1
அது ஒர் குளிர்காலம். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் முழுவதும் பனி மூடியிருந்தது. நல்ல பனிப் பொழிவு. தன் வீட்டின் ஜன்னலருகே அலெக்சாந்தர் புஷ்கின் அமைதியாக நின்றிருந்தார். வெளியே தூறல்போல் விழும் பனித்துளிகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அவர் மனம் அங்கு இல்லை; அது எதை எதையோ நினைத்துக் கலங்கிக் கொண்டிருந்தது. அவரின் மேசையின் மீது காகிதங்கள் சிதறிக் கிடந்தன. சில கவிதைகள் எழுதி முடிக்கப்பட்டிருந்தன. சில கவிதைகள் மனதிலே ஊறிக்கொண்டிருந்தன; அவரது மனநிலையும் அப்போது அப்படித்தான் இருந்தது. !
புஷ்கின் மனைவி நடாலியா பேரழகி! அவரது அழகு அனைவரையும் கவர்ந்தது. நடாலியா அரசரின் அரண்மனையில் மிகவும் பிரபலமானவர். நகரின் மேட்டுக்குடி சமூகத்தில் அவரைப் பற்றி அப்போது பல கிசுகிசுக்கள் பரவத் தொடங்கின. “நடாலியாவுக்கும் ஒரு வெளிநாட்டு அதிகாரிக்கும் மிக நெருக்கம் இருக்கிறதாம்!” என்று பேச்சு மெதுவாகப் பரவியது. குறிப்பாக, ஜார்ஜ் ட’ஆந்தேஸ் என்ற ஒரு பிரெஞ்சு அதிகாரி, புஷ்கினின் மனைவியைப் பற்றி அளவுக்கு அதிகமாக அவதூறு பேசினார். முதலில் புஷ்கின் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “மக்கள் பேசத்தான் செய்வார்கள். காற்றுப் போல இதெல்லாம்... வந்தது போலவே போய்விடும்” என்று நினைத்தார்.
ஆனால் அது அப்படியல்ல; ஒருநாள், அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அது மொட்டைக் கடிதம். அனுப்பியவரின் விலாசம் இல்லை. அந்தக் கடிதம் அவரது மனதை முற்றிலும் சிதைத்து விட்டது. அந்தக் கடிதத்தில் ஒரே ஒரு வரி மட்டும் எழுதப்பட்டிருந்தது: “நீ ஒரு ஏமாளிக் கணவன். உன்னை ஏமாற்றி விட்டாள் உன் மனைவி” அந்த வார்த்தைகள் புஷ்கினை மிகவும் ஆழமாகக் காயப்படுத்தி விட்டன. தன்னை அவமதித்தாலும் அவர் பொறுத்துக் கொள்வார். தனது கவிதைகளை அவமதித்தாலும் கூட அவர் கடந்து சென்று விடுவார். ஆனால் தனது மனைவியின் நடத்தையைப் பற்றிப் பொதுவெளியில் இப்படிக் கேவலமாகப் பேசுவதை அவரால் தாங்கிக் கொள்வே முடியவில்லை.
அன்றிரவு முழுவதும் புஷ்கினுக்கு ஒருபொட்டு தூக்கமே வரவில்லை. “மனிதனுக்கு உயிர் போன்றது மதிப்பும் மரியாதையும். அதுவே போய்விட்ட பின்பு இனி வாழ்ந்து என்ன பயன்?” என்று அவர் எண்ணினார். அந்தக் காலத்தில் அங்கு ஒருவரின் மரியாதையை அவமதித்தால், அவமதித்தவருடன் துப்பாக்கிச் சண்டை (ட்யூயெல்) நடத்துவது ஒரு சமூக மரபாக இருந்தது. புஷ்கின் நீண்ட யோசனைக்குப் பிறகு அன்று ஒரு முடிவுக்கு வந்தார். “நான் மென்மையான சுபாவம் கொண்டவன் தான். ஆனால் என் மரியாதையைக் குறைக்க நினைத்தால், அது மென்மையாக இருக்காது” என்று அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். புஷ்கின், பரோன் ஜார்ஜஸ் டி’ஆந்தேஸை துப்பாக்கிச் சண்டைக்கு வரும்படி சவால் விட்டார்.
