இந்தியாவில் உள்ள கணக்கில் வராத பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக அதிரடித் தாக்குதல் என்ற பெயரில், மோடி அரசு நவம்பர் 8ஆம் நாள் ரூ.500 ரூ.1000 ஆகியவற்றைச் செல்லாது என்று இரவோடு இரவாக அறிவித்தது. 13 நாட்கள் ஆகியும் வங்கிகளில் செலுத்திய பணத்தொகையையும் வைத்திருந்த தொகையையும் பெரும்பாலான மக்கள் தங்களின் அன்றாடத் தேவை களுக்காக எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வங்கிகளின் முன்பு கூட்டம் இன்றும் குறையவில்லை. கடந்த 13 நாட்களில் இந்தியப் பொருளாதாரமே முடக்கப்பட்டிருக்கிறது. மோடி நடவடிக்கைக்கு உண்மை யான காரணம் கருப்புப் பணப் பொருளாதாரத்தை அடித்து நொறுக்குவதாக இருந்தால் இத்திட்டத்தை எல்லோரும் வரவேற்று இருப்பார்கள். ஆனால் ஏழை நடுத்தர மக்களைப் பெரும்பாதிப்புக்கு உட்படுத்திய இத்திட்டம் நடைமுறையில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இக்கட்டுரையாசிரியர் சிந்தனையாளன் ஏட்டில் கருப்புப்பணம் தொடர்பாக 2016 பொங்கல் மலரில் எழுதிய கண்ணாமூச்சிக் காட்டும் கருப்புப்பண அரசியல் (அய்யா ஆனைமுத்து தந்த தலைப்பு) என்ற கட்டுரை யும், ஷபனாமா ஆவணமும் பயமுறுத்தும் உண்மை களும் என்ற தலைப்பில் மே 2016இல் மற்றொரு கட்டுரையும் கருப்புப் பண அரசியலின் பல பரிமாணங் களைப் பற்றி விரிவாக விளக்குகின்றன. ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவிப்பது இந்தியா விற்குப் புதிதன்று.
1946இல் பிரித்தானியப் பேரரசு இந்தியாவை ஆண்ட போது ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், 1978இல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது ரூ.1000 ரூ.5000 ரூ.10000 நோட்டுகள் செல்லாது என்றும் அறிவிப்புகளை நடுவண் அரசு வெளியிட்டது. 1978இல் ஜனதா அரசு வெளியிட்ட உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ஓர் அவசரச் சட்டத்தின் வழியாக முறையாக (Ordinance) அறிவிக்கப் பட்டது. உடனடியாக மத்திய ரிசர்வ் வங்கி உண்மையான முறையில் பணத்தைக் கணக்கு வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கி மற்றும் வணிகவங்கிகள் வழியாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. மும்பை, சென்னை, கல்கத்தா போன்ற பெரு நகரகங்களில் பலர் வரிசையில் நின்று பணத்தை மாற்றினர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பல வைர வியாபாரிகளும் பெரும் பணக்காரர்களும் ரூ.1000 ரூ.5000 ரூ.10000 பணத்தாள்களைத் தெருவில் வீசியதை அன்றைய நாளேடுகள் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தன. பெரும் முதலாளிகள் கோயிலிலும் இல்லங்களிலும் வழிபட்டு வந்த லட்சுமியைக் குப்பைத் தொட்டியில் வீசினர். அவற்றை ஏழைகள் எடுத்துச் சுண்டல் சாப்பிடும் தட்டுகளாகப் பயன்படுத்தினர். இந்த நடவடிக்கை நடுத்தர சாமானிய மக்களைச் சிறிதளவும் பாதிக்கவில்லை என்பதே உண்மை.
