விஜயரங்கம் என்ற இயற்பெயர் கொண்ட புதுவை மண்ணில் பிறந்த தமிழ்க் கவிஞர் தமிழ்ஒளி. பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதை, கட்டுரை, கதைகள், நாடகம் எனப் பல படைப்புகளை இயற்றியவர். இவரின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர்மூச்சாகக் கொண்டவராதலால் அவற்றை இவரது படைப்புகளில் காணமுடிகிறது.

thozhar tamil oli sirukathaigal“நல்ல இலக்கியங்களை மக்களிடம் கொண்டு செல்வதன் வழியாகத்தான் சமூகத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும்” என்பார், இலக்கியப் பேராசான் ஜீவா. அவ்வகையில் கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அவரது கவிதைகள், காவியங்கள், சிறார் ஆக்கங்கள், சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள், தன் வரலாறுகள் என ஆறு தொகுதிகளாகப் பேராசிரியர் வீ.அரசு தொகுத்து 2024இல் வெளியிட்டிருக்கிறார். 'தோழர் தமிழ்ஒளி ஆக்கங்கள்' என்ற பெயரில் தமிழ் ஒளியின் நூற்றாண்டு வெளியீடாக வந்திருக்கின்றது. பேராசிரியர் வீ.அரசு அவர்களின் உழைப்பால் இது சாத்தியமாகி இருக்கின்றது. இதிலே தோழர் தமிழ்ஒளி சிறார் பாடல்கள்-கதைகள் நான்காவது தொகுதியாக அமைந்துள்ளது.

கவிதை எழுதுபவர்களை கவிஞர் என்று குறிப்பிடுவது மரபு. ஆனால் கவிதைகள் எழுதுகின்ற வரை தோழர் என்று குறிப்பிடுவது மரபன்று. ஆனால் இம்மரபு தமிழ்ஒளியை அழைப்பதில் மாறுபடுகிறது. ஏனெனில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் கவிதைகளை எழுதுவதுடன் வாழ்க்கையிலும் அதைக் கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர் கவிஞர் தமிழ்ஒளி. இவர் பேராசிரியர் வீ.அரசு அவர்களால் தோழர் தமிழ்ஒளி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

கவிஞர் தமிழ் ஒளி பிறந்தது 1924ஆம் ஆண்டு என்று கணக்கிட்டு தமிழ்நாட்டில் அவருடைய நூற்றாண்டு விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் கவிஞர் தமிழ்ஒளியின் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு கவிஞர் தமிழ்ஒளி பிறந்தநாள் 21.09.1925 என்று பேராசிரியர் வீ.அரசு இந்த நூலில் பதிவு செய்திருப்பது புதிய தகவலாக அமைகிறது.

கவிஞர் தமிழ்ஒளி பல இலக்கியப் படைப்புகளைத் தந்திருந்தாலும், அவரைப் பற்றிய அறிமுகம் என்பது இலக்கிய வட்டத்தில் குறிப்பிட்ட சாரார் மட்டுமே அறிந்ததாக இருந்தது. இச்சூழலில் தமிழ்ஒளி அவர்களையும் அவரது படைப்புகளையும் பாதுகாத்து தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் மறைந்த செ.து.சஞ்சீவி அவர்களே. இதனை “கவிஞர் தமிழ்ஒளி அவர்களோடு பழகி வாழ்நாள் முழுவதும் அவருக்கு உறுதுணையாக இருந்து தனது புகழ்ப் புத்தகாலயம் மூலம் அவரது படைப்புகளை அச்சிட்டு கவிஞரின் புகழ் பரப்பிய பெருமதிப்பிற்குரிய செ.து.சஞ்சீவி அவர்களுக்குத் தமிழ்கூறு நல்லுலகு பெரிதும் கடமைப்பட்டுள்ளது. சஞ்சீவி அவர்கள் இல்லை என்றால் இன்று தமிழ்ஒளி காணாமல் போயிருப்பார் என்பது மறுக்கமுடியாத உண்மை” என்று கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுச் சிறப்பிதழ் கூறுகிறது.

