எரிக் ஹாப்ஸ்பாம் & ஜியார்ஜ் ரூட் (2001)

Captain Swing: Eric Hobsbawm & George Rude (2001), Phoenix Press, London

முதலாளித்துவ அமைப்பின் முக்கிய கூறாக அமைவது தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் உழைப்பால் கிட்டும் உபரி மதிப்பை (surplus value) அதிகரிக்கச் செய்து அதைத் தனதாக்கிக் கொள்வது.

captain swingஉபரிமதிப்புக்கு உறுதுணையாக மூலதனம், தொழிற்கூடம், யந்திரம் என்பன அமைகின்றன. இவை அனைத்திற்கும் மேலாகத் தம் உழைப்பைச் செலுத்தும் தொழிலாளர்கள் இடம் பெறுகின்றனர்.

உலக நாடுகளில், நவீன யந்திரங்கள் முதன் முதலாகப் பரவலாக அறிமுகமான நாடு இங்கிலாந்து. இந் நிகழ்வே ‘தொழிற்புரட்சி’ என்று அழைக்கப்படுகிறது. 18 ஆவது நூற்றாண்டின் இறுதிக் கால்பகுதியில் (1770) இது நிகழ்ந்தது. இங்கிலாந்தையடுத்து ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் தொழிற்புரட்சி நிகழ்ந்தது.

தொழிற்புரட்சியின் விளைவாக, நகர்ப்புறத் தொழிற்சாலைகளில் பணிபுரிய இங்கிலாந்தின் கிராமப்புறக் குடியானவர்களும் கைவினைஞர்களும் கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு வந்து சேர்ந்தனர். தொழிற்சாலை ஒன்றனுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் வந்து ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்கு உழைத்து ஊதியம் பெறும் முறை அவர்களுக்குப் புதியதாக இருந்தது. இதற்கு முந்திய கிராம வாழ்க்கையில், தறி, ஊதுலை, தச்சுவேலைக் கருவிகள் போன்ற தொழிற் கருவிகள் அவர்களுக்கு உரிமையானவை. உற்பத்தி செய்த பொருளும் அவர்களுக்கே உரிமையானது. அதன் விலையையும் தம் வேலை நேரத்தையும் அவர்களே முடிவு செய்தனர்.

ஆனால் ஆலைத்தொழிலாளர் ஆன பின்னர் தங்களது இந்தத் தனித்துவத்தை இழந்ததுடன், தங்கள் உழைப்பை விற்று ஊதியத்தை மட்டும் பெறுகிற பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்துடன் அவர்கள் நிறைவடைய வேண்டியதாயிற்று. இருப்பினும், தம் புதிய நகரவாழ்க்கையில் தம் பழைய தொழில் அடையாளங்களைத் துறந்துவிடவில்லை; தம் பெயர்களின் பின்னொட்டாகவோ, குடும்பப் பெயராகவோ அவற்றைத் தொடர்ந்தனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக, ஆட் பெயர்களின் பின்னொட்டாக இடம்பெற்ற பின்வரும் தொழிற்பெயர்களைக் குறிப்பிடலாம்: கோல்டுஸ்மித் (பொற்கொல்லர்), பிளாக்ஸ்மித் (கொல்லர்), கார்பெண்டர் (தச்சர்), வீவர் (நெசவாளர்), டையர் (சாயம் தோய்ப்பவர்), டெய்லர் (தையற்கலைஞர்), ஷ¨ மேக்கர் (காலணி செய்பவர்), கார்டர் (வண்டியோட்டி), புல்மேன் (நீர் இறைப்பவர்), தாட்சர் (கூரை மேய்பவர்), ஸ்கின்னர் (தோல் தொழில் செய்பவர்), கார்டனர் (தோட்டக்காரர்), குக் (சமையல்காரர்), பேக்கர் (ரொட்டி சுடுபவர்). இப்பெயர்கள் இன்றும் கூட வழக்கில் உள்ளன.

