கடந்த 23-4-2016ம் தேதியன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்திய இந்திய அரசின் கொள்கை ஒப்புதலான ‘நியாயவிலைக்கடைகள் மூடப்படுதல், விவசாய கொள்முதல், விவசாய உற்பத்தி பொருள்களின் சேமிப்பு கிடங்குகளை மூடுதல், விவசாய மானியம்’ உள்ளிட்ட கொள்கைகளை கைவிடுதல் குறித்து செய்தி பெருமளவில் தமிழக மக்களை சென்றடைந்தது. ஏற்கனவே பாஜகமோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளான எரிவாயு மானிய ரத்து ஆகியவற்றினால் ஏமாற்றமடைந்திருந்த தமிழக மக்களை மே17 இயக்கத்தின் இந்த பதிவு பெருமளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல லட்சம் மக்களை சென்றடைந்த இந்த பத்திரிக்கைச் செய்தி காணொளி, பாஜக அரசினை மட்டுமல்லாமல், காங்கிரஸ், அதிமுக என பாராளுமன்றத்தில் அதிக அளவில் பிரதிநிதித்துவமும், அதிகாரமும் பெற்றிருந்த கட்சிகளையும் கேள்விக்குள்ளாக்கியது.

nirmala seetharaman modi

இந்த காணொளி பாஜக அரசின் தேர்தல் வாக்குறுதிகளையும், வெற்றி வாய்ப்பினையும் கேள்விக்குள்ளாக்கிய காரணத்தினால் மே பதினேழு இயக்கத்தின் செய்திக்கு மறுப்பு தெரிவித்து மே மாதம் 5ம் தேதி மத்திய அமைச்சகத்தினால் விளக்கச் செய்தி மே 17 இயக்கத்தின் செய்திக்குறிப்பினை குறிப்பிட்டு வெளியானது. இச்செய்தியை மத்திய அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்கள் தனது இணைய ட்விட்டர் இணைப்பிலும் வெளியிட்டிருந்தார். மே பதினேழு இயக்கம் இந்தக் காணொளி தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை மே மாதம் 4ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பினை சென்னையில் நடத்தி வெளியிட்டிருந்தது. மே 17 இயக்கத்தின் அறிக்கையை அச்சு ஊடகங்கள் பெருமளவில் புறக்கணித்திருந்த நிலையில், திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்களின் அமைச்சரவையினால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பினை தமிழகத்தில் மட்டுமல்லாது ஆங்கில இதழ்களும் செய்தியாக வெளியிட்டது. இச்செய்திக்கான மறுப்பினை மே பதினேழு இயக்கத்திடம் பெறாமலேயே இச்செய்திக் குறிப்பினை மக்களிடத்தில் கொண்டு சென்றன ஊடகங்கள்.

இந்நிலையில், மே பதினேழு இயக்கம் இச்செய்தியை மறுத்து தனது போராட்டத்தினை தொடர்ந்தது. கடந்த மே மாதம் 6ம் தேதி சென்னை வந்த இந்தியப்பிரதமர், பாஜகவின் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தினை தோழமை இயக்கங்களுடன் இணைந்து நடத்தியது. இப்போராட்டத்தினை கைவிடாமல் மே மாதம் 7 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தினை சென்னையில் துவக்கியது. தொடர் போராட்டத்தினை மே பதினேழு இயக்கம் அறிவித்திருக்கிறது. இந்தியாவின் இந்த சரணாகதி மோசடி அரசியலை இந்திய அளவில் அம்பலப்படுத்தி முதன்முதலாக விவாதத்தினை மே பதினேழு இயக்கம் எழுப்பி இருக்கிறது. இந்த அம்பலப்படுத்தலுக்கு உடனடியாக பதிலளித்த மத்திய அமைச்சகத்திற்கு நன்றியை தெரிவிக்கவும் கடமைப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் திருமதி. நிர்மலா சீத்தாரமன் அவர்கள் மே பதினேழு இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரையை இங்கே பதிவிடுகிறோம்.

திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள் பாஜக அரசு பொறுப்பேற்ற 2014 வருடத்தில் உலக வர்த்தக கழகத்தில் ஜூலை 2014இல் இந்தியா எடுத்த நிலைப்பாட்டினை ஆகஸ்ட்5ம் தேதி 2014இல் இந்திய பாராளுமன்றத்தில் பதிவு செய்திருந்தார். அவருடைய ஜூலை நிலைப்பாட்டினை முற்றிலும் மறுத்த நிலைப்பாடாக மற்றுமொரு நிலைப்பாட்டினை அதே வருடம் நவம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் பதிவு செய்திருந்தார். இந்த இரண்டு அறிக்கைகளுக்குமிடையே இருக்கும் முரண்பாடே இந்தியாவின் சரணாகதி எனும் அபாயத்தினை குறியிட்டுகாட்டுகிறது. 2014 நவம்பரில் உலக வர்த்தக கழகத்தில் இந்தியா சரணாகதி அடைந்திருப்பதை அவரது நவம்பர் அறிக்கை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஜூலை 2014இல் நடந்த உலக வர்த்தக கழக சந்திப்பிற்கும், நவம்பர் 2014இல் நடந்த உலக வர்த்தக கழக சந்திப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கும் இருக்கும் வேறுபாட்டினையும், நைரோபி மாநாட்டில் நடந்த தோல்வியைப் பற்றியும் இந்திய மக்களிடம் விளக்குவது அமைச்சகத்தின் கடமையாகும் என்பதை மே பதினேழு இயக்கம் இச்சமயத்தில் பதிவு செய்ய விரும்புகிறது.

அமைச்சரின் 2014 ஆகஸ்ட்டில் பாராளுமம்ன்றத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்த சரத்துகளை சுருக்கமாக பதிவு செய்கிறோம். அமைச்சரது 30 பத்தி அறிக்கையில் பத்தி 3லிருந்து பத்தி8 வரை அவர் இந்த FTAயின் பின்னணி யை விளக்குவதை சுருக்கமாக பின்வருமாறு புரிந்து கொள்ள இயலும்.