சஞ்சீவி முயற்சிக்குப் பின்னர் பேராசிரியர் வீ.அரசு இப்பணியைச் செம்மையாகச் செய்து முடித்திருக்கிறார். சுயமாகப் படைப்புகளைப் படைப்பதை விட ஒரு படைப்பாளியின் படைப்புகளைத் தொகுப்பது என்பது சிரமமான பணியாகும். ஏனெனில், எந்தப் படைப்பாளியின் படைப்புகள் தொகுக்கப்படுகின்றனவோ அந்தப் படைப்புகளில் ஏதாவது பிழை ஏற்பட்டால் அது வரலாற்றுப் பிழையாகிவிடும். அதனால், கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகளைத் தொகுக்கின்ற பணியை பேராசிரியர் வீ.அரசுவிடம் ஒப்படைத்ததாக இந்நூலில் முகப்புரை எழுதிய இரா.முத்தரசன் குறிப்பிட்டிருக்கிறதன் வழி வீ.அரசுவின் பணி எத்தகையது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

நூலின் பொருளடக்கத்தில் முகப்புரையைத் தொடர்ந்து பதிப்பாசிரியரின் எண்ண ஓட்டங்கள் எழுத்துகளாக “தோழர் தமிழ்ஒளி எனது பயணம்” என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1979இல் தொடங்கி இன்றுவரை தமிழ்ஒளியின் ஆக்கங்கள் மீது கொண்ட தேடல் இப்பதிவில் வெளிப்படுகிறது.

தோழர் தமிழ்ஒளி சிறார் பாடல்கள்-கதைகள் என்னும் தொகுப்பு நூல் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. சிறார் இலக்கிய உருவாக்க மரபு, நவீன எழுத்தாளர்களிடத்தில் பரவலாக இருந்து வருகிறது. அந்த வடிவத்தைத் தமிழ்ஒளியும் பின்பற்றி எழுதியிருப்பது சிறப்பானதாக அமைகிறது. இதனால்தான் “மார்க்சியத் தத்துவத்தின் மீது ஈடுபாடு கொண்டு செயல்பட்ட ம.சிங்காரவேலர், ப.ஜீவானந்தம் ஆகிய தமிழ்நாட்டு மனிதர்களின் வரிசையில் விதந்து பேசப்பட வேண்டிய மற்றொரு கவிஞர் தமிழ்ஒளி என அறியப்படும் தோழர் தமிழ்ஒளி ஆவார்” என இந்நூலில் இவரைப் புகழ்ந்து பேசுகிறார் பேராசிரியர் வீ.அரசு.

தமிழ்ஒளி குழந்தைகளுக்காக எழுதிய இந்நூலின் பாடல்கள் குழந்தைகளைப் பாடத் தூண்டுகின்றன. மேலும் இவை அறிவுப் பாடல்களாக, அழகுப் பாடல்களாக, ஆனந்தப் பாடல்களாக அமைந்துள்ளன. பௌத்த மரபின் மீது இவர் கொண்ட ஈடுபாட்டை இந்நூலில் காணமுடிகிறது. கவிதையின் ஆணிவேரே குழந்தை உள்ளந்தான். குழந்தைகளின் மாசற்ற உள்ளத்திலே பிறக்கும் வியப்பு, ஆர்வம், ஆனந்தம், ஆத்திரம், கற்பனை, பொய், அறியாச்சொல் ஆகிவையெல்லாம் இணைந்த திரள்தான் இவரது கவிதையின் உயிர்கருவாக அமைகிறது. “ஒருவகையில் கவிஞன் ஒரு குழந்தை. அறிவும் அனுபவமும் முதிர்ந்த குழந்தை. கவிஞர் தமிழ்ஒளி இத்தகைய குழந்தை; சிறந்த கவிஞர்” என தமிழ்ஒளி அவர்களின் முதல் சிறார் இலக்கியத்தை தி.ஜ.ரங்கநாதன் கூறுவதிலிருந்தும் கவிஞரின் குழந்தை உள்ளத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

ஆரம்பகாலத்தில் தமிழ்ஒளியின் சிறார் இலக்கியங்கள் முறையான வெளியீடாக இல்லாமல் துண்டு துண்டு ஏடுகளாகவே வெளிவந்துள்ளன. இவரின் இத்தகு படைப்புகள் வெளியீடு குறித்து அவரே பதிவு செய்துள்ளார். “சென்னை தியாகராய நகரிலுள்ள ஒரு பதிப்பகம் என் நூறு குட்டிக்கதைகளை வெளியிட முன்வந்து என்னிடமிருந்து கையெழுத்துப் பிரதியைப் பெற்றுக் கொண்ட பின் நேரிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ள மறுத்தது. என் விருப்பத்திற்கு மாறான நிலையில் என் நூலைப் பயன்படுத்தக் கருதியும் செய்த சூழ்ச்சியை நான் நேரில் கண்டறிந்தேன்" என அவரே கூறியிருக்கிறார். இக்குறையை நீக்கும் விதமாகவே பேராசிரியர் வீ.அரசு அவர்களின் சீரிய முயற்சியால் தொகுக்கப்பட்டு நியூ செஞ்சுரி புக் நிறுவனத்தால் தோழர் தமிழ்ஒளி என்ற தலைப்பில் ஆறு தொகுதிகளாக 2025 இல் வெளிவந்துள்ளது.

