மூணாறு, இலங்கை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் காணப்படும் தேயிலைத் தோட்டங்களைச் சற்றே மனதில் நினைவு கூரலாம். தேவையெனில், இன்று இல்லம் தோறும் புழங்கிக் கொண்டிருக்கும் திறன்பேசியைத் திறந்து காணொளியில் காணலாம்.
காதல் பாடலுக்குத் தேயிலைத் தோட்டங்களில் நடனமாடாத முதன்மையான திரைப்படக் கலைஞர் யாரும் இருக்கமாட்டார்.
மிகப் பெரிய திரைப்படப் பதிவுக் கருவிகளை வைத்து, தேயிலைத் திட்டத்தின் எந்த இடத்தையும் அங்குலம் அங்குலமாகப் பதிவு செய்ய முடியும். இப்போது நம் கையில் உள்ள திறன் பேசிக் கருவியின் மூலமும் அவ்வாறே பதிவு செய்ய முடியும்.
இத்தகைய ஒப்பற்ற எழில் தோற்றத்துக்கும், அது கொட்டிக் கொடுக்கும் வருமானத்துக்கும் தங்கள் உழைப்பை அளித்த - அதாவது, அரை வயிறு, கால் வயிறு கஞ்சி குடித்து, குளிரிலும் மழையிலும் தங்களை அழித்துச் சிதைத்துக் கொண்ட- பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அடிமைத்தனக் கொடுமையை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறது - டாக்டர் பி.எச்.டேனியல் அவர்கள் ஆங்கிலத்தில் Red Tea என்னும் பெயரில் ஆங்கிலத்தில் எழுதி, டாக்டர் வெ.ஜீவானந்தம் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள குருதித் தேநீர் என்னும் புதினம்!
1925ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கடுங்குளிர். திருநெல்வேலிச் சீமையில் உள்ள மைலாடி கிராமம். வெறும் முப்பது குடிசைகள். ஒரே ஒரு வீடு மட்டுமே ஓட்டுவில்லை வீடு. பிறவெல்லாம் மண்குடிசைகள். மைலாடி கிராமத்து மக்கள் அனைவரும் பக்கத்துக் கிராமத்தில் உள்ள நிலத்தை மட்டுமே நம்பி உயிர்வாழும் விவசாயக் கூலிகள். போதாக்குறைக்கு, அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்!
அந்த மைலாடி கிராமத்துக் குடும்பங்களுள் ஒன்று - இந்தப் புதினத்தின் தலைமைக் கதைமாந்தர்கள்: கருப்பன் - வள்ளி இணையர். இவர்கள் புதிதாகத் திருமணம் ஆகி புது வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர்.
அவ்வேளையில், திருநெல்வேலிச் சீமைப் பகுதியில் மழை பொய்த்துப் போனது. மாதக் கணக்கில் கூலி வேலைக்கு வழியில்லை. கதைத் தலைவி வள்ளியின் வெள்ளிக் கொலுசு ஒரு வாரம் கஞ்சி ஊற்றியது. ராகிக் கூழும், வறுத்த மிளகாயும். அதுவும் ஒரு வேளைதான். விடிந்தால், அதுவும் இல்லை.
இந்த நிலையில்தான், கருப்பன் வேலை தேடி, கயத்தாறுக்குச் செல்கிறான். கயத்தாறு அந்தப் பகுதிச் சுற்று வட்டாரங்களுக்குப் பெரிய நகரம். அங்கு தான் சங்கரபாண்டி என்னும் தேயிலைத் தோட்ட மேஸ்திரியைச் சந்திக்கிறான் - கருப்பன்.
சங்கரபாண்டியன், அப்படியே 'சர்க்கரை' பாண்டியனாகப் பேசுகிறான் - கருப்பனிடம்!