இக்கட்டுரையாசிரியர் 1978இல் சென்னைப் பல் கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த போது ரூ.725 மாத ஊதியமாக வழங்கப்பட்டது. கல்லுரி ஆசிரியர்களுக்கு இதைவிடக் குறைவாகவே இருந்தது. ஆனால் அன்றைய பணத்தின் உண்மை மதிப்பு இன்றைய பணத்தின் மதிப்போடு ஒப்பிடும் போது உயர்ந்தே இருந்தது என்பது உண்மையாகும். எனவே 1978ஆம் ஆண்டு உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, பெரும்பான்மையான அரசு பொதுத்துறை வங்கி ஊழியர்களையும், எழை எளிய மக்களையும் பாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. காங்கிரசுக் கட்சியும் இந்திரா காந்தி குடும்பத்தினரும் தங்களுடைய கணக்கில் வராத பணத்தை இந்த உயர் மதிப்புள்ள நோட்டுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள் என்று உளவுத்துறை அளித்த தகவலின் பேரிலேயே உயர் மதிப்புப் பணம் செல்லாது என்று 1978இல் ஜனதா அரசு கொண்டு வந்த நடவடிக்கைக்கும் அரசியல் உள்நோக்கம் இருந்ததாகப் பல அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்ட னர். மொரார்ஜி கொண்டு வந்த திட்டம் வெற்றியில் முடிந் தது எனப் பல ஆய்வாளர்கள் தற்போது சுட்டுகின்றனர்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு காரணமாக, உணவு மற்றும் நுகர்வுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக உணவுப் பொருட்களையும் மற்ற பொருட் களையும் பதுக்கிக் கள்ளச் சந்தை வணிகம் பெருகியதால் பிரித்தானிய அரசு எவ்வித அரசியல் நோக்கமுமின்றி பொருளாதார நோக்கோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை யாகவே 1946 நிகழ்வு இருந்தது. இங்கிலாந்தின் 10 பவுண்ட் மதிப்புடைய பணம் செல்லாது என்று அறிவிக் கப்பட்டது. அப்போது ஒரு பவுண்ட் பணத்திற்கு 1.25 அமெரிக்க டாலர் இணையாக இருந்தது. எனவே தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் அன்றைய பண நடவடிக்கைகளையும் ஒப்பிடுவது சரியான அணுகுமுறையாக அமையாது. பெரும் தொழில்கள் பிரித்தானிய முதலாளிகளுக்குச் சொந்தமாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பணமதிப்பு, தொடர்ந்து உலக வங்கி, பன்னாட்டு நிதியம், ஆதிக்க நாடுகளின் அழுத்தத்தால் பல முறை குறைக்கப்பட்டுள்ளது. 1966ஆம் ஆண்டில் உலக வங்கிக் கொடுத்த அழுத்தத்தால் இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியாவின் பணமதிப்பு 36.5 விழுக்காடு அளவிற்குக் குறைக்கப்பட்டது. 1966-2016 வரை இந்தியாவின் நாணய மதிப்பு பல முறை குறைக்கப் பட்டுள்ளது. இன்று இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி 7 விழுக்காடாகவும் அமெரிக்காவின் ஆண்டு வளர்ச்சி 1 அல்லது 2 விழுக்காடாகவும் இருக்கும் நிலையிலும் அமெரிக்க டாலரின் மதிப்பே உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு இந்தியாவின் பணமதிப்பு ரூ.68 ஆக உள்ளது. 1980க்குப் பிறகு ரூபாயின் மதிப்பு உள்நாட்டிலும் வாங்கும் சக்தியை இழந்து வருகிறது.