இவ்வாறு தம் கிராமப்புறத் தொழில் அடையாளங்களுடன் ஆலைத்தொழிலாளர் வாழ்க்கையைத் தொடங்கியோரின் வாழ்க்கை, ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ஆலையில் உற்பத்தியான பொருள்கள் விற்பனையின்றி சந்தையில் தேக்கமடையும் போது அதை எதிர்கொள்ளும் முகமாக ஆலையின் உற்பத்தியைத் தற்காலிகமாக ஆலை உரிமையாளர்கள் நிறுத்திவிடுவர். இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்புக்கும் ஊதிய இழப்புக்கும் ஆளாக நேரிட்டது. விற்பனைச் சந்தை சீரான பின்னரே மீண்டும் உற்பத்தி தொடங்கும்.

இது அடிக்கடி நிகழ்ந்தமையால் கோபமுற்ற ஆலைத் தொழிலாளர்கள் தங்களுக்கு நேர்ந்த இந்த அவலத்திற்குக் காரணம் நவீன யந்திரங்கள்தான் என்று தவறாகக் கருதினார்கள். முதலாளித்துவப் பொருள் உற்பத்திமுறையே இந் நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்ற உண்மை அவர்களுக்குப் புரியவில்லை. தம் கடந்த காலக் கிராமப்புற வாழ்வின் இனிமையைப் பறித்ததாக அவர்கள் கருதிய ஆலையின் யந்திரங்களை உடைப்பதன் மூலம் பழிதீர்க்கத் தொடங்கினர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் ஒரு பெரிய இயக்கமாகவே இது வளர்ச்சி பெற்றது. இதில் பங்கேற்றோர் ‘யந்திரம் உடைப்போர் (Machine Breakers)  என்றழைக்கப்பட்டனர்.லுடைட் இயக்கம் (Luddite Movement)  என்று அழைக்கப்பட்ட இவ் இயக்கத்தில் பங்கேற்றோர் லுடைட்டுகள் என்று அழைக்கப்பட்டனர்.

இவ் இயக்கம் குறித்து ‘கடந்த காலமும் நிகழ்காலமும்’ (Past and present)  என்ற ஆய்வுப் பத்திரிகையின் முதல் இதழில், ‘யந்திர உடைப்பாளிகள்’ (The Machine Breakers)  என்ற தலைப்பில் கட்டுரையன்றை 1952இல் ஹாப்ஸ்பாம் எழுதினார். இக் கட்டுரையில், லுடைட் இயக்கத்தை அடக்க பன்னிரண்டாயிரம் படைவீரர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், 17ஆவது நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கிய இவ்வியக்கம் 19ஆவது நூற்றாண்டில் 1830வரை நிகழ்ந்ததாகவும் ஹாப்ஸ்பாம் குறிப்பிட்டுள்ளார் .

இதன் பின்னர் இங்கிலாந்தின் கிராமப்புறப் பண்ணைத் தொழிலாளிகள் நிகழ்த்திய தீ வைப்பு, அறுவடை யந்திர உடைப்பு போன்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டு ‘காப்டன் ஸ்விங்’ என்ற இந்நூலை ஜியார்ஜ் ரூடு(1910-1993) என்ற வரலாற்றுப் பேராசிரியருடன் இணைந்து 1969 இல் வெளியிட்டார். இந்நூலின் முதல் பதிப்பை மார்க்சிய நூல்களை வெளியிடும் இங்கிலாந்தின் லாரன்ஸ் & விஸ்ஸாட் நிறுவனம் வெளியிட்டது.

நூல்

நான்கு பகுதிகளாகப் பகுக்கப்பட்ட இந்நூலில் மொத்தம் பதினைந்து இயல்கள் இடம் பெற்றுள்ளன. நூலின் அறிமுக உரையையும் நான்கு இயல்களையும் (இயல்கள் : 1,4,9,15) ஹாப்ஸ்பாம் எழுதியுள்ளார். எஞ்சிய பதினொரு இயல்களை ஜியார்ஜ் ரூட் எழுதியுள்ளார். மார்க்சியச்சிந்தனை கொண்ட வரலாற்றுப் பேராசிரியரான இவர் 18ஆவது நூற்றாண்டு அய்ரோப்பிய வரலாற்றில், குறிப்பாகப் பிரஞ்சுப் புரட்சி குறித்த ஆழமான ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். பிரஞ்சுப் புரட்சியின் வெகுண்டெழுந்த மக்கள் திரள் (The Crowd in the French Revolution)  என்ற இவரது நூல் குறிப்பிடத்தக்க ஒன்று.

