புதுமைப்பித்தன் காலத்திலிருந்து ஒவ்வொரு தலைமுறையிலும் பல எழுத்தாளர்களாலும் மொழிபெயர்ப்பாளர்களாலும் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்காவ். இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினாறு நாடகங்களையும் எழுதியவர் அவர். நூற்றைம்பது ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் பழமை படியாத எழுத்துகளாக அவருடைய படைப்புகள் உள்ளன. மனிதர்களின் விசித்திரப் பண்புகளை கலைநயத்துடன் முன்வைத்திருக்கும் தன்மையினால் செக்காவின் படைப்புகள் ஆலமரங்களென விழுதுவிட்டு உறுதியாக நின்றிருக்கின்றன. இறுதியாக மனிதன் என்பவன் யார் என்னும் கேள்வியைத் தொட்டு நிற்கும் கணம் ஒவ்வொரு வாசகனையும் கலைத்துப்போடும் அற்புதக்கணம்.
தொடக்கத்தில் செவ்வியல் தன்மை கொண்ட பிரெஞ்சுக் கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வெளியிட்டதன் வழியாக குறுகிய காலத்திலேயே சிறப்பான மொழிபெயர்ப்பாளரென்னும் இடத்தைத் தொட்டவர் வெங்கட சுப்பராய நாயகர். அவர் இப்போது பிரெஞ்சு வழியாக ஆன்டன் செக்காவின் பன்னிரண்டு சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு சிறுகதையும் வாசகர்களுக்கு மிகச் சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கும் வகையில் கதைத்தேர்வில் கவனத்தோடு நாயகர் இயங்கியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அவருடைய அக்கறைக்கும் தேடலுக்கும் தடாகம் வெளியிட்டிருக்கும் ஆன்டன் செக்காவ் - ஆகச் சிறந்த கதைகள் தொகுப்பு, மிகச் சிறந்ததொரு எடுத்துக்காட்டு...
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் கிராமத்து நூலகத்திலிருந்து ரஷ்யச் சிறுகதைகள் என்றொரு தொகுப்பை எடுத்துப் படித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தத் தொகுப்பிலேயே மிகச் சிறந்த சிறுகதை பந்தயம் என்னும் கதை. அதை எழுதியவர் ஆன்டன் செக்காவ். ஒரு பந்தயத்தின் நிமித்தமாக பத்தாண்டுகளுக்கும் மேலாக இருட்டறையில் வாழ்ந்தவன் கழித்த கடைசி இரவில்தான் அந்தக் கதை நிகழ்கிறது. இருட்டறை வாழ்க்கை ஒருவிதத்தில் பொருளாசை, புகழாசை, படிப்பாசை, தன் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆசை என லௌகிக ஆசைகளென்னும் இருட்டிலிருந்து விடுவித்து வெளிச்சத்தை நோக்கிய பார்வையை ஊட்டி விடுகிறது. பந்தயம் முடிந்து காலையில் வெளிவருபவனுக்குக் கொடுக்க வேண்டிய தொகையால் அழிந்துபோக இருக்கிற செல்வத்தை நினைத்தும் பிறர் பார்வையில் தனக்கு நிகழப் போகும் தகுதியிறக்கத்தை நினைத்தும் கவலைப்படும் மற்றொரு நண்பனின் மனத்தில் இருட்டைநோக்கிய பார்வை படியத் தொடங்குகிறது. இப்படி இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும் வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கும் அலைபாயும் மானுடமன ஓட்டத்தை வெகுநுட்பமாகச் சித்தரிப்பதாலேயே அந்தக் கதையை நான் ஒருபோதும் மறந்ததில்லை. உலகச் சிறுகதை வரலாற்றில் மிகச் சிறந்த தொடக்கத்தை உருவாக்கிக் கொடுத்த ஆளுமைகளில் ஒருவர் செக்காவ். செகாவிய பாணி என்றொரு எழுத்துமுறையே அவருக்குப் பின் உருவானது.