சான்றாக. இன்றைய ரூ.500 ரூ.1000 பணத்தாள் களின் மதிப்பை 1978ஆம் ஆண்டின் மதிப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியப் பணத்தின் வாங்கும் சக்தி எவ்வளவு குறைந்துள்ளது என்பதை அறிய முடியும். விலைவாசி ஏற்றமும் பணமதிப்புக் குறைப்பும் ஏழை எளிய நடுத்தர மக்களைத்தான் தொடர்ந்து பாதித்து வருகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஆனால் பெரும் பணக்காரர்கள் இதைப் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளவில்லை என்பதை இன்றைய நிகழ்வுகளே எடுத்துக்காட்டு கின்றன.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மசாச்சுட்சு பல்கலைக் கழகத்தின் பொருளாதார ஆய்வாளர் அமித் போஸ்லே (Amit Basole) பெரும் பணக்காரர்களின் வளர்ச்சியைப் பற்றியும் ஏழை-பணக்காரர்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வு பெருகி வருவதையும் தனது ஆய்வுக்கட்டுரையில் ((Economic and Political Weekly (EPW)), 4வா டீஉவ. 2014) குறிப்பிட்டுள்ளார். ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் கடைப் பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையுடைய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக (1950-70) பெருமளவில் மக்களிடையே காணப்பட்ட வருமான ஏற்றதாழ்வு குறைந்திருந்தது. பெரும் பணக்காரர்கள் (1 விழுக்காடு), மிகப்பெரும் பணக்காரர்கள் (0.1விழுக்காடு), உச்சநிலை பெரும் பணக்காரர்கள் (0.01 விழுக்காடு) ஆகியோரின் உண்மையான வருமானம் (Real Income) இக்காலக் கட்டத்தில் குறைந்திருந்தது. ஆனால் இந்தியர்களின் சராசரி வருமானம் இன்றைய நிலையோடு ஒப்பிடு கையில் உயர்ந்து காணப்பட்டது. 1980-90 வரை ஏறக்குறைய இந்நிலையே நீடித்தது. 1990க்குப் பிறகு 40 இலட்சம் பெரும் பணக்காரர்கள் (1 விழுக்காடு), 4 இலட்சம் மிகப் பெரும் பணக்காரர்கள் (0.1) உச்சநிலை 40000 பெரும் பணக்காரர்களின் (0.01) வருமானம் பெருமள விற்கு உயர்ந்தது. மக்களிடையே வருமான சொத்து ஏற்றத்தாழ்வு பெருகியது என்று ஆய்வாளர் போஸ்லே குறிப்பிட்டுள்ளார். இந்தக் கள ஆய்வினை 1999ஆம் ஆண்டு வரை நடுவண் அரசால் வெளியிடப்பட்ட இந்திய அளவிலான வருமானவரி செலுத்தும் நபர்கள் பற்றிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மேற்கொண்ட தாகவும் இந்த ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திட்டமிட்டே 1999 ஆண்டிற்குப் பிறகு இந்தப் புள்ளி விவரம் நடுவண் அரசால் வெளியிடப்படவில்லை என்பதிலிருந்தே நடுவண் அரசு பெரும் பணக்காரர்கள் பக்கம் சாய்ந்துவிட்டது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
மேலும் 1990-2010 வரை உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்தப் பெரும் பணக்காரர் களுக்கு வரித் தள்ளுபடியும் வரிச் சலுகைகளும் அளித்ததன் வழியாக ஏறக்குறைய 150 இலட்சம் கோடியை நடுவண்அரசு இழந்துள்ளது.
மும்பையிலிருந்து வெளிவரும் அரசியல் பொருளா தார வார இதழின் (EPW) ஆய்வு மையத்தைச் சார்ந்த ஜே.டென்னிஸ் ராஜ்குமார், ஆர்.கிரு`ணசாமி ஆகியோர் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் (Dec.2015) நடுவண் அரசின் மக்கள் விரோதப் போக்கினைச் சுட்டிக் காட்டி யுள்ளனர்.
