mahavamsa 400 இலங்கையை ஆளப்பிறந்த இனம் என உலக நாடுகளினால் குடமுழுக்குச் செய்யப்பட்டுள்ள சிங்களரின் வரலாற்றிலிருந்து தமிழ் ஈழனின் சோகத்திற்கான ஆதிமூலத்தை அறிந்து கொள்ள முடியுமா? எனற ஞானத்தேடலின் விளைவுதான் இந்த ‘மகாவம்சம்’ என்கிற சிங்கள பௌத்த நூலின் மொழிபெயர்ப்பு என்கிறார் அதனை மொழிபெயர்த்த ஈழத்தமிழன் எஸ். பொ அவர்கள். ஈழத்தமிழன் பிறந்த நாட்டிலிருந்து பலவந்தமாக அரச பயங்கரவாதத்தால் தூக்கி எறியப்பட்டவன், அகதிகளாக்கப்பட்டவன், உரிமைகள் மறுக்கப்பட்டவன், வாழ்வாதாரங்களிலிருந்து துண்டிக்கப்பட்டவன், புலப்பெயர்வு அவன் மீது திணிக்கப்பட்டது என்றாலும் யூதன் போலத்தான் அவன் ஒரு தாய்நாட்டினை நெஞ்சிலே சுமந்து வாழ்கிறான்….. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகேனும் யூதன் தனக்கான ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கிக் கொண்டான்…. இறையாண்மையுள்ள ஒரு சுதந்திர நாட்டினைத் தனது மூதாதையர் தவழ்ந்த மண்ணிலே வென்றெடுத்தான்….. சரித்திரம் மீண்டும் நிகழும் எனத் தமிழ் ஈழன் நம்புகிறான். “யூதனுக்குச் சாத்தியமானது எனக்கும் சாத்தியமே” என்கிற தவனத்திலும், தியானத்திலும், தவத்திலும் ஈடுபடும் உரிமையாவது தமிழ் ஈழனுக்கு இல்லையா என அவர் கேட்கிறார். சிங்களருக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்துவரும் தமிழ் ஈழன் கரைந்து வாழமாட்டான், அவன் தன் தனித்துவத்தில் செருக்குடையவன். அத்தனித்துவமே அவன் சேவிக்கும் மரபின் பிரம்மம். அதற்காக அவன் நவயூத இனமாக அலைந்து அல்லற்படத் தயங்கான் என எஸ்.பொ தனது முன்னீட்டை முடிக்கிறார்.

 சிங்கள பௌத்த நூலான மகாவம்சம் 37 அத்தியாயங்களைக் கொண்டது. மகாவம்சம் சிங்கள ஆதிக்க வெறியின் அத்திவாரமாகவும், மூலாதாரமாகவும், இருக்கிறது என்பதை, அரசியல்வாதிகளாலும் அவர்களை வழிநடத்துவதாக நடித்து, உண்மையில் அதிகாரத்தைத் தங்களுடன் தக்க வைத்துள்ள புத்த பிக்குகளாலும் சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கையின் ஆதிவரலாற்றை அறிவதற்கு, மகாவம்சம் நூலில் தூலமாகவும், அரிதான இடங்களில் பூடகமாகவும் கக்கப்படும் தமிழின விரோதப் பிரசாரங்களுக்கு அப்பாலும், மகாவம்சம் நூலை அறிதல் நல்லது என்கிறார் எஸ்.பொ அவர்கள். தமிழ் இனத்தின் பண்டைய உரிமை கோரலுக்கு வலுவான ஆதாரங்கள் கொண்ட சாசனம் இந்த மகாவம்சம். சிங்களரின் உரிமை பாராட்டுதல்கள் எவ்வளவு கொச்சையானவை என்பதைத் தெளிவதற்கும், அந்தக் கொச்சைகளைத் துணைப்பற்றித்தான் பிக்குகளும் அவர்களால் முன்னிறுத்தப்படும் அரசியல் தலைவர்களும் பரம்பரை பரம்பரையாகச் சிங்களரை தமிழர்களுக்கு எதிரான இனவாதிகளாக மாற்றுவதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பதையும் இந்நூலின் மூலம் அறியலாம் என்கிறார் எஸ்.பொ அவர்கள்.

மகாவம்சம்:

 இலங்கையின் பௌத்த மடாலயங்களில் சிதறிக்கிடந்த அத்தகதா கதைகள் தீபவம்சமாகத் தொகுக்கப்பட்டன. கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் “மகாநாமா” என்ற புத்த பிக்குவால் அரச ஆதரவோடு இந்த தீபவம்சம் நூல் திருத்தப்பட்டு இலக்கிய நயத்தோடு, ஓதுவதற்கு வசதியாக “மகாவம்சம்” எழுதப்பட்டது. பக்தர்களுக்கு அமைதியான இன்பமும், தெய்வீகப்பரவசமும் ஊட்டுவதற்காக இந்நூல் எழுதப்பட்டதாக அந்நூலின் துவக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. சிங்களக்குடியேற்றத்திற்கு முன்பு இலங்கையின் வடபகுதியில் நாகர்களும் தெற்கே அசுரர்களான யட்சர்களும் வசித்து வந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. நாகர்கள் தமிழ் பேசிய சாதியார் அல்லது தொல் திராவிடர் என வரலாற்று நூலார் கருதுகின்றனர்(மகாவம்சம், பக்:8).

 புத்தர் இலங்கைக்கு மூன்றுமுறை பயணம் செய்தார்(மகாவம்சம், பக்:12), அவர் இலங்கையில் புத்த மதம் பரவுவதற்காக அங்கு வாழ்ந்த பாரம்பரியக் குடிகளான யட்சர்களின் மனதில் அச்சத்தை உருவாக்கி மத்திய மலைப்பகுதியிலுள்ள காடுகளுக்கு அவர்களை புத்தரே முன்னின்று வெளியேற்றினார்(மகாவம்சம்பக்:4-7). இலங்கையில் புத்தர் அமர்ந்து யட்சர்களுக்கு அச்சமூட்டி அவர்களை வெளியேற்றிய அதே இடத்தில்தான் புத்தரின் தலைமயிரும் எலும்பும் புதைக்கப்பட்டு அங்கு மகியங்கண தூபம் துவங்கப்பட்டது. அதனை தமிழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்ட துட்டகாமினிதான் இறுதியில் கட்டி முடித்தான்(மகாவம்சம், பக்:5-7). ஆதிகுடிகளான யட்சர்களை புத்தரே முன்னின்று வெளியேற்றியபின் துவங்கப்பட்ட மகியங்கண தூபத்தை, சிங்கள மாவீரன் துட்டகாமினி தமிழர்களுக்கு எதிரான போரின்போது கட்டி முடித்து அதனை முழுமையடையச் செய்தான் என்பதன் மூலம் இலங்கையில் சிங்களபௌத்த பேரினவாதத்தை விதைத்து வருகிறது மகாவம்சம்.

 இதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான போர் என்பது ஒரு புனிதப்போர் எனவும் அது பௌத்த சமய மேம்பாட்டுக்கு உதவும் எனவும் மகாவம்சம் நூல் தனது முதல் அத்தியாயத்திலேயே காலங்காலமாகச் சொல்லி சிங்களர்களைப் ‘பக்குவ’ப்படுத்தி வந்துள்ளது என்கிறார் எஸ்.பொ அவர்கள். புத்தரே அச்சமூட்டி யட்சர்களை விரட்டியடித்து ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளார் எனவும் துட்டகாமினி தமிழர்களை போர்செய்து தோற்கடித்து அதன் தொடர்ச்சியான முன்மாதிரியாக இருந்துள்ளான் எனவும் மகாவம்சம் ஆரம்பத்திலேயே குறிப்பிடுவதன்மூலம் சிங்களப் பேரினவாதத்தின் தோற்றுவாய் மகாவம்சத்தில் இருந்துதான் தொடங்குகிறது எனலாம். அந்நூலின் முதல் அத்தியாயப்படி புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்து இலங்கையில் புத்தமதம் பரவுவதற்கான சூழ்நிலையைத் தோற்றுவித்தார். முதல்முறை வந்த போது யட்சர்களை விரட்டியடித்தார், இரண்டாம் முறை வந்த போது நாகர்களை அடக்கினார், மூன்றாம் முறை வந்தபோது புத்த மதத்தின் புனித இடங்களாக ஆகப்போகிற அனைத்து இடங்களுக்கும் சென்று இலங்கையைப் புனிதப் படுத்தினார்(பக்:151).

 புத்தரின் மகாசம்மதகுலம் எனப்படும் சாக்கிய குலத்தின் முன்னோர்கள் குறித்தும் மூன்று புத்த மகாசபைகள் குறித்தும் புத்தரின் நண்பரும் மகத அரசரும் ஆன பிம்பிசாரர் முதல் அசோகர் வரையான மகத அரச பரம்பரைகள் குறித்தும் இரண்டு முதல் ஐந்து வரையுள்ள அத்தியாயங்கள் பேசுகின்றன. தனது 99 சகோதரர்களைக் கொன்றுதான் அசோகர் முடிசூட்டிக்கொண்டார் எனவும் மூன்றாவது புத்தமகாசபை அசோகர் காலத்தில் கூட்டப்பட்டது எனவும் மகாவம்சம் குறிப்பிட்டுள்ளது.

விஜய் முதல் பாண்டுகாபய வரை:

 வங்க நாட்டு அரசனுக்கும், அவனது மனைவியான கலிங்க நாட்டு அரசிக்கும் பிறந்த பெண், லாலா நாட்டில் சிங்கத்தோடு உடலுறவு கொண்டு சீகபாகு என்ற ஆணையும் சீகவலி என்ற பெண்ணையும் இரட்டைக்குழந்தைகளாகப் பெற்றெடுத்தாள். சீகபாகு வளர்ந்தபின் தனது தந்தையான சிங்கத்தைக்கொன்று லாலா நாட்டுக்கு அரசனாகி, தனது உடன்பிறந்த சீகவலியை மணந்து 32 மகன்களைப்பெற்றெடுத்தான். அவர்களின் மூத்த மகன் தான் விஜய் ஆவான். அவன் மிகக் கெட்டவனாக இருந்தான். அவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர்ந்து பல வன் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மக்கள் அவனைக் கொல்லவேண்டும் என அரசனான சீகபாகுவிடம் முறையிட்டனர். அதனால் அரசன் அவனையும் அவனது கூட்டாளிகள் 700 பேரையும் கப்பல்களில் ஏற்றி கடலில் அனுப்பி வைத்தான். அவர்கள் புத்தர் தவமிருந்த சமயத்தில், இலங்கையின் வடமேற்குக்கரையில் இருந்த தம்பப் பண்ணியில், கரையிரங்கினர். விஜய் இலங்கையில் இருந்த யட்சப் பெண் ஒருத்தியை மணந்து அவளது துணையால் இலங்கையில் இருந்த யட்சர்களின் நிலப்பகுதியைக் கைப்பற்றி, பாண்டிய நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து அரசனானான். பாண்டிய இளவரசியோடு பல கலைஞர்களும், பதினெட்டு தொழிற்குழுக்களைச்சேர்ந்த ஆயிரம் குடும்பங்களும் தமிழகத்திலிருந்து இலங்கை வந்து சேர்ந்தனர். ஆண்டுதோறும் பாண்டிய மன்னனுக்கு இரண்டு இலட்சம் மதிப்புள்ள முத்துக்களை விஜய் அனுப்பி வந்தான்.

 புத்த சகாப்தத்தின் தொடக்க ஆண்டில்(கி.மு. 483) விஜய், இலங்கையின் அரசன் ஆனான் என மகாவம்ச நூலின் பின்னிணைப்பு குறிப்பிடுகிறது. அவனுக்குப்பின் வாரிசு இல்லாததால், சீகபாகுவின் பேரன், விஜயின் தம்பி மகன், பாண்டுவாசுதேவன் இலங்கை வந்து அதன் அரசன் ஆனான். புத்தரின் சாக்கிய குலத்தில் உதித்த சாக்கிய பாண்டு என்ற அரசன் தனது மகள் சுபடகச்சனாவைக் காப்பாற்ற கங்கையிலிருந்து கப்பலில் அனுப்ப, அவள் இரு நாட்களில் யதேட்சையாக இலங்கை வந்து பாண்டுவாசுதேவனின் அரசியானாள். அவள் பத்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றாள். மூத்தவன் அபய எனப்பட்டான். பாண்டு வாசுதேவனுக்குப்பின் அவனுடைய மகளின் மகன் பாண்டுகாபய நிமித்தகர்களின் கூற்றுப்படி மாமன்கள் எட்டு பேரைக் கொன்று இலங்கையின் அரசன் ஆனான். பாண்டுகாபய 70 ஆண்டுகள் மிகச்சிறந்த முறையில் இலங்கையை ஆண்டான். பாண்டுகாபய காலத்தில் தான் அநுராதபுரம் முறையான தலைநகராக ஆனது. அங்கு பிராமணர்களும், சண்டாளர்களும், வேடர்களும், சந்நியாசிகளும், ஆசிவகர்களும், சமயங்கள் அற்ற குடும்பங்களும், ஆண்டித்துறவிகளும், பல்வேறு சமய பேதமுள்ள சந்நியாசிகளும் வசித்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. அவனது காலம்வரை புத்தமதம் அங்கு பரவவில்லை. விஜய் முதல் பாண்டுகாபய வரையான வரலாற்றை 6 முதல் 10 வரையான அத்தியாயங்கள் பேசுகின்றன.

