ரஷ்ய இலக்கியம் இன்று வரை அதன் இளமை குறையாமல் உலகெங்கும் ஒளிர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்கள்:

  • படைப்புகளில் இடம்பெறும் கதைமாந்தர்களின் அகப் போராட்டங்கள் வாசிக்கிற வாசர்களை வலுவாகச் சிந்திக்க வைக்கின்றன; தங்கள் வாழ்க்கையில் செய்த குற்றங்களையும், சிறு பிழைகளையும் கூட மனதில் அசைபோட வைக்கின்றன;
  • வாழ்க்கையின் அடிப்படைக்கூறு, இறப்பு, கடவுள் நம்பிக்கை உள்ளிட்ட கூறுகளில் கேள்விகளை எழுப்புகின்றன;
  • அடிமைத்தனம், வறுமை, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை மிகக் கடுமையாக விமர்சனம் செய்கின்றன;
  • பல தலைமுறைகளையும் வரலாற்றையும் கொண்ட பெரு நெடுங்கதைகள் இவை.

nikolai leskovஇத்தகைய செழுமைமிகு ரஷ்ய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர் நிக்கோலாய் லெஸ்காவ். இவர் 1831ஆம் ரஷ்யாவின் ஓரியோவ் மாகாணத்தில் பிறந்தார். கீவ் நகரில் குற்றவியல், விவசாயப் பொருளாதாரம், ரஷ்ய இலக்கியம் போன்ற படிப்புகளைப் படித்தார். பின்னர் அரசுப் பணியில் சேர்ந்து, பணியின் காரணமாக மாஸ்கோ பீட்டர்ஸ்பர்க், ஓல்கா நதிப் பிரதேசம், சைபீரியா போன்ற பகுதிகளில் தன்னுடைய காலத்தைச் செலவழித்தார். இவர் படித்த இலக்கியங்களும், இவர் பெற்ற ஏராளமான மக்கள் தொடர்பும் எழுத்துத் துறையில் மிளிர பெரும் உதவி செய்தன. ஆம், இங்கே லெஸ்காவ் செலவழித்த காலத்தில் பெற்ற அனுபவங்களெல்லாம் இலக்கியத் துறையில் முதலீடாயின; ஆனால், அந்த முதலீட்டின் பலன் என்னவோ வாசகருக்குத்தான்!

நிக்கோலாய் எழுதிய மனங்கவர்ந்த நாடோடி, சென்ஸ்கின் லேடி மாக்பெத், இடதுகை மாஸ்டர், மேக்கப் கலைஞர் ஆகிய நான்கு குறு புதினங்கள் ஒரே தொகுப்பாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ளது.

சென்ஸ்கின் லேடி மாக்பெத் (Lady Macbeth of the Ttsensk District):

இந்தப் படைப்பு, பின்னர் ஷோஸ்தகோவிச் (Shostakovich) என்பவரால் ஓர் இசை நாடகமாக (Opera) உருவாக்கப்பட்டது.

இந்தக் கதை 19ஆம் நூற்றாண்டின் ரஷ்யாவின் வணிகர் ஒருவரின் வீட்டில் நிகழும் சோகக் கதை.

இஸ்மாய்லோவ் குடும்பத்தின் இளம் மனைவியான காத்தரீனா லவோவ்னா ஆவாள், இவருடைய கணவன் சினோவி வயது முதிர்ந்தவர்; இவர்களுடைய குடும்பத்தில் குழந்தை இல்லை. இந்த இளம்பெண் விரக்தியுடன் வாழ இந்த இரண்டு காரணங்கள் போதாவா? போதாக்குறைக்கு அவளுடைய மாமனார் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறார்.

காத்தரீனா, தனது கணவர் தொழில் நிமித்தமாக கணவர் வெளியூருக்குச் சென்றிருக்கும் வேளையில், தனக்குக் கீழ் பணியாற்றும் தொழிலாளி செர்கே என்பவனுடன் நெருங்கிப் பழகி உறவு கொள்கிறாள். அதன்பிறகு, நாயகியின் மாமனாரைக் கொலை செய்வது தொடங்கி, அடுத்தடுத்து தொடர்ந்து கொலைக் குற்றங்கள் நிகழ்கின்றன.

