“ஒரு வித்து தாய்மரமாய்த் தோன்றி அளவிறந்த வித்துக்களை ஈனும். அங்ஙனம் பிறந்த ஒவ்வொரு வித்துக்கும் தன்னிலிருந்து எண்ணிலா வித்துக்களைப் பிறப்பிக்கும் ஆற்றல் உண்டு, பாருங்கள்! இதனால் நாம் கொள்ளக் கிடப்பது என்ன? குறள் ஒவ்வொன்றும் தனி வித்தாகி, ‘நவில்தொறும் நூல் நயம் போலும்’ என்றாங்கு, எத்துணையோ எண்ணங்களைத் தன்னில் தோற்றுவிக்கும் ஆற்றல் சான்றது என்பதாம்.” - இது தமிழ் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் செங்கூற்று.
குறளகம், குறளன்பு, குறளசைவு, குறளடைவு, குறளண்ணல், குறளதிர்வு, குறளன்னை எனக் குறில் வரிசை; அடுத்து, குறளாக்கம், குறளாசை... என நெடில் வரிசை என்று புதிய சொற்களை உருவாக்கிகொண்டே போகலாம்.
அதாவது, குறள் என்னும் சொல்லுடன் ஒரு பின்னொட்டைச் சேர்த்தால், புதுச்சொல் ஒன்று கிடைத்துவிடும். அடுத்து, குறள் என்னும் சொல்லுக்கு முன்பு அருள், திரு, என முன்னொட்டுகளைச் சேர்த்தும் புதுப் புதுச் சொற்களை வடிவமைத்துக் கொண்டே செல்லலாம்.
இதில் என்ன சிறப்பு எனில், இந்தக் ‘குறள்’ என்னும் ஒரு சொல்லைப் பல்கச் செய்து கொள்ளலாம். அவற்றுள் ஒரு சொல்லை மூலமாக எடுத்துக் கொண்டு அதிலிருந்து, அவரவர் துறை, விருப்பம், ஆய்வுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஏதாவது எழுதிக் கொண்டே போகலாம்.
அதற்கும் திருக்குறள் உதவி செய்யும் செறிவைக் கொண்டது. அப்பேற்பட்ட கருத்துக் கடல் திருக்குறள்.
இத்தகைய மாண்பு மிகு திருக்குறளுக்குத் தமிழிலும், பிற மொழிகளிலும் உரைகள் தோன்றி, ஆங்காங்கே செயலாற்றிக் கொண்டு இருக்கின்றன.
எழுத்தாளர் திரு. இறையன்பு, இவ்வாறு 1330 குறட்பாக்களுக்கு உரை எழுதாமல், திருக்குறள் 100 என்ற தலைப்பில் நூல் ஒன்றை இயற்றியுள்ளார்.
அப்படியானால், 100 குறட்பாக்களைத் தேர்வு செய்து கொண்டு, கட்டுரை வரைந்திருக்கின்றாரா எனில், அப்படியும் இல்லை.
நூறு வினாக்களும், அவற்றுக்கான நூறு விடைகளுமாக எழுதப்பட்டுள்ளது - இந்த நூல்!
நான்கு வினாக்களில் முழுக்குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன. விடைகளில் 77 முழுக்குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
எந்தக் கட்டுரையிலும் திருக்குறளை மேற்கோளாகச் செருக முடியும்.
ஆனால், நூலாசிரியர் இறையன்பு தாம் எழுதிய முன்னுரையில் எந்தக் குறளையும் பயன்படுத்த வில்லை ; ‘அகர முதல’ எடுத்தாளப்பட்டிருக்கும் முதல் கட்டுரையிலும் ‘அ’ என்னும் ஓசை, மொழி முதலில் தோன்றும் சிறப்பைக் கூறிச் சென்றுள்ளார்.
அடுத்து வரும் கட்டுரையில், ‘சுருக்கமே அறிவின் ஆன்மா’ என்னும் ஷேக்ஸ்பியரின் மேற்கோளைச் சுட்டி, குறளில் உள்ள ‘செயற்கரிய செய்கலாதார்’ என்னும் சொற்றொடருக்கு விளக்கமளித்துள்ளார்.
SWOT Analysis குறித்து வள்ளுவர் ஏதேனும் கூறியிருக்கிறாரா என்று ஒரு கேள்வி!
Strengths (internal advantages), Weaknesses (internal disadvantages), Opportunities (favorable external factors), Threats (external risks or negative factors) ஆகியவற்றின் சுருக்கம்தான் SWOT .
திருக்குறளில் நவீன நிர்வாக முறைகளும் கூறப்பட்டுள்ளனவா என்று யாருமே கேட்கக்கூடும்.
எனவே, அதற்கு விளக்கமளிக்கும் நோக்கில், இந்த SWOT என்னும் ‘பலம் - பலவீனம் - வாய்ப்பு - ஆபத்து’ என்னும் தொடரை இந்நூலில் நன்றாக விளக்கியுரைக்கிறார் - “வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்” என்னும் குறளைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு.
இன்றைய நிர்வாகத்தில் மேலதிகாரிகள் பணியாளர்களின் திறனை விட, அவர்களுடைய பண்பைத்தான் முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்கு, “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்னும் குறளின் பொருளைப் பொருத்திக் காட்டுகிறார், நூலாசிரியர்.
அதேபோன்று, “குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்” (705), “உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல்” (530), “கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு” (578), இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து" (879) ஆகிய நான்கு குறட்பாக்களை மேலாண் திறன் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்.
கட்டுரை 73-இல், ஒற்றுப்பிழையைச் சுட்டுகிறார் - நூலாசிரியர்.