தேவ நாம்பியதீச:

 பாண்டுகாபயாவின் மரணத்திற்குப்பின் அவனது மகன் மூத்த சிவ 60 ஆண்டுகள் அரசாண்டான் எனவும் அதன்பின் பாண்டுகாபயாவின் பேரணும், மூத்தசிவாவின் மகனுமான தேவ நாம்பியதீச என்பவன் அரசன் ஆனான் எனவும் மகாவம்சம் குறிப்பிடுகிறது. தேவ நாம்பியதீச காலத்தில்தான் புத்தமதம் இலங்கையில் பரவியது எனக் கருதப்படுகிறது. அசோகனின் மகனான மகேந்தரன் இலங்கை வந்து புத்த மதத்தை இலங்கையில் பரப்பியதாகவும் அதற்கு முன்னரே தேவ நாம்பியதீச மௌரிய அரசன் அசோகனுடன் நட்பு கொண்டிருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. தேவ நாம்பியதீச 40 ஆண்டுகள் அரசாண்டான். இவனது காலத்தில்தான் முதல் புத்த மகாவிகாரம் கட்டப்பட்டதாகவும், ஞாபகச் சொத்துக்கள், போதி மரம் முதலிய புத்தப் புனித விடயங்கள் இலங்கையில் நிறுவப்பட்டதாகவும் மகாவம்சம் பேசுகிறது. போதி மரத்தின் கிளையை அசோகனின் மகள் சங்கமித்தா இலங்கை கொண்டு வந்ததாகவும், அதனைப் பிரிந்து அசோகன் அழுது புலம்பினான்(பக்:176) எனவும் மகாவம்சம் குறிப்பிடுகிறது. தேவ நாம்பியதீச ஆட்சிக்காலம் குறித்து மட்டும் 11 முதல் 20 வரையான 10 அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளது. இவை குறித்துப் புகழ்பெற்ற இந்திய வரலாற்றுப் பேராசிரியர் வின்செண்ட் சுமித் அவர்கள் “அபத்தங்களால் முடையப்பட்ட வேலைப்பாடு” எனக் குறிப்பிட்டுள்ளார்(முன்னீடு,பக்: 28).

தமிழரசன் எல்லாளன்:

 தேவ நாம்பியதீச ஆட்சிக்குப்பின் அவனது தம்பிகள் உதிய, மகாசிவ, சூரதீச ஆகிய மூவரும் தலா 10 ஆண்டுகள் அரசாண்டனர். அதன்பின் சேன, குத்தக ஆகிய இரண்டு தமிழர்கள் பெரும்படையுடன் வந்து சூரதீசவை வென்று 22 ஆண்டுகள் ஆண்டனர். அதன்பின் மூத்தசிவவின் மகன் அசேல அவர்களை வென்று 10 ஆண்டுகள் அரசாண்டான். அதன்பின் சோழ நாட்டிலிருந்து உயர்குடியில் பிறந்த தமிழனான எலாரா, அரசன் அசேலவை வென்று 44 ஆண்டுகள் நண்பர்கள், எதிரிகள் என்ற பேதமின்றி நீதியின்முன் எல்லாரையும் சமமாகப் பாராட்டி ஆட்சி புரிந்தான் என்கிறது மகாவம்சம்.

 பசுவின் கன்றை எதேச்சையாகத் தேரின் சக்கரத்தில் ஏற்றிக்கொன்ற தனது சொந்த மகனை எலார அதே தேர்ச் சக்கரத்தில் இட்டுக்கொன்றான் எனவும், அதேபோன்று தனது இரதத்தால் எதேச்சையாகப் புத்ததூபத்தின் ஒரு பகுதியை சேதம் செய்ததற்காகத் தரையில் விழுந்து படுத்துத் தனது தலையை வெட்டச் சொன்னபோது, பிக்குகள் தூபத்தை புதுப்பிக்கக் கேட்க, அவன் அதனைப் பெரும் செலவு செய்து புதுப்பித்தான் எனவும் ஏழைமக்களின் துன்பத்தைப்போக்க உண்ணா நோன்பு மேற்கொண்டு எலாரனது ஆட்சிப்பகுதியில், பகலில் பெய்யாது, நள்ளிரவில்மட்டும் வாரம் ஒருமுறை மழைதேவனை மழை பெய்யச் செய்வித்தான் எனவும் எலார ஆட்சியின் சிறப்புகளை மகாவம்சம் பட்டியலிடுகிறது. எலாரவிடம் தவறான நம்பிக்கைகள் இருந்த போதிலும், தீயவழியில் நடக்காது நல்வழியில் நடந்து பல அற்புதச் சக்திகளை அவன் பெற்றிருந்தான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. புத்த சமயம் இல்லாத வேறு நம்பிக்கைகளைத் தவறான நம்பிக்கை என மகாவம்சம் குறிப்பிடுகிறது.

சிங்கள மாவீரன் துட்டகாமணி:

 தேவ நாம்பியதீசவின் தம்பி உபராசன் அரண்மனை சூழ்ச்சிகளுக்கு பயந்து தனது குடும்பத்தோடு உறுகுணை எனப்படும் இரோகணப் பகுதிக்குச் சென்று அங்கு தன் சிறு அரசை நிறுவிக்கொண்டான். தென் இலங்கையும், தென் மட்டக்கிளப்புப் பகுதியும் இணைந்த இப்பகுதியின் தலைநகராக மகாகாமம் இருந்தது. இவனது 5ஆவது பரம்பரையைச் சேர்ந்த அரசன்தான் காகவண்ணதீச. அவனது மனைவிதான் கல்யாணி அரசரின் புதல்வியான புத்தமத நம்பிக்கை கொண்ட விகாரதேவி. இவளும் கப்பல் மூலம் பயணம் செய்து, யதேச்சையாக இலங்கா விகாரம் அருகே கரை சேர்ந்து காகவண்ணதீசனின் இராணியானாள். குழந்தை இல்லாதிருந்த அவள் ஒரு நோயுற்ற துறவியிடம் தனது மகனாகப் பிறக்கக் கேட்டுக்கொண்டதன் பேரில், சிறிது நேரத்தில் இறந்த அவர், அவள் இரதத்தில் திரும்பிக்கொண்டிருந்த பொழுதே அவளிடத்தில் கருவாக உருவானார். அவனே துட்டகாமணி. இதுகுறித்து மனித உடலுறவுக்கு அப்பாலான தேவசகாயத்தால் உற்பவித்துப் பிறந்தவனே காமிணி என்கிற செய்தி சூசகமாகச் சொல்லப்படுகிறது எனவும், தமிழனை வெற்றிகொள்ளப் பிறக்கும் சிங்களன் தெய்வீக அம்சம் பெற்றவன் என்கிற பரப்புரைக்கு இங்கே கால்கோள் நாட்டப்படுகின்றது எனவும் எஸ்.பொ குறிப்பிட்டுள்ளார்(பக்:201). துட்டகாமணியின் தாய்தான் சிங்கள் இனத்தின் மகா தாயாகக் கருதப்படுகிறாள்.

