ஒரே நாடு – ஒரே தேர்தல், ஒரே நாடு – ஒரே சட்டம், ஒரே நாடு – ஒரே ரேசன் அட்டை என்று மோடி அரசு கொண்டு வந்த திட்டங்களில் புதியதாக இப்போது ஒரே நாடு – ஒரே அரிசி என்கிற திட்டமும் சேர்ந்திருக்கிறது. இந்திய ஒன்றியத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மக்களின் உணவுப் பழக்கம் மாறுபடும். ஒவ்வொரு மனித உடலின் வேறுபாட்டைப் பொறுத்தே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். உணவே மருந்து என்று வாழ்ந்த நம் வாழ்வியலில், ஒரே உணவு அதுவே மருந்து என்று கொண்டு வந்த திட்டமே இந்த செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம். 140 கோடி மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் அனைவருக்கும் ஒரே மருந்து என்பது சாத்தியமாகாத ஒன்று.பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஏற்படும் இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வகையான நுண்ணூட்டச் சத்துக்களை அனைவருக்கும் எளிய முறையில் வழங்க கொண்டு வரப்படும் திட்டமாக செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இரத்த சோகை மற்றும் பிற ஊட்டச்சத்து குறைபாடுடைய நோய்களை எதிர்த்துப் போராட, 80 கோடி மக்களுக்கும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த அரிசியை வழங்குவதாக 2021-ல் சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தை சோதிக்கும் போது பல தோல்விகள் ஏற்பட்டன. ஆனால் இந்த சோதனையை நிராகரித்தது மோடி அரசாங்கம். இந்திய நிதி அமைச்சகமே எச்சரித்த போதும் அரசாங்கம் ஏற்று கொண்டதாகத் தெரியவில்லை. இந்திய ஒன்றியத்தின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்த செறிவூட்டும் அரிசி திட்டம் குழந்தைகள் மீது தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்தது. ஆனால் அதையும் மீறி இத்திட்டம் அறிவித்த இரண்டு மாதத்திலேயே நடைமுறைக்கு வந்தது.
ஊட்டச்சத்து குறைபாடு
ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஒரு உடலில் அதிகப்படியான ஊட்டச்சத்து இருப்பதையும் குறிக்கும், போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாததையும் குறிக்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டையும் குறிக்கும் பொதுச் சொல்லாகும். இந்திய ஒன்றியத்தைப் போன்ற வளரும் நாடுகளில் புரதச்சத்து குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. தெற்காசியாவில் இரண்டில் ஒரு பங்கு மக்கள் ஆரோக்கியமான சுறுசுறுப்பான வாழ்க்கையை நடத்த போதுமான உடல் திடம் இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அரிசி உட்கொள்ளும் 34 நாடுகளுக்காக தொகுக்கப்பட்ட ஊட்டச்சத்து குறிகாட்டியின்படி, மற்ற நாடுகளை விட வளரும் நாடுகளில் (UNICEF 1991), ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு, மற்றும் குழந்தைகளின் எடை குறைவு போன்றவை கணிசமாக உள்ளது. இந்தியாவில் 65% மக்களுக்கு அரிசிதான் முக்கிய உணவு என்பது குறிப்பிடத்தக்கது.
செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன ?
பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு அத்தியாவசிய சத்துக்களை தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களால் அரிசியின் “மேற்பூசுதல், தெளித்தல் மற்றும் பிரித்தெடுத்தல்” போன்றவை மூலமாக சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு சத்துக்களால் அரிசியை செறிவூட்டுவதே செறிவூட்டப்பட்ட அரிசியாகும். உலகெங்கும் பல வழிகளில் செறிவூட்டப்பட்ட அரிசிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் அரிசியின் மேல் தேவையான சத்துகளைப் பூசிச் செறிவூட்டினார்கள். ஆனால், அத்தகைய அரிசியை தண்ணீரில் கழுவினாலோ அல்லது ஊற வைத்தாலோ செறிவூட்டிய சத்துகள் நீங்கி விடும். அரிசியுடன் தேவையான சத்துக்களைச் சேர்த்து அதை மாவாக்கி, மீண்டும் அதனை அரிசியைப் போலவே செய்வது தான் தற்போது வினியோகிக்கப்படுகின்றன. இது பார்ப்பதற்கு சாதாரண அரிசியைப் போலவே இருக்கும். 100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி என்ற விகிதத்தில் கலந்து வழங்கி வருகிறார்கள்.