மேற்குலக (வளர்ந்த) நாடுகள் ஒரு அணியாகவும், வளரும்-ஏழை நாடுகள் மற்றொரு அணியாகவும் உலக வர்த்தக கழகத்தில் தங்களது நிலைப்பாடுகளையும், கோரிக்கைகளையும் விவாதித்து முடிவெடுக்க அணிகளாக இருந்தன. மேற்குலக கூட்டணி என்பது அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளடக்கியதாக இருந்தது. இந்த கூட்டணி வளரும்-ஏழை நாடுகளின் சந்தைகள் தங்களது வணிகத்திற்காக திறந்துவிடப்பட வேண்டுமென்றும், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வளரும்-ஏழை நாடுகள் கூட்டணியிடம் பேரம் பேசி வந்தன. இவர்களது கோரிக்கையில் முக்கியமான சரத்தாக முன் வைக்கபட்டதான ‘வணிகத்தினை எளிதாக்கும் ஒப்பந்தம்’ எனும் TFA (Trade Facilitation Agreement) ஒப்பந்தம் மையப் புள்ளியாகும். இந்த ஒப்பந்தத்தின் படி சீரான இறக்குமதிக்கான சுங்கவரியை அனைத்து நாடுகளிலும் ஒரே சீரான அளவில் ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அனைத்து நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகள் கூட்டணி அளவற்ற உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய இயலும். உணவு வர்த்தகத்திற்கு இந்த ஒப்பந்தமே மேற்குலகிற்கு அடிப்படையாக அமைகிறது. மேலும், இந்த ஒப்பந்தத்தினூடாக மேற்குலகம் உலக வர்த்தக கழகத்தின் மூலமாக முன்வைத்த நிபந்தனைகள் மிக முக்கிய கவனத்தினை பெறுபவை.

மேற்குலகம் உணவு தானியங்களை வளரும்-ஏழை நாடுகளில் இறக்குமதி செய்தி வணிகம் செய்வதற்கு பெரும் தடையாக இருப்பவற்றினை இந்த நாடுகள் நீக்கவேண்டும், இதன் மூலமாக அனைத்து வணிகத்தினருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் என்று மேற்குலகம் சொல்லுகிறது. அதாவது, வளரும்-ஏழை நாடுகளில் உணவு தானிய வணிகம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறையாகவே இருக்கிறது. இதன் படி இந்த அரசுகள் விவசாயிகளுக்கு மானியங்களை கொடுத்து விவசாய உற்பத்திக்கு குறைந்த அளவில் உற்பத்தி செலவு ஏற்பட உறுதி செய்கிறது. மேலும் உணவு தானியங்களுக்கு விலை நிர்ணயத்தினை அரசே செய்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அடிப்படை விலை உறுதி செய்யபப்டுகிறது. மேலும் இந்த தானியங்களை அரசுகளே விலைக்கு வாங்கி சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட தானியங்களை அரசே குறைந்த விலையில் அல்லது மானிய விலையில் நியாய விலைக்கடைகளின் மூலமாக விநியோகம் செய்கிறது இதன் மூலம் சந்தையிலும் தானியங்களின் விலையை அரசே நிர்ணயம் செய்து கட்டுப்படுத்துகிறது. இதனால் ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியம் கிடைத்து பசியற்ற நிலை ஏற்படுகிறது. ஏழை விவசாயிகளுக்கும் விவசாயம் ஒரு வாழ்வாதாரமாக பெரும் நட்டத்தினை சந்திக்காமல் நடைபெறும் தொழிலாகிறது. இந்த சங்கிலிப் பிணைப்பின் மூலமாக காலணியாதிக்க காலத்தில் நிலவிய பஞ்சத்தினை வளரும்-ஏழை நாடுகள் தவிர்க்கின்றன. பசியை தவிர்ப்பதன் மூலம் வறுமையின் தாக்கத்தினை குறைக்கிறது. இந்த ஏழை உழைப்பாளிகளின் குறைந்த பட்ச வாழ்வாதாரத்தினை உறுதி செய்து அவர்களது உழைப்பினை பெற்றுக் கொள்ளவும் இந்த நாடுகளால் சாத்தியமாகிறது.

இந்த மானிய சங்கிலிகள் மேற்குலகின் வணிக நலனை சிதைக்கின்றன. அதாவது இந்த சங்கிலிப்பிணைப்பினால் உணவு தானியங்களை லாபகரமான தொழிலாக மாற்றுவது இயலாத ஒன்றாகிறது. இதை மாற்றவேண்டுமென்று உலக வர்த்தக கழகம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கிறது. அக்கழகம் முன்மொழியும் கூற்றானது, இந்த மானிய சங்கிலி ஒரு பொருளுக்கான விலையை சந்தையில் நிலவும் ’பொருட்தேவை’ தான் முடிவு செய்யவேண்டுமே ஒழிய, அரசு முடிவு செய்யக் கூடாது என்று விவாதம் செய்கின்றன.

மேலும் இந்த ஒப்பந்தங்களில் நாம் புரிந்து கொள்ளவேண்டிய பகுதி என்னவெனில், இந்த ஒப்பந்தங்களை மீறும் நாடுகள் மீது உலக வர்த்தக கழகத்தில் வழக்கு தொடுக்க இயலும், இப்படியாக வழக்கு தொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமானால், ஒப்பந்தங்களை மீறிய நாடுகளின் வணிகம் பாதிக்கப்படுமளவிற்கோ, அல்லது, நட்ட ஈடோ கொடுக்குமளவு நிபந்தனைகளை எதிர்கொள்ளவேண்டி வரும், வணிக வருமானத்தினை நம்பியே நாடுகளின் பொருளாதாரம் இயங்கும் சூழலில், இந்த நெருக்கடிகள் பெருமளவில் ஒரு நாட்டினை பாதிக்கும். இதனாலேயே வணிக ஒப்பந்தங்களை முடிவு செய்யும் இத்தருணத்திலேயே தங்களுக்கு சாதகமான சரத்துகளை ஒப்பந்தத்தில் இருக்குமாறு அனைத்து நாடுகளும் போராடுகின்றன. இதில் அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம்-ஜப்பான் போன்ற பொருளாதாரத்தில் வலிமையடைந்த நாடுகளின் வணிக ஏற்றுமதிகள் பிற நாடுகளை விட வலிமையாகவும், மறுக்க இயலாததாகவும், இருக்கும். இந்த அம்சங்களை புரிந்து கொள்ளுதல் இந்த விவாதத்தின் ஆழ்த்தினை புரிந்து கொள்ள உதவும் . அதாவது இந்த ஒப்பந்தங்கள் என்பது வணிக விதிகளை வரையரை செய்யும் சட்டவிதிகளாக இனிவரும் காலத்தில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