ஒற்றாடல் என்று ஓர் அதிகாரத்தையே எழுதியிருக்கிறார் வள்ளுவர் என்று குறிப்பிட்டு, இக்கட்டுரையை எழுதியிருக்கிறார்.
‘வெளிநாட்டினர் நம்முடைய ஒற்றர்களை விலைகொடுத்து வாங்கி, அவர்களிடம் செய்திகளைக் கறந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது (double espionage) என்பதற்காக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ஒருவர் ஒற்றறிந்து வந்து சொன்ன செய்தியையும், இன்னொருவர் மூலம் மறு ஒற்றறிந்து உண்மையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்.
அதற்கு, நூலாசிரியர் சுட்டும் குறள்: “ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்” என்பதாகும்.
அடுத்து, ஒரு வேளை இருவருடைய கூற்றுகளிலும் வேறுபாடு இருந்தால், அவற்றில் எது சரி என்று அறிவதற்கு மூன்றாவது ஒற்றனை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, “ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்” என்னும் குறளை விரித்துக் கூறியுள்ளார் - நூலாசிரியர்.
திருவள்ளுவர் “அந்தணர்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ள மூன்று குறட்பாக்களைக் கைகொண்டு, யாரெல்லாம் உயிர்களிடத்தில் கருணையைப் பொழிகிறார்களோ அவர்களே அந்தணர்கள் என்று நூலாசிரியர் நிறுவுகிறார்.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்...” என்னும் குறளைக் குறிப்பிட்டு, பிற உயிர்கள் மீது பரிவும் கருணையும் கொண்டிருக்கிறார்களோ அவர்களே அந்தணர்கள் என்று எடுத்துரைக்கிறார் - இந்நூலாசிரியர்.
நாம் உலகில் உள்ள உயிர்களையெல்லாம் நேசித்து அந்தணராக வேண்டாம். அதே வேளையில், குறைந்தபட்சம் நம்மைச் சுற்றியுள்ள உறவினர்களையும் நண்பர்களையும், உடன் பணியாற்றுகிறவர்களையுமாவது நேசிக்க வேண்டும்.
நாம் பிறரிடம் மகிழ்ச்சியைப் பரப்பினால், அது நமக்கு ஏதோ ஒரு வகையில் வட்டியுடன் திரும்பி வருகிறது. அதில் இன்புறலாமே...
“ ‘வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்’ என்கிற குறள் உணர்த்தும் அறன் எது?” என்ற வினாவைக் கொண்ட கட்டுரையில் வணிகத்தின் தூய்மையை விளக்குகிறார் நூலாசிரியர். ‘ஒருவர் ஆடையை நெய்யும் போது அதைத் தன் காதலர் உடுத்துவதைப் போல நெய்ய வேண்டும்’ என்று கலீல் ஜிப்ரானிடம் இருந்து மேற்கோளைக் கொண்டு வந்து, எளிமையாகக் கருத்தேற்றுகிறார், நூலாசிரியர்.
கட்டுரைகள் : 75, 88 ஆகிய இரண்டும் எவ்வாறு உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று பேசுகின்றன. அதற்கு மூன்று குறட்பாக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
நூலின் இறுதியில், 98, 99 ஆகிய கட்டுரைகள் முறையே காதலில் கண்களின் பங்கு என்ன என்றும், ஊடல் எப்படி காதலில் சிறப்புப் பணியாற்ற வேண்டும் என்றும் இயம்புகின்றன.
இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல இலக்கியங்களை இந்நூலில் இறையன்பு மேற்கோள்களாக எடுத்துக் கொண்டிருந்தாலும், இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் அவர் வள்ளுவத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது ஷேக்ஸ்பியரைத்தான்!
இந்தக் கட்டுரைகளில் அவர் முதன்மையாக ஒப்பிட்டு ஆய்வு செய்திருப்பது கூறுகள் அன்பு, கருணை, நட்பு, காதல், ஊக்கம், சொல்வன்மை போன்ற சிறப்புக் கூறுகளைத்தான்.
இவற்றைத் தவிர, இந்நூலின் ஒரு பக்கக் கட்டுரைகளில் பேசப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க கூறுகள்:
+ சிறுதெய்வ வழிபாடு,
+ மக்கட்பேறு,
+ துறவறம்,
+ வாய்மை,
+ சிக்கனம்,
+ தலைமைப் பண்பு,
+ உளவியல் காட்சிப்படுத்தல்,
வ.சுப.மாணிக்கம் அவர்கள் திருக்குறளைச் சுட்டியிருப்பது போல, இறையன்பின் இந்த நூலும் ஒரு விதைச் சுரங்கம்தான்! இந்த நூலின் கட்டுரைகளில் இருந்து நிறைய முன்னெடுத்துச் செல்லலாம்.
இறையன்பின் எழுத்துத் தமிழில் கொஞ்சம் ஏற்ற, இறக்கங்களைப் பொருத்தினால், அது அவருடைய மேடையுரை; அவ்வாறே, அவரது மேடையுரையில் க், ச் என ஒற்றெழுத்து சேர்த்தால், அது அவரது எழுத்து நடை!
அந்தச் சிறப்பு உரை நடையை, வாசகர்கள் இந்த நூலிலும் ரசிக்கலாம்.
இந்நூலில், இறையன்பின் சொல்லாட்சியை அவரது கருத்தாட்சி வெல்கிறதா? அல்லது, அவரது கருத்தாட்சியைச் சொல்லாட்சி வெல்கிறதா?
அதை வாசிக்கிறவரே முடிவு செய்து கொள்ளலாம்.
திருக்குறள் 100 | வெ.இறையன்பு,
விலை : ரூ. 150/-
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
- சா.ஜெயராஜ்