“சங்க இலக்கியம்: பாட்டு மரபும் எழுத்து மரபும்” என்ற இந்த நூல், கே.பழனிவேலு அவர்களால் மானுடவியல் பார்வையில் எழுதப்பட்டுள்ளது. மானுடவியல் பல துறைகளை உள்ளடக்கியதாக இருந்தாலும், மனிதர்களின் உடல் அமைப்பையும், குறிப்பாக அவர்களின் பண்பாட்டையும் அதிகமாக ஆய்வு செய்கிறது. இதில் பண்பாட்டு ஆய்வுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

sanga ilakkiyam pattu marapum ezhuthu marapumமானுடவியல் ஒரு தனித்துறை என்றாலும், அதை அணுகப் பல கோட்பாடுகள் உள்ளன. அவற்றில் ஒன்றாக மார்க்சியம் குறிப்பிடத்தக்கது. மானுடவியலை மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகும் முறையே “மார்க்சிய மானுடவியல்” எனப்படுகிறது.

ஆசிரியரின் முன்னுரையில், "சங்கச் சமூகத்தில் பாடல் பாடுவதை மரபாக, வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்த பாணர்கள், எழுத்துகள் பரவலாகி முதன்மை இடத்தைப் பெறுகின்றவரை சமூகத்தின் முக்கியமானவர்களாக இருந்துள்ளனர். அதற்குப் பிறகு அவ்விடத்தைப் புலவர்கள் கைப்பற்றியுள்ளனர்” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த முடிவு மார்க்சிய மானுடவியல் அணுகுமுறையின் அடிப்படையில் உருவானது. ஓர் ஆய்வில் பயன்படுத்தப்படும் கோட்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது.

இந்த நூல் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் மந்திரப் பாடல், பாண்பாடல், இயற்பாடல் ஆகியவை ஆராயப்படுகின்றன. இரண்டாம் பகுதியில் எழுத்தின் பரவலும், பாடல்கள் பதிவு செய்யப்படுவதும் விவாதிக்கப்படுகின்றன.

முதல் மந்திரப் பாடல் பகுதியில் இடம் பெற்றுள்ள கருத்துகளைப் பார்ப்போம்.

நூலின் தொடக்கத்திலேயே, மனிதர்கள் தங்கள் உணவுத் தேவையை நிறைவு செய்ய மேற்கொண்ட முயற்சிகளே சமூக வளர்ச்சிக்கான அடிப்படையாக இருந்தன என்று கூறப்படுகிறது. இங்கு “உணவு” என்று குறிப்பிட்டிருந்தாலும், அது பொதுவாக மனிதர்களின் வாழ்வாதாரத் தேவைகள் அனைத்தையும் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதுவே மார்க்சிய மானுடவியலின் முக்கிய அடிப்படை கருத்தாகும்.

இந்த நூல், சமூகத்தில் பாடல் எப்படி உருவாகி வளர்ச்சி அடைந்தது என்பதை ஆராய்கிறது. அதன்படி, தொல்குடி சமூகங்களில் முதலில் மந்திரப் பாடல்கள் தோன்றின. பின்னர், பழங்குடி அமைப்பு உருவானபோது பாணர்களின் பாடல்கள் முக்கிய இடம்பெற்றன. அதன் பின், பழங்குடி அமைப்பு சிதைந்து, அரசியல் அமைப்பு உருவானபோது புலவர்களின் பாடல்கள் முன்னிலையாகின.

இந்தப் புலவர் பாடல்கள் “இயற்பாடல்” என்ற தலைப்பில் இந்த நூலில் விவாதிக்கப்படுகின்றன.

மனித வரலாறு, அவர்களின் வளர்ச்சி மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பெரிய காலங்களாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று கற்காலம், மற்றொன்று வரலாற்றுக் காலம். கற்காலத்தில் மந்திரப் பாடலும் பாணர் பாடலும் காணப்படுகின்றன. அதற்குப் பிறகு வரலாற்றுக் காலத்தில் புலவர் பாடல்கள் தோன்றுகின்றன.

“Magic” என்று சொல் இந்த நூலில் “மந்திரம்” என்று குறிப்பிடப்படுகிறது. சில நூல்களில் இதை “மாயவித்தை” என்று பயன்படுத்தப் படுகிறது.