துப்பாக்கிச் சண்டை நடக்கும் நாள் வந்தது. அது 1837ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி. அந்த ஆற்றங்கரையோரம் முழுவதுமாகப் பனி படர்ந்திருந்தது. சுற்றிலும் ஒரு வகை அமைதி நிலவியது. புஷ்கின் துப்பாக்கியைப் பிடித்தபடி நின்றார். ஒரு நொடி, அவர் எழுத வேண்டிய கவிதைகள் நினைவுக்கு வந்தன. மனைவியின் அழகிய முகமும் மனதில் தோன்றியது.
அடுத்த நொடி, டுமில்…. டுமில்…. என்று துப்பாக்கிச் சத்தம் அந்தப் பேரமைதியைக் கிழித்திற்று. புஷ்கின் வயிற்றில் ஒரு குண்டு பாய்ந்து இரத்தம் கொப்பளிக்க அப்படியே தரையில் விழுந்தார். அவரை உடனே வீட்டிற்குத் தூக்கி வந்தனர். இரண்டு நாட்கள் அவர் கடுமையான வலியுடன் படுக்கையிலேயே இருந்தார். நண்பர்கள் எப்போதும் அவரைச் சுற்றிலும் நின்றனர். ஒருவர் மெதுவாக அவரிடம் கேட்டார், “வருத்தமாக இருக்கிறதா?” புஷ்கின் மெல்ல சிரித்தார். “இல்லை. நான் என் மரியாதையைக் காப்பாற்றி விட்டேன். அதுவே எனக்குப் போதும்” என்று அமைதியாகச் சொன்னார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை.
அந்த துப்பாக்கிச் சண்டை முடிந்த இரண்டாம் நாள், அலெக்சாந்தர் புஷ்கின் நிரந்தரமாகக் கண் மூடினார். அப்போது அவருக்கு வயது வெறும் முப்பத்தேழுதான். ஒரு மனிதன் மறைந்தார். ஆனால் ஒரு கவிஞர் மறையவில்லை, மக்கள் மத்தியில் இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று அவரது இறுதிச் சடங்கு விவரங்களை மிக ரகசியமாக வைத்திருந்து பின்னர் நகருக்கு வெளியே எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அவரது உடல் மண்ணில் கலந்தாலும், அவரது கவிதைகள், படைப்புகள் உலக மக்களின் மனங்களில் கலந்தன.
2
அலெக்சாந்தர் புஷ்கின் உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாளியாகக் கருதப்படுகிறார். நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் புஷ்கின், ஒரு கவிஞராக மட்டும் அல்லாமல், சிறுகதை, நாவல், நாடகம் போன்ற பல இலக்கிய வகைமைகளில் ஆழமான தடத்தைப் பதித்துச் சென்றவர். அவரது படைப்புகள் மொழிநடையில் எளிமையாக இருந்தாலும், சிந்தனையின் ஆழத்திலும் மனித உணர்வுகளின் நுண்ணிய வெளிப்பாடுகளிலும் தனித்தன்மை கொண்டவை. அரசவைக் கலாசாரம், வெளிநாட்டு இலக்கியச் சாயல்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டிலிருந்து ரஷ்ய இலக்கியத்தை விடுவித்து, எளியமனிதனின் வாழ்க்கை, மனநிலை, ஆசை, தோல்வி, நம்பிக்கை ஏழ்மை ஆகியவற்றை இலக்கியத்தின் மையக்கருவாக மாற்றியவர் புஷ்கின்.