மேற்குலகம், அல்லது வளர்ந்த நாடுகளின் இந்த ஏற்றுமதி-இறக்குமதி குறித்த ஒப்பந்தம் வளரும்-ஏழை நாடுகளின் உள்நாட்டு சூழலை முற்றிலுமாக சிதைக்கும் என்பதை புரிந்துவைத்திருக்கும் வளரும்-ஏழை நாடுகள் பல கோரிக்கைகளை முன் வைத்தன. அக்கோரிக்கைகளில் முக்கியமானவையாக,

உணவு தானிய கொள்முதல், விவசாயத்திற்கான-விவசாய உற்பத்திகளுக்கான மானியம், உணவு தானிய சேமிப்பு, மானிய விலையில் உணவு தானிய விற்பனை (ரேசன்கடைகள்/ Public Stock Holding) மற்றும் இறக்குமதியாகும் உணவுப் பொருள் உள்நாட்டு சந்தையில் மிகுதியானதாக சேருமெனில் அதை கட்டுப்படுத்த சுங்கவரியை மாற்றியமைக்கும் உரிமை (Speical Safeguard Mechanism- SSM) ஆகியவற்றினை வளரும் நாடுகள் கோரின. உணவு பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் அங்கீகரிக்கப்பட்ட, விவாதத்திற்குட்படாத மானியங்களாக வளர்ந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டுமென வளரும்-ஏழை நாடுகள் வலியுறுத்தின. இந்த கோரிக்கைகளை பச்சைப்பெட்டி என்று அழைக்கப்படுகிறது (அதாவது பிரச்சனைக்குரிய பகுதியாக பார்க்கப்படாது). இந்த நடவடிக்கைகளை வளரும்-ஏழை நாடுகள் மேற்கொள்ளும் பொழுது இந்த நடவடிக்கைகளை சர்வதேச அளவில் வழக்குகளாக பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது போன்றவற்றினை இந்த நாடுகள் முன் வைத்தன. இந்த கோரிக்கைகளை ஒன்றுபடுத்தி 2001ஆம் ஆண்டு தோஹா நகரில் நடந்த மாநாட்டில் இந்தியாவின் தலைமையில் 100க்கும் அதிகமான நாடுகள் முன்வைத்தன. இந்த கோரிக்கை அறிக்கையையே ’தோஹா வளர்ச்சி ஒப்பந்தம்’ என்று வளரும்-ஏழை நாடுகள் பெயரிட்டன. இந்த கோரிக்கை மீது எந்த தீர்வும் எட்டப்படாமல் 2013வரை நீடித்தது.

வளர்ந்த மேற்குலக நாடுகளின் கோரிக்கையின் பிரதானமாக கோரிக்கையான ‘வணிகத்தினை எளிதாக்கும் ஒப்பந்தம்’ எனும் TFA (Trade Facilitation Agreement) ஒப்பந்தத்தினை வளரும்-ஏழை நாடுகள் ஏற்கவேண்டுமெனில் ’தோஹா வளர்ச்சி ஒப்பந்ததினை’ மேற்குலகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை வைத்தன.

இந்த நடவடிக்கை காரணமாக உலக வர்த்தக கழகத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் முட்டுக்கட்டையானது. ஏனெனில் வளரும்-ஏழை நாடுகளில் மானியக் கோரிக்கைகளை மேற்குலகம் ஏற்கவில்லை. மற்றும், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது விவசாயிகளுக்கு கொடுக்கும் அபரிமிதமான மானியத்தினை கொடுத்துவருவது கேள்வி எழுப்பப் படாமல் தவிர்க்கப்பட்டது. உலக வர்த்தக கழகத்தின் வலைப்பின்னலில் வளரும்-ஏழை நாடுகள் சிக்கி சீரழியும் நிலையில் இந்த ஏழை நாடுகள் ஒன்றாக நின்று தங்களது கோரிக்கைகளை முன்னகர்த்த முயன்றன. இந்த தோஹா ஒப்பந்தத்தினை தலைமையேற்று வழி நடத்திய குழுவில் இந்தியாவும், பிரேசிலும், இந்தோனேசியாவும், சீனாவும் முக்கியமானவை. குறிப்பாக 2001லிருந்து இந்தியா இந்த கோரிக்கையை வழிநடத்தியது.

இந்நிலையில் அமெரிக்கா இந்த நாடுகளில் தனது தனிப்பட்ட பலத்தினை பயன்படுத்தி ஏற்படுத்திய ஒப்பந்தங்கள், புரிதல்கள் ஆகியவை காரணாக இந்த முன்னணியில் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்தது. இந்நிலையில் பிரேசில் நாட்டிலிருந்து உலக வர்த்தக கழகத்தில் பிரதிநிதியாக பங்கேற்ற ஆஸ்வெடோஸ் எனும் அமைச்சராக இருந்தவர், உலக வர்த்தக கழகத்தின் தலைவராக மாற்றப்பட்டார். இதன் பின்னர் பிரேசில் உலக வர்த்தக கழகத்தில் அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளின் நலனுக்காக பிரேசில் மற்றும் வளரும் நாடுகளின் நலனை பலியிடப் படுவதற்கான நகர்வுகள்மேற்கொள்ளப்பட்டன.

மேலும் தோஹா கோரிக்கைகளை முழுமையாக பேசி தீர்க்க இயலாது என்று சொல்லி, தோஹா கோரிக்கைகளை ஒவ்வொன்றாக விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு தீர்க்க வேண்டுமென்று மேற்குலகம் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் தோஹா கோரிக்கைகளைப் பற்றிய ஒட்டுமொத்த முடிவெடுக்கப்படாமல் பிரித்து கையாளப்பட்டது. இந்த யுக்தி வளரும்-ஏழை நாடுகளுக்கு எதிராக நின்றது. இதன்பின்னர் அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணி , தங்களது கோரிக்கையை வலுவாக்கி முன்னகர்த்தின. அதே நேரம் ஏழை-வளரும் நாடுகள் கூட்டணி பின்னடைவை தொடர்ந்து சந்தித்தது.

