‘மொழிக்கு இலக்கணம் ஏன் வேண்டும்?’ என்னும் கேள்வியை எழுப்பினால், அதற்குப் பின்வருமாறு விடையளிக்கலாம்:
- பேச்சு மூலமாகவும் எழுத்து மூலமாகவும் ஒரு மொழியைப் பயன்படுத்தும் போது, மொழிகிறவருக்கும் கேட்கிறவருக்கும் புரிதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு கட்டமைப்பை இலக்கணம் அளிக்கிறது;
- அதன் மூலம் சொற்களையும், சொற்றொடர்களையும் பிழையின்றி அமைத்துக் கையாள்வதற்கு இலக்கணம் வழிகாட்டுகிறது;
- இத்துடன் இந்த இலக்கணமே மொழியில் புதிய சொற்களும், சொற்றொடர்களும் இசைவாக, செம்மையாகத் தோன்றுவதற்கும், தெறிக்கிற கருத்து வலிமையாக வடிவுபடுத்தப் படுவதற்கும் அடிப்படைத் தளமாகவும் அமைகிறது;
- இலக்கண உருவாக்கம் என்பது அந்தக் காலச் சூழல்களுக்கேற்றவாறு சமூகம், அரசியல், கல்வி, மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடுகளாக அமைகின்றன.
தமிழ்மொழி புழங்கத் தொடங்கி தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தைக் கடந்து, ஏராளமான பரிணாம வளர்ச்சியைக் கடந்து வந்து கொண்டிருக்கிறது, தமிழ்மொழியின் இலக்கண மரபு.
இடையில், ‘தமிழுக்கும், மற்ற திராவிட மொழிகள் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதமே’ என்னும் கருத்தாடல் நம்பப்பட்டு வருகிற வேளையில், அது முற்றிலும் புரட்டு என்று மறுத்துரைத்தது, ராபர்ட் கால்ட்வெல் என்பாரால் எழுதப்பட்ட A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்னும் ஆங்கில நூல். 1856ஆம் ஆண்டு வெளிவந்த திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் அந்த நூலின் தொடக்கத்தில் நூலின் நோக்கம் என்ன என்று நூலாசிரியர் பின்வருமாறு கூறுகிறார்:
“திராவிட மொழிகளுக்குள்ளே மிகப் பழைய காலத்திலேயே திருந்திய நிலை பெற்றதும், நனிமிக நாகரிகம் உடையதாக ஆக்கப் பெற்றதும், பல வகையில் அவ்வின மொழிகளின் பிரதிநிதியாக விளங்குவதுமாகிய தமிழ்மொழியின் அமைப்பு முறை பற்றிய விளக்கங்களைப் பெரும் அளவில் தருவதே இந்நூலாசிரியரின் இடைவிடாச் சிறப்பு நோக்கமாம்.”
கால்ட்வெல்லின் கூற்றின் படி, திருந்திய நிலை - அதாவது, திருத்தப்பட்ட துல்லிய நிலை; நனி மிக நாகரிகம் உடையது – அதாவது, பெருமை மிகுந்த பண்பாட்டைக் கொண்டது; அவ்வின மொழிகளின் பிரதிநிதியாக விளங்குவது – அதாவது, திராவிட இன மொழிகளின் முன்னோடியாக விளங்குவது என்கிற சிறப்பைப் பெற்று செம்மாந்து நிற்கிறது, தமிழ்மொழி.
சிறப்பார்ந்த இத்தமிழின் இலக்கண வரலாற்றை ஆய்வு செய்து, ‘தமிழ் இலக்கண மரபுகள் – இலக்கண நூல்களும் உரைகளும், என்னும் தலைப்பில் நூலை இயற்றியிருக்கிறார், முனைவர் இரா.சீனிவாசன் என்பார்.
இவர் ஐந்திலக்கணம், இலக்கிய வரலாற்று வரைவியல் உள்ளிட்ட பல்வேறு நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் தமிழுக்கு அளித்திருக்கிறவர்.
இந்நூலில் இலக்கண மரபுகள் என்ற முதல் இயலில் தமிழ் இலக்கண வரலாறு நான்கு கட்டங்களாகப் பிரித்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை:
1. தொல்காப்பியம் வரையிலான காலம்,
2. தொல்காப்பியத்திற்குப் பின் கி.பி.800 வரை,
3. கி.பி.800 முதல் கி.பி.1400 வரை
4. கி.பி.1600 முதல் கி.பி.1900 வரை
அதுவரை உலவிவந்த "தமிழ்மொழிக்கு மூலம் வடமொழி, தமிழ்மொழி இலக்கணத்துக்கு மூலம் வடமொழி இலக்கணம்" என்ற நிலவி கருத்துகள் தெறித்தோடின. தமிழ் இலக்கண ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதற்குப் பல வழிகளைக் காட்டியது, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்.’ அதன்மூலம் தமிழ் இலக்கணத்தை அணுகும் முறையில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது.