சாதாரணமாக நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளைப் பாடல்களாகவும் கதைகளாகவும் சிறார்களுக்கு உருவாக்கியுள்ளார். இந்நூலில் இடம்பெற்றிருக்கும் சொற்கள், சொற்கட்டுகள், இசைலயம், சொல்லும் முறை, ஒலிகள் ஆகியவை அனைத்தும் தனித்துவம் மிக்கவையாக அமைகின்றன. சிறார்களுக்கான ஆக்கங்கள் என்பவை வானம், நிலா, மழை, நட்சத்திரம், இடி போன்ற இயற்கை நிகழ்வுகளைச் சுவைபட பேசுபவை. விலங்குகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள் குறித்துப் பேசுபவை. நவீன கண்டுபிடிப்புகளை வினோதங்களாக எண்ணி புனைவுகளாக்கப்படுபவை. இதனையே தமிழ் ஒளியும் செய்திருக்கிறார்.

சிறார் பாடல்களிலே கிளி, பட்டுப்பூச்சி, மயில், அணில், நத்தை, சிட்டு, நாய், சேவல், சிட்டுக்குருவி, கரிக்குருவி, மான், பூனை போன்ற பறவைகள், பூச்சிகள், விலங்குகள் பேசப்பட்டுள்ளன.

கதை கேட்கும் பழக்கம் தொன்றுதொட்டுக் காணப்படும் முறையாகும். குழந்தையைத் தூங்க வைக்க, சோறூட்ட என அனைத்து நிகழ்வுகளிலும் கதை கூறுதல் பண்பு காணப்படுகிறது. பாட்டி வடை சுட்ட கதை பல தலைமுறைகளைக் தாண்டி கர்ண பரம்பரையாக இன்று வரை கூறப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் சிந்தித்த தோழர் தமிழ்ஒளி சிறார் ஆக்கங்களில் நான்காவதாக நூறு குட்டிக் கதைகளை இந்நூலில் கூறியிருக்கிறார். கதை ஒவ்வொன்றும் அறிவூட்டும் அற்புதமாக அமைகிறது. யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. “பாடுவோன் தன் நிலையை உணர வேண்டும். கேட்பவர்கள் சிந்திக்க வேண்டும்” என்ற நிலையில் கதைகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் அறிவைத் துண்டும் வகையில் எளிதில் படிக்கக்கூடிய குட்டிக்கதைகளாக அமைந்துள்ளன. அவை டால்ஸ்டாயின் குட்டிக்கதைகளுக்கு இணையானவையாக உள்ளன.

குட்டிக் கதைகளுக்கு ஒரு மரபு உண்டு. பாரதி, மாதவையா, அண்ணா, கலைஞர், கண்ணதாசன் போன்றோர் எழுதிய குட்டிக்கதைகளிலிருந்து கவிஞர் தமிழ் ஒளியின் குட்டிக் கதைகள் தனித்துவமும், நுட்பமும் வாய்ந்தவையாக உள்ளன. அவை அறிவூட்டல், மகிழ்வூட்டல் என்ற இரண்டு நோக்கங்களையும் கொண்டுள்ளன. மிகுந்த கற்பனை நயத்துடனும், இனிமையான நடையிலும் அமைந்துள்ளன. திருந்துமுன் திருந்துங்கள். எத்தனை அற்புதமான வரிகள். ஐந்தே வரிகளில் வாழ்க்கைத் தத்துவத்தை ஆழமாக எடுத்துரைத்த கதை. மக்களின் மூட நம்பிக்கையை எடுத்துக் கூறும் பேய் விரட்டு கதை. பழுப்போலையைப் பார்த்துக் குருத்தோலை சிரித்த கதை என மனித வாழ்வின் நிலையாமையை, தத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைகிறது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் நியதி ஒன்றைக் கூறிச் செல்கிறார். சில இடங்களில் உண்மையை அப்பட்டமாக எடுத்துரைக்கிறார்.