ஜார்ஜ் தாம்சன் என்பவர், மந்திரத்தின் அடிப்படைக் கருத்தை விளக்கும்போது, மனிதன் புற உலகை உண்மையில் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதைக் கட்டுப்படுத்துவது போல ஒரு செயலை உருவாக்குகிறான்; அந்தப் போலியான செயல் மூலம் உண்மையையும் கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கையே மாயவித்தையின் அடிப்படை என்று கூறுகிறார். ஆரம்பத்தில் இது வெறும் போலச் செய்தலாகவே இருந்தது என்றும் அவர் விளக்குகிறார். அதாவது, இயற்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் போலச் செய்து காட்டுவதே மாயவித்தை எனலாம்.

மேலும், மதங்களில் கூறப்படும் “மந்திரம்” மற்றும் இங்குக் கூறப்படும் “மந்திரம்” இரண்டும் ஒன்றல்ல. மத மந்திரம் பின்னர் உருவானது; ஆனால் மாயவித்தை அதற்கு முன்பே தோன்றியது. எனவே, இந்த இரண்டிற்கும் குழப்பம் வராமல் இருக்க, இங்கு “மந்திரம்” என்பதை “மாயவித்தை” என்ற சொல்லைப் பயன்படுத்துவது சரியானதாக இருக்கும்.

பழங்குடி மக்கள் இயற்கைச் சக்திகளை உயிருள்ளவையாகக் கருதினர். அவற்றைக் கட்டுப்படுத்தச் சில கட்டளைகள் மற்றும் சடங்குகளைப் பயன்படுத்தினர். இவ்வாறு செயல்பட்டால், அவர்கள் கற்பனை செய்ததை உண்மையில் நிகழ்த்த முடியும் என்று நம்பினர். இந்த நம்பிக்கை மத நம்பிக்கை அல்ல. இது மதம் தோன்றுவதற்கு முன்பிருந்த ஓர் ஆரம்பகால நம்பிக்கையாகும். இயற்கையைக் கட்டுப்படுத்த நினைப்பதும், படைப்புக் கடவுளிடம் வேண்டுவதும் ஒன்றல்ல.

முதற்கட்டத்தில், வெறும் போலச் செய்தல் மட்டுமே இருந்ததால், மந்திரச் சொற்கள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அடுத்த கட்டத்தில், இயற்கைக்குக் கட்டளை இடும் சடங்குகள் உருவானபோதுதான் மாயவித்தை தெளிவான வடிவத்தைப் பெற்றதாக இந்த நூல் கூறுகிறது.

மானுடவியல் அறிஞர்கள் மாயவித்தை இரண்டு விதமாகச் செயல்படுகிறது என்று விளக்குகின்றனர்:

ஒத்த விதி (Law of Similarity): ஒத்தது ஒத்ததை உருவாக்கும் என்ற நம்பிக்கை.

தொத்து விதி (Law of Contact Contagion): ஒருமுறை தொடர்பு கொண்ட பொருட்கள் எப்போதும் தொடர்புடையவையாகவே இருக்கும் என்ற நம்பிக்கை.

பழங்குடிச் சமூகத்தில், மழை தேவையான போது மக்கள் மழை பெய்ய வேண்டும் என்று நினைத்து நடனமாடியும், சொற்களின் மூலம் கட்டளையிட்டும் செயல்பட்டனர். இதுவே மாயவித்தையின் நிகழ்முறை.

சங்க இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் உள்ளன. மழை பெய்ய வேண்டிக் குன்றக் குறவர்கள் செய்த மந்திரச் சடங்குகள் குறிப்பிடப்படுகின்றன. அதேபோல், தேவையில்லாத போது மழையை நிறுத்தவும் மந்திரம் கூறியதாகவும் காணப்படுகிறது. மேலும், முருக வழிபாட்டில் இடம்பெறும் “வேலன் வெறியாட்டம்” என்பதும் மாயவித்தையின் ஒரு வளர்ச்சி நிலையாகக் கருதப்படுகிறது.

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மாயவித்தையையும் மதத்தையும் ஒன்றாகக் கருதக் கூடாது என்பதாகும். அந்தக் காலத்தில் உற்பத்தி திறன் குறைவாகவும், தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாமலும் மனிதர்கள் தங்களின் தேவைகளை நிறைவு செய்ய மாயவித்தையை ஒரு முறையாகப் பயன்படுத்தினர்.