ஓர் இளம் பெண் தன் வறுமை, குடும்பச்சூழலை யொட்டி, வயது முதிர்ந்த பணக்காரருக்குத் திருமணம் செய்து வைக்கப்படும் போது, முற்றிலும் வாழ்க்கையின் இயல்பை இழக்கிறாள். அதன் விளைவாகவே பிறிதோர் காதலில் ஈடுபட்டு, சிறிதுசிறிதாக தன் வாழ்க்கையையே இழக்க நேரிடுகிறது என்பதை நிக்கோலாய் லெஸ்காவ் அழுந்தச் சுட்டிக் காட்டுகிறார்,

மனங்கவர்ந்த நாடோடி (The Enchanted Wanderer):

இக்கதை பல்வேறு சிக்கல்களைக் கடந்து, ஆன்மீக மீட்பை நோக்கி ஒரு ரஷ்யக் குடிமகன் பயணம் செய்வதைத் சித்திரிக்கிறது.

லடோகா ஏரியில் கப்பல் பயணத்தின் போது, கதைத் தலைவனான இவான் ஃபிளையாகின் என்னும் துறவி, தன் வாழ்க்கையைச் சக பயணிகளிடம் கூறுகிறார்.

இவானின் தாய், அவனை ‘இறைவனுக்கு உரியவன்’ என்று கடவுளுக்குத் தந்து கொடுத்து, அதே நம்பிக்கையில் வாழ்கிறாள். ஆனால், இவான் அந்த இளம் வயதிலேயே மடத்தை மறந்து விடுகிறான்.

இந்நிலையில், அவன் ஒருநாள் விளையாட்டாக ஒரு துறவியைச் சாட்டையால் அடிக்க, அந்தத் துறவி உயிரிழந்து விடுகின்றான். இறந்த துறவி இவானின் கனவில் தோன்றி, இவான் இறைவனுக்கு உரியவன் என்றும், இறுதியாக அவன் மடத்தைச் சென்றடைய வேண்டும் என்றும் எச்சரிக்கிறான்.

மனம் நொந்து போய் வீட்டை விட்டு வெளியேறுகிறான் இவான்; கரடுமுரடான வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கிறான்.

இடையில், இவான் பிளையாகின், கிருஷா என்னும் இளம் பெண்ணிடம் காதல் கொள்கிறான், அந்தப் பெண் ஓர் இளவரசனால் காதலிக்கப்பட்டு, கைவிடப்பட்டவள். அந்த இளவரசனுக்கு இன்னொரு காதலி. துரோகத்துக்கு ஆளான கிருஷா கடும் சினம் அடைகிறாள். இளவரசனைப் பழிவாங்க இவான் பிளையாகினுடன் சேர்ந்து திட்டமிடுகிறாள். கிருஷாவின் இந்தப் பழிவாங்கல் எதிர்பாராத விதமாக, பல திருப்பங்களுடன் இறுதிக் கட்டத்தை எட்டுகிறது,

கிருஷா தன்னைக் கொல்லும்படி இவான் பிளையாகினிடம் கேட்டுக் கொள்கிறாள்; இவான் மறுத்தும் மிகவும் அடம்பிடிக்கிறாள். முடிவில் கிருஷாவைக் கொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது,

மேலும், பல நிகழ்வுகளுடன், கதை பயணிக்கிறது. இறுதியில், இவான் மடத்தைப் சென்றடைகிறானா என்பதுதான் கதையின் சுவையே.

இடது கை மாஸ்டர் (The Tale of Cross – eyed lefty from Tula and the Steel Flea):

இந்தக் கதை 1881ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது ரஷ்யாவில் துலா நகரைச் சேர்ந்த ஒரு படைக்கல வல்லுநரைப் பற்றியது.

ரஷ்யாவின் மாமன்னர் முதலாம் அலெக்ஸாண்டர் பாவ்லோவிச் இங்கிலாந்துக்குச் சென்ற போது, அங்குள்ள கைவினைஞர்கள் உருவாக்கிய ஒரு சிறிய எஃகுப் பூச்சி ஒன்றைப் பரிசாகப் பெறுகிறார். அது அற்புதமான இசையுடன் நடனம் ஆடக்கூடியது.

அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மன்னர் நிக்கோலாஸ், அந்தச் சிறு எஃகுப் பூச்சியைப் பற்றிய செய்தியை அறிந்து, அதைவிடச் சிறப்பான ஒன்றைச் செய்ய வேண்டுமென்று கூறுகிறார். தனது தளபதி பிளாட்டோவைத் துலா நகரக் கைவினைஞர்களிடம் அனுப்புகிறார். பல எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு துலா நகரைச் சேர்ந்த இடதுகை மாஸ்டர் ஒருவர் மிகச் சிறிய எஃகுப் பூச்சியைச் செய்து முடிக்கிறார். அவரது திறமையால் இங்கிலாந்துக்கு அழைக்கப்படுகிறார். அங்கு செல்லும் மாஸ்டர் ஆங்கிலேயர்களிடமிருந்து பல புதிய தொழில்நுட்பங்களைப் பார்த்தறிந்து வருகிறார்.