இவற்றில் முதல் கட்டத்தைச் சேர்ந்த நூலாக இன்று கிடைப்பது தொல்காப்பியம் மட்டுமே. இதில் என்ப, என்மனார் போன்ற வாய்ப்பாடுகளின் மூலம், தொல்காப்பியத்திற்கு முந்தைய இலக்கண ஆசிரியர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அவர்கள் என்ன எழுதினர் என்பதைப் பற்றிய குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
முதல் கட்டத்தைவிட அதிக அளவில் தரவுகளைப் பெற இரண்டாவது காலகட்டத்தில் வாய்ப்புகள் இருந்தாலும், விளக்கம் எதுவும் பெறப்படவில்லை. தொல்காப்பியத்திற்குப் பின் தொடங்கி கி.பி.800 வரை இந்தக் காலகட்டம் வரையறுக்கப்பட்டிருப்பதன் மூலம், இலக்கண நூல்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அறியமுடிகிறது. தமிழகத்தில் பல்லவர் காலம் கி.பி.6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை. இவர்களுடைய ஆட்சிக் காலம் தமிழக வரலாற்றின் பொற்காலம் என்று சொல்லப்படுகிறது. “பல்லவர் ஆட்சி தோன்றியதும் சங்க இலக்கியமென்னும் அக, புறப் பாகுபாடுகள் அமைந்த இலக்கியம் பாடும் முறையிலிருந்து மாறி, நீதியை உணர்த்தும் இலக்கிய முறை தோன்றியிருக்கிறது. இவ்வாறு மொழியில் மாற்றங்கள் தோன்றி, அம்மாற்றங்கள் நிலைபெற்றதன் விளைவாக, ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின் உள்ள காலமே இலக்கண நூல்கள் தோன்றுவதற்கேற்ற காலம்” என்று குறிப்பிடுகிறார், நூலாசிரியர்.
இரண்டாம் கட்டத்தில் எழுத்து, சொல், பொருள் என்றிருந்த இலக்கணப் பிரிவுகள் யாப்பு, அணி ஆகிய பிரிவுகளுடன் சேர்ந்து, ஐந்திலக்கணம் என்று வளர்ச்சி பெற்றன.
இந்த ஐந்து இலக்கணங்களுக்கும் தனித்தனி நூல்கள் தோன்றின. ஐந்திலக்கணங்களையும் ஒரே நூலில் கூறும் வீரசோழியம் தோன்றியது மூன்றாவது கட்டத்தில்தான்.
11ஆம் நூற்றாண்டில் வீரசோழன் காலத்தில் தோன்றிய இந்த நூல் தமிழின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐந்து இலக்கணப் பிரிவுகளையும் சமஸ்கிருத இலக்கண முறையில் விளக்குகிறது. ஆனால், வீரசோழியத்துக்கு முன்பே இவ்வாறு வடமொழி இலக்கணத்தைத் தமிழ்மொழியில் சேர்த்து, திணித்து இலக்கணம் உரைக்கும் மரபு இருந்தது.
‘இலக்கண நூல்கள் யாருக்காக எழுதப்பட்டன?’ என்னும் கேள்வி மிகவும் அவசியமானது. இந்தக் கேள்விக்கு விடைகாண முயலும்போது நூல் பிறந்ததன் நோக்கம், இலக்கணத்தின் பரப்பு, இலக்கணம் கூறப்படும் வகைமை ஆகியன புலப்படும்.
‘தமிழில் பல இலக்கண மரபுகள் நிலவியதற்கான காரணங்கள் எவை?’ என்று கேள்வி எழுப்பி நூலாசிரியர் அதற்கு விடையளிக்கிறார்.