இந்நிலை தொடர்ந்து நடந்து வந்த பொழுதில் 2013இல் பாலி நகரில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் அரசின் அமைச்சர் ஆனந்த் சர்மா, உலக வர்த்தக கழகத்தில் ஏற்பட்ட முடக்கத்தினை முடிக்கவேண்டுமென்கிற பெயரில் இந்த ’வணிகத்தினை எளிதாக்கும் ஒப்பந்தம்’ எனும் TFA (Trade Facilitation Agreement) ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தது பெரும் பின்னடைவானது. இதற்கு பதிலீடாக மேற்குலகம் முன்வைத்த சலுகைகளாக சிலவற்றினை வளரும்-ஏழை நாடுகளுக்கு முன்வைக்கப் பட்டது. அவையாவன, உணவு தானியத்தினை சேமித்துவைக்கும் திட்டத்தினைக் குறித்து 2017க்குள் முடிவெடுக்கப்பட வேண்டும், ரேசன் மானியம், தானிய விநியோகங்கள், விவசாய மானியம் ஆகியவை 2017வரை சர்வதேச அளவில் வழக்கு தொடுக்காது என்கிற ‘அமைதி ஒப்பந்தத்தினை’ ஏற்படுத்தினார்கள். மேலும் மிக முக்கிய கோரிக்கையான சிறப்பு பாதுகாப்பு வழிமுறை எனப்படும் ‘ மிதமிஞ்சிய இறக்குமதியால் உள்நாட்டு சந்தை பாதிக்கப்படுமெனில், சுங்கவரியை உயர்த்திக்கொள்ளும் அரசின் உரிமையை’க் (SSM-Special Safeguard Mechanism) குறித்தும் 2017க்குள் முடிவெடுக்கபப்ட வேண்டுமென பாலி மாநாட்டில் முடிவானது. இது பெரும் சோர்வையும் பின்னடைவினையும் ஏற்படுத்திய மாநாடாகும்.

இந்நிலையில் 2014 மே மாதத்தில் ஆட்சியேற்ற பாஜக அரசு 2014 ஜூலையில் உலக வர்த்தக கழகத்தில் ஒருகடுமையான் நிலைப்பாட்டினை மேற்கொள்வதாக அறிவித்தது. அதாவது பாலி மாநாட்டில் ஒப்புக்கொண்டதைப் போல TFA (Trade Facilitation Agreement) எனும் ஒப்பந்தத்தினை இந்தியா கையெழுத்திடாது என்று பகிரங்கமாக அறிவித்தது. இவ்வாறு கையெழுத்திடவேண்டுமெனில், தோஹா நிலைப்பாட்டினை மேற்குலகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வாதம் செய்தது. இந்த நிலைப்பாடு TFA (Trade Facilitation Agreement) நடைமுறைப்படுத்தப்படாமல் முட்டுச்சந்தில் நிற்கவேண்டிய நிலை மேற்குலகிற்கு ஏற்பட்டது.

இந்த நிலைப்பாடு வளர்ந்த-ஏழை நாடுகளுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்நிலையை திருமதி.நிர்மலா சீத்தாராமன் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி 2014இல் பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிக்கையில் விளக்கமாக அவர் TFA (Trade Facilitation Agreement) ஒப்பந்த்தில் ஏன் இந்தியா கையெழுத்திட முடியாது என்பதை விளக்கி இருந்தார். அந்த அறிக்கையின் பத்தி 3லிருந்து 8 வரையிலான பத்தியில் அவர் இந்த நிலைப்பாட்டினை விரிவாக பேசி இருந்தார். அந்த உரையில் அவர் TFA (Trade Facilitation Agreement) ஒப்பந்தத்தினை இந்தியா ஏற்க வேண்டுமெனில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையான தோஹா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும், குறிப்பாக, உணவு தானிய சேமிப்பு, பொது விநியோகம், விவசாய மானியம், குறைந்த பட்ச விலை நிர்ணயம், சிறப்பு பாதுகாப்புக்கான உரிமை (SSM-Special Safeguard Mechanism) ஆகியவற்றினை மேற்குலகம் ஏற்காமல் TFA (Trade Facilitation Agreement) எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை எனப் பேசினார்.

அவர் பேசியதாவது ,

பத்தி எண்6: சில வளர்ந்த நாடுகள் Trade Facilitation ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு காட்டிய ஆர்வத்தினை காட்டிய பொழுதிலும், (வளரும்-ஏழை நாடுகள் முன் வைத்த) கோரிக்கைகளைப் பற்றி பேசுவதற்கு தயக்கம் காட்டினர்.

பத்தி எண் 7: இந்த நாடுகளின் தயக்கத்தினையும் எதிர்ப்பினையும் கண்ட வளரும் நாடுகளுக்கு , Trade Facilitation Agreement ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டால் உணவுப்பாதுகாப்பிற்கான கோரிக்கை, உணவு தானியங்களை சேமிப்பது போன்ற கோரிக்கைகள் புறக்கணிக்கப்படும் எனும் கவலை ஏற்பட்டது.

பத்தி எண் 8: அதனால் உணவு தானியத்தினை சேமிப்பது பற்றிய நிரந்தர தீர்வு மற்றும் பாலி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் மற்றும் ஏழை நாடுகளின் கோரிக்கைகள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான உறுதிமொழியும், நடவெடிக்கையும், உறுதியும் பெறாமல் Trade Facilitation Agreement எனும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என்கிற நிலைப்பாட்டினை எடுத்திருக்கிறது.

6. In contrast to their efforts on Trade Facilitation in the WTO, some developed countries have been reluctant to engage on other issues.

7. Seeing the resistance to taking forward the other Decisions, the apprehension of developing countries was that once the process of bringing the Trade Facilitation Agreement into force was completed, other issues would be ignored, including the important issue of a permanent solution on subsidies on account of public stockholding for food security purposes.