18 ஆவது நூற்றாண்டு இங்கிலாந்தின் கிராமப்புறப் பண்ணைத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையும், போராட்டமும் இந்நூலின் மையச்செய்தியாகும்.இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சியை அடுத்து முதலாளித்துவத்தின் தாக்கம் கிராமப்புறங்களில் ஏற்படலாயிற்று. வேளாண் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் யந்திரங்கள் வேளாண்மைத் தொழிலில் அறிமுகமாயின. இதை எதிர்கொள்ளும் வகையில் கிராமப்புறங்களில் வன்முறைத் தன்மை கொண்ட கலவரங்கள் உருவாயின. கோபமுற்ற மக்கள் திரளால் பண்ணைகள் எரியூட்டி அழிக்கப்பட்டன. அறுவடை யந்திரங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. அச்சுறுத்தும் தன்மை கொண்ட கடிதங்கள் பண்ணை உரிமையாளர்கள், நீதிபதிகள், கிறிஸ்தவ மதக்குருக்கள் ஆகியோருக்குச் சென்றன. இவற்றை எழுதியவர், ‘காப்டன் ஸ்விங்’ என்று கையெழுத்திட்டார். ஆனால் இது ஒரு கற்பனைப்பெயர்தான். உண்மையில் காப்டன் ஸ்விங் என்று ஒருவர் கிடையாது. இங்கிலாந்தின் கிராமப்புறங்களில் நிகழ்ந்த இந் நிகழ்வுகள் குறித்த இந்நூல் 19ஆவது நூற்றாண்டு இங்கிலாந்தின் குடியானவர்கள் எழுச்சியையும், கிராமிய முதலாளித்துவத்தின் வெற்றியையும் வெளிப்படுத்துகின்றது.

இந்நூலின் முதற்பகுதி, குடியானவர்கள் எழுச்சியின் போது இங்கிலாந்தின் சராசரிக் குடியானவர்களின் வாழ்க்கை நிலையைச் சித்தரிக்கிறது. இரண்டாவது பகுதி அவர்களிடம் உருவான எழுச்சியை அறிமுகம் செய்ய, மூன்றாவது பகுதி இவ் வெழுச்சியின் தன்மையையும், இவ் எழுச்சியின் ஆதரவாளர்கள் குறித்தும் எழுச்சியால் பாதிக்கப்பட்டோர் யார் என்பது குறித்தும் ஆராய்கிறது. இறுதியாக இவ் எழுச்சியின் பின் புலத்தில் இருந்தோரையும் நாம் அறியச்செய்கிறது. நான்காவது இயல் குடியானவர்கள் எழுச்சி ஒடுக்கப்பட்டமை குறித்தும், அதன் பிந்தைய நிலை குறித்தும் எடுத்துரைக்கிறது.

வேளாண் தொழிலாளர்கள்

19ஆவது நூற்றாண்டு இங்கிலாந்தின் வேளாண்மையில் குடியானவர்கள் என்போர் ஒரு வலுவான பிரிவாக உருவாகவில்லை. இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சிக் காலம் தொடங்கி 19ஆவது நூற்றாண்டின் நடுப்பகுதிவரை குடியானவர்களின் நிலை அவலம் நிறைந்ததாகவே இருந்தது. பெரும்பாலும் கிராமப்புற உழுகுடிகள் தமக்கு உரிமையான சிறு துண்டு நிலத்தில் வேளாண்மை செய்து அதன் பலனைத் தம் குடும்பத் தேவைக்கு எடுத்துக் கொண்டனர். உபரி இருப்பின், அதைச் சந்தையில் விற்றனர். ஆயினும், ஒரு வாணிபமாக இது வளர்ச்சி பெறவில்லை. அவர்கள் வளர்த்த பசு,பன்றி, வாத்து ஆகியனவும் அவர்களது தேவையை நிறைவு செய்தன. இவை அனைத்திலும் குடும்ப உறுப்பினர்களின் உழைப்பு அடங்கியிருந்தது. இவர்களது உழைப்பானது தம் குடும்பத்தின் சுயதேவையை நிறைவு செய்வதாகவே அமைந்திருந்தது.

இவர்களை அடுத்து, துண்டு நிலம்கூட இன்றி வேளாண் தொழில் செய்து ஊதியம் பெற்று வாழும் வேளாண் தொழிலாளர்கள் இருந்தனர்.