இலக்கணத்தில் பல மரபுகள் நிலவியதற்கான காரணங்களின் முதன்மையானது இலக்கணத்திற்கும் பிற துறைகளுக்கும் இருந்த ஊடாட்டம் ஆகும் என்றும், தமிழகத்தில் இலக்கிய, இலக்கணம் செழித்து வளர்ந்தது போலவே இசை, நடனம், சிற்பம், கட்டடம் போன்ற கலைகளும் தத்துவம், மருத்துவம், இரசவாதம், கணிதம், சோதிடம், ஆகமம் போன்ற துறைகளும் செழித்து வளர்ந்திருந்தன என்றும் நூலாசிரியரால் அடிப்படை சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், சமயச் சிந்தனைகள் இலக்கண உலகில் வேறுபட்ட சிந்தனை மரபுகள் தோன்றக் காரணமாக இருந்தன என்று கூறுகிறார் நூலாசிரியர். தமிழில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய சமயங்களைச் சார்ந்தவர்கள் இயற்றிய இலக்கண நூல்கள் உள்ளன என்றும் நூலாசிரியர்கள் சார்ந்திருந்த சமயச் சிந்தனைகள், அவர்களின் இலக்கண நூல்களில் படிந்திருக்கின்றன; இலக்கண நூல்களுக்கும், சமயச் சிந்தனைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன; எல்லா இலக்கண நூல்களும் தம் சமயக் கடவுள் வணக்கத்துடனேயே தொடங்குகின்றன என்றும் எடுத்துரைக்கப்படுகிறது.
எழுத்திலக்கண மரபுகள் என்றும் தலைப்பில் தொல்காப்பியம் – எழுத்து அதிகாரம், இளம்பூரணார், நச்சினார்க்கினியர் உரைகள், வீரசோழியம் . பெருந் தேவனார் உரை, நேமிநாதம் – உரை, நன்னூல் – மயிலை நாதர் உரை ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்திருக்கிறார்.
எழுத்ததிகாரக் கூற்றைப் பற்றித் தொல்காப்பியத்திற்கு அடுத்தது நன்னூல் மட்டுமே எடுத்துரைத்துள்ளது. புணரியல்களும் ஓரளவு தொல்காப்பியத்தை ஒத்துள்ளன. அல்வழி, வேற்றுமை முதலாகச் சந்தி இலக்கணத்தை நோக்கும் முறைகூட தொல்காப்பியத்தைச் சார்ந்தே அமைந்துள்ளது.
நேமிநாதத்தின் எழுத்ததிகாரம் வீரசோழியத்தைப் போல அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, நன்னூல் மட்டுமே தமிழ் இலக்கண நெறிநின்று எழுத்ததிகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்று நிறுவுகிறார் நூலாசிரியர்.
சொல்லிலக்கண மரபுகள் என்னும் தலைப்பில் தொல்காப்பியம், சொல்லதிகாரம் – இளம்பூரணர், சேனாவரையர் நச்சினார்க்கினியர் உரைகள்; வீரசோழியம் – பெருந்தேவனார் உரை, நேமிநாதம் – உரை, நன்னூல் – மயிலைநாதர் உரை ஆகிய நூல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார், நூலாசிரியர். இதில் வேற்றுமையின் இலக்கணம் மிக ஆழமாகப் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளது.
எழுத்துகளின் பிறப்பைக் குறித்துக் கூறும்போது தொல்காப்பியம் அடிவயிற்றிலிருந்து எழும் காற்று பேச்சொலியாக மாறுகிறது என்று கூறுகிறது. நன்னூலும் நேமிநாதமும் பேச்சொலி தோன்றுவதற்கு அணுத்திரள் ஒலியே காரணம் என்று கூறுகின்றன. அணுத்திரள் ஒலி சார்ந்த கருத்து அபிநய நூலிலிருந்து பெறப்பட்டது என்று நேமிநாதம் நன்னூல் உரைகள் உறுதிசெய்கின்றன.
நேமிநாதத்தின் எழுத்ததிகாரம் உட்பிரிவு எதுவுமின்றி, அமைக்கப்பட்டுள்ளது. சந்தி விதிகளைக் கூறும் முறையும் நேமிநாதத்தில் வீரசோழியத்தைச் சார்ந்தே அமைந்துள்ளது எனவே சொல்லதிகாரத்தில், நேமிநாதம் தொல்காப்பியத்தின் வழிநூல் என்பது தெளிவாகிறது என்று முடிவுக்கு வருகிறார். நூலாசியர்.
பொருளிலக்கண மரபுகள் என்னும் தலைப்பில் பொருள் இலக்கணத்தின் முதன்மை, தொல்காப்பியப் பொருளதிகார அமைப்பு, பொருள் இலக்கணமும் யாப்பு இலக்கணமும், பொருள் இலக்கணத்தின் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகிய பிரிவுகள் உள்ளிட்ட கூறுகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த ஆய்வுக்கு நூலாசிரியர் எடுத்துக் கொண்டிருக்கிற நூல்கள் தொல்காப்பியம் – பொருளதிகாரம் - இளம்பூரணார், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உரைகள், இறையனார் களவியல் உரை, தமிழ்நெறி விளக்கம் உரை, புறப்பொருள் வெண்பாமாலை உரை, வீரசோழியம் பெருந்தேவனார் உரை, நம்பியகப்பொருள், விளக்கம் உரை, களவியல் காரிகை உரை ஆகியனவாகும்.