அடுத்து, இந்த நூல் பாணர்களின் பாடல்களைப் பற்றி பேசுகிறது. சங்க இலக்கியத்தில் பாணர்கள் குறித்துப் பல தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், அவர்கள் நேரடியாகப் பாடிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக, புலவர்கள் எழுதிய பாடல்களிலேயே பாணர்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இதனால், பாணர்களின் வாழ்க்கை மற்றும் மரபைப் பற்றி நாம் அறிய வேண்டியது, அந்தச் சான்றுகளின் அடிப்படையில்தான். சங்க இலக்கியத்தில், பாணர் மரபின் எச்சங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன.

பழங்குடி சமூகத்தில், பாட்டுப் பாடுபவர்கள், அதற்கேற்ப ஆடும் கலைஞர்கள், மற்றும் கூத்து நிகழ்த்துபவர்கள் ஆகிய அனைவரையும் சேர்த்தே “பாணர்கள்” என்று அழைத்தனர். பாணர்கள் ஒரே இடத்தில் நிலையாக வாழவில்லை. அவர்கள் அரை நாடோடிகளாகச் சுற்றித் திரிந்து வாழ்ந்தனர். எதையும் சேமித்து வைத்துக் கொள்ளாமல், தங்கள் சுற்றத்தாருடன் பகிர்ந்து வாழ்ந்தனர். ஆனால், இந்த வாழ்க்கை முறை நாகரிக வளர்ச்சி ஏற்பட்ட வரலாற்றுக் காலத்தில் தொடர முடியாமல் போனது. அதன் விளைவாக, பாணர்கள் வறுமையில் சிக்கி, மெதுவாக அழிவை நோக்கிச் சென்றனர் என்பதையும் இந்த நூல் தெளிவாக விளக்குகிறது.

“பாணர்கள் இனக்குழு நிலையில் வாழ்ந்தவர்கள். இனக் குழுக்கள் அழிந்து பேரரசின் உருவாக்கம் நிகழ்ந்த போது, பாணர் மரபு அரசர்களைச் சார்த்திப் பேசப் பெற்றது. பேரரசு தோன்றிய காலக்கட்டம் எழுத்து தோன்றி நிலைபெற்றுவிட்ட காலக்கட்டமாகும். எழுத்து தோன்றிய நிலையில் அரசினைச் சார்ந்து எழுத்தை அறிந்த புலவர்கள் இயங்கினர். இவர்கள் புதிய புதிய பாடல்களை இயற்றினர். இங்குப் பாணர்கள் பேரரசுக்குத் தேவையாக இருக்கவில்லை. மாறாக, பாணர்களின் பணியை எழுத்தினைக் கற்ற புலவர்கள் செய்தனர். பேரரசு உருவாக்கத்தின் போது, பாணர்கள் மரபு அழிந்து அவர்களின் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருந்தன.” (47)

பாணர்களையும் புலவர்களையும் இவ்வளவு தெளிவாகப் பிரித்துக் காட்ட முடிந்ததற்குக் காரணம், இந்த நூலாசிரியர் பயன்படுத்திய மார்க்சிய மானுடவியல் அணுகுமுறையே ஆகும்.

முதல் பகுதியின் மூன்றாவது பிரிவு “இயற்பாடல்” எனப்படுகிறது. இதில் புலவர்களின் தோற்றமும் வளர்ச்சியும், பாணர்களின் வீழ்ச்சியும் பல கோணங்களில் விளக்கப்படுகின்றன.

இந்தப் பகுதியில், இயற்பாடலும் புலவர்களும், புலவர்களின் இயல்புகள், கிழார் புலவர்கள், புலவரும் பாணரும் உள்ள தொடர்பு, மொழிப் புலமை மற்றும் புதிய பாடல்கள், புலவர்களின் சார்பு நிலை, பாணர்–புலவர் மாற்றம், இயற்பாடலும் பாண்பாடல் பதிவும் போன்ற தலைப்புகளில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்தப் பகுதி புலவர்கள் எவ்வாறு சமூகத்தில் முக்கிய இடம்பெற்றனர் என்பதையும், அதே நேரத்தில் பாணர்கள் எவ்வாறு பின்னுக்குத் தள்ளப்பட்டனர் என்பதையும் தெளிவாக விளக்குகிறது.