மோடி அரசு அமைந்த பிறகு 2015-16 முதல் ஆறு மாதங்களில் மறைமுக வரிகளின் பங்கு பெருகியுள்ளது என்பதைப் புள்ளிவிவரங்களோடு மெய்ப்பித்துள்ளனர். மறைமுக வரியை ஏழை எளிய நடுத்தர மக்கள் என அனைத்துத் தரப்பினரும் செலுத்துகின்றனர். மறைமுக வரிகளின் சுமையால் வருமானம் மற்றும் சொத்து ஏற்றத்தாழ்வுகள் பெருகி வருகின்றன என்பதையும் இந்த ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். 0.01 விழுக்காடு அளவில் உள்ள உச்சநிலை பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவா கத்தான் நடுவண்அரசு செயல்பட்டு வருகிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதே ஏட்டில் (ஏப்ரல் 18 2015) கல்வி பொதுச்சுகாதாரத் துறைகளுக்கான பொது நிதி ஒதுக்கீட்டை மோடி அரசு குறைத்துள்ளது என்பதைத் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டு தனது கடும் கண்டனத்தையும் இந்த வார ஏடு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மாநிலங்களுக்கு நடுவண் அரசு 2015-16இல் அளித்து வந்த தொகையில் ஒரே ஆண்டில் 9000 கோடி ரூபாயைக் குறைத்துள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை ரூ.16316 கோடியில் இருந்து ரூ.8000 கோடியாகக் குறைத்துள்ளது. ஆனால் மோடிக்கு அருகி லேயே உலா வரும் அம்பானி குழுமம் கோதாவரி படுகையில் நடுவண் அரசிற்குச் சொந்தமான எண்ணெய் எரிவாயு நிறுவனத்திற்கு (ONGC) ஒதுக்கப்பட்ட பகுதியில் ரூ.30ஆயிரம் கோடி மதிப்பு எரிவாயுவைத் திருடியதை நீதிமன்றமும் அமெரிக்க நாட்டின் தீர்ப்பாயமும் உறுதி செய்த பின்பு, ஏன் இந்த நிறுவனத்தின் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை இன்று வரை எடுக்கப்பட வில்லை என்பது மோடி அரசின் குஜராத்திய முதலாளிகள் சார்பு நிலையை எடுத்துக்காட்டுகிறது. இது தொடர்பாக (EPW டிசம்பர் 5 2015) இந்திய எரிவாயு பெரும் கொள்ளை (Great Indian Gas Robbery by Paranjoy and Guha Takurta) என்ற தலைப்பில் பரோன் ஜாய் குகா தக்குர்தா விளக்கமாக, கட்டுரை ஒன்றை வெளியிட்டுள் ளனர்.
மேலும் உயர் மதிப்புடைய பணம் செல்லாது என்று ஒரு முதன்மையான கொள்கையை அறிவிக்கும் காலத்தில், அம்பானியின் மிக நெருங்கிய உறவினரான உர்ஜித் பட்டேலை இந்தியாவின் மைய வங்கியின் ஆளுநராக நியமித்தது பல ஐயங்களை உருவாக்கி யுள்ளது. பாஜகவின் இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர், உயர் மதிப்புடைய ரூ.500 ரூ.1000 செல்லாது என்ற திட்டம் ஏற்கெனவே அம்பானி அதானிக்குத் தெரிவிக் கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா தென் ஆப்பிரிக்கா (BRICS) ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பினை உருவாக்கி பொருளாதார வர்த்தக நிதி உறவுகளை மேம்படுத்துவதற்குத் திட்டங்கள் வகுத்து வருகின்றன. இக்கூட்டமைப்பின் சார்பில் சீனாவில் பிரிக்சு வளர்ச்சி வங்கி (BRICS Development Bank) தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் தலைவராக கே.வி.காமத் என்ற இந்தியர் உள்ளார். இவரும் ஒரு தனியார் பெரு முதலாளித்துவக் குழுமத்தில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் கருப்புப் பணம் நடமாட்டம் அதிகம் உள்ளது என்பதை உலக அளவிலான பல ஆய்வறிஞர்கள் சுட்டுகின்றனர். இருப்பினும் மற்ற மூன்று நாடுகள் பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இந்தக் கருப்புப் பண நடவடிக்கையை வேறு வழிகளில் எடுக்கலாம் என்று ஆலோசித்து வருகின்றன. ஆனால் இந்தியா மட்டும் ஏன் அவசர கோலத்தில் இந்தப் பணமதிப்பு செல்லாது என்ற நடவடிக்கையை எடுத்தது என்று பலர் வினா எழுப்பியுள்ளனர். அது மோடியின் அரசியல் சார்ந்த தன்னிச்சையான தான்தோன்றித் தனமான நடவடிக்கையா? என்று உலகின் புகழ் பெற்ற அமெரிக்க இங்கிலாந்து நாளேடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன. பிரதமர் அமைச்சகமும் மத்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து உரிய அறிவார்ந்த செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டன என்று இவ்வேடுகள் குற்றம் சாட்டுகின்றன. இதற்கு முதன்மை யான காரணம் பெரும்பான்மையான பாமர மக்களின் அன்றாடப் பணத் தேவைகளைக் கூடத் துல்லியமாக நடுவண் அரசு கணக்கிடவில்லை என்பதே நாள்தோறும் வங்கிகள் முன்பு நிற்கும் கூட்டம் சான்று பகர்கின்றது.