ஒரு உணவுப் பொருளை செறிவூட்டுவதற்கு பல அளவுகோல்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த உணவு எல்லோருக்கும் கிடைக்கும் அளவுக்கு மலிவானதாக இருக்க வேண்டும், ஆண்டு முழுவதும் கிடைக்கவேண்டும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாத்தியமாக வேண்டும்.
தர நிர்ணயம், சோதனை முறைகள்
இந்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசியை 1 கிலோ வழக்கமான அரிசியுடன் கலக்க வேண்டும். 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து 28 mg-42.5 மில்லி கிராம், ஃபோலிக் அமிலம் 75-125 மைக்ரோகிராம், மற்றும் வைட்டமின் B-12 0.75-1.25 மைக்ரோகிராம் இருக்கும். அதே அரிசியில் துத்தநாகம் 10 mg-15 mg, வைட்டமின் A 500-750 மைக்ரோகிராம் RE, வைட்டமின் B-1, 1-1.5 மில்லி கிராம், வைட்டமின் B-2 (1.25 mg-1.75 மில்லி கிராம்), வைட்டமின் B-3 (12.5 மில்லிகிராம் -20 மில்லி கிராம்) மற்றும் வைட்டமின் B-6 (1.5-2.5 மில்லிகிராம்) இருக்கும்.
2019- ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காக்ரென் மதிப்பாய்வு சான்றிதழின்படி, பல நாடுகளில் இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி இரத்த சோகை குறைபாட்டை எந்த விதத்திலும் சரிசெய்யவில்லை என்பதைக் காட்டுகிறது. அரிசியில் இரும்புச்சத்து அல்லது மற்ற நுண்ணூட்டச் சத்துக்களுடன் சேர்த்து வலுவூட்டுவது இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாட்டில் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், மேலும் 2 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சராசரி ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது குறித்தான நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக ஆராய்ச்சி கூறுகிறது.
பொதுவாகவே தலசீமியா மற்றும் சிக்கிள் செல் அனிமியா என்னும் நோய்கள் உடையவர்களுக்கு இரும்புச் சத்து நிறைந்த பொருட்களை வழங்கக் கூடாது. இதற்காகவே செறிவூட்டப்பட அரிசிப் பையின் மேலே ”தலசீமியா உடையவர்களுக்கு இந்த அரிசி பரிந்துரைக்கப்படவில்லை” எனக் குறிப்பிட வேண்டும் என்பது உணவுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டுதலாகும். ‘The reporters collective’ என்கிற நிறுவனத்தின் செய்தியாளர்கள், ‘சிக்கிள் செல் அனிமியா’ என்கிற நோய் அதிகமாக பாதித்த பழங்குடிகள் வாழும் ஜார்கண்ட் மாநிலத்தின் சில கிராமங்களுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள், பயனாளர்களை எச்சரிக்கும் எவ்வித வாசகங்களும் குறிப்பிடாத சாக்குப் பைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி ஆனார்கள். அதுமட்டுமல்லாது உணவு உரிமை குறித்து கவனம் செலுத்தும் ஆஷா அமைப்பு, அந்த மாநில மக்கள் தொடர்ந்து வயிற்றுப்போக்கு, இடைவிடாத வயிற்று வலி, ஒவ்வாமை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டதை அறிந்தார்கள். இதுகுறித்து ஒன்றிய அரசிடம் ஆஷா நிறுவனம் விளக்கம் கேட்டும், ஒன்றிய அரசு வாய் திறக்க மறுப்பதோடு, இதுகுறித்து தயாரித்த ஆய்வறிக்கையும் தர மறுக்கிறது.
செறிவூட்டப்பட்ட அரிசி பலனளிப்பதற்குப் பதிலாக உட்கொள்பவர்களின் உடல்நிலையில் குறிப்பிட்ட சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என ஒன்றிய அரசின் நிதித்துறை, நிதி ஆயோக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம்(ICMR)உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் அரசை எச்சரித்துள்ளன.
நிதி ஆயோக்கின் ஊட்டச்சத்து தொடர்பான தேசிய தொழில்நுட்ப வாரியத்தின் உறுப்பினராகவும், பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராக உள்ள டாக்டர் குர்பாட் இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசியின் அபாயங்கள் குறித்து, தொடர்ந்து எச்சரிக்கை செய்கிறார்.
இவர் எழுதிய 2004-05 ஆய்வுக் கட்டுரையில் இரும்புச் சத்துள்ள அரிசி வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு ‘சீரம் ஃபெரிடின்’ அளவு அதிகரிப்பது கண்டறியப்பட்டது. சீரம் ஃபெரிடின் அதிகரிப்பு என்பது நீரிழிவு நோயுடன் நேரடி தொடர்புள்ளது.
