இது ஆணாதிக்கத்தை வலுப்படுத்தும் தலைப்பு. ஒத்துக் கொள்ளுகிறென். ஆனால் இது உங்கள் கவனத்தை ஈர்க்கும் சாதனமாகத்தான் இங்கு பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவுதான். சரி. யார் இந்த மகன்? தொலைந்த, சிதைந்த பழங்காலத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை சாமிநாத ஜயருடன் இணைந்து மீட்டெடுத்த சிறந்த ஈழத் தமிழறிஞர் தாமோதரம் பிள்ளையின் இரண்டாவது மனைவியான நாமுத்தமாளின் கடைசி மகன். இவரின் இயற் பெயர் அழகசுந்தரம் (1873-1941). கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய பின்னர் தனது தந்தைவழி தாத்தாவின் பெயரை எடுத்துக்கொண்டார். பிரான்சிஸ் கிங்ஸ்பரி ஆனார்

இவர் கிறிஸ்தவரானாது தற்செயலாக நடந்தது.

1892ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாலைப்பொழுதில் ஒரு அமெரிக்க மதப் பரப்பாளர் மதரஸ் பட்டணத்தில் கிறிஸ்தவ எழுச்சி கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். அந்த சூடான கூடாரத்தில், மனிதர்களின் பாவ இயல்புகளையும், இயேசு கிறிஸ்து வழங்கிய இரட்சிப்பையும் வலியுறுத்திய அமெரிக்கப் பிரசங்கியின் பரபரப்பான செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்த இந்த சைவம் தீட்சை பெற்ற காலையும் மாலையும் அனுஷ்டான செய்த, பட்டை பட்டையாக திருநீறணிந்து திருவாசகத்தில் உருகிப் போன யாழ்ப்பாணத்தான் இயேசுவின் மலைப் பிரசங்கத்தில் மருகிப்போனார். கிறிஸ்துவே இந்து மதத்தின் நிறைவு என்று நம்பிக்கையுடையவரானார். இயேசுவின் மீட்பின் சக்தி அவருக்குக் கவர்ச்சிகரமாக இருந்தது. இந்த மறுமலர்ச்சிக் கூட்டங்களில் வழக்கப்படி பிரசங்கத்துக்குப் பின் இயேசுவுக்கு தங்களை ஒப்புக் கொடுக்க விரும்புகிறவர்கள் பலிபீடத்துக்கு அழைக்கப்பட்டார்கள். இப்படி அழைப்பை ஏற்றுக்கொண்டவர் தான் கிங்ஸ்பரி.francis kingsburyகிங்ஸ்பரி, தான் இயேசுவைப் பின்பற்றத் தீர்மானித்த நாள் இந்துக்கள் மகா சிவராத்திரியைக் கொண்டாடிய தினம் என்று பிற்பாடு நினைவு கூர்ந்தார். இந்துக் கடவுளான சிவன், பார்வதியை மணந்தது மட்டுமல்லாமல், விஷம் அருந்தி உலகைக் காப்பாற்றிய நாள் அது. கிங்ஸ்பரியின் மதமாற்றத்தில் பதிந்துள்ள உட் செய்தி ஒரு மீட்பர் இன்னொரு மீட்பருக்காக மாற்றப்பட்டார் என்பதுதான். சைவத் துறவிகள் பற்றிய (Hymns of the Tamil Śaivite saints) அவரது மொழியாக்கப் படைப்பில் அவர் எழுதிய முன்னுரையில், கிங்ஸ்பரி சிவன் விஷத்தை அருந்தியது தாழ்மையுள்ள மனிதர்களுக்காக துன்பப்பட்டதுக்கும் கிறிஸ்தவ கடவுளின் செயலுடன் இங்கே ஒர் இறுக்கமான இறையில் இணைப்பு உள்ளது என்று கிங்ஸ்பரி எழுதியிருந்தார். இந்து மதம் குறித்த கிங்ஸ்பரியின் அணுகுமுறை யூத மதத்திற்கு பரிசுத்த பவுல் கொண்டிருந்தது போன்றது. மூதாதையரின் சமயத்தை வெறுக்கவில்லை. 20ஆம் நூற்றாண்டின் பவுல் என்று தன்னை எண்னிக் கொண்டு, கிங்ஸ்பரி கலாத்தியர் நிருபத்தில் புகழ்பெற்ற பவுலின் வார்த்தைகளைத் திருத்தி எழுதி தனக்கும் அவர் விட்டு வந்த அவரின் முன்னோர்களின் மததிக்குமான இணையத்தக்க உறவை வெளிப்படுத்தினார்: "என் நாட்டு மக்களிடையே நான் என் முன்னோர்களின் மதத்தில் முன்னேறினேன், என் தந்தையின் பாரம்பரியத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.”