சிங்கள மகாதாயின் கொலைவெறி:

 கருவுற்ற இராணிக்கு இரு விசித்திர ஆசைகள் ஏற்பட்டன. ஒன்று, பனிரண்டாயிரம் பிக்குகள் தின்று மிஞ்சிய தேனடை ஒன்றைத் தின்ன விரும்பினாள். இரண்டாவதாக தமிழரசன் எலாரவின் வீரர்களுள் முதல் வீரனைக் கொன்ற கத்தியைக்கழுவிய நீரை, வெட்டுண்ட அதே வீரனின் தலைமீது நின்றுகொண்டே குடிக்க விரும்பினாள். இவை குறித்து எஸ்.பொ அவர்கள், “துட்டகாமணியின் தாயே சிங்கள் இனத்தின் மகா தாயாக இன்றளவும் போற்றப்படுகிறாள் எனவும் தமிழனுடைய பச்சை இரத்தத்தைக் குடிக்க ஆசைப்பட்டதும் அல்லாமல், கொலையுண்டவனின் தலையை மிதித்துக்கொண்டே தமிழனின் பச்சை இரத்தத்தைச் சுவைக்க வேண்டும். தமிழனின் மரணமும் கொலையுண்டவனின் தலையை மிதிப்பதும் மகா பரவசம் தரும் செயல் என்று மகாவம்சம் பக்திப்பரவசம் ஊட்டும் வகையிலே சொல்லுகிறது. தமிழர் சங்காரத்தின்போதும் தமிழர்களுடைய பச்சை இரத்தத்தைக் குடித்து சிங்களர் பரவசக் கூத்தாடினார்கள் என்கிற வரலாற்றுச் செய்திகள் பரந்துபடப் பதிவாகியுள்ளன. தமிழரின் மரணத்தைக்கூட மதிக்கக் கூடாது என்கிற கொலைவெறியை இதன்மூலம் மகாவம்சம் காலங்காலமாகச் சிங்களருக்கு உபதேசித்து வருகிறது.” என்கிறார்.

 அரசன் இராணியின் இரு ஆசைகளையும் நிறைவேற்றினான். அனுராதபுரம் சென்று தமிழரசனின் முதற்போர் வீரனைத் தந்திரமாக வெளியே வரவழைத்து, அவனைக்கொன்று அவனது தலையைக் கொண்டு வந்து அவளது கர்ப்பகால ஆசை நிறைவேற்றப்பட்டது. புத்தமதப்பற்று, தமிழர் மீதான கொலைவெறி போன்றவற்றால்தான் துட்டகாமணியின் தாய் சிங்களரின் மகா தாயாக இன்றளவும் மதித்துப் போற்றப்படுகிறாள். நிமித்திகர்கள், “காமணி தமிழர்களை வென்று, ஐக்கிய அரசை உருவாக்கி தர்மத்தை பிரகாசிக்க வைப்பான்” என்றனர்.

தமிழர் வெறுப்பு:

 காமணிக்குப்பின் அவனது தம்பி தீச பிறந்தான். இருவருக்கும் பத்துப் பனிரண்டு வயதானபோது அவர்களைச் சோதிக்க விரும்பிய அரசன் “நாங்கள் தமிழர்களோடு எக்காலத்திலும் போரிடமாட்டோம் என்ற எண்ணத்தோடு இந்த உணவைச் சாப்பிடுங்கள்” எனக் கூறியபொழுது அவர்கள் இருவருமே உணவை நிராகரித்து உறங்கச் சென்றனர். “தமிழர்களுக்கு எதிராகப் போராடுவதுதான் மிக உன்னதமான நாட்டுப்பற்று என்கிற மனப்பான்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் உண்ணும் உணவுடன் ஊட்டப்பட்டு வருகிறது என்பதற்கு மகாவம்சம் இவ்வாறு சான்று பகர்கிறது” என்கிறார் எஸ்.பொ அவர்கள்(பக்:206). அதன்பின் காமணி கைகால்களைக் குறுக்கிக்கொண்டு உறங்கியதைக்கண்ட இராணி ஏன் இப்படி உறங்குகிறாய் எனக் கேட்டபொழுது, “கங்கைக்கு அப்பால் தமிழர்கள் இருக்கிறார்கள், இந்தப்பக்கம் கோத சமுத்திரம் இருக்கிறது. எப்படி கைகால்களை நீட்டி உறங்கமுடியும்?” என்றான் துட்டகாமணி. இது குறித்து, “கங்கைக்கு அப்பால், வடக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள் அவர்கள் அங்கு வாழ்ந்தால் சிங்களராலே கைகால்களை நீட்டி வசதியாகச் சயனிக்க இயலாது என்கிற இனவெறியைச் சாதுர்யமாக மகாவம்சம் முன்மொழிகிறது” என்கிறார் எஸ்.பொ(பக்: 206,207).

தமிழரசன் எல்லாளனும் துட்டகாமணியும்:

 காமணி வளர்ந்தபின் தன் படைகளைக்கொண்டு தமிழர்களோடு போர் புரிவேன் என்றான். அரசன் மகாகங்கை நதியின் இந்தப்பக்கமுள்ள பகுதியே போதுமானது எனக்கூறினான். இதனால் கோபமடைந்த காமணி மலய போய்விட்டான். இவ்வாறு கோபங்கொண்டதால் அவன் அதன்பின் துட்டகாமணி என அழைக்கப்பட்டான். சிறிதுகாலத்தில் அவன் தந்தை இறந்தான். தந்தை இறந்த பின் இரு சகோதரர்களுக்கும் போர் மூண்டது. முதல்போரில் தம்பி வெற்றியடைந்தான். பின் துட்டகாமணி புத்த தேரர்களின் ஆசிபெற்று படை திரட்டிச்சென்று தம்பியை போரில் வென்றான். அதன்பின் தேரர்கள் இருவருக்கும் சமாதானம் செய்து வைத்தனர். அதன்பின் தமிழரசர்களோடு போரிட பெரும்படைதிரட்டிப் போருக்குச் சென்றான்.

 மகியங்கண வந்தவுடன் முதலில் சத்த என்ற தமிழனை வென்றான். அதன்பின் அம்பதித்தகக என்ற இடத்துக்கு வந்து அங்கு திறமையும் சக்தியும் வாய்ந்த எதிரியான தமிழன் தித்தம்பவை கபடத்தால் வென்றான். அதன்பின் நதியின் வழியில் நடந்து வீரம் செறிந்த ஏழு தமிழ் இளவரசர்களை வென்றான். அதன்பின் பல தமிழர்களையும், பல படைத்தலைவர்களையும் வென்றான். தப்பித்த தமிழர்கள் விஜித நகருக்குள் அரண் அமைத்துக்கொண்டனர். விஜித நகரத்தை நான்கு மாதங்கள் போராடி வெற்றி கொண்டான். அதன்பின் கிரிலக சென்று தமிழன் கிரியவை வென்றான். அதன்பின் மகேள நகருக்குச் சென்று நான்கு மாதங்கள் போரிட்டு அதனை வென்றான். இறுதியாக எல்லாளனோடு போரிடப் படைகளை 32 பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் அரசன் போன்ற உருவ போம்மைகளை உரிய இடத்தில் நிறுத்தி, துட்டகாமணி பாதுகாப்பான ஒரு இடத்தில் நின்று கொண்டான்.