8. India, therefore, took the stand that till there is an assurance of commitment to find a permanent solution on public stockholding and on all other Bali deliverables, including those for the Least Developed Countries (LDCs), it would be difficult to join the consensus on the Protocol of Amendment for the Trade Facilitation Agreement.

இவ்வாறாக நிலைப்பாட்டினை பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் 5, 2014இல் அறிவித்த திருமதி.நிர்மலா சீத்தாராமன், அதே ஆண்டில் நவம்பர் மாதத்தில் உலக வர்த்தக கழகத்தில் இதே Trade Facilitation Agreement இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். இந்திய மோடி அரசின் இந்த திடீர் நிலைப்பாட்டினை எடுக்க காரணம் என்ன எனும் கேள்வியே இங்கு எழும்புகிறது. இந்த ஒப்பந்தத்தினை இந்தியா ஏற்றுக்கொண்டது எனில், வளரும்-ஏழை நாடுகளின் (இந்தியா உள்ளிட்ட) கோரிக்கைகளை வளரும் அமெரிக்கா-ஐரோப்பிய கூட்டணி ஏற்றுக்கொண்டதா எனில், அவ்வாறு எந்த உடன்பாடும் நடைபெறவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையை இந்திய அரசு பூசி மொழுகுகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட வளரும்-ஏழை நாடுகள் முன்வைத்த தோஹா கோரிக்கைகளில் ஒன்றினைக்கூட மேற்குலகம் ஏற்கவில்லை மாறாக இது குறித்து 2015 டிசம்பர் மாதத்திற்குள் முடிவெடுப்பதாக மட்டுமே வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இந்த வெற்று வாக்குறுதியை நம்பி இந்தியா கையெழுத்திட்டது. இந்நிலையில், 2015 டிசம்பர் 15இல் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நகரில் உலக நாடுகளின் அமைச்சர்களின் மாநாடு உலக வர்த்தக கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் விவசாய மானியம், உணவு தானிய கொள்முதல், மானிய விலையில் விநியோகம், தடையற்ற இறக்குமதியின் மீது சுங்கவரியை மாற்றியமைக்கும் அரசின் உரிமை போன்ற தோஹா பேச்சுவார்த்தையின் முடிவுகளைப் பற்றி பேசி தீர்ப்பது என்கிற சூழலில் இந்த நாடுகள் சந்தித்தன.

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் மிக முக்கியமான கோரிக்கைகளை வென்றெடுக்க துருப்புச்சீட்டாக 13 ஆண்டுகளாக பயன்பட்ட கோரிக்கைகளையும், அக்கோரிக்கைக்காக இந்தியாவின் பின்னனியில் அணிவகுத்த 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய நாடுகளின் மக்களையும் தனது நடவடிக்கையினால் துரோகமிழைத்திருக்கிறது பாஜக அரசு. இந்தியாவின் இந்த ஒப்புதலுக்கு பின்னர் இந்தியாவின் பின்னால் அணி வகுத்திருந்த பல எளிய நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புகொள்ளவேண்டிய நெருக்கடி ஏற்பட்டு இந்த ஒப்பந்தம் நிறைவேறியது. மேற்குலகம் 9 ஆண்டுகளாக திண்டாடிக் கொண்டிருந்த கோரிக்கையை மிக எளிதாக கடந்து செல்ல இந்தியா உதவியது.

நான்கு மாதங்களுக்குள் இந்தியாவின் நிலைப்பாடு தலைகீழாக மாறியது எந்த அடிப்படையில் என்கிற கேள்வியை மே பதினேழு இயக்கம் எழுப்புகிறது. நவம்பர் 2014இல் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணமும், மோடி-ஒபாமா சந்திப்பும் இந்தியாவின் சரணாகதிக்கான காரணியாக பின்னனியில் இருந்தது என்பதை மே பதினேழு இயக்கம் குற்றச்சாட்டாக முன்வைக்கிறது. இந்தியாவின் அமெரிக்கா உடனான உறவும், பாஜக மோடி அரசின் அமெரிக்க சார்பு நிலையும், 2014 ஜூலையில் எடுத்த மிகத் தீவிரமான அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு நிலைப்பாடு ஓரிரு மாதங்களில் தலைகீழாக மாறிப்போனது. இந்த நிலைப்பாட்டில் ஏற்பாட்ட மாற்றத்தினை மக்களிடம் பாஜக மோடி அரசு விளக்கம் கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. மிக முக்கிய ஒப்பந்தங்களை நிறைவேற்ற இயலாமல் மேற்குலகத்திற்கு சாதகமான ஒப்பந்தத்தினை நிறைவேற்றியதன் அவசியமும், பின்னனியையும் இந்த அரசு வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இக்கேள்வியையே மே பதினேழு இயக்கம் பகிரங்கமாக மக்களின் முன் எழுப்பியது.