இது போன்ற எந்த ஒரு சோதனை முறையிலும் திடமான முடிவு எட்டாதபோதும் மோடி அரசு இத்திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தது. எல்லா எச்சரிக்கைகளையும் மீறி அனைத்து உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 80 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை கட்டாயமாக வழங்குவதற்கான திட்டத்தை மோடி அறிவித்தார். இதுவரை, அதிகரித்து வரும் இரத்த சோகை மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டைத் தணிக்க, பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு 137.74 லட்சம் டன் கலப்பு அரிசியை மாநிலங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
திட்ட குழுவின் ஆய்வுகள்
நிதி ஆயோக் (NITI – National Institution for Transforming India) இந்திய ஒன்றிய அரசின் திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இதன் தலைவர் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். மக்களிடம் செறிவூட்டப்பட்ட அரிசியின் முதன்மை சோதனை முடிவுகளின் தாக்கத்தை அறியும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்த திட்டக்குழுவின் முடிவுகள் இன்று வரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு பகிரப்படவில்லை. இந்த தகவல்கள் அனைத்தையும் ‘The reporters collective’ எனும் செய்தி ஊடகம் விரிவாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் உரிய ஆதாரங்களுடன் செய்திக் கட்டுரையாக வெளிக் கொணர்ந்துள்ளனர். அந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் பின்வருமாறு;
“செறிவூட்டப்பட்ட அரிசியின் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட15 சோதனை முயற்சி திட்டங்களில் 9 திட்டங்கள் தொடங்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஒன்றிய நிதித்துறை 2019-ஆம் ஆண்டு இத்திட்டம் குறித்து தயாரித்த அலுவல் குறிப்பு ஒன்றில் ”முன்னோட்ட ஆய்வுகள் முடிவதற்குள் திட்டத்தை அறிமுகப்படுத்துவது மிகவும் அவசரமான முடிவு” எனக் குறிப்பிட்டுள்ளது. ரத்தசோகை ஒருவரது உடலில் எந்தளவிற்கு உள்ளது உள்ளிட்ட அடிப்படைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளாமலே வலுக்கட்டாயமாக செறிவூட்டப்பட்ட அரிசி திணிக்கப்பட்டுள்ளது” என நிதி ஆயோக் அமைப்பே தனது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு அமைப்பு (எஃப்எஸ்எஸ்) சான்றிதழ் திட்டத்தின்படி, இந்த செறிவூட்டப்பட்ட அரிசி “அதிக ஆபத்து (high risk)” பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக ஆபத்து என தரவரிசைப்படுத்திய உணவுப் பொருட்கள் கவனமாக பரிசோதிக்கப்பட வேண்டும். கடினமான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட 11 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் சோதனையிட்டபோது தயாரிப்பதில் தொடங்கி, செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் எந்த ஒரு தரக் கட்டுப்பாட்டு விதிகளையும் பின்பற்றாமல் மக்களிடம் சென்றடைவது தெரிந்துள்ளது. மாநிலங்களின் பொறுப்பற்ற பதில்கள், மோசமான தரக் கட்டுப்பாடு, சரியான அறிவியல் கூற்றுகளை பின்பற்றாமை மற்றும் மோசமான மேற்பார்வையினால் இந்த முதன்மை சோதனை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.நுண்ணூட்டச் சத்துகளின் அளவைக் குறைவாகவோ, அளவுக்கு அதிகமாகவோ பயன்படுத்தாமல் இருக்க பின்பற்றப்படும் கலவை ஒழுங்குபடுத்தும் செயல்முறை இல்லை என்பதை அவர்கள் கண்டறிந்தனர், பள்ளிகள், அங்கன்வாடிகள் சென்றடைந்த அரிசியின் மாதிரியை யாரும் சரிபார்க்கவில்லை என்றும், ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்கள் கூறினாலும், தரத்திற்கான பொது விநியோகக் கடைகள் மற்றும் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மதிப்பீடு செய்ய எந்த மாவட்டத்திலும், திட்ட கண்காணிப்புப் பிரிவுகளை அமைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது .
குஜராத்தில், செறிவூட்டப்பட்ட அரிசி “வித்தியாசமாகத் தெரிகிறது, வேகவைக்க அதிக நேரம் எடுக்கிறது மற்றும் சுவையற்றதாக உள்ளது ” என்று புகார்கள் எழுந்துள்ளது , ஏனெனில் இது இரும்புச் சத்து மாத்திரையை விட அதிக வரவேற்பைப் பெறும் என்ற இந்திய ஒன்றியத்தின் கூற்றை பொய்யாக்கியுள்ளது..
ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) என்பது உணவுத் திட்ட வழிகாட்டுதல்களை உருவாக்கும் போது முக்கியப் பங்காற்றும் ஆணையம் ஆகும். FSSAI என்பது குடிமக்கள் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பை நிறுவவும், மதிப்பாய்வு செய்து உறுதிப்படுத்தும் ஒன்றிய அரசின் அரசின் உச்ச அதிகாரம் பெற்ற அமைப்பு ஆகும். செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி மற்றும் விநியோகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தரத்தை சரிபார்க்க FSSAI பணிக்கப்பட்டாலும், பின்னர் அது ஓரங்கட்டப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும், செறிவூட்டப்பட்ட அரிசியின் தர உத்தரவாதம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு வரும்போது, FSSAIக்கு கிட்டத்தட்ட எந்தப் பங்கும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது எந்த மாவட்டத்திலும் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான எந்த தர சோதனையையும் நடத்தவில்லை என்று அறிக்கை கூறுகிறது. FSSAI அதிகாரிகள் இது தொடர்பாக எந்த வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் பெறவில்லை என்று தெரிவித்தனர். அரிசி ஆலைகள் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி ஆலைகளுக்கு உரிமம் வழங்குவதில் மட்டுமே FSSAI ஈடுபட்டுள்ளது என்று அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
வீணாகிடும் சத்துக்கள்
நாம் இன்று சாப்பிடும் அரிசி வகைகள் புழுங்கல் மற்றும் பச்சை அரிசி என்று இரண்டு வகைப்படும். புழுங்கலரிசி என்பது நெல்லை அப்படியே வேக வைத்து எடுப்பது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அப்படியே அரிசியில் தக்க வைக்கப்படும். ஆனால், பச்சரிசியில் உமியை எடுக்கும் போது, அந்தச் சத்துக்கள் காணாமல் போகின்றன. எனவே, புழுங்கலரிசியே சத்தானது என்று நாம் உண்ட காலம் மாறி இன்று அதன் பழுப்பு நிறம் பிடிக்காமல் அதையும் பட்டை தீட்ட ஆரம்பித்து விட்டார்கள்.கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, பாஸ்மதி அரிசி, கவுணி அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி என இன்று ஏகப்பட்ட அரிசி வகைகள் கிடைக்கின்றன. ஆனால் இன்று வெள்ளை சோறு மோகம் மக்களிடையே உள்ளது, அதாவது பட்டை தீட்டிய அரிசியைப் பயன்படுத்துவது. அரிசியைப் பட்டை தீட்டி வெள்ளையாக்கப்படுவதன் மூலம் இதன் சத்துக்கள் பெருமளவில் இழக்கப்படுகிறது. தற்போதைய அரிசி வகைகளில் சத்துக்கள் குறைந்து கொண்டே வருவதாக ‘ஐதராபாத் நேஷனல் நியூட்ரீஷன் இன்ஸ்டிட்யூட்’ ஆய்வு தெரிவிக்கிறது. அரிசியில் புரதம், கொழுப்பு போன்றவை அதிகரித்துள்ளன. வைட்டமின் பி, இரும்பு, மாங்கனீசு, சிங்க் ஆகியவை குறைவதாக அதன் ஆய்வுத் தகவல் சொல்கிறது. 1998ல் வளரும் நாடுகளுக்கான அரிசி செறிவூட்டல் எனும் தலைப்பில் ‘ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகம்’ வெளியிட்ட ஆவணத்தில் பட்டை தீட்டப்படும் அரிசியில் எவ்வளவு சத்துக்கள் வீணாக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.நமது முன்னோர்கள் முந்தைய நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி அடுத்த நாள் அந்த நீரை நீராகாரமாய் பருகி செல்வதுண்டு. அரசு உணவு ஆராய்ச்சி நிறுவனங்கள் இது போன்ற நீராகாரம் மற்றும் கூழ்களில் வைட்டமின் பி 12 கிடைப்பதாக கூறுகின்றனர். பட்டை தீட்டாத அரிசியில் இரும்பு சத்து அதிகம் உள்ளதை காணலாம். கருங்குறுவை அரிசியில் மற்ற அரிசியை விட ஆறு மடங்கு இரும்பு சத்து உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
வரகு, கம்பு, சாமை போன்ற சிறு தானியங்களை உட்கொள்ள நாம் முன் வர வேண்டும். பருப்பு மற்றும் காய்கறிகளையும் சரி விகிதத்தில் எடுத்துக் கொண்டாலே நாம் இந்த ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்கலாம். உடல் சிறப்பாகக் கிரகித்துக் கொள்ளக்கூடிய காய்கறி, பழங்கள், தானியங்களைக் குறைந்த விலையிலும், எளிதாகக் கிடைக்கும் வகையிலும் சமூக-பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதே அரசு செய்ய வேண்டியது.
