கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி நடந்துகொண்டிருக்கிறது - இல்லை சப்தமில்லாமல் முடிந்து விட்டது.

ஆஸ்திரேலிய ஊடகங்கள் அவர்களது அணியின் வெற்றியைக் கொண்டாடின. அதில் வியப்பேதும் இல்லை. பெரும்பாலான ஊடகங்கள், விளையாட்டுகள் குறித்து எழுதும், பேசும் ஊடகத்தினர் அனைவருமே அந்த ‘சப்தம்’ மற்றும் ‘சைலன்ஸ்’ குறித்து குறிப்பிடத் தவறவில்லை.

ஆஸ்திரேலிய பிரதமர் இறுதிப் போட்டிக்கு வரவும் இல்லை. வெற்றியைப் பெரிதாகக் கொண்டாடி மார் தட்டியதாகவும் செய்தி இல்லை. இந்தியாவில் அமெரிக்கா முன்னகர்த்தும் ’சீன எதிர்ப்பு’ நால்வர் கூட்டணியின் - அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா - ராணுவ விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சரும் உதவிப் பிரதமருமான ரிச்சர்ட் மார்லெஸ் (Richard Marles) இறுதிப் போட்டியைக் கண்டு களித்தார். அடுத்த நாள் அது குறித்துக் கேட்டபோதும் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சப்தம், சைலன்ஸ் குறித்து அவரும் குறிப்பிடத் தவறவில்லை.

‘எங்கள் நாடு அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவு கொண்டதுதான்; ஆனால் நியூயார்க்கில் வாஷிங்டனில் ஒரு வாடகைக் கார் ஓட்டுநரோடு நான் கிரிக்கெட் பற்றிப் பேச முடியாது; ஆனால் டெல்லியில் ஒரு ஓட்டுநர் என்னோடு ஆக்ரோஷமாகக் கிரிக்கெட் குறித்து விவாதிக்க முடியும்.’ என கிரிக்கெட் விளையாட்டு எப்படி இரு நாட்டு மக்களையும் பொது ஆர்வம் கொண்டவர்களாக இணைக்க முடிகின்றது என பாராட்டப்பட வேண்டிய விதத்தில் குறிப்பிடவும் செய்தார். ஆனால் அத்தோடு நிறுத்தாமல் இப்படியெல்லாம் பொதுவான விசயங்கள் உள்ள இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ராணுவரீதியாகவும் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டுமாக்கும்... என ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே எனத் தனது சிற்றுரையை முடித்துக் கொண்டார்.

அடுத்த நாள் கிரிக்கெட் பற்றி ஆஸ்திரேலிய ஊடகங்களில் பெரிதாக செய்தி ஏதுமில்லை. அதிலும் வியப்பேதுமில்லை. இது அவர்களுக்கு ஆறாவது கோப்பை; உலகின் மற்ற எல்லா நாடுகளும் சேர்ந்தே இதுவரை ஏழு முறைதான் உலகக் கோப்பையை வென்றுள்ளனர். இரண்டரை கோடி பேரே வாழும் ஆஸ்திரேலியா, வேறு பல துறைகளிலும் போல விளையாட்டுத் துறையிலும் முக்கியமான ஆளுமை. கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஹாக்கி, ரக்பி, கால்பந்து, டென்னிஸ் எனப் பல விளையாட்டுகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று முன்னணியில் உள்ள நாடு.

அவர்களுக்குப் பதிலாக இந்திய அணி வென்றிருந்தால் இன்றைக்கு நாடு முடிவற்ற மார்தட்டலிலும் வெற்றிக் கூச்சலிலும் அமிழ்ந்திருக்கும். ‘ஃபாசிஸ ஹிட்லரின் கூலிப் படைகளை பனிமலை மீதினில் வென்றவர்கள்’ அன்றைய சோவியத்தில் கொண்டாடியதைக் காட்டிலும் அதிகம் கொண்டாடியிருப்பர். பேட்ஸ்மேன் காஸ்ட்யூமில் ஒருவரும் விக்கெட்கீப்பர் காஸ்ட்யூமில் ஒருவருமாய் வாக்குக் கேட்கும் சுவரொட்டிகள் வந்திருக்கும்.

