பதினாறாம் லூயி மரணத்துக்குப் பின் பிரஞ்சு நாட்டில் மன்னராட்சி ஒழிந்து குடியாட்சி மலர்ந்தது. ஆனால் இப்புதிய குடியாட்சியை சுற்றி உள்ள நாடுகள் அங்கீகரிக்கவில்லை. எனவே மன்னர் ஆட்சியை ஆதரிக்கும் நாடுகள் ஒன்று சேர்ந்து புதிய பிரஞ்சுக் குடியரசை எதிர்த்து கலகம் செய்யத் துவங்கின.

ஆங்கிலேயர்களின் தொல்லை தாங்க மாட்டாமல் தெளலான் என்ற கடற்கரைப் பட்டினத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரஞ்சு கடற்படையையும் படைக்கல ஆயுதக் கிடங்கையும் ஆங்கிலேயரிடமே பிரஞ்சு நாட்டவர் ஒப்படைத்துவிட்டு ஓடினர்.

தௌலான் துறைமுகத்தை மீட்கும் பொறுப்பினை பிரஞ்சுக் குடியரசு நெப்போலியனிடம் ஒப்படைத்தது. நெப்போலியனின் ஆவேசமான தாக்குதலைக் கண்டு ஆங்கிலேயர் தௌலான் துறைமுகத்தை விட்டு ஓடினர்.

தௌலான் வெற்றிக்குப் பின்னர் நெப்போலியன் புகழ் பரவியது. அதன் பின்னர் நெப்போலியன் பழுதுபட்டுக் கிடந்த பாண்டில் சிறையைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தபோது நெப்போலியன் மீது பொறாமை கொண்டிருந்த ஒரு கூட்டத்தினர் பிரஞ்சு அரசாங்கத்திடம் நெப்போலியன் குடியரசுத் தலைவர்களை சிறைப் பிடித்து அடைப்பதற்காகத்தான் இப்போது பாண்டில் சிறையை பழுது பார்க்கிறான் என்று புகார் செய்தனர். அதனை நம்பிய பிரஞ்சுக் குடியரசு நெப்போலியனை கைது செய்து செறையில் அடைத்தது. சுமார் 15 தினங்களுக்குப் பின் நெப்போலியனின் தன்னிலை விளக்கத்தினைப் பெற்று அவனை சிறையிலிருந்து விடுவித்தனர்.

அவர்கள் நெப்போலியனை உடனடியாக விடுவித்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. ஏனென்றால் பாரிஸில் அப்போது புரட்சி உச்சக் கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. அதனைத் தடுக்க நெப்போலியனைப் போன்ற துணிச்சலான மாவீரன் வேண்டும்.

பாரிஸ் நகரமெங்கும் சந்து பொந்துகளில் நெப்போலியனின் பீரங்கிச் சத்தம் கேட்டு கலகக்காரர்கள் நடுநடுங்கிப் போனார்கள். எங்கு பார்த்தாலும் பிணக் குவியலாகக் கிடந்தது. ஒரு மணிநேரத்தில் கலகத்தை ஒடுக்கினான் நெப்போலியன். கலகக்காரர்கள் வசம் இருந்த ஆயுதங்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

பிரபுக்கள் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையெல்லாம் பறிமுதல் செய்ய நெப்போலியன் உத்தரவிட்டான். அந்தக் காலத்தில் உயிரிழந்த பிரபு ஒருவனின் வீட்டிலிருந்த துப்பாக்கியைத் திரும்பப் பெறுவதற்காக அந்த இறந்து போன பிரபுவின் மகன் சிறுவன் ஒருவன் நெப்போலியனைத்  தேடி வந்தான். அவனது துடுக்குத்தனமும் புத்திசாலித்தனமும் பார்த்த நெப்போலியன் அவன் வீட்டில் பறிமுதல் செய்த ஆயுதத்தைக் கொடுத்தனுப்பினான்.

அதற்கு நன்றி சொல்வதற்காக அந்த பிரபுவின் மனைவி ஜோசப்பைன் என்பவர் நெப்போலியனை வந்து சந்தித்தாள். முப்பது வயது நிரம்பிய பேரழகியான ஜோசப்பைனைக் கண்டு மையல் கொண்டான் நெப்போலியன்.

தனது இதயத்தை அவளிடம் பறிகொடுத்த நெப்போலியன் அவளை மணந்து கொண்டான்.

- ஜெகாதா

(‘உலகை உலுக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள்’ நூலிலிருந்து)

 

Pin It