பாடல் வடிவத்திலோ கதை வடிவத்திலோ உரைநடை வடிவத்திலோ அமையாத சில படைப்புகள் உண்டு. அவை கதை, உரைநடை இரண்டும் கலந்த ஒரு புனைவு இலக்கியமாகும். இது கதை என்ற புனைவாகவோ அல்லது செய்தியைச் சொல்லும் புனைவாகவோ இல்லாமல் இவையிரண்டும் கலந்த புனைவு என்று கருதப்படுகிறது. அவற்றை அல்புனைவுகள் என்று அழைக்கின்றனர். இதனடிப்படையில் தமிழ்ஒளி அவர்கள் எழுதிய இரண்டு புனைவுகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒன்று சோவியத் யூனியன் ஸ்புட்னிக் என்ற விண்கலத்தை ஏவி சந்திர மண்டலத்தில் நிலைநிறுத்தியதை வரவேற்று கவிஞர் படைத்த உருவகக் கதை. மற்றொன்று, உலகத்தை வயிறு குலுங்க சிரிக்க வைத்து, அந்தச் சிரிப்பால் நாஜிஸ் பயங்கரத்தைத் தலைகுனியச் செய்த சார்லி சாப்ளின் படம். ஹிட்லரைக் கேலி செய்வதற்காக அவர் தயாரித்த சர்வாதிகாரி படம். இரண்டும் சிறப்பு வாய்ந்தவையாக அமைகின்றன.

நூலின் இறுதியில் மூன்று இணைப்புகள் காணப்படுகின்றன. அதில் முதல் இணைப்பில் தோழர் தமிழ் ஒளியின் முதல் பதிப்பு நூல் பட்டியல் இடம்பெற்றிருக்கிறது. அவை ஆண்டு வாரியாக கவிதை, காவியம், சிறார் ஆக்கங்கள், புனைவுகள், தன் வரலாறு ஆய்வுகள், தமிழ் ஒளியின் கிடைக்காத நூல்கள் என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இணைப்பு இரண்டில் தோழர் தமிழ் ஒளியின் வாழ்க்கைக் குறிப்புகள் (1925-1965) சமகாலப் பதிவுகளாக அவரது இளமைக்காலம் தொட்டு சுதந்திரமான எழுத்தாளராக வாழ்ந்த காலம் வரை பதிவு செய்யப்பட்டு உள்ளன. இணைப்பு மூன்றில் தமிழ் ஒளியின் பாடு பாப்பா நூலுக்கு தி.ஜ.ர. எழுதிய முன்னுரை தரப்பட்டுள்ளது.

பேராசிரியர் வீ.அரசு கூறுவதைப் போன்று பாரதி, பாரதிதாசன் எனும் தமிழ்க் கவிதை மரபின் தமிழ்ஒளி வரிசையாக மட்டும் அமையவில்லை. அவர் சிறந்த சிறார் ஆக்கங்களை உருவாக்கிய படைப்பாளி என்பதையும் இந்நூல் தெளிவுப்படுத்துகிறது.

மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்பட வேண்டும் என்பதுதான் தமிழ்ஒளியின் கொள்கை. ஒரு கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள் என்ற அவரின் கூற்றை தோழர் தமிழ்ஒளி சிறார் பாடல்கள்-கதைகள் படைப்பு நிரூபணம் செய்து கொண்டிருக்கிறது. மகாகவி பாரதி, புரட்சி கவிஞர் பாரதிதாசன் போன்று தமிழ்நாட்டில் வலுவாகக் காலூன்றிக் கொண்டு இந்தியாவை ஆரத் தழுவி உலகத்தை உற்று நோக்கி படைப்புகளைத் தந்த மகத்தான கவிஞர் தமிழ் ஒளிக்கு இந்தத் தொகுப்புகளின் வழியாக என்றும் அழியாத புகழுக்குரிய சிறப்பினை பேராசிரியர் வீ.அரசு தேடித் தந்திருக்கிறார்.

தமிழ்ஒளியின் பாப்பா பாட்டு ஒன்று புதுயுக நிலையம் பதிப்பகம் வெளியிட்டது. இப்பாடல்கள் மறுபதிப்பும் பெறவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பாடல்கள் “தோழர் தமிழ்ஒளி சிறார் பாடல்கள்-கதைகள் என்ற 352 பக்கங்களில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் சிறார்களுக்கு கருத்து கருவூலமாகத் திகழும், அறிவின் தீபமாய் ஒளிரும், சிந்தனையின் தெளிவிடமாய் மாற்றும். நல்ல நூல்களை நேசிக்கும் வாசகர்களின் எண்ணத்திற்கும் தேடலுக்கும் தீனியாய் இந்த நூல் அமையும்.

- முனைவர் பா.வைடூரியம்மாள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.