உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சியர்கள் அறைகூவி அழைத்தபோது, அது எவ்வாறு சாத்தியம்? தொழிலாளிக்கு சாதி இருக்கிறது, மதம் இருக்கிறது - இனம், மொழி, நிறம், நாடு..... போன்ற பிரிவினைகள் இருக்கின்றன. எல்லாவற்றிலிருந்தும் விலகி அவன் எவ்வாறு வர்க்க அடிப்படையில் மட்டும் ஒன்றிணைய முடியும்? என்றெல்லாம் நவீன / பின் நவீன மார்க்சிய சிந்தனையாளர்கள் மறுத்துப் பேசினர். ஆனால் இன்றைக்கு மதம், மொழி, நாடு, இனம் எல்லாம் கடந்து லாபம்என்கிற ஒற்றை இலக்கு நோக்கி உலக முதலாளிகள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

இத்தகைய நெருக்கடியான சூழலில், தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்தும் செய்திகளை முன்னிறுத்தி ஒரு தொழிற்சங்க களப்போராளியின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிவந்திருப்பது காலத்தின் தேவையினை நிறைவு செய்யும் மிகப் பொருத்தமானதொரு நிகழ்வாகும்.

டிஜெ என்று மின் தொழிலாளர்களால் அழைக்கப்பட்ட தோழர் து. ஜானகிராமனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இந்நூல், அதனூடாக தமிழ்நாடு மின் வாரியத்தில் மின் தொழிலாளர்களின் காலநிலை மாற்றங்களையும், தொழிற்சங்கங்களின் வரலாற்றினையும் விரிவாக எடுத்துரைக்கிறது.

இந்தியாவில் / தமிழ்நாட்டில், எழுபதுகளுக்குப் பின் தொழில் மயமானதன் காரணமாக மின்சாரத்தின் தேவைகள் முதன்மையானதாக அறியப்பட்டன. தமிழகத்தின் கிராமங்கள் தோறும், மலைப் பகுதிகள் எங்கும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்களைச் சுமந்து சென்று மின் தொழிலாளர்கள் நட்டார்கள். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் மின்கம்பிகள் இழுக்கப் பட்டு வீடுகள்தோறும் ஒளியூட்டப் பட்டன. இப்பணிகளில் ஆயிரக்கணக்கான மின் தொழிலாளர்களும், ஒப்பந்த ஊழியர்களும் ஆற்றிய பங்களிப்பு மகத்தானதாகும். எழுபதுகளின் தொடக்கத்தில் 10 லட்சம் அளவில் இருந்த மின் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை எண்பத்தைந்தில் 61.71 லட்சமாக உயர்ந்தது. தற்போது 1.9 கோடி பயனீட்டாளர்கள் உள்ளனர். ஆனால், அத்தகைய சூழலில் அண்ணா காலம், எம்.ஜி.ஆர் காலம், கலைஞர் காலம், ஜெ. காலம்... என எல்லாக் காலங்களிலும் வேறுபாடில்லாமல் மின் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டனர். அவர்கள், தினக்கூலிகளாக - ஒப்பந்த ஊழியர்களாக 15-20 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகத்தில் / அரசால் எவ்வித அடிப்படை உரிமைகளுமற்ற அத்துக் கூலிகளாக நடத்தப்பட்டதை தோழர் டி.ஜெ. எதிர்த்தார்.

அத்தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகளைப் பெறவும் நிரந்தரமாக்கவும், அவர்களை ஒருங்கிணைத்து, தலைமையேற்று, பிற சங்கங்களையும் ஒன்றிணைத்து அவர் நடத்திய பல்வேறு போராட்டங்கள் குறித்து விரிவான செய்திகளை தோழர் ராமகிருஷ்ணன், கால அடிப்படையில் தொகுத்துப் பதிவு செய்திருப்பது இன்றைய தலைமுறைத் தொழிலாளர்களுக்கான மிக முக்கிய ஆவணமாக விளங்கக்கூடும்.

