கலை என்பது

“கலையின் முதன்மையான நோக்கம் என்பது, ஒரு கலைஞன் தான் அனுபவித்த உணர்வுகளை மற்றவர்களையும் உணர வைப்பதே ஆகும். கலைஞனின் உணர்வுகள் உண்மையாக இருக்க வேண்டும். மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக, உலகளாவிய உணர்வுகளை உருவாக்கும் கலை மட்டுமே சிறந்தது!” – இது பேரெழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் கூற்று!

book on van goghஇந்தக் கருத்துவீச்சுக்கு ஏற்ற வண்ணம் டச்சு ஓவியரான வின்சென்ட் வான்கா உலகப் புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்து, மறைந்தார். இன்று அந்தப் படைப்பாளனின் புகழ், அறிகிறவர் மலைத்து நிற்கிற அளவுக்கு உலகில் நிலைத்து நிற்கிறது.

நிகழ்வுகளே புனைவாக

வின்சென்ட் வான்காவுக்கும் அவருடைய சகோதரருக்குமிடையே எழுதிக் கொள்ளப்பட்ட 700-க்கும் மேற்பட்ட கடிதங்களை ஆதாரமாகக் கொண்டு, ஓவியர் வின்சென்ட் வான்காவின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆவண ஆதாரங்களையே அடிப்படையாகக் கொண்டு, சுமார் 10 விழுக்காடு அளவுக்குச் சொல்லொழுங்கு செய்து புனையப்பட்டதே Lust of Love என்னும் புதினம். 1934-இல் இர்விங் ஸ்டோனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிவந்த இந்தப் புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார், கவிஞரும் எழுத்தாளருமான கே.பி.கூத்தலிங்கம்.

வான்காவின் வரலாற்றுப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘வாழ்க்கை மீதான பேராவல்’ என்ற பெயரில் சிறப்பாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது – நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.

‘வாழ்க்கை மீதான பேராவல்’ என்னும் நாவலின் கதைத் தலைவன் வின்சென்ட் வான்காவின் தம்பி தியோ வான்கா, வின்சென்ட்டின் உடன் இயங்கி வரும் ஓவியர் பால் கோகென் ஆகிய இருவரும் அவருடைய வாழ்வில் முதன்மையானவர்கள். அவர்கள் இருவரும் செய்த பண உதவியும் செலுத்திய உடலுழைப்புமே, வின்சென்ட்டையும், அவரது இறவா ஓவியங்களை வரையும் திறனையும் வாழ்வித்தன. இந்த ஓவியங்கள் உலகின் மிக மதிப்புபெற்ற ஓவியங்களில் அடங்கும். அவற்றில் ஒன்று 1987இல் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.

வான்கா முதலில் ஒரு விற்பனையகத்தில் பணியாற்றுகிறார்; பின்னர், சகோதரர் தியோவின் ஊக்கம் மற்றும் நிதி உதவியுடன், ஓவியக் கலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்.

ஓவியராகிறார்

பாரிஸில் டூலூஸ்-லாட்ரெக், கெசான், கோகென் போன்ற ஓவியர்களைச் சந்தித்து அவர்களுடன் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுகிறார். இது அவரது ஓவியப் பாணியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது; இருண்ட நிறங்களிலிருந்து பிரகாசமான வண்ணங்களுக்கு மாறத் தொடங்குகிறார்.

பிரான்சின் தெற்குப் பகுதியான ஆர்லஸில் குடியேறி, சூரிய ஒளி நிரம்பிய மஞ்சள் வண்ண ஓவியங்களை வரைகிறார். கோகெனுடன் சேர்ந்து ஓவியக் குழு அமைக்க முயன்றாலும், அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் வின்சென்ட்டுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு, நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் இரத்தத்தைச் சிதற வைத்த அதிர்வார்ந்தவை. முதலில், அவர் ஓவியங்களை வரைந்த பின்னணியைப் பார்ப்போம்.

1878-ஆம் ஆண்டு, வான்கா பெல்ஜியத்தின் ஏழ்மையான சுரங்கப் பகுதியான போரினேஜிற்குச் சென்றார். ஒரு புராட்டஸ்டண்ட் மதப் போதகராகச் சென்ற வான்காவிற்கு அப்போது 25 வயது.