மேலும், நைரோபி நகரில் நடந்த அமைச்சர்களின் மாநாட்டின் துவக்க உரையில் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களின் முழுமையான பொது உரையில் பேசும் பொழுது வளரும்-ஏழை நாடுகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் மறுதலிக்கும் வளர்ந்த நாடுகளின் போக்கு ஏமாற்றமளிக்கிறது என்று பதிவு செய்தது பல்வேறூ குறிப்புகளை அளித்தது. குறிப்பாக, Trade Facilitation Agreement ஒப்பந்தத்தினை கையெழுத்திட்ட பின்னர் நடைபெறும் நைரோபி மாநாடு என்பது வளரும்-ஏழை நாடுகளின் கோரிக்கைகளான மானியங்கள், தானிய சேமிப்பு, தானிய கொள்முதல், உணவு தானிய விநியோகம், இறக்குமதிக்கு எதிரான பாதுகாப்பு சுங்கவரி விதிப்பு ஆகியவற்றிற்காக மேற்குலகோடு கடுமையான நிலைப்பாட்டினை எடுத்து வெற்றிபெறவேண்டிய ஒரு மாநாட்டின் துவக்க உரையிலேயே தங்களது ஆர்வமின்மையை திருமதி.நிர்மலாசீதாரமன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு வலிமையான தலைமை இந்தியாவிற்கு பின்னால் நிற்கும் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு அளிக்காமல் சரணாகதி அடையும் ஒரு தோல்வி குறிப்பு மனநிலையோடே அவரது பேச்சு பதிவு செய்யப்பட்டது. இந்த மனநிலை மேற்குலகிற்கு இந்தியாவின் நிலைப்பாட்டினை வெளிச்சம் போட்டு காட்டியது. இதற்கு அடுத்த நாளில் இந்த உணவு தானிய சேமிப்பு, மானியங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஒரு பேச்சுவார்த்தைக்குழு உருவாக்கப்பட்டது. இந்தோனேசியாவின் பிரதிநிதி விவசாயம் குறித்தான இந்த விவாதத்தில் தங்களது நிலைப்பாட்டினை மேற்குலகிற்கு சாதகமாக சரணடைந்தார். இந்தக் குழுவில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த மானியங்கள் குறித்து வளரும் நாடுகள் /மேற்குலகோடு விவாதித்தி முடிவெடுக்கவேண்டிய அமர்வாக ஏற்பாடு செய்யப்பட்ட மிக முக்கிய கூட்டத்தில் திருமதி. நிர்மலா சீத்தாராமன் உணவு பாதுகாப்பைப் பற்றி பேசாமல் தவிர்த்திருக்கிறார். மேலும் மிக முக்கியமான கூட்டமான சிறப்பு பாதுகாப்பு முறைகளுக்கான கூட்டத்தில் (Special Safeguard Mechanism SSM) பங்கேற்காமல் தவிர்த்திருக்கிறார். இந்த நிகழ்வுகளே இன்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் சந்திக்கும் கடுமையான பின்னடைவிற்கு காரணமாக இருந்திருக்கிறது எனில் மிகையல்ல. இவரது இந்த புறக்கணிப்பு இந்திய மக்களிடத்தில் விளக்கப் படவேண்டிய முக்கிய நிகழ்வு. ஏனெனில் எந்த மானியத்திற்காகவும், கோரிக்கைக்காகவும் நைரோபி மாநாட்டில் இந்தியா பங்கெடுத்ததோ அந்த குறிப்பிட்ட மிக முக்கியமான கோரிக்கைக்குரிய விவாதத்தில் பங்கேற்காமல் இந்தியா தவிர்த்ததை மே பதினேழு இயக்கம் கேள்வி எழுப்புகிறது. இக்கேள்வி இதற்கு முன்பே எழுப்பப்பட்ட பொழுதில் இந்தியாவின அமைச்சரவை மெளனம் காத்ததை மே பதினேழு இயக்கம் சுட்டி காட்ட விரும்புகிறது.

மேலும் ’பச்சை அறை’ எனும் உள் அரங்க கூட்டம் குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பொழுது வளர்ந்த நாடுகளின் தோஹா எதிர்ப்பு நிலைப்பாடு குறிப்பாக உணவு தானிய சேமிப்பு, உணவு விநியோகம், மானியங்கள் ஆகியவை குறித்து எந்த விவாதத்தினையும் எழுப்பாமல் அமைதிகாத்திருக்கிறது என்பது பல்வேறு ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. உலக வர்த்தக கழகத்திற்கான பத்திரிக்கையாளர்கள் இது குறித்து ஜெனீவாவில் இருந்து நேரடியாக இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் குறித்து கட்டுரைகளை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த கோரிக்கைகள் குறித்து குறிப்பாக உணவு தானியங்களை சேமிப்பது குறித்து மேற்குலகம் வளரும்-ஏழை நாடுகளின் கோரிக்கையான உணவு தானியத்தை சேமித்து வைக்கும் உரிமையை ஏற்றுக்கொள்வது குறித்தும், எந்த தயாரிப்போ, அதனை வலியுறுத்திப் பேச நட்பு நாடான தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளையும் இப்பேச்சுவார்த்தையில் இணைத்துக் கொள்ளவோ வலியுறுத்தாமல் இந்தியா இந்த முக்கிய பேச்சுவார்த்தையை தோல்வியுறச் செய்தது என்பதை செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

நைரோபி மாநாட்டிற்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எடுக்கவேண்டிய கூட்டம், இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் அணியில் விவாதிக்கப்பட்ட பொழுது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், தோஹா பேச்சுவார்த்தை முற்றுப்பெற்று விட்டதாக தெரிவித்தது. இதனை சீனா எதிர்த்து ஒரு கருத்து யுத்தமே நடத்தியது. ஆனால் இந்தியா சீனாவை ஆதரித்து இந்திய மக்களுக்காக பேசாமல் மெளனம் சாதித்ததாக ஜெனீவா செய்திகள் சொல்கின்றன.

 இந்தக் குறியீடுகள் இந்தியா ஒட்டுமொத்தமாக சரணாகதியடைந்ததை அம்பலப்படுத்தி இருக்கிறது. எப்படி இந்தோனேசியாவினை அமெரிக்கா தனது உறவுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தோஹா கோரிக்கை பட்டியலை முன்னெடுக்கும் குழுவில் இருந்து வெளிக்கொண்டுவந்து தனக்கு சாதகமாக்கியதோ, எவ்வாறு பிரேசிலை தனக்குரிய சாதகமான நாடாக மாற்றியதோ அவ்வாறு இந்தியாவையும் மோடி அரசின் சரணாகதி அரசியலைக் கொண்டு இந்த தோஹா கோரிக்கைகள் எனும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான கோரிக்கைகளை குழி தோண்டி இந்தியா புதைத்திருக்கிறது.

