மார்க்சிய அறிகைத் தளத்தில் நின்று மரபுவழி உளவியலுக்கு மாற்று வடிவம் கொடுத்தவர் ரசியாவைச் சேர்ந்த வைகோட்சி (1896-1936). சமூக நிலையில் பரவலான ஆய்வுகளை மேற்கொண்டு, மனித மனத்தைப் பற்றிய விளக்கத்தையும் சூழலோடு இடைவினை கொண்டு மனிதர் கற்றுக்கொள்ளும் செயற்பாட்டையும் விளக்கினார். அவரைத் தொடர்ந்து மார்க்சிய உளவியல் உலகில் தடம்பதிக்கலாயிற்று.
வைக்கோட்சிக்கு முன்னர் உளவியல் என்பது தனிமனித வாதத்தை அடியொற்றிய கலையாகவே இருந்து வந்தது; சமூக இருப்பும் அதனை அடியொற்றிய மனித நடத்தைகளும் கருத்திற் கொள்ளப்படவில்லை.
சமூக இருப்பிலிருந்தே மனிதமனம் உருவாக்கம் பெறுகிறது என்ற மார்க்சியக் கருத்தியலை உளவியலில் நிறுவி, தமது ஆய்வுகளை முன்னெடுத்தவர் வைகோட்சி.
மார்க்சிய உளவியலுக்கு அவர்தந்த அறிக்கைகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
1) ஒருவரது உள ஆற்றலும் அறிகைச் (COGNITIVE) செயற்பாடும் உயிர் மரபோடு மட்டும் தங்கியுள்ளன என்ற மரபுவழி உளவியற்கருத்தை நிராகரித்தார்.
மொழி என்ற கருவியைப் பயன்படுத்தி, சமூகச் சூழலோடும், பண்பாட்டு நிலவரங்களோடும் நிகழ்த்தப்படும் இடைவினைகளின் வாயிலாகவே உள ஆற்றலும் அறிகைத் திரட்டலும் முழுநிலையில் நிகழ்வதாக விளக்கினார். சமூகநிலையில் மேற்கொண்ட நீண்ட ஆய்வுகளை அடியொற்றி அந்த முடிவுக்கு வந்தார்.
2) அவர் அறிமுகப்படுத்திய “அண்மை விருத்திவலயம்” (ZONE OF PROXIMAL DEVELOPMENT) என்ற கருத்துவடிவம் மேலைப்புல அறிகை உளவியலாளரின் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றது. எவ்வயதினரும் தாம் முயன்று கற்கும் உச்ச எல்லைக்கும் அப்பால் உள்ள வலயமே அண்மை விருத்திவலயமாகிறது. ஆற்றலுள்ளோரின் வழிகாட்டலுடன் அந்த வெளியை நிரப்ப முடியும்.
எட்டுவயதுச் சிறுவர் மீது நிகழ்த்தப்பட்ட வரன்முறையான ஆய்வை அடியொற்றி அந்த முடிவை முன்வைத்தார். உரிய முறையிலே கல்வி வழங்கப்பட்ட வேளை, எட்டு வயதுச் சிறுவர் பன்னிரண்டு சிறுவருக்குரிய அறிவைப் பெற்றுக் கொண்ட வளர்ச்சியைக் கண்டறிந்தார்.
எட்டு வயதுக்கும் பன்னிரண்டு வயதுக்கும் உள்ள இடைவெளியே அண்மைவிருத்திவலயமாகும். அதனை அடியொற்றியே அறிகை வளர்ச்சியில் தாவல்கட்டல் (SCAFFOLDING) என்பது கல்வி நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
3) வயது மற்றும் ஆற்றல் முதிர்ச்சியால் மட்டும் அறிவு திரட்டிக் கொள்ளப்படுவதில்லை. சமூக இருப்பின் முக்கியத்துவம் அறிகை வளர்ச்சியில் நிகழ்த்தும் வகிபாகத்தை விளக்கினார்.
4) மார்க்சிய வரலாற்று இயங்கியலையும், கற்றலில் நிகழும் வளர்ச்சியையும் தொடர்புப் படுத்தி, பண்பாட்டு வரலாற்றுச் செயலிகைக் கோட்பாட்டை (CULTURAL HISTORICAL ACTIVITY THEORY) முன்வைத்தார். வரலாற்றுச் சூழமைவால் மனித ஆற்றல் உருவாக்கம் பெறுதலை அதன் வழியாகத் தொடர்புப் படுத்திக் காட்டினார்.