பெரும் பணக்காரர்களுக்காகவே நடுவண்அரசு இயங்கி வருகிறது என்பதை மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள் சுட்டுகின்றன. 2016இல் இந்தியப் பொருளாதாரத்தையும் அதன் அடிப்படைப் பொருளாதார நிதிக் கூறுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த ரூ.500 ரூ.1000 காகிதப் பணம் செல்லாது என்ற அறிவிப்பு இந்தியப் பொருளாதார கருப்புப் பணக் கட்டமைப்பைச் சிறிய அளவில்கூட பாதிப்பிற்கு உட்படுத்த வில்லை என்பதை நாள்தோறும் நிறைவேறி வருகிற நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.
2011-12 விலை அடிப்படையில் 2016 சனவரி திங்களில் இந்தியாவினுடைய உள்நாட்டு ஒட்டு மொத்த வருமானம் 113 இலட்சம் கோடிகள் ஆகும். 2016இல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 32 இலட்சத்து 98 ஆயிரம் கோடிகள் ஆகும்.
இந்தக் கடன் ஒவ்வொரு ஆண்டும் 72 ஆயிரம் கோடி அளவில் பெருகி வருகிறது.
இந்தியாவின் உள்நாட்டுக் கடன் 2015-16இல் 52 இலட்சத்து 78 ஆயிரத்து 717 கோடிகள் ஆகும்.
2015-16 இன்படி செலுத்திய கடன் தொகை வட்டித் தொகை அளவு 3 இலட்சத்து 14 ஆயிரம் கோடிகள் ஆகும்.
இந்தியாவினுடைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி யில் ஒட்டுமொத்த உள்நாட்டு சேமிப்பின் பங்கில் (2015-16) 23 விழுக்காட்டினர் குடும்பங்கள் சேமிப்பதே ஆகும். தனியார் துறை - 8.5 பொதுத்துறை 3.1 விழுக்காடாகவும் உள்ளன. இந்தப் புள்ளிவிவரப்படி ஒட்டுமொத்த உள் நாட்டு சேமிப்பில் 66 விழுக்காடு சேமிப்பு குடும்பங்கள் வழியாக நடைபெறுகிறது என்பதை உறுதி செய்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் பல ஆண்டு களாகப் பெருகி வருகிற கருப்புப் பணத்தின் அளவு இந்தியாவின் உள்நாட்டு ஒட்டு மொத்த வருமானம் கடன் சேமிப்பு ஆகியவற்றிற்கு இணையாக உள்ளதோ என்று பலர் ஐயம் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் தங்கத்தையும் மற்ற நாடுகளின் பணத்தையும் (அந்நியச் செலவாணி) வைத்திருக்கும் பட்டியல், பல நிதியியல் வங்கியியல் சார்ந்த விவரங் களை அளிக்கிறது. அவ்வரிசையில் 1.சீனா 2.ஜப்பான் 3.சவுதி அரேபியா 4.சுவிட்சர்லாந்து 5.தைவான் 6.ரஷ்யா 7.தென் கொரியா 8.பிரேசில் 9.ஹாங்காங் 10.இந்தியா ஆகியன வரிசைப்படுத்தப்பட்டுள்ள முதல் பத்து நாடுகளாகும். இந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியா புள்ளிவிவரம் (Indiastat 2016, p.46) என்ற நூலில் இடம் பெற்றுள்ளன. இவை பல உண்மைகளைப் பறைச்சாற்று கின்றன. உலக அளவில் ஏற்றுமதி செய்வதில் சீனா முதல் நாடாக இருப்பதாலும் பொருளாதார வளர்ச்சியில் கடந்த பத்தாண்டுகளாக ஆண்டு வளர்ச்சி 8 விழுக் காட்டிற்குக் குறையாமல் இருப்பதாலும் உலகளவில் உள்ள மற்ற நாடுகளின் பணத்தையும் தங்கத்தையும் சீனா பெருமளவில் பெற்றிருக்கிறது. இந்தியா உலக அளவில் அதிகத் தங்கத்தை இறக்குமதி செய்திருந்தாலும் பெரும் பணக்காரர்கள் தங்களின் கருப்புப் பணத்தைத் தங்கத்திலும் அமெரிக்க டாலரிலும் வைத்திருக்கின்றனர். மேலும் கோயில்களின் உண்டியல்களில் குவியும் பணம் பல இலட்சம் கோடி ரூபாய் அளவில் தங்க வைர நகைகள் ஆகியன முடங்கி- இறந்த மூலதனமாக (Dead Capital) இருப்பதால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் பயன்படவில்லை. எனவே தான் இந்தியா இப்பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் கருப்புப் பணம் டாலர் மதிப்பில் சுவிஸ் நாட்டு வங்கிகளிலும், பனாமா போன்ற பல தீவுகளிலும் இருப்பதால் இந்தியப் பொருளாதாரத்தின் தேவைகளுக்கு