இவருடைய தகப்பானார் தாமோதரம் இந்த மத மாற்றத்தை எற்கவில்லை. மகனைத் திரும்பவும் சைவத்துக்குக் கொண்டு வர, அவருடைக்ய சைவ மகாத்மீயம் நூலைப் படிக்கச் சொன்னார். இது ராஜபக்ஷா சகோதரர்களை மாவீரர் தின உரைகளை வாசிக்கச் சொல்வது போன்றது. அவரது தந்தையின் விரோதமும் எதிர்ப்பும் மதம் மட்டுமல்ல, சமூக அடிப்படையையும் சார்ந்தது. "மற்ற மதங்களின் இரட்சிப்புத்தன்மையை அங்கீகரித்த" எனது தந்தை, மதமாற்றத்தினால் ஏற்பட்ட சமூக இழிவு காரணமாக "ஒரு கிறிஸ்தவர் தனது வீட்டில் இருக்க" தடை விதித்தார் என்று தன் வரலாற்று நினைவு கூர்வில் கிங்ஸ்பரி எழுதியிருந்தார் (How I Became a Christian, 1907)

தாமோதரம் பிள்ளையின் எதிர்ப்புக்கு காரணமிருந்தது. யாழ்ப்பாண சாதி கட்டுப்பாடுகள்படி இவர் பேராண்மைச் சாதியைச் சேர்ந்தவரா­யிருந்தாலும் இவர் பரம்பரை கிறிஸ்தவராக இருந்ததினால் தாமோதரம் பிள்ளை இந்தியாவி­லிருந்த நாட்களில் இவர் ஈடுபட்டிருந்த பழைய ஏடுகளைச் சேகரிக்கும் வேலைக்குத் தடங்கலாக­யிருந்தது. அந்தக் கால கட்டத்தில் பூணூல் காட்டியே பிராமணாள் உணவகங்களுக்குப் போக முடிந்தது. பழைய ஏடுகளைச் சேகரிப்பதில் இவருக்குக் கஷ்டமிருந்தது. ஆதினங்களும் மடங்களும் பிராமணர் அல்லாதவர்களின் கை பட்டால் இவற்றின் புனிதம் கேட்டுவிடும் என்று தயங்கினார்கள். அத்துடன் பிராமண பண்டிதர்கள் மட்டுமே பண்டைய நூல்களைக் கையாளும் திறன் கொண்டவர்கள், மற்றச் சாதியினரிடையே போதுமான அறிவாற்றல் இல்லை என்று அவர்களைப் பற்றி தாழ்வான மனப்பான்மை இருந்தது. அந்த நாட்களில் யாழ்ப்பாண கிறிஸ்தவர்கள் தென் இந்தியாவுக்குப் போன போது அவர்களின் ஜாதி உயர்வைத் தெரியப்படுத்த செய்த முதலாவது காரியங்களில் ஒன்று அவர்களிடம் காணப்பட்ட கிறிஸ்தவ அடையாளங்களை முக்கிய துப்பரவாக்கியதுதான். தாமோதரம் பிள்ளை இதற்கு உயர்வான உதாரணம் என்று என்னுடைய மாணவர் ஜெபநேசன் எழுதியிருக்கிறார்.

விவிலிய நூல்கள் வரலாற்று விமர்சன முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை வெளிப்படுத்திய தகவல்கள் முக்கியமாக அவைகளின் நம்ப முடியாத்தன்மையால் கிங்ஸ்பரிக்கு இயேசு மீதான அவரது ஆரம்பகால உற்சாகம் குறைந்து போனது. இயேசுவைப் பற்றி ஆங்கிலத்தில் இரண்டு புத்தகங்களும் (Jesus of Nazareth: His Life and Teaching, 1924; The Life of Jesus 1932) , தமிழில் ஏசு வரலாறு (1939) என்ற ஒரு நூலும் எழுதினார். இந்த நூலில் அத்தியாயங்கள் ராமாயணத்தில் உள்ளதைப் போல, படலங்கள் என்று அழைக்கப்பட்டன. ராமரின் வீரக் கதை போல் இயேசு பெரிய இந்துக் கடவுள்களின் வரிசையில் வந்தவர் என்பதை அவரது வாசகர்களுக்கு அது மறைமுகமாக அறிவித்தது.

