காணாமல் போன கோப்புகள் என்ற என்னுடைய சிறுகதை மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். அது பல ஆண்டுகளுக்கு முன்னால் ஞாநி அவர்கள் நடத்திய தீம் தரிகிட இதழில் வெளியானது அந்த கதை காஷ்மீர் பின்னணியில் காணாமல் போகிற சில ஆண்களைப் பற்றியது.. இந்த வகையில் தேசிய சிக்கல்களை முன் வைத்து போராடுகிற மனிதர்கள், வெவ்வேறு வகையான மனிதன் உரிமை பிரச்சனைகளை சார்ந்து போராடுகிறவர்கள் போன்றவர்கள் காணாமல் போவது சகஜமாகிவிட்டது அதுவும் போர்க்காலங்களில் ஆண்கள் தவறிப் போவதும், இல்லாமல் போவதும் சாதாரணமாக போர்க்கால நடவடிக்கையின் போது நிகழ்கின்றன காணாமல் போன மனிதர்களை முன்வைத்து பல படைப்புகள் வெளிவந்திருக்கின்றன,

அதில் ஒன்றுதான் அல்பேனிய படம் ஹீவ். 98- 99 ஆண்டுகளில் கொசாவில் நிகழ்ந்த போரின் காரணமாக பல ஆண்கள் காணாமல் போகிறார்கள். அதில் ஒரு பெண் பஹ்ரிஜே தன் கணவன் காணாமல் போனது குறித்து ராணுவத்திலும் காவல்துறையிலும் புகார் அளிக்கிறார். ஆனால் இது போன்ற புகார்கள் தொடந்து கொண்டிருக்கின்றன என்பது தான் எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று காணாமல் போனவர்கள் பற்றிய சித்திரங்கள் நிறைய உண்டு.

இந்த நிலையில் அந்தப் பெண் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. மகன் மகள் மற்றும் மாமனார் அந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள். காணாமல் போன கணவர் தேனீ வளர்க்கும் தொழிலை செய்து வந்தவர். அதன் மூலமாக கிடைக்கும் வருமானம் குடும்பத்திற்கு ஓரளவு போதுமானதாக இருக்கிறது. அதை நம் கதாநாயகியும் செய்ய வேண்டியிருக்கிறது தேன் விற்றும், வறுத்த சிவப்பு மிளகாய் ஊறுகாய் செய்து விற்றும் அவள் வாழ்க்கையை ஓட்ட வேண்டியதாக இருக்கிறது அவளின் குடும்பமே தேசபக்தியும் நாட்டைக் காக்கும் உணர்வையும் கொண்டது.

இந்த சூழலில் அவள் வாழுகிற பகுதியில் கணவன்மார்கள் காணாமல் போன பல வீட்டுப் பெண்கள் இருக்கிறார்கள் அல்லது விதவைகள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு அவள் கூட்டுறவு முறையில் அந்த தொழிலைத் தொடர்கிறார். ஆனால் வெளியில் அலைவதற்கும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் வாகனம் தேவைப்படுகிறது. வாகனம் ஓட்ட அனுமதி பெற வேண்டி இருக்கிறது அப்படி வாகனம் ஓட்ட அனுமதி லைசன்ஸ் பெற சிரமப்படுகிறாள். அதுவே பலருக்கு பிடிப்பதில்லை.

விதவையான பெண்ணின் கடமை என்றால் குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றுவது, குடும்பத்தில் இருந்து கொண்டு குடும்பத்தினுடைய பெருமையை கௌரவமான தொழிலைச் செய்வது. , வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்துக் கொள்வது என்பதும் அதேபோல விதவை என்பவள் வீட்டு வேலைக்கு உரியவள் வீட்டிலேயே இரு என்று பலரால் அறிவுரை சொல்லப்படுகிறது. ஆனால் அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் அவளை நம்பி இருக்கிற கணவன் இழந்த பெண்களுக்கும் அல்லது கணவன் காணாமல் போன குடும்பத்தினருக்கும் தேவையாக கூட்டுறவு முறையில் அவள் அந்த தொழிலை செய்ய முற்படுகிறாள். தேவையில்லாத விமர்சனங்கள் மூலமாக அவள் காயப்படுத்தப்படுகிறாள் தன் குழந்தைகள் மூலமாகவே அவள் வேசி என்று கெட்ட பெயர் சுட்டப்படுகிறாள். அதே பெயரை அந்த பகுதியில் உள்ள ஆண்கள் அவள் மீது எந்த காரணமும் இல்லாமல் சூட்டுவது சாதாரண அடைய வைக்கிறது எரிச்சலில் அவளின் மகிழுந்தும் சேதப்படுத்தப்படுகிறது ஆனால் அவள் வேறு வழியில்லை தொடர்ந்து கொண்டிருக்கிறாள். அவள் தயார் செய்யும் பொருட்களை சேதப்படுத்தியும் சிதைத்தும் அவளை தனிமைப்படுத்துகிறார்கள்.

கூட இருக்கும் பெண்கள் தங்களுடைய நகைகள், விலை உயர்ந்த பொருட்களை கொடுத்து மீண்டும் அந்த தொழிலை ஆரம்பித்து வைக்கிறார்கள். காணாமல் போன கணவரைப் பற்றிய ஏதாவது செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன ஆனால் உறுதியாக அவன் இறந்தது சொல்லப்படுவதில்லை பிணங்கள் புதைக்கப்பட்ட இடங்களை தோண்டுவதும் அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு வந்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் காட்டுவதும் நடந்து கொண்டிருக்கிறது. அப்படித்தான் அவளின் கணவனின் உடையும் மற்ற பொருட்களும் சிதைந்த நிலையில் அவரிடம் காண்பிக்கப்படுகிறது.

அது அவருடைய கணவனின் உடை என்று சொல்ல விருப்பமில்லை அழுகை தான் அவளுக்கு பதிலாக வெளிப்படுகிறது காணாமல் போன கணவன்களை தேடும் மனைவிமார்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறார்கள்.. இலங்கைக்குச் சென்றிருந்த போது காணாமல் போன கணவன்மார்கள், பிள்ளைகளைக் கண்டு பிடிக்கக் கோரி பெண்கள் கிளி நொச்சியில் செய்து வந்த நீண்ட கால ஆர்ப்பாட்டத்தை கவனித்தேன் விதைவுகளின் துயரம் பற்றியும் கைவிடப்பட்ட பெண்களின் துயரம் பற்றியும் அவர்கள் தங்களுக்கான வருவாய்க்காக உழைக்க வேண்டிய சிரமங்கள் பற்றியும் இந்த படங்கள் தெரிவிக்கிறது. போரில் காணாமல் போகிற அல்லது இறந்த போகிற கணவன்மார்களுடைய துயரங்கள் அபரிமிதமானவை அவர்களுக்கான ஆறுதலும் தேவையாக இருக்கிறது சமூக நடவடிக்கைகள் அந்த ஆறுதலுக்கு வழிகாட்டும்..

- ஆல்பா

Pin It