இறுதிப் போட்டி அது நடந்திருக்க வேண்டிய மும்பை வான்கடே அரங்கிலிருந்து அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டது, இதுவரை இந்தியாவிற்கு வெற்றிக் கோப்பையைப் பெற்று வந்த அணித் தலைவர்களான கபில்தேவ், தோனி ஆகியோர் இறுதிப் போட்டி நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாதது எல்லாம் கணக்குகளோடுதான் நடந்துள்ளதாகத் தெரிகின்றது. மற்றவர்கள் வந்ததையும் இருப்பதையும் ’சைலன்ஸ்’ மூலம் எதிர்கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள், கபில்தேவும் தோனியும் நுழையும்போது அரங்கம் முழுவதும் எழுந்து நின்று ‘சப்தம்’ எழுப்பினால் என்ன ஆவது? என்ற கவலை இருந்திருக்கும்.

கலைகளும் உடல் திறன் விளையாட்டுகளும் மானுடரிடையே உறவுகளையும் நட்பையும் பலப்படுத்த வேண்டும். பலப்படுத்த இயலும். ஆனால் அதற்கு நேரெதிராகப் பயன்படுத்தப்படுவதும் காலங்காலமாக நடந்து வந்துள்ளது. 1936 பெர்லின் ஒலிம்பிக் பந்தயங்களை தனது ஆரிய மேட்டிமைக் கோட்பாடுகளின் வெளிப்பாடாகக் காட்ட ஹிட்லர் முயற்சித்தார். ஆனால் ஆஃப்ரோ அமெரிக்க கருப்பின வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் 4 முக்கியமான தங்கப் பதக்கங்களை வென்றார். ஹிட்லரும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போக வேண்டியிருந்தது. நிறவெறி கொண்ட ஆப்பார்த்தியேட் தென்னாப்பிரிக்கா விளையாட்டுப் போட்டிகளை தனது ஆதிக்க அரசியலுக்கான அங்கீகாரமாக ஆக்க முயன்றபோது உலக நாடுகள் அதனோடு போட்டிகளில் ஈடுபடாது புறக்கணித்தன. இந்தியா 1974-ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அமிர்தராஜ் சகோதரர்கள் தமது உச்சத்தில் இருந்தனர். இறுதிப் போட்டியில் நிறவெறி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள வேண்டும் எனும் நிலை வந்தது. விளையாடினால் அன்றைக்கு வெற்றி நிச்சயம். ஆனாலும் அன்றைய இந்திராகாந்தி அரசு இறுதிப் போட்டியை புறக்கணித்தது.

சில ஆண்டுகள் முன்பு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் இலங்கை வீரர்கள் பங்குபெறும் போட்டிகளை நிறுத்துவது என்று சில இயக்கங்கள், குழுக்கள் முயற்சித்தனர். அது அரசியல் ரீதியாக சரியா தவறா என்பது வேறு விசயம். இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்ரானா, தீக்ஷனா ஆகிய இலங்கை வீரர்கள் விளையாடுகின்றனர் என்பதோடு தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ‘செல்லப் பிள்ளை’களாகவும் ஆகியுள்ளனர். ’விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமாக்கும்; தமிழர்கள் அதீதமாக உணர்ச்சி வசப்படுபவர்களாக நாசுக்கு நாகரிகம் அற்றவர்களாக இருக்கிறார்களாக்கும்’ என்றெல்லாம் வட இந்திய ‘தேசிய’ ஊடகங்கள் பிதற்றின. இதுவரையிலான 16 ஐபிஎல் போட்டிகளில் 15 போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இந்த ஊடகங்கள் அது ஒரு செய்தியே இல்லை என்று பம்மாத்து செய்கின்றன. இந்திய-பாகிஸ்தான் போட்டிகளில் ’ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்கள் ஒலித்தன. இறுதிப் போட்டியில் கபில் தேவ், தோனி போல ஸ்ரீராமனுக்கும் இடமளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு நமது வாழ்த்துகள். இறுதிப் போட்டியில் வெற்றிபெறவில்லை என்றாலும் தொடர்ந்து 10 போட்டிகளில் அபாரமான ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கும் நமது பாராட்டுகள். விளையாட்டு ரசிகர்களும் ஏனைய இந்திய மக்களும் விளையாட்டுகள் குறுகிய வெறிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை கொள்ள வேண்டும் எனக் கூறுவது நமது கடமை.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Pin It