 போரில் துட்டகாமணியின் பல படைப்பிரிவுகள் தீகசந்து என்ற விஜிதநகர தமிழ் படைத்தலைவனால் சிதைக்கப்பட்டு அரசஉருவ பொம்மைகளும் அவனால் வாளால் கிழித்தெறியப்பட்டன. அரசன் துட்டகாமணி நின்ற பிரிவும் அவனால் தாக்கப்பட்டது. ஆனால் இறுதியில் அவன் கொல்லப்பட்டான். அதன்பின் தமிழர்படை சிதறுண்டது. நிறையத் தமிழர்கள் கொல்லப்பட்டு, அங்கிருந்த குளம் தமிழர்களின் இரத்தத்தால் சிவப்பாக நிறம் மாறி அக்குளம் குலந்தவாபி என அழைக்கப்பட்டது. இறுதியில் எலாரவுடன் துட்டகாமணி போரிட்டு அவனைக்கொன்றான். அதன்பின் ஏழு நாட்கள் கழித்து, தீகசந்துவின் மருமகன் பெருவீரன் பலூக அறுபதினாயிரம் படைவீரர்களுடன் வந்து சேர்ந்தான். அவனது படையுடன் துட்டகாமணியின் படை மோதி அவனையும் வென்றது. இவ்வாறாக 32 தமிழ் அரசர்களை வென்று இலங்கா மீது ஏக இறையாண்மை செலுத்தி துட்டகாமணி ஆண்டான்.

 போரில் மகத்தான வெற்றி கிடைத்த போதிலும் இலட்சக் கணக்கானவர்கள் இறந்தது குறித்து துட்டகாமணி வருந்தினான். அவனைச் சமாதானப்படுத்த வந்த புத்தமத அரகந்தர்கள், “நம்பிக்கையற்றவர்களும், தீயவர்களும் ஆன இறந்தவர்கள் மிருகங்களைவிட உயர்வாக மதிப்பிடப்படக்கூடியவர்கள் அல்லர். புத்தரின் நெறிகளுக்குப் பலவகையிலும் புகழ் சேர்த்த நீங்கள் கவலையை விடுங்கள்” என அவர்கள் சமாதானம் செய்தார்கள். இதுகுறித்து, “பௌத்த சமயத்தில் நம்பிக்கை வைக்காத தமிழர்கள் மனிதரல்லர்; மிருகங்களைவிட உயர்வானவர்கள் அல்லர்; அவர்களைக் கொலை செய்தல் பாவமல்ல என்கிற தெளிவான செய்தியை மகாவம்சம் காலம்காலமாகப் போதித்து வருகிறது” என்கிறார் எஸ்.பொ அவர்கள்(பக்: 237). அதன்பின் அரசனால் மகாதூபம் கட்டப்பட்டது. நாகர்களிடம் இருந்த ஞாபகச் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு அதற்கான தூபமும் கட்டப்பட்டது. 24 ஆண்டுகள் ஆண்ட துட்டகாமணி அதன்பின் இறந்தான். 21 முதல் 32 வரையான அத்தியாயங்கள் எலார-துட்டகாமணி குறித்துப் பேசுகின்றன.

குறிப்பு:

 “மகாவம்ச” வில்கெம் கெய்கர் (WILHEM GEIGER’S MAHAVAMSA)

தமிழில் எஸ்.பொ, சிங்களர் கதை, மித்ர ஆர்ட்ஸ் & கிரியேசன்ஸ், அக்-2009.

மேலே தரப்பட்ட பக்கங்கள் அனைத்தும் தமிழ் மகாவம்ச நூலின் பக்கங்கள்

- கணியன் பாலன், ஈரோடு

Pin It

தமிழ் மக்களின் தனி நாகரிகத்தையும், நல்வாழ்வு நெறியையும், பழம் பெருமையையும், தமிழ் மொழியின் தனிச் சிறப்பையும், ஆற்றலையும், ஏற்றத்தையும் உலகமெங்கும் பரப்பிய ஒப்புயர்வற்ற சிறப்பு தனிநாயகம் அடிகளுக்கே உரியது! ‘ தமிழியல் ‘ எனும் ஆராய்ச்சி துறையை உருவாக்கி வளர்த்து, அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தி, தமிழாராய்ச்சியினை உலகளாவியதாக்கியவர்!!

 thani nayagamயாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சார்ந்த ஹென்றி ஸ்தானிஸ்லாஸ் கணபதிப்பிள்ளை - செசில் இராசம்மா பஸ்தியாம்பிள்ளை இணையரின் மூத்த மகனாக 02-08-1913 ஆம் நாள் ஊர்காவற் துறையைச் சேர்ந்த கரம்பொன் என்னும் ஊரில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சேவியர்.

 ஊர் காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பள்ளியிறுதி வகுப்பில் பயிலும்போது, லியோ டால்ஸ்டாய் எழுதிய‘ புத்துயிர்ப்பு’ (Resurrection) என்னும் நூலை அவர் படித்தார். “ அந்நூலைப் படித்ததால் தான் என் வாழ்க்கையானது சமயச் சேவையாலும் கல்விச் சேவையாலும் உருவாகியது “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 “நான் இவ்வுலகில் ஒருமுறைதான் வாழ முடியும் . எனவே, நான் இறக்கும் முன் என்னால் இயன்ற அளவு அனைத்து நற்செயல்களையும் செய்தல் வேண்டும். ஏனெனில் மீண்டும் ஒரு முறை நான் வாழப் போவதில்லை" என்று ட்ரம்மன்ட் (Drummond) என்னும் அறிஞரின் எழுத்துக்கள் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது.

 யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் 1923 முதல் 1930 வரை பயின்றார். பின்னர், கொழும்பு நகரிலுள்ள புனித பெர்நாட் குருத்துவக் கல்லூரியில் (St. Bernard Seminary) ‘ மெய்யியல்’ பிரிவை பாடமாக எடுத்துப் படித்து முதலாவதாகத் தேறினார்.

 ரோம் சென்று உர்பன் குருமடத்தில் மாணவராகி, உர்பன் பல்கலைக் கழகத்தில் ‘ சமயவியல்’ படித்தார். ஆங்கிலத்திலும், இலத்தீனிலும் புலமை பெற்றிருந்த சேவியர், ரோமில் இத்தாலிய மொழியினைத் திறம்படப் பயின்றதோடு, ஸ்பானிஷ், போர்த்துக்கேயம் , பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளையும் பயின்றார்.

 ரோமில் பயிலும் போது , “என் தமிழ்ப் பற்று மிகுந்ததே அன்றி குறைந்துவிடவில்லை. ‘வீரமா முனிவர் கழகம் ‘ என்னும் அமைப்பை ரோம் நகரில் நிறுவி தமிழை பயின்று வந்தோம். வத்திக்கான் வானொலி நிலையத்திலிருந்து தமிழில் ஒலி பரப்பும் வாய்ப்பும் பெற்றோம். அங்ஙனம் ஒலி பரப்பும் தோறும் ‘தேமதுரத் தமிழோசை உலகம் எல்லாம் பரவும் வகையில் செய்தோம்’ எனக் கருதி களிப்புற்றோம்” என , தமது தமிழார்வம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

 ரோமில் கத்தோலிக்கச் சமயக் குருவாக 1938 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் பணியில் சேர்ந்தார்.

