து ஆட்சியை உன்னுடையதாக்கி விடுகிறேன் பார் என்று போர் அறிவிப்பு வெளியிட்டு விட்டார். 

யுத்தத்தில் அந்த டாலமிப் பையன் தோற்கடிக்கப்பட்டதையும் கிளியோபாட்ரா மீண்டும் எகிப்து ராணியானதையும் ஹாலிவுட் சினிமாக்கள் மிகவும் பரவசத்துடன் காட்டி மகிழ்ந்தன. ஒரு தேரிலிருந்து சீசர் அந்தப் பையனின் தலையைக் கொய்து தூக்கி எறிவது போலவும் அது பறந்து போய் ஒரு மலை முகட்டில் முட்டி கீழே ஆற்றில் விழுவது போலவும் காட்டுவார்கள். 

இதெல்லாம் டூமச் என்றாலும் கிளியோ பாட்ரா மீண்டும் எகிப்து ராணியானது மட்டும் நிஜம். அவளது தம்பியும், கணவனுமான டாலமி அந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதும் உண்மையே. மீண்டும் எகிப்தின் மணிமுடியைப் பெற்ற கிளியோபாட்ரா, தொடர்ந்து சீசருடன் டூயட் பாடிக் கொண்டிருந்ததன் விளைவாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு டாலமி சீசர் என்று இரண்டு கணவர்களின் பேரையும் சேர்த்து வைத்து, சீராட்டி வளர்க்க ஆரம்பித்தாள்.அந்தக் குழந்தை சுகப்பிரசவமாக அல்லாமல் கிளியோபாட்ராவின் வயிற்றைக் கீறி, சீசராலேயே வெளியே எடுக்கப்பட்டது. முதல் முதலில் ஆபரேஷன் மூலம் பிறந்த குழந்தை அதுதான் என்பதாலும், அதைச் செய்தது சீசர்தான் என்பதாலும்தான் இன்றைக்கு வரை மருத்துவத்துறை, ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்ப்பதை சிசேரியன் என்று அழைக்கிறது! 

திருமணத்துக்குப் பிறகு கிளியோபாட்ரா தனது நம்பிக்கைக்குரிய மந்திரிகள் சிலரிடம் எகிப்தின் ஆட்சிப் பொறுப்பை அவ்வப்போது கொடுத்து விட்டு அடிக்கடி சீசருடன் ரோமுக்குப் போய் விடுவாள். அங்கே மாளிகையில் குழந்தையைக் கொஞ்சுவதும், தாலாட்டுவதுமாக அவளது பொழுது ஒரு டிபிகல் குடும்பத்தலைவியாகப் போய்க் கொண்டிருந்தது. 

திடீரென்று ஆட்சி ஞாபகம் வந்ததும் கிளம்பி எகிப்துக்கு வந்துவிடுவாள். அப்போது சீசர் பின்னாலேயே புறப்பட்டு எகிப்துக்கு வந்துவிடுவார். இது ரோமானிய முக்கியஸ்தர்களுக்குப் பெரிய எரிச்சலைத் தந்தது. ஒரு முகூர்த்தம் பார்த்து அவளுக்கு விஷம் வைத்துக்கொன்று விட்டார்கள்.

- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It