மேலும், மார்க்சிய உளவியலுக்குரிய ஆய்வை மேற்கொண்டவர்களுள் பவ்லோவ் (1849-1936) என்பாரும் முக்கியமானவர். கற்பனையாலும், ஊகங்களாலும், தொன்மங்களாலும் உளவியலை நிறுவாமல் பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்ட உளவியலுக்கு வலுவூட்டினார்.
நடத்தை உருவாக்கம் பற்றிய பரிசோதனையை நாயை அடிப்படையாகக் கொண்டு விளக்கினார். அவரது பரிசோதனைக்கும் முடிவுகளுக்கும் 1904ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நடத்தை உருவாக்கம் பெறுதல், நடத்தையை நிலைத்து நிறுவச் செய்தல், நடத்தையை இல்லாமல் செய்தல், மீண்டும் உருவாக்குதல், மீண்டும் அதனை ஏற்படுத்தல், வேறுபடுத்தி அறிதல், இரண்டாம் நிலை ஆக்கநிலை நிறுத்தல் முதலிய விதிகளை அவர் உருவாக்கினார்.
தொல்சீர் நிபந்தனைப்பாடு அல்லது தொல்சீர் ஆக்க நிலைநிறுத்தல் கோட்பாட்டாளராக அவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.
மார்க்சியக் கருத்தியல் தளத்தில் காலூன்றி நரம்பியல் உளவியலை (NEURO PSYCHOLOGY) முன்னெடுத்தவர் அலெக்சாந்தர் லுரியா (1902-1977). நவீன நரம்பிய உளவியலின் தந்தையாக அவர் நிலைபெறுகிறார். அவர் வைகோட்சியின் நண்பர். இருவரும் இணைந்து ஆய்வை மேற்கொண்டனர்.
உளவியல் விளக்கத்துக்கு மார்க்சிய இயங்கியலை இருவரும் பயன்படுத்தினர். உடலியக்கத்துக்கும், உளவியலுக்கும் உள்ள தொடர்புகள் மேலும் புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டன.
உயர்நிலையான உளத் தொழிற்பாட்டில் மொழியின் முக்கியத்துவத்தை இருவரும் தெளிவுபடுத்தினர்.
பொருளாதாரக் கட்டமைப்பும் உற்பத்தி முறைமையுமே சமூகத்தின் அடிக்கட்டுமானமாக அமைகிறது. அதனை அடியொற்றியே மனித நடத்தைகளும் சிந்தனைக் கோலங்களும் உருவாக்கம் பெறுகின்றன. மனித மனத்தை உருவாக்குவதில் அவை பங்கு கொள்கின்றன.
மார்க்சியக் கருத்தியலை அடியொற்றி மனித ஆளுமை உருவாக்கமும் விளக்கப்படுகிறது. அதனை முன்னெடுத்தவர்களுள் லுசியான் செவே (1926-2020) முக்கியமானர். “மார்க்சியம் இன்றி மனித ஆளுமையை முழுமையாக விளக்கமுடியாது” என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
“மார்க்சியமும் ஆளுமைக் கோட்பாடும்”, “மார்க்சியக் கோட்பாட்டில் மனிதன் மற்றும் ஆளுமை உளவியல்”, “உளப்பகுப்புக் கோட்பாடு தொடர்பான மார்சியத் திறனாய்வு” உள்ளிட்ட அவரது நூல்கள் உலகளாவிய முறையில் பலமொழிகளில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டு மார்க்சிய உளவியலின் கருத்துப் பலத்தை வெளிப்படுத்தின.
பிரெஞ்சுக் கம்யூனிசக் கட்சியின் உறுப்பினராக இருந்த அவர் எழுத்துப் பணியோடு மட்டும் நின்றுவிடாது சமூகப்பணியிலும் ஈடுபட்டார்; அரசியல் செயல்பாட்டாளராகவும் செயற்பட்டார்.
அவரது நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியல் துறையில் மாணவருக்குரிய உசாத்துணையாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.
மார்க்சிய உளவியலுக்கும் சிக்மன் பிராய்டின் உளப்பகுப்பு உளவியலுக்குமிடையே சில நிலைகளில் ஒப்புமை இருத்தலை சில உளவியலாளர்கள் கண்டறிந்தனர்.