 தனிநாயகம் அடிகள் ‘தொன்மையியல்’ துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டார். அதனால், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒர் ஆப்பிரிக்க ஆயரான புனித சைபிரியன் (St. Cyprian) என்பவரின் காலத்தைப் பற்றி ஆய்வு செய்து ‘கார்த்தஜினியன் குருமார்’ (Carthaginian clergy) என்ற தலைப்பில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

 ரோமில் முனைவர் பட்டம் பெற்ற தனிநாயகம் அடிகள் 1939 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் வந்தடைந்தார். பின்னர் தூத்துக்குடி மறை மாவட்டத்தில் 1940 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். நெல்லை மாவட்டத்திலிலுள்ள வடக்கன்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள புனித தெரசாள் உயர்நிலைப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். வடக்கன்குளத்தில் , பண்டிதர் குருசாமி சுப்பிரமணியம் ஐயரிடம் நான்கு ஆண்டுகள் தமிழ் பயின்றார். தமது பெயரைத் தமிழ்ப் பெயராகச் சூட்டிக் கொள்ள வேண்டும் என்னும் மிகுந்த ஆர்வத்தினால் , ‘ சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் ‘ என்று மாற்றிக் கொண்டார்.

 தமிழ் மொழியின் இலக்கியச் சிறப்பும் கருத்து வளமும் அடிகளாரை ஈர்த்துக் கொண்டன. தொடர்ந்து தமிழ் பயின்று முதுகலைப் பட்டம் பெற , 1945 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை மாணவராகச் சேர்ந்தார். அங்கு , பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் , பேராசிரியர் அ. சிதம்பரநாதனார் முதலியவர்களிடம் தமிழ் இலக்கியம் பயின்றார்.

 தேவாரம், திருவாசகம் முதலிய சைவசமய இலக்கியங்களையும், சங்க இலக்கியங்களையும் ஆர்வமுடன் கற்றறிந்தார். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றபின் , அடிகள் தொடர்ந்து கற்று தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் (எம்.லிட்) பெற்றார். மேலும், பேராசிரியர் அ. சிதம்பரநாதனாரை வழிகாட்டியாகக் கொண்டு ‘ பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்னும் பொருள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அவரது ஆய்வேடு , ‘நேச்சர் இன் ஏன்சியன்ட் தமிழ் பொயட்ரி’ (Nature in Ancient  Tamil Poetry) என்னும் நூலாக 1952 ஆம் ஆண்டு தமிழ் இலக்கியக் கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலைத் திறனாய்வு செய்த பேராசிரியர் கமில் சுவலபில் , “பழந்தமிழ் இலக்கியங்ளைப் பற்றி இதுவரை எழுதப்பட்டவை அனைத்தையும் இந்நூல் பலவகையிலும் விஞ்சி நிற்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 தூத்துக்குடியில் 1948 ஆம் ஆண்டு ‘தமிழ் இலக்கியக் கழகம்’ என்னும் அமைப்பினை அடிகள் நிறுவினார். அந்த அமைப்பின் மூலம் பல நூல்களை வெளியிட்டார்.

 அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு 1950 ஆம் ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு சொற்பொழிவுகளாற்றினார். பின்னர் 1952 ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய அடிகள், இலங்கைப் பல்கலைக் கழகத்தின் கல்வியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

 கொழும்பில் ‘தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்’ என்னும் அமைப்பை நிறுவினார். இலங்கையில் ‘தமிழ்ப் பண்பாடு; அன்றும், இன்றும் , இனியும்’ என்ற பொருளில் ஆங்கிலத்தில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்தச் சொற்பொழிவு நூல் வடிவம் பெற்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

 இலங்கையில், தமிழ் அரியாசனத்திலிருந்து தூக்கி வீசப்படுவது நடந்தேறிக் கொண்டிருந்தது. உலக வாழ்வைத் துறந்த தனிநாயகம் அடிகள், தமிழைத் துறக்க முடியாதவராகக் கலக்கமடைந்தார். தமது பரந்த அறிவைப் பயன்படுத்தி, சிங்களமும் தமிழும் அரசாங்க மொழிகளாக இருப்பதால் சிங்கள மொழிக்கு எந்த ஆபத்தும் வராது. சிங்களம் அரசாங்க மொழியாக இருந்தாலும் தமிழையும் சிங்களத்தின் நிலையைப் பாதிக்காமல் பயன்படுத்தலாம் என்னும் கருத்துப்பட, பல நாட்டு அரசியல் சாசனங்களை மேற்கோள் காட்டி இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். அவற்றை ஒன்றாகத் திரட்டி ‘தமிழ் மொழி உரிமைகள்’ என்ற தலைப்பில் ஆங்கில நூல் ஒன்றையும் வெளியிட்டார். மேலும், 1956 ஆம் ஆண்டு, இலங்கைப் பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ,ஆர். டி. பண்டாரநாயக்காவை , தூதுக் குழுவினருடன் சென்று சந்தித்துத் தமிழ் மொழியின் உரிமைக்காக வாதாடினார்.

 இலங்கைப் பாராளுமன்றத்தில் 05-06-1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘ தனிச் சிங்கள சட்ட மசோதா’ வை எதிர்த்து, தமிழர் தலைவர் தந்தை செல்வா தலைமையில், கோப்பாய் கோமான் வன்னிய சிங்கம் , இரும்பு மனிதன் நாகநாதன் முதலியோர் உட்படத் தமிழ் மக்கள் கொழும்பில் உள்ள பாராளுமன்றத்துக்கு முன்னால் சத்தியாக்கிரகம் மேற்கொண்டனர். சிங்களக் காடையர்களின் வெறியாட்டம் தாண்டவமாடியது. தமிழின மக்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சிங்களக் காடையர்கள் மத்தியில் வீரத்துறவியான தனிநாயகம் அடிகள் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு தமது எதிர்ப்பைக் காட்டினார்.!

 தனிநாயகம் அடிகள் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து இலண்டனுக்குச் சென்று கலாநிதிப் பட்டம் (Ph.D) பட்டம் பெற்றார்.

 இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள மொழி ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்த 1961 ஆம் ஆண்டு, இலங்கை அரசு தீவிரம் காட்டியது. அதை எதிர்த்து, தமிழர் தலைவர் தந்தை செல்வா தலைமையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சத்தியாக்கிரகம் தீவிரமாக நடைபெற்றது. தனிநாயகம் அடிகள், சத்தியாக்கிரகத்துக்கு ஆதரவு தேடும் வகையில் , தமிழ் மொழிக்குள்ள உரிமைகளையும், சிங்கள மக்கள் நல்வாழ்வுக்குத் தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் விளக்கி ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் துண்டுபிரசுரங்களை வெளியிட்டார். சத்தியாக்கிரகத்துக்காக நிதி வசூல் செய்து உதவினார்.