பந்தயத்துக்கு நிகரான சில சிறுகதைகளை நாயகர் இத்தொகுதியில் மொழிபெயர்த்துள்ளார். முக்கியமான கதை கலைப்பொருள். ஒரு மருத்துவர் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு இலவசமாக மருத்துவம் செய்து ஆபத்தான ஒரு நோயிலிருந்து காப்பாற்றுகிறார். மருத்துவருக்குக் கட்டணமாகக் கொடுக்க அவன் தாயிடம் பணமில்லை. அவள் விற்பனைக்கு வரும் பழைய கலைப்பொருட்களை வாங்கி விற்பவள். ஒருமுறை அவளிடம் அபூர்வமானதொரு கலைப்பொருள் வந்து சேர்கிறது. அதைத் தம் பரிசாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று மருத்துவரைச் சந்தித்து கொடுக்கிறான் அவள் மகன். உண்மையில் இது ஜோடியாக வைக்கப்பட வேண்டிய தாங்கிகள் என்றும் ஒன்றை மட்டுமே கொடுப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறான். மெழுகுவர்த்திகள் வைப்பதற்கென உருவாக்கப்பட்ட வெண்கலக் கொத்துவிளக்குத் தண்டு அது. அதன் அழகில் மருத்துவர் மனம் பறிகொடுத்து விடுகிறார். ஆனால் அதன் பீடத்தில் செதுக்கப்பட்டிருந்த இரு பெண்கள் பிறந்த மேனியாகக் காட்சியளிக்கிறார்கள். அது அவரைச் சங்கடத்துக்குள் ஆழ்த்துகிறது. பல பேர் வந்து போகிற மருத்துவமனைக்குள் அதைத் தன் மேசையின் மீது வைத்துக் கொள்ள முடியாது என்று அவர் நினைக்கிறார். அதனால் சிறுவன் வெளியேறும் வரைக்கும் காத்திருந்து அவருடைய நண்பரொருவருக்கு அன்பளிப்பாக அதைக் கொடுத்துவிட்டு வருகிறார். அவருக்கும் அதே சங்கடம். அவர் அதை மீண்டும் ஒரு தாளில் சுற்றி எடுத்துக் கொண்டுபோய் இன்னொரு நண்பரிடம் கொடுத்துவிட்டு வந்து நிம்மதியாக மூச்சு விடுகிறார். பிறகு அது எப்படியோ பழைய பொருட்களை வாங்கும் கடைக்குப் போய் விடுகிறது. இரு நாட்கள் கழித்து சிறுவன் மூச்சிறைக்க ஓடிவந்து “அந்த விளக்குத்தண்டுக்கு ஜோடி கிடைத்து விட்டது” என்றபடி மருத்துவரின் மேசையின் மீது அந்தக் கலைப்பொருளை வைக்கிறான். மருத்துவர் எதையோ சொல்ல முயன்று, பிறகு வாயடைத்து அமர்ந்து விடுகிறார். பிறந்தமேனிக் கோலம் தொடர்பாக விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் ஊசலாடித் தவிக்கும் மனத்தின் நடிப்பை உணர்த்தும் மிகச் சிறந்த சிறுகதை இது.
‘மெலிந்தவனும் பருத்தவனும்’ என்ற மற்றொரு முக்கியமான சிறுகதை. பள்ளிக்காலத்து நண்பர்கள் இருவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புகைவண்டி நிலையத்தின் வாசலில் சந்தித்துக் கைகுலுக்கிக்கொள்கிறார்கள். சிறிது நேரம் பழைய கதைகளை நினைவுபடுத்திப் பேசி மகிழ்கிறார்கள். இறுதியாக இருவரும் தத்தம் பதவி நிலைகளையும் கௌரவங்களையும் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஒருவர் அரசுத்துறையில் வேலை செய்பவர்; மாற்றல் காரணமாக அந்தப் புதிய ஊருக்கு வந்தவர். மற்றொருவர் அவரைவிட பல படிகள் மேலான பதவியில் பல விருதுகள் பெற்று பெருமையோடு வாழ்பவர். அந்நியமான ஒரு ஊரில் தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பில் அனிச்சையாக இருவருக்குமிடையில் உருவான அன்பும் நெருக்கமும் தகுதிநிலைகளைத் தெரிந்து கொண்டதும் சட்டென்று புகையென கரைந்து மறைகிறது. தகுதி சார்ந்து மனத்திலெழும் மதிப்புணர்வு ஒருவரை நிமிர்ந்து நிற்கவைக்கிறது. இன்னொருவரை குனிந்து வணங்கச் செய்கிறது. மீண்டும் அதே பழைய கேள்வி வாசகர்கள் முன்னால் எழுந்து வந்து நிற்கிறது. மனிதன் யார்? அன்பால் நினைக்கப்படவேண்டியவனா? அல்லது பதவியால் மதிப்பிடப்பட வேண்டியவனா?
