thaai maxim bookநாடு நகர எல்லை கடந்து, சமூக மத இன கலாச்சார மொழி பேதங்கள் கடந்து, நூற்றாண்டு காலம் கடந்து மக்களால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்படும் நூல்கள் சிலவற்றுள் மக்சீம் கார்க்கியின் தாய் நாவலும் ஒன்று.

ஒரு சமூகம் சோசலிச சமூகமாக மாறுவதன் பின்னணியில் எத்தனை எத்தனை மக்களின் வலியும் வேதனையும் உழைப்பும் பின்னிக் கிடக்கின்றன. அரசு நிர்வாகம் காவல் நீதி போன்ற அனைத்தும் வர்க்க நலனைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக எவ்வாறெல்லாம் செயல்படுகின்றன என்பதைப் புரட்சிக்கு முந்தைய ருஷ்யாவின் காட்சிகளால் மகோன்னதமாக படம் பிடித்துக் காட்டுகிறது இந்தத் தாய் இலக்கியம். இதை மிகச்சிறப்பாக, தெள்ளியதாய், செம்மாந்த முறையில் தமிழ்ப்படுத்தியிருக்கிறார் தொ.மு.சி.ரகுநாதன்.

'புகையும் எண்ணெய் அழுக்கும் நிறைந்த காற்றில், தொழிலாளர் குடியிருப்புக்கு மேல், நாள்தோறும் அந்த ஆலைச்சங்கு அலறிக் கூச்சலிடும். வேலையால் இழந்த சக்தியைத் தூக்கத்தால் மீண்டும் பெறாத தொழிலாளர்கள், ஆலைச்சங்கின் அழைப்புக்குப் பணிந்து, அழுது வடியும் வீடுகளிலிருந்து கடுகடுத்த முகங்களுடன் அடித்து மோதிக்கொண்டு வெளியே ஓடி கலைபட்ட கரப்பான் பூச்சிகளைப் போல தெருக்களில் மொய்ப்பார்கள்.' என்று தொடங்குவது முதலாக ஒவ்வொரு கட்டத்திலும் காட்சிகளை வர்ணிக்கும் பாங்கும், கதை நகர்வின் ஊடாக வெளிப்படும் வார்த்தைக் கோர்வைகளும், உரையாடலின் கருத்து வளமும்,  மார்க்ஸிய கொள்கைச் செறிவும் இது ஏன் உலகத்தர இலக்கியமாக விளங்குகிறது என்பதற்கு கட்டியங் கூறுகின்றன.

சினிமாக்களில் பார்ப்பதைப் போல தனிமனித சாகசங்களால் மலர்வதல்ல சோசலிசம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடவடிக்கைகளில் இருந்தும் பெறும்  அனுபவங்களின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்திற்குத் தொடர்ந்து கற்பிப்பதன் வழியாகவும் கற்பதன் வழியாகவும் மலர்வது சோசலிசம்.

படிக்காத பெண்ணாக, குடிகாரத் தொழிலாளியின் மனைவியாகக் கதையில் அறிமுகமாகும் பெலகேயா நீலவ்னா, அப்படி கற்பதன் வழியாக, கற்பிப்பதன் வழியாகத்தான் பின்னாளில் பத்திரிகைப் பிரசுரங்களை விநியோகிக்கும் புரட்சித் தாயாகிறாள்.

காதலும் வீரமும்தான் எப்போதும்  இலக்கியங்களின் அடிப்படைப் பேசுபொருள். கதைமாந்தர்களாக எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் பொதுவாக இலக்கியங்களின் கதாநாயன் ஆணாக இருப்பதே பெரும்பான்மை.

இவ்வாறான இலக்கியத்தின் வழக்கமான வரம்புகளை மீறி செம்மாந்து நிற்கிறாள் தாய். தெளிந்த நீரோடையைப் போல தன் வாழ்வின் லட்சியங்களை நோக்கி, எவ்வித இடைச் சலனமும் இன்றி நடைபோடும் தாயின் மகன் பாவெல் விலாசவ், தான் கொண்ட கொள்கையையே காதலிப்பதும், அதற்காக உயிரையும் துச்சமென எண்ணிப் போராடும் வீரமும் வழக்கமான இலக்கியங்களில் காணக் கிடைக்காத கூறுகள்.

இத்தகைய காதலும் வீரமும்தான் புரட்சி இலக்கியத்துக்கான, புரட்சிப் பாதைக்கான உலகளாவிய இலக்கணம் என்பதாக இவ்விலக்கியம் நமக்கு  வகுத்தளித்திருக்கிறது.