ரஷ்யாவுக்குத் திரும்பும் வழியில் ஓர் ஆங்கிலேயருடன் ஏற்பட்ட குடிப் போட்டியில் தோல்வியடைந்து மாஸ்டரின் உடல்நிலை நலிவடைகிறது. அவர் ரஷ்யாவுக்குக் கொண்டு வந்த தொழில்நுட்பச் செய்திகளை ரஷ்ய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. ரஷ்ய சமூகத்தில் திறமையும் நாட்டுப்பற்றும் மதிக்கப்படவில்லை என்கிற விமர்சனத்தை மையமாகக் கொண்டது, இந்தக் குறும் புதினம்.

மேக்கப் கலைஞன் (The Makeup Artist):

19ஆம் நூற்றாண்டின் ரஷ்யாவில் நிலவிய அடிமைமுறையின் கொடூரத்தை விவரிக்கும் கதை இது. கவுண்ட் செர்ஜி காமன்ஸ்கி என்பவர் நடத்தி வரும் நாடகக் குழுவில் நடைபெறும் நிகழ்ச்சிகளே, இந்தக் கதையின் மையக் கரு. கதைத் தலைவன் ஆர்க்கடி இலின், இவன் திறன் மிக்க மேக்கப் கலைஞன், கதைத் தலைவி லியுபோவ் ஓனிசமோவ்னா நாடக நடிகை. இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர். இணைந்து வாழ வேண்டும் என்ற முடிவுடன் தப்பி ஓட முயல்கிறார்கள்.

கெடுவாய்ப்பாக, மாட்டிக் கொள்கின்றனர். ஆர்க்கடி படையில் கட்டாயச் சேவை செய்யவேண்டும் என்று கடுமையான தண்டனை அவனுக்கு வழங்கப்படுகிறது. அதனால் மனமுடைந்த லியுபோவ் தற்கொலை செய்து கொள்ள முயல, அதற்கான தண்டனையாக நாடு கடத்தப்படுகிறார். மூன்று வருடங்களுக்குப் பிறது விடுதலை பெற்றுத் திரும்பும் ஆர்க்கடி, தன் காதலிக்கும் விடுதலை பெற அணுகும் வேளையில் கொலை செய்யப்படுகிறான். இந்தச் சோக நிகழ்ச்சியின் விளைவாக, கதைத் தலைவி லியுபோவ், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகிறாள், ரஷ்ய அடிமைத்தனத்தால், சமூகம் எப்படி சீரழிகிறது என்பதைச் சித்திரிக்கிறது, மேக்கப் கலைஞன் என்னும் இந்தக் கதை.

***

இத்தொகுதியில் பெருங்கதையும் முதன்மையான கதையுமானது நூலின் தலைப்பாக்கப்பட்டுள்ள மனங்கவர்ந்த நாடோடி என்னும் கதைதான்.

முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியல் அறிஞருமான அமரர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள், “நல்ல மொழிபெயர்ப்பு; உள்வாங்கி எழுதப்பட்டுள்ளது. அதனால் கதை விறுவிறுப்பாக ஓடுகிறது” என்று மனங்கவர்ந்த நாடோடி என்னும் கதையைப் பாராட்டியுள்ளார்.

மேற்கு வங்காள மாநில ஆளுநராகப் பதவி வகித்தவரும், மகாத்மா காந்தியின் பெயரனுமான கோபாலகிருஷ்ண காந்தி அவர்களால் மனநெகிழ்ச்சியுடன் போற்றப்பட்ட நாவல் தொகுதி இது!

மனிதன் தான் முன்னோக்கிச் செல்வதற்கும், சமூகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் நிறைய பாடங்கள் இந்நான்கு நாவல்களிலும் விரவிக் கிடக்கின்றன.

ஆம்; விருப்பத்துக்குரிய அருங்கனிகளைப் பறித்துக் கொள்ளலாம் என்று செழித்தோங்கிக் கிடக்கிறது – மனங்கவர்ந்த நாடோடி என்னும் கனிச் சோலை!

- சா. ஜெயராஜ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.