ரஷ்யாவின் மீது அளவற்ற நேசம் கொண்டவராக இருந்தார் செகாவ். உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் கிராமங்களையும் நகரங்களையும் வாழ்நாள் முழுதும் சுற்றி வந்தார். தன்னை அறியாத மக்களிடையே புழங்குவதும் அவர்களைக் கவனிப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த செயல்கள். அவர் கவனித்த பல நூறு மனிதர்களைப்பற்றி அவர் எழுதிவைத்திருக்கும் சிறுசிறு குறிப்புகள் ஏராளம். அவருடைய மறைவுக்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு ஒரு நூலாக வெளிவந்தது. ஒற்றை வரி மட்டுமே உள்ள குறிப்பும் அதில் உண்டு. ஒரே ஒரு வாக்கியம் மட்டுமே உள்ள குறிப்பும் உண்டு. ஆனால் ஒரு மானுடச் சித்திரமே அந்தக் குறிப்பில் கோட்டோவியமாகக் காட்சியளிக்கிறது. ‘கங்காருபோல கழுத்து நீண்ட, கைகள் மெலிந்த ஒரு கர்ப்பிணிப்பெண் நடந்து போகிறாள்’ என்பது ஒரு குறிப்பு. ‘வாடகை வாகனத்தில் செல்லும் ஒருவர் ஜன்னல் கண்ணாடியை இறக்கி எதிரில் தெரியும் பல்கலைக்கழகக் கட்டடத்தைப் பார்த்து காறித் துப்புகிறார்’ என்பது இன்னொரு குறிப்பு. செக்காவ் எழுதாத கதைகளை இந்த வரிகளிலிருந்து ஒரு வாசகன் பல கதைகளை எழுதிச் செல்ல முடியும். அன்றாடச் சித்திரங்களின் சாயலில் உள்ள அழிவற்ற சிற்பங்களே செக்காவ் தீட்டிய சிறுகதைகள்.
ராஜதந்திரி என்றொரு வித்தியாசமான சிறுகதை இத்தொகுப்பில் உள்ளது. தனித்து வாழ்ந்த ஒரு பெண் எதிர்பாராத விதமாக ஒருநாள் இறந்துவிடுகிறாள். செய்தியறிந்ததும் அக்கம்பக்கத்தில் வாழ்ந்த அவள் உறவினர்கள் அனைவரும் மரணவீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். இறுதிச் சடங்குக்கு முன்பு யாரோ வயதில் மூத்த பெண்மணி பிரிந்து வாழும் அவளுடைய கணவனுக்குத் தகவல் அனுப்பி வைப்பது நல்லது என்னும் எண்ணத்தை முன்வைக்கிறாள். அவன் அதே ஊரில் ரயில்வே அலுவலகத்தில் வேலை செய்பவன். அவன் உடனுக்குடன் உணர்ச்சி வசப்படும் இயல்புடையவன். அவனைச் சந்தித்துப் பக்குவமாகத் தகவலைச் சொல்லிவிட்டு வருமாறு ஒருவரை அனுப்பி வைக்கின்றனர். அவர்தான் ராஜதந்திரி. அலுவலகத்துக்குச் சென்று இறந்துபோன பெண்ணின் கணவனைச் சந்திக்கிறார் அவர். ஏதேதோ பழைய நினைவுகளையும் தொடர்பில்லாத பல விஷயங்களையும் சுற்றி வளைத்துப் பேசுகிறார். கணவன் திகைத்து அதிர்ச்சியுறாதபடி மரணத் தகவலை எடுத்துரைக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால் அவன் மனைவியைப் பற்றிய பேச்சைத் தொடங்கும்போதெல்லாம் மரணம் பற்றிய தகவலை பதற்றத்தில் அரைகுறையாக உளறுகிறார். திகைத்து அவன் என்ன என்ன என்று வினவியதும் நிதானத்துக்கு வந்து இல்லை இல்லை என தான் சொன்னதையெல்லாம் தானே மறுக்கிறார். ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை மட்டும் உள்ளுணர்வால் உணர்ந்து கொள்ளும் கணவன் உணர்ச்சி வசப்பட்டு அவரிடம் உண்மையைச் சொல்லும்படி சத்தமிடுகிறான். அவரோ பலவிதமாக பொய்சொல்ல முயற்சி செய்து, இறுதியில் உண்மையையே உளறுகிறார். அவன் திகைத்து கீழே சாய்ந்துவிடுகிறான். அதை எதிர்பார்க்காத அவர் கசப்புடன் மரண வீட்டுக்கே திரும்பி வந்து மரணத்தகவலை தன்னால் பக்குவமாக எடுத்துரைக்க முடியவில்லை என்றும் வேறு யாரையாவது அனுப்பி கீழே விழுந்து கிடப்பவனிடம் தகவலைச் சேர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறார்.
ஒரே நாளில் இரு மரணங்கள். அபத்தமாக நிகழ்ந்த இருவருடைய மரணங்களைச் சித்தரிக்கும் கதையைப்போல ஒரு வாசிப்பில் தோன்றினாலும், அடுத்தடுத்த வாசிப்பில் காதலற்ற வாழ்க்கையில் பிரிந்து வாழத் தொடங்கியதுமே இறந்துவிட்ட இரு மனங்களின் மரணங்களை நோக்கி நம் கவனம் திரும்புவதை உணரலாம். மீண்டும் பழைய கேள்வியே மேலெழுந்து வருகிறது. யார் மனிதன்? சங்கடங்களையும் மோதல்களையும் விலக்கி காதலுள்ள வாழ்க்கையை வாழத் தெரிந்தவன் மனிதனா? ஆணவத்தால் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி உதட்டளவில் என் நெஞ்சில் அன்பு இன்னும் குறையவில்லை என்று சொல்லிக்கொண்டே தனிமையில் வாழ்பவன் மனிதனா?
துறவு பதினைந்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு வேடிக்கைக் கதையைப்போலச் சித்தரிக்கப்பட்டாலும் மனத்தின் மாயத்தை முன்வைக்கும் கதை. ஊரிலிருந்து நூறு மைல் தள்ளி ஒரு பாலைவனத்தில் ஒரு மடம் இருக்கிறது. அது துறவிகள் வாழும் மடம். ஒவ்வொரு நாளும் வயது முதிர்ந்த மூத்த துறவி மற்றவர்களுக்கு இறைவனின் கருணையைப் பற்றியும் வருகையைப் பற்றியும் உபதேசம் செய்வார். பாடல்களைப் பாடுவார். தன்னிடமிருக்கும் ஆர்கன் கருவியை மீட்டி உருக்கமாக இசைப்பார். நேரத்துக்கு உணவு வழங்கப்படும். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒருநாள் இரவில் ஒரு புதிய மனிதன் அந்த மடத்தின் கதவைத் தட்டி பசிக்கு உணவு கேட்டான். வழிதவறி வந்துவிட்டதாகச் சொன்னான். துறவிகள் அவனுக்கு உணவு கொடுத்து உபசரித்தார்கள். உணவுண்ட பிறகு அவன் துறவிகளை எரிச்சலாகப் பார்த்து வசைபாடினான். ஆன்மாவைக் காப்பாற்ற தனிமையில் மடம் கட்டி உணவுண்ணுவதுதான் வழியா என்று கேட்டான். மேலும் எதையும் செய்யாமல் இருப்பதற்கா கடவுள் உங்களுக்கு நம்பிக்கையையும் கருணை உள்ளத்தையும் கொடுத்தார்? என்றெல்லாம் கேட்டு சங்கடத்தில் ஆழ்த்திவிட்டு வெளியேறினான்.