சிறிதளவும் பயன்படாமல் உள்ளது. இச்சூழலில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தின் மீதுதான் நடுவண் அரசு துல்லியத் தாக்கு தலைத் தொடங்கியிருக்க வேண்டும். நாட்டின் ஓராண் டிற்கு ஒட்டு மொத்த உள்நாட்டு வருமானமான ஒரு இலட்சத்து 113 கோடிகளை விட, இந்தியாவின் கருப்புப் பணம் பல வடிவங்களில் பல நிலைகளில் பல நாடுகளில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏழை மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்துதான் உள்நாட்டு வெளிநாட்டு கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படுகிறது. இந்தியா புள்ளிவிவரம்(Indiastat 2016, p.42) வறுமை யின் பன்முகப் பரிமாணங்களின் அடிப்படையில் இந்தியாவினுடைய வறுமையைக் குறிப்பிட்டுள்ளது. இதில் 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமை கோட்டில், 63 கோடி மக்கள் உள்ளனர் என்றும், மக்கள் தொகை யில் இது 51.1 விழுக்காடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேளாண் தொழிலாளர்கள், தொழில் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் சிறிய அளவில் கடைகள் வைத்து வணிகம் செய்பவர்கள் அதில் பணியாற்றுவோர், ஆட்டோ ஓட்டுனர் உட்பட அமைப்பு சாரா தொழிலாளர்களும் ஒட்டு மொத்த இந்தியப் பொருளாதார நடவடிக்கைக்குள் வருகின்றனர். அரசு தனியார் அலுவலகங்கள், வங்கி காப்பீடு போக்குவரத்து தொலைத்தொடர்பு போன்ற அனைத்து நிறுவனங்களில் 10 கோடி பேர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அமைப்பு சார்ந்த தொழில்களின் கீழ் வருகின்றனர். 2016 புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் வேளாண் தொழிலாளர்கள் 54.6 விழுக்காடு உள்ளனர். வேளாண் துறை தவிர்த்த முறைசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 68 முதல் 76 விழுக்காடு உள்ளனர். இவர்கள்தான் தங்களின் கடும் உழைப்பால் இந்தியப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கின்றனர்.
பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் 2006 பிப்ரவரி திங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்தின்படி ஊரகப் பகுதிகளில் வேலையில்லாதவர் களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ரூ. 3 இலட்சத்து 64 ஆயிரம் கோடி அளவு 2015 வரை நடுவண் அரசு செலவிட்டுள்ளது. இன்றும் இவ்வேலைத் திட்டத்தில் 10 கோடி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இத்திட்டத்தினால் பயன் பெற்ற ஏழை எளிய மக்கள் தங்களுடைய பண சேமிப்பைத் தங்களின் இல்லங்களி லேயே வைத்திருக்கின்றனர். பிரதமர் மோடி அறிவித்த மக்கள் வங்கித் திட்டத்தின் கீழ் 22 கோடி பேர் இணைந் திருந்தாலும் போதிய அளவில் பணம் இந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது. இந்திய மைய வங்கியின் புள்ளிவிவரப்படி 120 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 45,175 வங்கிக் கிளைகள்தான் உள்ளன. வங்கிக் கிளைகளும் தானியங்கிப் பணம் வழங்கும் மையங் களும் பெரும்பாலும் நகர்ப்புறங்களை ஒட்டியே அமைந்துள்ளன. அதனால் 87 விழுக்காட்டு மக்கள் பயன்படுத்திய ரூ.500 ரூ.1000 தாள்கள் செல்லாது என்று அறிவித்தது மிகப்பெரிய அறிவுக்கேடான செயல் என்பதை இதன் வழியாக நாம் அறிய முடிகிறது. மேலும் இதுவரை 6 இலட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப் பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது. இந்தப் பணம் முறையாக வங்கிக் கணக்கை வைத்துள்ள வர்களின் பணமே ஆகும். வங்கிக் கணக்கிற்கு வராத பணமே அதிகமாக உள்ளது என்பதைப் பல ஏடுகள் சுட்டுகின்றன.