அடுத்து யாப்பிலக்கண மரபுகள் என்னும் தலைப்பிலான இயலில் தொல்காப்பியச் செய்யுளியில் இளம்பூரணார் உரை, தொல்காப்பியச் செய்யுளியல் பேராசிரியர் உரை, தொல்காப்பியச் செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரை, யாப்பருங்கலம் விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகை குணசாகரர் உரை, வீரசோழியம் பெருந்தேவனார் உரை ஆகிய நூல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
“புதிய இலக்கண நூல்கள் பல தோன்றி, புதிய மரபுகளில் இலக்கணம் படைக்கப் காரணமாக இருந்தவை, தொல்காப்பியருக்குப் பின்னும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னும் தமிழில் தோன்றிய இலக்கியங்களே” என்று குறிப்பிடும் நூலாசிரியர், ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு கால இலக்கிய வரலாற்றில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை அறிய முடியவில்லை என்றும், யாப்பருங்கல விருத்தியுரை களவியல் காரிகை, தமிழ்நெறி விளக்கம் போன்றவற்றின் உரைகளிலும் புறத்திரட்டிலும் காணப்படும் பல நூல்கள் இன்று கிடைக்கப் பெறவில்லை என்றும் சுட்டுகிறார்.
தமிழ்மொழி நெறி, வடமொழி நெறி என்று யாப்பிலக்கண மரபைப் பாகுப்படுத்திப் பார்க்க இயல வில்லையென்றும், இன்று பயன்பாட்டிலுள்ள பெரும்பாலான யாப்பிலக்கண நூல்கள் தமிழ்நெறியைப் பின்பற்றியே யாப்பிலக்கணம் கூறியுள்ளன என்றும் குறிப்பிடும் நூலாசிரியர் வடமொழி யாப்பிலக்கண நெறியை நேரடியாகப் பின்பற்றி எழுந்த நூல்கள் இன்று வழக்கில் இல்லையென்றாலும், தமிழ் யாப்பிலக்கணத்திலும் வடமொழி நெறி புகுந்துள்ளது என்று உறுதிபடக் கூறுகிறார். அதற்கு ஆதாரமாக யாப்பங்கல விருத்தி சுட்டப்படுகிறது. “வடமொழி நெறியைத் தமிழ் இலக்கணத்தில் புகுத்தியுள்ளவர்களை “வடநூல் வழித் தமிழாசிரியர்” என்றே இரண்டு இடங்களிலும் வழங்குகிறார் விருத்தியுரை ஆசிரியர்” என்றொரு செய்தியைக் கூறுகிறார். நூலாசிரியர்.
அடுத்து, பாட்டியல் இலக்கண மரபுகள் எனும் தலைப்பில், பாட்டியல் நூல்கள், நாடக நூல்கள், பிரபந்தங்கள், பொருத்தம் பற்றிய கருத்துகள் உள்ளிட்ட கூறுகளை நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். பாட்டியல் நூல்களிலுள்ள இலக்கணக் கூறுகளைப் பற்றிய சிந்தனைகளைத் தொல்காப்பியத்தில் அதிகம் காண இயலவில்லை. பாட்டியல் இலக்கணத்தில் பிரபந்தங்களைப் பற்றிக் கூறும் பகுதியில் மட்டும் தொல்காப்பியத்துடன் ஓரளவு பாட்டியல் இலக்கணம் ஒத்துள்ளது. பொருத்தங்களைப் பற்றிய சிந்தனைகள் தொல்காப்பியத்தில் இல்லை. இத்தகைய சிந்தனைகளை இசை, நாடக நூல்களிலிருந்தும் சிற்ப நூல்களிலிருந்தும் பாட்டியல் நூல்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நூலாசிரியர் அனுமானிக்கிறார்.
ஆகவே, இலக்கிய நூல்களின் நோக்கமும் பண்பும் ஒருபுறமிருக்க, இலக்கண நூல்களும் சமயம், கலை மற்றும் பிற அறிவுத்துறைகளின் ஊடாட்டத்தினால் தோற்றம் பெற்றுப் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன; தொடர்ந்து அவ்வாறே வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் இலக்கணம் இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் இலக்கண மரபுகள் என்னும் இந்த நூல் ஆய்வுக்களுக்கான சாளரங்களையும் சுட்டிக்காட்டுகிறது.
விலை: ரூ.210/-
வெளியீடு: என்சிபிஎச், சென்னை.
- சா.ஜெயராஜ்