நான்கு நற்செய்திகளின் உண்மைத்தன்மை மற்றும் அவற்றின் மெய்மையான சான்றுகளில் முழுத் திருப்தி எனக்கு உண்டு என்று அவர் மதம் மாறியபோது எழுதியவர் பின்பு அவற்றில் நம்பிக்கை இழந்தார். இயேசுவை நேரில் அறிந்திராதவர்களினால் எழுதப்பட்டவை என்றார். இவரிகளின் நோக்கம் இயேசுவின் சரித்திரம் எழுதுவதல்ல. அவரின் வாழ்வில் நடந்த சிலவற்றையும் அவர் உபதேசித்த சிலவற்றையும், அவர்கள் கேள்விப்பட்டதையும் நற்செய்தி நூல் ஆசிரியர்களின் திருச்சபை நோக்கத்துக்கும், இறையியல் தேவைக்கேற்ப எழுதியவையே. வரலாற்றுக் கால வரிசைப்படி எழுதப்படவில்லை. இயேசுவின் வாழ்வில் நடந்தவை முழுக்கவும் ஆவணப்படுத்தப்படவில்லை. எழுதப்பட்டவையும் முறைபிறழ்ந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இயேசுவுக்கு நடவாத விஷயங்களும் பிரசங்கிக்காத உபதேசங்களும் புதிய ஏற்பாட்டில் நுழைந்துள்ளன என்று கிங்ஸ்பரி உறுதியாகப் பதிவு செய்துள்ளார்.

கிங்ஸ்பரி இயேசுவைப் பற்றிய முக்கிய நிகழ்வுகளைத் தவிர்த்துவிடுவதில் இரக்கமற்றவராக இருந்தார், இயேசுவின் கன்னிப் பிறப்பு, அது பற்றி தேவதூதர்களின் அறிவிப்பு, அவரின் தாவீது வம்சாவளியை வலியுறுத்தும் குறிப்புகள் யாவும் பிற்காலச் சேர்க்கை மற்றும் வரலாற்று மதிப்பு இல்லாதவை என்று அவர் நம்பினார்.

கிங்ஸ்பரியின் கிறிஸ்து பற்றிய நூல்களில் இயேசு எந்த அமானுஷ்ய குணங்களும் அற்றவராக எந்தவித சிறப்புமில்லாத வழக்கமான ஒரு மனிதனாக வருகிறார். இயேசு கடலில் நடப்பது, புயலைக் கடிந்துகொள்வது, ஜந்து அப்பங்களைப் பெருக செய்து பசித்தவர்களுக்கு உணவளித்தல் போன்ற தெய்வீகச் செயல்களை செய்வதில்லை. அவரது மரணம் தியாகமானது அல்ல. இயேசுவை அவர் வெறும் ஒழுக்கம் கற்பிக்கும் ஆசிரியராக கிங்ஸ்பரி சித்தரித்திருந்தார். நெல்லியடி மத்திய கல்லூரியில் உத்தூளனம், திரிபுண்டரம் அனிந்த அறம் பற்றி பாடம் எடுக்கும் ஒரு வாத்தியாராக கிங்ஸ்பரி இயேசு தெரிகிறார்.

தகப்பனார் தமோதரம் பிள்ளை அவருடைய விவிலிய விரோதத்தில் செய்ததைத்தான் மகனும் செய்து காட்டினார். பழைய ஏற்பாட்டுக் கதைகள், வரலாற்றின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கினார். கிங்ஸ்பரி இயேசுவின் வரலாற்று செய்திகள், போதனை வசனங்களை ஜயத்திக்குரியவை என்றார்.

கிங்ஸ்பரியின் எழுத்துக்கள் இரண்டு விதத்தில் தனித்துவம் பெறுகின்றன. ஒன்று, கிறிஸ்துவின் போதனைகளை விளக்க சைவ புராணங்கள் மற்றும் சிவ பக்தர்களின் நூல்களிருந்து அவர் வழங்கிய அவரது ஒப்பீட்டுப் பணி. உதாரணத்திற்க்கு ஒன்று: சிலுவையில் தொங்கிய இயேசு கடவுள் தன்னைக் கைவிட்டு விட்டாரா என்ற சந்தேகத்தை விளக்க மாணிக்கவாசகர் கடவுள் மீது ஜயுறும் வரிகளை உதாரணம் காட்டினார்: ’ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால்.’