இவ்விரு பிரிவினரையும் தவிர ஏராளமான நிலங்களின் உரிமையாளர்களான பெரிய நிலவுடைமையாளர்களும் இருந்தனர். நிலமற்ற கிராமத்தினருக்குத் தம் நிலங்களைக் குத்தகைக்குக் கொடுத்து அவற்றிலிருந்து பெறும் பெருத்த ஆதாயத்தைக் கொண்டு வளமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். நிலக்கிழார்களின் பண்ணைகளில் ஆடுகள் மேய்க்கும் பணியை நிலமற்ற கிராம வாசிகள் சிலர் மேற்கொண்டிருந்தனர்.

Eric Hobsbawm and George Rudeஇவர்களுள் பெரிய நிலவுடைமையாளர்களைத் தவிர ஏனையோரைக் கிராமப்புறப் பாட்டாளிகள் எனலாம். இவர்களைத் தவிர சிறுவியாபாரிகள், கைவினைத்தொழில் புரிவோர், வண்டியோட்டிகள், சத்திரம் நடத்துவோர், தேவாலய ஊழியர்கள் என்போரும் 19ஆவது நூற்றாண்டுக் கால இங்கிலாந்தின் கிராமப்புற உழைப்பாளர் வரிசையில் இடம் பெற்றிருந்தனர். இவர்களுள் கூலிக்கு உழைப்போரே கிராமப்புறப் பாட்டாளிகள் எண்ணிக்கையில் மிகுந்திருந்தனர். இங்கிலாந்தின் வேளாண் தொழிலானது, நிலப்பிரபுகள், குத்தகை விவசாயிகள், கூலி உழைப்பாளர் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது. தொழிற்புரட்சியின் தாக்கம் கிராமப்புறங்களில் முழுமையான அளவில் ஏற்படாமையால் வேளாண் சமூகம் முதலாளித்துவ சமூகமாக மாறவில்லை. நவீன ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலாக வேளாண்மை மாறவில்லை. உணவு உற்பத்தி, மதுவுக்கான மூலப்பொருள் உற்பத்தி என்ற எல்லைக்குள் மட்டுமே வேளாண்மை நடைபெற்றது.

குடியானவர்கள் ஏழையாக இருந்தபோதிலும் தேவாலயத்தின் சமயக்குருவுக்குத் தம் வருவாயில் பத்தில் ஒரு பகுதியை தித்தி என்ற பெயரில் வரியாகச் செலுத்த வேண்டும். இது அவர்களின் உற்பத்திப் பொருள் வடிவில் தொடக்கத்தில் இருந்தது. பின்னர் இது பணவடிவிற்கு மாற்றமடைந்தது.

இங்கிலாந்தின் சமூக வரலாற்றில் முக்கிய நிகழ்வாக நிகழ்ந்த வேலிஅடைப்புப் போராட்டம், குடும்பத்தின் பயன்பாட்டிற்கான வேளாண்மையின் சுயேச்சைத் தன்மையைப் பறித்தது. பொருளாதார சுயேச்சைத் தன்மையையும் நிலத்தையும் இழந்த இவர்கள் முழுநேரக் கூலி உழைப்பாளராயினர். இவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது கிராமப்புற உழைப்புச் சந்தையில் ஊதியக் குறைப்புக்கு வழிவகுத்தது.

19ஆவது நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் இங்கிலாந்து நாட்டின் வேளாண்மை நிலை குறித்த சில செய்திகளை ஹாப்ஸ்பாம் விரிவான முறையில் எழுதியுள்ளார். பெருத்த ஆதாயம் தரும் அளவுக்கு உற்பத்தி செய்யும்படி, குத்தகை விவசாயிகளை நில உரிமையாளர்கள் ஊக்குவித்ததாகவும், உற்பத்தியையும் சந்தைப்படுத்துதலையும் இணைப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 1830 வாக்கில் நில உரிமையாளர்கள், புதிய வீடுகள் கட்டுவதிலும் பழைய வீடுகளைப் புதுப்பித்தலிலும் அதிக அளவில் ஈடுபட்டனர். வேட்டையாடுதலும் துப்பாக்கிச் சுடுதலும் அதிகரித்தன (இவையிரண்டுக்கும் அதிகச் செலவு பிடிக்கும்). நிலவருவாய் உயர்ந்தமைக்கான சான்றாக ஹாப்ஸ்பாம் இவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.