“இயற்பாடல்” என்றால் புதியதாக இயற்றப்பட்ட பாடல் என்று பொருள். இந்தப் புலவர்களின் பாடல்கள் எழுத்தறிவுடன் தொடர்புடையவை என்பதை இந்த நூல் தெளிவாகக் காட்டுகிறது.

பாணர்கள் பொதுவாக உடனுக்குடன் பாடலை உருவாக்கிப் பாடுவார்கள். ஒரே பாடலை வேறு இடங்களில் சிறிய மாற்றங்களுடன் மீண்டும் பாடுவார்கள். புலவர்களின் பாடல்கள் அவ்விடத்தில் பாடியவையாகும்.

புலவர்கள் வேளிர்களிடமும் சென்று பாடியிருந்தாலும், அவர்கள் அதிகமாக அரசர்களை நாடினர். ஆனால் பாணர்கள், அரசர்களைவிட வேளிர் தலைவர்களையே அதிகமாகச் சார்ந்திருந்தனர். வேளிர்களின் வீழ்ச்சியுடன் பாணர்களும் மெதுவாக மறைந்தனர். அதே சமயம், அரசர்களின் எழுச்சியுடன் புலவர்கள் முக்கிய இடத்தைப் பெற்றனர்.

புலவர்கள் பாணர் மரபின் தொடர்ச்சியாக இருந்தாலும், அவர்கள் தனித்துவமான வளர்ச்சியை அடைந்தவர்கள். பாணர்களிடம் எழுத்து மரபு இல்லை; ஆனால் புலவர்களிடம் எழுத்து மரபு தொடங்கியது. பாணர்களைப் போலவே, புலவர்களும் இசைக் கருவிகளைப் பயன்படுத்திப் பாடினர். மேலும் புலவர்கள், அமைச்சர்களைப் போல மன்னர்களுக்கு அறிவுரை கூறும் நிலைக்கும் உயர்ந்தனர் என்பதைச் சங்க இலக்கியப் பாடல்கள் காட்டுகின்றன.

பாணர்கள் பெரும்பாலும் இனக்குழுத் தலைவர்களான வேளிர்களையே சார்ந்திருந்தனர்; மன்னர்களிடம் குறைவாகச் சென்றனர். புலவர்கள் மன்னர்களையும், வேளிர்களையும் நாடினாலும், அவர்களின் முக்கியச் சார்பு மன்னர்களிடமே இருந்தது.

பாணர்களின் கலை “நிகழ்த்துக்கலை” ஆகும். அதாவது, நேரடியாகப் பார்வையாளர்களின் முன் நிகழ்த்தப்படும் கலை. இது எழுதிப் பதிவு செய்யப்படவில்லை; அப்போது எழுத்து பரவலாகவும் இல்லை. ஆனால் புலவர்கள் தோன்றிய காலத்தில் எழுத்து வளர்ச்சி பெற்றிருந்தது. அதனால், புலவர்கள் தங்கள் பாடல்களை வாய்வழியாகவும், எழுத்து வடிவிலும் பதிவு செய்தனர். இந்தப் பதிவுச் செயல்முறையின் போது, பாணர் மரபின் சில எச்சங்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்த நூலின் இரண்டாம் பகுதி, எழுத்து எவ்வாறு பரவியது மற்றும் பாடல்கள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டன என்பதைக் குறித்து விவரிக்கிறது.

தொடக்கத்தில் “எழுத்து” என்பது ஓவிய வடிவத்தையே குறித்தது. பின்னர், வரி வடிவில் எழுதப்படுவது எழுத்தாகக் கூறப்பட்டது. சங்க இலக்கியத்தில், நடுகற்களில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்ததை அகநானூறு பாடல்களைச் சான்றாக வைத்து நிறுவுகிறது.

எழுத்து முதலில் வணிக வளர்ச்சியுடன் தொடர்புடையதாக உருவானதாகக் கருதப்படுகிறது. வணிகம் வளர்ந்தபோது, எழுத்தும் பரவியது. சங்க இலக்கியமும் வணிக வளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் தோன்றியதால், அதில் எழுத்து பற்றிய குறிப்புகள் காணப்படுவது இயல்பானதாகும்.