மார்க்ஸியப் பாதையைத் தேர்வு செய்து பணியாற்றுபவர்கள் எந்த அளவிற்கு குடும்பம், குழந்தை போன்ற சொந்த சுகங்களைத் தவிர்த்து பொதுநலம் கருதி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக உள்ளது தாயுடனான நிகலாய் இவானவிச்சின் ஒரு உரையாடல்.

நிகலாய் சொல்கிறான், "குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது - எப்போதுமே குறைத்து விடுகிறது! குழந்தைகள், குடும்பத்தை பட்டினி கிடக்காமல் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம், போதாமை. ஒரு புரட்சிக்காரன் என்றென்றும் தனது சக்தியை வளர்த்துக் கொண்டே போக வேண்டும் அப்போதுதான் அவனது நடவடிக்கைகளும் விரிவு பெறும் இன்றைய கால நிலைக்கு அது அத்தியாவசியம்.

நாம் தான் மற்ற எல்லோரையும் விட முன்னணியில் செல்ல வேண்டும் ஏனெனில் பழைய உலகத்தை அழித்து புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணிக்கு சரித்திரம் தேர்ந்தெடுத்துள்ள சேவகர்கள், தொழிலாளர்களாகிய நாமே தான். 

நாம் கொஞ்சம் பின் தங்கினால், சோர்வுக்கு ஆளானால் அல்லது வேறு ஏதாவது சில்லரை வெற்றியிலே மனம் செலுத்தினால், ஒரு பெரும் தவறைச் செய்யும் குற்றத்துக்கு, நமது இயக்கத்தையே காட்டிக் கொடுப்பது போன்ற மாபெரும் குற்றத்துக்கு நாம் ஆளாகி விடுகிறோம்..." இவ்வாறான எண்ணிறந்த உரையாடல்கள் வழியாக புத்துலகு படைப்பதற்கான திசைகாட்டியாக உள்ளது இந்த நூல்.

"வருத்தப்படாதே! அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் இல்லையா? போனால் போகட்டும்! அது ஒன்றும் வெட்கப்படுவதற்குரிய விஷயமில்லை. முன்னேல்லாம் திருடினான் என்பதற்காக மனிதர்களை சிறையில் தள்ளினார்கள். இப்போதோ நியாயத்தை எடுத்துச் சொன்னால் உள்ளே போடுகிறார்கள்..." என்று இன்றைக்கும் பொருந்துகிற யதார்த்தம் பேசும் மரியா கோர்சுனவா, ஒடுக்க ஒடுக்க  வளர்ந்து வரும் தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பின்வருமாறு உரைக்கிறாள்.

"இந்த முதலாளிகள் இருக்கிறார்களே அவர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? ஒரு மனிதனின் காலில் ஓங்கி அடித்து விட்டால் அவன் ஓடாமல் நின்று விடுவான் என்று பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் 10 பேரை அடித்தால் 100 பேர் முறைத்துக்கொள்கிறார்கள்"

பாவெல் சொல்கிறான், "நமது முதுகிலே குதிரையேறிக் கொண்டிருப்பவர்களுக்கு நமது கண்களைத் திரையிட்டு மூடிக் கட்டிவிட்டவர்களுக்கு நாம் எல்லாவற்றையும் பார்க்கவே செய்கிறோம் என்பதை எடுத்துக்காட்டத்தான் வேண்டும். நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல. 

வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கௌரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம். நம்மை நரக வாழ்வுக்கு உட்படுத்தி நம்மை ஏய்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை விட சிறந்த அறிவாளிகள் என்று தம்மைக் காட்டிக்கொள்ளும் நமது எதிரிகளுக்கு நாம் அவர்களுக்குச் சமதையான அறிவாளிகள், ஏன் அவர்களை விடச் சிறந்த அறிவாளிகள் என்பதை காட்டித்தான் ஆகவேண்டும்." தமிழ் நிலத்தின் ஆரிய - திராவிட அரசியல் பண்பாட்டுப் போராட்டத்திற்கு எதிர்வினையாற்றியதைப் போலல்லவா உள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகளையும், அடக்கு முறைகளையும், உருட்டல் மிரட்டல்களையும் பொருட்படுத்தாமல், 'எண்ணித் துணிந்த கருமமென' மே தின செங்கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை வெற்றிகரமாக நடத்தும் பாவெல், தன் நண்பர்கள் அந்திரேய், நிகலாய் வெசாவ்ஷிகோவ், பியோதர் மாசின், இகோர் உள்ளிட்டவர்களுடன் கைது செய்யப்படுகிறான்.