உலகியல் உணர்வுகளை அடக்குதல், அன்னியமாதல் (கார்ல் மார்க்ஸ் அன்னியமாதல் பற்றி விரிவாக ஆராய்ந்தவர்), மெய்மை நிலை அறிவதன் வாயிலாக மனச்சுகம் பெறுதல், பொய்மை உணர்வுளைக் கண்டறிதல் போன்றவற்றை முதன்மைப்படுத்தல் முதலியவை மார்க்சிய உளவியலுக்கும் உளப்பகுப்பு உளவியலுக்கும் உள்ள பொதுப்பண்புகள். அதேவேளை, பிரச்சினைக்குரிய தீர்வை உளப்பகுப்பு உளவியல் தனிமனித நிலையில் நோக்குகின்றது; மார்க்சிய உளவியல் சமூகநிலையில் நோக்குகின்றது.
பிராய்டிசத்துக்கும் மார்க்சியத்துக்குமிடையே ஒப்புமை கண்டோரால் உருவாக்கப்பட்டதே “பிராய்டோ மார்க்சியம்” (FREUDO MARXISM) என்ற அறிகைவடிவம்.
எரிக்புரோம், லகான், மிசேல் பூக்கோ போன்றவர்கள் அந்த இணைப்புக்கு உடன்பாடு கொண்டோராய் இருந்தனர். பிராங்போட் சிந்தனா கூடத்தைச் சேர்ந்த எரிக்புரோம் (1900-1980) முன்வைத்த உளவியற் சிந்தனைகள் தனித்துவமானவை.
சமகால முதலாளியக் கட்டமைப்பும் அதனோடிணைந்த சமூகவியல்பும் மனிதரிடையே அன்னியமயப் பாட்டையும் எதிர்மானிட இயல்பையும் உருவாக்குவதாக புரோம் விளக்கினார்.
சமூக மாற்றம் ஏற்படுத்தப்படும் பொழுது, உளவியல் நிலையில் மனித விடுதலை எட்டப்படும் என்று மேலும் குறித்துரைத்தார்.
மார்ச்சியத்தோடும் உளப்பகுப்பு உளவியலோடும் உறவாடியவர்களுள் ஒருவரான லகான், உளவியல், உளமொழியியல் (PSYCHO LINGUSTICS) ஆகிய துறைகளில் கால்பதித்து நிறைந்தவர். சமகால உளவியலில் அதிகம் மேற்கோள் காட்டப்படுபவர்களுள் ஒருவராகவும் விளங்குகிறார்.
மொழியால் மனம் கட்டமைக்கப்படுகிறது என்று குறிப்பிடும் லகான் சமூக இயல்போடு மனம் உருவாக்கப்படுகிறது என்ற மார்க்சிய அணுகுமுறையோடு இணைந்து செல்கிறார். அதே வேளை, பிராய்டிசத்தோடு இணைந்து நனவிலிமனம் பற்றிய கருத்தையும் ஏற்றுக் கொள்கின்றார்.
தன்னிலை உருவாக்கம் தொடர்பாக அவர் முன்வைத்த “கண்ணாடிப் பருவம்” (MIRROR STAGE) என்ற கருத்து வடிவம் ஆய்வுக்குரிய எழுபொருளாகின்றது. குழந்தை வளர்ச்சியில் ஆறாம் மாதத்துக்கும் பதினெட்டாம் மாதத்துக்கும் இடைப்பட்ட காலம் கண்ணாடிப் பருவமாகின்றது. தனது உடலுக்கும் தனக்குரிய படிமத்துக்கும் உள்ள தொடர்பைக் கண்டறியும் பருவமாக அது அமைகின்றது. குழந்தையின் உளவளர்ச்சியில் அது ஒரு திருப்புமுனையாக அமைவதையும் சுட்டிக்காட்டினார்.
“நனவிலி மனம் மொழி போன்று கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது”. என்ற அவரது கருத்து விவாதத்துக்குரிய வடிவமாகின்றது.
மார்க்சிய செல்வாக்கினால் உருவாக்கம் பெற்ற பிறிதொரு வடிவமாக விளங்குவது “விடுதலை உளவியல்” (LIBERATION – PSYCHOLOGY). இக்னோசியோ மார்டின் பரோ (1942-1989) என்பார் அதற்குரிய நிறைவு வடிவத்தை வழங்கினார்.