மற்றையது கிறிஸ்தவ திருமறை நூல்களுக்கு யாழ்ப்பாண குழம்புக்கு கறிவேப்பிலையை அள்ளிப் போடுவது போல் சமஸ்கிருத சொற்களைத் தாராளமாக அறிமுகப்படுத்தினார். உதாரணத்திற்குச் சில : பூர்வசுருதி (பழைய ஏற்பாடு); உத்தரசுருத ( புதிய ஏற்பாடு) சுசமாசாரம் நற்செய்தி நூல்கள். யாழ்ப்பாண கிறித்தவ எழுத்துக்கள் சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஒரு நாகரீகமான செயலாக இருந்தது போல் தெரிகிறது. புதிய ஏற்பாட்டை தனி ஆளாக மொழிபெயர்த்த நல்லூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசர் சமஸ்கிருதம் மற்றும் லத்தீன் மொழியாக்கப்பட்ட தமிழ் வார்த்தைகளை பெரிதும் சார்ந்திருந்தார். ’யாகம்’, ’யாகபுண்ணியபலன்’, ’சுயமேதயாகம்’, ’துர் தேவதைகள்’, ’தேவ ஜீவனம்’, ’தேவ இலட்சணங்கள்’ போன்ற வார்த்தைகளை இவரின் திருப்புதலில் காணலாம். சமஸ்கிருத பிடியிலிருந்து, தமிழ் தன்னை விடுவித்துக்கொள்ளும் நாட்களில் இந்த யாழ்ப்பாணத்தவர்களின் சமஸ்கிருதம் கசிந்து வரும் வார்த்தைகள் மோடி பணமதிப்பு நீக்கம் செய்யப்ட்ட ரூபாய்கள் போல் செல்லுபடியாகாது.

கிங்ஸ்பரி அனைத்து வேத, புனித, புராண வேத நூல்களில் தலையிடுவதில் ஒரு தொடர் குறுக்கீட்டாளர். எப்படி இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் எதிரான கிறிஸ்தவ திருமறை போதனைகளையும் சம்பவங்களையும் அவர் துப்பரவுப் படுத்தினரோ அதே வேலையை இந்து புராணங்களுக்கும் சரி சமனாகச் செய்தார். அவர் இயேசுவை மனிதனாக்கியதைப் போலவே, இந்து புராண பாத்திரங்களை மனிதப்படுத்தினார்.

கம்பர் இராமனை விஷ்ணுவின் அவதார புருஷராகவும் இலட்சுமியை சீதையாகவும் தேவர்கள் வானர வீரர்களாகச் சித்தரித்ததைவிட இவருக்கு வால்மீகியின் பெரும் வீரனாக வர்ணிக்கப்பட்ட இராமன்தான் பிடித்திருந்தது. இயற்கைக்கு மிஞ்சியவையும் இயற்கைக்கு மாறானவை அனைத்தையும் நீக்கினார். புராணக் கணக்குப்படி தசரதன் ஆண்டது அறுபதினாயிரம் ஆண்டுகள். இவரைப் பொறுத்தமட்டில் அறுபது வருடங்கள். இவருடைய இராவணனுக்குப் பத்து தலைகளும் இல்லை, இருபது கைகளும் இல்லை. ஒரு தலையும் இரண்டு கைகள் மட்டுமே. இராமாயணத்தில் தோன்றும் இராட்சதர்கள், குரங்குகள், கரடிகள், கழுகுகளை மனிதராகவே பார்த்தார். இவற்றைவிட இந்து தேசியவாதிகளுக்கும் முக்கியமாக மோடிக்கும் எரிச்சல் தரும் விஷயங்களையும் செய்திருக்கிறார். ஆகாயத்தில் செல்லும் விமானம் 20 ஆம் நூற்றாண்டு சமாச்சாரம். இராமனிடம் புஷ்பக விமானம் இருந்ததில்லை என்றார். கௌரவர்கள் குருத்தணு (Stem Cell) ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் தொழில்நுட்பங்களால் பிறந்தவர்கள், மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் பற்றிய அறிவை இந்தியாவும் பெற்றிருந்தது என்பவை என்பது அறிவியலுக்கும், மற்றும் பகுத்தறிவுக்கும் மாறானவை என்று இவர் எற்றுக் கொள்ளவில்லை. இன்று கிங்ஸ்பரி இருந்திருந்தால் அவருடைய வீட்டுக்கு இந்துவவாதிகள் அமுலாக்கத்துறை அதிகாரிகளை அனுப்பியிருப்பார்கள். இதே இந்துத்துவ வாதிகள் பட்டாசு வெடித்து லட்டு பரிமாற வைக்கும் வசனம் ஒன்றும் இவரின் நூலில் உள்ளது: ’இந்து தேசத்துக்குப் பெயர் பரத கண்டம். அதன் பொருள் பரதன் ஆண்ட பெரு நாடு.’ இந்த வரிகள் ஹிந்துத்துவாவின் ஆணாதிக்க சிந்தனையுடன் ஒத்துப் போகக்கூடியது.