அப்போது, 'சிப்பாய்களுக்கு மத்தியிலிருந்து பாவெலின் தெளிவான குரல் ஒலித்தது; "வருகிறேன் அம்மா! போய் வருகிறேன். அன்பே..." தாயின் மனதில் இரண்டு எண்ணங்கள் பளிச்சிட்டன. "அவன் உயிரோடு இருக்கிறான்! அவன் என்னை நினைவு கூர்ந்தான்!".' தன் மகன் துப்பாக்கி முனையில் கடுமையான முறையில் கைது செய்யப்படும்போகூட, அவன் உயிரோடிருப்பது ஒன்று போதும் என்று கருதும் தாயின் உள்ளம் நெகிழ்ச்சியுடன் நினைவு கூரத்தக்கதாக உள்ளது.

கடவுள் இல்லை என்று ரீபின் பேசும் போது, "....கடவுள் தன் உருவம் போலவே மனிதனையும் படைத்தான் என்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தம்? கடவுள் மனிதனைப்போல் இருக்கிறார். மனிதன் கடவுளைப்போல் இருக்கிறார் என்பதுதானே.

ஆனால், இன்றோ நாம் கடவுள் மாதிரி இல்லை, காட்டு மிருகங்கள் மாதிரி இருக்கிறோம். தேவாலயத்தில் பூச்சாண்டிதானம்மா இருக்கிறது..." என்று தாய் பெலகேயாவைப் பார்த்துக் கூறுகிறான். 

அப்போது மிகுந்த வருத்தமுற்ற தாய் அந்த இடத்தில் அமரவே விரும்பாமல் அறுவறுப்போடு வெளியேறுகிறாள். "மதத்துரோகி! குழப்பவாதி! இவன் ஏன் இங்கு வந்து தொலைந்தான்?" என தனக்குள் நினைத்துக் கொள்கிறாள்.

அப்போதும் ரீபின், "அந்தப் புனிதமான இடத்தைக் காலியாக விடக்கூடாது. மனித இதயத்தில் கடவுள் குடியிருக்கும் இடம் ஒரு வேதனை இல்லம். அங்கிருந்து அவரைப் பிடுங்கியெறிந்தால் அந்த இடத்தில் படுகாயம் ஏற்படும். எனவே அவ்வில்லத்தில் ஒரு நம்பிக்கையை, மனித குலத்தின் நண்பனான ஒரு புதிய கடவுளைப் படைக்க வேண்டும்." என்கிறான்.

இவ்வாறு தொடக்கத்தில் மிகுந்த கடவுள் நம்பிக்கையுடன் இருந்த தாய் பெலகேயா, பின்னாளில் லுத்மீலாவுடன் பேசும் போது சொல்கிறாள், "மக்களுக்கு ஒரு புதிய கடவுளே பிறந்து விட்டது போல் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் - எல்லாம், எல்லோருக்காகவும் - ஒவ்வொன்றும்! இப்படித்தான் நான் உங்களைப் புரிந்து கொள்கிறேன்.

உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் அனைவரும் தோழர்கள்; நீங்கள் அனைவரும் அன்பர்கள்; நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள்!" தொடர்ந்து மக்கள் பணியாற்றிய பின்பு கடவுள் குறித்த தாயின் புரிதல் முற்றிலும்  மாறுபடுகிறது.

ரீபின் சொன்னதற்கொப்ப, அவள் கடவுளின் இடத்தில் புதிய கடவுளாக தோழர்களை வைத்துப் பார்ப்பதை எண்ணத்தில் ஏற்பட்ட புரட்சியாகவே பார்க்க வேண்டும்.

தமிழ்ப் படங்களைப் போலவே முதல் பாகத்தைக் காட்டிலும் விறுவிறுப்பாகச் செல்லும் இரண்டாம் பாகத்தில் முஜிக் என அறியப்படும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பு கதைக்களமாக உள்ளது.

ரீபின் கைது செய்யப்படும்போது, "போய் வருகிறேன். நல்லவர்களே!...... உண்மையை நாடுங்கள்! அதை பேணிப் பாதுகாருங்கள். உங்களிடம் தூய்மையான பேச்சுப் பேசும் மனிதனை நம்புங்கள். சத்தியத்தைக் காப்பதற்காக போராட தயங்காதீர்கள்!" என்று பொது மக்களைப் பார்த்துக் அறைகூவல் விடுப்பது நெஞ்சம் நெகிழ்வதாக உள்ளது.

விசாரனைக்காக நீதி அரங்கத்தில் நிறுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கேட்கும்போது, "இங்கு கைதிகளும் இல்லை; நீதிபதிகளும் இல்லை... பிடிபட்டவர்களும், பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்" எனத் தொடங்குகிறான் பாவெல். எவ்வளவு பெரிய பேருண்மை, எவ்வளவு மனோதிடத்துடன் வெளிவருகிறது!