தொடக்கத்தில் திராவிட இயக்க ஆதரவாளராக இருந்த தோழர் டி.ஜெ. சிறிது சிறிதாக இடதுசாரி சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டு அவற்றில் இணைந்ததும், மிசாவில் சிறையிலடைக்கப்பட்டபோது அங்கே இடதுசாரி தோழர்களால் பயிற்றுவிக்கப் பட்டதும் அவர் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான தளமாற்றங்களாகும். 1970-களில் மின் ஊழியர் மத்திய அமைப்புத் தொடங்கப்பட்டது முதல் 25 ஆண்டுகளாக அதன் பொதுச் செயலாளராக திறம்படச் செயல்பட்டார்.

கூட்டுறவு சங்கங்களில் பொறுப்பேற்றபோது அதனை சீர்திருத்தி இழப்பிலிருந்து மீட்டெடுத்ததும், சாலையோர சிறு வணிகர்களுக்கு கடனுதவி வழங்கச் செய்ததும் - மின் ஊழியர்களுக்கான நாடு தழுவிய தொழிற்சங்க அமைப்பை (ணிணிதிமி) உருவாக்கியதில் முனைந்து செயலாற்றியதும் - மின் ஊழியர்களுக்கு இடதுசாரித் தொழிற்சங்க உணர்வூட்ட, பல்வேறு பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ள, நிர்வாகத்தின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்த... மின்கதிர், ஒளிக்கதிர் (ஓய்வூதியர்களுக்கு) போன்ற இதழ்களைத் தொடங்கி அவற்றைத் தொடர்ந்து கொண்டு வந்ததும் -

இனிமையும், எளிமையுமாய் இருந்து பிற தொழிற்சங்கம் சார்ந்த தொழிலாளர் களோடும் மதிக்கத்தக்க வகையில் அரவணைத்துச் சென்றதும்....

போன்ற டி.ஜெ. வின் தனித்தன்மை வாய்ந்த செயல்பாடுகள் இன்றைய தொழிற்சங்கங்களும், அவற்றின் பொறுப்பாளர்களும் போற்றிப் பின்பற்ற வேண்டிய பண்புகளாகும்.

பொதுவுடைமையின் இறுதி நிலையில் அரசுகள் உலர்ந்து உதிர்ந்துபோகும் என்றார் பேரசான் மார்க்ஸ். ஆனால், இன்றைய அரசுகள் மக்கள் நல அரசுகள் என்கிற நிலையிலிருந்து உதிர்ந்து மிகப்பெரும் கார்பொரேட் நிறுவனங்களுக்கு இணையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், கல்வி, மருத்துவம், நிலம்...... போன்ற அனைத்தையும் தனியார்களுக்கு தரைவார்த்துவிட்டு சாராய வணிகத்தை மட்டும் செவ்வனே ஏற்று நடத்தி விஜய் மல்லையாவின் கூட்டாளியைப் போல் செயலாற்றுகின்றன நமது அரசுகள்.

மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மின்சாரம் பெறும் உரிமையையும்உலக மனித உரிமை அமைப்புகள் முன்மொழிந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில்தான், இந்தியாவில் மக்களுக்கு மின்சாரம் வழங்குகிற அந்தப் பொறுப்பிலிருந்தும் அரசுகள் தம்மை விடுவித்துக் கொண்டு, மின்சார சட்டம் -2003-ன் வாயிலாக மின்சாரத்தை மிகப்பெரும் லாபமீட்டக்கூடிய வணிகப் பொருளாக மாற்றியமைத்துவிட்டன.

அதனூடாக தனியார் மின்நிலையங்கள் மின்உற்பத்தி செய்து மின் வாரியங்களுக்கு வந்து பல்லாயிரம் கோடிகள் கொள்ளை லாபத்தை ஈட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. அதன் விளைவு மக்களுக்கு மின்வெட்டும், மின் வாரியங்களுக்கு பொருள் இழப்பும்தான். தற்போது இழப்பையே காரணம் காட்டி, முற்றிலுமாய்த் தனியாருக்கு பிரித்துக் கொடுத்துவிடும் போக்கு தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், மின் அரங்கத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடுவதோடல்லாமல், பிற பொதுத்துறை ஊழியர்கள், சிறுகுறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்....... உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து தனியார்மயத்திற்கு எதிரானதொரு வலிமையான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவையினை வலியுறுத்தி நிற்கிறது தோழர் டி.ஜெ. வின் இந்த வாழ்க்கை வரலாற்று நூல்.

 

Pin It