அவர் தன்னை ஒரு சாதாரணத் தொழிலாளியைப் போலவே கருதி, அந்தத் தொழிலாளிகளுடன் கலந்து ஒன்றாக வாழ்ந்து, அந்தத் தொழிலாளர்கள் அனுபவித்த கொடூரமான வாழ்க்கை முறையை நேரில் கண்டறிந்தார்.

சுரங்கத் தொழிலாளர்கள் மீது வான்கா மிகவும் இரக்கம் கொண்டார். அவர்கள் அனுபவித்த கொடூரமான வறுமை வான்கா மனத்தை ஓர் உலுக்கு உலுக்கி விட்டது. அவர்கள் உழைத்த உழைப்பு, உற்ற துயரம், அவர்களுடைய சுற்றுச் சூழல் ஆகியவை வான்காவின் ஓவியங்களுக்கு மையக் கருப்பொருள்களாக அமைந்தன. அவருடைய மனத்தில் ஏராளமான கற்பனைகள் தோன்றின. அவற்றை ஒழுங்குபடுத்தி ஓவியங்களாக வரையத் தொடங்கினார்.

1885இல் தனது முதன்மையான முதல் படைப்பான ‘உருளைக்கிழங்கு உண்போர்’ (The Potato Eaters) என்னும் ஓவியத்தை வரைந்தார். இதைத் தொடர்ந்து, அவருடைய புகழின் உச்சத்தைக் காட்டும் இரண்டாவது முதன்மையான ஓவியம் ‘விண்மீன்கள் நிறைந்த இரவு’ (The Starry Night).

1889ஆம் ஆண்டு, மனநலம் குன்றிய நிலையில், வான்கா பிரான்சில் செயின்ட்-ரெமி (Saint Remy) மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது வரைந்ததுதான் விண்மீன்கள் நிறைந்த இரவு.

மத போதகராக இருந்தது, சுரங்கத் தொழிலாளர்களுடன் தங்கியிருந்தது ஆகியனவெல்லாம் வான்காவின் மனதில் இருந்து விலகியிருக்கக் கூடும். அல்லது அவற்றைத் தாண்டி, அவருடைய காதல் வாழ்வின் நிகழ்வுகளோ அல்லது தெற்குப் பிரான்சிலுள்ள தனது வீட்டு நினைவுகளோ அவரை ஆக்கிரமித்துவிட்டன.

தெற்குப் பிரான்சிலுள்ள தனது வீட்டுப் பால்கனிக்கு வெளியே இரவில் கண்ட காட்சியைத் தன் நினைவுக்குக் கொண்டு வந்து வரைந்ததாகக் கூறப்படுகிறது. அல்லது, ஏதோ கற்பனையான கிராமத்தை இணைத்து வான்கா வரைந்திருக்கலாம்.

சுழல் வாழ்வில் வானம் சித்தரிக்கப் பட்டிருப்பதாக இந்த ஓவியத்தை வான்கா வரைந்திருப்பார். இது ஓவியச் சேகரிப்பாளர்களின் கனவு ஒவியம் ஆகும்.

நீலம், மஞ்சள், ஊதா போன்ற வண்ணங்களை அதிகமாகப் பயன்படுத்தி, இரவின் அமைதியையும், அதில் மறைந்திருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் வெளிப்படுத்துகிறார் வான்கா. இந்த ஓவியம் உலகம் முழுவதும் உள்ள பல கலைஞர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் ஓர் இரசனையுணர்வை, படைப்புணர்வை ஏற்படுத்தியது. ‘சூரியகாந்திகள்’ தொடரில் (1888-1889) மூன்று வெவ்வேறு நிழல்களின் மஞ்சள் வண்ணத்தைப் பயன்படுத்தி, ஒரே வண்ணத்தின் ஆழத்தையும் உணர்வையும் வெளிக்காட்டினார். சூரியகாந்தி மலர்களின் மஞ்சள் வான்காவின் மகிழ்ச்சியையும் நட்பையும் வெளிப்படுத்தியது.

கலைஞனின் காதல்கள்:

‘காதலுக்குக் கண் இல்லை’ என்பார்கள். இந்தக் கலைஞர் வின்சென்ட் வான்காவின் காதல்களுக்குக் கணக்கும் இல்லை. கிடைத்திருக்கும் பின்வரும் பட்டியலில் அதைப் பார்ப்போம்.