புஷ்கினுக்கு முன்பான ரஷ்ய இலக்கியம் பெரும்பாலும் மேட்டுக்குடி மக்களுக்கான அலங்கார மொழியையும் செயற்கையான மொழி நடையையும் கொண்டிருந்தது. பிரெஞ்சு மொழி மற்றும் ஐரோப்பிய இலக்கியத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்த அந்தக் காலத்தில், புஷ்கின் மக்களின் பேச்சுவழக்கு மொழிக்கு நெருக்கமாக, இயல்பான, உயிர்ப்பான ரஷ்ய மொழியைத் தன் படைப்புகளில் தந்தவர். இந்த மொழிப் புரட்சிதான் அவரது மிகப்பெரிய பங்களிப்பு. கவிதை என்றால் கடினமாக, புரியாத மொழியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் உடைத்தார். எளிய சொற்களிலும் மனித வாழ்வின் மிக ஆழமான உணர்வுகளைச் சொல்ல முடியும் என்பதை அவர் தனது படைப்புகளால் நிரூபித்தார்.
அலெக்சாந்தர் புஷ்கின் 1799ஆம் ஆண்டு மாஸ்கோவில் வசதிபடைத்த மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்தார். அவரது குடும்பப் பின்னணி அவரது சிந்தனை வளர்ச்சிக்கு உதவியது. அவரது தாய்வழி மூதாதையரான ஆப்ராம் கன்னிபால் ரஷ்ய மன்னர் பீட்டர் மகா அவர்களின் அரண்மனையில் உயர் பதவியில் இருந்தவர். இந்தப் பாரம்பரியப் பின்புலம் புஷ்கினுக்குத் தன்னம்பிக்கை, உயரிய மரியாதை, மற்றும் சுதந்திரமான சிந்தனை உணர்வினை அளித்தது. சிறுவயதிலிருந்தே அவர் ரஷ்ய நாட்டுப்புறக் கதைகளையும், மேற்கத்திய இலக்கியங்களையும் கேட்டு, வாசித்து வளர்ந்தார். அந்தக் காலத்தில் பிரஞ்சு மொழி உயர்குடிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டதால், புஷ்கின் பிரஞ்சு இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றார்.
புஷ்கின் தனது கல்வியை சார்ஸ்கொயே செலோவில் உள்ள இம்பீரியல் லைசியத்தில் (இது உலகப் புகழ்பெற்ற கல்விநிறுவனம்) பெற்றார். இந்தக் காலகட்டமே அவரது இலக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது. அங்கு அவர் இலக்கியம், வரலாறு, தத்துவம், அரசியல் போன்ற பல துறைகளில் கல்வி பயின்றார். நண்பர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து, சமூக சிந்தனையை விரிவாக்கிக் கொண்டார். இந்தக் காலத்தில் அவர் எழுதிய கவிதைகளில் அவரது தனித்துவமான மொழி நடை தெளிவாகத் தெரிந்தது. அவர் எளிய மக்கள் பேசும் ரஷ்ய மொழியையே பயன்படுத்தினார். இது முன்பு இருந்த கடினமான இலக்கிய மரபுகளில் இருந்து மாறுபட்ட ஒரு புதிய முயற்சி ஆகும்.
அவர் வாழ்ந்த காலத்தின் அரசியல் சூழ்நிலை அவரது எழுத்துகளில் பிரதிபலித்தது. ரஷ்யாவில் அந்தக் காலத்தில் அரசரின் ஆட்சி என்பது மிகக் கடுமையானது; கருத்துச் சுதந்திரம் இல்லை. புஷ்கின் எழுதிய ஆரம்பக் கவிதைகளில் சுதந்திரம், நீதி, அடக்குமுறைக்கு எதிரான கருத்துகள் அதிகமாக இருந்தன. இதனால் அரசு அவரை சந்தேகத்துடன் பார்த்தது. பல முறை அவர் நாடு கடத்தப்பட்டார். இந்தத் துன்பமான காலம் அவர் மனதை வலுப்படுத்தியது. தனிமையில் இருந்தபோது இயற்கையையும், எளிய மக்களின் வாழ்க்கையையும் அருகில் இருந்து நன்கு அறிந்தார். இது அவரது படைப்புகளுக்குத் தேசிய உணர்வையும், ஆழத்தையும் சேர்த்தது.
