வெளிச்சத்துக்கு வராத லால்குடி திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்க வரலாற்றை பதிவு செய்திருக்கிறது, பெரியார் சரவணன் எழுதியுள்ள ‘திராவிடர் விவசாய-தொழிலாளர் சங்கம்’ நூல். பெரியார் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும் உள்ள தொடர்புகளையும் நூல் விளக்குகிறது. திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மலையப்பன் என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அதிகாரி, திருச்சி பகுதியில் பார்ப்பன - உயர் ஜாதிப் பண்ணையார்களுக்கு எதிராக குத்தகைதாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். குறிப்பாக , குளித்தலை பகுதியிலுள்ள நங்கவரம் பண்ணைக்கு எதிராக குத்தகைதாரர் பக்கம் நின்று நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார். இது நடந்தது 1950ஆம் ஆண்டு.

dravida vivasaaya thozhilalar sangamநங்கவரம் பண்ணை மிகவும் செல்வாக்குள்ளது. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இதுவா வேலை என்று அன்று பார்ப்பனர்களின் குரலாகவே வெளி வந்து கொண்டிருந்த ‘இந்து’ ஏடு கண்டித்து எழுதியது. மாவட்ட ஆட்சித் தலைவரை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் ஒரு அய்யங்கார் பார்ப்பனர்; அரசு வழக்கறிஞர் ஒரு அய்யங்கார் பார்ப்பனர், நீதிபதி ஒரு அய்யங்கார் பார்ப்பனர். மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எதிராக தீர்ப்பு எழுதிய அய்யங்கார் நீதிபதி, தனது அதிகார எல்லையை மீறி மாவட்ட ஆட்சித் தலைவர் மலையப்பனை கடும் வார்த்தைகளால் விமர்சித்தார்.

நேர்மையாக செயல்பட்ட ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அதிகாரியை பார்ப்பனர்கள் பொறியில் சிக்க வைத்து நெருக்கடி தந்ததை அறிந்த பெரியார், கரூர், பசுபதிபாளையம் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மலையப்பனுக்கு ஆதரவாக நின்று நீதிமன்றத் தீர்ப்பை கடுமையாக சாடினார். இதில்தான் பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த அவமதிப்பு வழக்கில் பெரியாரை ஜாதிப் பெயரோடு அழைத்து அவமானப்படுத்திய வழக்கறிஞர் சீனிவாச்சாரி மீது திராவகம் வீசியதாக பெரியார் தொண்டர் தியாகராசன் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்ட திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தில் நாகை எஸ்.எஸ். பாட்சாவுடன் இணைந்து பணியாற்றி வந்த திருச்சி ஏ.எம். ஜோசப், பெரியார் அழைப்பை ஏற்று 1952இல் திருச்சி மாவட்ட திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் அமைப்புகளுக்கான வேலைகளைத் தொடங்கினார். அப்போது லால்குடிப் பகுதி முழுதும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பார்ப்பன - உயர்ஜாதிப் பண்ணையார்கள் கட்டுப் பாட்டில்தான் இருந்தது.

கூகூர் பரமசிவம் பிள்ளை பண்ணை, தாத்தாச்சாரியார் பண்ணை, கொண்டையம் பட்டி செட்டியார் பண்ணை, மணக்கால் பாப்பம்மாள் பண்ணை என்று ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலத்தில் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் ஏனைய சங்கங்களிடமிருந்து வேறுபட்டு சுய மரியாதை உணர்வுடன் போராட்டத்தில் இறங்கியது. திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம், கூலி உயர்வுக் காகப் போராடவில்லை. ஜாதி - தீண்டாமை ஒழிப்பு; சுயமரியாதைக்காகவும் போராடியது என்பதே அதன் தனித்துவம். இந்தச் சங்கத்தில் உறுப்பினராக வேண்டுமானால் பொய் பேசக் கூடாது; குடிக்கக் கூடாது; ஜாதி, தீண்டாமையை எதிர்க்க வேண்டும்; குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