பிரதம நீதிபதியைப் பார்த்து மேலும் பாவெல் பேசுகிறான், "நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனி நபர் சொத்துரிமைக்கு - சொத்துரிமையின் பேரால்... தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும் சமுதாய அமைப்புக்கு - நாங்கள் எதிரிகள்.

.... தான் செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காக மனிதப் பிறவியை ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணும் சமுதாயத்தை நாங்கள் மனித தன்மையற்றதாக, எங்களது நல உரிமைகளின் எதிரியாகக் கருதுகிறோம்... சுயநலத்தின் பேராசையால் மனிதர்களை நசுக்கிப் பிழியும் சகல விதமான சாதனங்களையும் நாங்கள் எதிர்த்துப் போராட விரும்புகிறோம்.

எதிர்த்துப் போராடவே செய்வோம். நாங்கள் தொழிலாளர்கள். சிறு குழந்தைகளின் விளையாட்டு கருவிகளிலிருந்து பிரம்மாண்டமான இயந்திர சாதனங்கள் வரை சகலவற்றையும் எங்கள் உழைப்பின் மூலமே நாங்கள் உலகத்துக்குப் படைத்துக் கொடுக்கிறோம். 

ஆனால் எங்களது மனிதகௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமையைக் கூட பறிகொடுத்தவர்களும் நாங்கள் தான். எங்களது கோஷங்கள் மிகவும் தெளிவானவை. 'தனிச்சொத்துரிமை ஒழிக!' 'உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில்!' 'அதிகாரம் அனைத்தும் மக்களிடம்!' 'உழைப்பது ஒவ்வொருவருக்கும் கடமை!' இவைதான் எங்கள் கோஷங்கள். இவற்றிலிருந்து நாங்கள் வெறும் கலகக்காரர்கள் அல்ல என்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம்!"

".... நீங்கள் அழித்துச் சுடுகாடாக்கிய இந்த உலகத்தை, சோசலிஷம் ஒரு மகோன்னதமான மாசக்தியாக வளர்ந்து உருவாகி வளப்படுத்தும். நிச்சயம் இது நிறைவேறத்தான் போகிறது!"

விஞ்ஞான சோஷலிஸம் என்பது அடிப்படையில் ஒரு அறிவியல் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சோவியத் யூனியனாக உழைக்கும் வர்க்கத்துக்கான ஒரு சமதர்ம சாம்ராஜ்யத்தை அமைத்து விஞ்ஞான ரீதியான ஒரு வெற்றியைப் பெற்று நாம் கொண்டாடினாலும், "முடைநாற்றம் எடுத்து நாறும் இன்றைய கேவல வாழ்வுக்கும் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மனித குலத்தின் சகோதரத்துவ சாம்ராஜ்யத்துக்கும் இடையே நாம் ஒரு பாலம் கட்டியாக வேண்டும்.

தோழர்களே! அதுதான் இன்று நம்முன் நிற்கும் வேலை." என்று அந்திரேய் நஹோத்கா சொன்னது இன்றைக்கும் அனைத்து தேச இடதுசாரிகளுக்கும் விடுக்கும் அறை கூவலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மனித வாழ்வின் நீடித்த துன்பங்களுக்கும், அவற்றிற்கான காரணங்கள் இவைதான் என அறியாமல் இருப்பதற்கும் காரணங்களை விளக்கி, அவற்றைப் போராட்டத்தின் வழியாக, சீரிய உழைப்பின் வழியாக மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை விதையை நாடு தோறும் விதைத்துச் செல்கிறாள் இந்தத் தாய்.

அந்த விதைகள் சில நிலங்களில் வீரியமாக விழுந்து விருட்சமாக வளர்ந்துள்ளன. வளர்ந்தும் மாறியுள்ளன. மாறியும் சில நிலங்களில் சிவந்தும், பச்சைப் பசேல் எனவும், சில நிலங்களில் அடர் பச்சை நிறத்திலும்,  நீல நிறத்திலும், கருப்பு நிறத்திலுமாக வண்ணங்கள் மாறி மாறி வளர்ந்தாலும் விதைகள் விழுந்த வண்ணமாகவேதான் இருக்கின்றன. விருட்சங்களும் வளர்ந்த வண்ணமாகவேதான் இருக்கின்றன.

புத்தகத்தின் பெயர்: தாய்
ஆசிரியர்: மக்சீம் கார்க்சி
தமிழில்: தொ.மு.சி.ரகுநாதன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஏழாம் பதிப்பு: ஆகஸ்டு, 2016
பக்கங்கள்: 550
விலை: ₹350

- மாணிக்க முனிராஜ்

Pin It