புஷ்கினின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது எழுத்துகளைப் பாதித்தது. அவர் மிக உணர்ச்சிவயப்பட்டவர்; காதல், ஏமாற்றம், மனவேதனை ஆகியவை அவரது கவிதைகளில் மிக நுட்பமாகப் பிரதிபலிக்கின்றன. காதல், விதி, மதிப்பு மரியாதை, வாழ்க்கையின் அர்த்தம் போன்ற கருப்பொருள்கள் அவரது படைப்புகளில் மிக அதிகமாக இடம்பெற்றன. பணச்சிக்கல், சமூக அழுத்தம், அரசின் கட்டுப்பாடுகள் ஆகியவை அவரை மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கின. இருந்தாலும், அவர் தனது எழுத்துகளில் நேர்மையைக் கடைபிடித்தார்.
அவரது சில படைப்புகளைப் பற்றிப் பார்க்கலாம்.
“ருஸ்லானும் ல்யூட்மிலாவும்” (Ruslan and Lyudmila) 1820
இது காதலும் வீரமும் சாகசமும் கலந்த சுவையான கதை. ருஸ்லான் என்ற வீரன், தன் காதலி ல்யூட்மிலாவை மீட்க மந்திரவாதிகள், அசுரர்கள், மாய உலகங்கள் நிறைந்த பாதையில் சாகசமான ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். இந்தக் கதையின் மூலம் புஷ்கின் ரஷ்யாவின் தொன்மையான நாட்டுப்புறக் கதைகளின் சுவையையும் கற்பனை வளத்தையும் கவிதை வடிவில் அழகாக வெளிப்படுத்துகிறார். நம்ம ஊர் விக்ரமாதித்தன் கதையைப் போல விறுவிறுப்பும் திகிலும் திருப்பங்களும் நிறைந்துள்ளது.
போரிஸ் கோடுனோவ் (Boris Godunov) 1825
புஷ்கினின் போரிஸ் கொடுனோவ் ரஷ்ய இலக்கியத்தின் முக்கியமான வரலாற்று நாடகமாகும். 1825ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் ஜார் போரிஸ் கொடுனோவ் ஆட்சிக் காலத்தை எடுத்துரைக்கிறார். அதிகாரம் பெற்ற பிறகு ஜார் போரிஸ் கொடுனோவ் வை வாட்டும் குற்ற உணர்வு, மக்களின் அதிருப்தி மற்றும் அரசியல் குழப்பம் ஆகியவை இதில் வெளிப்படுகின்றன. அதிகாரம் என்பது எப்போதும் நிலையானதல்ல என்றும், ஒரு அரசனின் மனநிலையே நாட்டின் நிலையைத் தீர்மானிக்கிறது என்றும் இந்த நாடகம் விளக்குகிறது.
யூஜின் ஒன்ஜின் (Eugene Onegin) 1823–1831
புஷ்கினின் படைப்புகளில் யூஜின் ஒன்ஜின் என்ற வசன காவியம் சிறப்பிடம் பெறுகிறது. இது கவிதை வடிவில் எழுதப்பட்ட நாவல். 1825 முதல் 1832 வரைத்தொடராக வெளிவந்தது. இது ரஷ்யாவின் சமூக வாழ்க்கையும், மனித மனத்தின் உளப் போராட்டங்களையும் மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது. ஒன்ஜின் என்ற இளைஞன், வாழ்க்கையில் எல்லாவற்றையும் அலட்சியமாகப் பார்ப்பவன். உண்மையான அன்புடன் நேர்மையாக அவனை நெருங்குவதை எல்லாம் அவன் நிராகரிக்கிறான். பின்னர் காலம் கடந்தபோது அவன் செய்த தவறுகளை அவன் உணர்கிறான். காலம் கடந்த பின்பு அதனை எப்படிச் சரிசெய்ய முடியும்? இந்தக் கதை மனிதர்களின் அகந்தை, அலட்சியம் மற்றும் தனிமை தரும் கொடுமைகளை மிக நுட்பமாக விளக்குகிறது.
