சட்டம் தன் கடமையைச் செய்யும்
அறம் தோற்றதும் மறம் என்றதும் இல்லை
கடவுள் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான்
எல்லாம் இழவு வீட்டின் துக்க மொழி
உண்மையில் எவரும் எதுவும்
எந்தப் புல்லையும் புடுங்குவதில்லை

களியாட்டு

சினிமாவின் இறுதியில்
வில்லன் உதைபட்டுச் சாவான்
நல்லவன் தனித்துப் போராடி வெல்வான்
நடப்பில் எல்லாமே எதிர்மறை
சினிமாவே யதார்த்த வாழ்வின் பகை முரணோ?
அல்லால் காசு அள்ளும் களியாட்டு ஆமோ

காப்பு

எவரும் அறியாமல் கரவாய்
வன்கொடுமையால் வளம் பெருக்கலாம்
வன் கலவியோ களவோ கொலையோ செய்யலாம்
பிறர் அறிந்தால் அல்லவா
குற்றம் இழிவு தண்டனை
அறியாது காத்தலே இன்று அறமாயிற்று

- நாஞ்சில்நாடன்

Pin It