சமூக ஒடுக்கு முறைகளாலும் காலனித்துவ மேலாதிக்கத்தினாலும், மனித மனம் பாதிப்புக்கு உள்ளாவதைக் குறித்துரைத்த அவர் அவற்றிலிருந்து விடுதலை பெறப்படும் பொழுதுதான் மனச்சுகம் எட்டப்படும் என்பதை முன்மொழிந்தார்.
மார்க்சியக் கருத்தியலை உள்வாங்கிய பல நிலைஎழுச்சிகள் தென்அமெரிக்க நாடுகளில் இயங்கின. விடுதலை இறையியல், விடுதலை அறிவளிக்கை (PEDAGOGY), விடுதலை உளச்சிகிச்சை, விடுதலை இசைச்சிகிச்சை என்றவாறு மேற்கிளம்பல்கள் நிகழ்ந்தன.
மக்களுக்கு விழிப்பூட்டல், உற்றறி நடப்பியலை ஊட்டுதல், ஒடுக்குமுறைக் கருத்தியலில் இருந்து விடுபடவைத்தல், நலன்தரு கருத்துக்களை ஒன்றிணைத்துப் பயன்படுத்தல் போன்றவை முன்னெடுக்கப்பட்டன.
மனிதஇயல்பை, சமூக அரசியற்பின்புலத்திலும் வரலாற்றுச் சூழமைவு நிலையிலும் நிறுத்தி விளங்கிக் கொள்ளல் ஆகியவை விடுதலை உளவியலில் வலியுறுத்தப்படுகின்றன.
மார்க்சிய உளவியலை நவீன உலகச் சூழலுக்கேற்றவாறு நீட்சி கொள்ளச் செய்து வருபவர்களுள் ஒருவர் கார்ல் இரட்னர்.
மேலைப்புல உயர்அடுக்கினரின் நடத்தைகளை அடியொற்றியே அங்குள்ள உளவியற் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என எடுத்துரைத்தார். அவற்றை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவை என்று கருதுதல் தவறு என்பதைச் சுட்டிக் காட்டினார்.
அவை சமூக ஏற்றத்தாழ்வை அங்கீகரிக்கும் உளவலிமை உருவாக்குவதற்கு மட்டுமே பயன்படுகின்றன.
நவீன அரசாலும், நிறுவனக் கோலங்களாலும், நுகர்ச்சி முறைமையாலும் உருவாக்கப்படும் பண்பாட்டுப் பெருவெளியை நுணுகி நோக்கினார். அந்த நிலவரம் ஒடுக்குமுறைக்குச் சாதகமாக இருப்பதுடன், மனத்தை அவலநிலைக்குத் தள்ளி விடுதலை அடியொற்றி “பெருவெளிப் பண்பாட்டு உளவியல்” (MACRO CULTURAL PSYCHOLOGY) என்ற கருத்து வடிவத்தை உளவியற் புலத்தில் முன்வைத்தார்.
கார்ல் மார்க்சின் எழுத்துகளும், வைக்கோட்சியின் உளவியல் ஆய்வுமுறைகளும் அவரின் மேற்கூறிய கருத்துவடிவத்தை உருவாக்குவதற்குரிய அறிகைத்தளங்களாக அமைந்தன.
இருபத்தோராம் நூற்றாண்டின் பொருளாதாரச் சுரண்டல் நிலவரங்களும், பண்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களும் அவரது சிந்தனையில் ஆழ்ந்த உறுத்தல்களை ஏற்படுத்தின.
பால்நிலைச் சமத்துவத்தை வலியுறுத்துதலும் பெருவிரிவுப் பண்பாட்டு உளவியலின் உள்ளடக்கமாக அமைந்தது.
சமகால வாழ்க்கைக் கோலத்தை மார்க்சிய அறிகைத் தளத்தில் நின்று ஆய்வு நிகழ்த்தும் உளவியலாளருள் அவரும் ஒருவராகின்றார்.
கார்ல் இரட்னர் 2006ஆம் ஆண்டுக்கும் 2007ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜவகர்லால் நேருப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது
மார்க்சியமும் உளவியலும் தொடர் வளர்ச்சி நிலைகளுடன் மேலெழுந்து வருகின்றன.
அவை தொடர்பான விரிந்த விளக்கத்தை இந்நூல் தருகிறது.
- சபா.ஜெயராசா