பெல்கின் சிறுகதைகள் (The Tales of Belkin) 1831
பெல்கின் சிறுகதைகள் என்பது அலெக்சாண்டர் புஷ்கின் எழுதிய ஐந்து சிறுகதைகளின் தொகுப்பு. இக்கதைகள் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறிய ஆனால் முக்கியமான நிகழ்வுகளைச் சொல்லுகின்றன. சில கதைகளில் காதல், சிலவற்றில் துயரம், சிலவற்றில் நகைச்சுவை மையமாக இருக்கின்றன. சூழல் மனித வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதும் இதில் காட்டப்படுகிறது. தந்தை–மகள் உறவு, மனிதநேயம், மூடநம்பிக்கை போன்றவற்றை வெளிப்படுத்தம் விதமாக எளிய மொழியில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் மனித மனதை இயல்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் வெளிப்படுத்துகின்றன.
ஸ்பேட்ஸ் ராணி (The Queen of Spades) 1834
இது ஒரு சுவையான குறுநாவல். இதில் ஹெர்மன் என்ற இளைஞன், சூதாட்டத்தில் - அதாவது, சீட்டாட்டத்தில் எப்போதும் வெற்றி பெறுவதற்கான இரகசியத்தை அறிய ஆசைப்படுகிறான். அவன் சீட்டாட்டத்தில் நேரடியாகப் பங்கேற்பதில்லை. வெற்றி பெறுவதற்கான இரகசியச் சீட்டு யாரிடம் உள்ளது என்பதனை அறியும் வித்தையைக் கற்க விரும்பினான்; அதற்கான தந்திரங்களைக் கற்றான். அந்த ஆசையே அவனைப் பேராசை, பயம் மற்றும் மன அழுத்தம் என்று தள்ளிவிடுகிறது. இறுதியில், அவனது பேராசை அவனது வாழ்க்கையை அழிக்கிறது. இந்தக் கதை பேராசை, மூடநம்பிக்கை, விதி மற்றும் மனச் சிதைவு ஆகியவற்றை ஆழமாக விவரிக்கிறது
கேப்டனின் மகள் (The Captain’s Daughter) 1836
இது புகழ்பெற்ற வரலாற்று நாவல். 1773–1775 காலகட்டத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற புகாச்செவ் கிளர்ச்சியை மையப்படுத்தி எழுதியது. இந்தக் கிளர்ச்சி நில உரிமையாளர்களின் கொடுமை, சமூக அநீதி மற்றும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக விவசாயிகளும் கோசாக் மக்களும் சேர்ந்து நடத்திய தீவிரமான போராட்டமாகும்; இதனை யெமெலியன் புகாச்செவ் Yemelyan Pugachev வழிநடத்தினார்.
இந்த வரலாற்றுச் சூழலில், இளம் இராணுவ அதிகாரியான பியோட்டர் கிரினியோவின் வாழ்க்கை அனுபவங்கள், அவரது காதல், நேர்மை, கடமை உணர்வு ஆகியவை விவரிக்கப்படுகின்றன. அரசியல் கலவரங்கள் நடுவிலும் மனிதநேயம், நல்லொழுக்கம் மற்றும் மனச்சாட்சி போன்றவற்றை நாவல் வலியுறுத்துகிறது. இவ்வாறு, ஒரு பெரிய வரலாற்று நிகழ்வையும் தனிப்பட்ட மனித வாழ்க்கையையும் இயல்பாக இணைத்துச் சொல்லும் சிறந்த படைப்பாக கேப்டனின் மகள் கருதப்படுகிறது.
1819–1820 காலப்பகுதியில், ஆங்கிலக் கவிஞர் பைரனின் கவிதைகள் புஷ்கினை அதிகம் ஈர்த்தன. அதன் காரணமாக, தெற்குப் பகுதிகளின் இயற்கை, விசித்திரமான சூழல்கள், துயரமான காதல் கதைகள் ஆகியவற்றை மையமாகக்கொண்டு அவர் கவித்துவ நடையில் பல கதைகளை எழுதினார்.. ஆனால், இப்படைப்புகள் சில, அரசரை விட சுதந்திரமான எண்ணங்களைக் கொண்டவையாகத் தோன்றின. அதனால் மன்னர் அலெக்சாண்டர் அவரைத் தலைநகரிலிருந்து நாடு கடத்தினார். முதலில் ரஷ்யாவின் தெற்கிற்கும், பின்னர் அவரது தாயாரின் மிக்காய்லோவ்ஸ்கோயே என்ற எஸ்டேட்டிற்கும் அவர் அனுப்பப்பட்டார்.