"ஏன் பட்டினி கிடந்து சாகறே? தொரைங்க நல்லவங்க. எரக்கம் உள்ளவங்க... இங்க வருஷம் முழுசும் கம்பு, ராகிதானே? அங்க வருஷம் முழுசும் அரிசி கிடைக்கும்... அங்க பாதிக்கு மேல நம்மாளுஙகதான். எல்லாம் திருநெல்வேலி, ராமனாதபுரம், மதுரைக்காரங்க. மறவர், மேல்ஜாதி இந்துக்கள் எல்லாம் கூட வேலை செய்யறாங்க. தர எல்லாத்தையும் ஒரே மாதிரித்தான் நடத்துவார்..." என்று சொல்லில் தேன் ஒழுகப் பேசி, முன்பணமும் கொடுத்து, கருப்பனைத் தன் பிடியில் சிக்க வைக்கிறான், சங்கரபாண்டியன்.
'எப்படியும் ஐந்து வருடம் எஸ்டேட்டில கஷ்டப்பட்டு உழைத்து, கொஞ்சம் காசு சேர்த்தா, நல்ல வீடு, கொஞ்சம் நிலம், ரெண்டு மூணு கன்னு...' என்று கருப்பன் ஏகப்பட்ட கனவுகளுடன் தன் மனைவி வள்ளியுடன் புறப்பட்டு, கூலிகள் கூட்டத்தில் கலந்து பொள்ளாச்சி அருகிலுள்ள குமரிமலை எஸ்டேட்டுக்குச் செல்கிறான்.
அங்கு சென்ற பிறகுதான் கருப்பனுக்குத் தெரிகிறது - சங்கரபாண்டியன் மேஸ்திரி சொன்னதற்கு, ஒரு சிறுதுளியும் சம்பந்தமில்லாத நரகமே தேயிலைத் தோட்டம் என்று.
மொத்தமாக, தேயிலைத் தோட்டத்தைப் பற்றியதுதான் குருதித் தேநீர் என்னும் இந்தப் புதினம்.
புதினத்தின் பல இயல்களில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் அடிமைத் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் விவரிக்கப்படுகின்றன. அவை:
அடிப்படைத் தேவையைக் கூட பூர்த்திசெய்துகொள்ள முடியாத, பெயரளவுக்குக் கூலி;
ஓய்வில்லாத வேலை;
அரைகுறை சாப்பாடு;
தொழிலாளர்கள் தங்குவதற்கான குடியிருப்புகளின் அவல நிலை;
மழை போல பனி; மழையோ வானமே பொத்துக்கொண்டு ஊற்றுவதுபோல் கொட்டும்;
நிமோனியாவும், காய்ச்சலும் வந்ததன் விளைவாக, அன்றாடம் கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்து, தோட்டத்துக்கு உரமாகின்றனர்.
முதலாளியத்தைப் போலவே, தொழிலாளர்களின் இரத்தத்தை அட்டைகளும் உறிஞ்சி எடுக்கின்றன;
பெண் தொழிலாளர்கள் மாதவிடாய் நாட்களிலும் நிமிர்ந்து நிற்பதற்குக்கூட உடலில் தெம்பு இல்லாமல் தோட்டத்தில் தேயிலை பறிக்க வேண்டிய நிலை;
ஆங்கிலேயர்கள் மட்டுமன்றி, இந்தியக் கண்காணிகள் உள்ளிட்டோரும் பெண் தொழிலாளர்களை பாலியல் கொடுமை செய்கின்றனர்.
இவ்வாறான சூழலில் புதினத்தின் கதைத் தலைவன் கருப்பனின் மனைவி வள்ளிக்கு என்ன நேர்ந்தது, அங்கு குமரிமலையிலேயே அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு என்ன ஆனது என்கிற அனைத்துத் துயரங்களும் புதினத்தின் இறுதி இயலில் கூறப்பட்டுள்ளன.
இவ்வாறு பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலால் சுரண்டப்பட்டு, சிதைந்து போயின. அவற்றின் குறியீடாகவே, இந்தக் கருப்பன் – வள்ளி குடும்பத்தின் இன்னலும், இன்னபிற தொழிலாளர்களின் துயரங்களும் இப்புதினத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது – கூடுதல் சிறப்பு.
இத்தகைய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை இன்று பல இடங்களில் மாற்றப்பட்டிருக்கலாம்.
ஆனாலும், இந்தப் புதினத்தை வாசித்த போது, மனம் கனத்துப் போயிற்று.
- சா.ஜெயராஜ்