லால்குடியில் ஒரு தொடர் வண்டி நிலையத்தையே உரு வாக்கக்கூடிய செல்வாக்குடன் இருந்த கொண்டையம்பட்டி செட்டியார் பண்ணை, வெற்றிலை சாகுபடி செய்து வந்த கொடிக்கால் பிள்ளைமார் ஜாதியினரான விவசாயிகளை தங்கள் ஆதரவாளர்களாக்கிக் கொண்டு, விவசாயத் தொழிலாளர்களையும் குத்தகை சாகு படியாளர்களையும் கொடூர மாக ஒடுக்கி வந்தபோது, திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம், “விளைச்சலில் சரி பாதியை பிரித்துக் கொடு” என்ற உரிமைப் போராட்டத்தைத் தொடங்கியது. பண்ணை - குத்தகைத் தொகையைக் கடுமையாக உயர்த்தியபோது, குத்தகைத் தொகையை தரமாட்டோம் என்று தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத் தார்கள். வேலை நேரம் போக இரவில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் (கெரசின் எண்ணெய்யில் எரியும் விளக்கு) கூட்டங்கள் நடத்தி ஆலோசனை நடக்கும். பெரியார் கருத்துகள் பேசப்படும். கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை விளக்கி ஊர்வலங்கள், பரப்புரை, துண்டறிக்கை விநியோகம் நடக்கும்.

ஒரு கட்டத்தில் ஆண்டைகளிடம் இனி கெஞ்சுவதில் பயன் இல்லை; அறுவடை நெல்லை நாமே வீட்டுக்கு எடுத்துச் செல் வோம்; வருவதை எதிர் கொள் வோம் என்று முடிவெடுத்தார்கள். அது வரை பொதுக் களத்துக்குத்தான் அறுவடை வரும். இந்த முடிவை அறிந்து கொண்ட, கொண்டையாம் பட்டி பண்ணை கொடிக்கால் விவசாயிகளைத் திரட்டி, தி.வி.தொ. சங்கத்தினரை வழி மறித்துத் தாக்க ஏற்பாடுகள் செய்தனர். கூகூர் - திருமங்கலம் பிரிவில் இரு தரப்புக்கும் நடந்த மோதலில் 12க்கும் மேற்பட்ட திராவிடர் விவசாய சங்கத் தொழிலாளர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் 20க்கும் அதிகம் என்று மூத்த தோழர் ஒருவர் இப்போதும் உயிருடன் இருப்பவர் கூறுகிறார். அதே போல் மணக்கால் பாப்பம்மாள் பண்ணையில் சம பங்கு கேட்ட தி.வி.தொ. சங்கத்தினர் மீது மதுரையிலிருந்து ஆட்களைக் கொண்டு வந்து நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த போராட்ட வரலாறுகள் பதிவு செய்யப்பட வில்லை என்பதுதான் துயரம்.

இவ்வளவு அடக்குமுறை - படு கொலைகளுக்குப் பிறகு விளைச்சலில் சமபங்கு என்ற கோரிக்கையை மாற்றி பயிரிடும் நிலத்தில் சம பங்கு என்ற கோரிக்கையோடு போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்கள். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு தான் 1952இல் தமிழ்நாட்டில் அதிகாரத்துக்கு வந்த இராஜகோபாலாச்சாரி பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். கீழத் தஞ்சையில் நில பிரபுத்துவம் வீழ்த்தப்பட்டதற்குக் காரணம் திராவிட இயக்க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குத்தகைதாரர்களைப் பாதுகாக்கும் சட்டங்களே என்று கள ஆய்வுகள் நடத்தி விரிவான நூலை எழுதியிருக்கிறார், பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன்.

லால்குடி பகுதியில் திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் நடத்திய போராட்டங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது இந்த நூல். இது தொடர்பான விரிவான ஆய்வுகள் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான கதவினைத் திறந்து விட்டிருக்கிறது, இந்த நூல்.

நூல் : திராவிடர் விவசாய-தொழிலாளர் சங்கம்

வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-87.

விலை : ரூ.70

கிடைக்குமிடம் : புதிய எண்.120, என்.டி.ஆர். தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24.

- விடுதலை இராசேந்திரன்

Pin It