இவருடைய இராமாயணத்திலும் பாண்டவர் கதையிலும் காணப்படும் ஸ்திரி புருஷ சம்பாஷனை முதல் நூலிலும் வழி நூலிலும் இல்லை. சமயத்துக்கேற்றபடி கோர்த்தவை என்றார். அதாவது அவருடைய சொந்தக் கற்பனை என்றார். கல்கி, பொன்னியின் செல்வன் ஜெயமோகனை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

அவர் நூல்களின் மனிதநேய மற்றும் அறிவார்ந்த விளக்கங்களில் அவர் அதிக ஆர்வம் காட்டினார். விஞ்ஞான யதார்த்தத்துக்கு எதிரானவையை வெட்டித் தள்ளினார். இவர் துண்டித்து விட்ட பாடல்களில் ஒன்று ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல். இந்த வரிகளை முற்றும் தள்ளினேன் என்றார். அவர் நிராகரித்த வரிகள்:

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான் ’

கிங்ஸ்பரிக்கு உயர்ந்த இறையியல், இலக்கிய இலட்சியங்கள் இருந்தன. அவர் காலத்தில் மிக பிரபலமாக இருந்த வரலாற்றுத் திறனாய்வு கிறிஸ்தவ திருமறைக்கு ஏற்படுத்திய விளைவுகளை பொது மக்களுக்குத் தெரியப்படுத்த முயன்றார். கதைகளில் உள்ள அசம்பாவிதங்களை நீக்கி மெய்க் கதை போல் காட்டுவதுதான் என் நோக்கு என்றார். இது மெய்கதைதான் என்று நிரூபிப்பது அவருடைய அறிவுக்கு மேற்பட்டது என்றார். இவரைப் பொறுத்தமட்டும் நற்செய்தி நூல்கள், பாண்டவர், ராம கதைகள் எல்லாம் வரலாற்று சான்றுகளால் ஆதரிக்கப்படவில்லை மற்றும் ஊக அல்லது கற்பனைக் கதைகளின் வகை சார்ந்தவை.

கடைசியாகத் தமிழ் கிறித்தவர்கள் தமிழை நவீனப்படுத்துவதற்கும் அதன் பாரம்பரிய தொடர்ச்சிக்கும் உதவும் சாதனங்களாக துணைநின்றுள்ளார்கள்... இவர்கள் தமிழ் பராம்பரிய இலக்கியத்தை நன்கு அறிந்திருந்தனர். சிவபுராணத்தின் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏவார்ட்ஸ் கனகசபைப் பிள்ளையின் திருவாக்குப் புராணம், தமிழ் ராமாயணத்தைப் போன்ற ஒரு காவிய வடிவில் படைக்கப்பட்ட கிருஷ்ணபிள்ளையின் இரட்சணிய யாத்திரீகம் ஏகாந்தமான எடுத்துக்காட்டுகள். இவற்றுடன் தேம்பாவணியையும் சேர்ந்துக் கொள்ளாலாம். இது தமிழ் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட புனித யோசேப்பின் வரலாறாகும். இவர்கள் தாங்கள் விட்டுவந்த மத நூல்களை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே அவர்களால் கிறித்தவச் செய்தியை இந்துக் கருத்துகளைப் பயன்படுத்தி விளக்க முடிந்தது. இன்றைய சீர்திருத்த சபை கிறிஸ்தவர்களிடையே இந்தத் தகுதி பெற்றவர்கள் மிகக் குறைவு. வைஷ்ணவரான கிருஷ்ணபிள்ளை, மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காக நரபலி கொடுப்பதை ஏற்கவில்லை. மாறாக, அவர் இயேசுவின் மரணத்தை சங்க கால வழக்கங்களில் ஒன்றான மடலேறுதல் என்று குறியீடாக விளக்கினார். மடலேறுதலில் பொதிந்திருக்கும் இலக்கிய, இறை­யியல் தாற்பரியங்கள் இன்று எத்தனை தமிழ் கிறிஸ்தவர்களுக்கு, ஏன் எத்தனை தமிழர்களுக்குத் தெரியும்.

நன்றி: ‘காலம்'

- சச்சிதானந்தன் சுகிர்தராஜா

(கட்டுரையாளர், எழுத்தாளர், இலங்கைத் தமிழரான இவர் இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது நூல்கள் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹார்டுவேர்டு பல்கலைக் கழகங்களின் வெளியீடுகளாக வந்துள்ளன. தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன், கொரியன், மலேயன், சீன மொழிகளிலும் இவரது நூல்கள் வெளிவந்துள்ளன.)