மிக்காய்லோவ் ஸ்கோயேவில் கழித்த காலம் புஷ்கினுக்கு மிக முக்கியமானது. அந்தக் காலத்தில் தான் அவரது எழுத்துத் திறமை மேலும் வளர்ந்தது. முன்பு இருந்த மென்மையான, இசைபோன்ற நடையை விட்டு, எளிமையும் ஆழமும் கொண்ட எழுத்து நடைக்கு அவர் மாறினார். இந்தக் காலத்தில் அவர் The Prophet, The Poet போன்ற புகழ்பெற்ற கவிதைகளை எழுதினார். மேலும், இந்தக் காலக்கட்டத்தில்தான் கவிதை வடிவில் எழுதப்பட்ட நாவலான யூஜின் ஒன்ஜின் என்ற படைப்பையும் தொடர்ந்து மெருகேற்றினார். இதே காலக்கட்டத்தில்தான் அவர் போரிஸ் கொடுனோவ் என்ற வரலாற்று நாடகத்தையும் எழுதினார்.
1827 இல் புஷ்கினுக்கு மீண்டும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் திரும்ப அனுமதி கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, பேரழகி நடாலியா கொன்சரோவாவை அவர் சந்தித்தார். அவரை மணக்க விரும்பினார். ஆனால் 1830ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலரா நோய்த் தொற்றால், அவர் நடாலியாவிடமிருந்து பிரிந்து, போல்டினோ என்ற இடத்தில் உள்ள தனது எஸ்டேட்டிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் காலத்தில் அவர் மிகுந்த படைப்பூக்கத்துடன் பல முக்கியப் படைப்புகளை உருவாக்கினார்.
1831 இல் புஷ்கின் நடாலியாவைத் திருமணம் செய்துகொண்டார். நடாலியா அரசரின் அரண்மனையில் மிகவும் பிரபலமானவர் என்பதால், புஷ்கின் திட்டமிட்டதை விட அதிகமான நாட்கள் தலைநகரில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவரது எழுத்துப் பணிகள் குறையத் தொடங்கின. இருந்தாலும், இக்காலங்களில்தான் அவர் முக்கியப் படைப்புகளை எழுதினார்
1830 களின் நடுப்பகுதியில், சிலர் புஷ்கினை பழைய பாணி எழுத்தாளர் என விமர்சித்தார்கள். இது அவரை மனதளவில் மிகவும் பாதித்தது. அதற்கும் மேலாக, அவரது மனைவி அவர் மீது கொண்ட நம்பிக்கையை இழந்தார் என்ற வதந்தியும் பரவியது.
புஷ்கினின் கவிதைகளின் சிறப்பம்சம் “எளிமையும் ஆழமும்” என்பதாகும். அவரது கவிதைகள் முதலில் படிக்கும் போது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் மறுமுறை வாசிக்கும்போது, ஆழமான சமூகப் பார்வை, தத்துவச் சிந்தனை, மனித மனத்தின் சிக்கல்கள் என விவரிப்பவை. அவர் எழுத்துகளில் கடுமையான வார்த்தைகளால் எதையும் எதிர்க்கவில்லை; மெல்லிய கிண்டல், நகைச்சுவை, நுண்ணிய முரண் irony ஆகியவற்றின் மூலம் வாசகனைச் சிந்திக்க வைக்கிறார். வாழ்க்கை முழுவதும் முரண்பாடுகளால் நிரம்பிய ஒன்று என்பதை அவர் புரிந்திருந்தார்; அதனால்தான் அவரது கதாபாத்திரங்கள் முழுமையாக நல்லவர்களாகவோ முழுமையாக கெட்டவர்களாகவோ அல்லாமல், இரண்டும் கலந்த இயல்பான மனிதர்களாக இருக்கிறார்கள்.
