விடுதலை இந்தியாவில் ஏதோ மாபெரும் புரட்சி ஏற்பட்டதைப்போல், 8.11.16 அன்று இந்தியப் பிரதம அமைச்சர் திரு.நரேந்திரமோடி அறிவித்த, ரூ.500, 1000/- நோட்டுகள் செல்லாது என்ற கொள்கைச் செயல்பாடாகும்.

நான் ஒரு மூத்த பொருளாதாரப் பேராசிரியர் என்ற முறையில், பொருளாதார வரலாறு, சித்தாந்தம், கொள்கைவழிச் செயல்பாடுகள் தந்த படிப்பினையின் அடிப்படையில் இன்றைய மைய அரசின் செயல்பாடுகள் ஒரு விதத்தில் வரவேற்கத்தக்கது என்றாலும், எந்த நோக்கத்திற்காக ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று கூறப்பட்டதோ அது நிறைவேற்றப்படுமா என்பது பெருத்த ஐயப்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளான ரூ. 500, 1000 ஆகியவைகளை செல்லாது என்று அறிவிப்பதால், கருப்புப்பணம், கள்ளப்பணம், லஞ்சப்பணம், மொத்தத்தில் வருவாய்க்குமேல் உள்ள பணத்தை கணக்கில் கொண்டு வரலாம் என்பது இதன் அடிப்படை நோக்கம். அதே நேரத்தில் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள ‘பயங்கரவாத’ அமைப்புகளின் பணபட்டுவாடாக்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரலாம் என்பதும் இதன் செயல்பாட்டு நோக்கமாகும்.

இந்திய பொருளாதார வரலாற்றில் 1978-இல் ரூ. 1000, 5000, 10000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று மொரார்ஜி ஆட்சியின் போது அறிவிக்கப்பட்டது. ஆனால் பிந்தைய காலங்களில் என்றும் தீர்க்கப்படாத கருப்புப்பணப் பொருளாதாரம் உயிர்பெற்று இன்றளவும் வாழ்ந்து வருகிறது.

எனவே, இதுபோன்ற செயல்களால் பண நோட்டுகள் மாற்றி அமைக்கப்படுகிறதே தவிர, பொருளாதார கட்டமைப்பில் அடிப்படை சீர்திருத்தம் செய்யப்படவில்லை. அதனால், இச்சீர்திருத்தம் எதிர்பார்க்கப்படும் பலன்களைத் தராது என்பதில் ஐயமில்லை.

கருப்புப்பண ஊற்றுக்கண்

இன்று வரையில் அன்னிய நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியப் பணங்களை நம் நாட்டிற்கு கொண்டு வரவில்லை. அதே நேரத்தில் பிற நாடுகள் அப்படிப்பட்ட நபர்களின் பெயர்ப் பட்டியலைப் பெற்று அந்நாடுகள் வெளியிட்டு விட்டன. ஆனால், இன்றுவரை இந்திய அரசாங்கம் அத்தகையோரின் பெயர்ப் பட்டியலை வெளியிடவில்லை. ஏன்? இது நரேந்திர மோடி நேர்மைக்குச் சான்றா? இவர் எப்படி கருப்புப்பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிப்பார்?

அந்நிய வர்த்தகத்தில் குறைந்த கணக்குப் பட்டியல் என்று ஒன்று உண்டு. அதாவது, ஏற்றுமதியாளர்கள் அதிகமாக பண்டங்களை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்துவிட்டு, வருமானத்தை இந்திய வருவாய்த்துறையிடம் குறைவாகக் காட்டுவது. கணக்கில் காட்டப்படாத பணத்தை அந்நிய வங்கிகளில் சேமித்துவிடுவது.

அதைப்போல் அதிகப்பற்று கணக்குப் பட்டியலை தயாரிப்பது. அதன்மூலம், இறக்குமதி குறைவாக செய்ததாகக் கணக்கு காட்டிவிட்டு அந்நிய நாடுகளுக்கு அதிகப் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி, அதிகப் பணத்தை இந்திய அரசிடம் சலுகைகளாகப் பெற்று, அந்தப் பணத்தில் ‘மிகு’ தொகையை வெளிநாட்டு வங்கிகளில் சேமிப்பது. இது இன்றளவும் உள்ள செயல்பாடு. இதை நரேந்திரமோடி அரசு தடுக்கவில்லை. கருப்புப்பணத் தோற்றுவாய்களை அறவே அடைக்காமல், கருப்புப்பண பொருளாதாரத்தைத் தடுக்க முடியாது என்றாலும், ‘ஊமையனுக்கு உளறுவாயன் பரவாயில்லை’ என்ற பழமொழிக்கேற்ப இந்தச் செயலை வரவேற்கலாம்.

வரவேற்கப்பட வேண்டிய அம்சம்

சிறுசேமிப்பாளர்கள் ரூ. 2 லட்சம் வரை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யலாம். வருமானத்துறை இவர்களுக்கு தொந்தரவு கொடுக்காது. ஆனால், டிசம்பர் 30-க்கு மேல் ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால், அவர்களது முந்தைய வருமான வரிக் கணக்கோடு ஒத்துப்போக வேண்டும். இல்லையெனில், வரி ஏய்ப்பாகக் கருதப்பட்டு, வருமான வரியுடன், 200 விழுக்காடு அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்பதாகும்.

மொத்தத்தில், இது ஒரு சிறு செயல்பாடு என்றாலும், வரவேற்கத்தக்கதாகும். நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்த வேண்டும். அதே நேரத்தில் பசி, பட்டினி, வறுமை, ஏழ்மை, வேலையின்மை, குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம், ஏழை-பணக்காரர்கள் இடையே உள்ள பெருத்த இடைவெளி, ஊழல், லஞ்சம் போன்றவற்றை ஒழிக்க செயல்திட்டம் எங்கே? என்ற வினாவிற்கு பதில் இல்லை.

முடிவாகக் கூறுகையில், ‘கருப்பு இந்தியா வெள்ளை இந்தியாவாக’ மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் இன்றைய புதிய பொருளாதாரம் என்ற சந்தை முதலாளித்துவப் பொருளாதாரம் பணக்காரனை மேன்மேலும் பணக்காரனாகவும் ஏழையை மேன்மேலும் ஏழையாகவும் வைக்கும். நிலச்சீர்திருத்தம், சமூகப் பாதுகாப்பு, சுகாதாரச் சீர்திருத்தம் போன்றவைகளுக்குத் தீர்வு எங்கே?

அடிப்படையில் இந்தப் பொருளார சித்தாந்தம் ஏழைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, வருங்காலங்களில் வறுமையும், வேலையின்மையும் அதிகரிக்கும் இந்தப் பணம் செல்லாது என்பது கண்துடைப்புச் சீர்திருத்தம் அவ்வளவே ஆகும்.  

- பேராசிரியர் கார்த்தி

Pin It