இன்றையப் பொருளாதாரச் சூழலில் சராசரியாக எல்லாவித கூலித் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் உட்பட நாளொன்றுக்கு 300 முதல் 500 ரூபாய் வரை வருமானம் பெறுகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் ரூ.500 ரூ.1000 பண மதிப்பில் சேமித்தும் வைத்துள்ளனர். குறிப்பாக காய்கறி விற்பனை தொடங்கி சிறு வணிகம் செய்பவர்கள் பலவித இன்னல்களுக்கு இடையேயும் வருமான ஏற்றத்தாழ்வு களுக்கு உட்பட்டுத் தொழில் புரிகின்றனர். இவர்களும் ரூ.500 ரூ.1000 மதிப்பு பணத்தை அன்றாட வணிகத் திற்குக் கையிருப்பில் வைத்துள்ளனர். ஓய்வூதியம் பெறுவோர், முதியோர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் தங்கள் மகன் மகள் கொடுக்கும், பணத்தையும் வெளி நாட்டிலிருந்து அனுப்பும் பணத்தையும் கையிருப்பில் வைத்துள்ளனர். இந்தப் பிரிவினர்தான் இன்று நடுத் தெருவில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கருப்புப் பணத்தைப் பெருமளவில் யார் பதுக்கி உள் ளார்கள் என்பதைப் பற்றிய புள்ளிவிவரங்கள் நடுவண் அரசிற்கு நன்றாகவே தெரியும். கருப்புப் பணக்காரர்களின் பட்டியலைக் கேட்ட உச்ச நீதிமன்றத்திற்கோ மக்களுக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ நிதியமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜி, பா.சிதம்பரம், இன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் ஏன் தெரிவிக்கவில்லை? உலகில் உள்ள நேர்மையான 190 ஊடகங்களின் கூட்டமைப்புதான் கருப்புப்பண மோசடி களைக் கண்டுபிடித்துள்ளது.
இந்திய அரசு 1991க்குப் பிறகு தாராளமயமாக்கல் கொள்கையைப் பின்பற்றிப் பல சலுகைகளை அளித்து பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கி யுள்ளது. குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி வழியாக இந்தியாவிலிருந்து பணம் எடுத்துச் செல்லும் முறையை 2004இல் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தினார். வணிகம் தொழில் செய்பவர்கள் ஆண்டிற்குப் பல இலட்சம் ரூபாயை எடுத்துச் செல்லாம் என்று அறிவிக்கப் பட்டது. மோடி அரசு அமைந்தவுடன் கோடி ரூபாய் அளவில் வரை எடுத்துச் செல்லலாம் என்று மாற்றப் பட்டது. இப்படி வெளிப்படையாக எடுத்துச் செல்லலாம் என நடுவண் அரசு அறிவித்த பின்பு பணம் பனாமா தீவில், சுவிட்சர்லாந்து, ஹாங்காங், மலேசியா, மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் இந்திய பெரு முதலாளிகளும் அரசியல் தலைவர்களும் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். இவர்களின் பெயர்ப் பட்டியலை உச்ச நீதிமன்றம் பல முறை கேட்ட பிறகு கமுக்கமான முறையில் ஒட்டிய உறையில் நீதிமன்றப் பார்வைக்கு நடுவண் அரசு அளித்தது. 2016இல் வந்த புள்ளிவிவரங்களின்படி சேனல் தீவுகள் கரிபீயக் கடற்கரையை ஒட்டிய பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் கேமன் தீவுகள் பஹரைன் நவுரு வனட்டு நாட்டுத் தீவுகளில் பெருமளவு கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறையின் முன்னாள் உயர் அலுவலரும் தேசியப் பொது நிதியியில் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றி வரும் தீக்`த் சென் குப்தா இந்து நாளிதழில் (ஏப்ரல் 11,2016) ஒரு கட்டுரை யைத் தீட்டியுள்ளார்.