சங்கக் கால நாணயங்களிலும், நடுகற்களிலும் உள்ள எழுத்துகளை இன்றும் காண முடிகிறது. சங்க இலக்கியத்தில், எழுத்துகள் இல்லாத நடுகற்களைக் பற்றிய குறிப்புகளும், எழுத்துகள் பொறிக்கப்பட்ட நடுகற்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. எழுத்துகள் இல்லாத நடுகற்கள் பழங்குடி காலத்தைச் சேர்ந்தவையாகவும், எழுத்துகளுடன் காணப்படும் நடுகற்கள் பின்னர் அரசியல் அமைப்பு தோன்றிய காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன.

தேனி மாவட்டத்தில் உள்ள புலிமான் கோம்பையில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்கள் கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அதில் தமிழி எழுத்தில் “கூடலூர் ஆகோள் பெடுதீயன் அந்தவன் கல்” என்று எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள், கூடலூரில் நடந்த ஆநிரை கவர்தலில் உயிர்நீத்த அந்துவனுக்கான நினைவுக்கல் என்பதாகும்.

அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துகளும் கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. க.ராஜன் அவர்களின் கருத்துப்படி, கி.மு. 1000 ஆண்டுகளிலேயே தமிழர்கள் ஒரு வகையான எழுத்து முறையைப் பயன்படுத்தியிருந்தனர் என்று இந்த நூல் பதிவு செய்கிறது.

மொத்தத்தில், எழுத்தின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் இந்த நூலில் தெளிவாகவும் சிறப்பாகவும் விளக்கப்பட்டுள்ளன.

“இலக்கியப் பதிவிற்கு எழுத்து வடிவம் இன்றியமையாதது ஆகும். இனக்குழுச் சமூகத்தில் வாழ்ந்தவர்களுக்கு எழுத்து வடிவம் இன்றியமையாததாக இருக்கவில்லை. அரசமைப்பின் வளர்ச்சியே எழுத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்துள்ளது. அரசப் பணியாளர்களின் தேவை, வணிகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி போன்றன எழுத்தின் வளர்ச்சிக்குத் துணைநின்றன. இதனால் பேரரசுடன் சார்ந்து எழுத்துமுறை நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

மொழி உழைப்புப் போக்கில் பரிணமித்து அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பொதுவானதாக இருந்ததைப் போன்று, எழுத்தும் அரச, வணிகத் தேவைகளுக்காகத் தோன்றி. மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் பொதுவாகியது.” (பக்.151)

கே. பழனிவேலு எழுதிய “சங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும்” என்ற இந்த நூல், சங்க இலக்கியத்தில் காணப்படும் எழுத்து, பாடல், கல்வி போன்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, சங்கக் காலச் சமூகத்தை மார்க்சிய மானுடவியல் பார்வையில் ஆராய்கிறது. நூலில் “மார்க்சிய மானுடவியல்” என்று நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், அதன் அணுகுமுறை மற்றும் விளக்கங்களின் மூலம், இது மார்க்சியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மானுடவியல் ஆய்வு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நா.வானமாமலை அவர்களின் காலத்தில், மார்க்சிய மானுடவியல் அடிப்படையில் பல ஆய்வுகள் மற்றும் நூல்கள் வெளிவந்தன. ஆனால் பின்னர் அந்தத் தொடர்ச்சி குறைந்துவிட்டது. அந்தக் குறையை நிரப்பும் வகையில் இந்நூல் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நூல் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இன்றைக்கு மானுடவியல் கல்வி துறை விரிவடைந்து வரும் நிலையில், மார்க்சிய மானுடவியல் பார்வையில் மேலும் பல நூல்கள் வெளிவர வேண்டும். இதற்காக என்.சி.பி.எச். போன்ற பதிப்பகங்கள் தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பாணர்களின் வாழ்க்கையைப் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் பாணர் மரபும், புலவர்களின் தோற்றமும் குறித்து இந்நூல் செய்துள்ள அளவிலான ஆழமான ஆய்வு மற்ற நூல்களில் அரிதாகவே காணப்படுகிறது. மார்க்சிய மானுடவியல் அடிப்படையில் ஆய்வு நூல்கள் வெளிவர வேண்டும். அத்தகைய நூல்கள் கல்விப் புலத்தில் பார்வை நூலாக வைக்கும் அளவுக்குச் சிறப்பிடம் பெற வேண்டும்.

- அ.கா.ஈஸ்வரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.