தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்கு வதற்காக நீட் தேர்வை கொண்டு வருவதாகக் கூறினார்கள். ஆனால் நீட் எத்தகைய தரங்கெட்ட தேர்வு என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தான் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 ஆம் தேதி அவசர அவசரமாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது தேசியத் தேர்வு முகமை. இத்தேர்வில் நடைபெற்றிருக்கிற மோசடிகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் தேர்வு முடிவுகளும் வெளியிடப் பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வரவைக்கும் அளவுக்கு எக்கச்சக்கமான குளறுபடிகள் நடந்திருக்கின்றன.

தேர்வு நடைபெற்ற 4750 மையங்களில், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆறு பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளார்கள். இந்த ஆறு பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளன. எனவே இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று எவராலும் கூறிவிட இயலாது. அதேபோல எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 64 பேர் 720 என்ற முழுமையான மதிப்பெண்ணை எடுத்துள்ளார்கள். 718, 719 மதிப்பெண்களும் சிலர் பெற்றுள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்? ஒரு கேள்விக்கு தவறாக மதிப்பெண் அளித்தால் 4 மதிப்பெண்ணும், 1 மைனஸ் மதிப்பெண்ணும் போகும். ஒருவர் 720 – 715 - 710 என்ற அடிப்படையில் மதிப்பெண் பெறலாம். ஆக, 718, 719 மதிப்பெண் பெற்றவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது? கருணை மதிப்பெண் அளித்ததாகச் சொல்கிறார்கள். எந்த அடிப்படையில் கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.students in neet examதேர்வுக்கு முந்தைய நாளே சிலருக்கு கேள்வித் தாளைக் கொடுத்து படிக்க வைத்து - அதற்காக ஒவ்வொருவரிடமும் பல லட்சம் பெற்றதாக ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறைக்கு தாமதமாக வருபவர்களை அனுமதிப்பதும் ஒருவகையில் மோசடியே. அப்படி தாமதமாக வந்தவர்களை எழுத அனுமதித்தது மட்டுமின்றி, கடைசியில் நேர நீட்டிப்பு வழங்கிய சம்பவங்களும் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எதையுமே எழுதாமல் வினாத்தாளைக் கொடுத்த ஒருவருக்கு, தேர்வு அறையில் இருந்த ஆசிரியரே பதில்களை நிரப்பி சேர்த்து விட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநிலங்களில் இத்தகைய குளறுபடிகள், தில்லுமுல்லுகள் சர்வ சாதாரணமாக நடைபெறும் அதேவேளையில்தான், தமிழ்நாட்டில் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளின் ஆடைகளைக் கூட களைந்து கடும் சோதனை செய்வதும், அவர்களை தேர்வுக்கு அனுப்பும் முன்னேயே மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தனை முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, புதிய அட்டவணையின் அடிப்படையில் நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு, “நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். இதுபோன்ற சூழலில் தேர்வை ரத்து செய்தால் அது அனைத்து மாணவர்களையும் பாதிக்கும். இருப்பினும் இந்த விவகாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும். இதுபோன்ற வரைமுறையில்லாத குளறுபடிகளால் நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது” என்று வேதனை தெரிவித்து விசாரணையை ஜூலை எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். நீட் தேர்வின் மீது தேவையற்ற புனிதப் பிம்பம் கட்டியமைக்கப்பட்டு இருக்கிறது என்பது உச்ச நீதிமன்றத்தின் கருத்தில் இருந்தும் அறிந்துகொள்ள முடிகிறது. மருத்துவக் கல்வியின் தரத்தைக் கெடுக்கத்தான் இந்தப் புனித பிம்பம் பயன்பட்டிருக்கிறது.

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவையும், தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவக் கட்டமைப்பையும் நீட் தேர்வு சிதைக்கிறது என்று தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு எதிர்த்துக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியைத் தவிர திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற அனைத்துக் கட்சிகளும் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஒருமித்து உள்ளன. தமிழ்நாட்டின் நியாயத்தை உணர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கடந்த முறை நாடாளுமன்றத்திலேயே நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று குரல் எழுப்பினார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்கள் நடத்திக்கொள்ள தேவையில்லை என்பதை வாக்குறுதியாக அளித்திருந்தனர்.