மேலும் 2016 ஏப்ரல் 9மும்பையில் இருந்து வெளி வரும் அரசியல் பொருளாதார (EPW) வார இதழில் பாரிஸ் நகரில் இருந்து இயங்கும் பொருளாதார முன்னேற்றம் ஒத்துழைப்பு மையம் இந்தக் கருப்புப் பணம் குறித்து ஒரு திட்டம் தீட்டி, அதற்கு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆதரவினைக் கேட்டது. உலகில் 96 நாடுகள் இதற்கு ஒப்புதல் அளித்தன. ஆனால் இந்தியா உட்பட நான்கு சிறிய நாடுகள் இந்தக் கருப்புப் பண மீட்சித் திட்டத்திற்கு கடுமையான முறையில் மறுப்புத் தெரிவித்தன என்பதைச் சுட்டிக்காட்டி இந்த ஏடு கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளியேறும் சட்டவிரோதப் பணத்தை இயக்குபவர் களும் இயங்கும் தன்மையும் 1948-2008 (The Drivers and Dynamics of Illicit Financial Flows from India: 1948-2008) என்ற 88 பக்கங்கள் அடங்கிய ஆய்வறிக்கையில் இந்தியாவினுடைய கருப்புப்பண நடவடிக்கைகள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன. இவ்வறிக்கையில் மொத்த சட்டவிரோதச் சொத்துக்களில் 72.2 விழுக்காடு 32 இலட்சம் கோடி அளவிற்கு வெளிநாடுகளில் முடக்கப் பட்டுள்ளது. உள்நாட்டில் 27.8 விழுக்காடு 12 இலட்சம் கோடி அளவில் பதுக்கப்பட்டுள்ளது. இதில் அம்பானி, அதானி தொடங்கிப் பல நூறு கருப்புப்பண முதலைகள் அடங்குவர்.
இந்நாடுகளில் உள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வருவதற்கு ஓர் அதிரடித் திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை? நீதிபதி வாஞ்சு குழு தனது அறிக்கையில் குறிப்பிட்ட கருப்புப் பணக் கூட்டமைப்பில் அரசியல்வாதிகள், உயர் அரசு அலுவலர்கள், முதலாளி கள் ஒரு கமுக்கமான சமுதாயமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்பது இன்றும் உண்மையாகிறது அல்லவா?
இந்திரா காந்தி அம்மையார் 1969இல் இந்திய வணிக வங்கிகளைத் தேசியமயமாக்கிய போது விவசாயிகள் சிறுகுறு நடுத்தர தொழில் முயல்வோர் ஆகியோர்க்குக் கடனளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெருமுதலாளி களுக்குப் பல இலட்சம் கோடி அளவில் கடன் தரப் பட்டுள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் 2016-17 நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் அம்பானி, அதானி, எஸ்.ஆர். வேதாந்தா போன்ற குஜராத்தி களுக்கும் மல்லையா போன்றவர்களுக்கும் ரூ.10,673 கோடியை வராக்கடனாக அறிவித்துத் தள்ளுபடி செய் யப்பட்டுள்ளது. இவ்வாறு பெரும் பணக்காரர்கள், மிகப் பெரும் பணக்காரர்கள், உச்சநிலை பெரும் பணக் காரர்கள் அவர்களோடு தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர்கள்-அரசியல் தரகர்கள், கார்ப்பரேட் போலி சாமியார்கள் மீது நாட்டு விரோத செயல்களில் ஈடுபட் டார்கள் என்று கூறி குற்ற இயல் தண்டனைச் சட்டங் களின் வழி நடவடிக்கை எடுப்போம் என்ற அறிவிப்பை நடுவண் அரசு ஏன் வெளியிடவில்லை? தற்போது அறிவிக்கப்பட்ட ரூ.500 ரூ.1000 தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பால் கடந்த இரு வாரங்களாகப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழப்பு இந்தத் திட்டத்தால் பெறப்போகிற பொருளாதாரப் பயனைக் கூட அடியோடு சிதைத்துவிட்டது. எனவே மோடி அறிவித்த அதிரடித் தாக்குதல் ஏழை நடுத்தர பெரும்பான்மையான மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமையான அதிரடித் தாக்குதலே ஆகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.