யூஜின் லாயர் என்பவரையும், உறவினரும் கணவனை இழந்தவருமான கீ ஸ்ட்ரிக்கர் என்பவரையும், ஒருதலையாகக் காதலித்து ஏமாற்றம் அடைந்தார் வான்கா.

சியென் ஹோர்னிக்: இவர் ஒரு பாலியல் தொழிலாளி. அவர் கருவுற்றிருக்கும் போது வான்காவுடன் காதல் உருவானது. அவரது குழந்தையுடன் வான்காவுடன் ஓராண்டு காலம் வாழ்ந்தார். பின் அந்த உறவு முறிந்தது.

மார்கவ் பேகமென்: தனது பக்கத்து வீட்டுப் பெண்ணான மார்கவைக் காதலித்து அவரது குடும்பத்தினருக்குப் பிடிக்காததால் திருமணம் நின்று போனது.

கோர்டினா டி க்ரூட்: நியூனென் பகுதியைச் சேர்ந்த இவர் வான்காவிற்கு ஓவியம் வரைந்து கொடுத்திருக்கிறார். அவருடனும் காதல் உருவானது. அக்காதலும் முறிந்தது.

அகோஸ்டினா செகடோரி: பாரிஸில் வசித்த பெண் வான்காவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. அங்கும் பிரிவு ஏற்பட்டது.

இந்தக் காதல் தொடரில் மார்கவைக் காதலித்த நேர்வில் இவருக்கு வயது 31; காதலி மார்கவுக்கு வயது 41. அவரது குடும்பத்தார் கட்டப் பஞ்சாயத்து செய்துதான் இவர்களுடைய காதலைப் பிரித்து விட்டிருக்கின்றனர்.

திருப்பம்

இப்படியாகச் சென்ற வான்காவின் வாழ்க்கையானது இனிய இயற்கை; இன்றும் ரசிக மனங்களில் இருந்து கலையாத எழில் ஓவியங்கள்; கனிந்த காதல், கனியாத காதல் என மருதமும், பாலையுமான காதல் பயணம் ஆகியவற்றிலேயே நிறைந்து கரைந்தது.

இனிதே தொடங்குகின்ற வான்காவின் காதல் நிறைந்த கலை வாழ்க்கை, உச்சகட்ட இன்னலைத் தொடுகிறது. இசிஜி போல பல உணர்வுகளை ஏற்ற இறக்கத்தில் வழங்குகின்றன - இந்தப் புதினத்தின் இறுதி இயல்கள். வான்கா என்னும் ஓவியரின் கதை ஒரு காவியம்! செறிவுமிக்க அவரது வாழ்க்கையே ஓவியமான ஓர் ஓவியம்தான்!

சொல்லில் அடங்காத சுவை

மூன்று வயதுக் குழந்தைகள் பென்சிலைக் கொண்டு, சுவரில் கிறுக்குவதைப் பார்த்திருப்போம் அல்லவா? அப்படி கிறுக்கும் குழந்தைகள், தான் வரையத் தொடங்கும் கோட்டை அப்படியே வலமாக நீட்டி, பின் அப்படியே மேல்நோக்கிக் கொண்டு போய், அதற்குமேல் கை போகாது என்றவுடன், ஏதோ ஒரு பக்கம் திருப்பும்; இது அந்தக் குழந்தையின் மனம் போலத் தொடரும். அப்போது அந்தப் பிஞ்சு என்ன சிந்தித்தது என்று அதற்கும் சொல்லத் தெரியாது; நமக்கும் புரிந்து கொள்ள இயலாது. அப்படித்தான், இந்தக் கலைஞன் வான்காவின் வாழ்க்கைப் பயணமும்; அவருடைய விருப்பம் போலச் சென்றுள்ளது. அவருடைய வாழ்க்கைக் கதை நவரசம் நிரம்பியது. எந்த ஒரு கனியின் சுவையையும் சொல்லில் விளக்க இயலாது. அப்படித்தான் இர்விங் ஸ்டோன் எழுதிய இந்தப் புதினமும்! இதில் மொழிபெயர்ப்பாளர் கவிஞர் கே.பி.கூத்தலிங்கம் அவர்களின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது. வாசித்தால்தான் இதன் சுவை தெரியும்.

- சா. ஜெயராஜ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.