அவன் சொற்கள் மூத்த துறவியை அசைத்தன. மறுநாளே அவர் மற்றவர்களிடமிருந்து விடைபெற்று நகரை நோக்கிச் சென்றார். மூன்றாவது மாத இறுதியில் அவர் திரும்பிவந்தார். ஆனால் புண்பட்ட மனிதரைப்போல துயரமே உருவாகக் காணப்பட்டார் அவர். யாரிடமும் ஒரு சொல்லும் பேசாமல் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார். இரு தினங்களுக்குப் பிறகு வெளியே வந்து தன் நகர அனுபவங்களைப் பற்றிய செய்திகளை விவரித்தார். எங்கெங்கும் சாத்தானின் ஆட்சியே நிலவுகிறது என உரைக்கும்போது அவர் குரல் உடைந்தது. குடித்து கொண்டாடும் மனிதர்கள் வாழும் வீடுகளைப் பற்றிச் சொல்லும்போது அவர் முகம் சீற்றத்தில் சிவந்தது. பிறகு ஒரு வீட்டில் அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் ஆடியதையும் ஆண்கள் சுற்றி நின்று களித்ததைப் பற்றியும் பிறந்தமேனிக் கோலத்தில் பெண்களின் வடிவங்களைக் களிமண்ணால் செய்து நிறுத்தியிருக்கும் பயிற்சிக்கூடங்களைப் பற்றியும் எரிச்சலுடன் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார் அவர். மறுநாள் காலையில் வெளியே அவர் வந்தபோது மடத்தில் ஒருவரைக் கூட பார்க்க முடியவில்லை. எல்லோரும் நகரத்தை நோக்கிச் சென்று விட்டிருந்தார்கள். மீண்டும் அதே கேள்வி. யார் துறவி? யார் மனிதன்? உலக இன்பத்தில் மூழ்கி இறை இன்பத்தை மறந்தவனா? இறை இன்பத்தில் திளைத்து உலக இன்பத்தைத் துறந்தவனா? இரு இன்பங்களையும் சமநிலையில் உணர்பவனா?
தல்ஸ்தோய், தஸ்தோவெஸ்கி, கார்க்கி என பல ஆளுமைகள் எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இளம்வயதிலேயே எழுதத் தொடங்கி 44 வயதில் மறைந்து போனார் செக்காவ். நுரையீரல் பிரச்சினை இளமையிலிருந்தே அவரை ஆட்டிப் படைத்தது. அவரே ஒரு மருத்துவராக இருந்தபோதும், அப்பிரச்சினையிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. உடல் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் எழுத்து, சேவை என தனக்கேயான உலகத்தை அவர் கட்டியெழுப்பிக் கொண்டார். ரஷ்யா முழுதும் காலராவால் பாதிப்படைந்தபோது, ஓர் உதவியாளர் கூட இல்லாமல் நாடெங்கும் பயணம் செய்து மருத்துவம் பார்த்து பலரைக் காப்பாற்றினார் அவர். தன் மரணம் நெருங்கி விட்டதை உணர்ந்ததும் மருத்துவரின் அனுமதியோடு ஒரு வாய் ஷாம்பெயின் அருந்தி மகிழ்ந்து, அந்த இனிய நினைவுகளிலேயே திளைத்து இறந்து போனார். அந்த மேதையின் கதையுலகம் விரிவும் ஆழமும் கொண்டது. அதன் ஒரு கோணத்தைப் புரிந்து கொள்ள நாயகரின் மொழிபெயர்த்திருக்கும் கதைகள் உதவுகின்றன. அவருக்குத் தமிழுலகம் கடமைப்பட்டிருக்கிறது.