இந்த சூழலில் அரசு செயற்கை செறிவூட்டப்பட்ட உணவுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்துக்குக் கோடிகளில் முதலீடு செய்வதில் முனைப்பு காட்டுவதைக் காட்டிலும், இயற்கை உணவுகளை அதிக அளவில் விளைவிக்கும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டினாலே இத்தகைய ஊட்டச் சத்துக் குறைபாடுகளை வெகுவாகக் குறைக்க முடியும்” என்கிறார் ‘உணவுப் பாதுகாப்புக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்’ அனந்து.
இந்தியாவில் 60 சதவீத மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதுவும் கொரோனாவிற்கு பிறகு இது இன்னும் அதிகரித்துள்ளது. இதை சரி செய்யவே செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதாக அரசு கூறுகிறது ஆனால் இங்கு ஒவ்வொருவரின் உணவு முறையும் வெவ்வேறாக உள்ள சூழலில் ஒரே அரிசி எவ்வாறு எல்லாருக்கும் மருந்தாகும் என்ற கேள்வி இங்கு எழுகிறது.
இரும்புச்சத்து குறைபாட்டிற்கான மருந்தை உட்கொள்ளும்போது உணவிற்கு முன்பு எடுத்துக் கொண்டால்தான் நமது உடலால் அதை எளிதில் கிரகித்துக் கொள்ள இயலும். இந்நிலையில் உணவோடு சேர்ந்து எடுத்துக் கொள்ளும் போது இதன் பயன் கேள்விக்குள்ளாகிறது. நமது உடல் மருந்துகளைக் காட்டிலும் உணவுகளில் இருக்கும் சத்துக்களை எளிதில் ஏற்றுக்கொள்ளும். செயற்கை ஊட்டம் ஏற்றப்பட்ட உணவால் உடலில் சத்து அதிகரித்ததற்கான சான்றுகள் இல்லாத நிலையில், ஒவ்வொருவரின் உடலின் சத்து தேவைகள் வேறுபடும் நிலையில் ஒரே மருந்தை அனைவருக்கும் கொடுப்பதின் மூலம் ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைத்தாலும் மற்றவருக்கு அது பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். அதுமட்டுமின்றி, உணவில் இரும்புச்சத்து அதிகரிப்பதால் நீரிழிவு, கணையப் பிரச்சனை, காசநோய் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகின்றன
இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்கு 2020 முதல் 2022ம் ஆண்டுவரை 112 மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களுக்கு வழங்கியும், நடைபெற்ற மாதிரி ஆய்வுகளில் கிடைத்த முடிவுகளையும் வெளியிடாமல், பல அறிஞர்களின் எச்சரிக்கைகள் எதையும் பொருட்படுத்தாமல் இந்தியாவின் விளிம்புநிலை மக்களை சோதனை எலிகளாக்கி செறிவூட்டப்பட்ட அரிசியை நாடு முழுவதும் வினியோகித்துள்ளது நரேந்திர மோடி அரசு
இந்தியாவில் தலைவிரித்து ஆடும் ஏழ்மை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும்பாலானோருக்கு ரத்த சோகை உள்ளது. அதேபோல, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளும் உள்ளன. ஆனால் இதற்கெல்லாம் பொறுப்பான ஒன்றிய அரசு இதுகுறித்த முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான உரியத் தீர்வை ஆராயாமல், ஊட்டச்சத்து அளிப்பதாகக் கூறி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய மக்களின் வரிப் பணத்தை கோடிகளில் வாரி இறைத்து “செறிவூட்டப்பட்ட அரிசி” எனும் சிறுகச் சிறுகக் கொல்லும் நஞ்சை மக்களுக்கு வழங்கி வருகிறது.
‘ராயல் DSM’ என்னும் நிறுவனத்துத்துக்கு தொர்புடைய ஆறு சர்வதேச நிறுவனங்கள் FSSAI போன்ற ஒரு அரசு நிறுவனத்திற்கு அரிசி வலுவூட்டல் கொள்கையை உருவாக்க உதவியுள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியின் பின் உள்ள வியாபார நோக்குகளை அடுத்து காண்போம்.
- மே பதினேழு இயக்கம்