 புதுடெல்லியில் 26 ஆவது கீழைத்தேயவியல் மாநாடு 1964 ஆம் ஆண்டு நடைபெற்றது. மலேசியப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தனிநாயகம் அடிகள் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியனும் இணைந்து , மாநாட்டில் கலந்து கொண்ட தமிழியல் அறிஞர்களுக்கான ஒரு சிறப்புக் கூட்டத்தை புது டெல்லியில் 07-01-1964 அன்று கூட்டினார். இக்கூட்டத்திற்கு 15 நாடுகளைச் சேர்ந்த 60 தமிழியல் அறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தான் ‘அனைத்துலக தமிழராய்ச்சி மன்றம்’ என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் இணைச் செயலாளர்களாகப் பேராசிரியர் கமில் சுவலபில், தனிநாயகம் அடிகள் முதலியோர் தேர்வு செய்யப்பட்டனர். பேராசிரியரின் ஜூன் பிலியோசப் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 தனிநாயகம் அடிகள் மலேசியாவில் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த 132 பிரதிநிதிகளும், 40 பார்வையாளர்களும் கலந்து கொண்டு 150 ஆராய்ச்சி கட்டுரைகள் அளித்தனர்.

 இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நிரந்தரமான தமிழாராய்ச்சி நிலையம் ஒன்று அமைத்து உலக தமிழாராய்ச்சி மையமாக அமைக்கப்பட வேண்டும் என்ற அடிகளின் கனவு அம்மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டின் தலைநகரமான பாரிசில் நடைபெற்றது. நான்காவது உலகத் தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் சிறப்பாக நடைபெற்றது. ஆனால், சிங்கள இன வெறியர்கள் மாநாட்டில் மிகவும் மோசமான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர்.

 “தமிழாராய்ச்சி குறுகிய எல்லைக்கு உட்பட்டது அல்ல. பரந்து விரிந்து பல துறைகளில் வளர்ச்சியடைந்திருக்கின்றது. தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் பற்றி உள்ள ஆராய்ச்சி மட்டும் தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி , தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள் , தத்துவங்கள், தமிழ்த் தொல் பொருளியல், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் எனப் பல துறைகளிலும் தமிழாராய்ச்சி வளர்ச்சியடைந்திருக்கின்றது. மேலும், இன்று பிற நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழை ஒரு பாடமாக வைத்துள்ளனர். “ இவையனைத்தும் தனிநாயகம் அடிகளின் சாதனைகளாகும் எனப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

 “இலக்கியம் வளர்ச்சியடைவதற்கு நிலைக்களனாக உதவும் பொருட்கள் மக்களும் இயற்கையும் ஆகும். இவ்விரு பகுதிகளையும் பிரித்து, இயற்கையை விடுத்து மக்களையும், அல்லது மக்களை விடுத்து இயற்கையையும் பற்றியும் புலவர் பாடுவரேல், அவ்விலக்கியம் குறையுள்ள இலக்கியமாகவே விளங்கும். தமிழ்ப் புலவரோ, தம் புலமைத் திறனைக் காட்டுவதற்கு முதற் பொருளாக மக்களையும், துணைப் பொருளாக இயற்கையையும் எடுத்துக் கொண்டனர்“ என சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு குறித்து தனிநாயகம் அடிகள் குறிப்பிட்டுள்ளார்.

 ‘நம் மொழியுரிமைகள்‘ என்னும் பிரசுரத்தில் தனிநாயகம் அடிகள் , “சைவம், வைணவம், இசுலாம், கத்தோலிக்கம் , புரட்டஸ்தாந்து என்று பிரிந்து தொண்டாற்றும் மனப்பான்மையும், கொழும்புத் தமிழர், மலைநாட்டுத் தமிழர், மட்டகளப்புத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர் என்று வேற்றுமை பாராட்டுவதும் நம் இனத்திற்கு நன்மை பயக்காத முறைகள் ஆகும். நம் இனத்திற்கு ஒற்றுமையும், உறுதியும் ஏற்படுவதற்கு நம் எழுத்தறிஞர்களும், மேடைக் கலைஞர்களும் ஒத்துழைத்தல் வேண்டும். நமக்குப் புதிய பாடல்கள் வேண்டும். சின்னங்கள் வேண்டும். சிலைகள் வேண்டும். நமக்கென கலைக்கழகங்கள் வேண்டும். பல்கலைக்கழகங்கள் வேண்டும்” எனத் தமிழர், தமிழ் மொழி வளர்ச்சிக்கான வழியைச் சுட்டிக் காட்டுகிறார்.

 ‘தமிழ்த்தூது’ . ‘ஒன்றே உலகம்’ ‘திருவள்ளுவர்’ முதலிய தமிழ் நூல்களையும் , ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’, பழந்தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள்’ (Ancient Tamil Education) முதலிய ஆங்கில நூல்களையும் , ‘தமிழியல் நூல்கள் ஆய்வடங்கல்’ (A reference  Guide to Tamil studies) ‘வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி ‘ (Tamil Studies  Abroad), ‘தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும்‘ (Tamil  culture and civilization) முதலிய மூன்று நூல்களைத் தொகுத்து அளித்து உள்ளார்.

 ‘கிறிஸ்துவ தமிழ் இலக்கிய மன்றத்தை நிறுவி ‘Tamil Culture’ என்னும் காலாண்டு இதழைத் தொடங்கி நடத்தினார்.

 தனிநாயகம் அடிகள், இலங்கை அரசின் சாகித்திய மண்டலத்தின் உறுப்பினர், சென்னை மாநில அரசின் தமிழ் வளர்ச்சிக் கழக உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில-தமிழ் அகராதிக் குழுவின் உறுப்பினர், சென்னை மாநில அரசின் குழந்தைகள்-மூத்தோர் பாடநூல் குழுவின் தலைவர் முதலிய பல பதவிகள் வகித்து சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

 'தமிழியல்’ ஆய்வை உலக அளவில் அறிவுத் துறையாக உயர்த்திடவும், உலகத்தின் பல நாடுகளில் உள்ள தமிழர்களின் மத்தியில் ஒற்றுமையுயணர்வை ஏற்படுத்திடவும், அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றம் அமைக்கப்படவும், பிறநாட்டுத் தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி கிடைக்கப் பெறவும், பிறநாட்டு நூலகங்களில் தமிழ் நூல்கள் பேணப்படவும், அரிய தமிழ் நூல்களைத் தேடி எடுத்து மீண்டும் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திடவும் அயராது பாடுபட்ட தனிநாயகம் அடிகள் தமது 67-வயது வயதில் 01-09-1980 ஆம் நாள் காலமானார்.

- பி.தயாளன்

Pin It

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் மருந்துகள் மூலமாக மட்டுமல்லாமல், அறுவை சிகிச்சை செய்தவன் மூலமும் நோய்களை சரிசெய்யலாம் என்ற கருத்து உருவானது. அறுவை சிகிச்சைகளும் பரவலாக செய்யப்பட்டது. ஆனால், கத்திகளைக் கொண்டு உடலைக் கிழித்து செய்யப்படும் அறுவை சிகிச்சைகளின்போது நோயாளிக்கு உண்டாகும் சொல்லொணாத வலியின் காரணமாக, விரைவாக அறுவை சிகிச்சையை செய்து முடித்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

Joseph Lister 1902அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளில் கிருமிகள் தங்கிவிடும் அபாயத்தால் அறுவை சிகிச்சையினாலேயே நோயாளி மரணத்தைத் தழுவ நேரிடும் நிலை நிலவியது.

கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணியக் கிருமிகள், மருத்துவக் கருவிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் கைகளில் மறைந்திருந்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளியின் காயத்தினுள் சென்று காயத்தை ஆறவிடாமல் சீழ்பிடிக்கச் செய்து புரையோடி, நோய்க் கிருமிகளின் தாக்குதலால் நோயாளி பரிதாபமாக இறந்துபோகும் துர்பாக்கியம் அக்காலத்தில் ஏற்பட்டது. இதற்கு காரணமென்ன என்பதை கண்டறிய மருத்துவ வல்லுநர்கள் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். முடிவில் நுண்ணியக் கிருமிகள் தான் காரணம் என்பதைக் கண்டறிந்தனர்.

உலக அளவில் 1850களில் அறுவை சிகிச்சையின் பிதாமகனாக விளங்கிய ஜோஸப் லிஸ்டர் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

இங்கிலாந்து நாட்டின் பிரபலமான எஸ்ஸெக்ஸ் நகரில் 1827 ஆம் ஆண்டு பிறந்தார் ஜோஸப் லிஸ்டர். தமது பதினாறாவது வயதிலேயே, ஓர் அறுவை சிகிச்சை நிபுணராக ஆகவேண்டுமென முடிவு செய்தார். மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயின்று ஒளிரும் நட்சத்திரமாக விளங்கினார். இவரது மருத்துவ அறிவைப் பெரிதும் அங்கீகரித்து பாராட்டின லண்டன் பல்கலைக் கழகங்கள். இவரை, அறுவை சிகிச்சைத் துறையில் மேல் படிப்புக்காக லிஸ்டருக்கு அனுமதி வழங்கின. இவர், அறுவை சிகிச்சைத் துறையில் நிபுணராக விளங்கிய ஜேம்ஸ் ஸைமின் மேற்பார்வையில், அறுவை சிகிச்சை முறைகளின் அனைத்து நுட்பங்களையும் கற்றார். மருத்துவத் துறையின் பட்டப்படிப்பும், அறுவை சிகிச்சை நிபுணத்துவத்துக்கான மேல் படிப்பும் முடித்தார். லண்டனில் உள்ள எடின்பர்க் ராயல் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார்.

பணத்துக்காக மட்டும் அறுவை சிகிச்சை செய்யாமல், மருத்துவரானதே மனிதர்களின் நோய்களைத் தீர்க்கும் தொண்டு ஆற்றுவதற்குத்தான் எனும் உயரிய சிந்தனை கொண்டவராக விளங்கினார் ஜோஸப் லிஸ்டர்!

காற்று மூலமாகத்தான் நுண்ணிய நோய்க் கிருமிகள் பரவுகின்றன என்ற கருத்தும் நிலவியது. ஆனால், காற்று அகற்றப்பட்ட அறைக்குள் நோயாளியைத் தங்க வைத்தபோதும், அறுவை சிகிச்சை முடிந்தபிறகு ஏற்படும் நுண்ணிய நோய்க் கிருமிகளால் தாக்குண்டு நோயாளிகள் மடிந்தனர்.

எனவே, காற்று மட்டுமே நோய்க் கிருமிகளை பரப்பவில்லை என அறிந்தார் லிஸ்டர். அறுவை சிகிச்சை முடிந்ததும் தைக்கப்படும் சதை இணைப்புகள் தொற்று நோய் கண்டு, குணமாக்க இயலாத அளவுக்கு அழுகி, முடிவில் நோயாளி இறக்க நேரிடுகிறது. இதை தடுப்பது எப்பது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

பொருட்களை அழுகுவதிலிருந்து தடுக்கவும், அழுகிய பொருட்கள் மேற்கொண்டு அழுகி துர்நாற்றம் வீசாமல் காக்கவும் அக்காலத்தில் ‘கார்போலிக் அமிலம்’ பயன்படுத்தப்பட்டடை அறிந்தார் லிஸ்டர்.

இவர், அறுவை சிகிச்சையின்போது, கார்போலிக் அமிலத்தைப் பயன்படுத்தி தொற்று நோய் ஏற்படுவதைத் தடுக்க முயற்சி செய்யலாம் என முடிவு செய்தார்.

ஒரு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, தமது கைகள், தம்முடன் உதவி செய்யும் மருத்துவப் பணியாளர்களின் கைகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் என அனைத்தையும் கார்போலிக் அமிலத்தில் தோய்த்தெடுத்த பிறகே பயன்படுத்தினார். தொற்று நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் குணமடைந்தான் அச்சிறுவன்.

இவரது அணுகுமுறை, அறுவை சிகிச்சையின்போதும் அதற்கு பிறகும் ஏற்படும் தொற்று நோய்களை அழிக்கவல்ல கிருமிநாசினியை எளிதாக உருவாக்கி, உயிரைக் காத்திட முடியும் என்ற கருத்து மருத்துவ உலகில் மிகப்பெரும் திருப்பத்தையே ஏற்படுத்தியது.

“அறுவை சிகிச்சை என்பது, வெறும் கத்தி, கத்திரி முதலிய ஆயுதங்கள் கொண்டு நோயாளியின் உடலில் இருக்கும் நோயைச் சரி செய்யும் முறை மட்டுமல்ல. அந்த முறையை, அணு அளவுகூட தூசு இல்லாத மிக மிக சுத்தமான சூழலில் நடத்து முடித்து பிறகு சிறிது நாட்கள் நோயாளிக்கு சுத்தமான பாதுகாப்புத் தந்து காப்பாற்றுவதே ஆகும்”. இதற்கு அவர், பயன்படுத்தி வெற்றி கண்ட கார்போலிக் அமிலம்தான் முறையான கிருமி நாசினி என்பதை 1867 ஆம் ஆண்டு மருத்துவ உலகிற்கு அறிவித்தார் ஜோஸப் லிஸ்டர்! இதே முறையில் துளியும் தொற்று அற்ற சீழ் கட்டி அறுவை சிகிச்சையை, 1871 ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவின் உள்ளங்கையில் செய்து நிரூபித்தார் என்பது வரலாற்றுப் பதிவு.

கார்போலிக் அமிலம் ஒரு கிருமிநாசினி என கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்து பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றிட வழி செய்தவர் ஜோஸப் லிஸ்டர். இவர் லண்டன் பல்கலைக்கழக தலைமை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவராகப் பணியாற்றினார்.

“மிக சுத்தமான சூழலே, நுண் கிருமிகள் அத்தனையும் ஒழிக்கப்பட்ட சூழலே, ஓர் அறுவை சிகிச்சையின் மகத்தான வெற்றிக்கு வழிவகுக்கும்” என்பதை தமது ஆய்வுகள் மூலம் மருத்துவ உலகிற்கு உணர்த்தினார்.

கிருமி நாசினிகளின் தந்தையாக போற்றப்படும் ஜோசப் லிஸ்டர், 1912 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது மருத்துவ கண்டுபிடிப்பு மக்களின் உயிரை பாதுகாத்து வருகிறது!

Pin It