வேலி அடைப்புப் போராட்டத்தின் விளைவாக, சிறு விவசாயிகள், குடும்ப உறுப்பினர்களுடன் குடும்பத் தேவையை மட்டும் நிறைவு செய்யுமளவிலான வேளாண்மை மேற்கொண்டிருந்தோர், நிலங்களை ஆக்கிரமித்து வேளாண்மை செய்து வந்தோர் ஆகியோர் பாதிக்கப்பட்டனர் என்பது ஹாப்ஸ்பாமின் கருத்தாகும். ‘வேலி அடைப்புப் போராட்டத்திற்கு முன்னதாக, குடும்பத் தேவைக்காகக் குடும்ப உறுப்பினர்களுடன் வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தோர் நிலம் வைத்திருந்த உழைப்பாளிகளாக இருந்தனர். இப் போராட்டத்திற்குப் பின்னர் நிலமற்ற உழைப்பாளிகளாயினர்’ என்பது ஹாமோண்டோ என்பவரின் கூற்றாகும். இக் கூற்றுடன் ஹாப்ஸ்பாம் உடன்படுகிறார். இதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தின் கிராமப்புற ஏழ்மை குறித்த செய்திகளை எடுத்துரைக்கிறார்.

கிராமப்புற ஏழ்மை

இங்கிலாந்தின் கிராமப்புறங்களில், தொழிலாளர், பணியாளர் என இரண்டு வகையான உழைப்பாளர் இருந்தனர். இவ்விரு பிரிவினருமே நில உரிமையின்றி தம் உடலுழைப்பை நம்பி வாழ்ந்தனர். இவர்களது உழைப்பு கிராமப்புற நில உரிமையாளர்களுக்கு மிகவும் தேவைப்பட்டது. எனவே நில உரிமையாளர்கள் இவர்களைப் பணிக்கு அமர்த்திக் கொண்டனர். இவர்களுள் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் அல்லது வாரந்தோறும் ஊதியம் வழங்கினர்.இவர்களின் உழைப்பை மதிப்பிட்டு அதற்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டது. இவர்கள் நில உடைமையாளரின் ஊரைச் சேர்ந்தவர்களாகவோ, சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தனர்.

பணியாளர்கள் என்போர் பண்ணை உரிமையாளரின் வீட்டிலேயே தம் பணிக்காலத்தில் வாழ்வர். அங்கேயே பண்ணை உரிமையாளர் குடும்பத்துடன் உணவைப் பகிர்ந்துண்பர். அக் குடும்ப உறுப்பினர் போன்றே அவரது இயக்கம் அமையும். ஆனால் ஒரு வரையறுக்கப்பட்ட கால அளவுக்கு உட்பட்டதாகவே இது நிகழும். வேளாண்மைப் பணிகளுடன் கால்நடை வளர்ப்பிலும் இவர்கள் ஈடுபடுவர். பணிக்காலம் முடிந்து செல்லும் போது எளிய அன்பளிப்புகள் இவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு நிலமற்ற கிராமப்புற ஏழைகள் தம் உழைப்பை விற்று வாழ்ந்து வந்தனர். இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, நெப்போலியனுடன் இங்கிலாந்து நடத்திய வாட்டர்லூ போர் வழிவகுத்தது.

இப்போர் முடிந்ததும் இரண்டரை இலட்சம் படைவீரர்கள் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். இவர்கள் வேறு வேலைவாய்ப்பின்றி, தத்தம் கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களது வருகை கிராமப்புற வேலைவாய்ப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. கிராமங்களில் வேலையின்மை அதிகரிக்கலாயிற்று. (இது தொடர்பான புள்ளி விவரங்கள் நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.) இத்தகைய அவலச் சூழலின் பின்புலத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் வன்முறைக் கிளர்ச்சி இங்கிலாந்து நாட்டுக் கிராமப்புறங்களில் உருவாயிற்று.

இதன் தொடக்கம் குறித்தும், இதன் விளைவுகள் குறித்தும் அடுத்த இதழில் காண்போம்.

 (தொடரும்)

- ஆ.சிவசுப்பிரமணியன்