புஷ்கினின் காதல் கவிதைகள் அவரது மனிதநேயத்தை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. குறிப்பாக, 'நான் உன்னைக் காதலித்தேன்' (I Loved You) என்ற கவிதை உலக இலக்கியத்தில் தனிச்சிறப்பு பெற்றது. இதில் காதல் என்பது உடைமையாகவும் உரிமையாகவும் சித்தரிக்கப்படவில்லை. காதல் முறிந்தாலும், அந்தப் பெண்ணின் நலனை விரும்பும் மனநிலையே உண்மையான காதல் என்று புஷ்கின் உணர்த்துகிறார். இது மிகுந்த மனப்பக்குவத்தையும் ஒழுக்க நெறியையும் வெளிப்படுத்துகிறது. காதல் மனிதனை உயர்த்த வேண்டும், எந்த வகையிலும் துன்பப்படுத்தக் கூடாது என்ற அவரது பார்வை, இன்று கூட நவீனமாகத் தான் தோன்றுகிறது.
சுதந்திரம் என்பது புஷ்கினின் படைப்புகளில் தொடர்ந்து வரும் முக்கியமான கரு. அவர் தனிநபர் சுதந்திரத்தையும் சிந்தனை சுதந்திரத்தையும் ஆழமாக நம்பினார். அரசியல் கருத்துகளால் தணிக்கை, கண்காணிப்பு, நாடு கடத்தல் போன்ற துன்பங்களை அவர் அனுபவித்தார். ஆனாலும், நம்பிக்கையை இழக்கவில்லை. சாதாயேவுக்கு ('To Chaadaev') என்ற கவிதை, எதிர்கால சுதந்திரம் குறித்த ஒரு தீவிர நம்பிக்கையின் குரல். இதில் கவிஞன் தனக்காக மட்டுமல்ல, சமூகத்துக்காகவும் பேசுகிறான். புஷ்கினைப் பொருத்தவரை கவிஞன் என்பவன் சமுதாயத்தின் மனச்சாட்சி. அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதே கவிதையின் கடமை.
கவிதைகளுடன் சேர்த்து புஷ்கினின் சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மனித மனத்தின் இருண்ட பக்கங்களையும் புரிந்து கொள்ள உதவுகின்றன.
புஷ்கினின் அனைத்துப் படைப்புகளையும் இணைத்துப் பார்க்கும் போது, சில மையக் கருக்கள் தொடர்ந்து வலியுறுத்தப்படுவதைக் காணலாம். தனிமனித சுதந்திரம், மனிதநேயம், பேராசையின் அபாயம், மரியாதையுடன் கூடிய காதல், அதிகாரம் மற்றும் மனித மனம் ஆகியவற்றிற்கு இடையிலான மோதல், விதி மற்றும் நிலையில்லா வாழ்வு, எளிய மனிதனின் மகத்துவம் ஆகியவையே அந்த மையக் கருத்துக்கள். கவிதை, கதை, நாடகம் என்று படைப்புகளின் வடிவங்கள் மாறினாலும், சிந்தனை ஓட்டம் ஒன்றே.
ரஷ்ய இலக்கிய வரலாற்றில் புஷ்கினின் இடம் என்பது அளவிட முடியாதது. அவர் இல்லையெனில், டால்ஸ்டாய், தோஸ்தயெவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்கள் இந்த வடிவில் உருவாகியிருக்க முடியாது என்று பல இலக்கிய விமர்சகர்கள் கூறுகிறார்கள். மனித ஆன்மாவை எளிய மொழியில் ஆழமாகச் சொன்னதே அவரது மிகப்பெரிய சாதனை. சிக்கலான தத்துவ மொழி இல்லாமலேயே, மனித வாழ்க்கையின் முழுமையையும் வெளிப்படுத்தியவர் புஷ்கின்.
- பாரதிபாலன்