ஆக மொத்தம் நைரோபி மாநாடு எனும் இந்த மிக முக்கிய கருத்தரங்கில் இந்தியா தனக்கான கோரிக்கைகளை வலிமையாக வாதிட்டு பெறவேண்டிய தருனத்தில் ஒட்டு மொத்தமாக சரணடைந்திருக்கிறது. மேற்குலகம் தனக்கு தேவையான இறக்குமதிக்கான வணிக பரிமாற்று ஒப்பந்தத்தினை நிறைவேற்றி வெற்றி பெற்றிருக்கிறது. கிட்டதட்ட 67லட்சம் கோடிக்கான வணிக சந்தையை மேற்குலகம் பெரும் இந்த ஒப்பந்தத்தினை தனக்குரிய கோரிக்கைகள் ஏதும் நிறைவேறாமல் ஏற்றுக்கொண்டிருக்கிறது இந்தியா. இந்த நிலைப்பாடினால் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் ஏழை –வளரும் நாடுகளின் மக்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

இந்த பலியிடல் நைரோபி மாநாட்டில் நிகழ்ந்திருக்கிறது, இந்தக் கூட்டத்தொடர் முடிந்த உடன் உலக வர்த்தக கழகத்தின் தலைவர் ‘தோஹா கோரிக்கை ஒப்பந்தம்’ செத்துப் போய்விட்டது என்று பதிவு செய்திருக்கிறார். ஏழை –வளரும் நாடுகளின் இந்தக் கோரிக்கைகளைஇனிமேலும் செவிமெடுக்க்வேண்டிய அவசியமில்லை என்று மேற்குலகின் நாடுகள் பதிவு செய்திருக்கின்றன.

நைரோபி மாநாட்டில் அனைத்தும் முடிந்துவிடவில்லை என இந்தியா சொல்கிறது. அதாவது மேற்குலகோடு உனவு தானிய சேமிப்பு, அளவற்ற இறக்குமதிக்கு எதிரான சுங்கவரி , விவசாய மானியம் குறித்தானவிவாதங்கள் முடிந்து விடவில்லை. இந்த விடயங்களில் இந்தியாவினை தடுத்து நிறுத்த இயலாது என்றும் நிர்மலா சீதாராமன் அவர்கள் மே பதினேழு இயகக்த்திற்கான பதிலில் பதிவு செய்திருக்கிறார். இந்த பதிலின் உண்மைத் தன்மையை நாம் ஆய்வு செய்வது அவசியம். மேற்குலகில் இருந்து தடையற்ற இறக்குமதிக்கான சீரான சுங்கவரிக்கான ஒப்பந்தம் எனும், TFA trade Facilitation Agreement எனும் இந்த ஒப்பதம் மூலமாக அளவற்ற உனவு தானியங்களை மேற்குலகம் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யும் பட்சத்தில் , இந்த அளவிற்கு அதிகமான உணவு தானியத்தின் வரவினை தடுக்கும் விதத்தில் சுங்கவரி விதிமுறையை மாற்றி இந்த அபரிமிதமான, உள்நாட்டு சந்தையை சீரழிக்கும் இறக்குமதியை தடைசெய்யும் உரிமை இல்லாமல் எப்படி இந்திய விவசாயிகளுக்கு இந்திய அரசு பாதுகாப்பளிக்க இயலும்.

இந்தியாவிற்குள் இறக்குமதியை செய்வதை தடுக்கும் வகையில் இந்தியா ஏதேனும் நடவெடிக்கை எடுக்கும் பட்சத்தில் உலக வர்த்தக கழகம் இதற்கு எதிரான நடவெடிக்கை எடுப்பது என்பதை இந்தியா எப்படி தடுக்க இயலும்?.. ஆனால் இந்த சிறப்பு பாதுகாப்பு வழிமுறையை (SSM-Special Safeguard Mechanism) குறித்து தொடர்ந்து கால அளவின்றி பேசலாம் என்று மேற்குலகம் சொல்லி இருக்கிறது. மேலும் இந்த SSM என்பதை சமாதானப் பிரிவு எனும் பிரிவிற்குள் மேற்குலகம் கொண்டுவரவில்லை. இந்த சமாதானப் பிரிவு என்பது என்னவெனில், ஒரு தீர்மானகரமான முடிவெடுக்கும் வரை சில பிரிவுகளை அல்லது அரசின் நடவடிக்கைகளை உலகவர்த்தக கழகத்தின் சட்ட விசாரணைக்குள் மேற்குலகம் கொண்டு வராது என்பதே இந்த ‘சமாதானப் பிரிவு’ என்பதாகும். உணவு தானிய சேமிப்பு, விவசாய மானியம் போன்றவற்றினை இந்த சமாதானப் பிரிவிற்குள் கொண்டுவர மேற்குலகம் 2013இல் ஒத்துக்கொண்டது. அதாவது TFA எனும் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னரும் 2017 வரை உணவு தானியத்தினை சேமிப்பது, உணவிற்கான மானியம் கொடுப்பது, விவசாய மானியம் கொடுப்பது ஆகியவற்றினை பிரச்சனைக்குரிய வழக்காக மாற்றாமல் கால அவகாசத்தினை மேற்குலகம் கொடுத்தது. இந்த வகையில் பருத்தி உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கான மானியம் 2017 வரை அனுமதிக்கப்பட்டிருக்கிறது 2017 வருடத்தின் முதல் தேதியில் இருந்து இந்த மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது ஒப்பந்தம். இதில் இருந்து சில பிரிவுகளுக்கு விலக்கினை இந்தியா உள்ளிட்ட நாடுகள் சில காலத்திற்கான அவகாசத்தினைப் பெற்றிருக்கிறது எனப்தைக் கடந்து வேறெந்த வெற்றிகரமான ஒப்பந்தத்தினையும் இந்தியா பெற்றிடவில்லை. அப்படி பெற்றிருப்பின் இந்திய அரசு இது குறித்து வெளிப்படையாக அறிவிப்பது நலம். தோஹா கோரிக்கைகள் பலிடப்பட்டதாகவும், செத்துவிட்டதாகவும் பகிரங்கமாக உலக வர்த்தக கழகத்தின் தலைவரால் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்தக் கோரிக்கைகளை மேற்குலகம் ஏற்கவேண்டுமென்கிற கட்டாயம் இல்லை.