இதுவரையில் பாஜக அல்லது இந்துத்துவவாதிகளிடம் இருந்து வந்த பதில், “தமிழ்நாடு மட்டும்தான் எதிர்க்கி­றது” என்றார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்றிருக்கும் மோசடிகளைக் கண்டு, அகில இந்திய அளவில் எதிர்ப்புகள் வெடித்திருக்கிறது. ‘நீட்’ தேர்வில் மராட்டிய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று மராட்டிய மாநில அமைச்சர் அசன் முசுரிப் அறிக்கை வெளியிட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டியத்தில் இருந்து கிளம்பியிருக்கும் இந்த எதிர்ப்பு, மோடியின் வாரணாசி தொகுதி வரை எதிரொலித்திருக்கிறது. பிரதமரின் வாரணாசி தொகுதியில் நீட்-டுக்கு மறுதேர்வு கோரி ஊர்வலமே நடந்துள்ளது. வட மாநில இளைஞர்கள் சமூக வலைதளங்களில் நீட் தேர்வின் மோசடிகளை தோலுரித்து எழுதத் தொடங்கி உள்ளனர்.

நீட் தேர்வின் குளறுபடிகளுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் போன்றவர்களும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த மோசடிகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டுமென்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. குளறுபடிகளை விசாரிப்பது மட்டுமே முழுமையான தீர்வாகாது. தகுதித் தேர்வு என்ற பெயரில் கல்வியின் தரத்தையே கெடுக்கும் நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதே முழுமையான தீர்வாகும்.

அன்று எதிர்ப்பு; இன்று திணிப்பு

குஜராத் மாநில முதலமைச்சராக மோடி இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்தார். ஏற்றுக் கொள்ளவில்லை. குஜராத் மாநில அரசு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ‘நீட்’ தேர்வு எதிர்ப்புக் கடிதம் அனுப்பியது. 2011 ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று குஜராத் மாநில சுகாதார அமைச்சர் ஜெயநாராயணன் வியாஸ் எழுதிய கடிதத்தில், ‘‘எங்கள் மாநிலத்தில் அதிகமான மாணவர்கள் மருத்துவர்களாக வர வேண்டும் என்பது எங்கள் மாநில உரிமையாகும். இந்திய மருத்துவக் கவுன்சில் எங்களை ‘நீட்’டுக்காகத் தயாராகுமாறு கூறியிருந்தது. ஆனால், எங்களால் ‘நீட்’ தேர்வை ஏற்க முடியாது. எங்கள் மாநிலத்திற்கென்று சிறந்த கல்வி அமைப்பு உள்ளது. இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் எங்கள் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

நாங்கள் ‘நீட்’ பற்றி ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்தோம். அந்தக் குழு மாநில அரசின் பாடத் திட்டத்தின்படி படிக்கும் மாணவர்களுக்கு ‘‘நீட்” தேர்வு சுமையை ஏற்படுத்தும் என்று அந்தக் குழு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆகவே, நாங்கள் ‘நீட்’டை ஏற்றுக் கொள்ள முடியாது.” என்று எதிர்ப்பைப் பதிவு செய்தார். மாநிலங்களின் தயவோடு மூன்றாவது முறையாக ஆட்சியமைத்திருக்கும் நரேந்திர மோடி, இப்போதாவது மாநிலங்களின் நலனை சிந்திக்க வேண்டும். அல்லது, தான் மாநில முதல்வராக இருந்தபோது வைத்த கோரிக்கைகளின் நியாயத்தையாவது உணர வேண்டும்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பீகாரின் பொருளாதார குற்றப்பிரிவு, 4 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ளது. பீகார் பொதுப்பணித்துறையில் ஆசிரியர் தேர்வுக் குழுவில் இருந்த ஒருவரும் கைதாகியுள்ளார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It