இதனாலேயெ இந்த கோரிக்கைகளை கட்டாயமாக நிறைவேற்றவேண்டுமென்கிற நிலைப்பாட்டில் இருந்து மேற்குலகம் ( best endeavor clause) எனும் ’முயற்சி செய்கிறோம்’ எனும் பிரிவிற்குள் தள்ளி இருக்கிறது. அதாவது இக்கோரிக்கைகளை கட்டாயம் ஏற்கவேண்டுமென்கிற இடத்திலிருந்து, இந்த கோரிக்கைகளை கவனத்தில் எடுக்க முயற்சி செய்கிறோம் எனும் நிலைக்கு மேற்குலகம் தள்ளி இருக்கிறது. இதற்கான முழு ஒத்துழைப்பையும் இந்திய மோடி அரசு செய்திருக்கிறது. இந்த ‘முயற்சி’ செய்யும் எனும் மேற்குலகின் ’சகாய மனநிலையையே’ , இந்திய அரசு தான் இன்னும் தோற்றுவிடவில்லை எனும் முழக்கமாக திருமதி.நிர்மலா சீதாராமன் அமைச்சரவையின் மூலமாக தெரிவித்திருக்கிறது.

இதே போன்று உணவு தானிய சேமிப்பினை குறித்தும் காலவரம்பின்றி விவாதித்து முடிவெடுக்கலாம் என்று மேற்குலகம் சொல்லி இருப்பதை விவாதமின்றி ஏற்றூக்கொண்டிருக்கிறது இந்தியா அரசு. எனில், தடையற்ற இறக்குமதி, உணவுதானிய சேமிப்பது தடுக்கப்படல், உணவு தானிய கொள்முதல் , விவசாய மானியம் ஆகியவை நிலையற்று தொடர்ந்து விவாதிக்கப்படும் வரை உள்நாட்டு சந்தை தாக்குபிடிக்க இயலுவது சாத்தியமல்ல.

ஆக வெற்று வாக்குறுதிகளை நம்பி இந்தியாவின் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தினை அமெரிக்க-ஐரோப்பிய வெள்ளையர்களின் காலடியில் பலியிட்டிருக்கிறது மோடி அரசு என்பதே உண்மை. இந்த புதியகாலணியாதிக்க ஒப்பந்தத்தினையே மே பதினேழு இயக்கம் கேள்விக்குள்ளாக்குகிறது.

இந்த விவாதத்தின் பொழுது மேலுமொரு முக்கிய நிகழ்வினை கவனத்திற்கு கொண்டு வர மே பதினேழு இயக்கம் விரும்புகிறது. 2014 ஆகஸ்டு மாதத்தில் இந்திய பாராளுமன்றத்தில் திருமதி.நிர்மலா சீதாராமன் பதிவு செய்த மேற்குலகிற்கு எதிரான நிலைப்பாடு எனும் நாடகத்திற்கு இரண்டு வாரங்கள் கழித்து, பாஜக கட்சியின் இமாசல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சாந்தக்குமார் தலைமையில் உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியை ஏற்பாடு செய்தது. இந்த கமிட்டி , இந்தியா மேற்குலகிற்கு சாதகமான ஒப்பந்தமான TFAஇல் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குள்ளாக 21 ஜனவரி 2015இல் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி

“ உணவுப் பாதுகாப்பு சட்டப்படி பயனடைபவர்களின் எண்ணிக்கையை 67 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும்; உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது ஆகியவை தான் சாந்தகுமார் குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ஆகும். அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கான மானியத்தை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம் என்பது அடுத்த பரிந்துரையாகும்.

மேலும், உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்குவதற்கு பதிலாக உணவு மானியத்தை பணமாக வழங்க வேண்டும் என்ற இந்த பரிந்துரையை முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மட்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவது பற்றி அனைத்து யூனியன் பிரதேச அரசுகளுக்கும் பிப்ரவரி 10 ஆம் தேதி மத்திய உணவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் இந்த பரிந்துரையை 3 வழிகளில் செயல்படுத்தலாம் என்று மத்திய உணவுத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இவற்றில் முதலாவது, நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அவற்றுக்கான மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வெளிச்சந்தையில் பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி கூறுவது ஆகும். இரண்டாவது, நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை சந்தை விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்; இதற்காக பொதுமக்கள் கூடுதலாக எவ்வளவு செலவழிக்கிறார்களோ, அந்த தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவது ஆகும். மூன்றாவது, உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை இப்போது உள்ளவாறே வழங்குவது; ஆனால், குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைத்தவர்களுக்கு மட்டுமே உணவு தானியங்களை வழங்குவது என நிபந்தனை விதிப்பதாகும். முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ள இத்திட்டத்தை அடுத்தகட்டமாக மாவட்டத் தலைநகரங்கள், மாநகராட்சிகள் உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.”

இந்த அறிக்கை மிகத் தெளிவாக இந்திய அரசின் ரேசன் கடை ஒழிப்பினை, உணவு தானியமானியத்தினை பகிரங்கபடுத்தி இருக்கிறது. இதையே மே பதினேழு இயக்கம் மக்களிடம் அம்பலப்படுத்தியிருக்கிறது, ஆனால் இதற்குரிய பதிலை வெளிபடையாக அளிக்காமல் பொய்யாக மக்களை திசை திருப்பும் வகையில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது மத்திய அமைச்சகம்.

ஆகவே இந்திய அரசு இது குறித்து பகிரங்கமான விவாதத்திற்கு ஏற்பாடு செய்வதும், இந்தியாவின் இந்த மக்கள் விரோத நிலைப்பாட்டினை மாற்றுவதும் உடனடி தேவையாகும். உலக வர்த்தக கழகத்தில் இருந்து இந்தியா வெளியேறுவது மட்டுமே இந்தியாவின் ஏழை எளிய மக்களின் வாழ்வாதரமும், விவசாயமும் பாதுகாக்கப்படுவதற்கான குறைந்த பட்ச வழிமுறையாகும் என்று மே பதினேழு இயக்கம் இச்சமயத்தில் வலுயுறுத்துகிறது. ஆக மக்களிடம் உண்மையை மறைத்தும், தவறான வாக்குறுதிகளையும் கொடுத்து வருவதை மோடி தலைமையிலான அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ளாவேண்டும். உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேறும் வரை ஜனநாயக போராட்டத்தினை மே பதினேழு இயக்கம் தொடரும் என மக்களிடத்தில் பகிரங்கப்படுத்துகிறது.

- மே பதினேழு இயக்கம்

Pin It